சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
ஏனாதிநாத நாயனார் புராணம்  

12 -ஆம் திருமுறை   12.090  
இலை மலிந்த சருக்கம்
 
புலிக்கொடியை இமயமலை மீது நாட்டி அவ்வெல்லை வரையிலும் தம் நாட்டைக் காவல் செய்யும் குளிர்ந்த வெண்மையான முத்துகள் நிறைந்த வெண்கொற்றக் குடையையும், வெற்றி பொருந்திய மாலையையும் உடைய சோழர்களது வளம் மிகுந்த சோழ நாட்டில், வண்டுகள் ஒலிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த வயல்களோடு கூடிய குளிர்ந்த மருதநிலம் சூழ்ந்து விளங்குவது, எட்டுத் திக்கிலும் பரந்த புகழையுடைய பழமையான காப்பமைந்த எயினனூராம்.


குறிப்புரை: புண்டரிகம் - புலி, எயினனூர் - இஃது அரிசிலாற்றின் தென்கரையில், கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் உள்ளது.

வேழக் கரும்புகளோடு மெல்லிய கரும்புகளும் குளிர்ந்த வயல்களிடத்துத் தம் வளர்ச்சியில் தாழும்படி, கதிர்களை யுடைய செந்நெற்பயிர்கள் உயரும் தன்மை உடையவாய், அவற்றால் வாழ்வுபெறுகின்ற குடிமக்கள் ஓங்கி நிலைபெற்றிருக்கின்ற அவ் வழகிய எயினனூரில் வாழ்பவர், ஈழக்குலத்தில் தோன்றிய சான்றார் மரபினராய ஏனாதிநாதர் என்று சொல்லப்படுபவராவர்.

குறிப்புரை: வேழக்கரும்பு - கரும்பில் ஒருவகையது; நாணற் கரும்பு என அழைக்கப்பெறும். உயர்ச்சியில் கரும்புதாழ, நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்துள்ளன ஆதலின், 'தாழக்கதிர்ச் சாலி தான் ஓங்கும் தன்மைய வாய்' என்றார். ஈழம் - கள். அதனை இறக்கி விற்பவர் சான்றார் மரபின ராவர். இக்காலத்தே சாணார் என மருவி அழைக்கப்படுகின்றனர்.
தான் - அசைநிலை. வாழ்பவர் என்பது அவாய் நிலையால் வந்தது. ஏனாதி - பட்டப்பெயர்.

இவ்வடியவர் பழமையாகிய திருவெண்ணீற்றின் மேல் அன்பு பூண்டு ஒழுகும் அடிமைத் திறத்தால், சிவபெருமானை வழிபடுதலினால் உண்டாகும் நன்னெறிக்கண் நிற்கும் தகுதிப்பாட்டில் எந்நாளும் குறையாதவர். அரசர்களுக்கு வெற்றி வழங்கும் கூரிய வாட்படையைப் பயிற்றுவிக்கின்ற தொழிலாகிய வித்தையில் முதன்மை பெற்றவர்.
குறிப்புரை: தொன்மைத் திருநீறு - பழமையாக அணிந்து வரும் திருநீறு. இறைவன் தன் திருமேனியில் திருநீறுதரித்துக் கொண்டிருத்த லின் அவன் என்றோ அன்றே திருநீறும் இருந்து வருவதாயிற்று. இதன் பழமையும் சிறப்பும் இதனால் விளங்குவதாம். 'மண்டமர் பல கடந்து மதுகையால் நீறணிந்து' (கலித். கடவுள், 1) என்னும் கலித்தொகையும்.

வாட்படை பயிற்றும் தொழிலினராகிய அவர் அதனால் வந்த பொருள் வருவாய் அனைத்தையும், பெருமை பொருந்திய திருமுடியையும் திருவடியையும் காண இயலாத மால் அயன் ஆகிய இருவரையும் தொண்டாளும் சிவபெருமானின் அடியவர்களுக்கு, நாளும் தம் உள்ளத்து எழும் பேரன்பினால் பொருந்தி, கொடை மிகுதியால் கொடுத்துவரும் கடப்பாடுடையவர்.
குறிப்புரை: 'தாளும், தடமுடியும் காணாதார் தம்மையும்' அடிமை யாகக் கொண்டருளுவர் என்பதால், அப் பெருமானின் பேரருளு டைமை விளங்குகிறது. உம்மை - இழிவு சிறப்பும்மை.

பகைவர்களும் பாராட்டுதற்குரிய நன்னெறிக் கண், எவ்வகையாலும் இகழப்படாத செய்கையின் இயல்பில், இவர் ஒழுகுகின்ற காலத்து, விலக்குதற்கு அரிதாகத் தம்மொடு இணைந் துள்ள தொழிலில் உரிமை பெற்றிருக்கும் தாயத்தாரில் உள்ளவனாய் அதிசூரன் எனும் பெயருடைய ஒருவன் இருந்தான்.
குறிப்புரை: நள்ளார் - பகைவர். 'கேளாரும் வேட்பமொழிவதாம் சொல்' (குறள், 643) என்புழிப்போலப் பகைவரும் பாராட்டும் பண்பு என்றார். எள்ளாத செய்கை - பிறர் எவராலும் எவ்வாற்றானும் இகழப் படாத செயல். விலக்குதற்கரிய தாயத்தினன் எனவே, அவனுக்கும் தமக்கும் உள்ள உறவு உரிமை விளங்குவதாயிற்று. அரிசூரன் என்பதும் பாடம்.

மேற் குறித்த அவ்வதிசூரன் என்பவனும், வெற்றி பொருந்திய கூரிய வாட்படை பயிற்றும் தொழில்களைக் கற்றவர் களில், தன்னினும் மேம்பட்டான் ஒருவன் எவனும் இல்லை என்று சொல்லும் செருக்கால், பெரிய இந்நிலவுலகத்தின்கண் மிகுந்த இறு மாப்படைந்து, உலகில் தன்னைத்தானே மதித்தவனாய் வாழ்ந்தான்.
குறிப்புரை: கொற்றம் - வெற்றி. வடிவாள் - வடிக்கப்பட்டகூரிய வாள். வாட்படையில் தன்னைவிடக் கற்றார் எவரும் இல்லை எனும் செருக்கால் தன்னையே மதிப்பவனாயினான், 'தம்மின் கற்றாரை நோக்கிக் கருத்தழிதலே' (குமர. நீதிநெறி, 14) சால்பு. அதற்கு மாறாக இவன் பண்பு விளங்கிற்று. மற்று - அசைநிலை.

தான் செய்து வரும் பிழைப்பிற்குரிய தொழில் கெடுமாறு, தன் குலத்திற்குரியதாய உரிமையில் குறையாத செய்தொழி லாகிய வாட்படை பயிற்றும் ஆசிரியத் தொழிலால் வரும் வரு வாயானது நாளுக்கு நாள் குறைவடையவும், ஏனாதிநாதருக்கே அவ்வருவாய் மேம்படவும் கண்ட அதிசூரன், அவ் ஏனாதிநாதரிடத் துப் பொருந்தாத பகைமை பாராட்டுவானாயினான்.
குறிப்புரை: விருத்தி - வாழ்தற்குரிய வழி: பிழைக்கும் வழி. வட நூலார், இதனைச் சீவனோபாயம் என்பர். தன் ஆசிரியர் வளர்ச்சியில் தனக்கு அழுக்காறு ஏற்படுதல் தகாது என்பார். 'ஏலா இகல்' என்றார்.

கதிரவன் மேலே வரவரத் தன் ஒளி குறைந்து மங்கும் காலை மதியம் போலக் குறைவடைந்து, அழுக்காறு கொண்ட அந்த அதிசூரனும், தன் சுற்றத்தாரையும் ஏனைய ஊரவரையும் ஒருங்கு அழைத்துக் கொண்டு, ஏனாதிநாதரிடத்துச் சென்று எதிர்த்துப் போர் செய்வதற்கு நினைந்து, அதுவே தக்கது எனத் துணிந்து எழுந் தான்.
குறிப்புரை: கால் சாய்தல் - ஒளிகுன்றுதல். காலுதல் சாய்தல் என்பது கால் சாய்தல் என்றாயிற்று. காலுதல் - ஓளிவீசுதல். உடன் கூடப் பண்ணி - தம் சுற்றத்தாரும் ஊரவரும் தன்போல் ஏனாதிநாதர் மீது அழுக்காறு உடையர் அல்லர் எனினும், அவர்களையும் தன்னுடன் கூடுமாறு செய்து.

தோளின் வலிய ஆண்மை கொண்ட சுற்றத் தாருடனே, தனக்குத் துணைவலியாகக் கொள்ளப்பட்ட போர் வீரர் களின் கூட்டத்தோடு சென்று, ஏனாதிநாதரின் வீட்டின் முன்னே நின்று, வாள் பயிற்றும் தொழில் உரிமையை நம்மில் வலியவராய் உள்ளவரே கொள்ளத் தக்கவர், என மிகவும் மூண்டு எழும் சினத்தால் போருக்கு அழைத்தான்.
குறிப்புரை: வீரர்க்கு உரிய உடல் உறுப்புக்களில் தோளே வலிமை உடையது ஆதலின் 'தோள் கொண்ட வல்லாண்மை' என்றார். 'படை யறுத்துப் பாழி கொள்ளும் ஏமத்தானும்' (தொல். புறத். 17) என்னும் தொல்காப்பியமும். துணையாம் கோள்கொண்ட - துணை வலியாகக் கொள்ளப்பட்ட. கொள்ளப்பட்ட எனவே, அவ்வீரர்களுக்கு இவனுடன் வருதல், அவர்கள் உளத்தொடுபட்டது அன்று என்பது பெற்றாம்.

கொடிய கண்களையுடைய புலியிருந்த கடிய குகையில் சென்று, அதனைப்போருக்கு அழைக்கும் சிறிய கண் களையுடைய குறுநரி போன்றவனாய அதிசூரன், தன் மனைப் புறத்தே சூழ்ந்து போர்குறித்து நிற்ப, அவ்வதிசூரனின் ஒலியைக் கேட்டு.
குறிப்புரை: புலி இருந்த குகையில் சென்று நரி அழைத்தது போன்று, அதிசூரன் அடியவரின் மனைப்புறத்தே நின்று அழைத்தான் எனவே, அவனது வலியின்மையும் அடியவரின் வலிமிகுதியும் ஒருங்கு உணர நின்றன.

போருக்கு இவ்வாறு வலிய அழைத்தவர் யாவரோ? என்று ஆண்சிங்கம் போல எழுச்சிமிக்கு, கச்சுக்கட்டிய உடையை இடையில் வரிந்து கட்டி, ஒளி மிக்க வீரக்கழலையும் கட்டி, கூரிய வாளினையும், கேடயத்தையும் கைக் கொண்டு, போர் மேற்கொள்ளத்தம் திருமனையினின்றும் ஏனாதி நாதர் புறப்பட்டார்.

குறிப்புரை: கொல் - ஐயப் பொருட்டு. வாட்பலகை - கேடயம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

இவ்வாறு அவர் புறப்பட்ட போது, இவரிடத்துப் போர்த்தொழில்களுள் ஒன்றான வாள் பயிற்சி பெற்றுக் கொண்டி ருக்கும் வலிய, பெரிய சிறந்த வீரர்களும், இதற்கு முன் இவரிடம் பயின்று அவ்விடங்களில் பணி செய்து கொண்டிருப்பவர்களும், கொலை செய்தற்குரிய பல படைக்கலங்களையும் வாளையும் ஏந்திய சுற்றத்தவர்களும் இந்நிகழ்ச்சியைக் கேட்டு ஓடிவந்து வெல்லுதற்கரிய சிறந்த வீரராகிய ஏனாதிநாதருக்கு இருபக்கங்களிலுமாகச் சேர்ந் தார்கள்.

குறிப்புரை: இதனால் ஏனாதி நாதரிடத்துப் பயின்றவர்கட்கும், பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கும், சுற்றத்தார்க்கும், இருந்த அன்புள்ளம் தெரிய வருகின்றது.

தம் மனைப்புறத்தே வந்து போருக்கு அழைத்தவ னாகிய அதிசூரன், வலிமை மிகுந்த ஆண் புலி என நிற்கும் ஏனாதி நாதர் முன்நின்று, நாம் இருவரும், வாள் வித்தை பயிற்றுவித்துவரும் தொழில் உரிமையை நிலைநாட்ட, இந்த வெளியிடத்து அணிவகுத்து நிற்கும் நம் இருவரது படைகளும் தம்முள் பொர, இவர்களில் வெற்றி கொள்வார் யாவரோ, அவரே அத்தொழில் உரிமையைக் கொள்வது என்று கூறினான்.

குறிப்புரை: புலிப்போத்து - ஆண்புலி.

இவ்வாறு பகைத்தவனாகிய அதிசூரன் சொல்ல, ஏனாதிநாதர், 'அது நல்லது, நீ விரும்பின் நான் அதற்கு உடன் படுகின் றேன்'' என்று கூறி, மகிழ்ச்சி மிக்கவராய், அவன் குறித்த போர்க்களத் திடத்துச் சென்றபின் அணிவகுத்து நிற்கும் இரு படைகளுடன் போர் செய்பவராயினர்.

குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

மேகக்கூட்டத்தினை முன் கொண்டும், மின்னல் கூட்டங்களைத்தமக்கு இடையிடையே கொண்டும், விண்ணிலும் மண்ணிலும் இடியொலி எதிர் எதிரே செல்வது போல, பெரிய கேடயங்களை ஆளும் தன்மையும், வாட்போர் செய்யும் வலிமையும் கொண்ட போர் வீரர்கள், காகங்கள் நிறைந்த போர்க்களத்தின் இரு பக்கங்களிலும் எதிர் எதிராக வந்து பொருதனர்.

குறிப்புரை: கேடய வரிசைக்கு மேகமும், வாட்படைக்கு மின்னலும், வீரர் ஒலிக்கு இடியும் உவமைகளாயின. இடி ஏறு - இடி ஒலி. போர்க்களத்தில் இறப்போரின் தசைத் திரள்களை உண்பதற்கெனக் காகங்கள் நிறைதலின் 'காகம் மிடைந்த களம்' என்றார்.

கால்களில் வீரக்கழல்களைக் கட்டிய போர் வீரர்கள், தம் கைகளில் உடலை மறைக்கும் கேடயங்களையும், வாட்படைகளையும் கொண்டு இருமருங்குமாகப் போர்புரிய வந்து முந்தினர். இருசாராரின் வேற்படைகளும் தம்முள் எதிர்ந்து நீண்டன. அவை தாம் இருந்த கீழ் உலகை விட்டு இந்நில உலகத்தைப் பொருந்துகின்ற நாகவீரர்களின் நாக்குகள் மேல் நீள்கின்றவை போலத்தோன்றின.

குறிப்புரை: ஒளிவட்டம் - கேடயம். பணி வீரர்கள் - நாக லோகத்தவர்.

கொடிய கண்களையுடைய வலிய விற்படையை ஏந்திய வீரர்கள், வேறிடத்தில் நின்று, இருவர் பக்கமாகப் போர் செய்வார்களாகித், தத்தம் விற்களினின்றும் வெளிச் சென்ற அம்புகள் ஒன்றையொன்று நெருங்கி முற்பட்டு நிற்கும் செயல், மிகுந்த சினத்தில் மூண்ட தீயினின்றும் புகை போகும் மண்டலங்கள் போல் வளைந்து, சிவந்த கண்களினின்றும் தெறிக்கும் பொறிகள் போல்வனவாய் இருந்தன.

குறிப்புரை: கொடிகள் - புருவமாகிய கொடிகள். இவற்றின் வளைவு புகை மண்டலங்கள் செல்லும் வளைவை ஒத்தது. அம்புகள் சினத்தீயினின்றும் எழுந்த பொறிகள் போல்வனவாயின.

தங்களுக்கென இழைக்கப்பட்ட நாள் எல்லை யோடு சீறிப்போர் புரிய வல்ல அவ்வீரர்கள், தாம் விரும்பிப் போர் செய்கின்ற அப் போர்க்களத்தில், வாள்களோடு அவற்றைப் பிடித்த நீண்ட கைகள் துண்டிக்கப் பெற்றுத் துடித்தன. அவர் தம் மார்புகளில் வேல்கள் பாய்ந்தன. தம்மால் அறுக்கப்பட்ட தோள்களோடு அம்புகள் தரையில் வீழ்ந்தன. வீரர்களின் உடலைத்தாக்கி அழுந்திய கேடயங்கள், அவ்வுடலுடன் ஒன்றாய்ப் பதிந்தன. கால்களில் கட்டிய வீரக் கழல்களும் அறுபட்டன. மாலைகளுடன் கூடிய தலைகளும் அற்றன.

குறிப்புரை: ஈற்றடியை முன்னர்க் கூட்டி உரைக்க. போர் முனையில் நிற்கும் மறவர்கள், ஒன்று வெற்றி அல்லது இறப்பு என்ற உறைப்பில் நின்று போராடுகின்றமையின், வெற்றி பெறாத நிலையில் அவர்கள் இறப்பது உறுதியாதலின் 'நாளொடு சீறி, மலைப்பவர்' என்றார். 'இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற்பவர்' (குறள், 779) என்பர் திருவள்ளுவரும். இதற்கு முன்னைய மூன்று பாடல்களானும் வாள், வேல், வில் ஆகிய மூவகைப் படைகளின் விளைவுகளைக் குறித்த ஆசிரியர், இப்பாடலுள் அம்முறையே கூறுதல் எண்ணத்தக்கது. 'தோளொடு வாளி நிலத்தன' என்றது விற்போரின் விளைவாம். தோள் என வருவனவற்றுள், முன்னையது உடலையும் பின்னையது கேடயங்களையும் குறித்தன.

இரு மருங்கிலும் உள்ள படைகளில், முன் நின்ற வீர்கள் எதிர் எதிராக நின்று போர் செய்யும் போர்க்களத்தில், இரத்தப் பெருக்கு ஆறுகளென ஓடியது. உடலொடு துண்டிக்கப்பட்ட தலைகள் அங்கும் இங்குமாகச் சிதறின. படைவீரர்களின் உடல் துண்டங்களும் அவ்வாறே ஆங்காங்குச் சிதறின. வெளிவந்த குடல்களோடு கூடிய உடல்கள் பலவும் நிரம்பிக் கிடந்தன. பார்ப்பவர்கள் அஞ்சுமாறு கழுகுகள் நெருங்கின. அறுபட்ட துடிப்பறைகள் பலவும் உருண்டு கிடந்தன.

குறிப்புரை: நான்காவது அடி முன்னர்க் கூட்டி உரைக்கப் பட்டது. குறை உடல் - உடல் குறைந்த தலைகள். அறுதுணி - அறுக்கப் பட்ட உடல் குறைகள். இவ்வாறு பின் வருதலின் குறை உடல் என முன் கூறியதற்கு, உடல்குறைபட்ட தலைகள் எனக் குறித்தல் பொருந்தும். விசி - கட்டும். ஈண்டு அங்ஙனம் கட்டப்பட்ட வாரைக் குறித்தது. பறந்தலை - போர்க்களம்.

நீண்ட நேரமாக மிகச் சினந்து போர் புரிந்த வீரர் இருவரில் ஒருவன், தன்னைத் தொடர்ந்த பகைவனின் கால்கள் இரு தொடைகளோடு அறுந்து விழுமாறு வெட்டிக் கீழே விழச் செய்தான். இவ்வாறு வெட்டப்பட்ட உடல் கீழ் விழுவதற்கு முன்னமேயே, தான் கொண்ட போர் வாளால் தன்னை வென்றவன் மார்பு பிளந்து அறுமாறு வீச, சிங்கம் போன்ற அவனும் வீழ்ந்தனன். இவ்வாறாக இறந்த வீரர்கள் பலர் வீழ்ந்து கிடந்தனர்.

குறிப்புரை: நீள் இடை - நீண்ட நேரம். முடுகி - மிகச் சினந்து நெருங்கி. சாரிகை முறைமை - வாட் போரை மேற்கொள்ளும் வீரர்கள், தற்காப்பிற்கென வாளைச் சுழற்றிப் போர் செய்யும் முறைமை.

கூரிய முனையையுடைய வேல் கொண்டு எதிர்ந் தவர்கள், பகைவர்கள் தாம் தாமும் நீட்டிய பலகையையும் மார்பையும் ஊடுருவிச் செல்லுமாறு தம் வேலினை எதிர்எதிராகக் குத்தினர். அவ்வகையில் அவர்கள் தத்தம் உயிர் நீங்கிய பின்பும், தாம் முன் நின் றவாறே நின்றனர். அவ்வாறு நின்றவர் தத்தமக்குள்ள போர்ப்படை களின் திறனை அளந்து, நிலையிடுவார் போல் விளங்கினர். இவ் வகையில் இறந்துபட்ட வீரர்கள் எண்ணிலர்.

குறிப்புரை: உரப்புடன் - வீர உணர்வுடன். உயிர் நீங்கிய பின்னரும் உடல் வீழாது இருந்தமை அவர்களின் வீரஉணர்வைக் காட்டுகின்றது.

பொன்னாலாய பூணினையிட்ட தம் விற்களை வளைத்துப் போர் செய்ய, புற்றிலிருந்து வெளிப்படும் பாம்பென மாற்றார் விட்ட அம்பினால் தம் விற்படை அழியவும் போர் புரிதலினின்றும் நீங்காதவராகி, வெற்றி பொருந்திய உடைவாளை உருவிப் போரிட்டனர். இவ்வகையில் முன்னிருந்த தம் பெரு வளங்கள் குன்றவும், பின்னரும் அக்கொடைநிலையினின்றும் தவறாதவராய்ப்பின் தம்மிடம் உள்ளவற்றையும் கொடுத்துதவும் வள்ளலைப் போன்றனர்.

குறிப்புரை: சுரிகை - வாள். வள்ளல்கள், தம்மிடம் உள்ள பொருள்கள் நீங்கவும், இல்லையென்னாது உள்ளதைக் கொடுப்பர். அது போன்று, வீரர்களும் முன்பிருந்த படை நீங்கவும், தம்மிடத் திருக்கும் வேற்படை கொண்டு போர் புரிந்தனர்.

போர் முனையில் இறந்த வீரர்களின் மலர்ந்த முகங்கள், உயிர் உள்ளன என நினைந்தமையால் சிறை விரித்துப் பறந்து வந்த காக்கைகள் அவற்றைத் தீண்டாது அருகே சுழன்றன. அந்நிலையில் ஒளிவிட்டு விளங்கும் வீரர்களின் கண்கள், இரும்பு வினை செய்யும் கருங்கொல்லர்கள் உலையில் மேல்பொதிந்து அதன் பக்கத்துச் சரிந்து நிறைந்து நிற்கும் கரியினிடத்துப் பொங்கிப் புகைவரும் தீயை ஒத்தன.

குறிப்புரை: அடல் முனை - போர்முகம். கருங்கொடி - கரிய காக்கைகள். இறந்தும் கண்ணொளி கெடாத வீரர்களின் முகங்கள் ஒளிவிட்டு நிற்கின்றன. ஆதலின் அவ்வுடலைத் தீண்டாத காக்கைகள் அதன் மீதும் அருகுமாகச் சுழன்று திரிந்தன. கொல்லர் உலை - போர்க்களம். அவ்விடத்துக் கனன்று எரியும் தீ - வீரர்களின் கண்கள். சுழலும் காக்கைகள் - அத்தீயினின்றும் மேல் எழும் புகை.

வலிமை மிக்க படைவீரர்கள் இறக்க, அப்போர்க் களத்தில் விழுந்து கிடக்கும் பிணங்கள் முன்னே சிலர், புண்பட்ட தம் வயிற்றிலிருந்து வெளிவந்து இருக்கும் குடர்களை மிகுதியாகப் பறந்து கொண்டிருக்கும் கழுகுகளும் பருந்துகளும் பற்றி மேலே எடுத்துச் செல்லும் காலத்திலும், தாம் முன்பு மேற்கொண்ட போர் முயற்சியைத் தவிராதவராய் இருந்தனர். இந்நிலையிலுள்ள அவர்கள் வானத்தில் காற்றாடியை விடும் வித்தியாதரச் சிறுவர்களை ஒத்தனர்.

குறிப்புரை: விண்படர்கொடி - காற்றாடி. வீரர்கள் வித்தியாதரச் சிறுவர்களை ஒத்தனர். பறக்கும் கழுகுகளும் பருந்துகளும் காற்றாடி களை ஒத்தன. குடர்களை எடுத்துச் செல்லும் பொழுது வயிற்றிற்கும் பறவைகளுக்கும் ஆக இடைப்பட்டிருக்கும் குடர் நீட்சிகள் காற்றாடி யின் கயிற்றை ஒத்தன.

இவ்வாறு நிகழ்ந்த கொடிய போரில் இருசாரார் பக்கத்தும், வீரம் மிக்க மறவர்கள் கொடும் போர் செய்து பலர் இறந்தனர். இறவாது எஞ்சி நின்ற தம் படைவீரர்கள் பின்வர, தாம் முன்பு சென்று போர் செய்வாராகிய ஏனாதிநாதர் சினந்து எழுந்தனர்.

குறிப்புரை: வீடாது - இறவாது.

சினம் மிக்க வாளினின்றும் தீப்பறக்கவும், வீரக் கழல் ஒலிக்கவும், நஞ்சினை யுண்ட கழுத்தினை உடையவரான சிவ பெருமானுக்கு அன்பராய ஏனாதி நாதர், மேற்கூறியவாறு, போர்க் களத்தில் முன் வந்து, சினந்து எழுந்த பொழுது, முன்னர் இறவாது இருந்த வீரர்கள் பலரும் அவரை எதிர்த்து நிற்க, அவ்வீரர்களின் தலை களோடு தோள் வலிமையையும் தாள் வலிமையையும் அழித்தார்.

குறிப்புரை: ஞாட்பு - போர். உரம் - வலிமை.

போரில் தம்முடன் எதிர்ந்தவர்கள் அனைவரும் ஒப்பில்லாத வீரரான ஏனாதிநாதரின் வாளால் கொல்லப்பட்டனர். அதைக்கண்டு அவரை எதிர்க்காத வீரர்கள் எல்லாம், போர்க்களத்தை விட்டு, நிலைத்த மெய்யுணர்வின் முன் அலைந்து ஒழியும் ஆர்வம் முதலிய குற்றங்களைப் போல் ஆனார்கள்.

குறிப்புரை: தலைப்பட்டார் - போரில் தம்மை (ஏனாதி நாதரை) எதிர்ந்தவர்கள். முட்டாதார் - (ஏனாதிநாதருக்கு) அஞ்சி எதிர்க்காத வர்கள். நிலைப்பட்ட மெய்யுணர்வு - இறைவன் திருவடியிலேயே ஒன்றிநிற்கும் மெய்யுணர்வு. மெய்ப்பொருளை உணரும் உணர்வு மெய்யுணர்வாம். ஆர்வம் முதல் குற்றம் - காமம் வெகுளி மயக்கம் முதலாய குற்றங்கள். மெய்யுணர்வைத் தலைப்பட்டார்க்கு இன்னோ ரன்ன குற்றங்கள் வாராவாம். மெய்யுணர்வு ஒரோவழி தவறும் பொழுது முற்கூறிய குற்றங்கள் வந்து விடும். இடையறாத ஞான யோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டூத் தீ முன்னர்ப் பஞ்சுத்துய்ப் போலக் கெட்டு விடும் என வரும் பரிமேலழகர் உரையும் (குறள், 360க்கு) காண்க. இங்ஙனம் கூறவே ஏனாதிநாதருக்கு அஞ்சி இன்று அகன்றவர்கள் என்றும் அவரை அணுகார் என்பதும் போதரும்.

இத்தகைய கொடிய போர்க்களத்தில் போர் புரிய வந்தோர் எல்லாம் அழிந்து போக, அவ்விழிவைப் பொறாது போரில் அழியாது மீண்டவர்களைச் சேர்த்துக் கொண்டு, மின்னலையொத்த ஒளியையுடைய வாளினை வீசி, கொடிய புலியையொத்த வலிமை யுடைய வீரராகிய ஏனாதிநாதரின் முன்பு எதிர்த்துச் சென்று அதிசூரன் போர் செய்தான்.
குறிப்புரை: மானம் - தன் நிலையில் தாழாமையும் தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம். போரில் எதிர்த்த வீரர்கள் ஒன்று வெற்றி பெற்றிருக்க வேண்டும். இன்றேல் உயிர் விட்டிருக்க வேண்டும். இவ்விரண்டுமின்றி எஞ்சி மீண்டமையின் அது மானத்திற்கு இழிவாயிற்று.

வடிக்கப்பட்ட வாள் ஒளியையே அவன் காணுமாறும், வாளைச் சுழற்றிப் போரிடும் பொழுது, தம்மை அவன் காணாதவாறும், அதிசூரனை எறிந்து துண்டிக்கும் செயலில் அவர் அமைந்த பொழுது, அவன் அதனின்றும் தப்பியவனாய்ப் பொன் னணிந்த பெரிய தோள்களையுடைய அவ்வடியவர்க்கு ஆற்றாது புற முதுகிட்டு ஓடினான்.
குறிப்புரை: அடியவர் அவனைத் துணிக்க நேர்ந்த பொழுது, அவன் அவரிடத்தினின்றும் தப்பிப் புறமுதுகிட்டு ஓடினான்.

இவ்வாறு புறமுதுகிட்டு ஓடிய அதிசூரன் போர்க் களத்தில் அவ்வடியவர்க்கு ஆற்றாது, அழிந்த மானம் பெரிதும் மீதூரத் தரையில் படுத்தவன், உறங்காதவனாய்த் தனக்கு நேர்ந்த செயலை எண்ணி எண்ணி அந்த ஓர் இரவு முழுதும் சிந்தித்துத் துன்புறு கின்றவன், குறைபாடு மிகுந்த வஞ்சனைச் செயலால் அவ்வடியவரை வெல்வேன் என்று எண்ணியவனாய்,
குறிப்புரை: மண்படுவான் - தரையில் படுப்பவன். கண் படான் - உறங்காதவனாகி.

அந்நீண்ட இரவு முழுவதும் கழிய, பொழுது புலரும் காலத்தில், தீயவனாகிய அதிசூரனும், 'நாம் செய்யும் போரில் நம் பொருட்டு நமக்கு அயலவராகிய நாட்டார்களைக் கொல்லாமல், நாம் இருவரும் தனியிடத்தில் நின்று, வாள்பயிற்றும் உரிமையைக் கைக்கொள்வதற்கு உறுதிப்படுத்தும் போரினைச் செய்ய வருக' என மாலை அணிந்த ஏனாதிநாதருக்குச் சொல்லிவர ஏவலாளனை அனுப்பினான்.
குறிப்புரை: சேடு + ஆரும் = சேட்டாரும் என்றாயிற்று. சேய்மை பொருந்திய இரவு என்பது இதன் பொருளாகும். இரவு எப்பொழுதும் யார்க்கும் ஒரு படித்தாகவே அமையும். ஆனால் அதிசூரன் எப்பொழுது புலரும் எனக் கருதியவனாய் அவ்விரவை அநுபவித்து இருந்தமையின், அவன் அளவில் அக்காலம் நீட்டிப்பதாயிற்று. 'ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார் வருநாள் வைத்துஏங்கு பவர்க்கு' (குறள், 1269) எனத் திருவள்ளு வனார் கூறுவதும் இங்கு நினைவு கூர்தற்குரியதாம். வாள் தொழில் பயிற்று விக்கும் உரிமை, தம்மில் யாவர்க்கு உரியது என்பதை நிலைநாட்டவே இப்போரினை மேற்கொண்டான் அதிசூரன். அடிய வரும் அதற்கு இசைந்தனர். அவ்வகையில் வெற்றி கொள்வதோ தோல்வியுற்று அழிவதோ தமக்குள் இருக்க வேண்டும் என்று கருதி னான். ஆதலின் தம் இருவருள் எவருக்குத் துணைவரினும் அவர் அயலவராதலின் அவரை நாட்டார் எனக் குறித்தனன். தோடு - இதழ்கள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

இவ்வாறு அதிசூரன் அவ்வடியவர்க்குச் சொல்லி விட, அவரும் அதைக்கேட்டு, அவ்வாறு செய்தலும் அழகியதே என ஏற்றுக் கொண்டு வாள் ஏந்திய கையுடன் அவன் குறித்த போர்க் களத்தில் நின்று கொண்டு, வலிய வாளினையுடைய அவ் அதி சூரனை வருக என அழைத்து, அச்செயலைச் செய்ய மேற் கொண்டவராய்.
குறிப்புரை: உரவோன் - வலியோன். வலியன் அல்லனாயினும், தன் அளவில் வலியனாகக் கருதினானாதல் பற்றி இவ்வாறு கூறினார்.

தம் உறவினர் முதலிய எவரும் அறியாதவாறு ஒளிபொருந்திய வாளினையும் அழகிய கேடயத்தையும் தாமே எடுத்துக் கொண்டு, வெளியே வந்து, அதிசூரன் முன் வருமாறு குறித்த அவ்விடத்தில், அவனுக்கு முன் சென்று, அவன் வருகையை எதிர் நோக்கித் தனித்து நின்றார்.
குறிப்புரை: பற்றலன் - பகைவன்: அதிசூரன். இவ்விரண்டும் குளகம்.

வஞ்சித்துத் தீங்கு இயற்றும் உள்நோக்குடன் போருக்கு அழைத்த அக்கொடியோன், திருநீறு அணிந்த நெற்றி யினாரை எவ்விடத்தும் எஞ்ஞான்றும் ஏனாதி நாதர் தீங்கு செய்யமாட்டார் என்பதை அறிந்தவனாதலின், உண்மையிலேயே இதற்கு முன் திருநீறு அணிந்து பழக்கம் இல்லாதவனாய் இருந்தும்.
குறிப்புரை: பாங்கில் - திருநீற்றை அணியுமாறு அணிந்து நிற்கும் நிலையில்.

திருவெண்ணீற்றைத்தன் நெற்றி முழுதும் பொருந்துமாறு புறத்தே பூசி, நெஞ்சில் வஞ்சனையாகிய கறுப்பையும் உடன் கொண்டு, அழகிய ஒளி பொருந்திய வாளினையும் மணிக ளால் இழைக்கப் பெற்ற பலகையையும் கைகளில் கொண்டு, புண் ணியத்தன்மை வாய்ந்த போர் வீரராம் ஏனாதிநாதர் முன், தான் சொல் லிவிட்ட அவ்விடத்திற்குச் சென்றான்.
குறிப்புரை: மணிப்பலகை - மணிகள் இழைக்கப் பெற்ற கேடயம். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

வெற்றி பொருந்திய சிங்கம் தன் உணவுக்குரிய விலங்கு வருதலை எதிர்பார்த்து நின்றாற் போல, அவ்வடியவர் நின்ற நிலை கண்டு, அவரிடத்துச் சென்று அணுகுமளவும் தன் நெற்றியை வலிய கேடயத்தால் மறைத்துக்கொண்டு, தனியே நின்றவரான அவ்வடியவர்க்கு எதிரே சென்று, பாவச் செயலைச் செய்தற்குரிய அவன் தோன்றினான்.
குறிப்புரை: விடக்கு - தசை: இங்கு அதனையுடைய விலங்கைக் குறித்தது.

வலிமை பொருந்திய ஆன் ஏறு என்ன எதிர்த்து, அவனைக் கொல்லத்தகும் அமையம் தெரிந்து, அடிபெயர்த்துச் செல்கின்ற போது, அருகில் வந்த அதிசூரன் தான் மறைத்து இருந்த பலகையை விலக்கவே, அக்கடையவன் நெற்றியிடத்து வெண்ணீறு அணிந்திருப்பதை அவர் கண்டார்.
குறிப்புரை: இடை தெரிந்து - கொல்லுதற்குரிய சமயம் தெரிந்து. 'புண்ணியர் பூசும் வெண்ணீறு' என்பார் ஞானசம்பந்தர் (தி. 2 ப. 66 பா. 6). அது இக்கடையவன் நெற்றியிலும் காணக் காண்டலின் இவ் வாறு கூறினார்.

இவ்வாறு அவர் கண்டபொழுது 'ஆ! கெட்டேன்! இதற்கு முன் எந்நாளும் இவர் நெற்றியில் காணப்படாத வெண்மை யான திருநீற்றின் பொலிவினைக் கண்டேன். இனி வேறு என்ன நினைக்க உள்ளது? தேவர்க்கும் தேவனாய சிவபெருமானின் சிறந்த அடியாராக இவர் ஆயினர் என்று எண்ணியவராய், இவர் மனம் கொண்ட கொள்கைக் குறிப்பின் வழி நிற்பேன்' என்று எண்ணி.
குறிப்புரை: நெற்றியில் திருநீறு கண்ட அளவிலேயே இவர் அடிய ராயினார் என உறுதி கொண்டது. அடியவருக்கு இருக்கத்தகும் தகுதிகளுள் இது தலையாய தகுதி என்பதுபற்றியாம். 'வெண்ணீ றணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே' (தி. 8 ப. 35 பா. 5), 'எவரேனும் தாமாக' (தி. 6 ப. 61 பா. 3) என்பனவாகிய திரு மறைத் திருவாக்குகளையும் நினைவு கூர்க.

அவனைக் கொல்வதற்கெனக் கொண்ட, கையில் ஏந்திய வாளினையும் பலகையையும் நெகிழவிட்டு விட முதலில் கருதினார் எனினும், கையில் படையற்றவரைக் கொன்றார் எனும் பழி இவருக்கு வாராது இருக்க வேண்டும் என்று எண்ணி, அவ்வலிய பலகையினையும் நெய் பூசப்பெற்ற வாளினையும் உடன் ஏந்தி, எதிர்த்த அவ்வீரரோடு போர்செய்வார் போலக் காட்டி நின்றார்.
குறிப்புரை: நிராயுதர் - கையில் படையற்றோர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அவ்வாறு நின்ற திருத்தொண்டரின் திரு வுள்ளத்தை அறியவல்லார் யாவர்? முன்னின்ற கொடியோனாகிய அதிசூரனும் தான் நினைத்தவாறே முடித்தனன். இத்தன்மையினை அறிவாராகிய இத்திருத்தொண்டருக்கு அருளும் பொருட்டு மின் போன்ற செஞ்சடையினையுடைய சிவபெருமானும் தாமே வெளிப் பட்டுத் தோன்றி நின்றருளினார்.
குறிப்புரை: தன் கருத்தே முற்று வித்தான் - தான் முன் நினைந்த வாறே அவரைக் கொன்றான்.

தேவர் தலைவனாய சிவபெருமானின் திருவருள் திறத்தை இனித் தனியாக நாம் போற்றுவது என்னவுள்ளது? பகை வரின் கைவாளினால் பாசத்தை அறுத்து அவ்வடியவரை என்றும் தம்முடன் பிரியாது இருக்குமாறு அருளி, அவர் இதுகாறும் கொண்டிருந்த அன்புக்குரிய நிலையை விளக்கி, உமையை ஒரு மருங்கு கொண்ட பெருமானார் பொன்னம்பலத்தினை அடைந்தார்.

குறிப்புரை: பாசம் - கயிறு. இக்கயிறு இருவினைக் கயிறாம்.

தம் தலைவனாய சிவபெருமான் அணிந்து கொள்ளும் திருநீற்றின் சார்பைச் சார்பாகக் கொண்ட எம் தலைவரான ஏனாதிநாதரின் திருவடிகளை வணங்கி, தேவர்க்கும் தேவனான திருக் காளத்தியில் வீற்றிருந்தருளும் சிவபெருமானுக்கு, கண்ணை அப்புப வராகிய நம் தலைவர் செய்த பணிகளை நாம் அறிந்தவாறு கூறுவாம்.
குறிப்புரை: *************


This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history