சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
அரிவாட்டாய நாயனார் புராணம்  

12 -ஆம் திருமுறை   12.130  
இலை மலிந்த சருக்கம்
 
பருவம் மாறாது வரும் நீர் நிறைந்த காவிரி ஆற்றின் வளம் சிறந்த சோழ நாட்டின்கண், பெருவாழ்வு பெற்றதொரு நகரமாக விளங்குவதும், பெண் வண்டுகள் ஆண் வண்டுகளுடன் சூழ்ந்து பண் பாடி விரும்பும், மென்மையான கணுக்கள் வாய் திறந்து தேன் பொழி யும் நீண்ட கரும்புகளின் சோலைகளை உடையதுமான கணமங்கலம் என்னும் ஓர் ஊர் ஆகும்.

குறிப்புரை: சுரும்பு - ஆண்வண்டு. வண்டு - பெண் வண்டு. மென்கண் - மெல்லிய கணுக்கள். கரும்பின் கணுக்கள் பொதுவாக வன்மையுடையன எனினும், அவற்றகத்துத் தேன் நிரம்பி நிற்றலின் அவை மென்மையுடையவாயின. கணமங்கலம் - சோழ நாட்டில் திருத்துறைப்பூண்டியின் வடபால் உள்ளது.

செந்நெற்பயிர்கள் நிறைந்து வளர்ந்திருக்கும் வயல்களில், களையாகப் பிடுங்கப்பட்ட செந்தாமரை மலர்களில், முன்னர் அத்தாமரையிலிருந்து சங்குகள் உதிர்த்த முத்துக்களும் இருத்தலின், அவற்றைக் கைக்கொண்டிருக்கும் உழவர்கள், பொருந் திய பதுமநிதியைக் கைக்கொண்டவர் போன்றுளார்.

குறிப்புரை: பதுமநிதி - தாமரை வடிவுடையதொரு நிதி. இது குபேரன் கையிலுள்ளது என்பர். சங்கு வடிவுடையதொரு நிதியும் இவன் கையில் இருக்கும் என்பர்.

வளத்தினால் நீடித்த கணமங்கலம் என்னும் அப்பதியில், வண்டுகள் மொய்த்துக் குடைகின்ற ஐந்து வகையாகச் சிறப்பித்துச் சொல்லப்பெறும் கூந்தலையுடைய பெண்கள் முகத்திலும், கழுத்தின் மீதும், கயல்மீன்கள் பாய்ந்து ஓடும் வயலின் அயலில் உள்ள குளத்தும், நீண்ட குழையுடைய நீலங்கள் நீள்வன.

குறிப்புரை: பெண்களின் நீலமலர் போன்ற வரிவிழிகள் தோடளவும் (குழை) சென்று நீண்டிருக்கும். மற்றும் அவர்களது கழுத்திலும் நீலமணியினாலாய நெகிழ்ந்த மாலைகள் நீண்டிருக்கும். வயல்கள் அயலே உள்ள குளத்தின் கண்ணும் நீண்ட தளிர்களையுடைய நீல மலர்கள் வளர்ந்து நிற்கும். 'நீளும் குழையுடை நீலங்கள்: இத்தொடர், பெண்களின் முகம், கழுத்து, குளம், ஆகிய மூவிடங்களிலும் சென்று பொருள் கொள நிற்கின்றது. பெண்களின் முகத்திற்கு ஆகும்பொழுது நீண்டிருக்கும் குழைகள் வரை, கண்கள் நீண்டு செல்லும் எனப் பொருள்படும். அவர்களின் கழுத்திற்கு ஆகும் பொழுது நீண்ட குழைவான (மென்மையான) நீல மணிகளையுடைய அணிகலன் களை உடையவாயின எனப் பொருள்படும். குளத்திற்கு ஆகும் பொழுது தளிர்களையுடைய நீலமலர்கள் பூத்து நிற்கும் எனப் பொருள்படும். கூந்தலை ஐம்பால் என்றார் ஐவகையாக முடித்தலான்.

இவ்வாறாய வளம் சிறந்து விளங்கும் கணமங்கலம் என்னும் பதியின்கண், அறநெறி தவறாத தகவுடைய இல்வாழ்க் கையில் நின்று ஒழுகி வருபவரும், பண்டு தொட்டே மேலோங்கிச் சீர்மையும் பெருக்கமும் உற்ற பெருநிதியில் மிகுந்த செல்வத்துடன் விளங்கிய வேளாண் குலத்தில் தோன்றி வளர்ந்த வரும், ஆகிய ஒருவர் இருந்தனர்.

குறிப்புரை: குலம்-ஈண்டு வளத்தின் மேற்று.

அவர், தாயனார் என்னும் திருபெயரைப் பெற்றவர். பல காலமாகத் தொடர்புடையராய் இருந்தும், அறிதற்கரியராய திருமால், பன்றியாய் மண் கிளைத்து நின்றும் அறிய இயலாத இறை வனின் திருவடிமலர்களிடத்து அவர் தொடர்ந்து நின்ற பத்திமை பூண்டொழுகி வருவார்.
குறிப்புரை:

அவர், விளங்குகின்ற செஞ்சடையை உடைய அறவாழி அந்தணராய சிவபெருமானுக்கு ஆகும் என்று, நாளும் செந்நெல்லின் இனிய உணவுடன் செங்கீரையும் சிறந்த கொத்தாக விளங்கும் மாவடுவையும் கொணர்ந்து, அவற்றைப் பெருமானுக்கு அமுது செய்வித்து வருவார்.
குறிப்புரை:

இவ்வரிய திருத்தொண்டினை வறுமையாய இன்னல் வந்தடைந்த பொழுதும், தமது சிந்தையில் நீங்காத செயலாய், மகிழ்வுடன் செய்து, விழுமிய பேறடைதற்கு வாயிலாக, பழையதாகிய நான்மறைகட்கெல்லாம் முதல்வராய சிவபெருமான், இத்தாயனா ரிடத்து இதுகாறும் பெருகி வந்த செல்வம் குறைந்திடும்படியாகச் செய்து, அவர் செல்வ வளத்தை மாற்றினார்.
குறிப்புரை:

தம்மிடத்துப் பொருந்திய செல்வம், யானை உண்ட விளங்கனி போன்று அழியவும், அன்பினாலே உமையொரு கூறராய சிவபெருமானுக்கு, முன் செய்து வந்த அக்குறைவிலாத செயலினைத் தாயனார் தவிராது செய்து வந்தனர்.

குறிப்புரை: வேழம் உண்ட விளங்கனி அதன் வயிற்றகத் திருப்பினும், அதன் உள்ளீடு அழியுமே தவிர, அதன் மேற்பகுதியாய ஓடு சிதை வின்றி அப்படியேயிருக்குமாம். அதுபோன்று நாயனாரிடத்து இருந்த பொருள் அழியினும், அவர்தம் அன்பு குறைவற்று (சிதைவின்றி) இருந்ததாம். என விளக்கம் காண்டல் பண்டைய மரபு. யானையுண்ட விளங்கனி என்பது விளவிற்கு வரும் ஒருவகை நோய் என்றும், அந்நோய் வாய்ப்பட்ட விளங்கனி தன் அளவில் ஏதும் சிதைவு தெரியாதாயினும் அதன் உள்ளீடாய்ச் சதைப்பகுதி ஏதும் இல்லாதிருக்கும். இவ்வாறாய விளங்கனியென விளங்கினார் நாயனார் என்றலே பொருந்துவதாகும். நச்சினார்க்கினியரும் 'வேழம் - விளவிற்கு வருவது ஒரு நோய்' எனக் கூறுவர். (சிந்தாமணி - 232).

துன்பத்திற்கேதுவாய வறுமை மிகுந்திடக், கூலிக்கு நெல் அறுத்தும், இதன் வருவாயாகப் பெருமானிடத்து உண்மை நீடிய அன்பினால் தாம் நல்ல செந்நெல்லாகப் பெற்றன யாவற்றையும் சிவ பெருமானுக்கு உடன் இனிய அமுதாக்கிப் படைத்து ஒழுகி வருவாராய்.

குறிப்புரை:

நல்ல செஞ்சாலி நெல் அறுவடை செய்யும் இடம் சென்று கூலிக்கு அறுத்துத் தாம் பெறும் அச்செந்நெல் எல்லாம் பெருமானுக்குத் திருவமுதாகக் கொண்டும், இப்பால், தரத்தில் குறைந்த நெல் அறுவடை செய்யும் இடத்திற்குச் சென்று, தாம் கூலிக்காக அரிந்த அந்நெல்லைத் தமது உணவிற்காக எடுத்துக் கொண்டும் தம் வாழ்வை அமைத்துக் கொண்டவராய் வாழும் நாள்களில், மாலும் அயனும் காண்டற்கரியராய சிவபெருமான் அந்நிலையையும் மாற்றுவாராகி.
குறிப்புரை: நாயனார் இறைவற்குத் தரம் நிறைந்ததும் இனியது மாய செந்நெல்லைக் கொடுத்தும், தமக்குத்தரமும் இனிமையும் குன்றியதை உணவாகக் கொண்டும் வாழ்ந்த நிலை எண்ணற்குரியது. இக்காலத்து இறைவற்கு நிவேதனம் படைப்போர், இந்நிலையை எண்ணிக் கடைப் பிடிப்பாராக.

நாள்தோறும் தாயனார் நெல் அரியச் செல்லும் வயல்களில் எல்லாம், இவர் முன்னதாகக் காணுமாறு வண்ணமுடன் சிறந்து விளைந்த கதிருடைய செஞ்சாலி நெல்லேயாக ஆக்கிட, அது கண்டு மனம் மகிழ்வுற்ற தாயனார், தாம் கூலியாகப் பெற்ற செஞ்சாலி நெல் அனைத்தையும் கொண்டு, 'இது அடியேன் செய்த புண்ணியம்' என்று அதனை முழுமையாகத் திருவமுதாக ஆக்கிப் பெருமானை நாளும் அமுது செய்விப்பாராயினார்.
குறிப்புரை: இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

(அறுப்பதெல்லாம் செஞ்சாலி நெல் ஆயிட, அதனால் தமக்கு உணவாகக் கொள்ளும் நெல் இல்லாமையால்) நாளும் உணவிற்கு வகையிலாமையால், அவரின் குறைவுபடாத நல்ல அன்புடைய மனைவியாரும், தங்கள் மனையின் கொல்லையில் (தோட்டம்) புகுந்து, அங்கு உண்ணுதற்குரிய கீரைவகைகளைப் பறித்துப் பரிவுடன் சமைத்து, அதனை அமுது படைக்கும் கலத்தில் இட்டுக் கணவனாருக்குப் படைக்க, அவரும் அருந்தி, இவ்வகையில் இருவரும் பெருமானுக்குச் செய்து வரும் தொண்டு குறைவுபடாத வண்ணம் அத்திருப்பணியைச் செய்து வரும் நாள்களில்,

குறிப்புரை: நைகரம் இல்லா அன்பு - குறைவற்ற அன்பு.

வீட்டின் புறத்தாக முளைத்து நின்ற கீரைகளும் ஒழிந்திட, வடதிசைக்கண் தோன்றும் நெடுவானத்து ஒளிர்கின்ற கற்புடைய அருந்ததியை யொத்த அம்மையாரும், தம் கணவனாருக்கு உண்ணும்படி தண்ணீர் வார்க்க, அதனை உண்டு, தாயனாரும் தமது தொண்டின் செயலை இனிது செய்து வாழ்ந்து வரும் காலத்து, ஒருநாள், முனைவராய சிவபெருமானின் தொண்டருக்கு அங்கு நிகழ்ந்ததை எடுத்து மொழிந்திட, அடியேன் வாழ்வு பெற்றேன்.

குறிப்புரை: முனைவனார் - அளவிலாற்றல் உடையார். 'ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய், போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்'(தி. 8 ப. 1 வரி42) என வரும் திருவாக்கால் அளவிலாற்றல் அறியப்படும். முனைவனை முன்னோன் எனத் தொல்காப்பியர் கூறுவதும் காண்க. இனிவரும் செயல் இவ்வடியவரை உய்விக்கும் செயலாக அமைதலின், அவ்வருமை தோன்ற ஈண்டு நுதலிப் புகுகின்றார்.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அத்தகைய வறுமையிலும், முன்புபோல முதல்வ னாரை அமுது செய்விக்கத் தம்மிடத்து மூளுகின்ற அன்பு போலவே தூயதான செந்நெல்லின் அரிசியையும், மாவடுவையும், மென்மை யான செங்கீரையையும், துன்பம் நீங்கிய மனத்தையுடைய தொண் டர், தமது கூடையில் சுமந்து போக, அவர்பின்பு செல்லும் மனைவி யார் திருமுழுக்காட்டுதற்குரிய ஆனைந்தையும் மட்கலத்தில் தமது கையில் கொண்டு சென்றார்.
குறிப்புரை: ஆன்பெற்ற அஞ்சு - பசுவினிடமாகத் தோன்றிய பால், தயிர், நெய், ஆவின்நீர், ஆவின் சாணம் என்பன.

இவ்வாறு செல்லும் பொழுது பல நாள்கள் உணவில்லாமையால் வந்த சோர்வால் வாடி, கால்தளர்ந்து, நடை தப்பி, வருந்தி, வீழ்கின்ற நாயனாரை, அவர் மனைவியார், ஆவி னிடமாகத் தோன்றிய ஐந்தினையும், கொண்ட மண்ணின் கலத்தை மூடி வைத்த கையால், காதலுடன் அணைத்தும், தாயனார் கையில் எடுத்துச் சென்ற செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் தாம் சென்று கொண்டிருக்கும் நில வெடிப்பில் சிந்திடக் கண்டு, உயிர்கட் கெல்லாம் தலைவரான சிவபெருமானின் தொண்டராய தாயனாரும், இனிப் பெருமானின் திருமுன்பிற்குப் போதல் எற்றுக்கு? என்று,
குறிப்புரை:

நல்ல செங்கீரையும், தூய மாவடுவும், அரிசியும் சிந்திப் போயதால், 'எம்மை அல்லல் தீர்த்து ஆட்கொள வல்லாராகிய பெருமான் இன்று திருவமுது செய்திடும் அப்பேற்றை, எல்லை யில்லாத தீமையுடைய அடியேன் இங்குப் பெற்றிலேனே' என்று சொல்லி, இதற்கு இதுவே தீர்வாகும் என்று உடனாக இடுப்பில் செருகியிருந்த தம் அரிவாளை எடுத்துத் தமது கழுத்தில் மாட்டித் தன் மிடற்றினை அரியல் உற்றார்.
குறிப்புரை: ஊட்டி - கழுத்து.

என்னை ஆட்கொள்ளும் பெருமானார் இன்று அமுது செய்திடப் பெற்றிலரே! என்று, கழுத்தில் பூட்டிய அரிவாளினைக் கையால் பிடித்துத் தம்மிடம் உள்ள குற்றம் அற்ற அன்பு இது எனக் காட்டிய அந்நெறியில், உள்ளிருந்த முதுகெலும்புத் தண்டு கழுத்தினோடு அறுந்திட அரிந்து நின்றார்; இதனால் தமக்கு உற்ற பிறப்பினை அரிந்திடும் தன்மை உடையர் போன்றார்.
குறிப்புரை: இச்செயல் அடியவரின் பாச நீக்கத்திற்கும் சிவப்பேற்றிற்கும் ஏதுவாய் அமைதலின் 'உறுபிறப்பு அரிவார் ஒத்தார்' என்றார்.

குற்றம் அற்ற சிந்தையுடைய அன்பர், தமது கழுத்தை அரிந்திட, அரிவாளைப் பிடிக்கும் குற்றம் இலாத அக் கையைத் தடுத்து மாற்றிட, அம்பலத்து ஆடும் பெருமானது வீசி நின்றாடிய இடத் திருக்கையும், மாவடுவைக் கடித்திடும்போது 'விடேல்' 'விடேல்' என்று எழும் ஓசையும் அங்குள்ள நிலவெடிப் பினின்றும் ஒருங்கு எழுந்தன.
குறிப்புரை: கமர் - நிலவெடிப்பு. மாவடுவினை இறைவர் கடிக்குங் கால் எழும் ஓசையை, விடேல் எனும் சொற்களால் எடுத்துக்காட்டு கின்றார்.

இறைவனின் திருக்கை சென்று, தாயனாருடைய அரிவாளைப் பிடித்திடும் திண்ணிய கையினைப் பற்றும்போது, அவர் அற்புதம் உற, வாள்பட்டதால் அவருடைய கழுத்தில் ஏற்பட்ட புண் நீங்க, அவரிடத்திருந்த கொடிய வினையும் நீங்க, பெருகும்படியான மகிழ்ச்சி நீடித்திட, தம் பெருமான் தமக்காக அருளிய பெருங் கருணையினைத் தாயனார் நேரில் கண்டு தாம் தம் கைகளைக் கூப்பி நின்று,
குறிப்புரை:

அடியேனின் அறிவிலாமை கண்டும், என் அடிமை வேண்டி, இந்நிலத்தின் கண் உள்ள வெடிப்பில் வந்து, இங்குச் சிந்திய அமுதினை உண்டருளிய செல்வனே! வணக்கம். உடுக்குப் போன்ற சிறிய இடையையுடைய உமையம்மையாரை ஒரு மருங்கில் கொண்ட தூய நல்ல பேரொளியே! வணக்கம். நீறணிந்த பவளம் போன்ற திருமேனியையும் முறுக்கிய மென்மையான சடையையு முடைய முன்னைப் பழம் பொருட்கும் முன்னவனே! வணக்கம்.
குறிப்புரை:

என்று அவர் போற்றி வணங்க அவர்முன், ஆனேற்றின்மீது தோன்றியருளி, 'நீபுரிந்த செயல் நன்று. நல்ல நெற்றியினையுடைய உனது மனைவியுடன் என்றும் நீங்காது நமது உலகில் வாழ்வாயாக' என அருள் புரிந்து, அவரும் தம்முடன் வந்திடத் திருமன்றுள் ஆடியருளும் முதல்வனாய பெருமானும் அறக்கடவுளாம் ஆனேற்றின் மீது எழுந்தருளிச் சென்றார்.
குறிப்புரை: இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

அன்பு ததும்பிய சிந்தையுடைய அன்பராய தாயனார், மேலாய பொருளாயுள்ள பெருமானார், அமுது செய்யப் பெற்றிலேன் என்று, வரியினையுடைய மாவடுவினை உண்ணுத லாலாய 'விடேல்' எனும் ஓசையைக் கேட்பதன் முன், தமது வலிமை பொருந்திய கழுத்தில் அரிவாளைப் பூட்டி அரிய முற்பட்டதால், 'அரிவாள் தாயர்' என்னும் தூயதொரு பெயரினைப் பெறுவா ராயினார்.
குறிப்புரை:

தமது முன்னிலையாய இடம் நிலவெடிப்பேயாக, முதல்வனாராய சிவபெருமான் அமுது செய்திடக் கொண்டுவரச் சென்ற செந்நெல்லின் அரிசி சிந்திடவும், மாவடுவினைக் கடித்தலால் ஆய 'விடேல்' எனும் ஓசை தம் செவியில் கேட்கப் பெற்றிடவும் வல்ல தொண்டராய அரிவாட்டாயரின் திருவடிமலர்களைத் தொழுது, வாழ்த்தி, திருவருள் சிறந்து என்றும் வாழ்ந்திருக்கும் ஆனாய நாயனாரின் செயலினை யான் அறிந்தவாறு போற்றத் தொடங்கு கின்றேன்.

குறிப்புரை: செய்யில் உகுத்த திருப்படி மாற்றதனை
ஐயஇது அமுது செய்கென்று - பையஇருந்து
ஊட்டி அறுத்தவர்க்கே ஊட்டி அறுத்தவரை
நாட்டியுரை செய்வதென்னோ நாம்.
எனவரும் திருக்களிற்றுப்படியார் (பாடல் 20) இவ் வரலாற்றைச் சுருங்கவும் சுவைபடவும் கூறியிருக்கும் திறம் அறிந்து இன்புறுதற்குரியதாம்.


This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history