சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
சண்டேசுர நாயனார் புராணம்  

12 -ஆம் திருமுறை   12.200  
மும்மையால் உலகாண்ட சருக்கம்
 
அழகு பொருந்திய குளிர்ந்த நீர்தரும் காவிரியாறு, என்றும் பொய்யாது நீர் கொடுத்து வரும் நீர்நாடாகிய சோழ நாட்டில், வாய்ப்புடைய மண்ணியாற்றின் தென்கரையில் விளங்கி அமைய, முன்னாளில் கிரவுஞ்சம் என்னும் மலைகிழிய விடுத்திட்ட தமது திருக்கரத்து ஏந்தியருளிய வேலின் நிலையினைக் காண்பித்துப், பின் தேவர்களை வருத்திய வலிய அசுரப் பகையினை நீக்கிய முருகப் பெருமானின் திருவாக்கால் சிறப்பிக்கப் பெற்ற, அந்தணாளர் வாழ்ந் திடும் பழைய ஊர் அருட் செல்வம் நிறைந்த சேய்ஞலூராகும்.
*** இறைவனின் ஆணையால் 'பதுமன்' முதலானோரை அழிக்க வந்த முருகன், தம் படையுடன் வரத், தென் திசையில் குறுக்கிட்ட தாரகனின் கிரௌஞ்ச மலையை வேற்படையால் அழித்து, மண்ணியாற்றின் தென்கரையில் வந்து தங்கினர். அதுபொழுது இறைவனை வழிபட்ட இடமே அப்பெருமானின் பெயரால் சேய் ஞலூர் என அழைக்கப் பெறுவதாயிற்று. 'சேய் அடைந்த சேய்ஞலூர்' (தி. 1 ப. 48 பா. 11) எனக் காழிப்பிள்ளையாரும் அருளுவர். கந்தபு ராணத்துக் குமாரபுரிப் படலத்து இந்நகர் இப்பெயரால் அழைத்தற் குரிய காரணமும் குறிக்கப்பட்டிருப்பது அறியத்தக்கது.
செல்லும் மாமுகில் செறிந்திடு காம்பின்
மல்லல் மாநகர் வளந்தனை நோக்கி
எல்லை யில்அறிவன் யாம்உறை தற்கு
நல்ல மாநகர் இதுஎன்று நவின்றான்.
வீரவேள் இது விளம்புத லோடும்
ஆகும் வானவர்கள் அம்மொழி கேளா
ராகலாம் உடைய இந்நகர் சேய்ந
லூரது என்று பெயர் ஓதினர் அன்றே.
எனக் கச்சியப்ப சிவாசாரியார் கூறுவர். (கந்தபு. குமார- 14,15).

செம்பொருளை அடைதற்குக் காரணமாகிய திரு வெண்ணீற்றில் ஒன்றுபட்ட ஒழுக்கம் உடையவராய், இரு பிறப்பின் சிறப்புடையவராய், ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினியம் என்னும் மூவகைத்தீயையும் வளர்த்து வரும் நன்னெறியுடையவராய், நான்மறைகளையும் முறையாகப் பயின்றவராய், ஐம்புலன்களும் தம் வழிநிற்கும் தகுதியுடையராய்த், தாம் செய்யும் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு தொழில்களிலும் உண்மை நிறைந்த ஒழுக்கத்தை மேற்கொண்டு ஏழுலகமும் போற்றும் சீலமுடையவராய் வாழும் அந்தணர்கள் வதியும் சிறப்புடையது அவ்வூர்.

குறிப்புரை: இருபிறப்பு - தாய்தந்தையர் வழிப்பிறந்ததொரு பிறப்பும், முந்நூல் அணிந்தபின் வாய்த்ததொரு பிறப்புமாகிய இருபிறப்பு. 'அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்' (தொல். புறத். 20) என வரும் தொல்காப்பியப் பகுதியும் இங்கு நினைவு கூர்தற்கு உரிய தாகும். ஒன்று முதல் ஏழு வகையிலான எண்கள் இடம் பெற அமைந்த அணியழகு கண்டு மகிழ்தற்குரியதாம்.

குற்றமிலாத மான் தோலையுடைய முப்புரி நூலை அணிந்து விளங்கிடும் மார்பினையும், மிருதுவான மயிர் செறிந்த குடுமியையும் உடைய, நான்மறைகளைக் கூட்டாகச் சூழ்ந்து ஓதிப் பயில்கின்ற சிறுவர்களும், அந்நான்மறைகளையும் கற்பித்து வரும் சிறந்த ஆசிரியரும், இரவில் விளங்கிடும் விண்மீன்களும், நிறை மதியும் போலப்பொருந்திய மடங்களில், அவற்றின் மீது வந்து முழுங்குகின்ற முகில்களின் முழக்க ஓசை தாழ்ந்திட அவர்கள் ஓதிடும் மறை ஓசையின் ஒலி மிகுந்து விளங்கும்.
குறிப்புரை: கிடை - தொகுதி; கிட்டுதல் (சேர்தல், கூடுதல்) என்ப தன் பகுதியாக நின்றது. ஆசிரியன் குறித்த காலத்திற்கு முன் வந்து. குறித்தகால அளவு வரை மாணவர்கள் கிடத்தலின்(இருத்தலின்) கிடை எனப்பட்டது.

அந்நகரில் வேள்விகள் நடைபெறும் சாலை தோறும், அங்குள்ள வேதியர் கொடுத்திடும் அவியுணவை உண்டிட வரும் மாலும் அயனும் ஊர்ந்து வரும் படர்ந்த சிறகுடைய கருடனும் அன்னமுமாகிய பறவைகள் விண்ணிடத்திருந்து வந்து தங்குதற்குரிய இருப்பிடம் போலவும், தேவேந்திரனின் ஊர்தியான ஐராவத யானை யைக் கட்டுதற்குரிய கட்டுத்தறி போலவும், நாட்டப்பெற்ற வேள்வித் தூண்கள் உள்ளன.
குறிப்புரை: படர்சிறைப்புள் - கருடனும் அன்னமும். படரும் சிறகு கள் இரண்டற்கும் உள்ளமையிள் அவ்விரண்டையும் குறிப்பதாயிற்று. புள் - பன்மை குறித்த ஒருமை. நாகம் - யானை; ஐராவதம். கந்து - யானை கட்டும் தறி. யூபம் - வேள்விப் பசுத் தூண். வேள்வித் தூணின் உச்சியில் பறவைகள் தங்கவும், அவற்றின் அடிப்பகுதியில் யானை யைக் கட்டவும் இடமுள்ளன.

வேள்வியில் இடுதற்குரிய பொருள்களுள் ஒன்றான தித்திப்பாய பால் ஒழுகிடும்படி, காலை மாலையாய பொழுது தோறும் செல்லும் பசுக்கள் செல்வனவும்; தாங்கள் கற்ற மறைப் பகுதிகளை மனமுறக் கணித்திடும் மாணவர்கள், வேள்வி செய்தற்குரிய மரச்சுள்ளிகளை (சமித்துடன்) ஈட்டிக் கொண்டு வருபவரும், மலர்கள் நிறைந்த பசிய இலையுடன் மலிந்த குளத்தில் நீராடிய மறையவர்களின் பெண்கள் தத்தம் இல்லத்திற்கு மீள்பவரும் ஆக, இப்பான்மை நிறைந்த காட்சிகள் பலவும் அந்நகரில் உள்ள அழகிய தெருக்களில் விளங்குவன.
குறிப்புரை: ஓமதேனு - வேள்விக்குப் பால்தரும் பசுக்கள். கணிப் போர் - தாம் கற்ற மனனப் பகுதிகளைப் பன்முறையும் சொல்லிக் கணக்கிடும் மறைச் சிறுவர்.

பெருவாழ்வுபடைத்த அழகிய பதியாய அந்நகரின் அருகே, மண்ணியாற்றின் அலைகள், வயல்களின் வரம்பின் அடியில் முத்துக்களைச் சொரிய, அக்கரையின் அருகில் வேள்வி புரிதற்குரிய இடமகன்ற சாலைகள் பல நெருங்கி இருப்பன. அவ்வேள்விகள் நிறை வுற, அவற்றைச் செய்து உதவிய வேள்வித் தலைவர்கள் தத்தம் இருப் பிடத்திற்குச் செல்வதற்கான தேர்களும், அவியை ஏற்ற தேவர்கள் தம் உலகிற்குச் செல்வதற்கான விமானங்களும் அங்கு நெருங்கி இருப்பன.
குறிப்புரை: குலைப்பால் - கரையின் அருகில்.

வாய்க்கால் வழிவரும் நீர் மடைகளில் செங்கழுநீர் மலர்களும், செழுமை மிக்க நீர் சூழ்ந்த வயலில் விளைந்த செஞ்சாலி நெல்லின் திரள்களும், அவற்றின் அயலே வண்டுகள் நெருங்கி மொய்த்திடும் கமுக மரத்தில் நீரின் செழிப்பால் வளர்ந்த பெரும் பாளைகளும், செழித்த நல்ல இலைகளிடையே மலர்ந்த தாமரையின் நீண்ட பூவின் மீது துயிலும் கயல் மீன்களும், வழி நடைப் பாதைகளில் படர்கின்ற மெல்லிய முல்லைக் கொடிகளும், அரும்புகள் நிறைந்த மெல்லிய கிளைகளையுடைய காஞ்சி மரங்களும் அவ்வூரில் சிறந்து விளங்குவன.
குறிப்புரை: அடை - இலை; தாமரை இலை.

சோழ மரபில் அபயன் என்றும், குலோத்துங்க சோழன் என்றும் போற்றப்பெற்றவரும், தில்லையில் கூத்தப் பெருமான் வீற்றி ருந்தருளும் பேரவையைப் பொன்னின் மயமாகப் புனைவித்த வரும், இந்நிலவுலகைக் காத்துவரும் போரேறாய மன்னர் மன்னனும் ஆன அநபாயரின் மரபினர் வழிவழியாக முடி சூடற்குப் பொருந்திய ஐந்து பதிகளுள் ஒன்றாய் விளங்குவது இத்திரு நகரமாகும்.

குறிப்புரை: சோழ அரசர்கள் முடி சூட்டிக் கொள்ளும் பதிகள் ஐந்தாவன; காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், சேய்ஞலூர், கருவூர் என்பனவாம்.
இங்குக் குறிக்கப் பெற்ற சோழர் இரண்டாம் குலோத்துங்க சோழராவார் என முன்னரும் கூறப்பட்டது.

பண்ணின் பயனாகும் இனிய நல் இசையும், பாலின் பயனாகும் இனிய நற்சுவையும், கண்ணின் பயனாகும் பெருகிய ஒளியும், கருத்தின் பயனாகும் திருவைந்தெழுத்தும், விண்ணின் பயனாகும் பொழிகின்ற பெரு மழையும், நான்மறைகளின் பயனாகும் சீலமுடைய சைவ சமயமும் விளங்குவன போல, இம் மண்ணின் பயனாக விளங்கும் சேய்ஞலூர் என்னும் அத்திருத்தகு பதியின் வளத்தின் பெருமை ஓர் எல்லைக்கு உட்படுத்திச் சொல்லப்படும் தன்மையதோ? அன்று என்பதாம்.

குறிப்புரை: பண், பால், கண், கருத்து, விண், வேதம் ஆகிய ஆற னுக்கும் உரிய பயன்களைக் கூறி, அவையாவும் அவ்வப் பயன்களால் சிறந்து விளங்குவன போன்று, இம்மண்ணும், இத்திருப்பதியால் சிறந்து விளங்குகின்றது எனக் கூறியிருக்கும் திறம் அறிந்து இன் புறற்குரியதாம்.
நகர் வளங்களுள் இத்திருப்பதிக்குச் சொல்லப்பட்ட வளம் தனித் தன்மை வாய்ந்தது. ஓகாரம் எதிர் மறைக்கண் வந்தது.

இத்தகைய பெருமைமிக்க அப்பதியில் வாழும் மறையவர்களில், சிறப்புடைய இல்லற நெறியில், அறம் நிலவிய காசிப கோத்திரத்தின் தலைமை சான்ற நன்மரபினில், அருமையான இரத் தினத்தையும் தந்து, அதுவே நஞ்சினையும் தரும் பாம்பைப் போல நல்வினை தீவினை எனும் இருவினைகளையும் செய்யும் ஒருவனாக எச்சதத்தன் என்னும் பெயருடைய ஓர் அந்தணன் வாழ்ந்து வந்தான்.
குறிப்புரை: எச்சம் - யக்ஞம் என்னும் வட சொல் தமிழில் இவ்வாறு திரிந்தது. 'தக்கனையும் எச்சனையும்' (தி. 8 ப. 12 பா. 5) என வரும் திருவாசகமும் காண்க. எச்சன் என்னும் பெயர், வேள்வி செய்பவன் என்னும் பொருட்டாதலை அருணைவடிவேலனாரும் அப்பாடல் உரையுள் குறித்துள்ளார். எச்சதத்தன், விசாரசருமரைப் பெற்றெடுத்த தால் நல்வினையையும், இவர் செய்த வழிபாட்டைக் குறைக்க முற்பட்டமையின் தீவினையையும் உடையனாயினான். இவ்வாற்றான் இருமை வினைக்கும் ஒரு வடிவாயினன்.

அம்மறையவனின் திருமனைவிதானும் அவன் மரபிற்கு ஒத்த நன்மரபில் தோன்றியவள். அவள் சுற்றம் தழுவுதலை விரும்புபவளாய், இல்வாழ்க்கையை இனிது நடத்தி வருபவள். உலகில் பெறத்தகும் நற்றுணையாய ஆண் மகவைப் பெற்று, அதனால் சிறப்புறும் தவம் செய்து கொண்டவள். அப்பேற்றால் இனித்தான் பெறத் தகும்பெரும் பேறு ஒன்றும் இன்றாக, முடிந்த பயனைப் பெறும் பேறு பெற்றவள். பற்றுக்கள் அனைத்தையும் அறுக்கின்ற சிவப்பற்று தனக்கு வந்திட, அதன் சார்பு வழி நடந்திடும் தன்மையளாயுள்ள பவித் திரை என்னும் திருப்பெயருடையவள்.

குறிப்புரை: பவித்திரம் - தூய்மை. பற்றை எறியும் பற்று - சிவ பெருமான்; இப்பெருமானிடத்து அன்பு செலுத்துதலாலேயே பற்றை யறுக்க முடியும். 'பற்றுக பற்றற்றான் பற்றினை' (குறள், 350) எனவரும் திருவாக்கும் காண்க.

நன்மைகள் பலவற்றுள்ளும் தலையாய நன்மை யான இறையன்பு பூண்டொழுகும் அவர்கள் பால், நன்மையை விளை விக்கும் நான்மறைகளின் துறைகள் பலவும் விளங்கிடவும், அந்தணர் களின் அரிய ஒழுக்கம் இவ்வுலகில் பெருகிடவும், ஏழுலகங்களும் உய்ந்திடவும், பொற் பொதுவில் நடனம் புரிபவரான கூத்தப் பெருமா னையே உறுதிப் பொருளாகக் கொண்டு வணங்கிடும் சைவ மெய்ந் நெறி வளர்ந்தோங்கவும், மாதவத்தினர் புரியும் அரிய செயல்கள் பலவும் வெற்றியுடன் விளங்கிடவும் தோன்றினார் ஒருவர்; அவர் விசாரசருமனார் என்னும் பெயரினர் ஆவர்.
குறிப்புரை: விசாரம் - இறை, உயிர், தளை பற்றிய ஆய்வு. சரித்தல் - தங்குதல். அதாவது உயிர் கடைத் தேறுதற்குரிய சிந்தனையையே கொண்டிருத்தல் இவர் வரலாற்றால் அறியப்படும். சருமர் - மறைய வர்கள் கொளற்குரிய மரபுப் பெயர்.

ஐந்து வயது நிரம்பிய அளவில், அவருக்கு அங்கங்கள் ஆறுடன் நிறைந்த சிறப்புடைய நான்மறைகள் முதலாக, அனைத்துயிர்களுக்கும் தலைவராய சிவபெருமான் அருளிய ஆக மங்கள் யாவும், முன்னைய பிறவியில் பெற்ற அறிவின் தொடர்ச்சி யால் முகையவிழும் மலரினின்றும் வெளிவரும் நறுமணம் போல, அவர்தம் சிந்தை மலர, உடன் இவைகளும் மலருமாறு அமைந்த உணர்வு இவர்பால் சிறந்து விளங்கியது.
குறிப்புரை: 'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து' (குறள், 398) என்பதால், முன்னைப் பிறப்பில் பெற்ற அறிவின் தெளிவால், இப்பிறப்பில் ஓதாதுணர்ந்திடும் பேரறிவு விளங்கப் பெறுவதாயிற்று. சிந்தை - அகக் கருவிகள் நான்கனுள் ஒன்று. அது மலரவே சிவச்சார்படைதற்காம் பக்குவமும் உளதாயிற்று.

இவ்வாறு வளர்ந்து வரும் முறைமையில் ஏழு ஆண்டுகள் நிரம்பிட, புகழும் பெருமையும் அமைந்து முந்நூல் அணியும் கலியாணமும் நிகழ்ந்திட, இவரது அறிவிலே இகழத்தக்க தீங்காய நெறிகள் அல்லாத வெல்லாம் இவருக்குத் தாமாகவே விளக்கமுறும் சிறப்பு அடையப் பெற்றிருந்தும், தங்கள் குலமுறைக்கு ஏற்ப விளங்கும் மரபால், மறைகளை ஓதுவிக்கும் செய்கையையும் செய்வித்தார்கள்.
குறிப்புரை: ஐந்துவயதில் கலைபயிலத் தொடங்குதலும், ஏழுவயதில் முந்நூல் அணியும் கலியாணம் செய்வித்தலும் மரபாதல் இவர் வரலாற்றாலறியலாம்.

அறிவு மேலிடுதற்கு ஏதுவான மறைகளையும், பல கலைகளையும் உணர, ஆசிரியர்கள் ஓதிக் கொடுப்பதன் முன்னமேயே அவற்றின் நிலையை விசாரசருமர் உளம் கொண்டு, அதனால் விளக்கமுற்று நிலவும் அவர்தம் ஆற்றலின் திறமை கண்டு, அக்கலைகளை அவர்பால் ஓதி ஒழுக வைத்திடும் ஆசிரியர்கள் வியப் புற்றனர். இவ்வாறு பலகலைகளையும் தேர்ந்து, அளவில்லாத கலைகளின் பொருள்களுக்கெல்லாம் எல்லையாவது, ஆடுகின்ற கூத்தப் பெருமானின் சேவடிகளேயாகும் எனக் கொண்ட உண்மை யைச், செயற்பாடு மிக்க தம் சிந்தையில் தெளிந்தார் சிறிய பெருந் தகையாராய விசாரசருமர் என்பார்.
குறிப்புரை: கொளுத்துதல் - கொள்ளச் செய்தல். அறிவுறுத்துதல். கற்றதன் பயன் வாலறிவன் நற்றாள் தொழுதலே யாதலின், 'அலகில் கலையின் பொருட்கெல்லை' என்றார். வடிவால் சிறுவராய் இருந்தும் அறிவாலும் பண்பாலும் பெரியராய் இருத்தலின் சிறிய பெருந்தகை யார் என அழைக்கப் பெற்றார். ஞானசம்பந்தரும் இப்பெயரால் அழைக்கப் பெற்றிருத்தல் அவர் வரலாற்றால் அறியலாம். (தி. 12 பு. 28 பா. 73)

நள்ளிருளிலும் நட்டம் புரியும் திருவடிகளை உடையவரே நம்மை அடிமையாக உடையார் என்கின்ற உண்மை, எண்ணும் தொறும் தோன்றுகின்ற உணர்வின் கண்ணே, ஒழிவின்றி ஊறிவரும் வழிவழியடிமையாய அன்பின் பெருக்கத்தால், இயல் பாகவே எழும் காதல் மேன்மேலும் எழும் நிலையில், நாளும் அசைவின்றி அச்செம்பொருளிலேயே தலைப்பட்டு நிற்கும் விசாரசருமர், ஒரு நாள்.
குறிப்புரை:

மறைகளை ஓதிவரும் மாணவர் கூட்டத்துடன் செல்பவர், ஊரவரின் பசுக் கூட்டத்துடன் சென்ற பொழுது, ஈன்றணி மையையுடைய ஒரு பசு, தன்னை மேய்க்கும் இடையன்மேல் தன் கொம்பை அசைத்துச் செல்ல, அவ்வளவில் அவ்விடையன், யாதும் கூச்சம் இல்லாதவனாய்த், தான் கொண்டிருந்த தடி கொண்டு அப் பசுவை நைய அடித்திட, அதுகண்ட விசாரசருமர், அவனிடம் சென்று அப்பசுமேல் கொண்ட மிகுந்த அன்பால் இடையனைச் சினந்து, அவன் அப்பசுவை மேலும் அடிக்காதவாறு விலக்கி, தாம் உண்மையை உணர்ந்தவராய்.
குறிப்புரை: புனிற்று ஆ - ஈன்ற அணிமையையுடைய பசு. அதனால் தன் கன்றைப் பிரிய மனம் இல்லாமையால் கொம்பையசைத்து முட்டச் சென்றது போலும் எனக் கருதுவர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). அவ்வளவிலேயே அவன் அப்பசுவை நையப் புடைத்தனன். தனக்குப் பெரிய ஊறு செய்யாத நிலையில், ஈன்ற அணிமையை உடைய பசுவென்றும் கருதாது நையப்புடைத்தனன் ஆதலின், 'யாதும் ஒன்றும் கூசாதே' என்றார்.

பரந்த கலைகளாலும், ஆகமநூலின் விரிந்த பாங்கினாலும், பொருந்திய பெருமையுடைய அரிய மறைகளின் வழி உலகினில் யாவற்றையும் தெளிந்த உண்மை நிலையாலும், பசுவின் பெருமையை உள்ளபடி அறிந்த விசாரசருமர், ஆயனுக்கு அருளு வாராய்.
குறிப்புரை: தங்கும் அகில யோனிகட்கும்
மேலாம் பெருமைத் தகைமையன
பொங்கு புனித தீர்த்தங்கள்
எல்லா மென்றும் பொருந்துவன
துங்க அமரர் திருமுனிவர்
கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்கம் அனைத்துந் தாமுடைய
அல்ல வோநல் ஆனினங்கள்.

உலகில் விளங்கும் பிறப்புக்களுள் எவ்வகையினவாய உயிர்கட்கும் மேலான பெருமை உடையன; அருள் மிகுந்திடும் புனிதமான நீர்நிலைகள் எல்லாம் பொருந்தி இருக்கப் பெறுவன; உயர்ந்த தேவர்களும் திருமுனிவர்களும், சிவகணங்களும் சூழ்ந்து பிரியாதிருக்கின்ற உறுப்புக்கள் அனைத்தையும் உடையனவல்லவோ இப் பசுக்கள்! *** பசுக்களின் உறுப்புக்களில் தேவர்களும் முனிவர்களும் தங்கியிருப்பர் என்றல் மரபு. பசுவின் உறுப்புக்களில் தலையில் - சிவபெருமான், நடுநெற்றியில் - உமையம்மையார், கொம்பின் அடியில் - மாலும் அயனும், கொம்பின் நுனியில் - கோதாவரி முதலிய தீர்த்தங்கள், மூக்கின் நுனியில் - முருகன், உள்மூக்கில் - திக்குப் பாலகர்கள், செவிகளில் - அசுவினி தேவர்கள், கண்களில் - ஞாயிறும், திங்களும், பற்களில் - காற்றின் தலைவன், நாவில் - வருணன், இருதயத்தில் - கலைமகள், கபோலத்தில் - இயமனும் இயக்கர்களும், உதட்டில் - காலை நண்பகல் மாலை எனும் மூன்று காலத்திற்குமுரிய அதிதெய்வங்கள், கழுத்தில் - இந்திரன், இடையில் - அருக்கதேவன், நெஞ்சில்- சாத்தியர், நான்கு கால்களில் - அநில வாயு, முழங்காலில் - மருத்துக்கள், குளம்பில் - நாகலோகத்தர், குளம்பின் நடுவில் - கந்தருவர், மேற்குளம்பில் - தேவமாதர், முதுகில் - உருத்திரர்கள், சந்துகளில் - வசுக்கள் எண்மர், அரையில் - பிதிர் தேவர்கள், பக்கத்தில் - ஏழு கன்னியர்கள், குறியில் - திருமகள், அடிவாலில் - தேவர்கள், வால் மயிரில் - கதிரவனின் ஒளி, நீரில் - வான கங்கை, சாணத்தில் - யமுனை, வயிற்றில் - நிலமகள், மடியில் - ஏழுகடல்கள், அடிவயிற்றில் - காருக பத்தியம், இதயத்தில் - ஆகவனியம், முகத்தில் - தென்திசைத் தீ, எலும்பிலும் கருப்பையில் ஊறும் நீரிலும் - வேள்விகள், அனைத்து உறுப்புக்கள் - கற்புடைய மாதர்கள், இருப்பர் என்றல் நூல் துணிபு.
அத்தகைய சிறப்பினால் கன்றினை ஈன்ற அன்றே, பொற்சபையில் நடனம் புரியும் பெருமானுக்கு, வளரும் பிறையும் கங்கையும் நகு வெண்தலை மாலையும் பொருந்திய சடையின் திரு முடிமேல், அவர் விரும்பித் திருமுழுக்காடியருளுவதற்கு உரியவான தூயதான பால், தயிர், நெய், சாணம், நீர் என்னும் ஐந்தினையும் கொடுத்திடும் உரிமையுடைய பசுக்கள் அல்லவோ இவை?
குறிப்புரை:

சீலம் உடைய இப்பசுக் குலங்கள், சிறப்புமிக்க தேவர்களுடன் காலம் முழுமையும் உலகம் அனைத்தையும் காக்கின்ற முழுமுதற் காரணராகும் நீலகண்டமும், சிவந்த சடையும் உடைய கூத்தப்பெருமானார் தம் திருமேனியில் விளங்கிடும் திருவெண்ணீறு தோன்றுவதற்கு மூலமாய மலம் (கோமயம்) தோன்றுவதற்கு இடனாய் இருப்பவை என்றால், இவற்றினும் சிறந்த புண்ணியப் பேறு யாதுளது?

குறிப்புரை:

சிறிய பெண்மானின் கன்று துள்ளிடும் திருக் கைகளையுடையவரும், அழகிய பாம்பின் மணிகளைக் கங்கை நீரானது எற்றிட விளங்கிடும் சடையையுடையவருமாய சிவ பெருமான், தேவர்களுக்குத் தலைவியாய பெருமாட்டியுடனே எழுந்தருளும் ஆனேற்றின் குலம் அன்றோ இப்பசுக்கள் குலம்? இவ்வகையில் எண்ணத்தக்க சிறப்புகள் வேறு பிறவும் உளவோ? இல்லை.

குறிப்புரை: ஆனேற்றைச் சூழ்ந்துள்ள தெய்வப் பசுக்கள் ஐந்து என்றும், அவை நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்பன என்றும் கூறுப.
இவற்றினிடமாகவே உலகில் பசுக்குலம் பெருகிற்று என்றும், இவ்வைந்து பசுக்களும் பாற்கடலில் தோன்றியன என்றும் கூறுப.

என்று இனைய பல தன்மைகளையும் விசார சருமர் நினைந்தருளி, இப்பசுக்களை இவைகட்கு இன்பமான வழியில் நின்று மேய்த்து, கன்றுகளுடன் கூடிய பசுக்களின் கூட்டங்களைக் காத்திடும் செயலின் மேலாக இனிச் சிறந்ததொரு கடமையும் எனக்கில்லை என்றும், இச்செயல்தான் தில்லையில் ஆடும் பெருமா னின் சேவடிகளைப் போற்றும் திருத்தொண்டாகும் என்றும் கூறி, அவ்விடம் நின்ற இடையனை நோக்கி, 'இன்றுடன் நீ இப்பசுவின் நிரைகளை மேய்த்திடும் தொழிலை ஒழித்திடுவாய்' என்று கூறி.

குறிப்புரை:

'யானே இனி இப்பசுக்களின் கூட்டத்தினை மேய்ப்பேன்' எனக் கூறினார் விசாரசருமர். அது கேட்டு அஞ்சிய இடையனும் அவரை வணங்கி, அப்பசு மேய்த்தலை விட்டு நீங்கி னான். இப்பால், மறைவழி நிற்கும் அச்சிறுவராய விசாரசருமர் தாமும், அங்குள்ள மறையவரின் இசைவு பெற்றுப், பசுக்கள் நெருங்க இருக்கும் அப்பெருங் கூட்டத்தினை மேய்த்திடுவாராகி, பசிய பயிர் களுக்கு வானின் மழை, இன்பம் பயக்குமதுபோல, அப்பசுக்களின் நிரைகளைக் காத்திட முற்பட்டார்;
குறிப்புரை: இவ்வொன்பது பாடல்களும் ஒருமுடிபின.

திருக்கையில் கோலும் கயிறும் கொண்டு, சிறிய மிருதுவான குடுமி அசைந்திட, மான் தோலும் நூலும் சிறிய மார்பிலே துவண்டு அழகு செய்ய, திருவரையில் கோவண ஆடை ஒளி விளங்கிக் காண, பாலும் கன்றுகளும் பெருக வருகின்ற பசுக்களை மேய்த்திடும் தன்மையில், நல்ல புல்லில் அப்பசுக்கள் வேண்டும் அளவும் மேய்ந் திடற்கு மேற்சென்று,
குறிப்புரை:

புல் மிகுதியாயுள்ள காலங்களில் அவ்விடத்தில் மேய்த்தும், புல் குறைவாயுள்ள காலங்களில் தம் திருக்கையால் பறித்து உண்ணச் செய்தும், இதமாக அப் பசுக்கள் தண்ணீர் பருகிடும் நல்ல நீர்த்துறைகளில் தண்ணீர் பருகச் செய்தும், அப்பசுக்களுக்குப் பிற விலங்குகளால் ஏற்படும் துயரனைத்தையும் வருமுன் காத்தும், நல்ல நீழலில் அவைகளை இளைப்பாறுமாறு செய்தும், அமுதமாய இனிய பால் உதவும் காலங்களில் தவறாமல் அவற்றை உடைமையாகக் கொண்டிருக்கும் மறையவர்களின் இல்லங்களில் கொண்டு சென்று விடுத்தும், இனிய அச்செயலைச் செய்து வந்தார் விசாரசருமர்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

மண்ணியாற்றங்கரையில் புல் செழித்து வளரும் முல்லை நிலச்சோலையின் பக்கங்களிலும், ஆற்றின் பள்ளத்தாக்கு களின் வளர்ந்த புல் உள்ள இடங்களிலும், குளிர்ந்த முத்துகளையு டைய மருத நிலத்தின் சோலைகள் சூழ்ந்த புல்லுள்ள வெளிகளிலும், எண்ணிக்கையில் பெருகி வருகின்ற பசு நிரைகளை மேய்த்து, அக் கால இடைவெளியில் சமித்துக்களுடன் தீக்கடை கோலும் தேடிச் சுமந்து கொண்டு, இரவு வரும் முன்னம், பசுக்களையும் மீளக் கொண்டு, வந்து அவைகளை இல்லந்தோறும் விடுத்து வரும் நல்ல நாள்கள் பலவாகும். அந்நாள்களில்.
குறிப்புரை: மரச்சுள்ளிகள் சமிதை நாளும் மனையில் செய்யப் படும் வேள்விக்குரிய சிறுவிறகுகள் இவற்றையும், தீக்கடைதற்குரிய மரக்கோலையும் தேடிக்கொண்டு வருதல் இப்பருவத்தார்க்கு (பிரம சாரியர்) உரிய கடமையாம்.

இவ்வாறு விசாரசருமர் அன்பும் ஆர்வமும் கொண்டு மேய்த்து வரலால், அப்பசுக்களின் குலம் யாவும் அழகால் விளங்கி, புல்லின் உணவும் தாம் விரும்பிடும் நீரும் நிறைய உண்டு வரும் காரணத்தினால் எய்திய பெருமகிழ்ச்சிமிக்கு, இரவும் நண்பக லும், தூய தித்திப்பான பால் தம் மடியிற் பெருகிச் சொரியுமாறு அவற்றின் காம்புகள் பால் சுரந்தன.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

மறையவர்கள் தாம் மேற்கொண்டிடும் தொழிலாய வேள்விச் சடங்குகள் புரிந்திடப் பால்தரும் இந்தப் பசுக்கள், காண்டற் கினியனவாய், முன்னையினும் பன்மடங்குபால் கறப்பனவாக, இப் பசுக்களைத் தக்கவாறு பேணி வளர்த்திடும் அன்புடைய இப்பிரமசாரி, மேய்க்க முற்பட்டபின்பே, மிகவும் நற்றிறத்தவாயின எனக்கூறி, அம் மறையவர்கள் அனைவரும் மனம் மகிழ்ந்தனர்.
குறிப்புரை: பூணும் தொழில் - தம்மரபுரிமையாகப் பேணிவரும் தொழில்.

இவ்வாறாக எவ்வகையிலும் இப்பசுவினங்கள் விசாரசருமர் மேய்க்கத் தொடங்கிய பின் கொண்ட மகிழ்ச்சி இவ் வளவு என அளவின்றிப் பெருகுவதால், அவர்பால் அன்பூறி, தமது மனையிடத்துள்ள கன்றை விட்டுப் பிரிந்தாலும் தம்மை அணையும் சிறிய மறைக் கன்றாய விசாரசருமரைக் கண்டு, அருகு சென்று உருகி, அவருக்குத் தாயாம் தன்மையினை உடைய நிலையினவாய், கனைத்து மடிசுரந்து முலைக்கண்களைக் கறவாமே தாமாகப் பால் சொரிந்தன.
குறிப்புரை: மனைக்கட் கன்றை மறந்தாலும், மறைக்கன்றினை மற வாமே பால் சொரிந்தன எனக்கூறும் நயப்பாடு நனிமகிழ்வு தருகிறது.

தம்மை அணைந்த பசுக்கள் பாலைத் தாமே பொழிந்திடக் கண்டு, விசாரசருமர் உவந்து, செம்பொருளாய சிவ பெருமான் வழியே உற்ற தமது மனத்தில், இப்பால் எம்பெருமாற்குத் திருமுழுக்கிற்குத் தகும் என்னும் குறிப்பை உணர்ந்து, எம்மை உடைய வள்ளலார் அதன் பயனைத்தாம் அடைந்திட நினைந்து, தெளிந்து, அத னால் என்றும் உண்மைப் பொருளாய சிவபெருமானாரின் பூசனையை விரும்பிடும் வேட்கை உள்ளத்தில் தோன்றி எழலும்.
குறிப்புரை: பசுக்கள் பாலினைத் தாமே பொழியக் கண்ட சிறிய பெருந்தகையார், அஃது இறைவற்குத் திருமஞ்சனமாகும் என உளங் கொண்டதும் திருவருள் குறிப்பினாலேயாகும். ஆதலின் அச்செயல் தானும், அவர் செயல் அன்று, திருவருட்செயலே ஆகும் என்பது அறியத்தக்கது.

அங்கு முன்னைப் பிறவிகளில் தாம் புரிந்து வரும் வழிபாட்டின் தொடர்ச்சியால், விளையாட்டாக எழுந்து பொங்கிடும் அன்பால், மண்ணியாற்றின் கரையில் மணல் குவிந்து பரந்து இருக்கும் இடத்தில் நின்ற ஓர் ஆத்தி மரத்தின் கீழ்ச், சிவந்த கண்களையுடைய ஆனேற்றின் மீது இவர்ந்தருளும் எம்பிரானாகிய சிவபெருமானின் திருமேனியை மணலால் சமைத்துத், திருக்கோயிலும், உயர்ந்த கோபுரமும், திருச்சுற்றில் அமைத்தற்குரிய கடவுளர்க்கு வேண்டிய திருக்கோயில்களுமாக வகுத்து அமைத்தார்.

குறிப்புரை: மணலைக்குவித்து இறைவன் எனக் கருதி வழிபடல், சிறுவர்கள் விளையாட்டாகச் செய்யும் செயலாகும். அவ்வகையில் வைத்து எண்ணற்குரியது போலத் தெரியினும், ஈது முன்னைத் தொடர்ச்சியால் எழுந்த அன்பேயாகும் என்பார், 'விளையாட்டாகப் பொங்கும் அன்பால்' என்றார்.
இனி இறைவன் பால் அன்பு செலுத்துதல் பிறர்க்கெல்லாம் அரிதாக, இவரளவில் மிக எளிதாகத் தோன்றியது மட்டுமன்று; பொங்கியது மிக எளிதாயிற்றென்பார் 'விளையாட்டாப் பொங்கும் அன்பு' என்றார் எனினும் ஆம். விளையாட்டு எளிதாதல் என்னும் பொருள்படுதல், 'காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி'(தி. 8 ப. 7 பா. 12) என்பதாலும் அறிக. இங்குக் குறிக்கப்படும் ஆத்திமரம் திருவாய்ப்பாடிக் கோயிலினுள் தென்மேற்கில் உள்ளது.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

நல்ல ஆத்தி மலரும் செழுமையான தளிரும் முதலாக அருகில் வளர்ந்துள்ள சோலையில் பூத்த மலர்களை நன்குடையனவாய்த் தெரிந்து, தூய கங்கையை அணிந்த சிவ பெருமானின் திருமுடிமேல் சாத்துதற்கு ஏற்புடைத்தாகும் மலர்கள் பலவற்றையும் கொய்து, தாம் முன்பே கோத்து எடுத்துச் சென்ற இலைகளால் ஆய பூக்கூடையில் இட்டுக் கொண்டு வந்து, அவை மணம் தங்கிடும்படி காற்றுப்படாது சேமித்து வைத்தார்.

குறிப்புரை:

பின்னர் நல்ல ஒன்பது கும்பங்கள் பெறுதற்கு நாட்டம் கொண்டு அதற்கென ஒன்பது குடங்களை எடுத்துச் சென்று, நல்ல நாணல் புல் வளர்ந்துள்ள பூஞ்சோலையிடத்தும் ஆற்றிடைப் பள்ளத்தில் புல்லின் மறைவிலும் மேயநின்ற பசுக்கள் உடன்வந்து கூடிட, விரைவில் அவற்றை அணைந்து, ஒரு பசுவுக்கு ஒரு முலைக் காம்பில் பால் பெறுவாராக எதிர் செல்ல, அவைகளும் கனைத்து இவர் முலை தீண்டலும் செழுமையான பாலைச் சொரிந்தன.
*** ஒரு பசுவிற்கு ஒரு முலைக்காம்பில் மட்டும் பால் பெறுவாராகச் சென்றார் எனவே, இச்செயல் அப்பசுவை உடையார்க் கும் கன்றிற்கும் பால் குறைதற்கு ஏதுவாகாமை அறியலாம். அன்றி யும், இச்செயல் திருவருட்குறிப்பினதாய் நிகழ்தலின் மனையிலுள் ளார்க்கு மேலும் பால் பெருகவும் காரணமாயிற்று.

கறந்த அப்பாலைக் கொணர்ந்து தாம் விரும்பும் கொள்கையினால் தேவர்பெருமானுக்கென அமைத்த மணல் கோயி லில், அப்பாற்குடங்களை முன்னாக வைத்து, வண்டுகள் மருவிடும் மலர்களை எடுத்துக் கொண்டு, வரன்முறையாக முற்பிறவி வழிவந்த அன்பால், எம்பிரானைப் போற்றி செய்து, பின்னர்ப் பாலினாலாய திருமுழுக்கு ஆட்டி.

குறிப்புரை: திருமுழுக்காட்டுதற்கு முன் அருச்சனைபுரிந்து, தாம் கொண்ட மணலிடமாக இறைவெளிப்பாடு தோன்றற்குரிய மந்திரம், பாவனை, செயல் ஆகியவற்றைச் செய்தலான் மணலால் குவிக்கப் பெற்றிருப்பினும் அவ்வடிவில் இறைவெளிப்பாடு தோன்ற நிற்றலி னாலாம்.

மீண்டும் மீண்டும் இவ்வண்ணமே வெண்மை நிற முடைய பாலைத் திருமுழுக்கு ஆட்டிட, அவரை அடிமையாகக் கொண்டிருக்கும் பெருமானும், தம் அன்பர் விசாரசருமரின் அன்பின் பாலராக நின்று, அவர் பூசனையால் அமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று முற்றிட, அங்கு ஆத்திமர நீழலின் கீழாக அமைந்த, வெண்மணலின் சிவலிங்கத் திருமேனியின் உள் நிறைந்து நின்று, அவர் புரியும் பூசனையை ஏற்றருளினார்.
குறிப்புரை: கோளம் - சிவலிங்கம்

பெருமை பொருந்திய சேய்ஞலூர்ப் பிள்ளையார் தம் உள்ளத்தில் ஒருமையுணர்வுடன் தேவர்பெருமான் உவந்தருளும் வழிபாட்டின் உறுப்புக்களான திருமுழுக்காட்டல் முதலானவற்றில் தாம் தேடாத பொருள்கள் யாவற்றையும் தமது அன்பினால் நிரப்பி, அந்நெறியாக வரும் முறையால் வழிபாடு செய்தருளி வணங்கி மகிழலானார்.
குறிப்புரை:

பெருமானின் திருவடிக்கீழ்த் தொண்டு புரியும் அந்தணச் சிறுவர், திருமுழுக்கு ஆட்டுகின்ற நிறைவுடைய பூசனைக் குக் குடங்களில் பால் நிரம்பச்சொரிந்தும், அப்பசுக்குலங்கள் குறை பாடின்றித் தமது மடிபெருகும்படிக் குவிந்திடும் முலைப்பாலை, அவைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் அந்தணர்கள் மனை யிலும் குறைவின்றி முன்பு போல் பால் கொடுக்கும் அளவால், குறை வின்றிப் பெருகவே தந்து நின்றன.
குறிப்புரை:

இவ்வாறாக நாளும் சிறந்த பூசை செய்வதற்கு முயல்வுற்று அதுவே திருவிளையாட்டாக, முப்புரிநூல் அணிந்தமார் புடைய விசாரசருமர் இயல்பாய் இதனைப் புரிந்து வர, ஒருநாள் அவர் தம் அன்பு மயமான பூசனையினைக் கண்டு, அதன் உண்மைத் திறத்தை அறியாத அயலான் ஒருவன், அச்சேய்ஞலூரில் வாழும் அந்தணாளர்க்கு, இவர் செயலை அறிவித்தான்.
குறிப்புரை: அவ்வூரில் வாழும் அந்தணர்களுக்கு அறிவித்தான் எனப் பொதுவகையால் கூறினும், வரும் செய்யுளால் அவர்கள் அவையத்தார் என்பது பெறுதும். முன்னர்விளையாட்டாக என்று கூறியவர், ஈண்டுத் திருவிளையாட்டாக என்றார், ஈது திருவை அடைவிக்கும் விளையாட்டாகையால்.

அவனுடைய சொல்லைக் கேட்ட அரிய மறைவழி நின்ற அந்தணாளர்கள், 'இடையன் பசு மேய்க்கும் விதம் அறியான்' என்று சொல்லி, 'அப்பசுக்களின் இச்சைவழி யான் மேய்ப்பேன்' என்று எம் பசுக்களை எல்லாம் பால் கறந்து பொய்மையான தனது விளையாட்டிற்குப் பாவித்து வருகின்ற அவ்விசாரசருமன் செய்யும் தவறான ஒழுக்கத்தினை எடுத்துச் சொல்ல, 'அப்பிள்ளையின் தந்தையான எச்சதத்தனை இங்கு நீர் அழையுங்கள்' என்றார்கள் அவையில் கூடி இருந்த அந்தணர்கள்.
குறிப்புரை:

அவர்கள் அருகில் இருந்தவர்கள், அவ்வந்தணன் எச்சதத்தனுடைய திருமனையிடத்துச் சென்று அவனிடம் அவையோர் அழைப்பதைக் கூறி, உடன் அழைத்துக் கொண்டு வருதலும், அது பொழுது அவையோர் அவ்வெச்சதத்தனைப் பார்த்து 'ஊராருடைய பசுக்களைத்தான் மேய்ப்பேன் எனச் சொல்லி அதனை மேய்த்து வரும் உன் மகன் செய்யும் தீங்கினைக் கேள்' என்று அயலான் ஒருவன் தம்மிடம் முறைப்பட்டுக் கொண்ட வரலாற்றைச் சொல்லத் தொடங்குவார்.
குறிப்புரை:

அழகிய தண்ணளியையுடைய அந்தணர்கள் தங்கள் வேள்விக்குப் பால் கறக்கும் பசுக்களை எல்லாம் மனம் மகிழ்ந்து அன்பால் அவைகளைத் திரட்டிக் கொண்டு சென்று, மேய்ப்பான் போல் நின்று, நறுமணம் கமழும் பூம்புனல் நிறைந்த மண்ணியாற்றின் மணலில், அப்பசுக்களின் பாலைக் கறந்து ஊற்றி விளையாடித், தனது எண்ணப்படி செய்து வருகின்றான் என்று ஒருவன் கூறக் கேட்டோம் என்றனர்.
குறிப்புரை:

அவையோர் மொழிந்ததைக் கேட்ட எச்சதத் தனும், அஞ்சிப், 'பெருமை மிக்க அவையோர்களே! என் சிறுபையன் செய்த தீங்கினை, ஒருசிறிதும் இதற்கு முன் அறிந்திலேன். இதற்கு முன்பு நடந்த இதனைப் பொறுக்க வேண்டும்' என்று குறை இரந்து வேண்டி, 'இனி இச்செயல் நிகழுமாயின் குற்றம் என்னுடைய தேயாம்' என்றான்.

குறிப்புரை: இவ்வாறு கூறக்கேட்ட எச்சதத்தன், உடனே இதனை அவன் செய்திருக்கமாட்டான் என்று கூறவோ, அன்றி அவனை உடன் சினந்து ஒறு
க்கவோ அமையாது, இனி இக்குற்றம் நிகழுமாயின் என் பொறுப்பு என்றனன். அவன் தன் மகன்பால் வைத்திருந்த நம்பிக்கையையும் அவன் தன் அற உணர்வையும் எச்சதத்தனின் கூற்றுக் காட்டுகின்றது.

அவையோரிடம் விடைபெற்றுக் கொண்டு, மாலைக் கால வழிபாடாற்றித் தனது இல்லத்திற் சென்ற எச்சதத்தனும், எனக்கு இப்படிஒர் பழிவந்ததே என்று நினைந்து, தன் மகனாருக்கு இதைக் கூறானாய், இதன் உண்மையை நேரில் யானே அறிவேன் என நினைந்து, இரவு கழிந்ததும், தனது மைந்தனார் பசு மேய்த்திடப் போயபின், அவருக்குத் தெரியாது அவர் பின் மறைந்து போயினான்.

குறிப்புரை:

அவ்வாறு சென்ற அவனும், தன் திருமகனாரான விசாரசருமர் சிறந்த ஊராரின் பசுக் கூட்டங்களைக் கொண்டுபோய், நறுமணம் கமழும் சோலையிடத்து மேய்ப்பாராய், அன்று மண்ணி யாற்றங்கரையில் உள்ள மணல் பரந்த இடத்தில் அப்பசுக்களைத் திரளாகக் கொண்டு சென்றார் என்பதை அறிந்து, அயலில் நின்ற ஒரு குரா மரத்தின் மேல் ஏறி, அங்கு நிகழ்வதை அறிய ஒளித்திருந்தான்.

குறிப்புரை:

இறைவனிடத்து அன்பு செய்யும் அப்பிரம சாரியாம் விசாரசருமரும், நீரில் மூழ்கிப், பின் எம்பெருமானுக்கு முன்பு போல் மணலால் கோவிலும் சுற்றுக் கோயில்களும் ஆக்கி, முகை அவிழும் மென்மையான மலர் கொய்து, பின்பு தன்பால் வரும் பசுவின் முலைபொழியும் பாலை, குடங்கள் நிறையக் கொணர்ந்து, அவற்றைத் தக்க இடத்து வைத்துப், பூசனைக்கு வேண்டிய பிற பொருள்களையும் அமைத்துக் கொண்டவராய்.

குறிப்புரை: பிரமசாரிகள் எனப் பன்மைபடக் கூறியது, அவர் தம் தகுதி நோக்கியாம்.

இவரை இறைவன் ஆட்கொள்ளுமாறு நின்ற விதியின் விளையாட்டால், அன்பால் நிறைந்த அரிதாய பூசனையைத் தொடங்கி, ஒருமைப்பாடுகொள்ளும் உள்ளத் தன்மையால், வெண் மணலாலாய சிவலிங்கத்தின் மீது நறுமணம் மிக்க மலர்களைச் சாத்திப், பின்னர்ப் பெரிதும் நிறைந்த தித்திப்பாய பாற்குடங்களை எடுத்து உள்ளத்துக் கொண்ட பெருவிருப்புடன் பெருமானுக்குத் திருமுழுக் காட்டிடலும்,
குறிப்புரை:

பெருமானைப் பரவுதற்கு மேன்மேலும் எழும் விருப்பும், முன்னைப் பிறப்பால் ஒருங்குவாய்ந்த வழிபாடாற்றும் பண்பும் பொருந்த, விசாரசருமர் தம்பால் கொண்ட அன்பின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், பாம்பையணிகின்ற சடை முடியையுடைய சிவபெருமானின் அருளே இது என்னுமாறு, குராமரத்தின் மீது இருந்த முதிய எச்சதத்தனும், இவர் பூசையைக் கண்டு அறிவழிந்து சினம் மிகப் பார்த்தான்.
குறிப்புரை:

அவ்வாறு பார்த்த அளவிலே குரா மரத்தினின்றும் இறங்கி, விரைந்து சென்று, கையில் கொண்ட தண்டால் மகனார் திருமுதுகில் புடைத்துக் கடுஞ்சொற்களைக் கூறிய பொழுதும், பெருமானுக்குத் தொண்டுபுரிந்து கொண்டிருக்கும் சிறிய பெருந் தகையார், தம் பெருமானுடைய வழிபாட்டில் திளைத்திருந்தமையால் வேறொன்றும் அறிந்திலராயினர்.

குறிப்புரை: நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறிஇருந்தாற் போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக்
குறிஅறி வாளர்க்குக் கூடலு மாமே.
எனவரும் திருமந்திரமும் (தி. 10 பா. 1438) ஈண்டு நினைவு கொள்க.

சிறுமைத் தொழிலில் தலைநின்ற அம்மறையவர் சினம் கொண்டு மேன்மேலும் அடித்திடவும், மேலாம் பெரியவராய விசாரசருமர் அதனை அறியாராய், மீளவும் பாலால் திருமுழுக்கு ஆட்டிடும் அப்பணியில் நீங்கிடாமை கண்ட, உலகியலுணர்வாய மயக்க உணர்வு கொண்ட எச்சதத்தன், மேலும் சினம் கொண்டு அவர் வைத்திருந்த பாற்குடங்களை இழிசெயல் செய்தலில் தலைநின்ற வனாய்க், காலால் இடறிச் சிந்தினான்.
குறிப்புரை: 'தாபரத்தைக் கண்டவன் தாதை பாய்வான்'(தி. 4 ப. 48 பா. 4) என அப்பரடிகளும், 'சிவன்றன்மேற் சென்ற தாதை' (தி. 7 ப. 55 பா. 3) எனச் சுந்தரரும் கூறுவர். எச்சதத்தனின் நோக்கம் அதுவா யினும், அவனால் இடற இயன்றது பாற்குடமேயாதல் சேக்கிழார் திருவாக்கால் அறிய இயலுகிறது. இறைவற்கு என வைக்கப்பெற்ற பாற்குடத்தைக் காலால் இடறுதல் மிக இழிவுடைத்தாதல் தோன்ற அதனைக் 'கடைமைத் தொழில்' என்றார்.

பாற்குடங்களைக் காலால் இடற அவற்றினின்றும் பால் சிந்தும் பொழுதில், அதனை நோக்கிய சிறுவராய விசாரசரும னார், ஓர் இறைப்பொழுதில் அத்தீயவன் தம் தந்தை என உணர்ந்ததும், அப்பெரும்பிழை செய்தானின் கால்களைத் தடிய, முன்னாகக் கிடந்ததொரு தண்டினை எடுத்த போது, அதுவே ஒரு மழுவாக, தந்தையின் கால்களை வெட்டினார். அவ்வந்தணனும் மண் மேல் வீழ்ந்தான்.
குறிப்புரை:

தந்தையின் காலை வெட்டிய அம்மழுவே, வழிபாட்டில் தந்தையால் வந்த இடையூற்றை அகற்றிடும் படையாகி விடத், தம் பூசனையில் வந்த இடையூற்றை அகற்றினராய், முன்பு போலத் தாம் பெருமானை வழிபாடு புரிந்திடப் போதலும், அழகுடன் செறிந்த நீண்ட சடை முடியையுடைய சிவபெருமானும் உமையம்மை யாருடன் வெள்ளேற்றின் மீது எழுந்தருளி.
குறிப்புரை:

அருகில் பூதகணங்கள் சூழ்ந்து வரவும், பழைய முனிவர்களும் தேவர்களும் மறைமொழிகளை எடுத்துப் போற்றி டவும், வினையின் நீங்கி விளங்கியவராகிய பெருமானார் அன்பு மீதூர வெளிப்பட்டுத் தோன்றி நின்றார். பத்திமை நிரம்பிய அச் சிறுவரும் அது கண்டு கை கூப்பித் தொழுது மனங்களித்துப் பெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
குறிப்புரை:

மாலையாகத் தொடுத்த கொன்றைப்பூவைச் சூடிய சடையையுடைய பெருமான், தம் திருவடிகளில் வீழ்ந்த விசாரசருமரைத் திருக்கரத்தால் எடுத்து நோக்கி, 'எம்பொருட்டால் உன்னைப் பெற்ற தந்தை வீழ வெட்டினாய். அடுத்த தந்தை இனி உனக்கு நாம்' என்று கூறி, அருள் செய்து, மகனாரை அணைத்தருளி, பெருகும் கருணையால் அவர் திருமுதுகைத் தடவி, உச்சியில் முத்த மிட்டு மகிழ்ந்தருளலும்.
குறிப்புரை:

சிவந்த கண்களையுடைய ஆனேற்றின் மீது இவர்ந்தருளும் இறைவர் திருக்கை தீண்டப் பெற்ற சிறுவனாராய அவ் விசாரசருமரும், மாயையின் விளைவாய உடல்மாறி, அதன் மேலாக அளவிலாது உயர்ந்த சிவமயமாகிப் பொங்கி எழுகின்ற திருவருளில் மூழ்கிச் சிறந்து, தாமரை மலரில் வீற்றிருக்கும் அயன் முதலாய பெருங் கடவுளர் யாவரும் போற்றிடத், தம்மைச் சூழ்ந்து விளங்கிய சிவ ஒளி யின் வடிவாகித் தோன்றினார்.
குறிப்புரை:

அண்டங்களுக்கெல்லாம் தலைவராகிய சிவ பெருமானும், சூழ்ந்த ஒளி வடிவில் தோன்றி நிற்கும் விசாரசருமரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவனாக ஆக்கி, 'நாம் உண்ட திருவமுதின் மிகுதியும் உடுப்பனவும் சூடுவனவும் ஆன இவை யாவும் உனக்காகும்படி தந்து, அவற்றுடன் சண்டீசன் எனும் பதமும் தந்தோம்' என்று திருவாய் மலர்ந்து தம் இளம்பிறை விளங்கும் சடைமீதிருந்த கொன்றை மாலையை எடுத்து, அவருடைய அழகிய நீண்ட திருமுடிமீது சூட்டியருளினார்.
குறிப்புரை:

எல்லா உலகங்களிலும் உள்ளவர்களும் கண்டு வியத்தகு உணர்வுடன் அர கரவொலி எழுப்ப, எங்கும் மலர் மழை பொழிந்திடப், பல்லாயிரமான சிவகணநாதர்களும் பாடி ஆடி மகிழ்ச்சி கொள்ள, சொற்கள் நிறைந்த நான்மறைகள் போற்றிட, நாற்புறமும் சூழ இயங்கும் இயங்கள் ஒலித்திடச், சைவ நல் ஒழுக்கம் ஓங்கிடச், சண்டீசுவரர் எனும் தகுதிபெற்ற சிறிய பெருந்தகையாரும் பெருமானாரைத் தொழுது பின் சென்றார்.
குறிப்புரை:

இந்நிலவுலகில் உள்ளார் யாவரும் அறியப் பிழை செய்த எச்சதத்தனும், சிவபெருமானின் திருவருளால், நான் மறை களின் சிறந்த ஒழுக்கம் திகழ்ந்து விளங்கும் சேய்ஞலூர்ப் பிள்ளை யார் தம் திருக்கையில் கொண்ட அழகு நிறைந்த மழுவால் கால் வெட்டுண்டமையால், தான் செய்த குற்றம் நீங்கித், தன் சுற்றத்தவருடன் ஆதிமுதல்வராய சிவபெருமானின் உலகத்தை அடையப் பெற்றான்.
குறிப்புரை:

தம்பால் வந்து மிகவும் கொடிய செயலைச் செய்த தந்தையின் கால்களை, மழுவாயுதத்தால் வெட்டிய மறைச்சிறுவர், அவ்வுடலுடனேயே சிவபெருமானின் திருமைந்தர் ஆயினார். இந் நிலைமையை யாவரே அறிந்தார்? ஒருவரும் அறியார். இவ் வரலாற்றால் செய்யத் தக்கது ஒன்று உண்டு என்றால் அஃது, ஈறில்லாத சிவபெருமானிடத்து முழு அன்பினையும் செலுத்திய அடியவர்கள் செய்தனயாவும் தவமாகும் என்பதேயாம்.
குறிப்புரை: 'சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்' என மணிவாசகர் அருளுவதும் காண்க.

அன்பு நிறைந்த திருவுள்ளத்தால் நஞ்சு பொருந்திய திருக்கழுத்தினையுடைய சிவபெருமானின் அடியவரது பெருமையினை, எல்லாவுயிர்களும் அறிந்து போற்றுமாறு, இந் நிலவுலகு அனைத்தும் உய்யத் திருத்தொண்டத் தொகையெனும் அரிய பதிகத்தை அருளிச் செய்த ஆளுடைய நம்பிகளின் நறுமணம் பொருந்திய மென்மையான திருவடிகளை வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்.

குறிப்புரை:


This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history