சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
இயற்பகை நாயனார் புராணம்  

12 -ஆம் திருமுறை   12.030  
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
 
சோழர்மரபில் தோன்றிய வெண்கொற்றக்குடை யையுடைய அநபாய சோழரது அரசியல் திருவுடைய, அவர் மரபினர், தம் மிகு புகழை விளங்கச் செய்தற்குக் காரணமாகிய சிறப்பி னால் நிலைபெற்ற பழமையாகிய புகழினையுடைய மருதவளம் மிக்க சோழநாட்டின்கண்உள்ள வயல்வளத்தைத்தருதற்குக் காரணமாய காவிரி,காலம் பிழையாது கொடுத்த நீர் வெள்ளம் பாய்ந்து கட லையும் தூய்மை செய்வதொரு நன்மை பெருகும் புண்ணிய முடைய நீர்வளம் சிறக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப் பூம்பட்டினம் ஆகும்.

குறிப்புரை: சோழர் மரபினர் வழிவழியாக அரசியற்றி வருவதும், வயல் வளம் மிக்க நீர் நாடெனப் போற்றப்படுவதுமான சோழ நாட்டின்கண் உள்ள காவிரிப் பூம்பட்டினம், புனிதமான காவிரியை முகப்பில் கொண்டுள்ளது என்பது கருத்து. நீர் நாடு - சோழநாடு. இயல்பினில் அளித்து - காலம் தவறாதும், மிகுதல், குறைதல் இன்றியும் இயல்பிற் கொடுத்து. புணரி - கடல். முன்னுடைய - முகப்பில் கொண்ட. 'மருதநீர் நாட்டு' என்பதால் நாட்டுச் சிறப்பும், 'வளம் புகார் நகரம்' என்பதால் நகரச் சிறப்பும், 'புணரி தன்னையும் புனிதமாக்குவதோர் நன்னெடும் தீர்த்தம்' என்பதால் ஆற்றுச் (தீர்த்தச் சிறப்பு) சிறப்பும், 'அநபாயன் திருக்குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்' என்பதால் அரசியல் சிறப்பும் ஒருங்குணருமாறு செய்திருக்கும் திறம் எண்ணி மகிழ்தற்குரியதாம்.

அத்தகைய காவிரிப் பூம்பட்டினத்தின் வணிகர் குலத்தில் முதன்மையுற்று நிற்கும் மிக்க செல்வத்தால் ஆகிய வளத்திற் சிறந்தவரும், வெண்மையான பிறையை அணிந்த சிவந்த திருச்சடை யையுடைய சிவபெருமானுக்கு ஆட்படும் அடிமைத்திறம்பூண்ட வரும் , மறைகளாகிய சிலம்பினை அணிந்த திருவடிகளையுடைய சிவபெருமானின் சிறப்புடைய அடியவர்கள் எவர் வரினும் அவர்க ளுக்கு இல்லை என்னாது கடல்சூழ்ந்த இம்மண்ணுலகத்தில் விளக்க முறத் தொடர்ந்து முற்படக் கொடுத்து மகிழும் இயல்புடையவரு மானவர் இவ்வுலகில் இயற்பகையார் என அழைக்கப்படும் பெய ருடையவராவர்.

குறிப்புரை: செக்கர் - சிவந்த அந்தி மாலை. கடற்படி - கடல் சூழ்ந்த உலகம். இயற்பகையார் - இஃது அவர் தம் இயற்பெயராகும். இப் பெயர் 416, 419, 432 ஆகிய பாடல்களிலும் தொடர்ந்து வருதல் கொண்டு இதனை அறியலாம். எனினும் இப்பெயர், உலகியற்கைக்கு மாறாக (பகையாக) இவர்தம் மனைவியைக் கொடுத்தமையின், உலக இயற்கைக்குப் பகையாகியவர் எனக் காரணப்பெயராகக் கருதவும் இடம் தருகின்றது. ''இனையதொன் றியாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால், புனையிழை தன்னைக் கொண்டு போவதா மொருவன்'' எனப் பின்வரும் (பா. 416) கூற்றாலும் இவ்வுண்மை அறியப்படும். இனி எல்லா உடைமைகளையும் எனது எனது எனக்கொள்ளும் உலக இயல்பிற்குப் பகைமையுடையார் எனவும், எல்லாவற்றையும் எம்பிரான் அடியவருடைமை எனக் கொள்ளும் உண்மையியலுக்குப் பகைமையில்லார் (இயல் பகை யார் - உண்மை இயல்பிற்குப் பகையாக மாட்டார்) எனவும் எதிர்மறையிலும் உடன்பாட்டிலும் ஆகப் பொருந்தும்படி இயற்பகையார் என்ற பெயர் அமைந்துள்ளது என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). இந்நுண்மை அறிந்து போற்றத் தக்கது. ஏகாரம் - அசைநிலை.

கங்கையைத் தாங்கிய சிவபெருமானுக்கு மெய் யடிமை செய்தற்குக் காரணமாயும், உள்ளத்தில் நிறைந்த அளவற்ற திரு வருளின் வழித்தாயும், திருநீற்றினை அணிந்ததாயும் உள்ள திருவுடம் பினையுடைய அடியவர்கள், தம் திருவுள்ளத்தில் உளங்கொள்ளும் செயல்களையெல்லாம் அவர் திருவுள்ளம் நிறையுமாறு ஆற்றி, மாறு படுதல் இல்லாத ஒழுக்க நெறியில் நிலைபெற்று விளங்கும் இல்லறத்தை நடத்துகின்ற இன்பத்தால் வந்த பெரும்பேறெல்லாம் அவ்வடியவர்கள் அதனை விரும்பிச் செய்து வருகின்ற காலத்தில்.

குறிப்புரை: 'திரு வேடங்கண் டாலடியேன் செய்வதி யாதுபணி யீரென்று பணிந்தவர்தம் பணியும் இயற்றுவதிச் சரியை' (சிவஞா. சித். சுப. சூ. 9 பா. 19) ) என்னும் ஞான நூலும்.

சிவஞானத்தால் ஆய்ந்து தெளிவார்க்கும் நுண்ணிய பொருளாய் இருந்தும், யாவரும் காணத் திருச்சிற்றம்பலத்துள் நின்று ஆடுகின்றவராய இறைவர், தேவர்கட்கெல்லாம் முதல்வியாகிய உமையம்மையார் இவ்வாறு வருவதை அறிந்தோ, அல்லது தம் உடம்பினின்றும் வேறுபடாத அவ்வம்மையார் இவ்வாறு வெளிப் பட்டருளுவதை அறியாமையோ அறியோம்; தூயதான திரு வெண் ணீறு பொன்போன்ற திருமேனியில் விளங்க, அவ்வடிவோடு தூர்த்தற் குரிய வேடப் பொலிவும் காணுமாறு மறையவராய்ப் பிறர் தம்மை அறியக் கூடாத மாயையுடைய ஒரு திருவுருவம் கொண்டு, தம் அடியவராகிய அவ்வியற்பகையார் அடியவர்கள் கேட்ட பொருளை மறுக்காமல் கொடுக்கும் இயல்பை அனைவர்க்கும் காட்டுமாறு வந்தருளினார்.

குறிப்புரை: உலகியல் வழி நின்றார்க்கு நோக்கரிய நோக்காயும், சிவஞானியர்க்கு நுணுக்கரிய நுண்ணுணர்வாயும் விளங்கும் திறம் பற்றி, 'ஆயும் நுண் பொருளாயும்' என்றார். தூர்த்த வேடம் - கலவைப் பூச்சு, நகக்குறி, பற்குறி முதலியன உடம்பில் காணுமாறு இருப்பது.
'புள்ளிக்கள்வன் புனல்சேர் பொதுக்கம் போல்
வள்ளுகிர் போழ்ந்தனவும் வாள்எயிறு உற்றனவும
் ஒள்ளிதழ் சோர்ந்த நின் கண்ணியும்
நல்லார் சிரனுபு சீறச் சிவந்தநின்
மார்பும் தவறாதல் சாலாவோ கூறு' -கலித். மருதம்
என வரும் கலித்தொகையும் நினைவு கூர்க. இறைவன் கொண்ட இவ்வேடம் மாயையின் வண்ணமேயன்றி, அவர் தம் திருவருளின் வண்ணம் ஆகாது என்பார், 'மாய வண்ணமே கொண்டு' என்றார். அவ்வாறு வந்ததும் இயற்பகையார், தாம் கொண்டிருந்த குறிக்கோ ளுக்கு என்றும் மாறாதவர் என்பதைக் காட்டுதற்கன்றி, உலகியல் வகையால் பிறர் மனை நயந்து வந்தது அன்று என்பார் 'தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்' என்றார். எனவே இயற்பகையாரின் திருத்தொண்டை அனைவரும் காணச் செய்தற்கே இவ்வாறு வந்தார் என்பது தெளிவு. இவ்வாற்றான் அவ் வன்பைச் சோதிக்க வந்தார் என்று கூறல் பொருந்தாமை விளங்கும்.

குளிர்ந்த காவிரிப்பூம் பட்டினத்தில் உள்ள வணிகர் வீதியினிடத்து வந்து, இயற்பகை நாயனார் வீட்டிற்கு எழுந்தருள, எம் தந்தையராயும் யாவர்க்கும் முதல்வராயும் உள்ள சிவபெருமானின் அடியவர் எழுந்தருளினார் என்று தம் உள்ளத்துத் தோன்றிய மகிழ்ச் சியோடு கூடிய ஒப்பற்ற பெரும் காதலினால் விளைந்த பேரன்போடு, அவர் எதிரே சென்று வணங்கிப் பத்திமைச் சிறப்புமிக்க வழிபாடு களை முற்படச் செய்து, '' முற்பிறப்பில் யாங்கள் செய்த பெருந்தவத் தின் பயன் என்று சொல்லுகேனோ! தவமுனிவர் இவ்விடத்து எழுந்தருளி வந்தது'' என்று சொன்னார்.
குறிப்புரை: இப்பெருமுனிவர் அடியேனது இல்லத்திற்கு எழுந்தரு ளியது, முற்பிறப்பில் செய்த தவத்தினால் ஆகும் என்று வரையறைப் படுத்தாது தவம் என்கோ என்றது, இவ்வடியவர் எழுந்தருளுதற்கு அத்தவம் அன்றி மேலும் ஒரு திருவருட் குறிப்பும் இருத்தல் வேண்டும் என்பது பட நின்றது.

இவ்வாறு கூறிய இயற்பகை நாயனார் முன்பு, எழுந்தருளி நின்றவராகிய அவ்வஞ்சனை வேடத்தவராகிய மறை யவர், ''கொன்றைப் பூமாலையை அணிந்த நீண்ட சடையினை யுடைய சிவபெருமானின் அடியவர்கள் எண்ணி வேண்டியவை எவையேனும் அவை குணமாம் எனக்கொண்டு, அவற்றை விரும்பிக் கொடுக்கின்ற உண்மைத் தன்மையைக் கேட்டு, உம்மிடத்தே ஓரு பொருளை வேண்டி, இந்நாளில் நான் இங்கு வந்தேன். கேட்கும் அப்பொருளை மறாது கொடுத்தற்கு உடன்படுவீராயின் அதனை இதுவெனச் சொல்லலாம். '' என்று அருளிச் செய்தார்.

குறிப்புரை: கைதவம் - சிறுமை உடையதவம். அஃதாவது நெஞ்சில் துறவாது துறந்தார் போல் வஞ்சித்து வாழும்தவம். கை சிறுமையாத லைக் கைக்கிளை எனும் சொல் வழக்கானும் அறியலாம். வந்த மறையவர், கேட்க இருக்கும் பொருள் பற்றி இவ்வாறு கூறியதல்லது, உண்மையில் அவர் அன்னர் அல்லர் என்பது பின்வரும் வரலாற்றால் அறியலாம். 'குண மெனக் கொண்டே' என்பதால், குணமல்லா ததனையும் குணமாகக் கொள்ளும் குறிப்புடைமை வெளிப்படு கின்றது. ''இசையலாம் எனில் இயம்பலாம்'' என்றது, இசைதற்கும் இயம்புதற்கும் உரியதல்லாமை தோன்ற நின்றது. ஏ - அசை நிலை. ஒன்றும் - உம்மை முற்றும்மை.

என்று இவ்வாறு கூறிய மறையவர்தம் உரையை இயற்பகை நாயனார் கேட்டு,'' நீர் வேண்டும் பொருள் யாதாயினும் அப்பொருள் மட்டும் என்னிடத்து உள்ள பொருளாயின், அது எம் பெருமானுடைய அடியவர்க்கு உரியதாம். இதில் ஐயமில்லை, நீர் அருள் செய்யும், என்று சொல்ல, நிலை பெற்ற காதலையுடைய நின் மனைவியைப் பெற வேண்டி, நாம் இங்கு வந்தனம்'' என்று அம்மறையவர் அவர் எதிர் நின்று சொல்லியும், அதனால் ஒரு சிறிதும் வெகுளாது முன்னையினும் மிக்க மகிழ்ச்சியடைந்து, மனம் தூயரான அவ்வியற்பகையார் வணங்கிச் சொல்வாராயினர்.

குறிப்புரை: பிறர் மனைவியை வேண்டுவதாக எவ்விடத்துக் கூறினும் ஏன்? நினையினும் கூடப் பிழையாம். அங்ஙனம் இருக்க ஒரு கணவனாரெதிர் அவர் மனைவியை வேண்டுதலும் அதனை வாயால் அவரிடத்தேயே கூறுதலும் எத்துணைப் பிழையாகும்! அப் பெரும் பிழையைச் செயினும் தம்மிடத்து உள்ள பொருளையே வேண் டினார் என்பதால், முன்னையினும் மகிழ்ந்தார் என்பது அவருக்கு அடியவரிடத்திருந்த ஆழங்கால்பட்ட பத்திமையையும் தம் குறிக்கோ ளினின்றும் பிழையாமையையும் விளக்குகின்றது. 'எதிரே சொன்ன போதிலும்' எனும் தொடர், எதிர் நின்றும் வாயால் கூறத்தகாததுமான சொல் என்னும் குறிப்புத் தோன்ற நின்றது. யாதும் - உயர்வு சிறப் பும்மை. ஒன்றும் - முற்றும்மை. முன்னையினும் என்பது முன்னை யின் என நின்றது; சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.

இவ்வாறு பணித்தது அடியேனிடத்து முன்பு உள்ளதொரு பொருளையே விரும்பிய வகையால், எம்பிரான் எனக்கு அருளிய பேறு இது என்று சொல்லி, விரைந்து, அம்மனையில் போய் மனையறத்திலும் கற்பிலும் மிகச் சிறந்த மனைவியாரை, விதிமுறைப் படிமணம் செய்யப் பெற்ற குலமடந்தையே! இன்று உன்னை இங்கு வந்துள்ள உண்மைத் தவமுடைய இம்மறையவருக்கு நான் கொடுத்துவிட்டேன் என்று சொல்ல, தேன் பொருந்திய மலர் களை முடித்த கூந்தலையுடைய மனைவியார் முன், கலக்கமடைந்து தெளிந்த பின் இவ்வாறு கூறுவாராயினார்.

குறிப்புரை: கதுமெனச் சென்று - விரைவாகச் சென்று. மனையறத் திலும், கற்பிலும் சிறவாமலும், தம்மீது பெரும்பற்று இல்லாமலும், பலர் அறிய முறையாக மணக்காமலும் இருந்தவர் ஆனதால் மறையவர் கேட்டவுடன் மனைவியைக் கொடுத்திருப்பரோ எனும் ஐயம் சிலர்க்கு எழலாம். அவ்ஐயத்தின் நீங்கித் தெளியவே, 'தம் மனை வாழ்க்கைக் கற்பின் மேம்படு' என்றும், 'காதலியாரை' என்றும், 'விதி மணக்குல மடந்தை' என்றும் கூறியருளினார். இயற்பகையாரின் மனைவியார் முன்னர்க் கலங்கியதற்கும் பின்னர் மனம். தெளிந்ததற்கும் சிவக்கவி மணியார் (பெரிய. பு. உரை) கூறும் விளக்கம் ஈண்டு அறியத்தக்கதாம். விதிவழிநின்று மணம்செய் காலத்துக் கடைபோகக் கைக் கொண்டு காப்பேன் என்று நாயகன் கூறிய சொல்லுக்குக் கேடு நேருமோ என்றும், கற்பிலக்கணத்துடன் மாறுபடுமோ என்றும், ஐம் பெரும் பாவங்களில் ஒன்றாய் நூல்களால் விலக்கப்பட்டதாகிய பிறன் மனை நயந்தமை எனும் தீமை சிவயோகியாரைச் சாருமோ என்றும் கலங் கினார் என்க. மனந்தெளிந்த பின் - 'கணவனார் ஆணைவழி நிற்றலே கடன்' என்றும், அவ்வாறு அதன்வழி நில்லாதிருப்பதே தவறான தென்றும் தெளிந்த பின்னர், என்பன அவர்தரும் விளக்கமாகும்.

''இற்றைக்கு நீர் அடியேனுக்கு அருளியது இவ் வாறாயின், என்னுடைய உயிர்க்குத் தனித்துணையாகிய முதல்வரே! நீர் கூறிய கட்டளை ஒன்றை நான் செயதலேயன்றி, அடியேனுக்கு வேறு உரிமை உண்டோ?'' என்று கூறித் தம்முடைய ஒப்பற்ற பெரு மைக்குரிய கணவனாரை வணங்க, இயற்பகையாரும் தாழ்ந்து அவரை வணங்கி நிற்ப, அங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமா னாகிய மறையவரிடம் சென்று, அவர் திருவடிகளை வணங்கித் திருமகளினும் சிறந்த பெருமையினையுடைய அவ்வம்மையார் திகைப்புடன் நின்றார்.

குறிப்புரை: ஒரு பெண்ணிற்கு உயிரினும் சிறந்தது நாணமாகும். அந்நாணினும் சிறந்தது கற்பாகும். அக்கற்பின் முடிநிலையாய் நிற்பது கணவன் சொல் தவறாது நிற்றலாகும். இதுவே ஒரு மனைவியார்க் குரிய அறமாகும். 'அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்று' (தொல். களவு. 29) என்னும் தொல்காப்பியத் தொடரால் இவ்வுண்மை விளங்கும். இக்கற்பு நெறியில் நின்ற கண்ணகியாரும், 'யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் ஏற்றெழுந்தனன்' (சிலப்ப. மதுரை. கொலைக் 81-83) எனக் கூறியதும் ஈண்டு நினைவு கூரத் தக்கதாகும். இவ்வறம் பற்றியே இயற்பகையார் மனைவியாரும், 'நீர் உரைத்த தொன்றை நான் செய்யும் அத்தனையல்லால் உரிமை வேறுளதோ? என்றார். மனைவியார் வணங்க இயற்பகையார் தாமும் வணங்கியது, 'இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன்' என்றபோதே அவருக்கு அப் பெருமாட்டியார் உரிமையாகிவிட்டமையால் ஆகும். அம்மையார் திகைத்து நிற்றலுக்குக் காரணம் தாம் இதுகாறும் பயிலாத ஒருவரைச் சார்ந்து நிற்றல் பற்றிய நாண உணர்வாகும். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

தம்மனைவியாரை அவ்வடியவர் கேட்டவுட னேயே தடையின்றிக் கொடுத்த இயற்பகை நாயனார், இவ் வடியார்க்கு இது கொடுக்கப் பெற்றேன் என்னும் மனக்களிப்போடு முகமலர்ச்சி அடைந்து, இனிஅடியவன் செயத்தக்கது யாது? என்று வினவியவாறு வணங்கி நிற்க, மறையவர் வடிவில் வந்த சிவபெரு மான், 'இப் பெண்ணை யான் தனியே அழைத்துக் கொண்டு போதற்கு இவளிடத்தும் நின்னிடத்தும் விருப்புடையராய சுற்றத்தாரையும், இவ்வூரையும் கடந்து செல்லுதற்கு நீ துணையாக வரவேண்டும்' என்று அருளிச் செய்தார்.

குறிப்புரை: இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு! என முன்னர்க் கூறியதற்கேற்ப, ஈண்டும் 'மன மகிழ்ந்து பேரு வகையின் மலர்ந்து' என்றார். காதல் மேவிய சுற்றம் என்பது இருவர்க்கும் பொருந்துமாறு அமைந்துள்ளது. 'மனைவியார் சுற்றத் தாரும் வள்ளலார் சுற்றத்தாரும்' எனப்பின் (பா. 416) வருதலும் காண்க. தாம், தான் என்பன அசைநிலைகள்.

இவ்வாறு அம்மறையவர் பணித்தருளக் கேட்ட நாயனார், இது இம்மாதவர் இதனை உரைக்கும் முன்பேயே அடியேன் மேற் கொண்டு செயத்தக்க குற்றேவலாகும்; இதனை என்னை ஆளுடைய இவ்வடியவர் பணித்தருளும் வரை தாழ்த்தி நின்றது அடியவனின் குற்றமேயாகும் என நினைந்து, வேறோர் இடத்துச் சென்று, பொன் மயமாய உடையினை உடுத்து, அதன் மீது பொலி வினை உடைய அரைக்கச்சை இறுகப்பிணித்து.

குறிப்புரை: தாமே நினைந்து செய்ய வேண்டுவதை மாதவர் கூறச்செய்ய முற்பட்டது பிழையெனக் கருதினர் நாயனார். இது அவர்தம் பத்திமை மேம்பாட்டைக் காட்டுகின்றது. அறுவை - ஆடை; போர்புரிதற்கு உரித்தான ஆடை. 'வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇ' (புறநா. 279) எனவரும் சங்கப் பனுவலும் காண்க.

வாளுடன் கேடயத்தையும் கையில் எடுத்துக் கொண்டு, அம்மறையவர் எதிர் வந்து, தொழுது, ஆண்சிங்கத்தை ஒத்த தோற்றத்தினையுடைய இயற்பகை நாயனார், அம்மறையவரையும் அவ்வம்மையாரையும் முன் போகச் செய்து, அவர் பின்பு தம் இரு தோள்களுமே துணையாகத் தம்மோடு எதிர்த்து வந்தவர்களை நெடுந் தொலைவில் வரும் பொழுதே முற்பட்டு வளைத்து நிலத்தில் துணித்து வீழ்த்தும் விருப்புடையராய்ச் சென்றார்.

குறிப்புரை: ஆள் அரிஏறு - பிறவிலங்குகளையும் ஆளும் தன்மை யுடைய ஆண் சிங்கம். 'சாவாமூவாச் சிங்கமே' (தி. 6 ப. 99 பா. 2) என அப்பரடிகள் இறைவனை அழைக்குமாறும் நினைவு கூரலாம். துன் னினார் - நெருங்கினார்; ஈண்டுப் பகைவராய் நெருங்குவாரைக் குறித்தது. படைக் கலங்களை விடுத்துத்தோள் வலிமையையே வலி மையாகக் கொண்டு செல்லல் அவர்தம் ஆண்மைச் சிறப்பை விளக் குகின்றது. 'படை யறுத்துப் பாழி கொள்ளும் ஏமத்தானும்' (தொல். புறத். 17) என்னும் தொல்காப்பியமும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

இயற்பகை நாயனாரின் மனைவியாருடைய உறவினர்களும், அந்நாயனாரின் உறவினர்களும், மனைவியைக் கொடுத்தலாகிய இச்செய்கையை இதற்குமுன் யாவர் செய்தார்? அவ்வியல்பிற்குப் பகையாக நிற்கும் இயற்பகையார் பித்துக்கொண் டவன் ஆனால், ஒருவன் அணிகளணிந்த இப் பெண்ணைக் கொண்டு போதலைச் செய்வானாம், என்று கூறியவராய், தம் குடும்பத்தைத் தொடர்ந்த பெரும் பழியை நீக்கிக்கொள்வதற்கு, மறையவரைத் தொடர்ந்து சூழ்வாராயினார்.
குறிப்புரை: இயற்பகை பித்தனானாலும் நாம் வலியுடையோம் ஆதலின் இம்மறையவன் கொள்ள ஒட்டோம் என்னும் கருத்தால் 'போவதாம் ஓருவன்' என்றார். போவது ஆம்? போதல் ஆகாது என்பது கருத்து. யாரே செய்தார் என்புழி ஏகாரம் எதிர் மறைக்கண் வந்தது.

வேலுடன் வில்லையும் உடை வாளையும் சுரிகை யையும் எடுத்துக் கொண்டு பெருங்காற்றென விரைவாக நடந்து, காவலையுடைய அந்நகர்ப் புறத்துச் சென்று, வலம் இடமாகிய இரு பக்கத்தும் முன்னும் பின்னுமாகிய இரு பக்கத்தும், நெருங்கிப் பரந்த பேரொலி மிக, பெருமை பொருந்திய கடல் எழுந்ததுபோல அம்மை யாரை அழைத்துச் செல்லும் மறையவரையும், இயற்பகையாரையும் சூழ்ந்து கொண்டார்கள்.

குறிப்புரை: சுற்றத்தார்கள் சென்ற விரைவிற்குக் காற்றும், பலராகப் பெருகிச் சென்றதற்குக் கடலும் உவமையாயின. சுரிகை - வாளைவிடச் சிறியதாய் அவ்வடிவில் அமைந்திருக்கும் கருவி; இதனைக் குற்றுடைவாள் என்பர். தொலைவில் இருப்பாரை வெட்டு தற்கும் குத்துதற்கும் பயன்படுவது வாள். அண்மையில் இருப்பார்மீது அவ்வகையில் பயன்படுத்தற்குரியது சுரிகை. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

தமக்கொரு தீங்கின்றியும், பிறர் இடைப் புகுதற் கின்றியும், துணையாக இயற்பகை நாயனார் பின் செல்ல, உயிர்கள் வீடுபேறடைதற்குத் துணையாய் உள்ள சிவபெருமானாகிய மறை யவர், அவ்வம்மையாருக்கு மிகப்பெரிய விருப்புடையராகத் தம்மைக் காட்டிக் கொண்டு, அவருடன் போகும் பொழுது, அறக்கழி வுடையவனே! நீ மேற்செல்லாதே! இவ்விடத்து எம் அருங்குலக் கொடி யாம் அம்மையை விட்டு, நின்னைத் தொடர்ந்துள்ள பழியையும் விட்டு, நீ போவாயாக! என்று கூறியவாறு அவர் எதிரே சுற்றத்தார்கள் சூழ்ந்து வந்தார்கள்.

குறிப்புரை: வழிவிடுந்துணை - வழியில் தடையின்றி விடும் துணை; இயற்பகையார். வழித்துணை - வீடுபேற்றை அடைதற்குரிய துணை; மறையவராக வந்த சிவபெருமான். 'புறம்புறந் திரிந்த செல்வமே!' (தி. 8 ப. 37 பா. 9) என்பதால், பிறவிதோறும் உயிர்கள் துய்ப்பதற்கும் உய்ப்பதற்கும் துணையாக இருப்பினும், வினை முடிவின் பயனாக வீடு பேற்றை வழங்குதற்குரியவன் இறைவனே யாவன். வழிவிடும் துணை பின் போதக் காதல் காட்டி' என்பதால், அக்காதல் உடற்காதல் அன்றிப் பின் வழங்க இருக்கும் வீடுபேற்றிற்கு ஏதுவாய காதல் என்பது பெற்றாம். 'சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப அளித்துப் பெருஞ்செல்வ மாக்குமை யாற னடித்தலமே' (தி. 4 ப. 92 பா. 7) எனவரும் திருவாக்கினை நினைவு கூர்க. அழி தகன் - அறக்கழி வுடையவனே! அறநூல்களில் விதித்தன வொழித்து விலக்கியதைச் செய்பவன் என்பது பொருள்.
தகவு அழிந்தவன் என்பது அழிதகன் என மாறி நின்றது என்பர். ஆலாலசுந்தரம்பிள்ளை (பெரிய. பு. உரை). அழிதகன் - மிகுந்த பாவத்தையுடையவன்; அழிது - கெட்டது, அகம் - பாவம். அகம் என்பதனோடு வினைமுதற் பொருளில் வந்த அன் விகுதி புணர்ந்து நிலைமொழியீற்று மகரமும் விகுதி அகரமும் கெட்டு அகன் என நின்றது என்பர் மகாலிங்கையர் (பெரிய. பு. உரை).

மறையவராகிய முனிவர் அஞ்சுவது போலக் காட்டி அவ்வம்மையாரைப் பார்க்க, அவரும் 'அஞ்சவேண்டா, இவ் வியற் பகையார் அவர்களை வெல்லுவர்' என்று சொல்ல, ஒலிக்கின்ற வீரக் கழலை அணிந்த இயற்பகை நாயனார் அதைக் கேட்டு, 'அடியேன் ஈண்டு வந்தவர்களையெல்லாம் நிலத்தில் விழ இறக்கச் செய்கின்றேன்; இதற்காக மனம் தளர வேண்டா' என்று விண்ணப்பம் செய்து.
குறிப்புரை: முன் (பா. 412) 'தையலார் தனிப்பெருங் கணவரை வணங்கத் தாமும் (இயற்பகையார்) எதிர் வணங்கினார்' என்றபோது, அவர்தமக்கு மனைவியாராதலைத் துறந்தமை வெளிப்படுகின்றது. இங்கு 'இயற்பகை வெல்லும்' என அவர் பெயரை அம்மையார் கூறியதால் அவர் அவ்வடியவரைத் துறந்தமை வெளிப்படுகின்றது. இன்றேல் 'இயற்பகை வெல்லும்' என அவர் பெயரைக் கூறல் தகாத தாகும். 'நின்பால் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி கண்ணகி என் பெயரே' (சிலப்ப. வழக். 62-63) எனக் கண்ணகியார் கூறியதற் குக் காரணம் அவர்தம் கணவர் இறந்தமையினால் ஆகும். ஈண்டு அம்மையார் அவர் கணவர் பெயரைக் கூறியது அவரைத் துறந்தமை யினாலாகும் 'ஆட்டனத்தியைக் காணீரோ' (அகநா. 236) என ஆதிமந் தியார் வினவியதும் இவ்வம்மையார் நிலையோடு ஒத்ததாகும். எதுகை நோக்கித் தரை, தறை என நின்றது.

பெரிய, வலிய ஆண் சிங்கம் போலக் கண்களில் தீப்பொறி பறக்கச் சினந்து, தம் குலமானம் இழந்தமை காரணமாக வந்த பரந்த பெரிய சுற்றத்தார்களை நோக்கி 'நீங்கள் ஒருவரும் என் எதிர் நில்லாமல் ஓடிப் பிழையுங்கள். அவ்வாறு செய்யாதொழியின் தீப்போல் ஒளி வீசுகின்ற என் வாளினால் துண்டாக வெட்டப்பட்டுத் துடிக்கப் போகின்றீர்' என்று சொல்லியவாறு அவர்கள் முன்னாகப் போர் முகத்தராய்ச் சென்றார்.
குறிப்புரை: பரிபவம் - மானம் அழிதல். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

இவ்வாறு இயற்பகையார் கூறிப் போய் அவர் எதிர் நிற்க, சுற்றத்தார்கள் ''ஏட! நீ என்ன காரியம் செய்தனை? இந் நாட்டவர்க்கு உன் செய்கையால் வருகின்ற பழியினையும் பகை வர்தம் நகையினையும் கண்டு நாணம் அடைகின்றாய் அல்லை. மனை வியை மறையவர்க்குக் கொடுத்து விட்டோ நீ உனது வலிமையைப் புகழ்ந்து கூறுவது? இச்செயலால் இறக்க நேரினும் ஒருசேர அனை வரும் இறந்து படுவோம் அல்லாமல், நீ உன் மனைவியை மறையவ ருக்குக் கொடுக்க விடமாட்டோம்'' என்று கூறினார்கள்.
குறிப்புரை: ஏட - இகழ்ச்சிக் கண் வந்த விளி. பாடவம் - வலிமை; பெருமையுமாம். பனவற்கு - மறையவற்கு. ஆல் - அசைநிலை.

சுற்றத்தார் கூறிய அம்மொழியைக் கேட்ட வுடனே, மனத்தில் உதித்த சினம் மிக, ''உங்களுடைய உடம்பின் துண்டுகளை எவ்விடத்தும் சிதறி முழுமையாக உம் உயிர்களை யெல்லாம் விண்ணுலகை அடையச் செய்து, அதன் பின் நல்ல தவத் தினையுடைய இம் மறையவரைத் தடையில்லாமல் அழைத்துக் கொண்டு போகுமாறு செய்வேன்'' என இயற்பகை நாயனார் மேற் கொண்டு எழுந்தார்.
குறிப்புரை: முதல் விசும்பு - முன்னாகத் தோன்றிய விசும்பு. ஐம் பெரும் பூதங்களுள் முதற்கண் தோன்றியது இதுவே. 'கருவளர் வானத்து இசையில் தோன்றி உருவறிவாரா ஒன்றன் ஊழி' என்னும் பரிபாடலும் (பா. 2 வரி, 5-6).

இவ்வாறு சொல்லிக் கொண்டு அவர்களை அணுகி எதிர்த்த பொழுது, திரளாக வந்திருந்த அவ்வுறவினரும் தம்முடன் மாறுபட்டு நிற்கும் இயற்பகை நாயனாரை எதிர்க்காமல், அவ் வம்மையாரை அழைத்துக் கொண்டு, ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானாகிய மறையவர் நிலத்தில் நடந்து செல்ல, அவரை அணுகி, அவருக்கு எதிராக மாறுபட்டுத் தம் உள்ளத்தில் மிகுதியாகக் கொண்டிருந்த சினத்தால், மேற்கொண்டு சென்று, அத் தையலைக் கொண்டு போக ஒட்டோம் என்று அம்மறையவரைத் தடுத்தார்கள்.
குறிப்புரை: இயற்பகையாரை எதிர்த்துப் போர் செய்யின் அதற்குள் அம் மறையவர் தம் தையலை அழைத்துச் சென்று விடுவர் என்று கருதிய சுற்றத்தார், அவரை விடுத்து அம்மறையவரை எதிர்க்கலானார்கள். அன்றே - அப்பொழுதே. அசைநிலை என்பாரும் உளர் என்பது சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை) குறிப்பு.

அவ்வுறவினர்கள் இவ்வாறு மேற்சென்று அம்மறையவரைத் தடுத்தவிடத்து அதைக் கண்ட இயற்பகை நாயனார், அவர் முன் வெகுண்டு தமக்கு வலிய துணையான வாள்படையைக் கொண்டு, வலம் இடமாகச் சுற்றிவந்து, தம்மோடு எதிர்த்தவர்களின் தோள்களையும், கால்களையும், தலைகளையும் வெட்டி வீழ்த்தி, ஏனைய மிருகங்களை வென்று கொல்லும் ஆண்புலி போலப் போர்த் தொழில் செய்து வெற்றி மிக விளங்கினார்.
குறிப்புரை: சாரி - சரித்தல்; கை - இடம்; தான் நிற்கும் இடத்தி னின்றும் வலமாயும், இடமாயும் சுற்றி வருதலின் சாரிகை ஆயிற்று. தான் குறித்த இலக்கில் தவறாது பாய்தற்குரிய வலிமை புலிக்கு உண்டு ஆதலின் 'புலியேறு அன்ன' என்றார். 'ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல', 'பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலி தாக்குறின்' (குறள், 599) எனவரும் இலக்கிய வழக்கும் காண்க.

போர் செய்தற்கென ஒருங்கு சேர்ந்து இயற்பகை நாயனாரின் முன் பலராய் வந்து எதிர்த்தவர்களும், தனியே வந்து எதிர்த்தவர்களுமாய்த் தாம் விரும்பிய திக்குகளிலெல்லாம் தனித் தனியே போர் செய்யும் சமயத்தில், ஆண் தன்மையில் மிக்க இயற்பகை நாயனார் தாம் ஒருவரே அவரவர்க்கும் ஈடு கொடுப்பாராகிக் கண்டார் மதிக்கத் தக்க விரைவோடு பாய்ந்து, அவரை அணுகி அவருக்கு முற் படத் தாம் வெட்டி வீழ்த்தினார்.
குறிப்புரை: 'வருவிசைப் புனலைக் கற்சிறைப் போல ஒருவன் தாங்கிய பெருமையானும்' (தொல். புறத். 8) என்றும், 'ஒருகுடை மன் னனைப் பலகுடை நெருங்கச் செருவிடைத் தமியன் தாங்கற்குமுரித்தே' (புறப்பொ. வெண். தும்பை) என்றும் கூறப்பெறும் வீரத்தகைமையை இயற்பகைநாயனாரின் செயல் நினைவு கூர வைக்கின்றது.

இயற்பகை நாயனார் இவ்வாறு பகைவரை வாளால் வெட்டிக் குவித்த பொழுது, குடல்கள் எங்கும் சொரிந்து கிடந் தன. பல்வேறு உடலங்கள் எவ்விடத்தும் வெட்டுப்பட்டுக் கிடந்தன. தலைகள் பலவும் வெட்டுண்டு விரிந்து கிடந்தன. வீரர்கள் இறந்த பின் னும் அவர்கள் கண்கள் தீக்கனன்றுகொண்டிருந்தன. சிவபெருமா னின் திருவடிகளைத் தம் இதயத்துக் குடிகொள்ள வைத்திருந்த இயற்பகை நாயனார், மேலும் தம்மோடு எதிர்த்து வருவார் ஒருவரும் இல்லாமையால் போர்க்களத்தில் தாமேயாகத் திரிந்து வந்தனர். ,

குறிப்புரை: 'செறுவரை நோக்கிய கண்தன், சிறுவனை நோக்கியும், சிவப்பானாவே' (புறநா. 100) என்புழிப்போல, வீரர் இறந்தபின்னும் அவர் கண்கள் நெருப்பைக் கனன்று கொண்டிருந்தன. இதனால் அவர்தம் சினம் மிகுதி தெரியவருகிறது.

அறுபட்ட உடல் துண்டங்களின் பக்கங்களிலெல் லாம், அலைபெருக இரத்த வெள்ளமானது மேன்மேல் பொங்க, செந்நிறமான அப்போர்க்களத்தினின்றும் வென்றிகொள்வதற்கென வந்த உறவினர்களோடு கூடவந்தவர்களில் ஓடினவர்கள் பிழைத் தார்கள். ஓடாது எதிர்த்தவர்கள் அனைவரும் இறந்தார்கள். நீண்ட வாட்படையும் தாமுமாக வந்துநின்ற இயற்பகை நாயனார் ஒருவரே அக்களத்தில் தனித்து நின்றார்.

குறிப்புரை: மாடு - பக்கம். யாவரும் மடியஏற்பட்ட குருதியால் அக்களம் செங்களம் ஆயிற்று. ஆதலின் 'மடிந்த செங்களம்' என்றார். ஆடு உறுசெயல் - பகைவரைக் கொன்று வெற்றி பெறுதற்கென வந்த செயல், அடுதல் ஆடுதல் என நீண்டது.

இவ்வாறு நின்றவராகிய இயற்பகை நாயனார், கற்புச் செல்வம் மிக்க மனைவியாரை மறையவருக்குக் கொடுத்து, அக் கொடை நிறைவேறுதற்கு இடையூறாக முற்பட்டு வந்த பெரும் சுற்றத் தாரை எல்லாம் வாட்படையால் கொன்றதற் பின், அரிய மறைகளை உணர்ந்த முனிவரைப் பார்த்து, அடிகளே! நீர் அஞ்சாதவாறு ஒப்பற்ற இக்காட்டைக் கடந்து செல்லுதற்குத் துணையாக உம்முடன் வந்து அனுப்புகின்றேன் என்று அவருடன் போயினார்.

குறிப்புரை: திரு-ஈண்டுக் கற்புத்திருவைக்குறித்தது. ஏ-அசை நிலை.

மால், அயன் என்னும் இருவரானும் தேடி அறிய இயலாமல் ஒளித்து நின்ற சிவபெருமானாகிய அம்மறையவர் பின்பு நடந்துவரும் அவ்வம்மையார் பின், போர்த்திறன் மிக்க வீரராய இயற் பகை நாயனார் வரத்தாம் முன் செல்லும் பொழுதில், அரிய அம்மறை முனிவர் திருச்சாய்க் காட்டினை அணுக அடைந்த அளவில், அழகு நிறைந்த தோள்களையுடைய இயற்பகை நாயனாரை 'இனி மீள்க'. என்றருளிச் செய்தார்.

குறிப்புரை: திரு - அழகு; வீரத்தாலாய அழகு. 'போர்முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத தோள்' (கலிங்கத். 485) எனச் செயங் கொண்டார் இவ்வீர அழகைக் குறித்துக் காட்டுவர். 'வசிந்து வாங்கு நிமிர்தோள்' (தி. 11 திருமுரு. 106) என வரும் நக்கீரர் கூற்றால், ஈண் டைய அழகு உடல் அழகுமாம். மீள்க என எனற் பாலது, மீளென என நின்றது. மீளுதல் - இல்லத்திற்குத் திரும்பச் செல்லுதல். இல்லத் திற்கு மீள்க என்னாது வாளா மீள்க என்றது இப் பிறவியினின்றும் மீள்க எனும் குறிப்பும் புலப்படவாம்.

தவத்தினையுடைய அம்முனிவரர் தம்மை வீட்டிற்கு மீண்டு போகலாம் என்று அருளிய பின்பு, அம்மறையவர் திருவடிகளைத் தம் தலைஆர வணங்கிக் கும்பிட்டு நின்று, மூவுலகும் உய்யுமாறு எழுந்தருளிய அம்மறையவரை வாழ்த்தி, இப்பெரு முனிவரது திருவருளைப் பெறும் பேற்றினை அடைந்தேன் என்று கூறி இயற்பகை நாயனார் தம் இல்லத்திற்குத் திரும்ப முற்பட்டார்.
குறிப்புரை: பூசுரன் - நிலத் தேவன்; நிலத்தின் கண் வாழும் தேவன்; மறையவன் என்பது கருத்து, 'பூசுரன் ஞானசம்பந்தன்' (தி. 2 ப. 66 பா. 11) என ஞானசம்பந்தர் தம்மைக் குறிக்குமாறும் காண்க. இயற்பகையாரும் மீண்டார் எனவரும் உம்மை, அம்மறையவர் தாமும் செல்ல என நின்றமையின் உம்மை இறந்தது தழீஇயிற்றாம்.

பொ-ரை: யாவரும் செய்தற்கருமையாம் செய்கையைச் செய்த நன்மை பெருக நின்ற இயற்பகை நாயனார் செல்ல, நீலநிறம் பொருந்திய கழுத்தையும் எட்டுத் திருத்தோள்களையும் உடைய சிவபெருமானாகிய மறையவர், அவரை மகிழ்வுடன் நோக்கிப் பொய்யில்லாத மனத்தினை உடையன் ஆதலின் திரும்பிப் பார்த்தல் கூடச் செய்யாது போயினன் என்று மெய்ம்மை நிறைந்த திருவுள்ளம் உடைய அவ்வியற்பகை நாயனாரை மீண்டும் அழைப்பாராயினார்.

குறிப்புரை: கொடுத்தற்கரிய மனைவியைக் கொடுத்ததும், அவரை அழைத்துச் செல்லுதற்கு இடையில் ஏதும் இடையூறு வாராமல் காத்ததும், மீள்க எனச் செப்ப மீண்டும் ஒருமுறை பார்த்துச் செல்லுதல் கூடச் செய்யாது மீண்டதும், எவராலும் செய்தற்கரிய செயலாகும். இதனைச் செய்தற்குக் காரணம் மிக்க சீர்அடியார்கள் யார் எனினும் 'வேண்டும் யாவையும் இல்லை என்னாதே இக்கடற்படி நிகழ முன் கொடுக்கும் இயல்பில் நின்ற' உளப்பாங்கேயாகும். அவ்வுள்ள நிலை புலப்படவே 'பொய்தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான்' என்றார்.

உயிர்க்குற்ற மயக்கத்தை அறுத்தற்குக் காரணமாய மறைகளும் தம்மைக் காண வேண்டித் தேடவும், மால் அயன் ஆகிய இருவரும் அடிமுடிஅறியத் தேடவும் காணாது நின்ற சிவபெருமானா கிய மறையவர், 'இயற்பகை முனிவனே, அடைக்கலம். இவ்விடத்து நீ விரைவில் வருவாய், அடைக்கலம், மெய்யடியார்க்குக் கொடுத்துத வுதலில் மறவாதவனே, அடைக்கலம், எம்மிடத்துப் பேரன்புடைய வனே, அடைக்கலம், அடைக்கலம், எவராலும் செய்தற்கரிய செய்கை செய்து பத்திமையில் உறைப்புடையவனே, அடைக்கலம்' என்று அழைத்தார்.
குறிப்புரை: முனிதல் - வெறுத்தல். இயற்பகையார், மனைவியார், உறவினர், உலகம் கொண்டொழுகும் ஒழுக்கம் முதலிய அனைத் தையும் உவர்த்து நிற்றலின் அவரை 'முனிவர்' என்றார். 'அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை' என்புழிப்போல, உலகியல் ஒழுக்கத் தையும் கடந்து நிற்றலின் உலகியற் பகையாரானார். ஆதலின் முனிவர் என்றார். ஓலம் - தமக்கு நேர்ந்த அச்சம் நீங்கத் தம்மில் உயர்ந்தாரை அழைக்கும் சொல்: அயர்ப்பு - மறப்பு 'அயரா அன்பின் அரன் கழல் செலுமே' என்ற விடத்தும் இப்பொருள் படுதல் காண்க. மறை களும், மால், அயனும் அறிதற்கரிய பெருமான், இயற்பகையாரை இவ்வகையில்அழைத்ததுஅப்பெருமானின் அருமையில் எளிய அழகை விளக்கி நிற்கின்றது. அவ்வெளிமையும் அவ்வடியவரை ஆட்கொள்ளவேயாம் என்பதைக் காண, அப்பெருமானின் கரு ணையை அறிய இயலுகின்றது.

இவ்வாறு அம்மறையவர் அழைத்த பேரோசை யைக் கேட்டு, 'அடியேன் இவ்விடத்து வந்தேன், வந்தேன், உயிர் தாங்கி ஓடிப் பிழைத்த உறவினர்கள் உமக்குத் தீங்கு செய்தற்கு மேலும் இருப்பராயின் அவர்கள் மிகு வலிமையுடைய நீண்ட கையிலிருக்கும் வாட்படையினால் வெட்டப்படுவர் என்று சொல்லி, இயற்பகை நாயனார் விரைந்து அவ்விடத்திற்கு வர, குழைகள் விளங்கிய திருச்செவிகளை உடையனவாகிய மறையவராகிய சிவபெருமானும் அவருக்குத் தம் திருவுருவக் காட்சியைக் கொடுத்தருளுதற்கு மறைந் தருளினார்.

குறிப்புரை: 'விரை சொல்லடுக்கு மூன்று வரம்பாகும்' (தொல். எச்ச. 27) என்னும் தொல்காப்பியம். அவ்வரம்பிற்கேற்ப ஈண்டு இருமுறை அடுக்கி வந்தன. வருவேன் வருவேன் என்னாது வந்தேன் வந்தேன், என்றார் விரைவு தோன்ற. இழைத்தவர் - வாளினால் இழைக்கப் பெற்றவர்; அஃதாவது வெட்டப்பெற்றவர். செய்வினை, செயப்பாட்டு வினை யாய் நின்றது. இங்கும் இழைத்தவர் ஆவர் என்னாது ஆகின்றார் என நிகழ்காலத்தால் கூறியது, உறுதி பற்றியேயாம்.
'வாராக் காலத்து வினைச் சொற்கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை'
-தொல். வினை. 48
எனும் இலக்கண மரபில் வந்ததாகும். கோலங்கொள்வான் மறைந் தனன் என்பது மறைந்தமைக்குக் காரணம் கூறியவாறாம்.
முன்னர் 'மாய வண்ணமே கொண்டுதம் தொண்டர் மறாத வண்ணமுங் காட்டுவான் வந்தார்' (பா. 407) என அவர் வந்தமைக்கும் காரணம் கூறியதையும் ஈண்டு நினைவு கூர்க.

இவ்வாறு கூறிக்கொண்டு மறையவரிடத்துச் சென்ற இயற்பகை நாயனார், அம் மறையவரைக் காணாமல், அங்கு அவ்வம்மையாரை மட்டும் கண்டார். அப்பொழுது ஒரு பொன் மலையானது வெள்ளிமலையின் மேலிருந்து ஒளிசெய்வது போலத் தம் துணையாய உமையம்மையாருடனே ஆனேற்றின்மீது எழுந் தருளியிருக்கும் சிவபெருமானை விண்ணில் கண்டார். கண்டவர் காலம் தாழ்த்தலின்றி உடனே அப்பெருமானை நிலமுற வீழ்ந்து வணங்கினார். உடனே எழுந்து நின்று வழிபட்டார்.

குறிப்புரை: வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடியுடன் விளங்கும் தெள்ளுபேரொளிபவளவெற்பென' எனப் பின்னர் (தி. 12 பு. 21 பா. 379) வருவதும் காண்க.
'பூத்த பவளப் பொருப்பொன்று வெள்ளி வெற்பில் வாய்த் தனைய தெய்வவடிவாகி' (கந்தர். 31,32) எனவரும் குமரகுருபரர் திருவாக்கும் ஈண்டு நினைவு கூர்தற்குரியதாம்.

'இவ்வாறு எழுந்தருளி வந்த கருணைப் பெருக் கின் திறத்தை எடுத்துச் சொல்லுவதற்கு அறியேன். நும் பெருங் கருணை என்றும் வாழ்வதாகுக. எளியேன் பொருட்டு இவ்வாறு எழுந்தருளிவந்த அம்மையப்பராகிய திருக்கோலம் என்னால் என்றும் அயர்த்தலின்றி வழிபடுதற்குரியதாம். விரைவாக எழுந்தருளி அடியேனை வழிவழி அடியனாக அடிமை கொண்ட பெருமானே! உன்னை என்றும் வணங்குகின்றேன். அளவற்ற பேரானந்த வெள் ளத்தை அடியேனுக்கு வழங்கியருளிய பெருமானே! நின்னை வணங் குகின்றேன். தில்லைப் பெருவெளியில் என்றும் கூத்தியற்றுகின்ற பெருமானே! நின்னை வணங்குகின்றேன்'' என்று பலவாறாகப் போற்றி வணங்கினார்.
குறிப்புரை: வாழிய என்பதன் ஈற்று அகரம் கெட்டு நின்றது. வல்லை - விரைவாக.

விண்ணின் கண், ஆனேற்றின்மீது இவர்ந்தருளிய சிவபெருமான், அடியவராகிய இயற்பகை நாயனாரை நோக்கி, 'யாவரும் எண்ணி உய்தற்குரிய இந்நிலவுலகில் இவ்வாறு நம்மி டத்துக் கொண்டிருக்கும் அன்பின் தொடர்பைப் பார்த்து மகிழ்ச்சி யடைந்தோம். வினையின் நீங்கி விளங்கியவனே, நினக்குப் பொருந் திய மனைவியோடு நம்முடன் வருவாயாக' என்றருளினன்.

குறிப்புரை: பரிவு - அன்பு. பழுது - இருவினை. சிவப்பேறு, வினை நீக்கம் பெற்ற வழியே எய்தற்குரியதாகும் ஆதலின் ஈண்டுப் பழுது, வினை என்பதாயிற்று.

வீடுபேற்றினை அடைதற்குக் காரணமான சிறப்பு மிக்க இயற்பகை நாயனாருக்கும், தெளிவுபொருந்திய தெய்வக் கற் பினையுடைய அவர் மனைவியாருக்கும் தக்கவாறு பெருகிய அரு ளில் திளைத்து வாழ்தற்குரிய உயர்ந்த வீடு பேற்றினைக் கொடுத்து, இவ்வருட்டிறத்தினைத் தேவர்களும் எண்ணி ஏத்துமாறு உமையம் மையாரோடு ஆனேற்றில் எழுந்தருளி வந்தவராய சிவபெருமான், நிலை பெற்ற அழகிய தில்லைப் பொதுவிற்கு எழுந்தருளினார்.
குறிப்புரை: இந்நான்குபாடல்களும் ஒரு முடிபின. திரு - முத்தித்திரு.

தேவர்கள் பூமழை பொழியவும், பெருமை பொருந்திய மறைகள் ஒலிக்கவும், சிவஞானத்தில் திளைத்து நிற்கும் முனிவர்கள் போற்றவும், நலம் சிறக்கும் சிவலோகத்தின்கண் குற்ற மற்ற அவ்வியற்பகை நாயனார் தம் மனைவியாருடன் சிவபெருமானைத் தொழுது அவர் அருகில் வாழ்ந்திருக்கும் பெருமையைப் பெற்றார். அவரொடு பகைத்த மற்ற உறவினர்களும் விண்ணுலகை அடைந்து இன்பம் பெற்றார்கள்.
குறிப்புரை: ''நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுக'' என முற் கூறியமையின், ஈண்டுச் சிவலோகத்தில் உடனுறையும் பெருமை பெற்றார் இயற்பகையாரும் அவர்தம் மனைவியாரும். அறநெறிவழி நின்றமையாலும், நாயனாரிடத்தும், அம்மையாரிடத்தும் பழியும், பாவமும் சாராது காத்தலில் முனைந்து நின்றமையாலும், இயற்பகை நாயனாரின் வாளினால் ஒறுக்கப்பட்டமையாலும் அவருடன் பகைத்த சுற்றத்தாரும், வானிடை இன்பம் பெறுதற்கு உரியராயினர்.

இல்லற இன்பத்தைப் பெறுதற்குக் காரணமாய மனையாளை, மறையவராக வந்தவர் சிவபெருமானின் அடியவர் என்றே கருதி ஒரு சிறிதும் வருந்தாது கொடுத்த இயற்பகை நாயனா ருடைய பெருமையை வணங்கி வாழ்த்தி, அன்புமிகுந்த தூய மனத்தால் சிவனடியார்களிடத்து அன்பு செலுத்தும் நிலைபெற்ற புகழினையுடைய இளையான்குடிமாற நாயனாரது பத்திமை நலத்தை வழுத்தத் தொடங்குகின்றேன்.

குறிப்புரை: தாரம் - மனைவி. துன்புறாது உதவும் மனைவியைக் கொடுத்தற்கு நேர்ந்ததே எனும் துன்பமின்றிக் கொடுத்துதவிய. இளசை - இளையான் குடி; அது இளசை என மருவிநின்றது.


This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history