அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திருக் கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே
|
[927.0] |
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே
|
[928.0] |
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில் உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே
|
[929.0] |
சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன் மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திரு வயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே
|
[930.0] |
Back to Top |
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன் வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான் கோர மாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்து அம்மான் திரு ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே
|
[931.0] |
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய- வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உயக் கொண்டதே
|
[932.0] |
கையின் ஆர் சுரி சங்கு அன லாழியர் நீள் வரைபோல் மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம் ஐயனார் அணி அரங்கனார் அர வின் அணைமிசை மேய மாயனார் செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
|
[933.0] |
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக் கரிய ஆகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப் பெரிய ஆய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே
|
[934.0] |
ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான் கோல மா மணி-ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே
|
[935.0] |
Back to Top |
கொண்டல்வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர்கோன் அணி-அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
|
[936.0] |