சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
குங்குலியக் கலய நாயனார்  

12 -ஆம் திருமுறை   12.110  
இலை மலிந்த சருக்கம்
 
பொருந்திய நீர்வளத்தால் ஓங்கி நிலைபெற்று விளங்கிய காவிரியாற்றின் வளம் சிறந்த சோழ நாட்டில், பொருந்திய சிறப்பு மிக்க அந்தணர்கள் வாழும் மதில் சூழ்ந்ததொரு நகரமாக விளங்குவது,அலையெறியும் கங்கை சிறந்து விளங்கும் நீண்ட சடையையுடையாரும் முன்னொரு காலத்துத் தன் அடியவராகிய மார்க்கண்டேயர் மேல் பற்றும் படியாக வந்த காலனை உதைத்த சேவடியையுடையாருமாய பெருமான் என்றும் எழுந்தருளி யிருப்பதான திருக்கடவூர் என்னும் திருப்பதியாகும்.

குறிப்புரை: எயில் - மதில். தொண்டர் - மார்க்கண்டேயர். பொன்னி நாடு என்பதால் நீர்(தீர்த்த)ச் சிறப்பும், மறையோர் வாழும் எயிற்பதி என்பதால் பதி(தல)ச் சிறப்பும், 'எறிநீர்க் கங்கை. . . . . சூடியிருப்பது' என்பதால் மூர்த்திச் சிறப்பும் குறித்தவாறாம். 'கங்கை தோய்ந்த சடையார்' என்பதால் பொது வகையானும், 'தொண்டர்மேல் வந்த கூற்றைக் காய்ந்தவர்' என்பதால் சிறப்பு வகையானும் உலகைக் காத்தல் தோன்ற நின்றது.

அங்குள்ள வயல்கள் யாவற்றிலும் செஞ்சாலி என்னும் வகையான நெல் விளைந்துளது. வரம்புகள் (வரப்புகள்) யாவற்றிலும் சங்குகள் ஈன்ற முத்துகள் காணப்படுகின்றன. அவ்வயல்களின் அயலிடங்கள் யாவிலும் வேள்விச் சாலைகள் நிறைந்து விளங்குகின்றன. நீரை மடுத்து நிற்கும் அணைகள் யாவிலும் செங்கழுநீர்ப்பூக்கள் திரட்சியாக உள. அங்குள்ள கமுகஞ் சோலைகள் யாவின் மேலும் மேகங்கள் படிந்துள. அவ்வூர்ப் புறத்து இருக்கும் ஊர்கள் யாவும் திருக்கடவூரின் சீரைப் போற்றி மகிழும் சிறப்பினை உடையன. அங்குளோரின் செயல்கள் யாவும் அறநெறி திறம்பாதனவாகும். அத்தகைய ஊரே திருக்கடவூராகும்.

குறிப்புரை: வளை - சங்கு. கமுகு - பாக்கு மரம்

அகங்கையினும் அகன்று மை தீட்டப் பெற்ற கண்களுடன் வயலில் களையெடுக்கும் பெண்கள், எழிலுடன் கூடியாடும் இடமாய வயல்தோறும், மருதப் பாடல்கள் எழுவன. வடம்போல முறுக்கப்பெற்ற முப்புரிநூலைச் சிறப்புடன் அணிந்த மார்பினையுடைய வைதிக நெறிநின்ற அந்தணர்களுடைய செயல்களாகிய வேள்விகள் நடைபெறும் இடந்தோறும், சாமகானம் எனும் மறையோசையின் இசை எழும்.

குறிப்புரை:

மேன்மைபொருந்திய உயர்வுடன் நீண்ட கொம்பினையுடைய எருமைகள் தாமாகப் பால்சொரிந்த குளங்களில், செங்கயல் மீன்கள் பாய்ந்தோடலால், அங்கு அவைகளால் தெளித்திடப் பெறுகின்ற பாலுடன் சேர்ந்த நீர், தாமரை மலர்களில் பட, அதனால் நறுமணமுடைய தாமரை மலர்களும், இனிய பால் மணம் கமழ்ந்து நிற்கும். அதுவன்றியும், மேகங்கள் தோயும் மாடங்களின் மருங்கில் ஒரு சிறிது நேரம் படிந்திடும் மேகங்களும் அவை பொழிந்த நீரும், அந்தணர் வேள்வியில் வளர்த்திடும் ஓமப்புகையில் தோயலால், அவ் ஓமப்புகையின் இனிய மணம் அவற்றில் கமழ்ந்து நிற்கும்.

குறிப்புரை: தாமரையில் எருமைப்பாலின் மணமும், மேகத்தினின் றும் பொழிகின்ற நீரில் ஓம நறும் புகையின் மணமும் கமழுகின்றன.

பொருந்திய திருவின் சிறப்பினால் மிக்க வளமு டைய அத்திருப்பதியில் வாழ்பவராகிய அரிய மறை வழி நிற்கும் கலயனார் என்னும் பெயருடைய அந்தணர், கங்கையை அணிந்த சிவபெருமான் திருவடிகளைப் பேணி நாள்தொறும் வணங்குபவர்; அன்பு கூர்ந்த சிந்தையர்; ஒழுக்கத்தில் மிக்கவர்.
குறிப்புரை: கலயம் - கலசம் அல்லது குடம் என்று பொருள்படும். தேவர்கள் கொணர்ந்த அமிர்த கலசமே சிவலிங்கத் திருமேனி கொண்டு வீற்றிருந்தருளும் இடமாகிய திருக்கடவூர் ஆகும். அங்குள்ள பெருமானின் திருப்பெயர் அமிர்தகடேசுவரர் என்பதாம். அப்பெருமானின் திருப்பெயரின் சுருக்கமாகவே கலயனார் எனும் பெயர் அமைந்தது.

அவர், பாலரும் மறையவருமாகிய மார்க்கண்டேயர், தம்மைப் பறறிக் கொள்ள அவருக்கு நேர்ந்த அச்சத்தைக் கெடுத்து, மாலும் அயனும் தேடிக் காணாத வடிவு கொண்டு அவர் முன்பு எழுந்தருளிவந்து, இயமனை உதைத்தருளி, அவன் அரிய உயிரைத் தொலைத்திட்ட சேவடியை உடையவராய பெருமானுக்கு, நாள் தொறும் நறுமணமுடைய குங்குலியத் தூபம் இடுகின்ற பணியையே தலையாயதொரு பணியாகச் செய்துவரும் பேறுடையவர்.
குறிப்புரை: இயமனை உதைத்தருளிய திருவுருவம் கால சம்கார மூர்த்தி எனப் போற்றப் பெற்று வருகிறது.

கங்கையாறு ஒலித்திடும் திருச்சடையுடன், நெற்றியில் கண்ணும் கொண்ட பெருமானுக்கு, மேன்மேலும் நறுமணம் சிறக்கும் குங்குலிய மணம் கமழ்ந்து பொலிவுறும்படி, நாள்தோறும் பணிசெய்து வரும் அவருக்கு, பெருமானார் திருவருளினாலே அங்கு வறுமை வந்து அடைய, அதன்பின்பும் தம் தலைவராய பெருமானுக்குத் தாம் முன்பிருந்து செய்துவரும் குங்குலியத் தூபம் இடும் பணியைத் தவறாமல் செய்து வந்தார்.
குறிப்புரை: கலிக்கும் - ஒலிக்கும்.

இந்நெறியில் ஒழுகிவரும் காலத்தில், இவர்க்குற்ற வறுமை மேலும் பெருக, இவர் தம் நல்ல நிலங்கள் யாவற்றையும் விற்றும், தமக்குரிய அடிமைகளை விற்றும், இவ்வாறாகப் பெருஞ் செல்வங்கள் யாவும் தீர்ந்து போக, இவர் நடத்திவரும் இல்வாழ்க்கை யில், இவருடன் இருந்து வரும் சுற்றத்தாருடன் மக்களும் உணவில் லாமல் பசியால் வருந்தினார்கள்.
குறிப்புரை:

யாதொரு பொருளும் இவர் பால் இலதாக, இரு பொழுதுகளும் தொடர்ந்து உணவு அருந்தாமையின் வாடி, தம் மக்களுடன் பெருகுகின்ற தம் சுற்றத்தவரையும் கண்டு, அவர்க்குற்ற பசிப் பிணியினை நீக்கிட வேண்டுமென நினைவுற்று, கலயனார் பால் காதலுடைய மனைவியார், தம் கணவனார் கையில், குற்றமிலாத தமது திருமங்கல நாணைக் கழற்றிக் கொடுத்து, 'நீர் இதைக் கொண்டு நெல்வாங்கி வாரும்' என விடுத்தார்.
குறிப்புரை: திருமங்கல நாண் எந்நிலையிலும் கொடுத்தற் கரியது. 'ஈதற்கரிய இழையணி' (புறநா. 127) என்னும் புறநானூறும். அதனை யும் உணவிற்காகக் கொடுத்தனள் எனவே பசிப்பிணி என்னும் பாவியது கொடுமையை அறிய இயலுகிறது.

அப்பொழுது அத்திருமங்கல நாணை வாங்கிக் கொண்டு, நெற்கொள்வதற்கு எனக் குங்குலியக்கலய நாயனார் போதலும், ஒப்பில்லாத குங்குலியப் பொதியினைச் சுமந்துகொண்டு ஒரு வணிகனும்எதிர்வரக் கண்ணுற்ற நாயனார், 'இப்பொதியில் என்ன?' என வினவலும், 'அது புகைத்தற்குரிய நறுமணமுடைய குங்குலியம்' என்று அவ்வணிகன் சொல்லலும், அது கேட்ட முப்புரிகளாலான வெண்மையான நூலணிந்த மார்பராகிய குங்குலியக்கலய நாயனாரும் முகம் மலர்ந்து பின்வருமாறு சொல்வாராயினர் 
குறிப்புரை:

கங்கையாற்றைச் செஞ்சடைமேல் வைத்த நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானின் பூசனைக்கு ஏற்றதான நல்ல மணம் தரும் குங்குலியம் ஈதெனில், நான் எந்நாளும் பெறாததொரு பேறு இன்று பெற்றேன். இதனினும் இன்னொரு பேறு மேலானது ஒன்று எனக்கு உண்டோ? பெறுதற்குரிய பேற்றினைப் பெற்றும் வேறு, இனிப் பெறத்தக்கது என்? என்று கூறி, அக் குங்குலியத்தை வாங்குதற்குப் பெரு விருப்புடையராய்.
குறிப்புரை:

வணிகனை நோக்கி, 'நான் பொன் தர நீர் இக்குங்குலியத்தைத் தாரும்' என்றலும், வணிகனும் அவரை நோக்கி, 'எவ்வளவு பொன் இதற்குக் கொடுப்பீர்' என்ன, கலயனாரும் தம் மனைவியாரின் தாலியைக் கொடுத்தலும், அவ்வணிகன், அதனை வாங்கிக் கொண்டு அப்பொதியினைக் கொடுப்பக் கொண்டு, அங்கு நில்லாது தம் மனத்தில் நிறைந்து எழும் மகிழ்ச்சியோடு விரைந்து சென்றார்.
குறிப்புரை: இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட பெருமானாரின் வீரட்டானத்திற்கு விரைந்து சென்று, எம்மை அடியவராக உடையவரும், முழுமையாக என்னை ஆட்கொண் டருளி வருகின்ற ஒப்பற்ற பெருமையுடையவருமாகிய பெருமானின் பண்டாரத்தில் (களஞ்சியத்தில்) அப்பொதியினை முழுமையாகச் சேமித்து வைத்து, உலகியற் செயல்கள் யாவற்றையும் மறந்து, எழுகின்ற அன்பு பொங்கிட, திருச்சடையையுடைய பெருமானின் திருவடி மலர்களைப் போற்றுதல் புரிந்து, தமக்கு ஒப்பில்லாத குங்குலியக்கலய நாயனார் அங்கு இருந்தார்.
குறிப்புரை: 'பாரம் ஈசன் பணியலது ஒன்றிலார்' (தி. 12 சரு. 1-4 பா. 9) என்பதற்கு ஏற்ப, நாயனாரின் திருவுள்ளம் அமைந்திருந்தமை யின் உலகியலுணர்வு தானே தூர்வதாயிற்று.

பேரன்பினராய குங்குலியக்கலய நாயனார் இவ்வாறு கோயிலில் இருப்ப, பெருமானின் திருவருளினாலே அளகை வேந்தனாகிய குபேரன், தன்பெருநிதியைத் தனதுலகில் முழுவதும் இல்லையாகச் செய்து இந்நிலவுலகில் நெருங்குமாறு, பொற்குவியலும் நெல்லும் ஒப்பற்ற பிற பொருள்களாலான பல வளங்களும் பெருகிப் பொலியுமாறு, அவர்தம் திருமனையில் நிரப்பி வைத்தனன்.
குறிப்புரை: 'நம்செயல் அற்று இந்த நாம் அற்றபின், நாதன் தன்செயல் தானே என்று உந்தீபற' (திருவுந். 6) என்ற ஞான நூற் கருத்தும் நோக்குக.

(கணவனார் கையில் தனது தாலியைக் கொடுத்து நெல்லுக்காகக் காத்திருந்த) மனைவியாரும் மக்களும் பசியால் வாடி அன்றைய நாள் இரவு பசியின் சோர்வால் துயிலுங்கால், நல்ல தவத்தின் கொடிபோன்ற அம் மனைவியாரின் கனவில், பெருமான் தோன்றி, இத்திருவெல்லாம் வழங்கியருளியமையை அறிவுறுத்தலும், உடன் மனைவியார் உணர்ந்து விழித்து, தம் மனை நிறையப் பொலியும் செல்வத்தைக் கண்டு, பின் மேலும் செய்யத் தக்கதை எண்ணுவாராய்.
குறிப்புரை:

பூங்கொடியையொத்த பேரழகுடைய அம்மையார் 'தமது மனையில், எவ்விடமும் குறைவிலாது நிறைவா கக் காணப் பெறும் அழகிய பொற்குவியலும் நெல்லும் அரிசியும் முதலாக உள்ள இவையாவும் எம்பெருமான் எமக்கு அருள் புரிந்தவையாகும்' என்று இருகைகளையும் கூப்பி, ஈசன் அருளை வணங்கித், தமது பெருங் கணவனாருக்குத் திருவமுது சமைத்திடத் தொடங்கலுற்றார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

இயமனை உதைத்து வீழ்த்திய செவ்விய திருவடி களை உடைய பெருமானும், தம் திருவடியின்கண் பெரும் பற்றினைக் கொண்டிருக்கும் கலயனார் அறியும் படியாக, 'அன்பனே ! நீ மிகவும் பசித்தாய், உன்னுடைய விரிந்த நீண்ட பெருமனைக்குச் சென்று பால் சுவையுடன் கூடிய இனிய அமுதை உண்டு, உனது பசித் துன்பத்தி னின்றும் நீங்குவாயாக!' என்று அருள் புரிந்தார்.
குறிப்புரை:

குங்குலியக் கலயனாரும் அதனைக் கேட்டுப், பெருமானைக் கைதொழுது வணங்கி, அலைகளையுடைய கங்கை யாற்றின் நீரைச் சடைமீது கொண்ட சிவபெருமானின் அருளை, மறுத்து அங்கிருக்க அஞ்சி, இறைவனின் அருளாணையைத் தலைமேல் கொண்டு, கோயிலினின்றும் நீங்கி, மலையை நிகர்த்த மாடங்களுடன் கூடிய வீதியின் அருகிலிருக்கும் தம் மனையைச் சேர்ந்தார்.
குறிப்புரை:

தமது மனையில் குங்குலியக் கலயனார் சென்று புகுந்தார். அப்பொழுது குபேரனின் நிதிக்குவியல் எங்கும் பொலிந்திருப்பதைக் கண்டு, நின்று, பேரழகுடைய தம் மனைவியாரை நோக்கி, 'வில்லை ஒத்த அழகிய நெற்றியையுடையவளே! இவ்வரிய விளைவுகள் எல்லாம் எங்ஙனம் வந்தது?' என்று வினவ, அவரும், 'கரிய கழுத்தினையுடைய பெருமானது அருளினால் கிட்டியது' என்றார்.
குறிப்புரை:

மின்னல் போலும் சிற்றிடையையுடைய அம்மையார் இவ்வாறு கூறலும், மிக்க சிறப்பையுடைய குங்குலியக் கலயனாரும், தமது மனையில், விளங்கிய பெருஞ் செல்வத்தின் வளம் மலிந்த சிறப்பை நோக்கி, ஒன்றற்கும் பற்றாத என்னையும் ஆண்டு கொள்ளும் தன்மைக்கு, எந்தையும் எம் பெருமானுமான ஈசனின் அருள் இருந்த வண்ணம் தான் என்னே? என இறைவனின் அருளை நினைந்து களி கூர்ந்து நிற்பார், தம் கரங்களை உச்சிமீது கூப்பிய நிலையில் நின்று போற்றினார்.
குறிப்புரை:

தாமரை மலரில் இருக்கும் திருமகளினும் அழகு மிக்கவராய அம்மனைவியார், உணவு அருந்துதற்குரிய வாழை யிலையைத் திருந்த அமைத்து, விரைவுடன் தமது கணவனாரை அங் கிருந்த சிவனடியார்களுடன் சேரக் கூட்டி, விதிமுறை மாறாது விளக்கு ஏற்றித், தாம் சமைத்து வைத்திருந்த இனிய சோற்றினை உண்பிக்க, அவ்வமுதை உண்டு, இன்பமுற விளங்கினார் அழியாத மறை நெறி நின்ற குங்கிலியக் கலயனார்.
குறிப்புரை: பரிகலம் - உண்கலம்: வாழையிலை.

ஊர்தொறும் பிச்சை ஏற்றுத்தன் அடியார்களை உய்யக் கொள்ளும் ஒப்பற்ற சிவபரஞ்சுடரின் இனிய நல் அருளி னாலே, இந்நிலவுலகில் நிறைந்த செல்வமுடையவர் இவர் எனும்படி, குங்கிலியக் கலயர் பண்பால் பெருகி, சீருடைய சோறு, நல்ல சுவை யான கறி, தயிர், நெய், பால், ஆகிய சிறந்த சுவைமிக்க உணவு வகை களால் மேல்மேல் வளரும் அன்புகூர்ந்திடச் சிவனடியார்களுக்கு உதவி வருகின்ற நாள்களில்.  
குறிப்புரை:

சிவந்த கண்களையுடைய ஆனேற்றினை ஊர்தியாகக் கொண்டு, உமையொரு கூறராய் வீற்றிருப்பவரும் திருப்பனந்தாளில் தாடகை யீச்சரம் என்னும் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய பெருமானும் ஆன இறைவரின் திருவுருவம் சாய்ந்திருத்தலை நீக்கி, அவரை நேர் நிற்கக் கண்டு வணங்கிட வேண்டும் என்னும் ஆர்வம் கொண்ட அரசன், தன் அன்புமீதூர தன் நாட்டிலுள்ள யானைகள் எல்லா வற்றையும் பூட்டி இழுக்கவும், அத்திருமேனி நேர்நில்லாமை கண்டு, இரவும் பகலுமாகத் தீராத கவலையடைந்து, வருத்தமுற்று வருதலும்.
குறிப்புரை: தாடகையெனும் பத்திமையுடைய பெண் ஒருத்தி, நாளும் பெருமானை வழிபட்டுவர, ஒருநாள் அப்பெருமானுக்கு மாலை யணிந்து மகிழ விருப்புற்ற நிலையில், தன் ஆடை நெகிழ, அதுகண்ட இறைவன் அவள் பெண்மைக்கு இழுக்கு நேரா வண்ணம், தலை சாய்த்து, அம்மாலையை ஏற்றனன். அன்று சாய்ந்த திருமேனி அப் படியே இருக்கக் கண்ட அரசன், நிமிர்த்த எண்ணி, இவ்வாறு செய் தனன்.

அரசனுடைய இவ்வருத்தத்தைக் கேட்டமாசற்ற புகழ் மிகுந்த நன்னெறியைக் கடைப்பிடித்து வரும் கலயனார் தாமும், அப்பெருமானை நேராக நிலைபெறக் கண்டு கும்பிட வேண்டும் எனும் விருப்புடன் நிற்கும் அரசனைத் தாமும் காணப் பெரிதும் விரும்பியதோடு, மின்னல் என விளங்கும் நீண்ட சடையையுடைய கருணையுடையவரான சிவபெருமானை வணங்க வந்தார்.
குறிப்புரை: இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

மழுப்படையை ஏந்திய செழுமையான கையினை உடையவரான பெருமானாரின் திருக்கோவில்கள் பல, தாம் செல்லும் வழியிடையில் இருப்பக் கண்டு, தொழுது, அன்பினோடும் வணங்கிச் செல்பவர், மறைநெறிவழாமலும், மூவுலகங்களும் போற்ற முத்தீயை ஓம்பியும் வரும் அந்தணர்கள் வாழும் சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாளுக்கு வந்து சேர்ந்தார்.
குறிப்புரை:

பெருமானை நேர்காண வேண்டும் எனும் காதலால், அவ்வரசன் கொண்டிருக்கும் வருத்தத்தினையும், யானை யோடு குற்றமற்ற தானையும், தாம் செய்துவரும் திருப்பணியால் திருவுருவம் நேர்படாமை கண்டு, நிலத்தின்மீது களைத்து வீழ்ந்து, இளைப்பதனையும் பார்த்து, பெருந் தவமுடைய குங்குலியக் கலயனார் தாமும் மனத்தினில் மிகு வருத்தம் கொண்டு.
குறிப்புரை: திருப்பணி - பெருமானின் திருமேனியில் கயிறிட்டு அது நிமிரும் வண்ணம் அக்கயிற்றைத் தானையும் யானைகளுமாக இழுத்துக் கொண்டிருக்கும் பணி.

சேனையும் யானைகளும் இழுத்துக் களைத்து நிலத்தில் வீழ்ந்து அவை எழமுடியாதபடி கிடந்திடும் அந்நிலையைக் கலயனார் நோக்கி, 'நானும் இவ்விளைப்பினைப் பொருந்தி மெலியும் பேற்றைப் பெற வேண்டும்,' என்று தேன் நிறைந்த கொன்றை மாலை சூடிய சிவபெருமானின் சிவலிங்கத் திருமேனியில் அழகிய கச்சி னோடு பூட்டியிருந்த பெருங்கயிற்றைப் பூட்டித்தம் கழுத்தினால் இழுக் கலுற்றார்.
குறிப்புரை: சேனையும் ஆனையும் பெற்ற இளைப்பினைப்பெற வேண்டும் என நினைத்தனரேயன்றித், தாம் நிமிர்த்துவிடுவோம் எனும் முனைப்புடன் அப்பணியைச் செய்ய முற்பட்டார் அல்லர். அவ்வரிய பண்பே திருமேனி நிமிரக் காரணமாயிற்று. 'தாழ்வெனும் தன்மை யோடு சைவமாம் சமயம் சாரும் ஊழ் பெறல் அரிது,' (சிவ. சித்தி. சுபக். சூ. 2, 91) 'யான் எனது என்று அற்ற இடமே திருவடியார்' (குமர. கந்தர். 34) எனவரும் திருவாக்குகளும் காண்க. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

கலயனார், பொருந்திய ஒரு நெறிய மனம் கொண்டு அன்பு என்னும் திண்ணிய நாரால் கழுத்தில் பூட்டி இழுத்து வருத்தமுற்ற பின்னரும், பெருமான் தம் திருஉருவத்தைச் சாய்த்து நிற்க முடியுமோ? கலயனாரின் ஒருமை அன்பின் திறத்தைக் கண்ட அமையத்தேயே பெருமான் நேராக நின்றார். தேவர்களும் அது கண்டு மகிழ்வொலி செய்தனர்.
குறிப்புரை:

நிலவுலகெங்கும் மலர் மழை பொழிந்தனர். இதனைக் கண்ணுற்ற தேர்ப்படை மிகுந்த அரசனது சேனையும் யானையும் எல்லாம் மழையைப் பெற்றுத் தளிர்த்து மலரும் சோலைகளைப் போல உளம் குளிர்ந்து களித்தன. அதுபொழுது, வீரக் கழலை அணிந்த அரசன் தன் கைகளைக் கூப்பித் தொழுது குங்குலியக் கலய நாயனாரின் மலரடிகளைத் தன் தலைமேல் கொண்டு.

குறிப்புரை:

'வானில் நிலவும் முப்புரங்களும் எரியுண்ண, நான்மறைகளாய தேர்மீது இவர்ந்து, மேருமலை என்னும் வில்லை வளையுமாறு செய்த சிவபெருமானின் செப்பமாய நிலையை நாம் காணும்படி செய்தீர்! திருமால் பன்றி வடிவு கொண்டு மண்ணை ஊடுருவிச் சென்று தேடியும் காணமுடியாத பெருமானின் மலரனைய திருவடிகள் இரண்டையும், பண்புடைய அடியவர் அல்லாது உளம் மகிழ்ந்து நேர்காண வல்லவர் யாவர்? (ஒருவராலும் காணமுடியாது). '
குறிப்புரை:

என்று உண்மைநெறி நின்ற தொண்டராய குங்குலியக் கலயனாரை அரசன் போற்றி, அங்குப் பெருமானுக்குப் பொருந்திய அன்பால், நீடிய பெரும் பணிகள் பலவற்றையும் செய்து, பின்பு, வெண்கொற்றக் குடையுடைய அரசன் அவ்விடம் விடுத்து நீங்கவும், ஒப்பற்ற அன்பராகிய குங்குலியக் கலயநாயனார் திருவம்பலத்தில் ஆடல் செய்கின்ற தாமரைமலர் போன்ற திருவடி களை வாழ்த்தி அங்குத் தங்கியிருந்து.
குறிப்புரை:

சில நாள்கள் கழிந்த பின்பு, திருக்கடவூருக்கு மீண்டும் வந்து, என்றும் நிலவிய தமது பணியான குங்குலியத்தூபம் இடுவதைப் பெருமான் திருமுன்னிலையில் சாலவும் நிறைந்து பெருகச் செய்து வருகின்ற நாள்களில், ஒப்பற்ற சீர்காழிப் பதியின் தலைவராய திருஞானசம்பந்தரும் திருத்தாண்டகம் பாடுவதில் பேராற்றல் படைத்த பெரும்புகழுடைய திருநாவுக்கரசரும் ஒருங்கு எழுந்தருளக் கண்டு.
குறிப்புரை:

ஒப்பற்ற மகிழ்ச்சி பொங்கிட, அவ்விரு பெருமக்களையும் எதிர்கொண்டு, தம்மனைக்கு அழைத்துச் சென்று, ஈறில்லாத அன்பின் மிகுந்த அவ்விருவர்க்கும், அவருடன் அங்குப் போந்த அடியவர்க்கும் இனிய அமுது ஏற்கும்படியாக அறுசுவை மிக்க அமுதூட்டி, அத்தகைய பேற்றால் அவ்விருவரது அருளே அல்லாமல், மணம் கமழும் கொன்றைமலரைச் சூடிய சடையையுடைய சிவ பெருமானுடைய அருளையும் பெற்றார்.
குறிப்புரை: இவ் ஆறு பாடல்களும் ஒருமுடிபின.

கரும்பை வில்லாக உடைய மன்மதனையும் இயமனையும் ஒறுத்த பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கடவூரில் வாழ்ந்து வந்த கலயனார், மிக்கெழுகின்ற காதல் கூர்ந்திட ஒருமைப் பாடுற்ற நிலையில், தமக்குப் பொருந்துவதாய திருப்பணிகள் பலவுஞ் செய்து, சிவபெருமானின் திருவடி நீழலில் சேர்ந்தருளினார்.
குறிப்புரை:

தேன்சொரியும் மலர்மாலையணிந்த தம் மனைவியாரது திருவுடைய நெடுந் தாலியைக் கொடுத்தும், வளைந்து குளிர்ந்த இளம் பிறையைச் சூடிய சிவபெருமானுக்குப் பொருந்திய குங்குலியம் இடுதலைத் தவறாது செய்து வந்த உறைப்புடைய குங்கு லியக் கலயனாரைப் பணிந்து, அவர்தம் அருளினாலே, மானக் கஞ்சாற நாயனாருடைய வண்மை நிறைந்த திருத்தொண்டினை இனி எடுத்துப் போற்றத் தொடங்குகின்றேன்.
குறிப்புரை:


This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history