சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
குலச்சிறை நாயனார் புராணம்  

12 -ஆம் திருமுறை   12.220  
திருநின்ற சருக்கம்
 
சான்றோர்களால் எடுத்துச் சொல்லப்பட்ட பழமையான புகழினை உடைய நன்மை மிக்க பாண்டி நாட்டில், செந்நெல் நிரம்பிய வயல்களும், இனிய கரும்புகளும், அவற்றின் அருகே செறிந்து நிற்கும் கமுகும் (பாக்கு மரங்களும்) கொண்ட பிற இடங்களும் சூழ உள்ளதும் நிலைபெற்ற வள்ளன்மையுடையார் இருந்தருள்வதுமாய நகரம், மணமேற்குடி என்பதாகும்.

குறிப்புரை: பன்னு - எடுத்துச் சொல்லப்படுகின்ற, புறம்பணை - நகர்ப்புறத்தே அமைந்துள்ள இடம். வண்மையினார் - வள்ளன்மை யுடையார். மணமேற்குடி - புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி வட்டத்தில் உள்ளது.

அந்நகரின் முதல்வர், செயற்கரிய சிறப்பினை யுடைய குலச்சிறையார் ஆவர். அவர் 'வன்றொண்டன்' எனும் பெயருடைய நம்பியாரூரரால், ஒப்பற்ற 'பெரு நம்பி' எனப் போற்றப் பெற்றவர். தம்திருமனத்து இருக்கும் உறைப்பினால் (திண்மையால்) திருத்தொண்டு புரியும் திறத்தினின்றும் வழுவாதவர்.

குறிப்புரை: நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையில் 'பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்' (தி. 7 ப. 39 பா. 4) எனப் போற்றப் பெற்ற சிறப்பை நினைவு கூர்ந்து சேக்கிழார் கூறிய பகுதி இதுவாகும். பெருநம்பி - குலத் தலைமைப் பெயர் என்பர். திண்மை வைப்பினால்- மனத்தின்கண் கொண்ட திண்மையால் (உறைப்பினால்).

அவர், இறைவனின் இன்னருளைப் பெறுதற்குச் சிவனடியார்களே காரணமாவர் எனும் துணிவால், அவ்வடியவர்க ளிடத்து அன்பு கொண்டு மகிழ்ந்து, அவர்களுடைய திருவடிகளில் மிகுந்த அன்பொடும் வணங்கி, கைகள் கூப்பித் தொழுது, அன்புகலந்த இனிய நன்மொழிகளைப் பொருந்தச் சொல்லி வாழ்பவர்.

குறிப்புரை: வாரமாகி - அன்புகொண்டு. ஈரநன்மொழி - அன்பு கலந்த இனியமொழி. 'இன்சொலால் ஈரம் அளைஇப்' (குறள், 91) என்னும் திருக்குறளும்.

வினைவழிப்பட்ட நிலையில் தோன்றிய நான்கு குலத்தவர்களாக இருப்பினும், அவ்வவ்வொழுக்க நெறியினின்றும் நீங்கியவர்களாக இருப்பினும், சிவபெருமானிடத்தில் நிலைபெற்ற அறிவுடையவர்கள் என அறியப் பெறின், அவர்களை மனம் பொருந் தப் பணிந்து வணங்கும் செய்கையினை உடையார்.

குறிப்புரை: குறி- குறிக்கொள்ளப்பட்ட; அதாவது வினைவழிப் பட்ட குறிப்பின்படி. எனவே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனக் குறிக்கப்படும் நால்வகைக் குலங்களில் அவ்வவ் உயிர்களும் தோன்றுதற்குக் காரணம் வினை வழியேயாம். 'தவம் செய்சா தியினில் வந்து, பரசம யங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே' (சிவ. சித்தி. சூ. 2 பா. 90) என்னும் ஞானநூலும். உயர் குலத்தில் தோன்றி னால் மட்டும் அக்குலத்தவர் என மதிப்பதற்கில்லை. அவ்வக் குலத்திற் குரிய பண்புகளைக் கொண்டிருக்கும் பொழுதே அவ்வக் குலத்தவர் என மதிக்கப்படுவர். 'ஒழுக்கம் உடைமை குடிமை' (குறள், 133) 'நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்' (குறள், 958) எனவரும் திருக்குறள்களும் காண்க. சங்கரன் எனும் பெயர் சிவபெருமானைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்றாகும். சம் - சுகம், கரன் - தருபவன். எனவே இன்பம் தருதலால் சங்கரன் எனப்படுவன். அறிவு சங்கரர்க்கு அன்பர் எனப் பெறின் - தம் அறிவைச் சங்கரன் இடத்திலேயே வைத்து அன்பு செலுத்துவோர் எனில். செறிவுற - மனம் பொருந்த. பணிதல் மனத்தானும், சொல்லா னும், உடலானும் பணிதல்.

உலகினர் தாம் சிறந்தனவெனக் கொள்ளும் நலங்களை உடையவராயினும், அந்நலங்களின்றி அளவற்ற தீமை களை உடையராயினும், பிறை விளங்கும் செஞ்சடையினை உடைய சிவபெருமானின் அடியவர்களாய் இருப்பின், அன்னோரை நிலம் உற வீழ்ந்து வணங்கிப் போற்றும் தன்மையினை உடையார்.

குறிப்புரை: உலகர் - ஈண்டு உயர்ந்தோர் மேற்றாம். அவர்கள் கொள்ளும் நலங்களாவன: 'ஒழுக்கம், அன்பு, அருள் முதலாய நலங்களாம்'.
ஒழுக்கமன் பருளா சாரம் உபசாரம் உறவு சீலம்
வழுக்கிலாத் தவம்தா னங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை
அழுக்கிலாத் துறவ டக்கம் அறிவொடர்ச் சித்த லாதி
இழக்கிலா அறங்க ளானால் இரங்குவான் பணிய றங்கள்.
(சிவஞா. சித்தி. சூ. 2 பா. 23) எனவரும் ஞானநூற் கூற்றும் காண்க.
நலமில ராக நலமதுண் டாக
நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத்
தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன்
கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ண
லாலவா யாவது மிதுவே. (தி. 3 ப. 120 பா. 6)
எனவரும் திருஞானசம்பந்தர் திருவாக்கினை இவ்விருபாடல்களும் முகந்து நிற்கின்றன.

இப்பெருந்தகையார், குணத்தில் மிக்கவர்கள் பெருங் கூட்டத்தாராய் உணவு வேண்டி வரினும், அன்றி ஒருவராய் உணவு வேண்டி வரினும், எண்ணுதற்கரிய அன்பினால் எதிர் கொண்டு அழைத்து, அவரொடு நட்புமிக்குத் திருவமுது ஊட்டும் நலத்தினை உடையவர்.

குறிப்புரை: உண்பவேண்டி எனும் தொடரை முன்னரும் கூட்டி உரைக்க. எண்பெருக்கிய - எண்ணுதலில் மிகுதிப்பட்ட; எண்ணற்கரிய,
கணங்களாய் வரினுந் தமியராய் வரினு
மடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங்
கோபுரஞ் சூழ்மணிக் கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம்
வன்னிவன் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ண
லாலவா யாவது மிதுவே. (தி. 3 ப. 120 பா. 4)
எனவரும் திருஞானசம்பந்தரின் திருவாக்கினை இப்பாடல் முகந்து நிற்கின்றது.

அடியவர், திருநீறு, கோவணம், உருத்திராக்கம், ஆகிய சிவவேடத்தால் பொலிவு பெற்று, யார்க்கும் மூல காரணமாய் நிற்கும் சிவபெருமானின் திருவைந்தெழுத்தை நாவணங்கி, ஓதி உரைப்பவராயின், அவர் திருவடிகளை நாளும் போற்றிவரும் பண்பினை உடையவர்.

குறிப்புரை: பூதி - திருநீறு. இதன் சிறப்புக் கருதி 'வி' என்னும் எழுத் துடன் கூட்டி, 'விபூதி' என்றும் அழைப்பர். விபூதி - சிறப்பு மிக்க செல்வம் :அஃதாவது வீடு பேற்றுச்செல்வம்.
சாதனம்- உருத்திராக்கம்.
திருவைந்தெழுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறித் தலின் 'அஞ்செழுத்தாம் அவை' எனப் பன்மைப்படக் கூறினார். 'அஞ்சுபதம்' (தி. 7 ப. 83 பா. 1) என ஆளுடையநம்பிகளும் குறிப்பர்.
'சிவனரு ளாவி திரோதமல மைந்தும்
அவனெழுத் தஞ்சி னடைவாம்' -உண்மை வி. 42
எனவரும் உண்மை விளக்கம் இதற்குப் பொருள் விளக்கம் தரும்.
நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி
நல்லராய் நல்லியல் பாகும்
கோவணம் பூதி சாதனங் கண்டாற்
றொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ
ளிருபது நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ண
லாலவா யாவது மிதுவே. (தி. 3 ப. 120 பா. 8)
எனவரும் திருஞானசம்பந்தரின் திருவாக்கினை இப்பாடல் முகந்து நிற்கின்றது.

இவ்வாறாகிய நல்லொழுக்கத்தில் தலைநின்ற வராய குலச்சிறையார், முடிவில்லாத சிறப்பினையுடைய பாண்டி மன்னராம் நின்றசீர் நெடுமாறனாருக்கு அமைந்த சிறப்பு மிக்க அமைச்சர்களுள் மேம்பட்டவராய் வாழ்ந்தவராவர். இவர் பகை வர்களை அழித்து அரசருக்கு உறுதிபயக்கும் நிலையில் பணிபுரிந்து வருபவர்.

குறிப்புரை: ஞானசம்பந்தரின் திருக்கரம்படத் திருநீறு பூசப்பெறும் பாங்கும், வைகைக் கரையில், 'வாழ்க அந்தணர்' எனத் தொடங்கும் திருப்பாசுரத்தைச் செவிமடுக்கும் தவமும், பெண்ணிற் பெருந்தக்க மங்கையர்க்கரசியாரை வாழ்க்கைத் துணை நலமாகக் கொண்டிருக்கும் பெரும்பேறும், உழையிருந்து உறுதி கூறும் குலச்சிறையாரை அமைச் சராகக் கொண்டிருக்கும் பேறும், இவற்றின் பயனாக வீடு பேற்றை அடைந்துய்யும் பெருவாழ்வினைப் பெறும் புண்ணியமும் உடைய ராதல் பற்றி, 'ஈறில் சீர்த் தென்னவன்' என்றார். இம்மன்னன் நின்றசீர் நெடுமாறன் காலம் கி. பி. 640-680 வரை ஆகும். ஒன்னலார் - பகைவர்.

இவ்வாறாய செயற்பாட்டினை உடையராகிய அப்பெருந்தகையார், கங்கையைத் திருச்சடையில் கொண்ட சிவபெரு மானாரின் திருவடிகளையே போற்றிவரும் இயல்பினை உடையார். யாண்டும் நிலவிய சிறப்பினை உடைய மங்கையர்க்கரசியாரின் பொருந்திய திருத்தொண்டினுக்கு உறுதுணையாக நிற்கும் உண்மைத் தொண்டரும் ஆவர்.

குறிப்புரை: பாய - பரந்த: நிலவிய.

இழிந்த குணம் உடைய சமணர்களின் பொய்ம்மைகளை நீக்கவும், பாண்டியநாடு திருநீற்றுநெறியினைப் போற்றி வளர்க்கவும், பொருந்திய காழிப்பதியின் வள்ளலாராகிய திருஞானசம்பந்தரின் அழகிய திருவடிமலர்களைத் தம் தலையில் சூடி மகிழவும் வாழ்ந்த சிறப்பினை உடையவர்.

குறிப்புரை: புன்னயம் - இழிந்த குணம். அருகந்தர் - சமணர்.

பாண்டியன் உற்ற வெப்பு நீக்கம் முதலாக நேர்ந்த மூவகை வாதங்களிலும் தோல்வியுற்ற சமணர்களை, வலிய கழுமரத்தில், அவர்கள் இதுகாறும் செய்து வந்த தீமைகளினின்றும் நீங்க, அதன்கண் ஏற்றுவித்த குலச்சிறையாரின் ஆற்றலை, இதுகாறும் எவ்வகையில் போற்றி செய்து வணங்கினேன்? ஒருவகையிலும் போற்றி செய்தேனல்லேன். இனி நான்மறைகளிலும் கூறப்பெற்ற அறங்களைப் போற்றி மகிழும் பெருமிழலைக் குறும்பரின் திருவடிகளைப் போற்றத் தொடங்குகின்றேன்.

குறிப்புரை: சமணர்கள் ஞானசம்பந்தரோடு ஏற்ற வாதங்கள் மூன்றாம். அவை பாண்டியனின் வெப்பு நீக்கலுற்றமை, நெருப்பி லிட்ட ஏடு பசுமையாக இருக்கச் செய்தமை, ஆற்றிலிட்ட ஏடு எதிர் வரச் செய்தமை ஆகிய மூன்றுமாம். இம்மூன்று வாதங்களிலும் தோற்ற தோடன்றி, அவர்களின் எண்ணமும் சொற்களும் செய்கைகளும் கொடியனவாகவும் இருத்தலின் அத்தகைய தீங்குகளினின்றும் அவர்கள் நீங்குதற்கு அவர்களே தாம் கூறியவாறு கழுவேற்றுவித் தமையின், 'தீது நீங்கிட ஏற்றுவித்தார்' என்றார். 'நினைந்துருகும் அடியாரை நையவைத்தார், நில்லாமே தீவினைகள் நீங்கவைத்தார்' (தி. 6 ப. 14 பா. 1) எனவரும் திருவாக்கும் காண்க.


This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history