சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
திருஞான சம்பந்த சுவாமிகள்  

12 -ஆம் திருமுறை   12.280  
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
 
இவ்வுலகில் நான்மறைகளின் நெறிகள் தழைத்து ஓங்கவும், அவற்றுள் மேலாய சைவத் துறைகள் நிலைபெற்று விளங் கவும், உலகுயிர்கள் வழிவழியாகத் தழைத்துச் செழித்து விளங்கவும், தூய திருவாய் மலர்ந்து அழுதவரான, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றியருளிய திருஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளைத் தலைமேற் கொண்டு போற்றி, அம்மலரடிகளின் துணையால் அப்பெருமான் செய்த திருத்தொண்டின் இயல்புகளை எடுத்துச் சொல்லுவோம். *** நான்மறைகள் என்பன அறம் முதலிய நாற்பொருள் களையும் பொதுப்படக் கூறுவன. சைவநெறி என்பது வீட்டு நெறியை அடைதற்குரிய புற (சரியை), அக (கிரியை), ஒன்றிய (யோக) வழிபாடுகளால் அடையத்தகும் ஞான நெறியைச் சிறப்பாக எடுத்துக் கூறுவது. ஆதலின் மறைகளைப் பொது என்றும், சைவ நெறியைச் சிறப்பு என்றும் கூறுவர். இனி, நான்மறைகள் உலகர்க்கும், சைவ நெறியை விளக்கிக் கூறும் ஆகமங்கள் அருள் பதிவுடையார்க்கும் (சத்திநிபாதர்) அருளப்பட்டன என்றும் கூறுவர். 'வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல், ஓதும் பொதுவும் சிறப்பும்என் றுள்ளன' (தி. 10 பா. 2362) 'வேதம் பசுஅதன்பால் மெய்யா கமம்' (தனிப் பாடல்) எனவரும் திருவாக்குகளும் காண்க.
மறைகள் இறைவனை இன்ன தன்மையன் என்றறியவொண் ணாதவன் என்றே கூற, சைவநெறி அப்பெருமானை இன்னதன்மை யன் என்றும், இவ்வகையில் அறிந்து உணர்தற்குரியவன் என்றும் கூறும் உயர்நெறியாக விளங்குவதென்றும் கூறுவர். அது பற்றியே 'மிகுசைவத் துறை' என்றார். பூதம் - உயிர்க் கூட்டம்.

வளருந் தன்மை வாய்ந்த பிறைச் சந்திரனைத் தலையிலும், சிலம்பைத் திருவடிகளிலும் சூடிய சிவபெருமானின் நிலைபெற்ற சைவத் துறையில், வழிவழியாய் வந்த குடியான சோழரின் காவிரியாறு வளம் செய்கின்ற நாடு பொலிவு பெறும்படி நிலை பெற்றுள்ள பதியே, அழியாத மதிலின் அருகே மேகங்கள் வந்து நெருங்கும் திருக்கழுமலம் என்னும் சீகாழிப் பதியாகும். *** கழுமலம் என்பது சீகாழியின் பன்னிரண்டு பெயர் களுள் ஒன்று.

மறைகளை ஓதிவரும் சிறுவர்கள், அரிய மறை களை ஓதுகின்ற ஒலியுடன் வளர்கின்ற பாக்கு மரங்களின் செழுமை யான சோலைகள் புறத்தே சூழ, ஒப்பில்லாமல் ஓங்குதலால், அப் பதிதான், ஊழிக்காலத்தில் மிதப்பது மட்டுமன்றி எக்காலத்துமே கடலில் மிதப்பதாகும் என்ற தோற்றத்தைப் பொருந்தியுள்ளதாகும். *** சூழ்ந்துள்ள சோலைகளின் நிறத்தாலும், மறைகளின் முழக்காலும், கடலை ஒத்தலின், காழிப்பதி கடலில் மிதப்பது போல்வ தாயிற்று.

திருமாலும், நான்முகனும் முதலிய தேவர்கள் அடங்குமாறு மேலே எழும் பல நீர்ப் பெருக்குகள், விரிந்த கதிர்களை யுடைய பெரிய மணிகள் அழுந்திய மேடைகளின் மீது வீசும் அலைகளால் உண்டான கீற்றுகள், புறமதிலின் மருங்கினில் நிரல்பட அமைந்திருப்பவை, பொங்கும் பாற்கடலைக் கடைந்த காலத்தில் மந்தர மலையை வரிவரியாகச் சுற்றிய வாசுகி என்ற பாம்பின் வடத்தைப் போல விளங்கும். *** காழி நகரிலுள்ள மதில்மேடைகள் மந்தர மலையை யும், அவற்றில் படிந்து நிற்கும் நீர்ப்பெருக்காலாய கீற்றுக்கள் அம் மலையைச் சுற்றிய பாம்பினையும் போன்றன. பதணம் - மதிலின் மேலிடமான மேடைகள்.

: கரிய நீர் நிறைந்த கடலில் மலர்கின்ற ஒரு கதிரவன் என எண்ணி, வளம் மிக்க மணம் கொண்ட மருத நிலத்தின் புறத்தே, மணம் கமழும் பசிய இலைகளிடையே, நெருங்கிய இதழ்களுடன் விளங்கும் நீர்ப் பூவான செந்தாமரை மலர்கள் மலர்ந்ததால், இள ஞாயிறு பல தோன்றினாற் போன்ற தோற்றம் கொண்டனவான பல நல்ல நீர்நிலைகள் அங்கு எங்கும் விளங்கின. *** புறம்பணை - மருத நிலத்தில் வெளிப்பக்கம். தளம் - இதழ். இலஞ்சி - பொய்கை. இலஞ்சி கடல் எனவும், செந்தாமரை பரிதி எனவும் விளங்குகின்றன.

: மனத்தில் கொண்ட மறை ஒழுக்கத்தை உடைய மறையவர் செய்யும் ஓமப் புகைகளின் படலங்களால் இரவும், கிளர்ச்சி பெற்ற திருநீற்றின் ஒளியால் பொருந்திய நண்பகலுமாய் எக்காலத்தும் மிக்கு விளங்கி, எல்லை அளந்தறியப்படாத பல ஊழிகளிலும் நிலைபெற்றிருப்பதால், அகன்ற உலகில் பெருமை பொருந்த விளங்கிவரும் அப்பழம்பதிக்கு, வேறு இரவும் பகலும் வேண்டப்படாத மிகையாகும். *** இரவும் பகலுமாய காலநிலை உலகியல் வழிப்பட்டது. மாயையின் விளைவாயது. காழிப் பதியோ அருள் வழிப்பட்டதாகும். ஆதலின் அந்நகருக்கு அருள் வயத்ததாய ஓமப் புகையும், திருநீற்று ஒளியுமே இரவையும் பகலையும் விளைவிக்கத் தக்கன; ஆதலின் நாம் காணும் இரவும் பகலும் மிகை என்றார்.

பரந்த விளைவுடன் கூடிய வயல்களில் தோன்றிய சிவந்த தாமரை மலராய பெருகிய தீயில், அவ்வயல் வரம்பில் வளர்ந்த தேமா மரத்தின் பழம் விண்டதால் வெளிப்படும் சாறான நறு நெய்யா னது, நீண்ட இலைநுனியின் மூலம் இடையீடின்றி ஒழுகுதலால், அங்குள்ள மக்களே அன்றி, மரங்களும் வேள்வியைச் செய்யும் இயல்புடையன என எண்ணுமாறு அத்திருப்பதி விளங்கியது. *** விளைவயல் - வேள்வி செய்யும் இடம். தாமரை - வேள்வித் தீ. மரங்களில் சாறு - ஓமநெய். மாவிலையின் நுனி - ஓமத் துடுப்பு.

கதிரவன் கடலில் மறைந்த பின்பு, இரவில் தோன்றி விளங்கும் வெண்மையான மதியம், சோலைகள் தோறும் புகுந்து வெளிப்பட்டுத் தோன்றும் பொழுது, அடர்ந்த மரங்களினிடையே சேர்ந்து, அவற்றின் தேனில் தோய்ந்தும், மகரந்தங்களை அளாவியும் இங்ஙனம் நெடுநேரம் பயின்றதால், மாலையில் தோன்றும் சிவந்த ஒளியையுடைய சந்திரனைப்போல் தோன்றி விளங்கும். *** சந்திரன் மாலையில் தோன்றும் பொழுது சிவந்தும், பின் வெள்ளிதாயும் விளங்கும். ஆனால் இப்பதியில் தோன்றும் சந்தி ரனோ சோலைக்கண்ணுள்ள தேனையும் மகரந்தப் பொடிகளையும் அளாவி வருதலால், எஞ்ஞான்றும் சிவந்து விளங்குகின்றது.

அழகிய அத்திருப்பதியில், மணம் கமழும் தாமரை யும், அந்தணர்களைப் போல், புற இதழ்களையும், நூலையும் தாங்கிக் கொண்டு, தூய்மையுடைய நுண்மையான துகள்களை அணிந்து, துளித்து வருகின்ற நீர் ததும்பி, தேன் பொருந்த வரும் வண்டின் இசை யால் இனிய சாமவேத கீதத்தைப் பாடும். *** அந்தணர்களுக்கு உரிய அடையாள மாலை தாமரை மாலையாகும். அந்தணர்க்காகுங்கால்:- புல்லிதழ் - கருமை இதழ்களாலாய பவித்திரம்; நூல் - பூணூல்; நுண்துகள் - திருநீறு; கண்ணீர் - அன்பினால் இன்பமார்ந்திருப்பதால் வரும் கண்ணீர்; சாமம் பாடுதல் - சாம கீதத்தைப் பாடுதல். தாமரைக்காகுங்கால்:- புல்லிதழ் - புறவிதழ்; நூல் - அதன் தண்டின் நூல்; நுண்துகள் - மகரந்தம்; கண்ணீர்- (கள் + நீர்) தேனாகிய நீர்; சாமம் பாடுதல் - வண்டு இசைத்தல்.

அணிந்த நீண்ட பொன்னால் ஆய குழைகள் காதில் அசைய, அழகிய பட்டுடையின் தானையினைப் பின் பக்க மாய்ச் செருகி, அந்தணர்கள் தமக்குரிய தொழிலாய தீ வளர்க்கும் வேதிகையினை மெழுகியும், வெண்மை நிறமுடைய பொடியைக் கொண்டு கோலம் இட்டும், ஒலி பொருந்திய வானில் எழும் மேகம் போன்ற கூந்தலையுடைய, ஒளி பொருந்திய அருந்ததியின் கற்பு வாய்க்கப் பெற்ற வாழ்க்கைத் துணைவியாராகிய குலமகளிர் நிரம்பிய நல்வளத்தால் மாளிகைகள் விளக்கம் பெற்று விளங்கின. மனைக்கு விளக்கம் மடவார் ஆவர். அவர் தாமும் கண வரின் கருத்தின் வழி நின்றொழுகும் கற்பினராயின், அவ்வில்வாழ்க் கையின் நலமும் வளமும் சொல்லப் போமோ? இவ்வரிய விளக் கத்தை அப்பதி பெற்று நிற்கின்றது.

அப்பதியிலுள்ள தெருக்கள் தொறும், வேள்வி வேட்குங்கால், தத்தம் பெற்றோர்கள் செயத்தகும் செயற்பாடுகளைத் தாம் விளையாடும் இடங்களில் எல்லாம் மண்ணாகிய புழுதி பொருந்தச் செய்து, பொன்னால் ஆன கிண்கிணிகள் ஒலிக்க, உருள் (சக்கரம்) பூட்டிய அழகிய சிறு தேர்களை ஊர்ந்து, அதனால் எழும் பிய மண் தூசி படிய விளையாடும் சிறுவர்கள் நெருங்கியுள்ளனர். பண்ணை - விளையாடும் இடம். பூழி - புழுதி : மண்.

ஒளி பொருந்திய நீண்ட மணிகள் பதித்த தெருக்களின் வெண்ணிறச் சுண்ணச் சாந்தால் இயன்ற மாளிகைகள், மேக மண்டலத்தைத் தொடுமாறு நீண்ட நாசிகள் தோறும் கட்டிய கொடிகளால் இருள் பரவியுள்ள இரவில், விண்மீன்கள் என்னும் புதிய பூக்கள் பூப்பதற்குப் பொருந்திய பகற் பொழுதில் பல நிறங்களுடன் நீண்ட வானத்தில் தளிர்ப்பதைப் போன்று பக்கங்களில் எல்லாம் நெருங்கியுள்ளன. நாசி - மாளிகையின் உச்சியில் கொடிகள் கட்டுதற்கென அமைந்த உறுப்பு. மாளிகைகள் வெண்சுதையால் இயன்றவை. அவற் றில் மணிகள் பதிக்கப்பட்டுள்ளன. அம்மாளிகைகளின் உச்சியில் பல் வேறு நிறமுடைய கொடிகள் கட்டப்பெற்றுள்ளன. இவையே இப் பாடற் கருவாம். மாளிகைகளின் வெண்ணிறச் சாந்து பகல் செய்கின் றது. அதன் கண் பதிக்கப்பட்டிருக்கும் மணிகள் விண்மீன்களென உள்ளன. இவை இரவிலேயே காண்பதற்குரியன. இவ்விண்மீன் களாய மலர்கள் பலவும் இரவில் மலர்தற்கு ஏதுவாக அக்கொடிகள் விசும்பில் தளிர்த்துள்ளன என்கின்றார் ஆசிரியர்.

அப்பதியின் நீர் மடைகள் எங்கும், மணிகளின் குவியல்கள் உள்ளன. வயல்களில் எங்கும் நீர் வெள்ளத்துடன் கயல் மீன்களின் கூட்டங்கள் உள்ளன. அங்குள்ள வயல்களின் அருகி லுள்ள இடங்களில் பூக்குவியல்கள் உள்ளன. அவற்றின் வெளியில் எங்கும் வேள்விகளின் பொலிவுகள் நிரம்பியுள்ளன. சிறுவர்க்கு மறை பயிற்றும் பள்ளிகள் எங்கும், கலைகளின் சூழல்கள் விளங்கியுள்ளன. எழுச்சிமிக்க சோலைகள் எங்கும், ஒலிக்கும் வண்டுகளின் கூட்டங்கள் உள்ளன. இச்சோலைகளின் இடம் எங்கும், மறை முனிவர்களின் கூட் டங்கள் உள்ளன. மதில்கள் எங்கும், தவழ்கின்ற மேகங்கள் உள்ளன. மடை - வயல்களிலுள்ள நீர் பாய்தற்கும் வடிதற்கும் உரிய மடைகள்.

அத்திருப்பதியானது, பிரமபுரம், வேணுபுரம், பெரியபுகலி, வெங்குரு, நீரினுள் ஒப்பில்லாது விளங்கும் திருத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், முன்வரும் புறவம், சண்பை நகர், வளரும் காழி, கொச்சை வயம், போற்றுகின்ற திருக்கழுமலம் என்னும் பன்னிரண்டு திருப்பெயர்களைக் கொண்டதாகும்.
குறிப்புரை

அப்பதியில் அந்தணர்களின் குடியில் வந்த முதன்மை உடையவரும், குற்றம் தீர்ந்த மறைகள் கூறியவாறு ஒழுகும் ஒழுக்கத்தை உடையவரும், கவுணியர் கோத்திரமும் அதன் உள் நெறி வகைகளாகக் கூறப் பெறுவனவும் மேன்மை அடையுமாறு தோன்றிய வருமான 'சிவபாத இருதயர்' என்பார். அவர் இவ்வுலகம் வாழும் பொருட்டுத் தவம் செய்யும் இயல்புடையவராய் வாழ்ந்து வந்தார். அந்தணர் - குடி மரபு. கவுணியர் கோத்திரம் - அதன் உட்பிரிவு. செப்புநெறி - அதன் உட்பிரிவுகளாகக் கூறப்பெறும் சூத்திரம், பிரவரம் முதலியன.

அவருடைய மனைவியார், அவருக்குப் பொருந் திய அந்தணர் மரபில் வந்தவர். எல்லாவுலகமும் பெறுதற்கு அரிய பெருமையையுடையவர். அழகுடைய 'பகவதியார்' என்று போற்றப் படுகின்ற பெயரையுடையவர். கற்பால் மேன்மையுறும் சிறப்பால் தம் கணவரின் கருத்துக்கு ஏற்ப அமைந்து ஒழுகுபவர். 'வாய்ந்த மறைமரபு' என்றார், சிவபாத இருதயரின் குலம், குணம் முதலானவற்றுக்கெல்லாம் பொருந்தியிருத்தல் பற்றி. கணவர் கருத்தமைதல் - கணவனார்தம் திருவுள்ளத்திற்கு ஏற்ப அமைந்து ஒழுகும் வாழ்க்கையராய் வாழ்தல்.

தாய்வழி தந்தைவழி ஆகிய இருமரபுகளும் சைவ நெறிவந்த உரிமையுடைமையின், அவ்விருவரும், பாம்பை அணிந்த சடையையுடைய சிவபெருமானின் திருவடிகளை அன்றி மற்றொன் றையும் பொருள் என்று உணராதவராய், மறை நெறிப்படி மனை வாழ்க்கைத் திறத்தில் யாவரும் வியக்குமாறு வாழ்ந்து வரும் நாள்களில்,
குறிப்புரை

உலகில் கீழ்மக்களான சமணர், புத்தர் என்ற இவர்களின் பொய்ச் சமயங்கள் மிகுதியாய் வளர, அதனால் பழைய அரிய மறை வழக்கங்கள் சுருங்கி, அடியார்களிடத்து, திருநீற்றுச் சாதனத்தின் விளக்கமானது போற்றப்பெறாது மறையக் கண்டு, குற்றம் இல்லாத சிறப்புடைய சிவபாத இருதயர் பெரிதும் வருத்தம் அடைந்தார். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபுடையன. பல்லவன் ஒரு புறமும், பாண்டியன் ஒரு புறமுமாக இருந்து, சமண சமயச் சார்பினால் தாக்குண்டு, தம்மையும், தம் நாட்டையும் கீழ்ப்படுத்தி யிருந்தமை சம்பந்தர், நாவரசர் ஆகியோர்தம் வரலாற்றால் அறிய முடிகின்றது. புத்தச் சார்பும் இருந்தமை புத்த நந்தியால் அறிய முடிகின்றது. இவ்வகையிலேயே சிவபாத இருதயர் பெரிதும் வருந்த லாயினர்.

இல்வாழ்க்கையில் இன்பம் அளிக்கும் மகவைப் பெறும் விருப்பத்தைக் கொண்ட சிவபாத இருதயர் அந்நிலையில் ஊன்றி நின்று, சிவபெருமானின் ஆடும் திருவடிப்போதுகளை நினைந்து, முன்னர்ப் பரசமயங்களின் தீமையைப் போக்கித் திருநீற் றின் விளக்கத்தை மிகுதிப் படுத்தும் அழகிய அணிகளை அணியும் திருமகனைப் பெறும் பொருட்டுத் தவத்தைச் செய்தார். : 'இட்டுந் தொட்டும் கவ்வியும் துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறையில்லைத் தாம் வாழுநாளே' (புறநா. 188) என்பதால் தமக்கும் உலகுயிர்க்கும் பேரின்பம் கிட்ட மகவு இருத்தல் இன்றி யமையாததாயிற்று.

பெருகி எழும் அன்பால், திருநிலை நாயகி அம் மையாருடன் திருத்தோணியில் வீற்றிருந்தருளுபவரான தோணியப் பரின் சேவடிகளின் கீழ் வணங்கி, கணவரின் கருத்து முற்றுப் பெறும்படி பரவும் பகவதியாரின் மணிவயிற்றில், உருவம் தெரிய வரும் கருப்பமான பெரும் பிள்ளைப் பேறு உலகம் உய்ய உளதாக,
குறிப்புரை

ஆளும் தன்மையுடைய திருநிலை நாயகியா ருடன் தோணியப்பரின் திருவருளையும் போற்றிக் கருக்கொண்ட காரணத்தினால் மனத்தில் பெருகும் மகிழ்ச்சியுடன், தங்களுக்குரிய மறையின் முறைப்படி செய்யும் செயற்பாடுகளையெல்லாம், நாளினை முதன்மையாகக் கொண்ட பத்துத் திங்களிலும் நன்மை உண்டாகுமாறு உறவினர் மகிழ்ந்து செய்ய, இன்பம் உண்டாகும் அத்தகைய நாள் களில்,
குறிப்புரை

கதிரவன் முதலான கோள்கள் எல்லாம் தத்தமக் குரிய வலிமை மிகும் இராசிகளில் நிற்கவும், சோதிட நூலார் விரும்பும் நல்ல வேளை வரவும், செம்மை மிக்க திருவாதிரை நாள் எண்திசையும் விளக்கம் அடையவும், மற்ற சமயங்களின் தருக்கிய நிலை ஒழியவும், முதன்மையான சைவத் துறையும் வைதிகத் துறையும் தழைத்து ஓங்கவும், அருக்கன் - கதிரவன். ஓரை பொழுது: இரண்டரை நாழிகையைக் கொண்டது. திரு - சிவம். கிளரும் - உவந்தருளும்: 'ஆதிரை நாள் உகந்தான்' (தி. 4. ப. 4 பா. 6) எனச் சிவபெருமானைக் குறிப்பதும் காண்க. திசைவிளங்க - பிள்ளையார் அந்நாளில் தோன்றி இருத்தலின் அவர் புகழ் எண் திசைகளிலும் விளக்கம் பெறுவதாயிற்று.

அடியவர்களின் உள்ளம் களிப்படையவும், தூய திருநீற்றின் நெறியானது எண்திசைகளிலும் இணையின்றி நடக்கவும், ஏழ் உலகங்களில் உள்ள உயிர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக் கவும், தேவரினத்தவர் மிகுவியப்புடன் நோக்கவும், அந்தணர்களின் வேள்விகள் பெருகவும், வண்மையுடைய தமிழ்செய்த தவம் முற்றுப் பெறவும், பெரிய தவத்தைச் செய்பவர்களின் செயல் முற்றுப் பெறவும்,
குறிப்புரை

எண்திசைகளின் பெருமைகள் எல்லாவற்றிலும், தென்திசையின் பெருமையே வெற்றி பெற்று மேன்மை அடையவும், மேல் உலகம், கீழ் உலகம் என்பனவற்றில், இம்மண்ணுலகமே சிறப் படைந்து வெல்லவும், அசைதல் இல்லாத செழுந்தமிழே மற்ற மொழித் துறைகளின் வழக்குகளை வெல்லவும், இசையறிவும் மெய்யறிவும் பொருந்தும் நிலை பெருகவும்,
குறிப்புரை

உயிர்கள் உய்தி பெறுதற்கென இறைவன் செய்யும் ஐந்தொழில்களில் அடிநிலையான படைப்புத் தொழில் தலைமையும் தகவும் பெறவும், காலக் கூறுபாட்டில் நிகழ்விலும் எதிர்விலும் வருகின்ற குற்றங்கள் நீங்கவும், ஒளிபொருந்திய மணிகளையுடைய வீதிகள் சிறந்தோங்கும் சீகாழிப் பதி வாழவும், உயிர்களை அடிமை யாகக் கொண்டு திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெரு மானின் அருளானது மேன்மேலும் தழையவும், அடி; முதல். இறைவன் செய்யும் ஐந்தொழில்க ளில் அடிநிலையான படைப்பு, உயிர்களின் வினை வயத்தாலேயாம். ஆனால் பிள்ளையார் தோன்றியது அருள் வயத்தாலேயாம். அவர்தம் வாழ்வின் நிறைவில் ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக! என்றருளித் தம்மோடு பிறரையும் சிவச் சார்பு பெற அழைத்துச் சென்றமையால் அப்பிறப்புத் தலைமையும் தகவும் பெறுவதாயிற்று.

பயனில் செயல்களையே செய்து வரும் புல்ல றிவை உடைய சமண் சமயம் முதலிய பிற சமயங்களானவை எல்லாம் பிறப்பதற்கே தொழிலாக்கும் தீயநெறிகள் பலவும் பாழ்படவும், நல்ல ஊழிக்காலந் தோறும் தான் அழியாமல் மிதந்து நின்று தவநெறியைப் பெருகச் செய்கின்ற சண்பைத் திருநகரில், குற்றம் அற்ற இயங்கும் பொருள், இயங்காப் பொருள் என்ற வகையில் நிலவுகின்ற உயிர்கள் எல்லாம் சிவத்தன்மை பெருகச் செய்யும் ஆளுடைய பிள்ளையாரான ஞானசம்பந்தர் தோன்றியருளினார். இயங்கும் பொருள், இயங்காப் பொருள்களில் எல் லாம் பிள்ளையார் சிவம்பெருக்கி வாழ்ந்தமை 'ஞாலம் நின் புகழே மிகவேண்டுந் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே' ( தி. 3 ப. 108) 'எங்கும் அரன் நாமமே சூழ்க' (தி. 3 ப. 54. பா. 1) எனவரும் அவர்தம் திருவாக்குகளானும், திருவோத்தூரில் இருந்த ஆண்பனை, பெண்பனை களெல்லாம் நிறைவாகச் சிவமே கூடிய பெற்றியினாலும் அறியலாம். காழிப் பிள்ளையார் தோன்றியருளியதால் இன்ன இன்ன வளங்கள் வாய்ந்தன எனப் போற்றும் சேக்கிழார், இவ்வைந்து பாடல்களிலும் இருபத்தொரு வளங்களைக் குறித்தருளுகின்றார். இவற்றால் பிள்ளை யார் யாண்டும் சிவம்பெருக்கி வாழ்ந்தமை அறியலாம். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

அதுபொழுது அழகிய அக்கழுமலத்தில் எந்நெறி யிலிருப்பவர்களும் பக்கங்களில் பொருந்தும் வேறு இடம் இன்றி உடல் முழுதும் மயிர்க் கூச்செறியத் தம்மை அறியாமல் ஒப்பற்ற மகிழ்ச்சி மிகுவதாய ஓர் உவகை தோன்றக் கூறுவாராய், : எப்பெயரினோரும் - அறுவகைச் சமயத்தைச் சார்ந்த வர்களும் பிற இனத்தவர்களும்.

: சிவபெருமானின் திருவருளெனப் பெருகும் மனம் மகிழ்கின்ற தன்மை இங்கு இவ்வாறு நமக்கு வருவதற்குக் காரணம் யாது? என வினவுவார், கவுணியர் கோத்திரத்தில் ஒரு மகன் தோன்றினான், அங்ஙனம் அவன் அவதரித்ததன் நன்னிமித்தம் இது வாகும் என்று மனம் தெளிந்து அதிசயித்தார். முன், மனமகிழ்ச்சி பெருகுதற்குக் காரணம் என்ன? எனத் தமக்குள் வினவியவர்கள், பின் அதன் உண்மை தெரிந்து அதிசயித்தார்கள். இவ்விரண்டு பாடல்களும் ஒருமுடிபின.

: பூக்களின் மொட்டு அலர்வதால் தோன்றிய மணம் நிரம்பிய சோலைகள் எங்கும் தேன் பொருந்திய மகரந்தம் பரவுதலால் நெருங்கிய திசைகளிலெல்லாம் தூய்மையுடைய ஒளி விரியுமாறு அத்துகளை அடக்கிப் பெருமை பொருந்திய பொதிய மலையினின்றும் வருகின்ற தென்றல் காற்றும் அதுபொழுதே வந்து மென்மையாக வீசும். மகரந்தத்தால் ஒளிகுன்றிய சோலையில் தென்றல் வீசி, அம்மகரந்தத் துகளை யடக்கி ஒளிமிகச் செய்தது.

விண்ணுலகத்தவர்களும் மிகு விருப்புடன் ஒழி வில்லாது, பூஞ்சோலைகள் பூக்களைச் சொரிவதைப் போல மலர் மழையைப் பொழிந்து, நிலவுலகத்தில் வந்து, சீலம் வளரும் சீகாழிப் பதியில், பொருந்திய ஒழுக்கமுடைய அந்தணருடன் கூடி வேள்விச் செயல்களைச் செய்தனர்.
குறிப்புரை

சிவகணத் தலைவர்கள் உலகு உய்தற்கென ஞானசம்பந்தரைத் தோன்றச் செய்த சிவபெருமானின் திருவருளின் பெருமையைக் கண்டு, அதற்கு ஏற்ப நலங்கள் பலவற்றையும் செய்வாராயினர். மறை ஓதுபவர்கள், பிற பிற சொற்களைச் சொல்வா ராயினும், இடைவிடாது தாமே பெருகி எழும் மறை ஒலிகள் அவற் றின் மிக்கு எழும்.
குறிப்புரை

எல்லாத் திசைகளிலும் பலவகையான மரங்களும் கொடிகளும் பெருகித் தத்தம் பயன்களைத் தரலாயின. கலக்கமுடைய நீர்நிலையங்களும் தெளிவுடனும் குளிர்ச்சியுடனும் விளங்கின. விளங்கும் ஒளிகளையுடைய வானமும் களங்கம் நீங்கினது. மாறுபாடில்லாத பெரிய திசைகளில் எல்லாம் பறவைகளின் ஒலியே மிக்கிருப்பன. இங்ஙனம் எல்லாம் நன்மை பெருக விளங்கின.
குறிப்புரை

அழகிய இடங்கள் தோறும் இவ்வாறான விழாவின் மங்கலங்களால் பெருகும் சீகாழிப் பதியில், சங்குகள், ஒருமுகப் பறை, இருமுகப் பறை, வேறு பிற நரம்புக் கருவிகள், தாரை, சின்னம் முதலாய இசைக் கருவிகள், எங்கும் இயக்குபவர் இல்லாம லேயே ஒலித்தன. தெருக்களில் எல்லாம் நிறைந்த மங்கல ஒலிகளே ஒலிப்பனவாயின. படகம் - பேரி முதலிய ஒருமுகப் பறைகளும், முழவு முதலிய இருமுகப் பறைகளும்.

இப்பேருலகானது இத்தகைய பெருமகிழ்வை அடைய, அப்பிள்ளையாரைப் பெற்ற அந்தணரின் தலைவரான சிவபாத இருதயர், தம் இல்லத்தின் முன் பெருங்களிப்பும் வியப்பும், பொருந்த, இறைவர் அருளால் அரிய அழகிய மகனாரைப் பெற்றமை யால் பொருந்திய அணிகளைச் செய்வார் ஆயினார்.
குறிப்புரை

விருப்பம் மிக்க தம் மன மகிழ்ச்சியால் களிப்பு அடைவார். மேலே பூசப்படுகின்ற நெய்யாட்டு விழாச் செய்து மகிழ்ச்சி அடைவார். மகன் தோன்றியதன் காரணமாகச் செய்யத் தகும் மங்கலச் செயல்களின் ஒலிகளோடு, அவற்றிற்குரிய செயல்கள் பல வற்றையும் செய்வார். மகப்பேற்றின் பின் அத்தொடக்கு நீங்க நெய் அணி வித்து நீராடச் செய்வர். 'புதல்வர்ப் பயந்த புனிறுசேர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும்' (தொல். கற்பி யல். 5); 'கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி' (தொல். கற்பியல். 6); 'கரும்புடைக் கடுஞ்சூல் நம்குடிக்கு உதவி, நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ், விளங்குநகர் விளங்கக் கிடந்தோள்' (நற்றிணை 370); 'ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப் பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கை' (நற்றிணை 40) என வருங் கூற்றுக்களால் இச் செயல் முறை, பண்டு தொட்டே இருந்தமை புலனாகும். இதுவன்றி இறைவனிடத்தும் முனிவர் தேவர் முதலானோரிடத்தும் தாயும் சேயும் நலம் பெற்று வாழ வழிபாடு நிகழ்த்துதலும் அக்கால வழக்கமாகும். புதல்வன் முகங்காண்டல், ஐம்படைத் தாலி சூட்டல், பெயரிடுதல் போல்வனவும் அக்காலத்துச் செய்து வந்தமை தொல்காப்பியம் இளம்பூரணர்உரையால் அறிய முடிகின்றது. சாதக முறைப் பல சடங்கு - ஆண் மகவுக்குரிய 16 சடங்குகளுள் ஒன்று. சாத கன்மம் என்பர். அத்திர மந்திரத்தால் நூறு முறை ஓமம் செய்து, வாம மந்திரத்தால் மகவை முகமெதிர் நோக்கிப் பஞ்சப் பிரம மந்திரத்தால் உச்சி மோந்து, தற்புருடத்தினை வலக்காதிற் செலுத்துதல் இச்செயல் முறையாகும்.

சிறந்த அந்தணர் குல மங்கையர்கள் தம்மில் கலந்த பெருமகிழ்ச்சியுடன் சாயலையுடைய மயிலைப் போல, தூய அழகு டைய விளக்குகளால் ஒளியுடைய குழை முதலிய அணிகள் மின்ன, அழகான தம் மாளிகையை அழகுபெறச் செய்வார்கள்.
குறிப்புரை

நறுமணப் பொடிகளுடன் குளிர்ந்த மலர்த் தாதுக்களை வீசி உள்ளத்தில் நிறைந்த விருப்பத்துடன் பிள்ளையார் இந்நிலவுலகில் தோன்றியமையை மகிழ்வுடன் எங்கும் உரைப்பர். வெண்மையான முளைப் பாலிகைகளை மேடைதோறும் வைப்பார் கள். மணமுடைய புண்ணியப் புதுநீர் கொண்ட புதுக்குடங்களை நிரல்பட வைப்பர்.
குறிப்புரை

செம்பொன் முதலியவற்றை ஈந்து உவப்பார்கள். சிவனடியார்கள் அமுது செய்தற்கு வேண்டும் நலங்கள் பலவற்றை நாடிச் செய்வார்கள். புதிதாய் மலர்ந்த மணமலர் மாலைகளை அவற்றில் மொய்க்கும் வண்டுகளுடன் சேர்த்துக் கட்டுவார்கள். வேம் பின் தழை செருகுதல் முதலான காப்புத் தொழிலைச் செய்வார்கள். வண்டுகள், மலர்களில் அவற்றைத் தொடுக்கும் நிலை யிலும் இருந்தமை, மலர்களிலும் தேனையும் அவற்றில் வதிந்திருக் கும் இருக்கைச் சுவையையும் கருதியாம். அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் வதியும் வண்டுகளும் இருக்கும் போலும்! நிம்பம் - வேம்பு: அதன் இலைகளை வீட்டில் செருகுதல் காப்புக் கருதியாம்.

வெண்கடுகு முதலானவற்றைச் சேர்த்து அமைத்த புகையினாலும், நெய்யுடன் நல்ல மணமுடைய அகில் துண்டுகளால் உண்டாக்கப்பட்ட புகையாலும், விருப்பம் அளிக்கும் வேள்வித் தீயின் சிறந்த புகையாலும் கடவுள் தன்மை கமழ்கின்ற செயலைச் செய் வார்கள். ஐயவி - வெண் சிறுகடுகு, இதன் சாற்றை உடலில் தடவலும், இதன் புகையை நுகர்தலும் தீமை நீங்குதற்கு ஏதுவாம். நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்து (தி. 11 திருமுருகா. வரி 234) 'ஐயவிப் புகையும் ஆட்டி' என வருவனவற்றான் இவ்வழக்கம் பண்டு தொட்டே இருந்தமை புலனாகும்.

அத்தகைய நற்செயல்கள் பலவற்றையும் தேவரின் தலைவரான சிவபெருமான் திருவருளின் பெருமை மிகுமாறு, நன்மை பொருந்த, நான்மறைகளிலும் அவற்றுடன் தொடர்புடைய கற்ப சூத்திரம் முதலிய ஒழுக்க நூல்களிலும் பொருந்திய முறைப்படி, பிள்ளையார் தோன்றிய நாள் முதல் பத்து நாள்களிலும் செய்வித் தார்கள். கு-ரை: வேதங்களின் வழிவந்த ஒழுக்க நூல்களைக் கற்ப சூத்திரம் என்பர்.
குறிப்புரை

பெயர்சூட்டும் அழகிய நல்வினையைப் பிள் ளையார் தோன்றிய நாளிற்கு ஏற்பச் செய்வித்து, உலகிற்கு நலம் செய்யத் தோன்றும் இளஞாயிற்றைப் போலவும், தாமரையில் எழுந் தருளியிருக்கும் தனி முதலாம் முருகப் பெருமானைப் போலவும் விளங்கும் அப்பிள்ளையாரைத் தூய மணிகளை நிரல்பட அழுத்தி அழகு செய்யப்பட்ட தொட்டிலில் இட்டனர். நாள்பெற - தோன்றிய நாளிற்கு (விண்மீன்) ஏற்ப, இவ்வாறு பெயரிடுதல் வழக்கு எனினும் அப்பெயர் இன்னது என அறிதற்கு இயன்றிலது. சேம உதயப் பரிதி - உலகிற்கு நலம் தர எழும் கதிரவன். நலம் - ஒளியும் வெப்பமும். தாமரை மிசைத் தனிக்குழவி - முருகன். 'அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தில் வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந் தருளினானே' (கந்த புரா. திருவவ. பா. 96) எனவரும் கச்சியப்பர் திருவாக்கும் காண்க.

மிகப் பெரிய இமயமலையின் அரசன் பெற்ற கொடி போன்ற பார்வதியம்மையார், ஞானத்தை வழங்கியருளும் திருமார்பகத்தில் உளவாய இனிய பாலுடன் கலந்த அரிய சிவஞா னத்தைக் குழைத்து ஊட்டி அமுது செய்தருளவுள்ள அப்பிள்ளை யாரைப் பெற்ற அந்தணர் குல மாதரான பகவதியார், சிவபெரு மானின் திருவடிகளைப் போற்றும் அன்பே தம் திருமார்பகத்தில் பாலாய்ச் சுரக்க, அதனைத் திருவமுது செய்து அருளுமாறு பால் ஊட்டினார். உயிர்களுக்கு ஞானம் வழங்கும் மார்பகமாதலின் 'பேணுமுலை' என்றார். 'போகமார்த்த பூண்முலையாள்' (தி. 1 ப. 49 பா. 1) எனவரும் திருவாக்கும் காண்க.

கங்கையாறு நிலவும் சடையை உடைய சிவ பெருமான் திருவருளால் உலகைக் காத்தற்குரியார் இவராவர் எனத் தோன்றிய பெரியவரான பிள்ளையாருக்கு, மற்றும் பல காப்புகள் மிகையாகும் என, அவை எவற்றையும் விரும்பாதவராய்த் திருநீற்றை அவரின் நெற்றியில் அணிவித்து, அதனையே காப்பாகுமாறு செய்தார் பகவதியார். : 'மந்திரமாவது நீறு', (தி. 2 ப. 66 பா. 1) 'ஏலவுடம் பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு' (தி. 2 ப. 66 பா. 9) என இப்பிள்ளையார் பின்னர் அருளி இருப்பதும் காண்க. 'குழவி மருங்கினும் கிழவதாகும்' (தொல். புறத். 29) எனும் நூற்பாவால் பிள்ளைத் தமிழுக்குத் தோற் றுவாய் செய்தது தொல்காப்பியம். அம்மரபு வழிவந்த பிள்ளைத் தமிழும், ஆண்பாற்கென வகுத்த பருவங்கள் பத்தாம். அவற்றுள் ஆசிரியர் ஈண்டுக் குறிப்பன - காப்பு (பா. 43), தால் (பா. 44), செங் கீரை (பா. 45), சப்பாணி (பா. 46), வருகை (பா. 48), சிறுதேர், சிற்றில் (பா. 52) ஆகிய பருவங்களேயாம்.

சிறந்த பொருண்மையைக் கொண்டிருக்கும் மறைகளும், இனிய தமிழும் சிறப்புப் பெற வந்து தோன்றிய தலை வரான அப்பிள்ளையாரை, நற்றாய் முதலியோர் தம் மடியிலும், விளங்கும் மணிகளையுடைய இருக்கைகளிலும், தூய ஒளிவீசும் தொட்டிலிலும், உறங்குதற்கேற்ற மலர்ப் படுக்கையிலும் தாலாட்டுங் கால், அவர் தோன்றலாய் வாய்த்த பல நலங்களையும் எடுத்துப் பாராட்டி மகிழ்ந்தனர். : நற்றாய், செவிலித்தாய், கைத்தாய், பாலூட்டும் தாய், சீராட்டும் தாய் என அழைக்கப் பெறும் ஐவகைத் தாயரும் அடங்கத் 'தாயர்' எனக்கூறினார். ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓல் உறுத்துவாள், நொடிபயிற்றுவாள் கைத்தாய் எனச் செவிலியர் ஐவர் என்பர் நச்சி னார்க்கினியர்.

முறையாக வளர்ந்து வருகின்ற பருவந்தோறும் உரியவாறு வளர்ச்சி பெற்றுவரும் பிள்ளையார், அரிய மறைகள் தலையெடுக்குமாறு தலைமுடியை மேல் எடுத்துப் பெருமழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானுடைய திருத்தொண்டினை அல்லாது வேறொன்றையும் யாம் காணோம் எனக் காட்டுவார் போல், திருமுகமண்டலம் அசையச் செங்கீரை ஆடியருளினார். குன்றியிருந்த மறைவழக்குகள் மீண்டும் பொலிவு பெறப் பிள்ளையாரின் தோற்றம் காரணமாயிருத்தலின், 'அருமறை கள் தலை எடுப்ப' என்றார். 'ஒருதாள் உந்திஎழுந் திருகையும் ஒருங்கு பதித்து நிமிர்ந்து அருள் பொழிதிருமுகம் அசைய அசைந்தினிது ஆடுக செங்கீரை' (முத்துக். செங்கீரைப். 8) எனவரும் குமரகுருபர அடிக ளின் திருவாக்கால் செங்கீரை ஆடுதலின் இலக்கணம் விளங்கும்.

: 'யாம் சைவசமயம் அன்றிப் பிற சமயங்களை அறியோம்! ஆதலின் புறச் சமயத்தவர்களே! இவ்வுலகில் எதிர்ப்பட நாடாது அகன்று செல்லுங்கள்' என்று அழகிய கைகளைக் கொட்டுவதையும் சிவபெருமானிடத்து விருப்பம் மிகும் தாளத்தைப் பெறுவதற்காகக் கைகளை ஒத்துவதையும் காட்டுவன போல், தாமரை போன்ற சிவந்த கைகளால் அப்பிளையார் சப்பாணி கொட்டினார். பாணி - கை: சக - சேர்த்து. கைகள் இரண்டையும் சேர்த்துக் கொட்டுவது சப்பாணி எனப்படும்

இறைவனின் மறைநெறிகளுக்கு மாறுபட்ட புறச் சமயங்கள் வீழ்ந்து நிலை குலையுமாறு, பெரிய வானத்தினின்றும் போந்த பெரிய கங்கையாறு பொருந்திய சடையையுடைய சிவபெரு மான் ஞானம் தந்தருளுதற்குரிய அப்பிள்ளையார், சந்திரன் தவழும் மாளிகையின் முன் பக்கத்தில் தவழ்ந்தருளினார். கதிதவழ்தல் - ஓங்கிநின்ற நிலையிலிருந்து மாறி, கீழே தாழ்ந்து செல்லும் நிலை பெறல். பிறசமயங்கள் தளர்வுற்றுத் தாழப் பிள்ளையார் தவழ்ந் தருளினார்.

தம்மைச் சூழநிற்கும் அந்தண மகளிரும் தோழியரும் 'சீகாழிப் பதியினர் யாவர்க்கும் சிறப்புச் செய்யும் செல் வமே! கவுணிய குலத்தவரின் கற்பகமே!' எனப் பாராட்டி, ஏழிசையும், மறைகள் முதலான பல கலைகளும், எவ்வுயிர்களும், தனித்தனியே வாழுமாறு வந்து தோன்றிய அப் பிள்ளையாரை 'வருக வருக' என்று அழைக்க,
குறிப்புரை

காழிப்பிள்ளையார் அங்ஙனம் அழைத்தவரின் செழுமையான முகங்களைத் தம் புன்முறுவலால் மலரச் செய்தும், அதனால் உண்டாகும் மகிழ்ச்சி மேன்மேலும் பெருக, அவர்களின் உடல் மீது பொருந்துமாறு உந்தியும், உள்ளம் உருகிக் கரைந்து நிலை கொள்ளாது இளகும்படி உடன் அணைத்துத் தழுவியும், பெருக் கெடுக்கும் இன்பம் பொருந்துமாறு அளித்தருளினர். முகம் நோக்கல், திருவடியால் உந்தல், மெய் தீண்டல் ஆகியன காண்பார்க்கு மகிழ்ச்சி ஊட்டுவனவாகும். 'மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம், மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு' (குறள், 65) எனவரும் திருவாக்கும் காண்க.

முற்கூறியவாறு வளரும் பருவங்களின் முறை யாக ஓராண்டு நிறைவதற்குள், மலர்களில் வரிவண்டுகள் ஒலிக்கும் கருமையான மெல்லிய சுருண்ட தலைமயிருடன் அசையச் செம்மை யாக நேர் நின்று விளங்கும் ஒலியைக் கிண்கிணிகள் ஒலிக்கக் கீழான நெறிகளைக் காட்டுகின்ற சமயங்கள் தள்ளாடி ஒழியுமாறு தாமும் தளர்நடை பயின்றருளினார்.
குறிப்புரை

வளர்ப்புத்தாயரின் கைகளைப் பற்றி நடத்தலால், தளர் நடையின் தளர்ச்சி நீங்கி, ஒளியும் அழகும் கொண்ட மணிகள் இழைத்த சதங்கைகள் கட்டிய வடம் சுற்றிய சிறிய அடிகள் நிலத்திற் பொருந்தும்படி, பருவமுறையில் ஓராண்டு நிறைந்து மேற்செல்ல, பிள்ளையார் நடந்து சென்றருளவும் விளையாடவும் தொடங்கினார்.
குறிப்புரை

அழகிய சிறுதேரைப் பற்றித் தொடர்ந்து உருட்டிச் செல்ல, செழிய மணலால் சிற்றில் கட்டி விளையாடும் நல்ல நெற்றியை உடைய பேதைப் பெண்களிடத்தில் நடந்தும் ஓடியும் அச்சிற்றில்களை அழித்து விளையாடியும், சிறிய வியர்வைத் துளிகள் உடற்கண் அரும்ப, அதனுடன் திருநீற்றை அணிந்து விளங்கும் திருமேனி அவ்வீதியில் ஒளிபரப்ப வந்து, இவ்வாறாக அவர் வளர்ந்து வரும் நாளில்,
குறிப்புரை

திருநிலை நாயகியாருடன் இருந்து, வளர்ந்து வரும் சீகாழியில் வீற்றிருந்தருளும் மதி நிலவும் சடையையுடைய சிவபெருமானின் திருவருட்பயனுக்குச் செய்யும் தவத்தின் வழித் தோன்றிய முளையைப் போன்று வளர்ந்து, அரிய மறைகளால் உலகம் உய்யுமாறு எம்பெருமானான பிள்ளையாருக்கு இரண்டாண்டின் மேல் ஓராண்டு நிறை வெய்தவும்.
குறிப்புரை

திருநிலை நாயகியாருடன் இருந்து, வளர்ந்து வரும் சீகாழியில் வீற்றிருந்தருளும் மதி நிலவும் சடையையுடைய சிவபெருமானின் திருவருட்பயனுக்குச் செய்யும் தவத்தின் வழித் தோன்றிய முளையைப் போன்று வளர்ந்து, அரிய மறைகளால் உலகம் உய்யுமாறு எம்பெருமானான பிள்ளையாருக்கு இரண்டாண்டின் மேல் ஓராண்டு நிறை வெய்தவும். மறை, எழுதாக் கிளவி ஆதலின் 'நாவாண்ட பல கலையும்' என்றார். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

முன்னைய நிலையில் திருவடியை மறவாத பாங்கு உடையவரை, மிகுதவத்தோராய சிவபாத இருதயருக்கு இறைவன் தந்தருளினாராக, அதன்வழி வாய்த்த திருத்தொண்டின் நிலையை உலகத்துக்கு அருள்வதற்கெனத் தோன்றிய அப்பிள்ளை யார், சிவபெருமானையே தொடர்ந்து நின்ற நிலை நீங்காது இருந்தமையின், பிரிந்து போந்த பிரிவுணர்வு ஓரொருகால் எழ, அதனால் அச்சம் கொண்டவரைப் போல் அயலான ஒரு குறிப்புடன் அழுவார். '. . . . . . . . . . . . . . . . . திருந்தடி மறக்குமா றிலாதவென்னை, மையல்செய்திம் மண்ணின்மேல்

மேதக்க நிலையில் வளர்ந்து வரும் இந்நாள்களில் ஒருநாள், மறைவழிப்பட்ட நெறியில் செயத்தகும் காலை வழிபாடு களை முடிப்பதற்காக முதலில் நீராடும் பொருட்டுத் தந்தையார் புறப்படும் பொழுது, தம் பெருமானின் அருள்கூடப் பெறுதலால், திருமனையின் ஒளியும் அழகும் உடைய முன்றிலில், பிள்ளையார் தாமும் தந்தையாரைத் தொடர்ந்து அழுதவாறு பின்சென்றார்.
குறிப்புரை

தம் பின் தொடர்ந்து வந்த பிள்ளையாரைத் தந்தையாரான சிவபாத இருதயர் பார்த்து, தாம் மேற் செல்வதை நிறுத்திச் சினம் கொண்டவர் போல் காட்டி, தம் பின் வருவதை விலக்கவும், ஒளி மிக்க பொன்னால் ஆய சிறு கிண்கிணிகள் அணிந்த திருவடிகளை நிலத்தில் கொட்டி, மீளாது நிற்க, 'உன் செயல் இதுவானால், வருக' எனக் கூறித் தம்முடனே அழைத்துச் சென்றார். தம் இச்சையில் விடாது பற்றி நிற்கும் ஞானக் குழந்தை, தன் செயலை மிகு அன்புடன் (செல்லமாகத்) தெரிவித்துக்கொள்ளும் நிலை இதுவாகும்.

அறநெறியில் சிறந்த சிவபாத இருதயர், ஊழி முடிவில் தோன்றும் பெரு வெள்ளங்கள் பலவற்றையும் தன்னிடத்தில் இருந்து விரியுமாறு தோற்றுவிக்கும் கருப்பம் போல், இடையறாது நிற்கும் பெரிய புனித நீர் நிலைகள் எல்லாவற்றுக்கும் பிறப்பிடமாய், ஆனேற்றுக் கொடியை உயர்த்தியருளிய சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் திருத்தோணிபுரத்தின் தொடர்ச்சியை நீங்காத மேலான நீர்நிலையின் துறையை அடைந்தார். நீர் அளவாக இருக்கும் பொழுது அக்குளத்தின் அளவில் நின்று திருத்தோணிபுரத்தைச் சார்ந்தும், ஊழிமுடிவில் நீர் பெருகிய பொழுது அத்தோணிபுரம் தன்மேல் மிதக்க அதனோடு இயைந்தும் நிற்றலின், திருத்தோணி பற்றுவிடாது அக்குளம் அமைந்தி ருப்பதாயிற்று.

உலகுய்ய மகப்பெற்ற சிவபாத இருதயர் பிள்ளை யாரை அப்புனித நீர்க்கரையில் இருக்கச்செய்து, தாம் பிரிவதற்கு அஞ்சி, தெளியும் நீரில் நீராடமாட்டாதவராகிப் பின் திருநிலைநாயகி உடனாய திருத்தோணிபுரத்தில் வீற்றிருக்கும் வள்ளலாரை முன் நின்று வணங்கிப் பின்பு அக்குளத்தில் இறங்கி நீராடச் சென்றார். பிள்ளையாரைக் கரையில் இருக்கச் செய்து தாம் நீரா டற்குச் செல்ல ஒருப்படாத சிவபாத இருதயர், பின் அம்மையப் பராகிய தோணியப்பரை வணங்கி நீராடப்புகுந்தார். இந்நிலை, உடல் தந்தையாம் தம் பொறுப்பினின்றும் நீங்க, உயிர்த் தந்தையாம் தோணியப்பரின் திருவருளில் அப்பிள்ளையார் திளைத்தும் உய்ந்தும் அருள்பெற இருக்கும் பாங்கைக் குறிப்பால் உணர்த்தும் தகையதாய் உள்ளது.

நீரில் ஆடித் தருப்பணம் செய்து, பின் மறைவழிச் செயத்தகும் செயல்கள் பலவற்றையும் செய்பவரான சிவபாத இருதயர், பலரும் பாராட்டவுள்ள மகனார் தம்மைத் தேடிக் காண்பதற்கு முன்னம் அச்செயல்களை யெல்லாம் செய்து முடித்துப் பின், தம் மகனாருக்குத் தம்மை விடப் பெரிய காவல் பெற்றாராகி, அடங்காத விருப்பத்தால் அதன்பின் அகமருட ஸ்நாநம் செய்யும் பொருட்டுத் தாம் நின்ற இடத்தினின்றும் அடிபெயராது நீருள் மூழ்கினார். அகமருடம் - பாவத்தைக் கெடுப்பது. இருக்கு வேதத்துள் தொண்ணூறாவது சூக்தம் அகமருட சூக்தமாகும். நீரில் நின்று இதனை மும்முறை கூறி மூழ்குதல் நியமமாகும். தாம் நீராடி வரும்வரை பிள்ளையாரைக் காப்பதற்குத் தம்மினும் மேலான காப்பான திருவருள் துணையே துணையாயிருத்தலின், சிறிதும் தளர்வின்றி, அச்செயற்பாட்டினைச் செய்பவரானார்.

மறை முனிவராய சிவபாத இருதயர் நீருள் முழுகவும், அவரைக் கண்ணால் காணாமையால் சிறிது பொழுதும் தரித்திருக்க மாட்டார் என்ற காரணத்தைக் காட்டி, சிவபெருமானின் திருவடிகளை முறையாக இடைவிடாமல் எண்ணியிருந்த முன் நினைவு எழுந்ததால், நிறைந்த நீரையுடைய பொய்கைக் கரையில் நின்றிருந்த பிள்ளையார் அழத் தொடங்கினார். தலைக்கீடு - காரணமாக.

கண்களாகிய மலர்களிலிருந்து நீர் வெளிப்படக் கைம்மலர்களால் அவற்றைப் பிசைந்து, அழகிய தாமரை மலரும் சிவந்த கொவ்வைக் கனி போன்ற திருவாயில் அழகிய உதடுகள் துடிக்க, எண்ணில்லாத மறைகளின் ஒலி பெருகவும், எல்லா உயிர் களும் களிப்படையவும், புண்ணியக் கன்றைப் போன்ற பிள்ளையார் பொருமி அழலானார். மணிஅதரம் - அழகிய உதடுகள்.

தம் திருமேனியின் மீது கண்ணீர்த் துளிகள் வீழ, தம்மைச் சூழவுள்ள இடங்களை யெல்லாம் பார்த்து அழும் பிள்ளை யார், தம் முன்னைச் சார்பை உணர்ந்தமையாலோ அல்லது அது பொழுது இருந்த பிள்ளைமைச் சார்பாலோ, அறியோம். செம்மேனி யில் வெண்ணீற்றையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருத் தோணிபுரத்தின் சிகரத்தைப் பார்த்து 'அம்மே! அப்பா!' என்று அழுத ருளியவாறே அழைத்தருளினாராக, மேலைச் சார்பு - முன்னைய தொடர்பு. மறக்குமாறு இலாதிருந்த உணர்வு: 'சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின்' (குறள், 359) என வரும் திருமறையும் காண்க, பாடல் 55ஐயும் காண்க. திருத் தோணிபுரச் சிகரம் - தோணிபுரக் கோயிலின் உச்சி. தோணிபுரத் தின்கண் வீற்றிருக்கும் சிகரம் என்றலுமாம். சிகரம் - சிவபெருமான்: திருவைந்தெழுத்துள் சிகரம் சிவபெருமானைக் குறிக்குமாற்றான் இவ்வாறு பொருள் கோடலுமொன்று. அழைத்தருளி அழுதருள என ஈரிடத்தும் அருள எனும் சொற் பெய்தார்: உயிர்களனைத்தும் இறை வனை நோக்கி அழவும் வேண்டும், அழைக்கவும் வேண்டும் என்பதை அருளுரையாகக் கோடற்கு. 'அழுகேன் நின்பால்', 'ஆரூரா என் றென்றே அலறா நில்லே' (தி. 6 ப. 31 பா. 3,) எனவரும் திருவாக்கு களையும் காண்க.

அதுபொழுது திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமான் அருள் நோக்கம் செய்தலால், முன்னைநிலையை நினைந்த அவருக்கு அருள்செய்யும் பொருட்டாக, பொன்மலை வல்லியான திருநிலைநாயகி அம்மையாரும் தாமும், பொருந்துதற் குரிய விடையின் மேல் இவர்ந்தருளி, தலையில் சூடிய இளம்பிறை விளங்கித் தோன்ற, செழுமையான அப்பொய்கையின் அருகில் அடைந்தருளினார். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

நான்மறைகளில் வல்ல அந்தணரான சிவபாத இருதயருக்கும் அவருடைய மனைவியாரான பகவதியாருக்கும், தாம் முன் வழங்கியருளிய பெருவரத்தை நிறைவு செய்ய எண்ணியதனால் போலும், தம் பெருமையுடைய திருவடிகளையே போற்றுகின்ற ஒருமையான நெறியில் நிற்க வரும் சிவஞானத்தைக் கொடுப்பதற் காகத் தம்முடன் இருந்த, அரிய மறைகளையே தம் வடிவமாகக் கொண்டு உயிர்களை ஆட்கொண்டருளுகின்ற ஞான முதல்வியா ரான திருநிலை நாயகி அம்மையாரை அளித்தருளுமாறு அருள் செய்வாராகி, முன்வரம் அருளியது 19, 20ஆவது பாடல்களில் காண்க. ஒருநெறியில் வருஞானம் - இறைவனை ஒரு நெறிய மனத்துடன் வழிபட்டதால் வரும் ஞானம், 'ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்' (தி. 1 ப. 1 பா. 11) எனப் பிள்ளையார் தாமே அருளி இருப்பதும் காண்க. மறைவடிவு கொள்ளுதலும் உயிர்களை ஆட் கொள்ளுதலும் இறைவன் தன் அருள் வயத்தாலாம். அவ்வருளே அம்மையாதலின் 'அருமறை யாளுடையவளை' என்றார். 'பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை' (தி. 8 ப. 7 பா. 14) 'அவளால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கை யெல்லாம்' (சித்தி யார், சுப. முதற்சூத். 69) எனவரும் திருவாக்குகளையும் காண்க.

அழுகின்ற பிள்ளையாரைப் பார்த்து, திருவருட் கருணை பொழியும் உள்ளம் கொண்டவராய சிவபெருமான், எவ்வு லகும் தொழநிற்கும் கொடிபோன்ற திருநிலைநாயகி அம்மையாரைப் பார்த்தருளி, 'இரு மார்பகங்களிலிருந்தும் பொழியும் பாலைப் பொற் கிண்ணத்தில் ஏற்று இப் பிள்ளைக்கு ஊட்டுக!' என்று அருளிச் செய்ய,
குறிப்புரை

மேற் சொன்னவாறு பெருமான் கூறியருளவும், மறைகளையும் ஏழுலகங்களையும் பெற்றருளி எப்பொருளுக்கும் மூலகாரணமாய் நிற்பவரும், வளம் பெருகும் கருணையே தம் வடி வமாய்க் கொண்டவருமான சிறப்புடைய திருநிலை நாயகி அம்மை யார், பிள்ளையார் அருகில் சென்று, கச்சணிந்த தம் திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்தருளி, அம்மையார் உண்ணா முலையார் ஆதலின், 'பாலடி சில் பொன் வள்ளத் தூட்டென்ன' இறைவனும் அருள் செய்தார்; அம்மையாரும் அவ்வாறே செய்தருளினார்.

திருநிலை நாயகி அம்மையார், நினைத்தற்கு அரிய சிவஞானமாய இனிய அமுதத்தைப் பாலுடனே குழைத்தருளி, தம்மை நோக்கி நிற்கும் பிள்ளையாரின் கண்ணீரைத் துடைத்தருளி, 'பாலமுதத்தை உண்பாயாக!' என்று உண்ணச் செய்ய, பெருமை யுடைய பிள்ளையாரை அங்கு அழுகை தீர்த்துச் சிவபெருமான் அருள் செய்தார். 'போதையார் பொற்கிண்ணத்து அடிசில்' (தி. 3 ப. 24 பா. 2) எனப் பிள்ளையாரும்; 'ஞான போனகம் அருளட்டிக் குழைத்த' (தி. 11 ப. 27 பா. 1 வரி 26) எனப் பட்டினத்து அடிகளும், 'பொற்கிண் ணத்தின் ஞான வமிர்தளித்த' (தி. 11 ப. 34 பா. 73) என நம்பியாண்டார் நம்பிகளும் அருளிய திருவாக்குகள் இவ்வரலாற்றிற்கு அரணா கின்றன. இந்நான்கு பாடல்களும் ஒரு முடிபின.

எவ்வுயிர்க்கும் தந்தையும் தாயுமாக விளங்கும் அம்மையப்பர் வெளிப்பட்டுத் தாமே இவ்வாறு அளித்தமையின், 'ஆளுடைய பிள்ளையார்' என்னும் திருப்பெயரை உடையவராகி தேவர்கள் முனிவர்கள் முதலிய யாவரும் தெளிந்து அறிய இயலாத, மெய்ப் பொருளாகிய, எக்காலத்தும் கெடுதல் இல்லாத, ஒப்பில்லாத சிவத்தை உணரும் நிலையாய சிவஞானத்தை உணர்ந்து வாழும் அருள் பெற்றவராய நிலையில், சிவஞானசம்பந்தர் என்ற திருப் பெயரை உடையவராயினார்.
குறிப்புரை

சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து நிற்குமாற்றான் சிவமாந்தன்மை பெருகச் செய்யும் ஒப்பில்லாத கலை ஞானத்தையும், பிறவிக்குக் காரணமாய மலக்குற்றத்தை வாராமல் தடுக்கும் மேலாய ஞானமான உணர்வரிய மெய்ஞ்ஞானத்தையும் தவ முதல்வரான சிவஞானசம்பந்தர் அந்நிலையில் உணர்ந்தார். சிவத்தைப் பெறவும் பவத்தை விடவும் பெறுவதே ஞானமாகும். சிவபரம்பொருளே மேலாய பொருள் என்றுணரவும் அதனோடு இடையீடின்றி ஒன்றுபட்டு நிற்கவும் கலைஞானம் துணைபுரிவதாகும். ஆதலின் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தை உவமையிலாக் கலைஞானம் என்றார். உலகியல் அறிவையுணர்த்தும் நூல்களினும் மெய்ப்பொருளையுணர்த்தும் நூல்கள் உயர்வும் சிறப்பும் உடையவாதலின் அவற்றை 'உவமை யிலாக் கலைஞானம்' என்றார்.
பிறவிப் பிணியை அறுத்தற்குரிய மெய்யுணர்வு இருப்பினும் அதனை விடுதற்குக் காலம் வேண்டும். பழக்கம் தவிரப் பழகுதல் அத்துணை எளிதன்று. ஆதலின் 'அறமாற்றும்' என்ற தொடரால் குறித்துக் காட்டினார். ஆதலின், இதனை 'உணர்வரிய மெய்ஞ்ஞா னம்' என்றார். இவ்வாறு நிரல் நிரையாகக் கொண்டு உரைசெய்தற்கு,
மேவரு ஞானம் இரண்டவற் றொன்று விமலனார் பாததா மரையேஓவறு மன்பின் உணர்திரு வளிக்கும் ஒப்பிலா உயர்கலை ஞானம்தாவரும் பவத்தை வேரொடுங் களையும் தக்கமெய்ஞ் ஞானமொன் றிவற்றால்சாவதும் பிறப்புந் தணப்புறச் சிவத்தைச் சார்ந்தது வாய்நிற்றல் யோகம். -திருத்தணிகைப் புராணம், பா - 353எனவரும் பாடல் துணை செய்கின்றது.

எப்பொருள்களையும் இயக்குபவன் ஈசனே என் னும் உணர்வும், அப்பொருளாவது ஆளுடையாரும் அவருடைய அடியார்களும் ஆவர் என்ற அறிவும் இன்றித் தத்தம் அறிவிற்கு ஏற்றவாறு எண்ணி இயல்கின்ற தூய்மையில்லாதவரின் துணிவுகளை எல்லாம் தூளாகுமாறு எண்ணி எழுந்தார். இப்பாடற்கண் குறித்த உணர்வும் அறிவும் முன்னைய பாடலில் முதற்கண் குறிக்கப்பட்ட இருவகை ஞானங்களின் பயனாய், முறையே விளைவனவாம். எப்பொருளும் என்பதால் உயிரும் தளைகளும், ஆக்குவான் ஈசனே என்பதால் இறையும் ஆகிய முப்பொருள்களும் குறிக்கப் பட்டன. ஆக்குதல் - உயிரைப்பற்றிய மலம் முதலிய குற்றங்களைப் படைத்தல் முதலிய ஐந்தொழில்களானும் நீக்கிச் சிவப்பேறும் நல்வாழ்வும் பெறச் செய்தலாம். அப்பொருள்தாம் எனும் அறிவு, 'மால்அற நேயமும் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே' (சிவஞானபோதம், சூ. 12) என்னும் ஞானநூல் கூற்றான் அறியலாம். இவ்வுணர்வும் அறிவுமே சிவஞானபோதத்தின் பயனியலில் குறிக்கப் பெற்றுள்ளன. சிவப்பேற்றையடையும் பேரு ணர்வு 11ஆவது நூற்பாவிலும், மலநீக்கமாம் பயன் 10, 12ஆம் நூற் பாக்களிலும் குறிக்கப் பெறுகின்றன.

சிறப்புடைய சிவபாத இருதயரும் சிறிது நேரத்தில் நீராடித் தாம் செய்யும் கடமைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, கரையில் ஏறிப் பேருணர்வில் விளங்கும் தம் மகனாரைப் பார்த்து 'நீ யார் தந்த பாலை உண்டாய்' எனச் சினக்க,
குறிப்புரை

'எச்சில் உண்டாக உனக்கு இதை அளித்தவரை எனக்குக் காட்டு' எனச் சிவபாத இருதயர் உரைத்துச் சிறிய ஒரு கோலைக் கையில் எடுத்து அடிப்பவரைப் போல் ஓச்சிட, அச்சிறிய பெருந்தகையாரான பிள்ளையாரும், ஒருகாலை எடுத்து நின்று கண்களினின்றும் இன்பவெள்ளம் பொழிய உச்சிமேல் தூக்கிய திருக்கையில் ஒருவிரலால் சுட்டிக் காட்டி,
குறிப்புரை

விண்ணில் நிறைந்து பெருகும் ஞானஒளி கொண்டு, ஆனேற்றின்மீது, பண்சுமந்த அரிய மறைகள் வணங்கிப் போற்ற, உமையம்மையாருடன் எண்ணிறந்த கருணைப் பெருக்கால் எழுந்தருளி நிற்கும் திருத்தோணிபுரத்து இறைவரை எதிரே காட்டி, உள் நிறைந்து தேக்கி மேல் எழுந்து பொழிந்த சிவஞானத் திருவாக் கினால்,
குறிப்புரை

எண்ணிறந்த மறைகளின் முதல் எழுத்தை மெய்யுடனே தொடங்கி எழுதும் மறையை, வளம் வாய்ந்த நெடுந் தமிழால் இப்பேருலகில் உள்ளவர்க்கு உரை சிறந்து பயனளிக்க, பல உயிர்களும் இன்பம் அடைய, தம் திருப்பாடல் இறைவரிடம் செல்கின்ற வகையைப் பெறும் பொருட்டாய்த் திருச்செவியைச் சிறப்பித்து, மறைமுதல் - ஓங்காரம். மெய் - த் என்னும் மெய்; சிவசக்தியின் உண்மைநிலை. இது காயத்திரி மந்திரங்களின் இறுதி எழுத்தாகவும், சாந்தோக்கியம் முதலிய உபநிடதங்களில் பிரமப் பொருளைக் குறிக்கும் சொல்லாகவும் அமைந்துள்ளது. சத் என்பதன் இறுதி மெய்யாகிய 'த்' என்பது சிவமூலம் என வாயு சங்கிதை குறிக்கும் என்பர். த் + ஓ = தோ என்பதாகும். மல்லல் - வளம்; உயிர் உய்திபெறுதற்குரிய வளம். 'தோடுடைய செவியன்' எனச் சிறப்பித் தது பிள்ளையார் தம் திருப்பாடலை ஏற்கும் இறைவனின் உடற்கருவி யாய செவியாய் இருத்தல் பற்றியாம் என்பது ஆசிரியர் தரும் விளக்க மாகும். 'திருவுலாப் புறம் பாடினேன்; திருச்செவிசாத் திடப் பெறல் வேண்டும்' (தி. 12 சரு. 13 பா. 47) எனவரும் திருவாக்கும் காண்க.

செம்மை பொருந்தும்படி தொடங்கிய, 'தோடு டைய செவியன்' என்ற மெய்ம் மொழியான திருப்பதிகத்தில், திருப் பிரமபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை அடையா ளங்களுடன் சொல்லி 'எம்மை இது செய்தவன் இப்பெருமான் அன்றே' (தி. 1 ப. 1) என்று தந்தையாருக்குக் கூறியருளினார். அடையாளங்கள் - தோடுடைய செவியன், விடை யேறி, மதிசூடி, பொடிபூசி என்பனவாம். திருமுறைகளில் மூத்த திருப்பதிகம் எனக் காரைக்கால் அம்மையாரால் அருளப்பெற்ற 'கொங்கை திரங்கி' (தி. 11 மூத்த. 1) எனும் பதிகம் நட்டபாடைப் பண்ணில் அமைந்தது போல, சிவஞானசம்பந்தரின் இம்முதற்பதிகமும் நட்டபாடைப் பண்ணில் அமைந்தது திருவருட் செயலாகும். இவ்வைந்து பாடல்களும் ஒரு முடிபின.

இம்மண்ணுலகத்தில் வாழும் உயிர்கள் பிழையைச் செய்தாலும், அவை தம்மை வந்து அடையின் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் தம் பெருங்கருணையினால் அவற்றை மன்னித்தருளிக் கைகொடுத்து ஆள்வார் என்பதைக் காட்டவே, நல்லுணர்வு இல்லாதவன் ஆன வன்கண்மையுடைய அரக்கனான இராவணன் திருக்கயிலை மலையை எடுக்க, உடல் முறிவுபட்டுப் பின் இசையைப் பாடப் பெருமையுடைய இறைவர் அவனுக்கும் அருள்செய்த ஆக்கப்பாடுகளை அந்தத் திருப்பதிகத்துள் வைத்துப் பாடினார். பதிகந்தொறும் வரும் எட்டாவது பாடலில் இறைவன் இராவணனுக்குச் செய்த அருளிப்பாட்டைக் குறிப்பிடுவர் பிள்ளை யார். இதற்குக் காரணம் தவறு செய்த உயிர்கள் உண்மையிலேயே அத்தவறை உணர்ந்து, தவறு செய்தமைக்குப் பொறுத்தற்கும், இனித் தவறு செய்யாமைக்கு உறுதிப்பாடும் கொண்டு இறைவனை உள்ளன் போடு வேண்டின், இறைவன் மன்னித்தருளுவன் என்பதை நன்குணர் வாம். எனவே பாவமன்னிப்பு என்பது நம் நெறிக்கு இன்று நேற்றன்று தோற்றமில் காலத்தேயே உண்டு எனினும், பிறபிற மதம் போல அத்துணை எளிமையுடையதன்று. 'எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று' (குறள், 655) என்பதே நம் அறமாம்.

தம்மை வணங்குபவருக்கே அருளுவர் இறைவர் என்பதைத் தெரிந்து கொண்டும் தொழாதவராகி, தவறான மனத்தால் மயக்கம் கொண்ட மாலும் அயனும், இழிந்த பன்றியும் அன்னப் பற வையுமாய்க் கீழும் மேலும் போய்க் காண மாட்டாமல் விழுவார்க ளாய்ப் பின்னர் திருவைந்தெழுத்தைப் போற்றி உய்தி பெற்றமையை மேலே விரிவாய் எடுத்து உரைத்தார். இது பதிகந்தொறும் வரும் ஒன்பதாவது பாடலின் கருத்தாகும். வழுவான மனம் - யான் காண்பேன் என முனைப்புடன் சென்ற மனம். உயிர்கள் இவ்வநுபவத்தைக் கருதி, யான் எனது என்னும் செருக்கற வேண்டும் என்பதே இப்பாடற் கருத்தாகும். யான்செய்தேன் பிறர்செய்தா ரென்னதியா னென்னும் இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி நிமிர்த்துத்தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்தான் நேரே தனையளித்து முன்னிற்கும் வினையொழித் திட்டோடும்நான்செய்தே னெனுமவர்க்குத் தானங் கின்றி நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம்ஊன்செய்யா ஞானந்தா னுதிப்பி னல்லால்

மறைகளை அருளிய முன்னவரான பிறைச் சந்திரனை அணிந்த சிவந்த சடையையுடைய சிவபெருமானின் நெறியை, அறிந்து அடைந்து உய்தி பெறாதவரான புறச் சமயத்தாருள், நன்மையில்லாத சமணர்களும், புத்தர்களும் ஆன இவர்களின் நெறி கள் பழியை விளைக்கும் கேடுகளேஆம் என எம்பெருமானாகிய ஞானசம்பந்தர் மொழிந்தருளினார். இது பதிகந்தொறும் வரும் பத்தாம் பாடற்கருத்தாகும். 'பரசமயங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொணாதே' (சிவஞா. சித்தி. சூ. 3 பா. 90) எனவரும் ஞானநூற் பொருளைத் தெரிந்து தெளிந்து கடைப்பிடித்தல் கடனாம்.

திருப்பதிகத்தை நிறைவாகப் பாடித் திருக்கடைக் காப்பையும் அருளிய மறைமொழியையுடைய பிள்ளையார் இறைவ னைத் தொழுது நின்றாராக, அருட் கருணையுடைய சிவபெருமா னின் நிறைந்த அருளைக் கண்டு, தேவர்கள் விரிந்த விண்ணில் மகிழ் வொலி எழுப்பித் தேனைச் சொரியும் தெய்வ மலர்களை மழையாய்ப் பொழிந்தனர். இறைவன் அருளியது திருமறையாதல் போலப் பிள் ளையார் அருளியதும் மறைமொழியேயாம். பதிகம் நிறைவு பெற்ற தும், அதனை முடித்துக் காட்டும் வகையில், தமது பெயர், பதிகப் பயன் முதலியவற்றைத் தம் இலச்சினையாகக் கூறியருளும் பாடல் திருக் கடைக்காப்பாகும்.

அழிவற்ற சிவகணநாதர்கள் பலர் முழக்கும் 'அரகர' என்ற ஓசையுள் அடங்குமாறு, மங்கலமான தேவமுழக்கும், கந்தருவர், கின்னரர் முதலான தேவ இனத்தாரின் கடல் போன்று முழங்கும் ஒலியும், இந்திரன் முதலிய தேவர்கள் எடுத்துப் போற்றும் இசைகளின் ஒலியும் ஆகிய இத்தகைய ஒலிகளின் தொகுதி இது பொழுது ஒலிப்பதாயின.
குறிப்புரை

மறைகள் எழுந்து ஒலிபெருக முழங்கவும், தேவர் களின் நிறைந்த தலையணிகள் (கிரீடங்கள்) ஒன்றுடன் ஒன்று நெருக் குண்டு நிரல்பட அமைந்த மணிகள் சிதற, அவை நீண்ட வானத்தினின் றும் விழும் பனிநீர்த் துளிகள் போல் வந்து உலகெங்கும் நிறையவும், இடையறாது மெய்ம்மைக்கண் நிற்றலும் அமைதி பெருகவும் வாழும் தவமுனிவர்களின் கூட்டமாகிய கடல் இருமருங்கும் சூழவும்,
குறிப்புரை

தம்மை வந்து அடையும் பக்குவமும் பத்திமையும் உடைய அடியவரிடத்தினின்றும் ஒப்பில்லாத வலிமையுடைய பிறவியாகிய பெருங்கடல்கள் நீங்குமாறு தம் இரு திருவடிகளான இனிய புணையை அருளும் கருணையுடைய திருத்தோணியப்பர், போர் செய்தற்குரிய வலிமையுற்ற ஆனேற்றின் மேல் தம்முடன் அமர்ந்தருளும் துணைவியாருடனே, மறைகள் தொடர்ந்து முழங்கும் திருத்தோணிச் சிகரத்திற்கு எழுந்தருளினார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

சிவபெருமான் திருக்கோயிலில் எழுந்தருளப் பெற்றதைப் பார்த்து, அப்பெருமானைத் தொடர்ந்து எழும் அன்பி னால், கண்களின் வழியே சென்ற கருத்துவிடாது கலந்ததால், பொய் கைக் கரையில் நின்றருளிய மறைச் சிறுவரான யானைக்கன்று போன்ற பிள்ளையாரும், புண்ணிய மூர்த்தியாய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் அழகிய திருத்தோணித் திருக்கோயிலுக்குள் சென்று சேர்ந்தார். அம்மையப்பராய்க் காட்சி கொடுத்து ஞானப்பாலும் ஊட்டியதால் கண்வழிப் புகுந்த அக்காட்சி, உள்ளத்தே பதிந்தும் கவர்ந்தும் இருந்தமையினால் அவ்வம்மையப்பர் எழுந்தருளியிருக் கும், தோணிக்குள் சென்று, மீண்டும் கண்டு வணங்கி மகிழ எண் ணினார். 'கண்வழிப் புகுந்த அக்கள்வனே கொலாம்' எனவரும் திருவாக்கும் காண்க.

அளவற்ற தவத்தைச் செய்து இவருடைய தந்தை என அழைத்தற்குரிய சிவபாத இருதயர், பிள்ளையாரை அடிக்க ஓச்சிய சிறுகோலும் நெகிழ, அம்மலர்க் கைகளைக் கூப்பியவாறு மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடி, வேறாக விளைந்தனவாய வெருட்சி, வியப்பு, விருப்பு என்ற இவற்றுடன் கூடியவராய்த் தம் பிள்ளையார் எடுத்துச் சொல்லும் அருந்தமிழின் பொருளான குறிப்பை எண்ணு வாராகி, மாறு - சிறிய கோல். விழுந்த - தானே கையினின்றும் விழ; 'விற்கையினின்று இடைவீழ' என்புழிப்போல. வேறு விளைந்த - முன் இருந்த மனநிலைக்கு வேறாக. வெருட்சி - அச்சம், சினம் கொண்டதனால் ஆயது. வியப்பு - தாம் இதுகாறும் கண்டறியாத இறைக் காட்சியைப் பிள்ளையார் காட்டக் கண்ட வியப்பு. விருப்பு - உலகியற் பாங்கால் கொண்ட விருப்பினும், அருளியற் பாங்கால் தோன்றிய பெரு விருப்பு.

சிவபெருமானைத் தாமே தனியே கண்டு அவரைத் தொடர்ந்தவரான பிள்ளையாரைப் போல், தாம் அவ் இறைவரைக் காணாராயினும், நிகழ்ந்தனவான அடையாளக் குறிக ளையும் திருப்பதிகத் தமிழ்பாடிச் சுட்டிக் காட்டியதையும் கண்டவராத லால், இது தோணிபுர இறைவரின் திருவருள் என்பதை உணர்ந்து, மீதூர்ந்த அன்பு பொருந்திய மனத்துடன் தம்முன்பு சென்று கொண்டிருக்கும் திருமகனாரைத் தொடர்ந்து சென்றார்.
குறிப்புரை

அதுபொழுது அங்கு நிகழ்ந்தனவற்றைக் கண்டவர்களும், காணாதநிலையில் கேட்டவர்களும், முப்புரிநூல் அணிந்த மறையவர்களும் 'இவ்வாறாய அற்புத நிகழ்ச்சி வேறு யாண்டு நிகழ்ந்துள்ளது?' எனக் கூறியவாறு, பவளம் போன்ற சிவந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருத்தோணிக் கோயிலின் திருவாயில் புறத்தில் வந்து சூழ்ந்தனராக,
குறிப்புரை

ஞான அமுதை உண்ட பிள்ளையார் தாமும், பொங்கும் ஒளியையுடைய ஆனேற்று ஊர்தியில் இவர்ந்து அழகிய பொலிவுமிக்க திருத்தோணியுள் எழுந்தருளியிருக்கும் பெருந்திரு வாழ்வைச் சென்று கூடி, 'என்னை ஆளுடைய பெருமான் உமையம் மையாருடன் இங்கு எழுந்தருளியிருந்தான்' என்னும் கருத்துடைய திருப்பதிகத்தை இறைவன் திருமுன்னிலையில் நின்று போற்றி வணங்கினார். இதுபொழுது அருளிய பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்த 'நறவம் நிறை வண்டு' (தி. 1 ப. 74) எனத் தொடங்கும் பதிகமாகும். இப்பதிகம் முழுதும் 'உமையோடு இருந்தானே' என நிறைவு பெறுவதைத் திரு உளம் பற்றியே, ஆசிரியர் இத்தொடரை எடுத்து இயம்புவார் ஆயினர்.

அன்புடன் ஞான அமுதத்தின் மணம் கமழும் திருவாயையுடைய திருஞானசம்பந்தர், மறைகளை ஓதும் வேதியர் பலரும் காண, இனிய ஏழிசைகளும் பொருந்திய செழுந்தமிழ்த் திருப்பதிகங்களைச் சொன்முறையாகச் சிவபெருமானுக்கே உரியவா கப் பாடுகின்ற திருத்தொண்டாகிய அடிமைத் திறத்தையும் அருளை யும் பெற்ற பிணைப்புடனே கோயிலினின்றும் புறப்பட்டார்.
குறிப்புரை

விரும்பிய அற்புதமான நீடிய திருவருளைப் பெற்ற ஞானப் பிள்ளையாரின் முன்பு, ஒளிபொருந்திய சந்திரனை விடச் சிறந்து விளங்குகின்ற சடையையுடைய சிவபெருமானின் தொண்டர்களும், வாழ்வடையும் திருத்தோணிபுரத்தில் உள்ளவர்க ளும், நீண்ட நிலைகளுடன் விளங்குகின்ற கோயிலின் வாயிலை அடைந்து தாம் கூடி எதிர்கொண்டு பின்வருமாறு போற்றத் தொடங் கினர்.
குறிப்புரை

'காழிப்பதியில் உள்ளார் தம் தவப்பயனாய்த் தோன்றியவரே! கவுணியரின் செல்வமே! கலைஞானம் நிறைந்த ஆழ்ந்த கடல் போன்றவரே! அக்கடலின் அமுதம் போன்றவரே! அடியார் கண்டு வாழும் பொருட்டு இம்மண்ணுலகத்தின் மீது தோன்றி, வானவரின் ஒப்பற்ற தலைவரான சிவபெருமானும், ஏழிசை மொழியாளாய உமையம்மையாரும் ஆகிய இருவர்தம் திருவருளை யும் ஒருங்கே பெற்றீர்!' என உரைப்பாரும்,
குறிப்புரை

'மறைகளை வளர்க்கும் செல்வமே! மறை நெறியின் நிலையான பொருளே! வளர்கின்ற ஞானம் என்ற கருத் தாங்கிய மேகமே! புகலி நகரத்தவரின் புகலிடமே! அலைமோதும் காவிரித்துறையில் பெறத்தக்க மணியே! மறைகளில் விளங்கும் ஒளியே! சிவபெருமான் உமையம்மையாருடன் எழுந்தருளி வந்து அருள் வழங்கப்பெறும் பேறு பெற்றீர்! என்பாரும்,
குறிப்புரை

'புண்ணியங்களின் முதலே! மணியணிந்த அரை ஞாணுடன் போந்து காட்சியளிக்கும் கண் நிறைந்த கதிரே! கலைகள் வளரும் சந்திரனே! அழகு பொருந்தும் பண்களுக்கும் பெறற்கரிய கதியே! பருவம் மூன்றாண்டி,ல் மனத்தகத்தது என்றறிவார்களுக்கு உள்நின்று அருளும் பொருளாய் நின்ற சிவபெருமானின் திருவரு ளைப் பெற்றீர்!' என்பாரும் ஆனார்கள். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

என இவ்வாறெல்லாம் கூறியருளி, மறை மொழி களையுடைய அந்தணர்களும் மற்ற அடியவர்களும் நின்று போற்றி, அப்பிள்ளையாரின் திருவடிகளைத் தம்முடியில் அணிந்து, நிரல்பட நின்றபோது, தாமே முன்சென்ற தந்தையாரான சிவபாத இருதயர் தெய்வத்தன்மை வாய்ந்த சிவஞானக் குழந்தையான பிள்ளையாரை எடுத்துத் தோளில் சுமந்து பெருமகிழ்வுடனே செல்ல, பியலில் - தோளில்.

சிறந்த மறையவர் கூட்டத்துடன் பெருகிய அடியார்தம் கூட்டமும் சூழ்ந்து, தம் உடையின் மேல் உள்ள ஆடைகளையும் உத்தரியங்களையும் விண்ணில் வீசி மகிழ்வொலி செய்கின்ற தன்மையினால், சீகாழியின் அழகிய தெரு, சிவானந்தமாய வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்ல, அதன் மேல் பொங்கும் நுரைக் குமிழிகள் மேலெழுவதும் இறங்குவதும் போன்ற காட்சியுடையதாக, அறுவை - தம் உடைமீது கட்டப்பெற்றிருக்கும் ஆடை. உத்தரியம் - மேலாடை. மறையவரும் அடியவரும் வீதியில் பெருகச் செல்வது சிவானந்த ஆறு செல்வது போன்றிருந்தது. அவர்கள் தம் மகிழ்ச்சி மீதூர்வால் அறுவையையும் மேலாடையையும் விண்ணில் வீசி மகிழ்வது, அவ்வாற்றின் நுரைகள் மேல் எழுவதும் இறங்குவதும் போன்றிருந்தன.

நீடும் சீகாழியில் அந்தணர்களின் மாளிகைமேல் நெருங்கி, அவ்விடத்தின் பக்கத்தில் நிறைந்த மறையோரின் மங்கை யர், உயர்ந்த உச்சியையுடைய பெரிய மலைகளின் மேலே மின்னல் கூட்டம் புடைபெயர்ந்து போகின்ற காட்சியைக் கொண்டதைப் போல், மங்கலமான பெருஞ்சொற்களால் வாழ்த்தியும், மணமுடைய இதழ் களையுடைய புதிய குளிர்ந்த பூக்களையும் சுண்ணப் பொடிகளையும் வெண்ணெல் பொரியுடனே தூவியும் நிற்பாராய், கோடு - மலை. மங்கையர்கள் சுண்ணமும் பொடியும் தூவி மங்கல வாழ்த்தெடுத்து அடைவது, மின் எழும்பொழுது தோன் றும் ஒளி போன்றது என்றார்.

மற்றும் சிலர், மங்கல இயங்களை இசைப்பார்கள். சிலர், சாம கானங்களைப் பாடுவார்கள். சிலர், அருகில் உள்ள திண் ணைகளில் பொங்கும் அழகிய விளக்குகளை ஏந்தி நிறைகுடங்களை நிரல்பட வைப்பார்கள். இங்ஙனம் அந்நகரத்தவர்கள் தத்தம் மனத்தில் எழுந்த அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பெருகப் போற்றி மகிழ, அவ் வழகிய வீதிகளின் வழியே சண்பை நகரை வலமாக வரும்பொழுது,
குறிப்புரை

அழகிய பொன்மயமான திருத்தோணியின் மேல் எழுந்தருளியிருக்கும் இறைவருடன் கூடிய துணைவியாரான திரு நிலைநாயகி அம்மையாரின் திருமுலைப்பாலின் மணம் மாறாத இனிய மொழியை உடைய பவளம் போன்ற வாயையுடைய பிள்ளை யார், தம் திருமாளிகைக்கு எழுந்தருளி உட்செல்லும் பொழுது, சங்கு ஒலிகளும் தேவதுந்துபி முதலாய அளவில்லாத பெருகிய ஒலிகளும் மிக, உள்ளே புகலானார். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

தூயதும் அழகியதுமான திருமாளிகையில் அமர்ந்திருந்து சிவஞானம் வழங்கப்பெற்ற அன்றிரவில், பழமை யான ஒலிவடிவாய பெருமறைகள் திரண்டு உருவெடுதாற் போன்ற திருத்தோணியில் நிலைபெற்று எழுந்தருளியிருக்கும் சிவபெருமா னின் திருவடித் தாமரைகள் தம் கருத்தில் பொருந்த நீங்காத காதல் கொண்டவராகி, ஒளிபெருகும் ஞாயிறு தோன்றும் முன், திருத்தோணி யப்பரின் திருக்கோயிலைச் சென்று அடைந்தார்.
குறிப்புரை

பெருகிய அன்புடன் சேர்ந்து திருக்கழுமலம் எனும் அத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் தம் தந்தையாரையும், தம்மிடம் வெளிப்பட்டு வந்து யாவராலும் காண்டற்கரிய மெய்ஞ் ஞானத்ததைத் திருமுலைசுரந்து வரும் பாலுடன் கலந்து தமக்கு ஊட் டிய புண்ணிய வடிவான திருத்தாயாரையும் முன் வணங்கிப் போற்றி, மேன்மையான அருளைப் பெற்றுத் 'திருக்கோலக்கா' என்ற திருப் பதியை வணங்கும் பொருட்டு விருப்புடன் சென்றார். வணங்கிப் போற்றிய திருப்பதிகம், 'எம்பிரான்' (தி. 2 ப. 40) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.

நீர்ப்பெருக்கால் ஒலிமிகுந்து அலைகள் பெருகும் காவிரியாறு, நல்ல நீருடன் தேன் மிகுந்த மலர்களையும் முத்துக் களையும் சொரிய, அம்மலர்களைச் சூழ்ந்து வண்டுகள் மொய்க்க, மங்கையர் குடைந்து நீராடுகின்ற நீரையுடைய வாவிகள் பொருந்திய 'திருக்கோலக்கா' என்ற பதியையடைந்து, தேவர்களின் தலைவரான இறைவரின் திருக்கோயிலை வலமாக வந்து, திருமுன்நின்று, மறை கள் முறையிட்டும் அறிதற்கு அரிய இறைவரின் திருவடிகளைப் போற் றத் தொடங்கியவராய்,
குறிப்புரை

மெய்ம்மை நிறைந்த செம்பொருள் எனப் படுகின்ற நான்மறைகளில் கூறப்படும் பொருளாய் உள்ளவரை, திருச்சடையின் மேல் பாம்புடன் பசுமையான பிறைச் சந்திரனைத் தாங்குபவரை, நஞ்சுடைய திருமிடற்றையுடையவரை, 'மடையில் வாளைகள் பாய' என்ற திருப்பதிகத் திருவாக்கினால், திருக்கரங் களைக் கொண்டு அமைக்கும் காலவரையறையினைச் செய்யும் தாள ஒத்துச் செய்து, கலைகள் நிரம்பிய திருப்பதிகத்தைக் கவுணியர் பெருமானான சம்பந்தர் பாடிய போது, கைந்நிறைந்த ஒத்து அறுத்து - பாட்டின் இசைக்கு ஏற்றவாறு கைகளைத் தட்டுதல், நிறுத்தல், எடுத்தல் ஆகிய தொழில் களால் தக்கவாறு அளவுபடுத்துவது. இதுபொழுது பாடி அருளிய பதிகம் 'மடையில் வாளை' (தி. 1 ப. 23) எனத் தொடங்கும் தக்கராகப் பதிகம் ஆகும்.

அங்ஙனம் திருக்கைகளால் தாள ஒத்து அறுதி யிட்டுப் பாடவும் (இறைவர்) கண்டு, அருள் செய்ய, கருணை கூர்ந்த தேவர் பெருமானின் திருவைந்தெழுத்துப் பொறித்த நல்ல செம்பொன் தாளங்கள், இறைவரின் அருளால் எடுத்த அத்திருப்பதிகத்திற்குப் பொருந்திய அளவுபட, வரும் மறைச் சிறுவரான பிள்ளையாரின் திருக்கைகளில் அது பொழுதே வந்து சேர்ந்தன. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின. சென்ற பாடலில் கூறியவாறு 'மடையில் வாளை' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைக் கையினால் ஒத்தறுத்துப் பாடுமளவில் இறையருளால் திருவைந்தெ ழுத்துப் பொறித்த பொற்றாளம் பிள்ளையார் கையில் வரப் பெற்றன. இவ்வரலாற்றிற்கு, 'நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும் ஞான சம்பந்த னுக்குல கவர்முன் தாளம் ஈந்த' (தி. 7 ப. 62) எனவரும் சுந்தரர் திருவாக்கும், 'எழுத் தஞ்சும் இட்டசெம்பொற்றாளங்கள் ஈய' (தி. 11 ப. 34 பா. 82), 'பெற்றது . . . செம்பொன் தாளம் அவையே' (தி. 11 ப. 36 பா. 4) எனவரும் நம்பியாண்டார் நம்பிகள் வாக்குகளும் அரணாகின்றன.

சீகாழியில் வந்து தோன்றிய பெருந்தகையார் ஆன ஆளுடைய பிள்ளையார், தம் திருக்கையில் வந்த தாளத்தைப் பார்த்துப் பெரும் பேறு எனக் கருதி அதனைத் தம்திருமுடிமீது வைத்து, மனம் மகிழ, இனிமை மிக்க திருவாக்கால் ஏழிசைகளும் தழைத்து ஓங்க, இனிய இசை பொருந்திய அத்தமிழ்ப் பதிகத்தைப் பொருத்த மாகப் பாடி, விரும்பி ஏற்றருளிய குழை அணிந்த சிவபெருமானின் திருமுன்னிலையில் தக்க திருக்கடைக் காப்புச் சாத்தி நின்றார். நலங்கொள் காழி ஞானசம் பந்தன் குலங்கொள் கோலக் காவு ளானையே வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோ யோங்கி வாழ்வரே. (தி. 1. ப. 23. பா. 11) என்பது திருக்கடைக்காப்பாக அமைந்த திருப் பாடலாகும். 'வினை போய்' என்பதால் பாச நீக்கமும் 'ஓங்கி வாழ் வரே' என்பதால் சிவப் பேறும் பெறுதலின், இதனினூங்கு உயிர் பெறத் தக்க தொருபயன் இல்லையாதலின் இதனைத் 'தக்க திருக்கடைக் காப்பு' என்றார்.

விண்ணுலகத்தவரும் வியப்படைய ஓங்கிய அத்தாளத்தின் ஒலியின் மேன்மையை நோக்கி, தும்புரு நாரதர் முதலிய மறை பயில்கின்ற இசைத்துறை வல்லவர் யாவரும் போற்றி, தேன் மிகுந்த மலர்மழையைப் பொழிந்தனர். மறைகள் வாழத் தோன் றியருளிய பெருமகனாரும், தம் இறைவரின் அருளைப் போற்றி அங்கு நின்றும் விடைபெற்றுச் சீகாழிப் பதியை நோக்கிச் செல்பவராகி,
குறிப்புரை

செந்தாமரை மலர்போன்ற திருக்கைகளில் பொன்னாலாய தாளத்தைக் கொண்டு நடந்து செல்லும் அமையத்தில், தம் குலத் தந்தையார், அவர் நடந்து வருதலைப் பொறாதவராய், அவரைத் தம்தோள்மீது அமர்த்தியபடி, சுற்றிச் சூழ்ந்து தேவர்கள் போற்றுகின்ற, திங்கள் தங்கும் அழகிய மாடங்களையுடைய திருத் தோணிபுரக் கோயிலை வந்து அடைந்தார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

திருத்தகவிற்றாகிய பெருங்கோயிலை வலமாக வந்து, இறைவரின் திருமுன்நின்று, அருள் பெருகும் திருப்பதிகத்தைத் தக்கராகப் பண்ணிலமைந்ததாய்ப் பிற்காலத்தார் வகுத்தவாறு, எட்டுக் கட்டளைகளுள் ஒன்றில், தோணியப்பரைப் பாடவேண்டும் என்ற விருப்பம் மீதூர, அப்பெருமானின் அருள் பெற்றுப் 'பூவார் கொன்றை' (தி. 1 ப. 24) எனத் தொடங்கிப் பாடினார். பண் என்பது இசையாகும். இசையமைப்பின் வேறு பாட்டால் பண்களும் பலவாயின. அவற்றுள்ளும் ஒவ்வொரு பண் ணிலும் பலகட்டளைகள் அமைந்துள்ளன. கட்டளை என்பது அவ் வப்பதிகத்து வரும் சொற்களின் நீட்சியும் குறுக்கமும் குறித்தும், யாப் பமைப்பு குறித்தும் தாள அமைப்பு குறித்தும் இசையமைப்பு வேறு படும் நிலையாகும். இவ்வாறமைந்த கட்டளைகள் தொறும் பாடும் இசையமைப்பு வேறுபடினும், அவற்றின் அடித்தளமாக அமையும் பண் வேறுபடாது.

மேற்கூறிய வண்ணம் தொடங்கிய அப் பதிகத்தின் இசையமைதியைத் திருவருளால் பெற்ற அத்தாளத்தால் பொருந்துமாறு, தாள வரையறை செய்து, முன்பாடிய அத்திருப் பதிகத்தினை அடுத்து, அதைப் போன்றே நிகழும்படி பாடியருளி, பேரன்பு பொருந்த வணங்கிப் போய்க் குறைவில்லாத நிறைவான ஞானமழை கருக்கொண்ட மேகத்தைப் போன்ற காழிப் பிள்ளையார், அலைகளையுடைய நீர் பெருகும் காவிரி பாயும் வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியிலுள்ளோர் பெருவாழ்வு அடையுமாறு இளங்குழவி யின் திருவுருவாகத் தோற்றம் கொண்டிருந்தார்.
குறிப்புரை

அவ்வாறு இருக்கும் நாளில் பிள்ளையாரை முன் ஈன்றெடுத்த தாயாரான பகவதியார், முதற்கண் தன்னிடத்தே தோன்றி யருள முயன்ற தவம் உடைய திருநனிபள்ளியில் உள்ள முதன்மை யுடைய மறையவர் அனைவரும், நிலைபெற்ற மகிழ்ச்சியுடன் மங்கல இயக்கமுடன் மறைகளையும் ஓதியவாறு, அழியாத மதில் சூழ்ந்த சீகாழி என்ற நகருக்கு வந்து சேர்ந்து, கவுணியர் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். பகவதியார் தன்னிடத்தே தோன்றத் தவம் செய்த இடம் திருநனிபள்ளியாகும். இசை நிறைவு கருதி நன்னி பள்ளி என்றாயிற்று.

பேரின்பப் பெருவாழ்வை வழங்கும் சிவ மெய்ஞ்ஞானத்தை, உலகம் மகிழப் பெற்ற பெருவார்த்தை கேட்ட லால், நீண்ட அத்திருப்பதியின் அருகிலுள்ள இருபிறப்பாளர்கள் யாவ ரும், அவ்வினத்தவரல்லாத மற்றவரும், பெருகும் தொண்டர்களும் வியப்புற்றுத் திரண்டு, சீகாழியில் இளஞ்சிங்கமென விளங்கும் பிள் ளையாரிடத்து வந்து சேர்ந்து, அவருடைய திருவடிகளில் வணங்கும் சிறப்பில் மிக்கவர் ஆனார்கள். மங்கலம் - பேரின்பம். எனவே பேரின்பப் பெரு வாழ்வை யடைவிப்பது மங்கல மாயிற்று.

அங்ஙனம் திரண்டுவந்த திருத்தொண்டர்களுக் கும், அந்தணர்களுக்கும் மற்றவர்கட்கும் மனமகிழ்ந்து முகமலர்ந்து உண்பித்தல் முதலான சிறப்புடைய செய்கைகளைத் தத்தம் அளவிலும் நன்றாற்றிவரும் நன்மக்களையுடைய சீகாழிப் பதியானது எம் இறைவரின் சிவலோகமே என விளக்கம் பெற்று எவ்வுலகமும் போற்ற நிற்கும் அந்நாளில்.
குறிப்புரை

செழுமையான முத்துக்களைத் தரும் காவிரியாறு சூழ்ந்த நனிபள்ளியில் உள்ளவர்கள், பிள்ளையாரை வணங்கிப் 'பிறைச் சந்திரனை அணியும் சடையையுடைய சிவபெருமானை எங்கள் பதியில் வணங்கும் பொருட்டுத் தாங்கள் எழுந்தருள வேண் டும்' என வேண்டிக் கொள்ள, அவரும் அதற்கு இசைந்து, திருத் தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளை முறைப்படி வணங்கி, விடைபெற்று, நனிபள்ளியே யன்றி மற்றத் திருப்பதிகளுக் கும் தொழுவதற்கு எண்ணிச் செல்வார்,
குறிப்புரை

ஞானப் பாலமுது உண்ட பிள்ளையாரின், இதழ் கள் விரியும் செந்தாமரையின் அக இதழ்கள் போன்ற சிறிய திருவடி கள் தரையில் பொருந்த நடந்து செல்வதையும், பிறர் எவரும் தாங்கு தலையும் பொறுக்காத அன்புகொண்ட மனமுடைய மாதவம் செய்த தந்தையாரான சிவபாத இருதயர், வந்து எடுத்துத் தம் தோளின் மீது சுமந்தவாறு கொண்டு செல்ல, தாம் சிவபெருமானின் திருவடிகளைத் தம் முடிமீது கொண்ட உள்ளத்தவராய்ப் பிள்ளையார் செல்லலானார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

தேன் பொழியும் கொன்றை மலரை அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் திருநனிபள்ளியைச் சேரச் செல்பவரான பிள்ளையார், 'வானளாவும் மலர்ச் சோலைகளுடன் தோன்றும் இது எப்பதி?' என்று வினவ, தந்தையார் மகிழ்ச்சி அடைந்து, 'அது குவளை மலர்கள் நிறைந்த வயல்களையுடைய திருநனிபள்ளியாகும்' எனக் கூற, அதைக் கேட்ட பிள்ளையார், நன்மை தரும் தமிழ்ப் பாமாலையான திருப்பதிகத்தை அருளிச் செய்வார்,
குறிப்புரை

'காரைகள் கூகை முல்லை' (தி. 2 ப. 84) எனத் தொடங்கிச் செல்லும் கலை ஞானமும் சிவஞானமும் விளங்கும் சிறப் புக் கொண்ட இயற் பதிகத்தைப் பாடி, திருக்கடைக்காப்பில் 'உமை யம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான், நிலையாய் எழுந்தருளியுள்ள திருநனிபள்ளியை நினைப்பவரின் பெரிய இடர் கள் யாவும் கெடுவதற்கு ஆணை நமதாகும்' என்ற பெருமையி னையும் குறித்து அருளினார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. 'கலைசேர் பதிகம்', 'வாய்மைச் சீர் இயற் பதிகம்' எனத் தனித்தனியே கூட்டுக. கலை - நூலறிவு. வாய்மை - சிவஞானம். 'காரைகள் கூகை'(தி. 2 ப. 84) எனத் தொடங்கும் இப்பதிகம் பியந்தைக் காந்தாரத்தில் அமைந்ததாகும். இத்திருப்பதிகத்தின் திருக் கடைக்காப்பு, 'இசையா லுரைத்த பனுவல் நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதலாணை நமதே. ' என நிறைவுறுகிறது. இதனையே ஆசிரியர் கொண்டெடுத்து மொழிவாராயினர்.


நனிபள்ளியில் வீற்றிருந்தருளும் பழம் பொரு ளாய சிவபெருமானின் கோயில் வாயிலை அடைந்து, உட்சென்று, அன்புமிக நெறிப்பட வணங்கிப் போற்றி, அப்பெருமானின் பேரரு ளைப் பெற்று, வெளியே செல்பவரான கவுணியர் தலைவரான பிள் ளையார், தம்மைச் சூழ இருந்து அந்தணர் குழாம் போற்றுகின்ற அன்பைக் கண்டு, அங்கே விரும்பி எழுந்தருளியிருந்தார். இப்பதியின் எல்லையிலிருந்தே பாடியருளிய பிள் ளையார், இறைவன் திருமுன் நின்றும் பாடியிருப்பர். 'நீதியாற் பணிந்து போற்றி' என ஆசிரியர் அருளுமாற்றானும் இவ்வுண்மை உணரலாம். எனினும் இப்பதிகம் கிடைத்திலது.

உமையம்மையார் அருளிய ஞான அமுதத்தை உலகுய்ய உண்ட நம் பெருந்தகையாரான பிள்ளையாரை எதிர் கொள்ள, தேவர்களும் வணங்கும் மெய்ம்மையுடைய தவத்தில் சிறந்த தொண்டர்களுடனே, திருத்தலைச்சங்காட்டில் வாழும் அந்த ணர்கள் அனைவரும் தம் மிகுவிருப்பத்தால் வந்தார்கள். தலைசை - திருத்தலைச்சங்காடு.

அந்தணர் முதலியவர்கள், எங்கும் பந்தல் இட்டுக் கமுகு மரங்களையும் வாழை மரங்களையும் நிறுத்தியும், மலர் மாலைகளைத் தொங்கவிட்டும், நிறைகுடங்கள் வைத்தும், வாணிகம் மிக்க தெருக்களை எல்லாம் அணிசெய்தும், பெருமையுடைய பிள் ளையாரை, வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த மென்மையான சோலைகள் சூழ்ந்த வளமான தம் பதிக்குள் அழைத்துப் போயினர்.
குறிப்புரை

அந்தணர்கள் சூழ இருந்து தத்தம் உள்ளத்தில் மகிழ்ச்சி மிக மறைகளை ஒலிக்க, பெரிய திருமாடக் கோயிலை அடைந்து, அரிய மறைகளின் பொருளாய் உள்ளவரை வணங்கி, அழகிய வலம்புரிச் சங்கின் வடிவில் அமைக்கப்பட்ட அக்கோயிலில், அவ்விறைவர் விரும்பி வீற்றிருக்கும் தன்மை பற்றித் திருப்பதிகத்தைப் பாடினார். இம்மாடக் கோயில் கோச்செங்கட் சோழரால் கட்டப் பெற்றதாகும். முற்பிறவிச் சார்பால், யானை ஏறாதவாறு கட்டப் பெற்றுள்ள கோவிலாகும். வலமாகச் சுழிந்து வரும் திருச்சுற்றுக்களு டன், நடுவில் கருவறையும், அதன் நடுவில் உயர்ந்த நிலையில் இறை வர் விளங்குவதும் வலம்புரிச் சங்குகள் விளங்கும் தோற்றத்தைக் காட் டுவதாகும். இதுபொழுது பாடிய திருப்பதிகம் 'நலச் சங்க' (தி. 2 ப. 55) எனும் காந்தாரப் பண்ணில் அமைந்த திருப்பதிகமாகும்.

நஞ்சின் கருமை கொண்ட கழுத்தையுடைய சிவபெருமானது கோயிலைப் பெருவிருப்பால் பணிந்து திருப்பதிகம் பாடியபின், அந்தணர்கள் தம்மைச் சூழ நின்று போற்ற, வெளியே வந்து, 'திருவலம்புரம்' என்ற திருப்பதியில் சிவபெருமானைத் தொழுது 'கொடியுடை மும்மதில்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றி, வெளியே வந்து, நிறைந்த நீரையுடைய திருச்சாய்க்காட்டுப் பதியைத் தொழுதற்கு நினைந்து செல்பவராய், திருவலம்புரத்தில் அருளிய பதிகம் 'கொடியுடை மும்மதில்' (தி. 3 ப. 103) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பதிகமாகும்.

பாம்புகளை அணியாய்ப் பூண்ட சிவபெரு மானைத் திருப்பல்லவனீச்சரத்தில் தலையினால் வணங்கிப் போற்றி, திருந்தும் இசையையுடைய இரு திருப்பதிகங்களைப் பாடி, காவிரி யாறு சூழும் புகார் நகரத்தில் என்றும் எழுந்தருளியிருக்கும் புனிதரான இறைவர் வீற்றிருக்கும் திருச்சாய்க்காட்டில் நிலைபெற்ற பெருஞ்சிறப் பினையுடைய திருத்தொண்டர்கள் மகிழ்வுடன் எதிர்கொள்ளப் புகுந்தனர். திருப்பல்லவனீச்சரத்தில் அருளிய பதிகங்கள் இரண்டு. 1. அடையார்தம் புரங்கள் - தக்கேசி (தி. 1 ப. 65), 2. பரசு பாணியர் - பழம் பஞ்சுரம் (தி. 3 ப. 112). இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

புகுந்த பிள்ளையார், அக்கோயிலை வலம் கொண்டு, வானளாவ உயர்ந்த திருவாயிலுள் புகுந்து, தேன் சொரிய மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானின் திருமுன் தாழ்ந்து, மானை இடக்கையிற் கொண்ட சிவபெருமானைப் போற்றுபவராய் 'மண்புகார்' என்ற பதிகத்தைத் தொடங்கி, ஊன் எல்லாம் உருகும்படி ஏத்தி, தம் சிவந்த திருக்கைகளை உச்சியிற் கொண்டு கூப்பி வணங்கினார். இது பொழுது அருளிய பதிகம் 'மண்புகார்'(தி. 2 ப. 41) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.

சிறப்புடன் விளங்கும் பாடலால் திருக்கடைக் காப்புச் செய்து போற்றி, உலகில் விளங்கிய திருத்தொண்டர்கள் போற்ற அங்கு இருந்த பிள்ளையார், மேலும், அழகும் இசையும் கொண்ட பதிகத்தைப் பாடிப் போற்றிப் பின், இறைவர் எழுந்தருளி இருக்கும் திருவெண்காட்டினை நிறைந்த மெய்யன்புடன் பணிய, அதுபொழுதே புறப்பட்டார். நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்அம்பந்தும் வரிக்கழலு மரவஞ்செய் பூங்காழிச்சம்பந்தன் றமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்எம்பந்த மெனக்கருதி யேத்துவார்க் கிடர்கெடுமே. (தி. 2 ப. 41. பா. 11) என்பது இங்குப் போற்றப் பெறும் திருக்கடைக்காப் பாகும். பிள்ளையார் தாம் அருளிய இத்திருப்பாட்டில் உயிர் உறுதி பெறுதற்கு எனக் கொளத்தகும் பிணிப்பாகும் இறைவன் என அருளப் பெற்றிருத்தலின், இப்பதிகம் சீரினில் திகழ்ந்த பாடல் திருக்கடைக் காப்புப் போற்றி என்றார். இத்திருப்பதியில் பின்னும் பாடிய பதிகம் 'நித்தலும் நியமம் செய்து' (தி. 2 ப. 38) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும்.

பொன்போன்ற இதழ்களையுடைய கொன்றை மலரும், வன்னியும், கங்கையும், பிறைச் சந்திரனும் ஆகிய இவற்றை அணிந்துள்ள தலைமை பொருந்திய சிவபெருமானின் திருவெண் காட்டில் உள்ள தொண்டர்கள், திருமுன்வந்து, இன்னதன்மை ஆனார் என்று இயம்பலாகாதவாறு மேன்மேலும் மகிழ்ச்சி பெருக, நிலை பெற்ற சிறப்பினையுடைய சீகாழியை ஆண்டு வரும் தலைவரான பிள்ளையாரை வரவேற்று, அழைத்துக் கொண்டு அந்நகரத்துள் புகுந்தனர்.
குறிப்புரை

முத்தமிழ் வித்தகரான பிள்ளையார், சிவபெரு மானின் திருக்கோபுரத்தை, உள்ளத்தில் பெருகிய மகிழ்ச்சியுடன் முன் தாழ்ந்து வணங்கி, எழுந்து, உட்சென்று, பத்திமை மிக்க தொண்டர்கள் சூழ, இறைவரின் திருக்கோயிலை வலம் வந்து, என்றும் நிலைபெற் றிருக்கும் இறைவரின் திருமுன்பு சென்று, நிலம் பொருந்தத் தொழுது விழுந்தார்.
குறிப்புரை

மெய்ப்பொருளாக விளங்கியருளும் திருவெண் காட்டில் வீற்றிருக்கும் இறைவற்குச் சொலற்கரிய சிறப்புடைய திருப் பதிகமான 'கண்காட்டு நுதலானும்' (தி. 2 ப. 48) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்த பதிகத்தை மாலையாகச் சாத்தி, முப்புரங் களையும் எரித்த இறைவர் திருவடிகளைச் சேரும் முக்குளங்களையும் அப்பதிகத்தில் அமைத்துப் பாடி, ஒப்பில்லாத ஞானப் பாலமுது உண்ட பிள்ளையார், மனம் மகிழ்ந்து போற்றி அங்கு வீற்றிருந்தருளினார். முக்குளங்கள்: மதி - (சோம குண்டம்), ஞாயிறு - (சூரிய குண்டம்), நெருப்பு - (அக்கினி குண்டம்) ஆகிய மூவர் பெயரானும் அமைந்திருக்கும் குளங்கள். இம்மூன்றனுள் முன்னிரு குளங்களின் சிறப்பை, 'இருகாமத்திணையேரி' (பட்டினப். வரி 39) எனப் பட்டினப்பாலையும், 'சோம குண்டம், சூரிய குண்டம் துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடும் தாம் இன் புறுவர் உலகத்துத் தையலார் போகம் செய் பூமியினும் போய்ப் பிறப் பர்' (சிலப். புகார்க் கனாத். 59-63) எனச் சிலம்பும் நவிலும். இம்முக்குளச் சிறப்பினைப் பிள்ளையார் 2, 7 ஆகிய பாடல்களில் போற்றியுள்ளார். பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. (தி. 2 ப. 48 பா. 2)

அக்கோயிலினின்றும் பிரிதற்கரிய வகையில் வெளிப்போந்து வணங்கிச் சென்று, அத்திருப்பதியில் அவர் எழுந் தருளியிருந்த அந்நாள்களில், தென் திருமுல்லைவாயிலை அடைந்து செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, அவ்விடத்தினின்றும் அணுகப் பொருந்திய மற்றைய திருப்பதிகளையும் வணங்குவாராய், அந்தணர் போற்ற வந்த ஞானசம்பந்தர், அருட்செல்வம் மிக்க சீகாழியை அடைந்தார். 'திருமுல்லைவாயில்' எனும் பெயருடைய பதிகள் தொண்டை நாட்டிலும் சோழ நாட்டிலுமாக ஈரிடத்தும் உள்ளன. இப்பதி, சோழ நாட்டில் உள்ளதாகும். இவ்வேறுபாடு அறிய இதனைத் தென்திருமுல்லைவாயில் என அழைத்தனர். இங்கு அருளிய பதிகம் 'துளிமண்டி' (தி. 2 ப. 88) எனத் தொடங்கும் பியந்தைக் காந்தாரப் பண்ணமைந்த பதிகமாகும். இங்கு மருவிய பதிகள் எனக் குறிப்பன இவையிவை எனத்தெரிந்தில.

திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கி, திருமுன்பு நின்று, தூய்மை பொருந்திய உரையாணியான திருப்பதிகத்தைப் பாடி, அருள் பெருக்கும் நல்வாழ்வு பெருக, வானளாவ உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த அப்பெரும் பதியில், வீற்றிருந்தருளும் சிவந்த சடையையுடைய சிவபெருமானை நாளும் போற்றிவரும் விருப்பம் மிக்கவராயினர். தூய ஆணி - தூயதாய பொன்னாலாய ஆணி : அச் சாணி இறைவன். உருள் பெருந்தேருக்கு அச்சாணி இன்றியமையா தாதல் போல, உலகுயிர்களின் இயக்கத்திற்கு இறைவன் இன்றியமை யாத அச்சாணியாக விளங்குதலின், அப்பெருமானைத் 'தூய ஆணி' என்றார். 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து' (குறள்,1032) எனவரும் குறளும் நினைவு கூரத் தகும். இவ்வாறு இறைவனை உருவகித்துக் கூறும் பதிகம், 'அன்ன மென்னடை' (தி. 2 ப. 102) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ண மைந்த திருப்பதிக மாகும். இப்பதிகத்தில் வரும் நான்காவது பாடலில் 'சிரபுரத் தமர்கின்ற ஆணிப் பொன்னினை அடிதொழு மடியவர்க் கருவினை யடையாவே' என வருதலின், இப்பதிகமே இதுபொழுது அருளிய பதிகமாகும். இதுவன்றிச் சிவக்கவிமணியாரும், வ. சு. செ. யும் குறிக்கும் 'வண்டரங்க' (தி. 1 ப. 60) எனவரும் பதிகமோ, அன்றி 'எம்பிரான்' (தி. 2 ப. 40) எனவரும் பதிகமோ ஈண்டுப் பாடப்பட்டு இருக்கலாம் என்பது அத்துணைப் பொருத்தம் இன்றாம்.

இவ்வாறு அப்பதியில் வாழ்ந்து வந்த நாள்களில் இப்பதியின் கீழ்த் திசையில் உள்ள திருமயேந்திரப்பள்ளியையும், மணம் கமழ்கின்ற சோலை சூழ்ந்த திருக்குருகாவூரையும், திருமுல்லை வாயில் உள்ளிட்ட முன்பு சென்று வணங்கிய திருப்பதிகள் பலவற்றை யும் இன்பம் பொருந்தப் போற்றி, உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் மீது தமிழ்ச் சொல் மாலைகளைப் பாடினார். திருமயேந்திரப்பள்ளியில் அருளிய பதிகம்: 'திரைதரு' - பண் : கொல்லி (தி. 3 ப. 31). திருக்குருகாவூரில் அருளிய பதிகம் : 'சுண்ணவெண்' - பண்: அந்தாளிக் குறிஞ்சி (தி. 3 ப. 124). திருமுல்லைவாயில் உள்ளிட்ட பதிகளாவன: திருக்கலிக்காமூர், திருவெண்காடு, கீழைத் திருக்காட்டுப்பள்ளி முதலியனவாகலாம். இவற்றுள் திருமுல்லைவாயிலுக்குப் பாடிய பதிகம் ஒன்றே இருத் தலின், அது முதல்முறை சென்ற பொழுது பாடியது என முன்னர்க் குறிக்கப்பட்டது. இது பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது. திருக்கலிக்காமூரில் அருளிய பதிகம்: 'மடல்வரையின்' - பண்: பழம்பஞ்சுரம் (தி. 3 ப. 105). திருவெண்காட்டில் அருளிய பதிகங்கள்: 'உண்டாய் நஞ்ைu2970?' - பண்: காந்தாரம் (தி. 2 ப. 61). 'மந்திர மறையவை' - பண்: காந்தார பஞ்சமம் (தி. 3 ப. 15). கீழைத்திருக்காட்டுப்பள்ளியில் அருளிய பதிகம்: 'செய்யருகே' - பண் : நட்டபாடை (தி. 1 ப. 5).

அங்ஙனமே அருகிலுள்ள திருப்பதிகளுக்குச் சென்று, இறைவரின் அழகிய திருவடிமலர்களை, மெய்ஞ்ஞானப் பாலமுது உண்ட பிள்ளையார் போற்றி, இந்நிலவுலகத்தில் உள் ளவருக்கு உய்யும் வகை உதவும் பொருட்டுத் திருப்பதிகங்களைப் பாடி, எவ்வகையோர்களும் போற்றுமாறு சிவபெருமானை வணங்கி வதிந்திருக்கும் நாள்களில், மருங்கு சூழ்ந்துள்ள பதிகள் செம்பங்குடி, திருக் கொண்டல், திருமயிலாடி, நல்லூர்ப்பெருமணம், நல்லூர் முதலாயின ஆகலாம் என்பர் சிவக்கவிமணியார். எனினும் இப்பதிகளுக்கு உரிய பதிகங்கள் கிடைத்தில. நல்லூர்ப்பெருமணத்திற்கு இதுபொழுது கிடைத்திருக்கும் பதிகம் இவ்வமையத்தில் அருளப்பெற்றதன்று.

திருநீலகண்டத்துப் பெரும்பாணரும், தெள்ளிய அமுதமாய இசைப்பாடலைப் பாடும் மதங்க சூளாமணியாரும், ஒன்றுபட்ட அன்பின் திறத்தால், ஆளுடைய பிள்ளையாரின் திருவடி களை வணங்குவதற்கு, இசையால் இன்பம் பயக்கும் யாழினைக் கொண்டு, சீகாழிப் பதிக்கு வந்து சேர்ந்தனர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

'திருநீலகண்டத்து யாழ்ப்பாண நாயனாரும்' தெள்ளிய அமுதமாய இசைப் பாடலைப் பாடும் 'மதங்க சூளாமணி யாரும்' வருதலை அறிந்து, ஞானசம்பந்தப் பிள்ளையார் எதிரேற்று வரவேற்க, வண்டுகள் பொருந்திய செந்தாமரை மலர் போன்ற அவருடைய இரு திருவடிகளையும் இருவரும் வணங்கி எழுந்து, விரும்பும் ஆர்வத்தோடும் ஏத்தி, மெய்ம்மொழிகளால் போற்றிவரும் பான்மையினால் கிடைக்கப் பெற்ற பெருவாழ்வு வந்து பொருந்த, மகிழ்ச்சியில் திளைத்தனர்.
குறிப்புரை

அளவற்ற மகிழ்ச்சியுடைய அவ்விருவரையும் நோக்கி, 'ஐயரே! தாங்கள் மனம் மகிழ இங்குச் சேர்ந்ததனால் ஆன உறுதிப் பொருளைப் பெற்றவர் ஆனோம்' என்று இளநிலா ஒளிவீசும் புன்னகையுடன் கூறி, அவர்களையும் தம்முடனே கொண்டு, கருமை பொருந்திய நஞ்சுடைய கழுத்தினரான சிவபெருமானிடம் சேரும் கவுணியரான பிள்ளையார்,
குறிப்புரை

திருக்கோயிலின் புறத்தேயுள்ள திருமுற்றத்தில் புகுந்து வணங்கச் செய்து 'பொருந்திய இசையையும் யாழையும் உம் இறைவற்கு இங்கிருந்து இயக்குங்கள்' என்று கூறியருள, அவர்களும் புகழ் பொருந்திய பிள்ளையாரின் திருவருளைப் பெற்றதால் வணங்கிப் பொருந்திய தொடை நரம்புகளை வீக்கி, இசையை வாசிப்பார்களாகி, திருக்கோயிலின் புறமுற்றத்தே நின்று வணங்கச் செய்தது அக்கால மரபு பற்றியதாம்.

இசையிடங்கள் உரிய நிலையில் உண்டாகுமாறு கருவியினால் அமைத்து, நரம்பு படியும் முறைமையின் தகுதியால் ஆன, எடுத்தும் படுத்தும் இசைக்கும் வகையில் இசையைத் தெரிந்து, இறைவரின் திருப்பாட்டினை அளவுபடும் முறையில் பாடினவரான மதங்க சூளாமணியாருடன் ஒன்றிப் பாடி யாழ் வாசிக்கக் கேட்டு, ஞானப் பால் உண்டவரான சம்பந்தர் மகிழ்ச்சியடைந்தார். மறையவர்களும் வியப்புற்றனர். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

யாழினின்று எழும் ஓசையோடு இருவர் மிடற் றின் இசையும் ஒன்றித் திருத்தோணியில் உள்ளாரிடம் அணையும் பெருமையை, தாழ்ந்து வரும் கின்னர மிதுனங்களான இரு பறவை களும், சூழ்ந்த ஒப்பற்ற விசும்பில் நின்று, ஏழிசை நூலில் வல்ல கந்தருவர், வித்தியாதரர் என்பவர்களும் பாராட்டினர். கின்னர மிதுனங்கள் - இவை சந்திர மண்டலத்தில் வாழும் பறவை இனத்தவை என்றும், இசை கேட்டு மகிழும் இயல்பு உடையவை என்றும் கூறுப. இப்பறவைகளோடு, கந்தருவர், வித்தியாதரர்களும் இருந்து இவர்கள் இசையை வியந்து கேட்டு மகிழ்ந்தனர் என்பதாம்.

நினைத்தற்கு அரிய சிறப்புடைய திருத்தோணி யில் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளைப் போற்றி, பண்பொருந் திய யாழும், மிடற்று இசையும் பொருந்துமாறு திருநீலகண்டப் பெரும் பாணரும் அவர்தம் மனைவியாரும் பாடி நிறைவுசெய்த பின்பு, நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் அருளால் சீகாழித் தலைவர் ஆன ஞானசம்பந்தர், அவர்களை அழைத்துக் கொண்டு சென்று, அவர்கள் தங்கியிருப்பதற்குத் தனியிடம் அமைத்து, நல்ல விருந்தை யும் சிறப்பாக அளிக்க,
குறிப்புரை

காழிப் பிள்ளையாரின் அருளைப் பெற்ற பெரும் பாணரும், பிறைச்சந்திரனை அணிந்த கங்கையாறு தங்கிய சடையுடை யவரை, அவர் பாடிய மெய்ப் பதிகங்களை உள்ளவாறு அடியார்கள் சொல்லக் கேட்டு மனமுருகும் பெருமகிழ்ச்சி உடையவராய், தெளிந்த அமுதத்தை உண்டவர் போல உள்ளம் களிப்புக் கொள்ள வணங்கினர். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

சீகாழிப் பதியினர் செய்த தவப்பயனாய் உள்ள கவுணியர் குலத்தில் தோன்றிய சம்பந்தர், கடலில் தோன்றிய நஞ்சை உண்ட இறைவரின் திருவடிகளைப் போற்றும் பதிகங்களின் இசையை ஏழிசைகளையும் ஏவல் கொண்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர், யாழ் முறைமையால் வாசித்து எவ்வுயிர்களையும் மகிழ்வித்தார். ஏழிசையும் பணிகொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர் என்பார், அப்பண்கள் தாமும் தம் ஏவல்வழி நிற்கும் பெற்றியவாய் நிற்றலின். அப்பண்கள் அமையப் பாடத் தாம் அரிதில் இசைப்பதின்றி, இவர் இசைக்கும் அளவில் அவை வந்து அமையும் என்பது கருத்தாம்.

சிறிய மறைக் களிறாய பிள்ளையார் அருளிய திருப்பதிக இசையினை யாழிசையின் நெறியில் வாசித்த பெரும் பாணர், மேலும் அவரை நோக்கி, 'தாங்கள் ஆணையிட்டருளும் அறிதற்கரிய பெருமையுடைய திருப்பதிகங்களது இசையை யாழில் இசைத்து, அடியேன் தங்களைப் பிரியாமல் வணங்கி, உடன் இருக்கும் பேறு பெற வேண்டும்' என்று வேண்டி வணங்கினார். சிறிய களிறு, மறைக்களிறு எனத் தனியே கூட்டுக. அவை அவர்தம் இளமைப் பருவத்தையும் தமிழ் மறைசாற்றி வரும் தகைமையையும் குறித்தன.

அவ்விண்ணப்பத்திற்கு மகிழ்ந்த பிள்ளையார் உள்ளம் மகிழ்ந்து இசைந்தருள, அத்தகைய பேற்றைப் பெற்ற பாண னார், 'இது நம் பெருமானின் அருளேயாம்' என்று விருப்பத்துடன் பேணி, பிள்ளையாருடைய திருப்பதிகங்களான தமிழ் மாலைகளைப் பண்ணமைந்த யாழிசையின் முறையில் வைத்து வாசித்துக் கொண்டே அந்நாள் போன்றே என்றும் பிரியாதவராய் உடன் இருந்து வந்தனர்.
குறிப்புரை

சீகாழியில் இருந்தருளும் திருஞானசம்பந்தர், யாவரும் வணங்கிப் போற்றும் திருத்தில்லையில் திருக்கூத்தியற்றும் இறைவரைப் பணிந்து போற்றிட, பொருந்தி எழும் விருப்பமான பெருவெள்ளத்தைத் தம் உள்ளத்தில் கொள்ள, அதற்கு இசையும் அருட் குறிப்பும் நிகழ்ந்ததாக, அவ்வருட் குறிப்பைத் தவ முனிவராம் தந்தையாரான சிவபாத இருதயருக்குக் கூறினார். பிள்ளையாருக்குத் தில்லைக்குச் செல்ல வேண்டும் எனும் விருப்பமும், குறிப்பும் உள்ளத்தில் தோன்றுதற்கேற்ற திருவருட் குறிப்பு நிகழ, அதனைத் தம் தந்தையாரிடம் தெரிவித்தார்.

காழிப்பிள்ளையார் இவ்வாறு அருள்செய்ய, பெருந்தவத்தின் பயனாய்ப் பிள்ளையாரைத் தமக்கு மகனாராகப் பெற்ற வள்ளலாரான சிவபாத இருதயர், தாமும், அவருடன் செல்ல மன மகிழ்ச்சியுடன் ஒருப்பட்டாராக, பெரிய வெள்ளி மலைபோல் விளங்கும் திருத்தோணியில் வீற்றிருந்தருளும் புள்ளிமான் தோலை உடைய இறைவரை வணங்கி, அருள் விடை பெற்றுச் சீகாழியில் இருந்தும் புறப்பட்டனர்.
குறிப்புரை

குற்றம் இல்லாத யாழ்ப்பாணரோடும், தந்தை சிவபாத இருதயருடனும் பொருந்திய சிறப்புடைய அடியவர்கள் இருமருங்கும் சூழ்ந்து வர, மண்ணுலகில் வந்து நான்முகன் வழிபட்ட சீகாழிப் பதியைக் கடந்து, தேவர்களுக்கெல்லாம் பெருந்தலைவராய கூத்தப் பெருமானின் திருத்தில்லையை நோக்கிச் செல்வாராயினர்.
குறிப்புரை

நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடுகின்ற இறை வர் எழுந்தருளியிருக்கும் தில்லைத் திருப்பதிக்கு இடையில் கண்ட வற்றை வழிபட்டு, அடியில் முள்களுடன் கூடிய புற இதழ்களைக் கொண்ட தாழைகளின் மொட்டுகள் மலருகின்றதால் மணம் கமழ் கின்ற, நீர்ப் பறவைகளையுடைய இடம் அகன்ற வயல்களும், பள்ள மான நிலங்களும் இருமருங்கிலும் கழிந்திடச் சென்று, கவுணியர் குல விளக்கான ஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் தென்கரையை அடைந்தார். 'உறைபதி நடுவு கண்டன போற்றி' எனவரும் பதிக ளும் பதிகங்களும் இவை எனத் தெரிந்தில. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபுடையன.

வண்டுகள் ஒலித்து எழுகின்ற செழுமையான மலர்களின் கூட்டத்தையும், மணிகளையும், சந்தனக் கட்டைகளையும் வாரிக் கொண்டு, சோலைகளின் வளங்கள் பலவற்றுடன் வருகின்ற ஆற்றின் நீர், தாழ்ந்த தம் அடிகளை வணங்கவும், தெளிவான அலை களையுடைய தன்னிடத்தினின்றும் பவளங்கள், சங்குகள் ஆகியவற் றையும், மற்ற மணிகளையும், திரண்ட முத்துக்களையும் அலைகளால் வாரிக் கொண்டு வீசி வரும் கடல்நீர் எதிர் கொள்ளவும், கொள்ளிடத் திருநதியினைக் கடந்து வடகரையின் மேல் ஏறி, இப்பாடல் ஆற்று வளமும், கடல் வளமும் ஒருங்கு உளங்கொள அமைந்துள்ளது.

நிறைந்த அடியவர் திருக்கூட்டத்துடன் பழகி வரும் அந்தணர்கள் சூழ்ந்துவர, செல்லும் கதியின் பயனைக் காண் பவரைப் போல் உளமகிழ்வு கொண்டு, பெருகிய தேவர் முதலான எவ்வுயிர்களும் வணங்க, அவரவர் வேண்டிய வரங்களையெல்லாம் தரும் தில்லையைச் சூழ்ந்த திருவெல்லையினை, ஞானம் நிறைந்த பால் அமுது உண்ட பிள்ளையார் நிலத்தில் விழுந்து வணங்கினார். செல்கதி - சிவகதி. 'எண்ணில்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை' (தி. 3 ப. 24 பா. 1)எனவரும் திருவாக்கும் காண்க. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

இத்திருந்திய உலகுக்கெல்லாம் மங்கலம் தரும் இளமையுடைய யானைக் கன்றான ஞானசம்பந்தர் வரும் இருமருங் கிலும், எங்கும் உறையும் பறவைகளின் ஒலியான வாழ்த்துகள், வழங்க, தாமரை மலர்களின் செம்முகையான கைகள் குவிய, நீர்ப் பொய்கைகள் மலர்ந்த முகத்தைக் காட்டி வரவேற்றன. மங்கலம் தருதல் - சிவம் பெருக்குதல். மழ, இளஎன்பன இளமை யென்னும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாம். பிள்ளை யாரை அங்குள்ள பொய்கைகள் வரவேற்கும் திறனை இப்பாடல் கூறுகின்றது.

மலர்ச் சோலைகளில், தோகைகளையுடைய மென்மையான மயில் இனங்கள் மகிழ்வுடன் அழைக்கவும், புதிய மணமுடைய குளிர்ந்த தென்றல் காற்று எதிர் கொண்டு வரவேற்கவும், பெயர்ந்து எழுந்து உடன்வரும் வண்டுகள் ஒலிக்கவும், விளங்கும் செந்தளிர்கள் ஒளியுடைய நிறம் விளங்கவும், இருகுழைகள் இரு மருங்கும் ஆடவும், மலர்கள் முகம் பொலிந்து அசையவும், மென்மை யான கொம்புகள் நின்று ஆடின. இருகுழை - பெரிய தளிர்கள்: பெண்களுக்கு ஆகுங்கால், காதணியாம். இதனால், சோலைகள் பிள்ளையாரை வரவேற்கும் காட்சி புலனாகும்.

இடம் அகன்ற வயல்களில் உள்ள நெற்பயிர்கள், அணிகள் அணிந்த மார்பகங்களையுடைய, இமயமலையில் தோன் றிய கொடிபோன்ற பார்வதியம்மையார் இனிய அமுதச் சிவஞானத் தைக் குழைத்து அளிக்க, அதை உண்டருளிய ஞானசம்பந்தர் வரக் கண்டு, குளிர்ந்த மென்மையான காற்றினால் மணம் கமழும் மலர் களின் அழகிய நுண்ணிய பூந்தாதுக்களான சுண்ணத்தைத் தூவித் தழைத்த எழில் முகம் செய்து வணங்கின. நெற்பயிர்கள், பிள்ளையாரை வரவேற்ற காட்சி இதனால் விளக்கப் பெறுகின்றது.

வயல்களின் அருகேயுள்ள மணம் கமழும் பாக்கு மரங்கள், உலகம் உய்யும் பொருட்டாக ஞான அமுதையுண்டவர் எழுந்தருளும் திருத்தகைமையைக் கண்டு, சேல் மீன்கள் அலம்பும் குளிர்ந்த நீரையுடைய பொய்கைகளில் படிந்து அணைகின்ற குளிர்ந்த காற்று வீச, மிகப் பல கண்கள் பெற்ற பயன் பெறும் தன்மையினால் மகிழ்ச்சி அடைவன போல், இருமருங்கிலும் அசைந்து நெருங்கி ஆடின. பூகம்: கமுகு என்கின்ற பாக்கு மரங்கள். பிள்ளையார் வரவு கண்டநிலையில் அம்மரங்கள் அவரை ஆடி வரவேற்றனவாம்.

தவம் தழையத் தோன்றியருளிய ஞானசம்பந்தப் பெருமான் வந்தருள, அவரை வரவேற்று மகிழும் பொருட்டுப் பிற வியை ஒழித்தருளுபவரான கூத்தரின் திருத்தில்லை நகரத்தைச் சூழ்ந்த எல்லையில், மறையவர் பயிலும் வேள்வியில், சிவத்தன்மையை விளக்கும் பயன் கொண்ட வேள்வித் தீயினின்றும் எழுகின்ற செழும் புகையினது பரப்பினால், பெரிய வானம், உயர்ந்த நீலநிறமான நுட்ப மான துகிலை மேற் கட்டியாய்க் கட்டினதைப் போல் விளங்கியது. சிவம் தரும் பயன் - பாச நீக்கம் செய்து சிவத்தை அடை விக்கும் பயன்: வீடு பேறாம் பயன். கொள்ளிடத்தின் தென்கரையை அடைந்து தில்லையை நோக்கிவரும் பிள்ளையாரை, இருமருங்கிலு முள்ள பொய்கைகளும் (பா. 148), சோலைகளும் (பா. 149), நெற் பயிர்களும் (பா. 150), பாக்குமரங்களும் (பா. 151), வானமும் (பா. 152) மகிழ்ச்சி மீதூர எதிர்கொண்டவாற்றைத் தொடர்ந்து கூறி யிருக்கும் திறம் அறிந்து போற்றுதற்குரியதாம்.

கரும்பும் செந்நெல்லும் பசுமையான பாக்கு மரங்களுடன் கலந்து உயர்தற்கு இடமான வயல்களைக் கொண்ட மருத நிலத்தைக் கடந்து, அரும்புகளும் மென்மையான தளிர்களும், பழங்களும், வேர்களும் என்றிவை முதலான எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாக உள்ள திருநந்தன வனங்களை வணங்கி, மாடமாளிகை கள் ஓங்கிச் செறியும் தில்லை மாநகரைச் சூழ்ந்த மதிலின் தென்திசை வாயிலின் அருகில், ஞானசம்பந்தர் வந்து சேர்ந்தார். பொய்கை முதலாக உள்ள இயற்கைப் பொருள்கள் யாவும் பிள்ளையாரை வணங்கி வரவேற்கத் திருநந்தனவனத்தை மட்டும் இவர் வணங்கி வந்தனர் என்றது, அஃது இறைவற்குப் பயன் படும் தகவும் பயனும் கருதியாம். 'பன்மலர்ப் புனித நந்த வனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்' எனச் சுந்தரர் வரலாற்றில் (தி. 12 சரு. 1-5 பா. 94) வருமாறும் காண்க.

'பால் பெருகிய மார்பகங்களில் கலந்த மெய்ஞ் ஞானப் பாலமுதினைப் பொன்மலையின் மங்கையாரான உமையம் மையார் தம் கையினால் எடுத்து ஊட்ட, அதனை உண்டருளிய பிள்ளையார் வந்தார்' என்று அங்கு வாழ்கின்ற தில்லைவாழ் அந்தணர்கள் அடியார்களுடன் கூடி நிறைந்து, யாண்டும் நகரை அணி செய்து, பிள்ளையாரை எதிர்கொள்ள அணைவாராய்,
குறிப்புரை

மறைகளின் ஒலியும், மங்கல முழக்கமும் வானத் தில் நிறைந்து ஒலிக்கவும், குளிர்ச்சியும் மணமும் உடைய நீர் நிரம்பிய குடங்களும் நல்விளக்குகளும் நிறைந்து பொருந்தவும், ஒளி பொருந்திய பெரிய மணிகளையுடைய திருவாயிலின் வெளியே நின்று, மங்கலம் பெருக, 'நல் வரவாகுக' என்ற நன் மொழிகளையும் வாழ்த்துரைகளையும் சொல்லித் தீது நீங்கப் பெற்று வாழ்ந்தவர்களாகி, ஞானசம்பந்தரை எதிர் ஏற்று அழைத்துச் சென்றனர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

செல்வம் நிரம்பிய தில்லை மூதூரில் தெற்கு வாயிலின் வழி உட்புகுந்து, இருமருங்கிலும் எடுத்துப் போற்றும் ஒலி சூழ, வளமையுடைய அங்காடித் தெருவினைக் கடந்துபோய், அந் தணர்களின் நிறைவுடைய வாழ்க்கையைக் காண்டற்குரிய திருமாளி கைகள் நிரல்பட அமைந்து நிற்கும் திருவீதியைத் தொழுது, பிள்ளை யாரான தூயவர் திருநகரத்துள் சென்றனர்.
குறிப்புரை

உலகெலாம் மலர்ந்த பேரொளி தண்ணிதாக அமைய, சிவ மணம் கமழ நிற்பதால் வானளவாய தூசுகள் நீங்கப் பெற்று, சிலம்பு ஒலிக்கும் சேவடிகளையுடைய கூத்தப் பெருமான் வீற்றிருக்கப் பெற்றதால் திருத்தொண்டின் உறைப்புப் பெற்ற அடிய வர்களின் உள்ளம் போல் விளங்கும் அவ்வீதியானது தம் கண்களை மகிழச் செய்ய, இவ்வுலகம் பயன் கொள்வதற்குரிய ஞானசம்பந்தப் பிள்ளையார் எழுநிலைக் கோபுரத்தைப் போற்றிப் பணிந்து எழுந்தார். அடியவர்களின் திருவுள்ளம் எனத் திருவீதி திகழ்ந்தது: திருவீதிக்கு ஆங்கால்: ஒளிதிகழ்தல் - சந்திரகாந்தக் கற்களாலாய மாடங்கள், திருவிளக்குகள் ஒளிதருதல். சிவமணம் கமழ்தல் - பெரு மானுக்குரிய தூபம் முதலாய நறுமணப் பொருள்கள் கமழ்தல். வான் துகள் - வானளாவிய தூசுகள். சிலம்பு அலம்ப சேவடியவர் பயில் வுறல் - பெருமான் திருவுலாப்போதருதல். அடியவர்களின் திருவுள் ளத்திற்கு ஆங்கால்: மலர்ந்த பேரொளி திகழ்தல் - உயிராவணம் இருந்து உற்று நோக்கிய நிலையில் உள்ளத்துள் சிவமுளைதழைதல். சிவ மணம் - சிவயோகத்தால் பெற்ற சிவமணம். வான்துகள் - நீள இருந்த ஆணவம் முதலாய தூசுகள். சேவடிபயில்வுறல் - சிவப் பேற்றை அடைதல்.

நீண்டுயர்ந்த நிலைகளைக் கொண்ட தெற்குக் கோபுரத்துள் புகுந்து, நிலைபெற்ற திருமுற்றத்தின் அருகேயுள்ள செம்பொன் மாளிகையைச் சூழ வலமாக வந்து, வானுற ஓங்கிய திங்களைச் சூடிடும் உயர்ந்த பேரம்பலத்தை வணங்கி, மேலும் சென்று, அரிய மறைகள் தொடர்ந்து போற்றத் திருக்கூத்து இயற்றும் கூத்தப் பெருமானின் திருமுன்பு சேர்வதற்கு, அழகு மிகும் மணிகளையுடைய திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார் ஞானசம்பந்தர்.
குறிப்புரை

நந்தி தேவரான நம்பெருமானைத் தலைவராகக் கொண்ட சிவகணநாதர்கள், நலம்மிக நிரல்படக் கூடி நிற்க, எண்ணி றந்த அடியவர்கள், முனிவர்கள், தேவர்கள் முதலியவர்கள் அவர்க ளின் பின்நின்று தொழுகின்ற திருவணுக்கன் வாயிலில், உள்ளத்தில் ஆர்வம் பெருகவும், தலைமீது சிறிய சிவந்த கைகள் ஏறிக் குவியவும், கண்கள் மகிழ்ச்சி பொருந்தவும், உருகிய அன்புடன் உட்புகுந்தார் காழிப் பிள்ளையார்.
குறிப்புரை

தலைமையமைந்த இறைவர் தமக்குத் தந்த மெய்ஞ்ஞானமேயாய திருவம்பலத்தையும், தமதுள்ளத்தே நிறைந் துள்ள அச்சிவஞானத்துள் எழுகின்ற சிவானந்தமான ஒப்பில்லாத பெருமை பொருந்திய திருக்கூத்தையும், கண்களின் முன் வெளிப்படக் கண்டு வணங்கியதால் உண்டான பெருமகிழ்வுடன், கடல் சூழ்ந்த சீகா ழியில் தோன்றிய சிவ புண்ணியக் கொழுந்து போன்ற பிள்ளையார், தூயவரான இறைவரின் திருக்கூத்து இயற்றும் அழகைப் போற்று பவராய், மெய்ஞ்ஞானம் - மெய்யுணர்வு : தன்னறிவானும் தனக்குற்ற கருவிகளானும் அறிதற்கரியதாகலின் உணர்வரிய மெய்ஞ் ஞானம் என முன்னர்க் குறித்தார். இவ்வுணர்வின் பயன் இறையைக் கண்டு மகிழ்தலாம்.

'உள் உணர்வால் உணர வருகின்ற சிவபோ கத்தை, வெளிப்படப் புலப்படுத்தி நிற்கும் ஐம்பொறிகளின் அளவி லும் எளிதில் கண்டு மகிழும் வண்ணம் அருள்செய்தீர்' எனப் போற்றி ஒப்பில்லாத கருணைத் திறத்தை முன்னர்த் தொடங்கிய சொற் பதிகத் தில் பொருந்தும் இனிய இசையுடன் பாடுபவராய், மகிழ்ச்சி மீதூரக் கூத்தாடுபவராய்க் கண்களினின்றும் அவ்வின்பப் பெருக்கைப் பொழிந்தவராய், இக்கருத்தமைவுடைய திருப்பதிகம் கிடைத்திலது.

ஊழிகளின் முதல்வரான கூத்தப் பெருமானுக்கு உரிய அகம்படிமைத் தொழில் புரிந்துவரும் சிறப்பால், தில்லையில் வாழும் அந்தணரை முதலில் வைத்து, ஏழிசையும் பொருந்தி விளங்கக் 'கற்றாங்கு எரியோம்பி' என்ற முதற்குறிப்பை உடைய திருப்பதிகத்தை எம்மை ஆளும் சீகாழிக் காவலர் தொடங்கியவராய், தொடர்ந்து வரும் பிறப்பு இறப்பின் தொடர்பால் இளைப்புற்று நிற்கும் உயிர்களுக்கு அவ்விளைப்பு நீங்குதற்காக அவற்றைத் தன்பால் ஒடுக்கியும், வினை நீக்கத்தின் பொருட்டு மீளத் தோற்றுவித்தும் வரும் பாங்கால், இறைவனை, 'ஊழி முதல்வன்' என்றார். 'ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனையே' (தி. 8 ப. 7 பா. 8) என வரும் திருவாக்கும் காண்க. இவ்வாறு அந்தத்தைச் செய்யும் பெருமானே ஆதியாதல் பற்றி 'அந்தம் ஆதி' என மெய்ந்நூல்கள் குறிப்பதாயின. 'கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே, செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய' என இப் பதிகம் (தி. 1 ப. 80). தொடங்கி வருதலின், 'தில்லைவாழ் அந்தணரை முன்வைத்தே' எனக் கூறினார். இப்பதிகம் குறிஞ்சிப் பண்ணில் அமைந்துள்ளது

காலம் உண்டாகவே காதல் செய்து அழுது அழைத்தவரான பிள்ளையார், பண் நிரம்பிய திருப்பதிகத்தின் திருக்கடைக்காப்பினை நிறைவித்துப் போற்றி, உடற்கு நிலைக்கள னாய எலும்பும், உயிரும் கரையுமாறு உருக்குகின்ற இறைவரின் அருட்கூத்தை வெட்ட வெளியில் நுகர்ந்து, கண்ணகத்தே நின்று களிதரும் அமுதை உட்கொண்டார். இப்பதிகப் பண் குறிஞ்சியாம். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

முற்காலத்தில் திருமாலும் நான்முகனும் அறியாத இறைவரின் திருமுன் நின்று, சொல் மாலையான திருப்பதிகங்களால் எல்லாக் காலங்களிலும் போற்றி வணங்கி, அளவற்ற பெருமறை களின் வெள்ளங்கள் சூழ்ந்து வணங்குகின்ற செம்பொன் மாளிகை யான பொன்னம்பலத்தை வலமாக வந்து புறத்தே போந்தார். 'சொல்மாலையால் கால மெல்லாம் துதித்து' எனவே, இக்கால எல்லையில் பிள்ளையார், பல்வேறு பண்களில், பல பதிகங் களை அருளிச் செய்திருத்தல் வேண்டும். எனினும் அவை கிடைத் தில. பன்மாமறை வெள்ளம் - அளவற்ற மறைகள். அம்மறைகளை ஓதிவரும் அளவற்ற அந்தணர் கூட்டம் என்றும் அமையும். இனி அம்மாளிகையின் தூண்கள், பலகணிகள், மேல்வேய்ந்த ஓடுகள் பலவும் மறைகளின் மந்திர உறுப்புக்களாக அமைந்திருத்தல் பற்றி இங்ஙனம் கூறினார் எனலுமாம்.

செல்வம் பொருந்திய திருமுன்றிலின் கீழே விழுந்து வணங்கி எழுந்து, விண்ணவர் கூட்டம் நிறைந்திருக்கும் திருவாயிலில் வந்து வணங்கி, மாதவங்களைத் தரும் நான்கு வீதிக ளையும் வணங்கி, அவ்விடத்தில் தங்கியிருத்தற்கும் பிள்ளையார் அஞ்சுபவராய், செல்வத் திருமுன்றில் - செல்வராய பெருமானும் அவரை வணங்கும் செல்வமாய செல்வமும் நிலைபெற்றிருக்கும் திருமுன்றில். தவத்தின் பயன் சிவத்தை அடைதலாம். இவ்வீதிகள் சிவமே நிலவிய திருவீதிகளாதலின் அப்பயனை அவ்வீதிகளே நல்குதலின் 'மாதவங்கள் நல்கும் திருவீதி' என்றார். அவ்விடத்துத் தங்குதற்கும் அஞ்சினார் என்பதால் அப்பதியின் பெருமையுணர நின்றது. அன்றியும் தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சார்ந்து நிற்கும் பிள்ளையாரின் பெருமையும் உணர நின்றது.

ஞானசம்பந்தர் சிவந்த சடையையுடைய சிவபெருமானின் திருவேட்களத்துக்குச் சென்று, கையால் தொழுது சொல்பதிகத்தைப் பாடி, எழுந்தருளியிருக்கும் இடம் அவ்விடமாக, நாளும் அப்பேரம்பலத்தில் வீற்றிருந்தருளும் பெருமானாரின் திருக் கூத்தையும் சென்று கண்டு மகிழ்ந்து மீண்டு போந்திருக்கும் அந்நாளில், திருவேட்களத்தில் பாடிய சொற்பதிகம் 'அந்தமும் ஆதியும்' (தி. 1 ப. 39) என்று தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

தம் திருக்கையில் மான் கன்றைக் கொண்டி ருக்கும் சிவபெருமான் எழுந்தருளிய திருக்கழிப் பாலையைச் சேர்ந்து மெய்ம்மை பொருந்திய சொற்பதிகத்தைப் பாடி, மணமுடைய கொன்றை மலராலாய அழகான மாலையைச் சூடிய திருச்சடையை உடைய 'திருவுச்சி' என்னும் பதியில் எழுந்தருளிய இறைவரைக் கும்பிட்டு அரிய தமிழ்ப்பதிகத்தையும் பாடினார் காழிப் பிள்ளையார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின. திருக்கழிப்பாலையில் அருளிய பதிகங்கள்: 1. 'புனலாடிய' (தி. 2 ப. 21) - பண், இந்தளம். 2. 'வெந்தகுங்கிலியப்புகை' (தி. 3 ப. 44) - பண், கௌசிகம். திருநெல்வாயிலில் அருளிய பதிகம்: 'புடையினார்' (தி. 2 ப. 26) - பண், இந்தளம். இத்திருப்பதி திருவுச்சி என்றும், சிவபுரி என்றும் அழைக்கப்பெறும். இப்பதிகப் பாடல் தொறும் இறைவன் 'உச்சியாரே' எனக் குறிக்கப் பெறுதலும் காணலாம். உச்சியார் - தலை மீது உள்ளவர் எனும் பொருள்படவும் வரும். 'தலைமே லான்' (தி. 6 ப. 8 பா. 5) என வரும் அப்பர் திருவாக்கும் காண்க.

பாடப்பட்ட பதிகத்தின் இசையினைத் திரு நீலகண்ட யாழ்ப்பாணரும் யாழில் இசைத்து வேண்டத்தகும் சிறப் பைப் பெற்றார். நாளும் தில்லையில் சென்று இறைவரின் திருக்கூத் தைப் போற்றிவரும் பிள்ளையார், தில்லைவாழ் அந்தணர்கள் நீளும் திருவம்பலத்தில் ஆடும் திருவடிகளுக்கு அணுக்கத் தொண்டர்களாக இருக்கும் பேற்றைப் பார்த்து வியப்படைந்து வந்தனர்.
குறிப்புரை

அங்கு வாழும் அந்தணர்கள் தம் ஒழுக்கத்தில் அளவில்லாத சிறப்புடன் நிற்கும் நிலைமையும் எண்ணி, மேல் கிளர்ந்து எழும் ஆசை நீங்காத மனத்துடன், ஒருநாள் மணம் வீசும் சோலை சூழ்ந்த திருவேட்களத்தைக் கடந்து, மலர்கள் நிரம்பிய அகழி சூழ்ந்த திருப்புலியூரினுள் புகுந்து சேர்கின்ற போழ்தில்,
குறிப்புரை

எவ்வுலகிற்கும் இறைவரான கூத்தப் பெருமான் திருவருளால், அழகிய தில்லையில் வாழ்கின்ற, நெற்றியில் திருநீற்றை அணிந்த அந்தணர் மூவாயிரவரும் திருத்தொண்டின் தன்மையுடைய சிவகண நாதர்களாய்த் தோன்றக் கண்டு, அதனை ஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் காட்டினார். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

அருட்செல்வம் என்றும் நீங்கப் பெறாத தில்லை வாழ் அந்தணர்களும், அளவற்ற சிறப்பையுடைய சீகாழியில் தோன் றிய இளஞ்சிங்க ஏற்றைப் போன்ற ஞானசம்பந்தர் எழுந்தருளி வந்து விரைந்து தம்மை வணங்குதற்கு முன்பே, தாமும் உடனே வணங்கிச் செழுமையும் பொலிவும் கொண்ட வீதியில் அவர் அருகே சூழ வந்தனர்.
குறிப்புரை

மேன்மேலும் பெருகி எழும் மிக்க ஆசையானது வெளித் தோன்றுமாறு அந்தணர்களின் சிங்கம் போன்ற ஆளுடைய பிள்ளையார், தலைமீது கூப்பிய தாமரை மலரின் அழகையும் வென்று அவ்வழகாலே ஓங்கும் கையுடனே சென்று திருவாயிலுள் புகுந்தார்.
குறிப்புரை

இறைவரிடம் ஒன்றுபட்ட மனம் உருக, உயர்ந்த மேரு மலையைப் போன்ற பேரம்பலத்துள் நிறைந்து அருள்கூத்து இயற்றுகின்ற மாணிக்கக் கூத்தரின் திருமுன்பு திருக்களிற்றுப் படியின் கீழே நின்று தாழ்ந்து எழுந்தார்.
குறிப்புரை

'ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்' என்று தொடங்கி, மிகுந்த ஆசையுடன் பாடினார். மேலும் அப்பதிகத்தில் போற்றியதொரு திருப்பாட்டில், தில்லைவாழ் அந்தணர்களை அன்று தாம் கணநாதராய்க் கண்ட அந்நிலைகள் எல்லாம் பொருந்துமாறு கோத்து, அத்தகைய தன்மையுடையவர் தொழுது, வணங்கும் திருச்சிற்றம்பலமாகும் என்று எடுத்துக் கூறி, 'ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்' (தி. 3 ப. 1) எனத் தொடங்கும் பதிகம், காந்தார பஞ்சமப் பண்ணில் அமைந்தது. தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணநாதர்களாகப் பிள்ளையார் கண்டு போற்றிய குறிப்பை, இப்பதிகத்துள் 3ஆவது பாடல் கூறும்.
'நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல
நெற்றி மேலுற்ற கண்ணி னார்பற்று
சூலத் தார்சுட லைப் பொடி நீறணி வார்சடையார்
சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலஞ்


இவ்வாறாய நிலையில் இனிய இசை பொருந்திய பதிகத்தைத் திருக்கடைக் காப்புச் சொல்லி நிறைவாக்கிப் போற்றி, நிலைபெற்ற ஆனந்த வெள்ளத்துள் முழுகித் திளைத்து, எதிரில் வந்து நின்றாடும் பின்னிய நீண்ட சடையையுடைய கூத்தரின் திருவருளைப் பெறுமாறு பிரியா விடை பெற்றுப் பொன்னம்பலத்தை வலம் வந்து வெளிமுற்றத்தை அடைந்தார் பிள்ளையார். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

அத்திரு முற்றத்தைப் புறத்தில் வணங்கி, அங்குத் திருவருள் பெற்று அழகிய மணிகள் பதித்த திருவாயிலில் தொழுது, வணங்கி, எழுந்தார் பிள்ளையார். அது பொழுது தம்முடன் வரப் பெறும் பேற்றைப் பெற்ற புகழையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் திருவடிகளை வணங்கி, அடியவனின் பதியான 'திருஎருக்கத்தம் புலியூர்' முதலாக 'நிவா நதியின் கரையில் உள்ள ஒப்பில்லாத திருப்பதிகளைச் சென்று வணங்க வேண்டும்' என்று வேண்டிக் கொள்ளப் பிள்ளையாரும் அதற்கு உடன்பட்டவராய், நிவாநதி - வட வெள்ளாற்றை இன்றும் சிற்சில இடங்களில் நிவா நதி என அழைப்பர். திருமுறைகளில் நிவா நதி எனும் பெயரே பெரிதும் குறிப்பிடப்படுகின்றது.

நீர் பெருகுகின்ற தெளிந்த அலைகளையுடைய, தூய நீர் நிரம்பிய, நிவா நதிக்கரையின் வழியே, மேற்குத் திசையில் சென்று, தம்முடன் வந்தருளும் தந்தையாரான சிவபாத இருதயர், அடியவர்கள், தவமுனிவர்கள், செவ்விய கையில் யாழையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவர் மனைவியாரான மதங்க சூளா மணியாரும் யாவரும் உடன்வர ஆளுடைய பிள்ளையார் சென் றருளினார். கொல்லி மலை, பச்சைமலை ஆகிய இம்மலைகளி லிருந்து வரும் கானாரியாறு, எழுமூர் ஆறு, என்பனவும், கல்விராயன் மலையிலிருந்து பல சிற்றாறுகளாகப் பெருகி, ஆற்றூர், ஆறகனூர், சின்ன சேலம் வழியாக வரும் இப்போது வசிஷ்ட நதி என்று வழங்கும் ஆறும், கல்விராயன் மலை, மற்றும் சில சரிவுகளிலிருந்து வரும் மயூர நதி, திருமணிமுத்தாறு (திருமுதுகுன்றம் வழியாக வருவது), தேனாறு முதலியவைகளும் ஆங்காங்கு வந்து கூடி, வடவெள்ளாறு என்ற பெயரால் பெருகி வரும் சிறப்புடையது நிவா நதியாகும். ஆதலின் ஆசிரியர், 'பொங்கு தெண்டிரைப் புனிதநீர் நிவா' என்றார் (சிவக் கவிமணியவர்கள் குறிப்பு). இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பெரிய நீர் நிலைகளையும் வயல்களையும் கடந்து சென்று திருஎருக்கத்தம்புலியூரின் அருகில் சென்று சேர, திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருமுன் வந்து வணங்கி நின்று, மேகங்கள் நெருங்கிய தும் பூஞ்சோலைகள் சூழ்ந்ததுமான இத்திருப்பதி, அடியேனின் பதியா கும் என்று விண்ணப்பித்துக் கொள்ள, மிகவும் மகிழ்ச்சியடைந்து, அரிய மறை முதலிய கலைகள் யாவும் விளங்குதற்கு இடமான அத் திருப்பதியை சிறிய இளைய யானைக் கன்றைப் போன்ற பிள்ளை யார் அணைந்து அருள் செய்பவராய்,
குறிப்புரை

'ஐயரே! நீர் இங்குத் தோன்றுதற்கு இத்திருப்பதி யானது அளவற்ற பெருந்தவத்தைச் செய்திருந்தது எனச் சிறப்பித்துக் கூறி, அச் செழிப்புடைய திருப்பதியில் இடம் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருநீலகண்டரான இறைவரின் திருக்கோயிலுக்குள் சென்று வணங்கி, உலகுய்யத் தோன்றிய பிள்ளையார் செழுந்தமிழ்ப் பதி கத்தை இசையுடன் அருள்செய்தார். இத்திருப்பதியில் பாடியருளியது 'படையார் தரு' (தி. 1 ப. 89) என்று தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். சிறந்த அடியவர்கள் உடன் இருக்கப் பாடுங்கால் அவர்களை அப்பதி கப் பாடல்களுள் ஒன்றிலோ அல்லது பதிகம் முழுமையாகவோ கூடச் சிறப்பித்துப் பாடுவது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய பெருமக்களின் இயல்பாகும். இதனை அவரவர் வரலாற்றிலும் ஆங்காங்குக் காண இயலுகின்றது. அந்நிலையில், யாழ்ப்பாணர் தில்லையில், தம்பதி முதலாயவற்றிற்கு வரவேண்டும் என விண்ணப்பித்துக் கொண்டும், உடன் வந்தும், திருப்பதிகங்களை யாழிலிட்டு இசைத்தும் வர, அவரைச் சம்பந்தர் அவர்தம் திருப்பதியில் அருளிய இப்பதிகத்துள் ஓரிடத்தேனும் வைத்துப் பாடாதிரார் என்றே நினைய வேண்டியுள் ளது. இப்பதிகத்துள் ஏழாவது பாடல் கிடைத்திலது. ஒருகால் அப்பாடலில் இயைத்துப் பாடி இருக்கலாம் அன்றி இத்திருப்பதிக்கு, இப்பதிகம் தவிரப் பிறபதிகங்கள் இருந்து, அவற்றில் வைத்துப் பாடப்பெற்று, அவை இன்று கிடைக்காமலும் இருக்கலாம், திருவருள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அப்பதியினின்றும் புறப்பட்டு மேற்சென்று, அழகிய பொன்மலையில் தோன்றியருளிய உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் இனிதாய் உறைகின்ற பதியாகிய பலவற்றிற்கும் சென்று பணிந்து ஏத்தி, உயர்ந்த வண்டமிழ்ப் பாமா லைகள் பாடிச் சென்று, பழமையான சீகாழித் தலைவரான பிள்ளை யார் சிவந்த கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் 'திருமுதுகுன்றத்தை' வணங்கிச் சென்று அணைப வராய், 'பதிபல பரிவோடும் பணிந்தேத்தி' என்பதால், திருஎருக்கத்தம்புலியூரிலிருந்து திருமுதுகுன்றம் வரையிலுள்ள பல பதிகளுக்கும் சென்று பற்பல திருப்பதிகங்களையும் பாடியருளியிருக் கலாம். எனினும் அப்பதிகங்கள் எவையும் கிடைத்தில.

'பெருமணிகளை மிகுதியாகக் கொழித்துக் கொண்டு வரும் திருமணிமுத்தாறு சூழும் திருமுதுகுன்றத்தைச் சென்ற டைவோம்' என்று பொருந்தும் சொல்மலர்களாலாய பதிகத்தை இசையுடன் பாடிப் போற்றி, சிறந்த தவத்தையுடைய முனிவர்களும் தேவர்களும் திசையனைத்தும் நெருங்கப் புகுந்து, இறைவரின் சேவடி களை வணங்குகின்ற அப்பழமலையினிடத்து அன்பு மீதூரச் சென்ற டைந்தார். 'முதுகுன்றடைவோமே' எனும் தொடர், பதிகம் முழுதும் அமைந்துள்ளது. அப்பதிகம் 'மத்தா வரை' (தி. 1 ப. 12) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணாலாமைந்த பதிகம் ஆகும். இஃது திருப்பதியை அணையும் பொழுது அருளியதாகும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

தேவதேவரான சிவபெருமானின் திருமுதுகுன் றத்தை வழிபடும் பொருட்டு, அதை வலமாய் வருகின்றவராய்த் தூய நல்ல தமிழ்ச் சொற்களால் திருவிருக்குக்குறட் பதிகமாகிய துணை மலர்களை மொழிந்து, போற்றிச் சிவபெருமானின் கோயிலை அடைந்து, உட்சென்று, தேன்சிந்தும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை அணிந்த சிவபெருமானின் அடிகளில், ஞான அமுதத்தை உண்ட பிள்ளையார், மிகுந்த அன்புடனே தாழ்ந்து வணங்கினார். திருக்கோயிலை வலம் வரும் பொழுது அருளிய திருவிருக்குக்குறள் பதிகம், 'நின்று மலர்தூவி' (தி. 1 ப. 93) எனத் தொடங் கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த திருப்பதிகமாகும்.

வணங்கி எழுந்து, இறைவன் திருமுன்பு நின்று, 'முரசதிர்ந்தெழுதரு' என்ற தண்ணார் தமிழ் மாலையைப் பாடி, இன்புற்று வெளிப்போந்து, வளம் மிக்க அத்திருப்பதியில் தங்கி யிருந்தார். அவர் மணிகளையுடைய அந்தத் திருமுதுகுன்றத்தைச் சூழ்ந்த நீருடைய 'முத்தாற்றினுடனே' சேர்த்து இயற்றிய திருப்பதிக மாலையை விரும்பிய அன்புடனே பலமுறையும் கூறி, அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தார். இறைவன் திருமுன்பு அருளியது 'முரசதிர்ந்தெழுதரு' (தி. 3 ப. 99) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதியில் வாழ்ந்தருளிய பொழுது, மணிமுத்தாறு நதியுடன் இணைந்த பல பதிகங்களை அருளிச் செய்தார் என ஆசிரியர் அருளுகின்றார். இப் பதிக்கென இவ்வமையத்து அருளியனவாகக் காணக் கிடைக்கும் பிற பதிகங்கள் நான்காம். அவை:
1. 'தேவராயும்' (தி. 1 ப. 53) - பழந்தக்கராகம்
2. 'மெய்த்தாறு' (தி. 1 ப. 131) - மேகராகக் குறிஞ்சி
3. 'தேவாசிறியோம்' (தி. 2 ப. 64) - காந்தாரம்
4. 'வண்ண மாமலர்' (தி. 3 ப. 34) - கொல்லி.
2ஆவது பதிகத்தில் 1, 11 ஆகிய இருபாடல்களிலும், 4ஆவது பதிகத்தில் 4ஆவது பாடலிலும் மணிமுத்தாறு பேசப்படுகின்றது. சேக்கிழார் திருவாக்கை நோக்கின், மணிமுத்தாற்றினை இணைத்துப் பாடிய மேலும் சில பதிகங்கள் இருக்கலாம் எனக் கருத இடனுண்டு.

அங்கு வீற்றிருக்கும் தலைவரை வணங்கி, விடை பெற்றுச் சென்று 'திருப்பெண்ணாகடம்' என்ற பதியை அடைந்து, அரிய மறைகளின் ஓசை முழங்கும் 'திருத்தூங்கானைமாடம்' என்ற அக்கோயிலுள் விரும்பி வீற்றிருக்கின்ற ஒப்பற்ற மேலாய ஒளியான இறைவரின் அருகணைந்து, வலம் வந்து, திருமுன்பு பணிந்து, எழுந்து, போற்றும் சொல் தமிழ் மாலையான, 'தீங்கினின்றும் நீங்கும் கருத்துடையீர்களே! இங்குத் தொழுமின்கள்' என்ற கருத்துடைய இசைப் பதிகத்தைப் பாடியருளினார். இதுபொழுது அருளிய பதிகம் 'ஒடுங்கும்' (தி. 1 ப. 59) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பதிகம் ஆகும். இப்பதிகத்துள்ள பாடல்கள் பத்தும், 'உலகியலை விடுத்து வீட்டுலகம் அடையக் கருதுவீர் திருத்தூங்கானை மாடம் தொழுமின்களே' என ஆற்றுப் படுத்துகின்றன. அவற்றை உளங் கொண்டே ஆசிரியர் சேக்கிழாரும், இவ்வாறு மொழிந்தருளுகின்றார்.

பிறவியின் எல்லைக்கு உட்படாத அடியவர்கள் கை தொழுகின்ற சுடர்க் கொழுந்தீசரை வணங்கி, மனம் மகிழ்ந்து, விடைபெற்றுக் கொண்டவர், தோணியப்பரிடம் தவம் கிடந்து பெற்ற வரத்தால் தம்மை ஈன்ற தந்தையாருடன் 'திருவரத்துறையைச்' சேர்வோம் எனச் செல்பவராய்,
குறிப்புரை

முன்நாள்களில் செல்லும் பொழுதெல்லாம் முதுமைப் பருவம் உடைய தந்தையாரின் தோள் மீது ஓரொருகால் எழுந்தருளிச் சென்ற அப்பிள்ளையார், இதுபொழுது அந்நிலையை விடுத்து, அந்தணர்களும் அத்தந்தையாரும் தம்மைச் சூழ்ந்துவர மனத்திற் கொண்ட பெருவிருப்போடு, முன்னே நடந்து சென்றார். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பழைமையுடையவரான சிவபெருமானின் திருவரத்துறையினை நோக்கி, மிக்க விருப்புடன் அணைபவராய், விரைவாய்ச் செல்லவும், தந்தையாரும் வருந்த, ஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளும் சிறிதளவு நொந்தன. பைப்பய - பையப்பைய; சிறிது சிறிதாக; மிகப் பெரிதாக இன்றிச் சிறிய அளவில் வருந்தின. திருவடி வருந்தவும் தாம் வருந்தவில்லை என்பார், அத்திருவடிகள் மீது வைத்துக் கூறினார்.

மறைகள் யாவும் ஒருவடிவம் கொண்டாற்போல் நிறையும் திங்கள் ஒன்று, நீண்ட இம்மண்ணுலகத்தில் வந்து சேர்ந்தாற் போலச் சென்று, நீர்த் துறைகளில் அலைகளை வீசும் கங்கை சூடும் திருவரத்துறையில் வீற்றிருக்கும் இறைவரைத் தொழுவதற்காக விரைந்து சென்றனர் மறைகள் திரண்டு ஒரு வடிவு எடுத்தாற் போலக் கலைகள் பதினாறும் திரண்டு ஒரு முழுத் திங்களாய் நிறைவு பெற, அத்திங்கள் மண்ணுலகத்திற்கு வந்தாற் போலக் காழிப் பிள்ளையார் வரலாயினார்.

உலகியல் பாசம் சிறிதும் இல்லாதவராயினும் இறைவனிடத்துப் பாசம் கொண்ட தன்மையால் சிவ ஒளி மிக்க திரு உருவான பிள்ளையார் சிவபெருமானை வணங்கியவாறு சென்றார்.
குறிப்புரை

இப்பேருலக இருள் நீங்கத் தோன்றிய வேதியர் குல மணியான சம்பந்தர், மனத்தில் ஊறும் அமுதமான சிவந்த சடையையுடைய தந்தையாம் சிவபெருமானின் திருவடிகளைத் தாழ்ந்து வணங்கி எழுந்து சென்றார். இவற்றால் பிள்ளையாருக்குத் திருவரத்துறைப் பெருமானைக் கண்டு வணங்குதற்குரிய உள்ள மிகுதியும் உடல் பெற்றியும் ஒருங்கு புலனாகின்றன. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

'மாறன் பாடி' என்ற ஊரில் வந்து சேர, வழி நடந்து செல்லும் வருத்தத்தால் உண்டான சோர்வால் தம்மைச் சூழ வரும் அடியார்கள் இளைப்படைய, சிறந்ததான ஐந்தெழுத்தைப் எண்ணியவாறு பிள்ளையார் அங்குச் சேர,
குறிப்புரை

உலகு உய்வதற்காக வந்த ஞானசம்பந்தருடன் வந்தவர்க்கு, வழிநடந்து வந்ததன் வெம்மையினால் உண்டான இளைப்பைப் பார்த்து, அச்சம் கொண்டவனைப் போல் தன் அளவற்ற கைகளையும் உள்ளே இழுத்துக் கொண்டு, மறைந்து போய்க் கதிரவன் மேலைக் கடலில் விழுந்தான். ஒளி நீங்கி இருள் சேர வந்ததைத் தற்குறிப்பேற்றமாக ஆசிரியர் இங்ஙனம் கூறுவாராயினர். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

அன்றிரவில் அப்பதியில் தம்மைச் சூழ இருந்த திருத்தொண்டர்கள் போற்ற, ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவ பெருமானின் திருவடிகளையே போற்றுபவரான பிள்ளையார், உள் ளொளி பெருக்கும் வெற்றி பொருந்திய மாதவத்தவருடன் அங்குத் தங்கியிருந்தனர்.
குறிப்புரை

இந்நிலையில் அழகு மிக்க சீகாழித் தோன் றலாரின் வழி வருத்தத்தை, அன்னப் பறவைகள் பொருந்திய நீர்த் துறைகளையுடைய திருவரத்துறையில் எழுந்தருளியிருக்கும் தலை யில் கங்கையாற்றையுடைய இறைவர், தம் திருவுள்ளத்தில் கொண்டார்.
குறிப்புரை

பிள்ளையார் ஏறிச் செல்வதற்குச் சிவிகையும், மேலே கவித்துக் கொள்வதற்குக் குடையும், அவர்தம் பொருள்சேர் புகழை எடுத்துக் கூறி ஊதுவதற்கு விளக்கம் கொண்ட அழகிய சின்னங்களும் ஆகிய இவற்றை முத்துக்கள் பதிய அமைத்த சிறப்புடன் வழங்க, ஒப்பில்லாத திருநீற்றை விரும்பும் அரத்துறை இறைவர் அருள்வாராய்,
குறிப்புரை

பெருவாழ்வு பெற்ற திருப்பதியான திருநெல் வாயில்அரத்துறையில் மாடங்களைக் கொண்ட பெரிய இல்லங்கள் தோறும் உள்ள மறையவர்களுக்கு அன்றிரவு கனவில், பெருமையு டைய நான்மறைகளும் தேடும் செவ்விய திருவடிகள் தோன்றுமாறு, அவர் முன்போய்,
குறிப்புரை

'ஞானசம்பந்தன் நம்மிடம் வருகிறான். அரிய கலைகளுக்கெல்லாம் தலைவனான அவனிடம் நீங்கள் பெரிய முத்துச் சிவிகையையும் அழகிய குடையையும், பொருந்திய சின்னங்களை யும் நம்மிடம் பெற்றுக் கொண்டு போய்க் கொடுங்கள்' என்று இறைவர் உரைத்தருள,
குறிப்புரை

இறைவர் உரைத்த அளவில், அந்தணர்கள் வந்து ஒன்றாகக் கூடி, தாம் தாமும் கண்ட கனவைச் சொல்லி மகிழ்ந்து, அற்புதமான சிந்தையுடன் செழுமையான நீர்வளம் பொருந்திய திருவரத்துறையில் எழுந்தருளிய பிறை சூடிய சடையையுடைய பெருமானின் கோயிலின் வாயிலில் வந்து கூடினர். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

அங்கு முன் சொன்ன வண்ணம் இறைவர் அருள் அங்குள்ள அடியாருடன் ஓங்கு கோயிலுள் உள்ளவர்களுக்கும் உண்டாகியது. உண்டாகவே 'இங்கு இது என்ன பேரதிசயம்' என்று வியந்தவர்கள், அங்குவந்து கூடிய அம்மறையவர்களுக்குத் தாங்கள் முதலில் கூறினர்.
குறிப்புரை

மிகப் பெரிய வியப்பை அடைந்த நிலையில், அச்சமயத்தில் திருப்பள்ளி எழுச்சிக்குரிய காலம் வரவும் அன்பு வழிப்பட்ட சீலம் உடைய அவர்கள் கோயிலின் கதவைத் திறந்தனர்.
குறிப்புரை

சந்திரன் போன்ற தண்ணிய செழுமையான முத்துக்கள் இழைத்த பெரிய வெண்குடையும், தூய சிவிகையும், ஒலி மிகுமாறு ஊதப்பெறும் ஒப்பிலாத சின்னங்களும் ஆகிய இவற்றை அங்கு இறைவரின் திருவருளால் அவர்கள் பார்த்தனர்.
குறிப்புரை

அவற்றைக் கண்ட அவர்கள் தம் கைகளைத் தலைமீது குவித்து, 'இவை எண்திசைக்கும் விளக்காகும்' எனக் கூறி, தொண்டர்களுடன் சூழ்ந்து, வணங்கி, எழுந்து, தேவர் உலகமும், அறியும்படி மகிழ்வைப் பெருக்கினர். பிள்ளையாரின் அடிமைத் திறனும், அவருக்கு அரத்துறை இறைவர் வழங்கிய அருள் பெருக்குமாகியவற்றை எண் திசையிலுள் ளாரும் அறிதலின், இவ்வியத்தகு நிகழ்ச்சி எண் திசைக்கும் விளக் காயிற்று.

சங்கு, துந்துபி, தாரை, பேரிகை முதலியவாகப் பேரொலி பெருக்கும் இயங்களின் ஓசை பொலிவு பெற்று எழுமாறு செய்து, இறைவரின் திருவருளால் வரப்பெற்ற அச்சிவிகை, குடை, சின்னங்கள் என்ற இவற்றை உடன் கொண்டு, மேன் மேலும் எழு கின்ற ஆசை எதிர்கொள்ளப் போவாராய்,
குறிப்புரை

குற்றம் இல்லாத வாய்மையுடைய திருநெல் வாயிலில் உள்ள அந்தணர்கள், குற்றமற்ற சிறப்பையுடைய சீகாழியில் தோன்றிய பிள்ளையாருக்கு, ஒளியுடைய சிவிகை முதலியவற்றை இறைவரின் திருவருளால் தாங்கிச் சென்றனர். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

இவ்விடத்திலுள்ள இவர்கள் இவ்வாறு சென்ற னர். அங்குச் சீகாழித் தலைவரான பிள்ளையாருக்கும் அன்றைய இரவே நல்ல முத்துக்கள் பதித்து வைத்த சிவிகை முதலானவற்றை ஏற்றுப் பயன் கொள்ளுமாறு முன் உணர்த்துவாராய், இத்தலை அத்தலை என்பன இவ்விடம் அவ்விடம் எனும் பொருள் குறித்தன.

சேறுமிக்க நீர்வளம் வாய்ந்த வயல்கள் சூழ்ந்த திருவரத்துறையில் எழுந்தருளியிருக்கும் வள்ளலாரான சிவபெரு மான், 'நாம் மகிழ்ந்தளிக்கும் இச்சிவிகை முதலானவை ஏற்றுக் கொள்ளத் தக்கவையாகும் ஆதலின், அவற்றை ஏற்றுப் பயன் கொள்வாயாக!' என்று பிள்ளையாருக்கு அருளிச் செய்ய, அவ்வரு ளிப்பாட்டை அறிந்து உறக்கம் நீங்கிய பின்பு,
குறிப்புரை

சீகாழித் தலைவரான சம்பந்தர், தாம் கனவில் கண்ட மெய்யருளின் தன்மையைத் தந்தையாருக்கும் அருகிலிருந்த தொண்டர்களுக்கும் கூறியருளித் திருவருளைத் தொழுவதற்கு முன்னமேயே, வானம் வெளிப்பட்டுத் தோன்ற, இருள் நீங்கவும்,
குறிப்புரை

முன்னர் இருந்த மாலையும் யாமமும் முறையே நீங்க, பொழுது புலரும் விடியற்காலையில் செயத்தக்க கடன்களை முடித்து, வெண்மையான திருநீற்றினை அணிந்த சிவப்பொலிவு கொண்ட அழகிய திருமேனியராகி, கைம்மலர்களைத் தலைமேல் குவித்துப் பொருந்துமாறு திருவைந்தெழுத்தை ஓதி எழுந்தருளி யிருந்தார். 'வெய்யவன் சென்று மேல்கடல் வீழ்ந்தனன்' என முன்னர் (பா. 192) வந்த மாலையும், அதனைத் தொடர்ந்து வந்த யாமமும் நீங்க, பொழுது புலர்வுறும் வேளையில் என வரலாற்றியைபு அறிய, 'மாலையாமம் புலர்வுறும் வைகறை' என்றார். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

மெய்யுணர்தலாகிய ஞானம் பெற்ற தூயவரான சீகாழித் தலைவரைக் குளிர்ந்த முத்துக்களையுடைய சிவிகையில் ஏற்றி வணங்க, மிக்க அன்பு கொண்டவன் போலக் கதிரவனும் கரிய கடல் மீது தோன்றித் தன்தேர் மீது ஏறிவந்தனன். கதிரவன் வந்தமையைத் தற்குறிப்பேற்ற அணி நலம் பொதுளக் கூறியவாறு.

அதுபொழுது 'அரகர' என்ற முழக்கத்துடன் தூய முத்தினால் ஆய சிவிகையையும், ஒளிபொருந்திய குடையையும், பொருந்திய சின்னங்களையும் தாங்கிக் கொண்டு மெய்யன்பர்கள் உடனே பொருந்திய அந்தணர்களும், அங்கிருந்த பிள்ளையாரின் எதிரே வந்து தோன்றினர்.
குறிப்புரை

வந்து தோன்றிய அந்தணர்களும் மெய் அன்பர்களும் மணம் மிக்க பொழில்களையுடைய சீகாழித் தலைவர் ஆன சம்பந்தர் திருமுன்புநின்று, 'அழிவற்ற சிறப்பையுடைய திருவரத் துறை இறைவர் அளித்தருளிய பேரருள் வடிவான இப்பொருள்களை ஏற்றுக்கொள்வீராக' என வேண்டினர்.
குறிப்புரை

ஈசர் தமக்குக் கனவில் அருளியதும் நனவில் வழங்கியதுமான அருளிச் செயல்களுள் ஒன்றையும் விடாமல் எடுத்துக் கூறிப் பிள்ளையாரின் முன் நின்று போற்றி வணங்கினர். 'இவ்வருஞ் செயல்கள் எல்லாம் பெருமன்றுள் ஆடும் பெருமானின் திருவருளேயாகும். ' எனப் பிள்ளையார் கூறி வணங்கினர்.
குறிப்புரை

உள்ளவாறு போற்றிப் பற்றுவிடாத விருப்பத்தால் தம்மை நினைத்திருக்கும் தன்மையைக் கொடுத்து அருளுகின்ற இறைவர், செம்மையான முத்துச் சிவிகையாம் சிறப்பை அளித்தல் எம்மைத் தம் அடியவராக உவந்து ஆட்கொள்ளும் பொருட்டாய் இன்று அளித்த பேறுதான் என்னே! என வியந்தனராய், இப்பாடல், அடுத்திருக்கும் 'எந்தையீசன்' எனத் தொடங்கும் பாடலை அடுத்துச் சில பதிப்புக்களிலும், 'பொடியணிந்த' எனும் பாடலை அடுத்துச் சில பதிப்புக்களிலும் காணப்படுகின்றது. இவ்வீரமைவுகளும் வரலாற்றுத் தொடர்ச்சிக்குப் பொருந்துமாறில்லை என்பர் சிவக்கவிமணியார்.

'எந்தை ஈசன்' எனத் தொடங்கிச் சிவபெருமா னின் திருவருள் இருந்த வண்ணம் இவ்வண்ணமோ என்று சிந்தை செய்யும் இத்திருப்பதிகத்து இசையை உள்ளம் நிறைவு கொள்ளும் வரை புகன்று எதிரே நின்று போற்றுவாராய், எதிர்போற்றி - இறைவன் அருளிய அருங் கொடை களை அப்பெருமானது திருமுன்னிலையில் நின்று போற்றி 'எந்தை ஈசன்'(தி. 2 ப. 90) எனத் தொடங்கும் இப்பதிகம் பியந்தைக் காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும். அரத்துறை அடிகள் தம் அருள் அப்பெரு மானை நாளும் மனம், மொழி, மெய்களால் வணங்கி நிற்பார்க்கல் லாது கிட்டாது எனப் பாடல்தொறும் கூறப்பட்டுள்ளது.

திருநீற்றை அணிந்த முன்னைப் பழம்பொருட் கும் முன்னைப்பழம் பொருளாய் திருவரத்துறை இறைவரின் திரு வருளே இதுவாகும் என ஒப்பற்ற சொல்மாலைகளைப் பாடி, நீள நினைந்து வணங்கித் திருப்பதிகத்தை நிறைவு செய்தார். இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சொல் மாலை ஆகும். ஆதலின் பன்மை வாசகம் படக் கூறினார். இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

ஒளிபொருந்திய முத்துச் சிவிகையினைச் சூழ்ந்து வலமாக வந்து, நிலத்தின் மேல் விழுந்து வணங்கி, அதன் வெண்ணீற்று ஒளியைப் போற்றி நின்று, அது இறைவரின் அருள் என வியந்து திருவைந்தெழுத்தை ஓதிப் பிள்ளையார் உலகம் எல்லாம் உய்தற் கென அதில் ஏறியருளினார். 'உலகெலாம்' எனும் தொடர் இறைவர் ஆசிரியருக்கு எடுத்துக் கொடுத்த தொடராகும். அதனை ஈண்டுத் தம் காப்பியத்தில் நடுவிடமாய ஈண்டும் வைத்துப் போற்றியுள்ளமை அறியத் தக்கது.

அடியவர் மகிழ்வொலி செய்தனர். மறைகள் முழங்கின. பழைமையுடைய தேவர்கள் மகிழ்வொலி செய்தனர். மேகங்கள் உலகம் உவக்குமாறு முழங்கின. முழவு இயங்கள் ஒலித் தன. கூட்டமாய்ச் சேர்ந்து வண்டுகள் நீங்காத அழகிய மலர் மழையை வானம் சொரிந்தது.
குறிப்புரை

சங்குகள் ஒலித்தன, ஊது கொம்புகள் ஒலித்தன, மறை வேள்விகள் ஒலித்தன, உறவினர் மகிழ்வொலி செய்தனர், உயிர்க்கு உயிராக இருந்தருளும் இறைவரின் கருணையினால் பிணிக்கப்பட்ட முத்துக்களினின்று வீசும் பெருங்கதிர்களுடன் வெண் குடை மேலே கவிழ்க்கப்பட்டு விளக்கம் பெற்றது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பெருகும் வெண்கதிர்களின் ஒழுங்குடைய முத்துச் சிவிகையின் மீது திருநீற்று ஒளியுடன் விளங்கும் சீகாழித் தலைவர், தங்கும் வெண்மையான சங்குகளை வாரி எழுகின்ற அழ கிய வரிசையான அலைகள் நிறைந்த பாற்கடலில் வளரும் திங்கள் தோன்றினாற் போல எழுந்தருளி வந்தார். பாற்கடல் முத்துச் சிவிகைக்கும், திங்கள் அதன் மீது இயங்கிவரும் பிள்ளையாருக்கும் உவமையாயின. 'பான்மதி உவரி ஈன்றால் எனமகப் பயந்த போது' (தி. 12 பு. 10 பா. 33) என ஆசிரியர் முன் அருளிய திருவாக்கும் நினைவு கூர்க.

நிறைந்த தொண்டர்களும், அந்தணர்களும் மற்றவர்களும் நெருங்கி வந்து, தங்கள் உள்ளத்தில் மீதூர்ந்து எழுகின்ற மகிழ்ச்சியினால் மலர்க்கைகளை மேலே குவித்துத் தன் வயம் இழந்த நிலையில் ஆடினர்; அளவற்ற மகிழ்ச்சி பொருந்திய கண்களினின்று பொழியும் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினர்.
குறிப்புரை

சிவந்த பொன்னாலாய வெண்முத்துக்களின் அழகு சிறக்குமாறு உள்ளதும் சைவத்திற்கும் நான்மறைகட்கும் தலை வர் ஆன சிவபெருமானிடத்தில் பெற்றதும், ஒப்பில்லாததுமான எக்காளம் என்ற சின்னம், உலகு ஏழும் நான்மறைகளும் நிறைந்த தவத்தை உடையவர்களும் உய்யுமாறு 'திருஞானசம்பந்தன் வந்தான்' என்று கூறி ஊதவும், செய்யபொன் புனை வெண் தரளத்து அணி சிறக்கும் காளம், சைவமாமறைத் தலைவர் பாற்பெறுங் காளம், தனிக் காளம் எனத் தனித் தனியே கூட்டுக. ஏனைய காளங்கள் வெறும் உலகியல் பற்றிய நிகழ்ச்சிகளையே ஊதுவன. இதுவோ ஞானசம்பந்தரைப் பற்றியும் அவருக்கு அருளிய இறைவரைப் பற்றியுமான செய்திக ளைக் கூறுவதாகும். ஆதலின் அதன் சிறப்புத் தோன்ற இங்ஙனம் கூறினார்.

சூழ்ந்து ஒலிக்கும் பெருமறைச் சுருதிகளின் பெருமுழக்கத்தினிடையே பகைவரின் முப்புரங்களையும் எரித்த இறைவர் அளித்தருளிய திருச்சின்னம் 'ஞானமே வடிவாய அம்மையார் தம் ஞானத் திருமுலை சுரந்து ஞான அமுது ஊட்டப் பெற்ற பாலறாவாயன் வந்தான்' என ஊதவும்,
குறிப்புரை

சூழவரும் மெய்த்தவ முனிவர் குழுவுடன் செல்கின்றவர் முன்பு, இணைந்த முத்துக்களின் விளங்கும் ஒளிப் பெருமை சூழ்ந்து கிளர்தற்கு இடமான தாரை என்ற சின்னம் 'பெரு மறைகளையும் அவற்றின் வழித்தாய் வரும் எல்லாக் கலைகளையும் ஓதாமல் உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான்' என ஊதவும்,
குறிப்புரை

தெளிவைத்தரும் உண்மைக் கலைகள் விளங் கும்படியும், அதனுடன் உலகத்தில் உள்ளவரின் சிந்தையில் தங்கிய இருள் நீங்கும்படியும் எழுதும் சொல் மறையை அளிப்பவரான ஆளுடைய பிள்ளையார், 'போற்றி' என்று வழிபடுவோர்க்குப் பொரு ளையும், ஞானத்தையும், இன்பத்தையும் அளிக்கும் சிவபெருமானின் திருவரத்துறையை வந்து அடைந்தார். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

அத்திருப்பதிக்கு அணுக வந்தருளிய பிள்ளை யார், கோபுரவாயில் தொலைவிலே தோன்றிய அளவில், அழகிய முத்துச் சிவிகையினின்றும் கீழே இறங்கி நிலத்தில் விழுந்து பருவடி வாக விளங்கும் இலிங்கத்திருமேனியாகிய அக்கோபுரத்தை வணங்கி எழுந்து, உள்ளத்தில் எழுந்த ஆசையும் மகிழ்ச்சியும் மேலும் மேலும் பொங்கித் தமக்கு முன் செல்ல, மாலைக் காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரனைச் சூடிய திருவரத்துறை இறைவரின் திருக்கோயிலின் உள் அடைந்தனர்.
குறிப்புரை

நிலைபெற்ற அக்கோயிலை வலம் வந்து, திருமுன்பு வந்து, தலைமீது கைகளைக் குவித்து நிலத்தில் விழுந்து, அன்பில் திளைப்பவராய் 'என்னையும் ஒருபொருளாகக் கொண்டு இனிய அருளைச் செய்யும் பொன்னடித் தாமரைகளுக்கு என்றும் வணக்கம் செலுத்தும் கடப்பாடுடையேன்' என்று எழுந்து போற்றினார்.
குறிப்புரை

கைம்மலர்களைத் தலைமேல் சூடிக்கொண்டார், பெருகி வழிகின்ற கண்ணீர் ஒழுக்கால் திருமேனி நனைய ஆடினார். திருவரத்துறையை விரும்பித் தொன்றுதொட்டு வீற்றிருந்தருளும் இறைவரின் கருணையை நினைந்து ஏழிசையுடன் பொருந்தத் திருப் பதிகம் பாடினார். இவ்வரிய பதிகம் கிடைத்திலது.

ஏழ் இசையும் பொருந்துமாறு திருவருட் கருணையைத் திருப்பதிகத்தால் போற்றிப் பாடி நிறைவாக்கி, நின்று வழிபட்டு, மேலே கங்கை நீர் விளங்குவதற்கு இடமான சடையை உடைய சிவபெருமானின் திருவருள் பெற்று, அங்கு நின்று மீண்டும் எழுந்தருளி, எத்திசையில் உள்ளவர்களும் சிவஞானம் பெற்றுய் யும்படி திருவருள் பெற்றவரான பிள்ளையார், தம்நிலையில் தாழாத சிறப்புடைய தொண்டர்களுடன், சில நாள்கள் அத்திருப்பதியில், விரும்பி எழுந்தருளி இருந்தார்.
குறிப்புரை

தேவரின் தலைவரான சிவபெருமானைத் திருவரத்துறையில் இருந்து வணங்கி அங்கிருந்தருளிய நாள்களில், சிவபெருமானின் திருநெல்வெண்ணெய் முதலான திருப்பதிகளைக் குற்றம் அற்ற அன்பர்களுடனே தொழுது, பின் சீகாழித் தலைவரான பிள்ளையார் இறைவரின் திருவருளைப் பெற்று உடன் கலந்திருந்து மீண்டும் திருவரத்துறையில் வந்து சேர்ந்தார். திருநெல்வெண்ணெய் முதலாக உள்ள திருப்பதிகளை வணங்கினார் எனக் குறிக்கப்பெறினும், அப்பதிகள் எவையென அறிதற்கில்லை. திருநெல்வெண்ணெய்க்கு உரிய பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. பதிகம் - நல்வெணெய் விழுது (தி. 3 ப. 96) பண் : சாதாரி.

பிள்ளையார் வணங்கி வரும் வேணுபுரமான சீகாழியில், திருத்தோணிக் கோயிலில் வீற்றிருந்தருளும் திருநீலகண்ட ரான இறைவர் தம் துணைவியாராகிய திருநிலைநாயகி அம்மையா ருடன், தம் உள்ளத்தே இடம் கொள்ள நிறைந்து உள்புகுந்து உணர்வில் வெளிப்படக் கண்டு, உள்ளம் உருகி, வளம் உடைய அழகிய நீர் பொருந்திய சீகாழிக்குச் செல்ல உள்ளம் கொண்டார்.
குறிப்புரை

பெருமையுடைய திருவரத்துறை இறைவரை வணங்கி, பொருந்திய அவரது பெருந் திருவருளினால் விடைபெற் றுக் கொண்டு சென்று, உள்ளத்தில் ஆனந்தக் கூத்தியற்றி ஆட்கொண் டருளிவரும் அழகிய திருவடிகளைத் தலைமீது கொண்ட வண்ணம், வெண்மையான நிலவு ஒளி வீசும் முத்துச் சிவிகையின் மீது இவர்ந் தருளினார்.
குறிப்புரை

சிவிகையில் பதிக்கப்பெற்ற முத்துக்களினின்றும் பெருகும் ஒளி எத்திசைகளையும் விளக்கவும், மேலே கவித்த முத்துக் குடையின் வெண்மையான மதிபோன்ற ஒளி, கதிரவனின் ஒளி பரவு கின்ற வானத்தில் கலக்கவும், குவித்த கைகளைத் தலை மேற்கொண்டு தம்மைச் சூழ்ந்துவரும் அந்தணர்கள் மகிழ்ச்சி மீதூர்வால் குணலைக் கூத்து இட்டு மகிழ்ந்து ஆடிவரவும், கைம்மாறு வேண்டாக் கடப்பாட் டுடன் உலகைக் காப்பதற்கு என்றே தோன்றிய பிள்ளையார் எழுந் தருளினர். குணலை - மகிழ்ச்சி மீதூர ஆடும் ஒருவகைக் கூத்து.

மறைகள் முழுங்கின; வளமையுடைய தமிழ் மறைகள் ஒலித்தன; பல்வேறு வகையான ஊதுகொம்புகளின் ஒலிகள் ஒலித்தன; சங்கின் கூட்டங்கள் முழங்கின; எக்காளங்கள் பிள்ளையா ரின் முறையான மெய்க்கீர்த்திகளைக் கூறி ஒலித்தன; மற்றும் பலவகை இயங்களும் ஒலித்தன; முரசுபோன்ற பெரிய இயங்கள் பலவும் ஒலித்தன; அடியார்தம் போற்றியுரைகளின் ஒலி, இவ்வொலிகளுக் கெல்லாம் மேலாக ஒலித்தது. வயிரின் குறைகள் - ஊதுகொம்புகள் நீண்டனவாயும், சிறுசிறு துண்டுகளாகவும் இருத்தலைக் குறைகள் என்றார்.

ஆளுடைய பிள்ளையார் வரும் இடங்களில் எல்லாம், ஆங்காங்குள்ள ஊரவர்கள் இருமருங்கிலும் கொடிகளுடன் அழகிய துகில்களையும், நடைக்காவணங்களையும், தோரணங்களை, பாக்கு, வாழை, நெருங்கிய மாலைகள் போன்ற இவற்றால் செய்யும் அணிவகைகளையும், விளக்குடன் நீர்நிறை குடங்களையும் நிரல்பட வைத்து எதிர்கொண்டார்கள்.
குறிப்புரை

அவ்வகையில் தம்மை எதிர்கொண்ட திருப்பதி களில் வினைவயத்தால் வரும் பிறவிகளை நீக்கியருளும் இறைவரின் திருக்கோயில்களுக்குச் சென்று புனையும் வளமை கொண்ட தமிழ்ப் பதிகங்களைப் பாடி, இறைவரின் திருவடிகளை வணங்கிச் சென்று, பனை போன்ற நீண்ட கையையுடைய யானையை உரித்த சிவபெரு மான் வீற்றிருக்கும் 'திருப்பழுவூர்' என்ற திருப்பதியைப் பிள்ளையார் அடைந்தார். எதிர் கொண்ட பதிகள் எவை எனத் தெரிந்தில.

அங்குச் சென்று பிறைச் சந்திரனைச் சூடிய திருச்சடையையுடைய இறைவரின் பெருகும் அழகுடைய திருக் கோபுரத்தை வணங்கிக் கோயிலுள் புகுந்து, பின்பு, பெரிய விமா னத்தைச் சூழ்ந்து வலம் வந்து, திருமுன்பு சென்று, தாமரை போன்ற திருவடிகளைத் தொழுது பாடுவாராய்,
குறிப்புரை

இந்நிலவுலகில் சிறந்து விளங்கும் அந்தணர் குலத்தில் வந்த மலையாளர்கள் தொழுது, எண்ணற்ற பல சிறந்த பணிகளைச் செய்து போற்றி வரும் பான்மையைச் சிறப்பித்து, இறை வரைப் போற்றிப் பண் இசையால் விளங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். இவ்விடத்தருளிய பதிகம் 'முத்தன்மிகு மூவிலைநல்' (தி. 2 ப. 34) என்ற தொடக்கம் உடைய இந்தளப் பண்ணமைந்த பதிகம் ஆகும். இப்பதிகத்தில் 4, 5, 7, 9, 11 ஆகிய பாடல்களில் மலையா ளர்கள் வழிபட்டமை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. 'அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும், பந்தமலி கின்றபழு வூரரனை' (தி. 2 ப. 34) எனவரும் திருக்கடைக்காப்பில் இவர்களின் பணி தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

இத்திருப்பதிகத்தை இசை வழியே பாடி, அங்கு நின்று சென்று, யாவரும் உடன்கூடி வணங்குமாறு, மூவுலகங்களும் உய்ய நஞ்சை உண்டருளிய இறைவர் விரும்பி எழுந்தருளியுள்ள பெரிய 'திருவிசயமங்கை' என்ற பதியைச் சேர்ந்தனர்.
குறிப்புரை

'மறையவர் வாழ்கின்ற விசயமங்கை என்ற திருப்பதியில் சிவபெருமானின் ஒப்பற்ற திருக்கோயிலை வலம் வந்து வணங்கி, திருமுன் வணங்கி நின்று, அங்குப் பசுக்கள் வழிபட்ட செயலை, நிலைபெறச் செந்தமிழ்ப் பதிகத்தில் வைத்துச் சிறப்பித்துப் போற்றி வழிபட்டனர். இப்பதியில் பாடப்பட்டது 'மருவமர் குழலுமை' (தி. 3 ப. 17) எனத் தொடங்கும் காந்தார பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். 'கோதனம் வழிபடக் குலவு நான்மறை வேதியர் தொழு தெழு விசய மங்கையே' எனவரும் 2ஆவது பாடலை உளங்கொண்டு ஆசிரியர் அருளிச் செய்துள்ளார். கோதனம் - பசுக்களாகிய செல்வம்.

விசயமங்கை என்ற பதியினின்றும் நீங்கிச் சென்று, இறைவரின் திருவடி என்றும் நிலைபெற்றிருக்கும் திருவைகா வூர் என்னும் திருப்பதியை அடைந்து திருப்பதிகம் சாத்தியருளினார். பின் அப்பதியினின்றும் சென்று, நாளும் இன்னிசையால் தமிழ் வளர்க்கும் திருஞானசம்பந்தர், எண் திசைகளையே ஆடையாகக் கொண்ட இறைவரின் 'திருப்புறம்பயம்' என்ற பதியை அடைந்தார். திருவைகாவூரில் இவர் பாடிய பதிகம் 'கோழைமிட றாககவி' (தி. 3 ப. 71) என்று தொடங்கும் சாதாரிப் பண்ணமைந்த பதிக மாகும்.

திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வணங்கிப் போற்றும் பண்ணியல் திறம் அமைந்த செந்தமிழை, வண்ணம் மிகும் இசையுடன் பாடி, நீடிய அறத்தை உதவும் கொள்கையினரான பிள்ளையார், அங்கு விருப்புடன் எழுந் தருளி இருந்தார். இப்பதியில் பாடிய பதிகம் 'மறம்பய மலைந்தவர்' (தி. 2 ப. 30) எனும் தொடக்கம் உடைய இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். திறம்புரிநீர்மையில் - பண்ணியல் திறம் பொருந்திய தன்மையில். பண், பண்ணியல், திறம், திறத்திறம் எனப் பண் வகை நான்கென்பர். இவற்றுள் திறம் பொருந்திய நீர்மையில் இப்பதிகத்தை அருளினர். நீடிய அறமாவது உயிர் பெறுதற்குரிய நிலைத்த பயனாய வீட்டுலகைப் பெறும் அறமாம். இவ்வறத்தைக் கூற வந்தவரே ஞானசம்பந்தர் ஆவர் 'சிவம் பெருக்கும் பிள்ளையார்' என்றதும் இதுபற்றியேயாம்.

அத்திருப்புறம்பயம் என்ற பதியைப் பணிந்து சென்று, தீயை ஏந்திய கையையுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கும் முத்தமிழ் வல்லவரான பிள்ளையார் வயல் களில் சங்குகள் முத்துக்களை ஈனுவதற்கு இடமான 'திருச்சேய்ஞ லூரை' வந்தடைந்தார். 'பதிபிறவும் கைதொழுது' என்பதால் அப்பதிகள் திருவியலூர், திருந்துதேவன்குடி முதலாயினவாகலாம் எனக் கூறி, அவற்றிற்குரிய பதிகங்களையும் ஈண்டுக் காட்டினர் சிவக்கவிமணியார். எனினும் பின்வரும் 294, 295ஆம் பாடல்களில் இத்திருப்பதிகளை வணங்கினார் பிள்ளையார் என விதந்து கூறும் இடத்தையே இப்பதி கங்கள் அருளியமை சேக்கிழாரால் குறித்துப் போற்றப்படுகின்றது. ஆதலின் இப்பதிகங்களைப் பின்வரும் அவ்விடங்களின் அணியன வாகக் குறிப்பதே பொருந்துவதாகும்.

செல்வம் மிக்க சீகாழிப் பதியின் தலைவர் இங்ஙனம் எழுந்தருள, சேய்ஞலூரில் வாழ்கின்ற அந்தணர்கள், தம் பதியை அணிசெய்து, முன்பாக மறை முழக்கத்துடன் மங்கல முழவுகளின் ஒலிகளும் விளங்க முறைமை வழாது பிள்ளையாரை எதிர்கொள்ளும் பொருட்டு வந்தனர்.
குறிப்புரை

திருஞானசம்பந்தப் பெருமானும், 'இறைவர் தம் சடையில் சாத்திய தூய நறிய கொன்றை மலர் மாலையை முன்னர்த் தம் தலையில் சூட்டப் பெறும் பேறுடைய சண்டீசர், எழுமையும் ஏமாப்புடைய நல்லுணர்வோடு வந்து தோன்றிய திருப்பதி இது' என்று மனத்துள் எண்ணி, முத்துப் பல்லக்கினின்றும் இழிந்து, அப் பதியை வணங்கி வந்து சேர்ந்தார்.
குறிப்புரை

பெருமை மிகுந்த அந்தணர்கள், அருட் கொடை யாளரான சீகாழிப் பிள்ளையார் அங்ஙனம் எழுந்தருளிவர, தங்க ளின் சண்டீசப் பிள்ளையாரே அழகிய தம்பதியின் மீண்டும் எழுந் தருளி வரக்கண்டது போன்ற மகிழ்வுடன் வணங்கியும் ஆடியும் மகிழ் வொலி செய்தும் எதிர் கொண்டனர்.
குறிப்புரை

அவ்வூரவர் இங்ஙனம் மகிழ்ச்சியடைந்து புண்ணியக் குடத்திலுள்ள மணம் கொண்ட நீரைத் தெளித்தனர். பொரிகளையும், மலர்களையும் சொரிந்தனர். ஆனந்தக் கண்ணீர் பொழிந்தனர். அளவற்ற மறைகளை வழங்கியருளிய சிவபெருமா னது திருக்கோயிலில் புகுந்து அப்பிள்ளையாரின் முன்னர்ச் சென்றனர்.
குறிப்புரை

வெங்குரு என்னும் சீகாழித் தலைவரான பிள்ளையாரும், விளங்கும் கோயிலை மிக்க விருப்பத்துடன் வலமாக வந்து, சிவந்த கைகளைத் தலைமேல் குவித்து, உள்ளே புகுந்து, இறைவரின் திருமுன்பு சேர்ந்து வணங்கினர்.
குறிப்புரை

அந்தணர் வாழ்தற்கு இடமான சேய்ஞலூரில் எழுந்தருளியிருக்கும், இயல்பாகவே வினையின் நீங்கியவராய இறைவரின் திருவடிகளை வணங்கி, அப்பெருமானின் அருள் திறத்தைப் போற்றுபவராய பிள்ளையார், தம் தந்தையின் காலை வெட்டிய சண்டீசப் பிள்ளையார், கொடுஞ்செயலான அதற்குப் பய னாய் இறைவரின் மகனார் ஆன தன்மையைப் போற்றிப் பாடினார். இத்திருப்பதியில் அருளிய பதிகம் 'நூலடைந்த' (தி. 1 ப. 48) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பதிகமாகும். இப்பதிகத்தில்,
பீரடைந்த பாலதாட்டப் பேணாத வன்றாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலை சூட்டித் தலைமைவ குத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.
-தி. 1 ப. 48 பா. 7எனவரும் ஏழாவது திருப்பாடலை நினைவு கூருகின்றார் ஆசிரியர் சேக்கிழார்.

பிள்ளையார், இனிய இசையமைப்புடைய இவ் வண்டமிழ்ப் பதிகத்தைப் பாடிப் போற்றினார்; மிகுந்த பழைமை யுடைய அத்திருப்பதியில் உள்ளவர்கள் விரும்பியதால் அங்குத் தங்கினார்; பின்பு வெண்மையான பிறையைச் சூடிய செஞ்சடையார் எழுந்தருளியிருக்கும் திருப்பனந்தாளுக்குச் சென்று வணங்கினார்.
குறிப்புரை

அத்திருப்பதியில் அழகிய சொல்மலர்களால் ஆன பதிகமாலையைச் சாத்தியபின், அருகில் உள்ள 'திருப்பந்தணை நல்லூரைப்' பணிந்து பாடிப் போற்றி, மேற்செல்கின்றவர், தீமையை நீக்கும் பெருமறைபயிலும் வேதியர்கள் விளங்கி உயர்வதற்கு இடமான 'திரு ஓமாம்புலியூரினில்' வந்து சேர்ந்தார். திருப்பனந்தாளில் இறைவர் திருமுன்பு அருளியது, 'கண்பொலி நெற்றியினான்' (தி. 3 ப. 62) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். தாடகையீச்சரம் என்றது அப்பெயரு டைய பெருமாட்டி வழிபட்டமையால் ஏற்பட்ட கோயில் பெயர் ஆகும். பந்தணைநல்லூரில் பாடியது, 'இடரினார் கூற்றை'(தி. 3 ப. 121) எனத் தொடங்கும் புறநீர்மைப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

அந்நற்பதியில் வடதளிக் கோயிலில் எழுந்தரு ளிய, அற்புதமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி விளங் கும் செந்தமிழால் ஆன பதிகத்தைப் பாடினார்; அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, சூழ்ந்த மதிலை உடைய அழகிய பதியான திருவாழ்கொளிப் புத்தூரில் வந்து புகுந்தனர். திருஓமாம்புலியூரில் பாடிய பதிகம் 'பூங்கொடி மடவாள்' (தி. 3 ப. 122) எனத் தொடங்கும் புறநீர்மைப் பண்ணி லமைந்த பதிகம் ஆகும். வடதளி - ஊரின் வடபுறத்துள்ள கோயில். இது கோயிலின் பெயர். ஓமம் - வேள்வி. ஓமமாம் புலியூர் - வேள்வி ஓவாத புலியூர்.

சிறப்பு மிக்க அத்திருக்கோயிலை அடைந்து, தேன்பொருந்திய கருங்குவளை மலர் போன்ற கரிய நிறம் வளர் வதற்கு இடமான கழுத்தையுடைய இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருமானாரைக் கண்டு மகிழ்பவர், உலகம் புகழும் திருப்பதிகங்களைப் பாடியருளி, நிறைந்த புகழைக் கொண்ட 'திருக் கடம்பூரை'யும் வணங்கினார். திருவாழ்கொளிப்புத்தூரில் பாடிய பதிகம் 'பொடி யுடை மார்பினர்' (தி. 1 ப. 40) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணில மைந்த பதிகமாகும். இப்பதிகத்து வரும் பாடல் தொறும், அப்பெரு மான் அடியைக் காண்போம், சேர்வோம், சார்வோம் என உலகினரை உளப்படுத்திக் கூறுவதால், 'பார் புகழ் பதிகங்கள்' என்றார். பாரோடு சேர்ந்து புகழும் பதிகங்கள் என்றவாறு. பதிகங்கள் என்ற பன்மையால் மேலும் பல பதிகங்கள் இருந்திருக்கலாம். எனினும் இதனையடுத்து வரும் ஒரு பதிகமே இன்று காணக் கிடைக்கின்றது. இப்பதிகம், 'சாகையாயிரம்' என்பது: பண் - பியந்தைக் காந்தாரம் (தி. 2 ப. 94). அடுத்துவணங்கிய திருக்கடம்பூர் கரக்கோயிலில் அருளியது 'வானமர் திங்கள்' (தி. 2 ப. 68) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணி லமைந்த பதிகமாம்.

இறைவரை நன்மை விளங்கும் திருநாரையூரில் வழிபடும் விருப்புடன் சென்று சேர்ந்து, சிவமணம் கமழ்ந்து விரிகின்ற மாலைகளான திருப்பதிகங்களைப் பாடி நின்று, எம் தலைவரான கவு ணியர் குலத்தலைவர் வணங்கினர். வம்பு: சிவமணம். கூடிய - கமழ்கின்ற. இத்திருப்பதி யில் இதுபொழுது பாடிய பதிகங்கள் பல இருத்தல் வேண்டும். எனினும் கிடைத்திருக்கும் பதிகங்கள் மூன்றேயாம். இவற்றுள் முன்னர்ப் பாடியது, பின்னர்ப் பாடியன எவையெனப் பிரித்தறிய இயலாதுள்ளன. எனினும், 'உரையினில் வந்தபாவம்' (தி. 2 ப. 86) எனத் தொடங்கும் பியந்தைக் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகத்தை முன்னர் அருளியதாகக் கொள்ளலாம். அடுத்துப் பாடிய பதிகங்கள்:
1. 'காம்பினை வென்ற' (தி. 3 ப. 102) - பழம்பஞ்சுரம்
2. 'கடலிடை வெங்கடு' (தி. 3 ப. 107) - பழம்பஞ்சுரம்


அத்திருப்பதியின் கண்ணுள்ள இறைவரை வணங்கி அரிய தமிழ்ப் பதிகங்களைப் பாடித் தம் உள்ளன்பு நிறைந்த விருப்புடன் தங்கியிருந்த அந்நாள்களில், அருகிலிருக்கும் இறைவ ரின் அழகிய பதிகள் பலவற்றையும் சென்று பணிந்து போந்தவர், பையையுடைய பாம்பைச் சூடிய இறைவர் வீற்றிருக்கும் திருக்கருப் பறியலூர் வந்து சேர்ந்தார். திருநாரையூரில் தங்கியிருந்த நாள்களில், அருகில் இருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கித் திருப்பதிகங்கள் பாடிப் போந்ததாக ஆசிரியர் குறித்தருளுகின்றார். அப்பதிகள், குரக்குக்கா முதலியன போலும் எனக் குறிக்கின்றார் சிவக்கவிமணியார். எனினும் அப்பதிக்கு, பிள்ளையார் பாடிய பதிகம் காணக் கிடைத்திலது.

சிவபெருமானின் திருக்கருப்பறியலூரை வணங்கிச் செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடியருளிய சீகாழிப் பிள்ளையார், அதற்கு அருகிலுள்ள தேவர்கள் வணங்குகின்ற பிற திருப்பதிகளையும் வணங்கிப் பாடினார். திருக்கருப்பறியலூரில் பாடிய பதிகம் 'சுற்றமொடு பற்றவை' (தி. 2 ப. 31) என்று தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். அருகிலுள்ள பதிகளையும் வணங்கினார் என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அப்பதிகள் திருப்புன்கூர், திருப்புள்ளிருக்கு வேளூர் முதலாயினவாகலாம் எனக் கருதுவர் சிவக்கவிமணியார்.

இம்மண்ணுலகம் செய்த தவப் பயனால் தோன்றிய வள்ளலாரான பிள்ளையார், அப்பதிகள் பலவற்றையும் வணங்கி, அப்பால் சென்று அளவற்ற முரசுகள் எழுந்து ஒலிக்கவும், சங்குகள் முழங்கவும், விளங்கும் எக்காளங்களும் சின்னங்களும் எங்கும் இயம்பவும், கணுக்கள் வளரும் மென்மையான கரும்புகளும் நெருங்கிய கதிர்களையுடைய செந்நெல்லும், வாழைகளும், கமுகு களும் ஒருங்கே ஓங்கும் வயல்கள் பொருந்திய சோழ நாட்டில், தெளிந்த பிறையைச் சூடிய தம் இறைவர் எழுந்தருளியுள்ள திருப் பிரமபுரம் என்ற சீகாழியைச் சாரச் செல்லும் போது,
குறிப்புரை

பிள்ளையார் தம்பதிக்கு வருகின்றார் என்பதைக் கேட்ட செல்வம் பொருந்திய பிரமபுரத்தில் வாழ்கின்ற அந்தணர்கள், பெருகுங் காதலால் தம் உள்ளங்களில் மகிழ்ச்சி பெருகி எழுதலால், திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் திருநிலை நாயகியாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி, மகிழ்ச்சி மிக, மறைகளின் ஒலி பெருகும் திருவீதிகளில் எல்லாம், நெருங்கிய மாதோரணங்கள், வாழை, பாக்கு தெளிந்த நீர் உடைய குடங்கள், விளக்குகள், நறும் புகை, செழுங்கொடிகள் என்னும் இவற்றை நிரல் பட அமைத்து வரவேற்றற்குரிய சிறப்புக்களை மிகுதியாய்ச் செய்து,
குறிப்புரை

நான்மறைகளின் இனிய ஒலி எழுந்து பெருக, அரசிலையையும் தருப்பையையும் இட்டு அணி செய்யப்பட்ட மண முடைய நிறை குடங்களையும் நிறைந்த கரகங்களையும் தாங்கி, புதிய மலர்களையும் நறுமண மிக்க பொடிகளையும் பொரியையும் தூவி, கச்சணிந்த மார்பகங்களையுடைய உமையம்மையார் தந்த செம்பொன் கிண்ணத்தில் சிவஞானத்துடன் குழைத்த பால் அமுதத்தை உண்ட வள்ளலாரான பிள்ளையாரைச் சிறந்த முத்துக் குடை நிழற்றும் முத்துச் சிவிகையின் மீது கண்டனர்.
குறிப்புரை

பார்த்தவுடனே தலைகள் மீது கைகளைக் குவித்துக் கண்கள் களிப்படையவும், உள்ளம் மகிழவும், காதல் பெருகத் தொண்டர்களும் அந்தணர்களும் சென்று பிள்ளையாரைச் சூழ்ந்து, சொலற்கரிய மகிழ்ச்சியால் போற்றிய ஓசை எண்திசை களிலும் நிறையுமாறு செய்தனர். தம் மேலாடைகளை வீசி வானத்தை மறைத்தனர். மேன்மேலும் பெருகும் புகழையுடைய தமிழ்த் தலை வரான ஆளுடைய பிள்ளையாரும் சிவிகையினின்றும் இறங்கி, அவர்கள் எதிரே சென்று வணங்கி, அவர்களுடன் கூடி மகிழ்ந்து அந் நகரத்துள் புகுந்தார்.
குறிப்புரை

சந்திரனைத் தாங்குமாறு உயர்ந்த அழகிய மாளிகைகள் நிறைந்த தெருவில் சென்று அணைந்து, கடவுட்டன்மை கொண்ட மறைவழி வந்த கற்புடைய மங்கையர் முழக்கும் மங்கல வாழ்த்து இருமருங்கிலும் நிறைய, இறைவரது பெரிய நிலைகளை உடைய கோபுரத்தை வணங்கிக் கோயிலுள் புகுந்து, வலம் வந்து, திருத்தாளம் பெற்றவரான பிள்ளையார், திருத்தோணியில் எழுந் தருளிய இறைவரின் திருமுன்பு வீழ்ந்து வணங்கி எழுந்து, தமிழ் மறையான பதிகத்தைப் பாடினார். இதுபொழுது அருளிய பதிகம், இப்பொழுது காணப் பெறும் பதிகங்களுள் ஒன்றோ, அன்றிப் பிறவோ என அறுதியிட்டுக் கூறுதற்கு இல்லை.

போற்றுதற்குரிய இசை பொருந்திய திருப்பதிகத் தைப் பாடிப் பெருங்கருணை செய்த திருவருளின் தன்மையைப் போற்றிப் பொருந்திய மலர் போன்ற கண்கள் இன்ப நீரைப் பொழியக் கைகளைத் தலைமேல் குவித்து, வீழ்ந்து வணங்கி, வெளியே வந்து, மறையின் வாய்மை விளங்கும் காழிப் பிள்ளையார் சென்றருளும் பொழுது, திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம்பின்னே வர, வளம் பெரு கும் அவர்தம் இருக்கைக்குச் செல்லுமாறு அருள் செய்து, தம் மாளிகை யின் அருகில் வந்தாராக. யாழ்ப்பாணர் தம் மனைவியுடன் தம்மைக் காணவந்த பொழுதே, அவருக்கெனத் தனி மனையொன்று அமைத்து அதில் இருக்கச் செய்தது முன்னர்க் கூறப்பட்டது. அம்முறையிலேயே இது பொழுதும் அவரைத் தம் துணைவியாருடன் இருக்கச் செய்தனர்.

அங்கிருந்த அந்தணர்கள் தம் அடிகளை வணங்கத் தந்தையாரும் தம் அருகில் நெருங்கி வரத் தம் திருமாளி கையை அடையும் பொழுது, மரபு வழாத மறைக்குல மடந்தையர் நிறை குடத்தையும் அழகிய விளக்குகளையும் ஏந்தி நிற்க, அவரன்பைப் பெற்றவரான பகவதியார், சிவபெருமானின் திருநீற்றுக் காப்பினை ஏந்தி முன்வந்து சாத்திப் பணிந்து பாராட்ட, முறைமையாக அவரவர்க்கும் அருள் செய்து பெருமானிடம் மணிமுத்துச் சிவிகை பெற்றவரான பிள்ளையார், திருமடத்துள் புகுந்தார். பிள்ளையாரின் நெற்றியில் நீறு சாத்தியது, தாயார் எனவந்த உலகியல் நிலையிலாம். அவரைப் பணிந்தது, திருவருள் நலத்தால் ஞானம் பெற்ற அருளியல் நிலையிலாம். இவ்விரு நிலைக ளையும் காண நேருவது நாம் பெற்ற புண்ணியமாகும். இது போன்றே பிள்ளையார் இருந்தருளும் இடத்தை ஒருகால் மாளிகை என்றும், பிறிதொருகால் மடம் என்றும் குறிப்பதுமாகும். மாளிகை என்றது அதன் வளத்தைக் காட்டி நிற்கும். மடம் என்றது அதன்கண் ஆற்றி வந்த அறச் செயலையும் அருட்செயலையும் காட்டி நிற்கும்.

செல்வம் பெருகும் நீண்ட தம் திருமாளிகையில் இருந்து ஒவ்வொரு நாளும், திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் இறைவரைச் சென்று பணிந்து, பொருந்திய பதிகங்கள் பலவற்றையும் பாடி மனமகிழ்வுடன் இருந்து வரும் நாள்களில், விரைவாக முறைப்படி செயத்தக்க உபநயனப் பருவம் வந்துசேர, உலகியலுக்கு அப்பாற்பட்ட சிவஞானத்தை அறியப் பெற்ற பிள்ளையார், தொன்று தொட்டு வரும் மறைநெறிப்படி உபநயனத்துக்குரிய செயற்பாடுகளை அந்தணர்கள் செய்யத் தேவர்களும் போற்றுமாறு பிள்ளையார் அந் நிலையில் தோலுடனே நூலையும் தாங்கிக் கொண்டார். செல்வம் பெருகும் நீண்ட தம் திருமாளிகையில் இருந்து ஒவ்வொரு நாளும், திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் இறைவரைச் சென்று பணிந்து, பொருந்திய பதிகங்கள் பலவற்றையும் பாடி மனமகிழ்வுடன் இருந்து வரும் நாள்களில், விரைவாக முறைப்படி செயத்தக்க உபநயனப் பருவம் வந்துசேர, உலகியலுக்கு அப்பாற்பட்ட சிவஞானத்தை அறியப் பெற்ற பிள்ளையார், தொன்று தொட்டு வரும் மறைநெறிப்படி உபநயனத்துக்குரிய செயற்பாடுகளை அந்தணர்கள் செய்யத் தேவர்களும் போற்றுமாறு பிள்ளையார் அந் நிலையில் தோலுடனே நூலையும் தாங்கிக் கொண்டார்.

எப்பிறவியிலும் வாராத இயல்புடைய பிள்ளை யாரை, உலகில் மற்றவர் இயல்பில் அவரை வைத்து உபநயன முறையான இருபிறப்பின் நிலையை அதற்குரிய செயற்பாடுகளால் காட்டிச் செய்கின்ற அந்தணர்கள் எதிரில் நின்று, 'வழிவழியாகக் கூறப்பெற்று வரும் தன்மையில் நான்மறைகளையும் தந்தோம்' என்று உரிய மந்திரங்களைச் சொல்லும் அவர்களுக்குத் தம் இனிய வாக்கினால் சீகாழியில் தோன்றிய புண்ணியமே வடிவான பிள்ளை யார் ஒப்பற்ற நிலையில் நின்று எண்ணற்ற புனித மறைகளையும் ஓதினார். 'மறக்குமா றிலாதவென்னை மையல்செய்திம் மண் ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்' (தி. 2 ப. 98 பா. 5) என வருந்தி நின்றவர் பிள்ளையார். தம் திருமணத்தின் பொழுது யாவரும் புகுக எனத் தம்முடன் வந்தார் அனைவரையும் வீடுபேறு பெற அழைத்துச் சென்றவர். அப்பெருமை உடையாருக்கு இனிப் பிறப்பு என்பது ஏது? ஒன்றுமில்லை. ஆதலின் 'ஒரு பிறப்பும் எய்தாமை யுடையார்' என் றார். அத்தகைய ஞானச் செம்மலுக்கு இருபிறப்பின் நிலைமையினை உணர்த்தவேண்டி, அவ்வந்தணர்கள் நான்மறைகளையும் தந்தோம் என்றது உலகியல் வயப்பட்டதன்றிப் பிறிதன்று என்பார், அவர்க ளுக்கு 'எண்ணிறந்த புனித வேதம்' இப்பிள்ளையார் ஓதினார் என் றார். இதனால் அவ்வந்தணர்களுக்குப் பிள்ளையார், தம் தியானப் பொருள் ஆகவும் (குருமூர்த்திகளாக) ஆனார் என, வரும் பாடலில் ஆசிரியர் சேக்கிழார் கூறுவாராயினர். இந்நிலைகளை யெல்லாம் ஆழமாக நினைதல் இன்றியமையாததாகும்.

எண்ணிறந்த பல மறைகளையும் ஓதியதுடன் அவற்றின் அங்கமான பழைய கலைகளையும் எடுத்துக் கூறிய பெருமை வாய்ந்த பிள்ளையாரை, எண்ணற்ற கதிரவர்கள் ஒருங்கு கூடித் தம் கதிர்களை விரித்தாற் போல மேலாக விளங்கும் ஒளிப் பிழம்பாய இறைவரின் திருவருளைப் பெற்ற பான்மையின் மேன் மையை எண்ணி, அன்பும் வியப்பும் கொண்டு போற்றும் அவ்வந் தணர்கள், கவுணியர் பெருமானான பிள்ளையாரைத் 'தங்கள் கண் முன் வெளிப்பட்டு வரும் தியானப் பொருள் ஆவார்' என்று எண்ணி வணங்கித் தாங்கள் முன்னே கொண்ட மறைகளில் ஏற்பட்ட தமக் குள்ள ஐயங்களையும் கேட்டுத் தெளிந்தனர். அங்கமான தொல்கலைகள் தருக்கம், வியாகரணம், முதலிய ஆறு அங்கங்கள். இறைவனின் பேரொளிக்கு ஆயிரங் கோடி கதிரவர்களின் ஒளி உவமை. ஈண்டு ஆயிரங் கோடி என்பது எண்ணற் றவை எனும் பொருளில் நின்றது. கதிரவனுக்கு ஒளி தருபவனே இறைவன் ஆவன். 'அருக்கனிற் சோதி அமைத்தோன் காண்க' (தி. 8 ப. 3 வரி. 20) என வரும் திருவாசகமும் காண்க. ஆதலின் அக்கதிரவர்களின் ஒளி ஒரு புடை ஒப்புமையாகவே அமையும். தியானப் பொருள் - தியானிக்கப்படும் பொருள்: குருவாகவும் சிவமாகவும் எண்ணிப்போற்றப்படும் பொருள்.

மறைவழிப்பட்ட மந்திரங்கள் எல்லாவற்றையும் சொல்லியருளியபின், அம்மறைவழிப்பட்ட வேள்விச் செயற்பாடுக ளில் அவர்களின் சிந்தையில் வந்த ஐயங்களையெல்லாம் தெளியு மாறு அவ்வந்தணர்களுக்கு எடுத்துக் கூறியதுடன், அவர்கள் மனம் தெளியுமாறு தொன்மையும் முதன்மையும் பெற்ற எல்லா மந்திரங் களும் தோன்றுவதற்குக் காரணம் சிவபெருமானின் திருவைந்தெ ழுத்தே யாகும் என அருளுவாராய் 'முப்போதும் ஓதுதற்குரிய மந்திரம் திருவைந்தெழுத்தே யாகும்' என ஐந்தெழுத்தின் திருப்பதிகத்தையும் அருள் செய்தார். இப்பதிகம் 'துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்' (தி. 3 ப. 22) எனத் தொடங்கும் காந்தார பஞ்சமப் பண்ணிலமைந்த பதிக மாகும். இப்பதிகத்தில்,
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்று அவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
-தி. 3 ப. 22 பா. 2எனவரும் இரண்டாவது பாடலின் 4ஆவது அடியே ஆசிரியரால் எடுத்துக் கூறப்பட்டதாகும். அந்தி - முப்பொழுதும். இதனால் அவ்வந் தணர்களுக்குக் குரு உபதேசமும் பெற வாய்ப்பாயிற்று.

அவ்வாறான பதிகத்தைப் பிள்ளையார் பாடி அரு ளவே, அம்மறையவர்கள் அவ்வருளிப்பாட்டினை உபதேசமாகக் கொண்டு, சிரமேல் தாங்கி வணங்கி மனம் மகிழ்ந்தனராக, பிள்ளை யார் தாமும் தெய்வத் திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் இறை வரைச் சென்று பணிந்து பாடற் பொருளுக்கு இசைந்த இசையுடன் கூடிய திருப்பதிகங்களால் போற்றி, அவருடைய மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை உள்ளத்தில் வைத்து, வெளிப் போந்து அடியார்களுடன் இனிதாய் அமரும் தன்மை கூடுமாறு இறைவரின் திருவடிகளைப் பணிந்து போற்றி இருந்தருளிய அந்நாள்களில், இதுபொழுது அருளப் பெற்ற மெய்த்த இசைத் திருப்பதிகங்கள் எவை எனத் தெரிந்தில.

பந்தொடு பழகிய மென்மையான விரலையுடைய உமையம்மையாரும் இறைவரும் ஆனேற்றின் மீது எழுந்தருளி வெளிப்பட்டு வந்து, பொற்கிண்ணத்தில் அளித்த எல்லையில்லாத ஞானப் பாலையுண்ட செந்தமிழ்த் தலைவரான திருஞானசம்பந்தரின் திறங்களைக் கேட்டு, அவரை வணங்குதற்காக, அந்தணர்கள் சிறப்பு டன் இருக்கும் சீகாழிப் பதிக்குத் திருநாவுக்கரசு நாயனார் வந்தருளினார். மூன்றாண்டில் ஞானம் பெற்ற பிள்ளையாரின் அருள் திறங்களை, அவர் உபநயனம் பெற்ற ஏழாவது ஆண்டிற்குப் பிறகே நாவரசர் அறிய நேர்ந்தமை இதனால் புலனாகின்றது. எத்துணை அரிய செய்திகளும் நிகழ்ந்த அவ்வவ்விடத்தே போற்றப் பெற்று வந்ததல்லது நாடெங்கிலும் அவை தெரிதற்குப் போதிய சூழலும் வாய்ப்பும் அக்காலத்தே இல்லாதிருந்தமை விளங்குகின்றன. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பேராற்றலை யுடைய சொல்லரசர் வந்துள்ளார் என்பதைக் கேட்டு, நீர்ப்பூக்கள் மணம் கமழும் பொய்கைகள் சூழ்ந்த சீகாழியில் வந்தருளிய பெருந்தகையாரான பிள்ளையாரும், 'இது முன் நல்வினையினால் நேர்ந்த பேறாகும்' என்று மனத்துள் கொண்டு, அன்பர்கள் சூழ அவரை வரவேற்கும் பெருவிருப்பத்துடனே எதிர் கொள்ளச் சென்ற போழ்தில்,
குறிப்புரை

உள்ளத்தில் இடையறாது பெருகும் அன்பும், திருமேனியில் அசைவும், கந்தையும் மிகையாம் என்ற கருத்தும், கையில் உழவாரப் படையும், வெளிப்பட்டுப் பெருகி வழிகின்ற கண்ணீர் மழையும், திருமேனியில் விளங்கும் திருநீறுமாய், அந்தம் இல்லாத திருவேடத்தையுடைய திருநாவுக்கரசரும் எதிரே வந்தாராக, நாவரசரின் திருவேடப் பொலிவழகை உள்ளக் கிழியில் உரு எழுதிக் காண்டற்கு ஏதுவாக ஆசிரியர் மூன்று இடங்க ளில் அவ்வழகு பொலி திருவடிவைக் குறித்துள்ளார். அவற்றுள் இஃது ஒன்றாகும். சிந்தை இடையறா அன்பை வந்திழி கண்ணீர் மழை வெளிப் படுத்தி நிற்கின்றது. அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லையன்றோ? அசைவு - தளர்ச்சி. இதனால் அடிகளின் வயதறிய வாய்ப்புண்டு. ஞானசம்பந்தரின் முதல் முறைச் சந்திப்பு இது. திருப்புகலூரில் இரண்டாவது முறையாகவும், திருப்பூந்துருத்தியில் மூன்றாவது முறையாகவும் சந்திக்கவுள்ளார் இவர். இம் முதல்முறைச் சந்திப்பிலேயே 'திருமேனி அசைவு' குறிப்பிடப்படுகின்றது. காத்தாள் பவர் காவல் இகழ்ந்து, சமண் சமயத்தில் சார்ந்தது ஏறத்தாழ இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்குமானால் இவர் மீண்டும் சைவ சமயம் சார்ந்தது அறுபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கலாம். இந்நிலையில் இதுபொழுது இவர்தம் வயது 70 ஆகலாம் என எண்ண இடம் உண்டு. இவ்வரையறை முன்பின்னுமாகலாம் . ஞானியர்க்கு ஓடும் கவந்தியுமே உறவாகும் ஆதலால் அவருக்குக் கந்தையும் மிகையாயிற்று. பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பே மிகை என்பர் திருவள்ளுவர்.

அங்ஙனம் அவர் வருதலைக் கண்ட ஞானசம்பந் தரும் 'உள்ளத்தில் பரவி வருகின்ற உண்மையன்பின் பெருக்குக் கிடனான தொண்டர் திருவேடம் நேரேவந்து தோன்றியது' எனக் கொண்டு தொழுதபடியே தேவர்களும் போற்றுமாறு அங்குச் சேர, அது பொழுது நாவுக்கரசரும் எதிரே வந்து வணங்க, மிகுந்த ஆசைபெருக, அவருக்கு இனிய மொழிகளைக் கூறியருளினார். அடியவர் எனில் எப்படியிருக்க வேண்டும் என்பதைச் சம்பந்தர் உள்ளத்தில் தெளிந்து, அதற்கு ஒரு வடிவங் கொண்டு தொழுது வந்துள்ளார். இதுவரை அவர் அவ்வாறு உருக்கொண்ட திருவேடம் நாவரசர் திருவேடமேயாக இருக்கக் கண்ட நிலையில், மீதூர்ந்த அன்பினால் அவரை வணங்கினார். இவ்வாற்றான் நாவரச ரின் திருவேடப் பொலிவழகு எவ்வளவு போற்றற்குரியது என்பது புலனாகும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

மிகு புகழுடைய நாவுக்கரசரைப் பிள்ளையார் உடன் வரவேற்றுச் சென்று, ஆனேற்றூர்தியையுடைய இறைவரின் திருத்தோணி என்ற அழகிய கோயிலுள் புகும்போது, ஆர்வம் மிகுதி யால் அணையும் அவருடனே கூடி, இறைவரை வணங்கித் திருவரு ளால், சிறப்பு மிகச் செய்யும் திருத்தொண்டரான அரசைத் தம்முடன் அழைத்துக் கொண்டு தம் திருமாளிகைக்குச் சென்றார்.
குறிப்புரை

சூழவரும் திருத்தொண்டர்களுடன் ஆளுடைய அரசர்க்கும் ஒப்பில்லாத உணவை, ஏற்ற இயல்பால் ஆக்குவித்து உண்ணச் செய்தருளிப் பொருந்திய பேரன்பும் நட்பும் மேன்மேலும் மிக வணங்கிச் சிவபெருமானை உள்ளத்தில் கண்டு மகிழும் திருப்பதி கங்களைப் பாடி, மகிழ்ச்சி பொருந்த உடன் இருந்தனர். இங்கு அருளிய சொல்மாலைகள் எவைஎன உறுதியாக அறிதற்கியலாதுள்ளது.

அங்ஙனமாக, நாள்கள் சில செல்ல, திருவருள் பெற்றிலங்கும் திருநாவுக்கரசர், மின்னல் போல ஒளிவிடும் சடையை உடைய இறைவர் வீற்றிருக்கும் ஏனைய திருப்பதிகளுக்கும் சென்று கும்பிட விரும்பி அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்த சீகாழிச் செம்மலான பிள்ளையாரின் இசைவுடன் பின்னரும் வந்து பழகி இன்புறும் நட்புரிமையுடன் பிரிந்து சென்றனர்.
குறிப்புரை

ஒப்பில்லாத திருநாவுக்கரசர் செல்ல, மாறுபாடு இல்லாத திருவுள்ளத்துடன் மலர்கள் மணம் கமழும் வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியுள் பிள்ளையார் மீண்டு வந்து புகுந்து, நிறைந்த மறைக ளின் வடிவாய்த் திருத்தோணியில் வீற்றிருக்கின்ற தோணியப்பரை அழகிய செய்யுள்களாலாகிய இனிய தமிழ் மாலைகளைப் பாடி வணங்கி அங்கு இருந்துவரும் நாள்களில், பிள்ளையார் மீண்டுவந்து புகுந்து என்றார், நாவரசருடன் காழி எல்லைவரை சென்று அவரை வழியனுப்பியமை தோன்ற. இதுபொழுது பாடிய பதிகங்களும் இவை எனத் தெரிந்தில. தூக்கு - செய்யுள்.

பல்வேறு வகைப்பட்ட செய்யுள்களாலான செந்தமிழ் மாலைகளாகத் 'திருமொழி மாற்று' என்ற பதிகமும் வழிமொழித் 'திருவிராகப் பதிகமும், 'எல்லா அடிகளிலும் எல்லாச் சீர்களிலும் மடங்கி வருகின்ற இயமகமாகிய 'திரு ஏகபாதப் பதிகமும்' தமிழில் சிறந்த 'இருக்குக் குறள்' பதிகமும், ஆகிய இவற்றைப் பாடிச் சாத்தியதுடன், எம் தந்தைக்கு அருளிய 'எழுகூற்றிருக்கையும்' 'ஈரடி' என்ற திருப்பதிகமும், 'ஈரடிமேல் வைப்பு' என்னும் திருப்பதிகமும், விகற்பச் செய்யுள்கள் - சொல்லணிநேர் பயின்ற பல்வேறு வகைப்பட்ட செய்யுள்கள். காழிப் பிள்ளையார் திருப்பதிகள் தோறும் சென்று வழிபட்டு வரும் முறையில், இந்நான்காவது செலவு நயப்பு நிறைவுற்றதும் காழியில் தங்கிய நாள்கள் மிகுதியாகும். ஆதலின் இதுபொழுது அருளிய பதிகமும் மிகுதியாகவுள்ளன.
இவ்வகையில் அமைந்த பதிகங்கள்:
1. 'மொழிமாற்று': காடதணி (தி. 1 ப. 117) - வியாழக்குறிஞ்சி
2. 'மாலைமாற்று': யாமாமாநீ (தி. 3 ப. 117) - கௌசிகம்
3. 'வழிமொழி': சுரருலகு (தி. 3 ப. 67) - சாதாரி
4. 'ஏகபாதம்': பிரமபுரத்துறை (தி. 1 ப. 127) - வியாழக்குறிஞ்சி
5. 'இருக்குக்குறள்': அரனை உள்குவீர் (தி. 1 ப. 90) - குறிஞ்சி
6. 'எழுகூற்றிருக்கை': ஓருருவாயினை (தி. 1 ப. 128) -

'நாலடி மேல் வைப்பு' என்ற திருப்பதிகமும், மேன்மையுடைய முடுகும் நடையில் அமைந்த 'திருவிராகம்' என்ற பதிகங்களும், மேன்மை கொண்ட 'திருச்சக்கரமாற்று' முதலான திருப்பதிகங்களும் ஆகிய இவை மூல இலக்கியங்களாக உலகத்திற்கு வழிகாட்டி நிற்குமாறு, எல்லாப் பொருள்களும் நிரம்பி இருக்கக் காணுமாறு, உலகத்தில் உயரும் சீகாழி இறைவரைத் திருஞானசம் பந்தர் பாடியருளினார். இவ்வகையில் அமைந்த பதிகங்கள்:
1. 'நாலடி மேல் வைப்பு': இயலிசை (தி. 3 ப. 3) -

இனிய இசையில் முற்கூறியவாறு பாடிய எல்லாப் பதிகங்களையும் பெரும்பாணரும், பொருந்திய இசை, ஓர் உருவு எடுத்தாற் போன்ற மதங்கசூளாமணியாரும், போற்றப்படும் ஏழிசைகளும் அமையப் பாடி இறைவரைப் போற்றப் பொன் தாளம் பெற்ற பிள்ளையார் சீகாழியில் தங்கியிருந்தார்.
குறிப்புரை

அப்பதியில் விருப்பத்துடன் எழுந்தருளி இருக்கும் நாள்களில், 'அரிய தமிழ் நாட்டிலும், மற்றுமுள்ள நாடுகளி லும், திங்களை அணிந்த சடையையுடைய சிவபெருமான் எழுந்தரு ளியிருக்கும் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று கும்பிட்டு, எங்கும் தமிழ் மாலைத் திருப்பதிகங்களைப் பாடிப் போற்றிய பின் இங்கு வந்து சேர்வன்' எனத் தம் பெருமையுடைய தந்தையார் சிவபாத இருதயருக் கும் தவ முனிவர்களான அடியவர் மற்றும் அந்தணர்க்கும் கூறினார்.
குறிப்புரை

மேன்மேலும் பெருகும் விருப்பத்தோடு பிள்ளை யாரைப் பார்த்து, அவரை ஈன்ற சிவபாத இருதயர், 'அரிய தவம் செய்து அதன் பயனாக உம்மை ஈன்றெடுத்தேன், ஆதலால் உம்மைப் பிரிந்து இங்கிருப்பதற்கு ஒருப்படேன், இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயக்கும் சிவவேள்வியையும் யான் செய்தல் வேண்டும், ஆதலால் இன்னும் சில நாள்கள் உம்முடன் வருவன்' எனக் கூறினார்.
குறிப்புரை

ஆண் தகையாளரான சம்பந்தரும் அதற்கு இசைந்து, அங்கு அழகிய பொன்னார்ந்த திருத்தோணியில் எழுந்த ருளி நீண்ட சடையையுடைய இறைவரின் திருவடிக்கீழ் விழுந்து வணங்கி, நீடிய திருவருளைப் பெற்று, மிகுந்த புகழையுடைய தந்தை யார் பின்தொடர்ந்துவர, திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் உடனே வரக் காணத் தக்க சீகாழிப் பதியை வணங்கி, நீங்காத பத்திமையுடன் புறம் போந்தார்.
குறிப்புரை

அப்பழம் பதியில் உள்ளவர்களுள் உண்மைத் தவத்தவர்கள் உடன் வருவாராய்ப் பின் தொடர்ந்து செல்லவும், அந்தணர்கள் பிரியா விடைபெற்றுப் பதியில் மீண்டு செல்பவர்கள் மீளவும், முத்துச் சிவிகையின் மேல் பிள்ளையார் எழுந்தருளி, நெருங் கிய முத்து மாலைகளை நிரல்படக் கட்டிய வெண்மையான முத்துக் குடையானது மேலே முழுச்சந்திரன் போல் நிழலைச் செய்யவும்,
குறிப்புரை

முத்துச் சின்னமும், ஒப்பில்லாத முத்துக் காளமும், முத்தால் ஆன தாரையும், 'சீகாழியில் தோன்றிய ஆளுடைய பிள்ளையார் வந்தருளினார்' என்னும் தன்மையை உலகுக்கு விளங்கு மாறு அவருடைய பற்பல பெயர்களையும் எடுத்துச் சொல்லி ஊதிப் பிடிக்கவும், திருமுன்பு எம்மருங்கிலும் வரிசையாய் முரசுகளும் மற்றும் பல இயங்களும் முழங்கவும், நிலைபெற்ற திருத்தொண்டர்கள் வந்து எதிர் கொண்டு வணங்கவும்,
குறிப்புரை

சங்கின் ஒலிமுழங்கவும், விளங்கும் அழகிய கொம்புகள் ஒலிக்கவும், மங்கலமான வாழ்த்துரை எங்கும் பெருக வும், முன்னே மறைகள் முழங்கவும், பிறைச் சந்திரனையும் பாம் பையும் அணிந்த இறைவரின் திருப்பதிகள் எங்கும் உள்ளனவற்றின் முன்சென்று, மேன்மேலும் பெருகும் விருப்பத்துடன் போற்றியும் சீகாழிக் கவுணியர்தம் செல்வத் தோன்றலார் எழுந்தருளிச் சென்றார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

அந்தணர்தம் பதியான சீகாழிப் பதியின் தலைவ ரான ஆளுடைய பிள்ளையார், இறைவர் எழுந்தருளியுள்ள திருக் கண்ணார் கோயில் என்னும் பதியைப் பெருகும் விருப்பத்துடன் அணைந்து, திருப்பதியைப் பாடிப் போற்றி, இறைவர் எழுந்தருளி இருக்கும் திருக்கோயில்கள் பலவற்றையும் உருகும் அன்புடன் சென்று வணங்கி, உயரும் தமிழ் மாலைகளாகிய தேவாரத் திருப் பதிகங்களைப் பாடித் துதித்துப் பெருகிவரும் நீரையுடைய காவிரியின் வழியாய் மேற்றிசை நோக்கி வருவாராய், திருக்கண்ணார் கோயிலில் பாடிய பதிகம் 'தண்ணார் திங்கள்' (தி. 1 ப. 101) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். குறுமாணக்குடி என இக்காலத்தில் இவ்வூரை அழைப்பர். கோயில் பலவும் என்றது திருக்கடைமுடி, திருநாங்கூர் முதலியனவாக லாம். இவற்றில் திருக்கடைமுடிக்கு அமைந்த திருப்பதிகம் 'அருத்தனை' (தி. 1 ப. 111) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

உள்ளத் தெழும் விருப்பம் மேன்மேலும் மிக, 'திருப்புள்ளிருக்கு வேளூரில்' நான்கு பெருந்தோள்களையுடைய முக்கண்ணுடைய பெருமான் வீற்றிருக்கும் கோயிலை அடைந்து, உரிய பேரன்பு பொருந்த வணங்கி, பறவையரசர்களான சம்பாதி சடாயு என்பவர்கள் வணங்கிச் செய்த வழிபாட்டின் பெருமையைப் பாராட்டிப் போற்றி, அழகான சொற்களால் அமைந்த திருப்பதிகத்தை இறைவர்க்கு அணிவித்தார். இத்திருப்பதியில் அருளிய பதிகம் 'கள்ளார்ந்த' (தி. 2 ப. 43) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணிலமைந்த பதிகமாகும். புள் - சம்பாதி, சடாயு எனும் பறவைகள். இருக்கு - மறைகள். வேள் - முருகன். இவர்கள் வழிபட்ட பதியாதலின் இப்பெயர் பெற்றது. முதற் பத்துப் பாடல்களிலும் இப்பறவைகள் ஆற்றிய இறைவழிபாட்டுச் சிறப்பும், இராவணனுடன் செய்த போர்ச் சிறப்பும் குறிக்கப்பட் டுள்ளன. 'யோசனைபோய்ப் பூக்கொணர்ந்து அங்கு, பூசனை செய்து இனிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே'! என வரும் பகுதி அவர்களின் ஆழ்ந்த பத்திமையை விளக்குவது ஆகும்.

திரு என்றும் நிலைபெற்றிருக்கும் திருநின்றியூரில் இறைவரின் பெருமைமிக்க திருவடிகளைப் போற்றி மிக்க பத்திமை யுடன் வணங்கிக் கும்பிட்டு, வளமையான திருப்பதிகத்தைப் பாடி அருளி, நாளும் சிறப்புடைய திருநீடூரை வணங்கி, இறைவரின் திருப் புன்கூரை அடைந்து, அருட்கூத்து இயற்றும் திருவடிகளை வணங்கி, அருந்தமிழ்ப் பதிகம் பாடி ஆங்கே விருப்பத்துடன் வதிந்தருளினார். திருநின்றவூரில் பாடிய பதிகம், 'சூலம்படை' (தி. 1 ப. 18) என்று தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருநீடூரில் சுந்தரர் பதிகம் ஒன்றே உள்ளது. திருப்புன்கூரில் அருளிய பதிகம், 'முந்தி நின்ற' (தி. 1 ப. 27) எனத் தொடங்கும் தக்கராகப் பண் ணிலமைந்த பதிகமாகும்.

அத்திருப்பதியினின்றும் புறப்பட்டுச் சென்று அருகி லிருக்கும், இறைவர் வீற்றிருக்கும், கோயில்கள் எங்கணும் சென்று, பணிந்து போற்றி, உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட சிவபெரு மான் வீற்றிருக்கும் 'திருப்பழமண்ணிப்படிக்கரைக்' கோயிலை வணங்கி, தமிழ் மாலை பாடி, 'திருக்குறுக்கைப்' பதியை அடைந்தார். அருகிலிருக்கும் கோயில்களாவன: திருக்குரக்குக்கா, முதலாயினவாகலாம். ஆண்டு அப்பர் அருளிய பதிகமே கிடைத்துள் ளது. திருப்பழமண்ணிப்படிக்கரைக்குடியில் சுந்தரர் அருளிய பதிகம் ஒன்றே உள்ளது. பிள்ளையார் அருளிய பதிகங்கள்கிடைத்தில.

திருக்குறுக்கைப் பதியை அடைந்து, அங்குள்ள திருவீரட்டானக் கோயிலில் விரும்பி எழுந்தருளியிருக்கும், மேரு மலையை வில்லாகக் கொண்ட இறைவரைப் போற்றி, அங்கிருந்தும் புறப்பட்டுச் சென்று, 'திரு அன்னியூர்' என்ற பதியை வழிபட்டு, பெரிய கையையுடைய மலை போன்ற யானையை உரித்த சிவபெருமானின் 'திருப்பந்தணைநல்லூரைப்' பணிந்து, மறைகளைத் தமிழால் விரித்துப் பாடினார். அன்னியூரில் பாடிய பதிகம் 'மன்னியூரிறை' (தி. 1 ப. 96) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருப்பந்தணைநல்லூரில் அருளிய பதிகம் முன்னர் 250ஆம் பாடலில் குறித்தாயிற்று. இப்போது அருளிய பதிகம் காணக் கிடைத்திலது.

அத்திருப்பதியைப் போற்றி மேற்செல்பவராய், இறைவரின் 'திருமணஞ்சேரியைச்' சொலற்கரிய திருத்தொண்டர்கள் உடன்வரச் சென்று வழிபட்டுத் திருப்பதிகத்தைப் பாடி, உயிர்க்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் வழங்கும் இறைவரின் 'திரு எதிர்கொள்பாடி' என்ற பதியை அடைந்து, ஒப்பில்லாத திருப்பதிகங் களைப் பாடி, உயர்ந்த 'வேள்விக்குடியை' அடைந்தார். திருமணஞ்சேரியில் அருளிய பதிகம் 'அயிலாரும்' (தி. 2 ப. 16) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிக மாகும். திருஎதிர்கொள்பாடியில் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

அம்மையப்பராகிய பெருமான், வளம் மிக்க 'திருவேள்விக்குடியில்' வீற்றிருக்கும் மணவாளத் திருக்கோலத்தை, பொய்யாமல் வருகின்ற நீர் வளம் கொண்ட தூய 'திருத்துருத்தியில்' பகலில் காணக் காட்டி, இரவில் இவ்வேள்விக்குடியில் அக்கோலத்துட னேயே எழுந்தருளிய தன்மையையும் சேர்த்துக் குளிர்ந்த தமிழ்மாலை பாடி, முளைக்கும் கொழுந்தைப் போன்ற வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் 'திருக்கோடிகா' என்ற திருப்பதிக்குச் சென்று அடைந்தார். திருத்துருத்தியையும் திருவேள்விக்குடியையும் இணைத்து ஒரே பதிகத்தில் பாடப் பெற்றுள்ளன. காரணம், இறைவன் உமையம்மையாருக்குப் பகலில் திருத்துருத்தியிலும், இரவில் திரு வேள்விக்குடியிலுமாக வீற்றிருந்தருளிக் காட்சி கொடுத்தருளியமை யாகும். இவ்வகையில் அமைந்த திருப்பதிகம், 'ஓங்கி மேலுழிதரு' (தி. 3 ப. 90) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த திருப் பதிகமாகும்.
ஓங்கிமே லுழிதரு மொலிபுனற் கங்கையை யொருசடைமேல்
தாங்கினா ரிடுபலி தலைகல னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினா லுமையொடு பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
எனவரும் முதல்பாடல், இவ்வீரிடங்களிலும் உறையுமாற்றை விளக்கி நிற்றலும் காண்க. தழும்பிய தன்மை - விளங்க வெளிப்பட்டிருக்கும் நிலை.


திருக்கோடிகாவில் அமர்ந்திருக்கும் தேவர்களின் தலைவரான இறைவரை, எருக்கு மலருடனே கொன்றை மலரையும் அணிந்தவரை, வெள்ளைப் பன்றியான திருமாலின் பருத்த கொம் பைப் பூண்ட பெருமானாரைப் பணிந்து சொல்மாலைகளாலான திருப் பதிகங்களை பாடி, பிறப்பு அறுக்கலுற்றோர் அடைவதற்கு இடமான திருக்கஞ்சனூரை வணங்குவதற்குச் சென்றார். இத்திருப்பதியில் அருளியது, 'இன்று நன்று' (தி. 2 ப. 99) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். சொல்மாலை கள் எனப் பன்மைப்படக் கூறினும் கிடைத்துள்ளது ஈதொன்றேயாம்.

திருக்கஞ்சனூரை ஆண்டருளுகின்ற தம் இறைவரைக் கண்டு கும்பிட்டு மேற்சென்று, மேகம் தவழ்கின்ற மதில் சூழ்ந்த 'திருமாந்துறை' என்ற பதிக்குச் சென்று வணங்கிச் சொல் மாலைபாடி, அங்கிருந்து புறப்பட்டு அன்பர்கள் எதிர்கொள்ளச் சிவந்த சடையையுடைய அந்தணரான சிவபெருமான் நிலையாக வீற்றிருக்கின்ற 'திருமங்கலக்குடியை' அடைந்தார். திருக்கஞ்சனூர், திருமாந்துறை ஆகிய பதிகளுக்குரிய திருப்பதிகங்கள் கிடைத்தில. திருமங்கலக்குடியில் அருளிய பதிகம் 'சீரினார் மணியும்' (தி. 2 ப. 10) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணி லமைந்த பதிகமாகும்.

அப்பதியினின்றும் புறப்பட்ட பிள்ளையார், கொடிய கண்களையுடைய ஆனேற்றின் மீது எழுந்தருளும் 'திரு வியலூர்' இறைவரை வணங்கித் தங்கி, இனிய இசையுடைய தமிழ் மாலை பாடி, இத்திருப்பதியில் விரும்பி எழுந்தருளியுள்ள இறைவர், தம்முன்பு அருள் திருவேடம் நேரே காட்டத் தொழுது, செங்கண் மாலுக்கு அரியவரான இறைவரின் திருந்துதேவன் குடியினைச் சென்று அடைந்தார். திருவியலூரில் அருளிய பதிகம் 'குரவம் கமழ்' (தி. 1 ப. 13) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகத்து வரும் 5ஆவது பாடலில் 'கண்ணார்தரு முருவாகிய கடவுள்ளிடம்' என வருவது கொண்டு, 'அருள்வேடம் காட்டத் தொழுது' என ஆசிரியர் அருளியிருப்பர் போலும்.

உயிர்கள் பிறவியலையாற்றினின்றும் திருந்து தற்கு ஏதுவாய தேவன்குடி என்ற திருப்பதியில் நிலையாக வீற்றிருக் கும் இறைவனின் கோயிலை அடைந்து, பொருந்திய அன்பு மீதூரச் சென்று போற்றி வணங்கி நினைவாராகி, இவர்தம் வேடம் மருந்தும் மந்திரமும் ஆகும் என்று அளவில்லாத ஞானப் பாலையுண்ட பெற்றி மையால், பிள்ளையார் அரிய தமிழ் மாலையைச் சாத்தினார். இப்பதியில் அருளிய பதிகம் 'மருந்து வேண்டில் இவை' (தி. 3 ப. 25) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணிலமைந்த திருப்பதிகமாகும்.
மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே. (தி. 3 ப. 25 பா. 1)
எனவரும் முதற்பாடலை முகந்தவாறு சேக்கிழார் இத்திருப்பதிகக் கருத்தை அருளுகின்றார். 'தேவன்குடி' என்பது ஊர்ப் பெயர். திருந்து என்பது அதற்கு அடையாய் நின்றது.


அரும்புகள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த அப்பழமையான ஊரினின்றும் நீங்கி, அவ்வழியில் செல்பவராகி, வயல்களில் விளைந்து நிற்கும் நெல்லும் கரும்பும் தென்னையும் பசிய கமுகும் என்ற இவற்றிடையே சென்று, நஞ்சு விளங்கும் கழுத்தை உடைய இறைவரின் கோயில்களுள், அம்மருங்கில் உள்ளனவற்றை யெல்லாம் வணங்கிக்கொண்டு, திருஇன்னம்பர் இறைவரின் கோயி லைத் திருஞானசம்பந்தர் அடைந்தார். மொய் - அரும்பு. மருங்குள்ள கோயில்கள் எல்லாம் என்பன திருக்கொட்டையூர், திருவிசயமங்கை, திருபுறம்பயம், திரு வைகாவூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். எனினும் பதிகங்கள் எவையும் கிடைத்தில.

திருஇன்னம்பரில் வீற்றிருந்தருளும் இறைவனை வணங்கி, இடைமடக்கான யாப்பால் அமைந்த 'திருமுக்கால்' என்ற இறைவரின் புகழைப் பரவும் திருப்பதிகத் தமிழ்ப் பாடல் மாலைகளைச் சாத்தி, வணங்கி, இறைவரின் பொன்னடிகளைப் போற்றிப் புறப்பட் டுச் சென்று, நிலை பெற்ற பெரிய கரையையுடைய காவிரியின் வட கரையில் உள்ள வடகுரங்காடுதுறையில் வந்து அணைந்தார். திருஇன்னம்பரில் அருளிய பதிகம் 'எண்டிசைக்கும்' (தி. 3 ப. 95) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். பாடற்குரிய நான்கடிகளில் இடையிலுள்ள இரண்டாவது அடி மடங்கி மீண்டும் மூன்றாவது அடியாகவும் வருவது இடைமடக்காகும். இவ் வகையில் நான்கடிகளில் இரண்டும் மூன்றுமாக அமைந்த அடிகள், சொல்லானும் பொருளானும் ஒரு நிலையவாய் இருத்தலின் அவற்றை ஓரடியாகக் கொள்ள, மூன்றடிகளாக அமைதலின் முக்கால் என்றனர்.

வடகுரங்காடுதுறையில் வந்து, வாலி வழிபட்டுப் புகலிடமாகக் கொண்ட வரலாற்றைத் திருப்பதிகத்தில் உலகம் அறியச் சிறப்பித்துப் பாடி, திருக்கோயிலை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டு அதன் அருகில் உள்ள திருப்பதிகளை யெல்லாம் வணங்கிய வண் ணம் மூவிலைச் சூலத்தைக் கைக்கொண்ட இறைவர் எழுந்தருளிய திருப்பழனத் திருப்பதியைச் சென்றடைந்தார். வடகுரங்காடுதுறையில் அருளிய பதிகம் 'கோங்கமே' (தி. 3 ப. 91) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். 'கோவமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார்' 'நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடொல்க வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்' என இப்பதிகத்து ஆறாவதும் எட்டாவதும் ஆக வரும் பாடல்களை உளங்கொண்டு சேக்கிழார் இவ்வாறு அருளுகின்றார். புறத்துள்ள தலங்கள் என்பன திங்களூர் முதலாயினவாகலாம். பதிகங் கள் எவையும் கிடைத்தில.

திருப்பழனத்தில் வீற்றிருக்கும் முக்கண்களை உடைய சிவபெருமான் திருக்கோயிலுள் புகுந்து நின்று போற்றி உருகிய உள்ளத்தையுடையவராகி, விரும்புதற்குரிய தமிழ்ச் சொல் பதிகத்தைப் பாடிப் பெருவிருப்புடன் அங்குத் தங்கியிருந்து, பின் அங்கிருந்தும் நீங்குபவராய்த் தீயைப் பழித்த செந்தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளையுடைய திருவையாற்றை அடைபவர். திருப்பழனத்தில் அருளிய பதிகம் 'வேதமோதி' (தி. 1 ப. 67) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்த பதிகமாகும். அழல் நக்க பங்கயம் - நிறத்தால் தீயைப் பழித்த செந்தாமரை மலர்கள், 'யாழைப் பழித்தன்ன மொழி' எனவரும் திருவாக்கினை நினைவு கூர வைக்கின்றது. அழல் நக்க - செம்மை நிறத்தால் நெருப்பினும் மேம்பட விளங்கல்.

நிரல்பட அமைந்த மாடங்களைக் கொண்ட திரு வையாற்றில் வாழ்கின்ற அடியவர்கள், உலகம் உய்யும் பொருட்டுச் சீகாழியில் தோன்றி ஞான அமுதம் உண்ட பிள்ளையார் வருகின்றார் என்னும் பதைப்பு உளங்கொண்ட ஆர்வத்தால், ஆடலொடு பாடல் அறாத அழகிய அப்பழமையான நகரை முழுமையாக அணிசெய்து, பெருகிய உள்ள மகிழ்வுடன் வரவேற்கப் பிள்ளையாரும் முத்துச் சிவி கையினின்றும் இறங்கிவந்து, நித்திலயானம் - முத்துச் சிவிகை.

திரண்டுவந்த தொண்டர்கள் தம்மைச் சூழ்ந்து வர, மானை ஏந்திய கையையுடைய இறைவனிடத்தில் நந்தியெம் பெருமான் அருளைப் பெற்ற அத்திருப்பதியை வணங்கி, புலனைந்தும் பொறிகலங்கி நெறி மயங்கியவிடத்து, 'அஞ்சற்க' என்று அருளுரை வழங்கும் இறைவரது திருவையாறு இதுவாகும் எனும் திருவுளத் துடன், மனம் நிறைந்து எழுந்த செந்தமிழினது சந்த இசைப் பதிகத்தால் வணங்கிப் போற்றினார், சீகாழித் தலைவரான சம்பந்தர். திருவையாற்றை நண்ணிய அளவில் அருளிய பதிகம் 'புலனைந்தும்' (தி. 1 ப. 130) எனத் தொடங்கும் மேகராகக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். 'புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி, அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்' எனவரும் இப்பதிகத்தின் முதற்பாட் டினை முகந்து நின்று, ஆசிரியர் சேக்கிழார் இவ்வாறு அருளிச் செய் கின்றார். இம் மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

அழகிய திருவீதிகளைக் கடந்து சென்று திருமாலுக்கும் நான்முகனுக்கும் அறிதற்கு அரிய சிவபெருமான் நிலையாய் வீற்றிருக்கும் கோயிலின் அழகு பொருந்திய கோபுரத்தைச் சார்ந்து பணிந்து கோயிலுள் சென்று அளவில்லாத ஆசையானது பெருகித் தணியாத மனத்துடன் இறைவரின் திருக்கோயிலை வலமாய் வந்து பாம்பை அணிந்த அப்பெருமானின் திருமுன்பு வணங்கி நிலமுற விழுந்து, எழுந்து, அன்பால் போற்றுவாராய்,
குறிப்புரை

'கோடல்கோங் கங்குளிர் கூவிளம்' ( தி. 2 ப. 6) எனத் தொடங்கும் திருப்பதிகமான சிறந்த சொல்மாலையை, நீடிய பெருந் திருக்கூத்தின் சிறப்பு நிறைவாகத் தம் உள்ளத்திலே தோன்ற 'ஆடு மாறுவல் லானும்ஐ யாறுடை யையனே' என்ற கருத்தை நிறை வாகக் கொண்ட பதிகத்தைப் பாடி, அன்பினால் இன்பமார்ந்திருக்கும் விழிகளிலிருந்து ஆனந்தக் கண்ணீர் இடையீடின்றிப் பரந்து பாய்ந் திடப் பாடினார்; ஆடினார். கோடல் கோங்கம்' எனத் தொடங்கும் இப்பதிகம் இந்தளப் பண்ணிலமைந்ததாகும். இத்தொடக்கமுடைய பதிகத்தின் முதற் பாடல், 'ஆடு மாறுவல் லானுமை யாறுடை யையனே' என நிறைவு பெறுகிறது. பதிகம் முழுதும் இவ்வாறமைந்த முடிபு கொண்ட தொடர்களை முகந்த நிலையில் சேக்கிழார் இவ்வாறு அருளிச் செய்கின்றார்.
இஃதன்றிப் பிள்ளையார் திருவையாற்றில் ஆடிப் பாடியவாறு அருளிய பதிகங்கள் மூன்று:
1. 'கலையார்மதி': (தி. 1 ப. 36) -தக்கராகம்.
2. 'பணிந்தவர்': (தி. 1 ப. 120) - வியாழக்குறிஞ்சி.
3. 'திருத்திகழ்': (தி. 2 ப. 32) - இந்தளம்.


பலமுறையும் வணங்கி எழுந்து வெளியே வந்து, வணங்கி எழும் திருத்தொண்டர்களுடன் நிலை பெற்று அத்திருப்பதி யில் இருந்தருளிய அந்நாள்களில், ஒப்பில்லாத பெருகிய நீரையுடைய கங்கை அலைதற்கு இடமான முடியில் பிறைச் சந்திரைனைச் சூடிய இறைவரது 'பெரும் புலியூர்' முதலான பதிகளுக்கும் சென்று போற்றித் தமிழ் மாலைகளைப் பாடி, மீண்டும் திருவையாற்றை அடைந்து, பெரு கும் ஆசை மிக அங்கிருந்து வரும் நாள்களில், திருப்பெரும்புலியூரில் அருளிய பதிகம் 'மண்ணுமோர்' (தி. 2 ப. 67) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். இத்திருப்பதி முதலான பதிகளுக்கும் சென்றார் எனக் குறிப்பதற்கேற்ப அப்பதிகள் இவை என அறிதற்கு இல்லை.

இப்பதியின் மேற்குத் திசையில் செல்வதற்கு விடை பெறக் கும்பிட்டுத் திருவருளைப் பெற்று, அங்ஙனம் பெற்ற அவ்வருட் குறிப்பின் வழியே செல்கின்றவர் திருநெய்த்தானத்தை அடைந்து மனம் பொருந்த வணங்கி, அரிய தமிழ் மாலைகளைப் பாடி, அங்கிருந்த இருமருங்கும் வளரும் கரும்புடன் பாக்கு மரங்களும் நெருங்கியுள்ள 'திருமழபாடியை' வணங்கச் செல்லலானார். திருநெய்த்தானத்தில் அருளிய பதிகம் 'மையாடிய கண் டன்' (தி. 1 ப. 15) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

சிவந்த மான் கன்றை ஏந்திய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருமழபாடியின் புறத்தே செல்பவரான பிள் ளையார், 'அங்கையாரழல்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தொடங்கி, மேலும் அப்பதியை அணுகும் பொழுது 'உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவர் வீற்றிருக்கும் திருமழபாடியைத் தலை யினால் வணங்குபவர்கள் மேன்மேலும் பெருகும் தவம் பெற்றவர் கள்' எனப் பாடிப் போற்றித் தொழுதவாறே கோயிலுள் புகுந்தார். 'அங்கையார் அழல்' (தி. 3 ப. 48) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணிலமைந்த இப்பதிகத்தில் வரும் நான்காவது பாடல், 'திருமழ பாடியைத் தலையி னால்வணங் கத்தவ மாகுமே' என நிறைவு பெறுகிறது. இக்குறிப்பை உளங்கொண்ட வகையில், இவ்வாறு அருளுகின்றார் சேக்கிழார்.

அத்திருமழபாடியில் அழகிய வயிரமணித் தூண் ஆக வீற்றிருந்தருளும் பெருமானாரின் கோயிலை வலம் வந்து, செழுமையான மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிக் கீழே விழுந்து வணங்கி எழுந்து நின்று, தொழுதும் ஆடியும் பாடியும் நல்ல சொல்மாலைத் தொடை பாடிப் போற்றியும் வெளிப்போந்த நிலையில், இடையறாத அன்புடன் தம் தலைவரான இறைவரைக் கும்பிட்டு, அத்திருப்பதியில் சில நாள்கள் தங்கியிருந்தார் பிள்ளையார். இத் திருப்பதியில் சாற்றியருளிய பதிகங்கள் இரண்டு: 1. 'களையும்' : (தி. 2 ப. 9) - இந்தளம். 2. 'காலையார்' : (தி. 3 ப. 28) - கொல்லி. இவற்றுள் முன்னையது இதுபொழுதும், பின்னையது இங்கிருந்த நாள்களிலுமாகப் பாடியிருக்கலாம். இப்பதியில் இருந் தருளும் இறைவனின் திருப்பெயர் வயிரமணித்தூண்நாதர் என்ப தாகும். 'மழபாடி வயிரத்தூணே' என்பது அப்பர் திருவாக்காகும்.

அப்பதியைக் கடந்து சென்றவர், திருக்கா னூரைப் பணிந்து போற்றி, பெருமை பெற்ற ஆதிசைவர் இருக்கும் திரு அன்பிலாலந்துறை இறைவரை வணங்கிப் போற்றி, வளம் மிக்க சொற்களமைந்த செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடி, சிவபெருமானின் பல பதிகளையும் வணங்கிப் போற்றி, அருவியென மதத்தைச் சொரியும் மலையனைய யானையை உரித்த இறைவரின் 'வடகரை மாந்துறையை' அழகிய முப்புரிநூல் அணிந்த மார்பையுடைய சம்பந்தர் சென்று சேர்ந்தார். திருக்கானூரில் அருளிய பதிகம், 'வானார் சோதி' (தி. 1 ப. 73) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்ததாகும். திருஅன்பிலாலந்துறையில் அருளிய பதிகம், 'கணை நீடெரி' (தி. 1 ப. 33) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்ததாகும். 'சடை முடியார் பல பதியும் பாடி' என்பதற்கேற்பப் பிள்ளையார் வணங்கிய திருப்பதிகள் எவை என அறிதற்கியன்றிலது. பதம் - வளம் மிக்க சொற் கள்: மந்திரம் என்றலுமாம். மாந்துறை - ஊர்ப்பெயர். காவிரியின் வட கரையில் அமைந்திருத்தல் பற்றி அஃது அதற்கு அடைமொழியாயிற்று.

சென்றவர், திருமாந்துறையில் விளக்கம் பெற வீற்றிருந்தருளும் கங்கையாறு தங்கப் பெற்று வாழ்வு அடைந்த சடையை உடைய இறைவரின் திருமுற்றத்தை வணங்கி, அழகிய நீண்ட திருமாளிகையை வலம் வந்து, உட்சென்று, திருமுன் விழுந்து பணிந்து, செறிந்த ஒளிர்க் கதிர்களையுடைய ஞாயிறும், சந்திரனும், தேவ மருத்துவர்களும் தொழுது வழிபட, இறைவர் எழுந்தருளிய நிலையைச் சிறப்பித்த சொல்மாலையை நிலவி நிற்கும்படியாகப் பாடி, திருமாந்துறையில் அருளியது, 'செம்பொனார் தரு' (தி. 2 ப. 110) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்ததாகும். பரிதி, மதி, தேவ மருத்துவர்களும் வழிபட்டமை இப்பதிகத்துள் வரும் ஆறாவது பாடலில் காணும் குறிப்பாகும்.

அவ்விடத்தினின்றும் நீங்கி அருகில் உள்ள சிவ பெருமானின் பிற திருப்பதிகளையும் வணங்கி, செந்தாமரை மலர்க ளின் மொட்டு அவிழ, சேல்மீன் பாய, தேன் பொழிவதால் சேறு உலராத வயல்களையுடைய, பொங்கும் ஒலிமிக்க நீரையுடைய மழநாட்டில், காவிரியின் வடகரை வழியாகச் சென்ற சீகாழித் தலைவர், நம் இறைவரின் திருப்பாச்சிலாச்சிராமத்தைத் தொழுவதற்குச் சேரும் பொழுதில், பாச்சில் - ஊரின் பெயர். ஆச்சிராமம் - கோயிலின் பெயர். 'பதி பிறவும்' என்பன திருத்தவத்துறை, பூவாளுர், திருமங் கலம் முதலியன வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.

அந்நகரத்தில் கொல்லி மழவன் தான் பெற் றெடுத்த அரிய அமுதம் போன்ற மென்மையான சொல்லையுடைய கன்னியான இளமான் போன்ற அழகான இளங்கொழுந்தினுடைய ஒளி பொருந்திய உடம்பில், முயலகன் வந்து சார்ந்ததால், உடல் வருந்தித் தனது உறவினர் வருந்தத் தானும் உள்ளத் தளர்ச்சி அடைந்தவனாய், முயலகன் - உடலில் வலிப்பு ஏற்பட உணர்வற்றுக் கிடக்கும் நோய். இக்காலத்தில் வலிப்பு எனக் கூறப் படுவதொரு நோய்.

எவ்வாற்றானும் நீக்க மாட்டாமையால், மான் கன்றினையுடைய திருக்கையைக் கொண்ட சிவபெருமானின் திருவடிகளைப் பற்றி வாழ்தலையே வழிவழியாகக் கொண்டு நிற்கும் தன்மையனாதலின், அத்துன்பம் நீங்கும் பொருட்டுப் பொன் வளையல் அணிந்த அப்பெண்ணை அழைத்து வந்து, போர்க்கோலம் கொண்ட வீரராய், முப்புரங்களையும் எரித்த இறைவரின் திருக் கோயிலில், அவர் திருமுன்பு இட்டு வைத்தான். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார் அத்திருப்பதிக்கு எழுந்தருளி, அப்பதியினை அணுகிவரச் 'செம்மை தரும் மெய்ஞ்ஞானத்தை உணர்ந்த திருஞானசம்பந்தன்' என எவ்வுலகும் துன்பம் நீங்குமாறு ஒலிக்கின்ற திருக்காளம் முதலான இயங்கள் ஒலிக்க, துன்ப மிகுதியால் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கும் அக்கொல்லி மழவன், அதனைக் கேட்டு, மென்மைத் தன்மை வாய்ந்த அப்பெண்ணை அங்கே விட்டுப் பிள்ளையாரை எதிர் கொள்ள விரைந்து செல்வானாகி,
குறிப்புரை

'பெரிய இந்நகரை அணிசெய்யுங்கள். மகர தோரணங்களைக் கட்டுங்கள்! மணிகளை இட்ட மணநீர் நிறைந்த நிறை குடங்களையும் ஒளியுடைய அழகிய விளக்குகளுடன் நறுமணப் புகையையும் ஏந்துங்கள்! இன்னும் பிறபிற அணிகளையெல்லாம் பெருகச் செய்யுங்கள்!' என ஆணையிட்டு, அக்கொல்லி மழவன் தானும் தேவதேவரான சிவபெருமானின் மகனாரான பிள்ளையாரின் திருமுன்பு தொழுதபடியே சென்றணைந்தான். அம்மையப்பராய் வந்து ஞானப்பால் ஊட்டியமை யின், பிள்ளையார் அவர் திருமகனார் எனக் கருதப் பெற்றனர். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

சென்றவன் 'பிள்ளையார் எழுந்தருளப் பேறு பெற்றேன்!' என எண்ணி, மேன்மேலும் பெருகும் அன்பினால் வெள்ளமாய்க் கண்கள் நீரைப் பொழிய, முத்துச் சிவிகையின் முன்பு விழுந்த பொழுது, வள்ளலாரான பிள்ளையார் 'எழுக' என்ற திரு வாக்கால் அருள, அவன் தன் மலர்க் கைகளைத் தலைமேல் குவித்துக் கொண்டு எழுந்து, அவருடனே சென்று பழமையான அப்பதியின் திருவீதி வழியே அழைத்துக் கொண்டு வந்து நகரினுள் புகுந்தான்.
குறிப்புரை

மங்கல இயங்கள் ஒலிக்கும் அவ்வீதியைக் கடந்து சென்று, பிறைச் சந்திரனை அணிந்த சடையையுடைய இறைவரின் திருக்கோயிலின் பொங்கும் ஒளி வீசும் கோபுரத்துக்கு அருகில், அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கிய பிள்ளையார், அழகிய வாயிலை வணங்கி உள்ளே புகுந்து, தம் இறைவரின் கோயிலை வலம் வந்து, அப்பெருமானைத் திருமுன்பு சென்று வணங்கச் செல் லும் பொழுது,
குறிப்புரை

கன்னியாகிய இளங்கொடிபோன்ற ஒரு பெண், உணர்வின்றி நிலத்தில் கிடப்பதைப் பார்த்து, இஃது என்ன? எனப் பிள்ளையார் கேட்க, அதனைக் கேட்ட கொல்லி மழவன், அவர் எதிரே வணங்கி, 'அடியேன் பெற்ற பொன் போன்ற இப் பெண்ணை ஒப்பில் லாத தீர்ப்பதற்கு அரிய 'முயலகன்' என்ற நோய் பற்ற, அதனைத் தீர்க்க இயலாது இறைவர் தம் திருக்கோயிலில் அவர் திருமுன்பு கொணர்ந்து இவ்வகையில் கிடத்தியுள்ளேன்! இதுவே நிகழ்ந்தது!' எனக் கூறி நின்றான்.
குறிப்புரை

அழகிய மாலையை அணிந்த மழவன் சொல் லியவற்றை அருளோடும் கேட்டருளி, அந்நிலையில் நின்றவாறே, பாம்பு வாழ்தற் கிடனாய சிவந்த சடையினையுடைய திருப்பாச்சிலாச் சிராமத்தில் வீற்றிருக்கும் மேலாய பெருமானைப் பணிந்து, நஞ்சு வளர்தற் கிடனாய கழுத்தினை யுடையவரோ, இம்மங்கையை வாடும்படி மயக்கம் செய்வதோ இவர்தம் மாண்பு என்று எடுத்துத் தீர்த்தற்கரிய அந்நோயினைத் தீர்க்கும் தண்தமிழ்ப் பதிக மாலையைப் பாடியருளினார். இதுபொழுது அருளிய பதிகம் 'துணிவளர் திங்கள்' (தி. 1 ப. 44) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகத்தின் முதற் பாடல், 'மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே' என நிறைவு பெறுகிறது. இதனையே ஆசிரியர் எடுத்து மொழிகின்றார். இப்பதிகப் பாடல்கள் பத்தும் இறைவனின் அரும் பண்புகள் பலவற்றையும் விரித்துக் கூறி, 'இவ்வரும் பண்பு உடையவரோ இந்நங்கையை இடர் செய்வதா இவர் மாண்பு' என எடுத்து மொழிகின்றன. இப்பதிக முதற் பாடலில் 'சுடர்ச்சடை சுற்றி முடித்து' எனக் கூறுதற்கேற்ப இத்திருக் கோயிலில் உள்ள கூத்தப் பெருமானின் திருமுடி இன்றும் காட்சி அளிக்கின்றது.

புகழ்ந்து பேசப்படுகின்ற தமிழ் மறையான திருப்பதிகத்தைப் பாடி, நிறைவில் திருக்கடைக்காப்பும் அருளிச் செய்து, நிலைபெற்ற கவுணியர் தலைவரான சம்பந்தர் வணங்கி நிற்ப, அதுபொழுது மழவன் பெற்ற மழலையாகிய மென்மையான சொற் களையுடைய அக்கன்னி, நோய் நீங்கப் பெற்று, மிக விரைவாக நிலத் தினின்றும் எழுந்து பொற்கொடிபோல் ஒதுங்கி நடந்து வந்து, போர் வன்மை கொண்ட தந்தையின் அருகே அடைந்தனள். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபுடையன. இவ்வர லாற்றை நினைவு கூரும் வகையில் இப்பதியிலுள்ள கூத்தப் பெரு மானின் திருவடிக்கீழ் முயலகன் இல்லாதுள்ளது. எனினும் முயலகன் என்னும் நோய் வேறு; திருவடிக்கீழ் இருக்கும் முயலகன் வேறு.

கொடிய முயலகன் என்ற நோய் நீங்கிய மக ளைக் கண்ட மழவன், பெருகிய மகிழ்ச்சிமீதூர, தன்னுடைய ஒப்பில் லாத மகளும் தானும் சீகாழித் தலைவரான பிள்ளையாரின் திருவடி களில் விழுந்து வணங்க, அங்கு நின்ற பிள்ளையாரும் கங்கை நீரைத் தரித்த சடையையுடைய குற்றமற்ற இறைவரின் திருவடிகளை ஒரு நெறியாகக் கொண்டு பணிந்தார்; தேவ தேவரான இறைவரின் அடிய வர்கள் மகிழ்வொலி செய்தனர்.
குறிப்புரை

என்றும் அருள் நீடுகின்ற திருப்பாச்சிலாச் சிராமத்தில் நிலையாய் எழுந்தருளியிருக்கும் உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருகிவரும் சிவபெருமானின் அருளுடனே அங்கிருந்த பிள்ளையார், மேலும் பல பதிகளை வணங்கும் திருக்குறிப்பால் சென்று, ஆடலில் மகிழ் வுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் அடைந்து வணங்கித் திருவடிகளைப் போற்றி, மேலும் சென்று அறிவால் சிறந்தவர் உறைகின்ற 'திருப்பைஞ்ஞீலிச்' சிவபெருமானை வணங்குவதற்காகச் சென்றருளினார். இங்குப் பதிபிறவும் என்றது திருப்புலிவலம், திருத்துறையூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண்களைப் பயிலும் வண்டினங்கள் பாடுதற்கு இடனான சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலி இறைவர் திருவடி களை வணங்கி, உலகத்தவர் போற்றும் தமிழ் மாலையான திருப் பதிகத் தைப் பாடி, அத்திருப்பதியில் தங்கி வணங்கி மகிழ்ந்து, மேற்சென்று, திண்ணிய பெரிய தெய்வத் தன்மை வாய்ந்த திருக்கயிலை மலையில் வாழ்கின்ற சிவபெருமானின் பதிகள் பலவற்றையும் சென்று வணங்கி, வளம் தருகின்ற சீகாழிப் பதிக்குத் தலைவரான பிள்ளையார், 'திரு ஈங்கோய்' மலையைச் சார்ந்தார். திருப்பைஞ்ஞீலியில் அருளியது, 'ஆரிடம் பாடிலர்' (தி. 3 ப. 14) எனத் தொடங்கும் காந்தாரபஞ்சமப் பண்ணிலமைந்த திருப்பதிகமாகும். பதிபல என்றது திருத்தலையூர், திருநெற்குன்றம், முசிறி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

சிவந்த கண்களை உடைய குறவரைத் தேவர்கள் வந்து வணங்குவதற்கு இடனான, 'திருஈங்கோய்' மலையில் வீற்றிருக்கும் கங்கையைச் சடையில் கொண்ட சிவபெருமானைப் பணிந்து, இசையுடன் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடி, பெருகிய சோலைகள் சூழ்ந்த மலையையும் மற்றும் அயலில் உள்ள இடங்கள் எல்லாவற்றையும் வணங்கிக் கொங்கு நாட்டின் மேல்பகுதியில், குற்றம் இல்லாத மெய்ஞ்ஞானக் கொழுந்தனைய ஆளுடைய பிள்ளையார் சென்று சேர்ந்தார். இவ்விடத்துப் பாடியருளியது, 'வானத்துயர் தண்' (தி. 1 ப. 70) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும். இங்கு மலை எனக் குறிப்பது திருவாட்போக்கி (ஐயர் மலை) யாகலாம். ஆனால் இதனைப் பின்னர் வந்து வணங்குவதாக ஆசிரி யர், 339ஆம் பாடலிலும் குறிக்கின்றார்.

தேவர்களின் தலைவரான சிவபெருமான் திருக்கோயில்கள் அப்பக்கங்களில் உள்ளவற்றையெல்லாம் வணங்கிச் சென்று, தெளிவான அலைகளையுடைய நீர் கொண்ட காவிரியின் தெற்குக் கரையில் உள்ள கொங்கு நாட்டில், வண்டுகள் அலைதற்கு இடனாகப் பெருகும் நீரையுடைய சடையார் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கி, மேகங்கள் தவழும் நீண்ட மதிலையுடைய திருக்கொடிமாடச் செங்குன்றினை அடைந்தார் பிள் ளையார். தென்கரையாம் கொங்கினிடை எனப் பின்னர் விதந்து கூறுவதால் அண்டர்பிரான் ஆலயங்கள் என முன்னர்க் கூறுவது காவிரியின் வடகரையிலுள்ள திருப்பதிகள் பலவுமாகும். இவ்வகை யில் ஈங்கோய் மலையிலிருந்து ஏறத்தாழ நாமக்கல், சேலம் வரையில் உள்ள திருப்பதிகள் பலவுமாகலாம். இதுபோன்றே காவிரித் தென் கரையிலும் கடம்பந்துறை முதல் கரூர் வரையிலுள்ள திருப்பதிகள் பலவுமாகலாம். கருவூரில் வணங் குவதைப் பின் 339ஆம் பாடலில் ஆசிரியர் குறித்தருளுகின்றார். காழிச்செல்வர் இவ்வகையில் வணங்கிச் சென்ற அத்திருப்பதிகளைப் பெயரளவில் அறிதற்கியலாதுள்ளது. திருவருளாக, கொடிமாடச் செங்குன்றூர் இக்காலத்துத் திருச் செங்கோடு என வழங்கப் பெறுகின்றது.

அந்த நகரத்தில் வாழ்பவர்களும் சிவனடியார் களும் மகிழ்ந்து, நீண்ட பல தோரணங்கள், வாழை மரங்கள், பாக்கு மரங்கள் முதலானவற்றை அமைத்து அணிசெய்து, எதிர்கொண்டு வணங்கிப் போற்றி, இருகைகளையும் தலைமீது பொருந்த ஏற்றி, சினமுடைய ஆனேற்றை ஊர்தியாகவுடைய இறைவர் எழுந்தருளிய கோயிலின்கண் பிள்ளையாரை அழைத்துக் கொண்டு சென்றனர்.
குறிப்புரை

நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர், தம் இறைவர் கோயிலுள் சென்று, அவரது திருமுன்பு தாழ்ந்து வணங்கி, இம்மண் ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் நலம்பெற இனிய இசையுடன் வளம் பொருந்திய தமிழ்ப் பதிகத்தைப் பாடி, மேலும் கும்பிட வேண் டும் என்ற ஆசையால் அந்நகரத்தில் இனிதாக வீற்றிருந்தார். இறைவன் திருமுன்பு அருளிய பதிகம் 'வெந்த வெண் ணீறணிந்து' (தி. 1 ப. 107) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும்.

அப்பகுதியில் மேற்குத் திசையில், கங்கையைச் சூடிய இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் கோயில்களை உடைய எல்லா இடங்களிலும் சென்று வணங்கி, 'திருநணா' என்ற பதியை அடைந்து, பாம்பை அணிந்த இறைவரை வணங்கி, முன்னர்த் தாம் விரும்பி எழுந்தருளியிருந்த கொடிமாடச் செங்குன்றூரில் சென்று வீற்றிருந்தார்.
குறிப்புரை: குடபுலத்திலுள்ள கோயில்கள் எல்லாம் சென்றிறைஞ்சி என்றது, பேரூர், அவிநாசி, கொல்லிமலை, மாட்டூர், சேவூர், தோழூர், ஏழூர், திருமுருகன்பூண்டி, குரக்குத்தளி, குமரிகொங்கு முதலியன வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத் தில. திருநணா என்பது இக்காலத்தில் பவானி என அழைக்கப் பெறுகிறது. இத்திருப்பதியில் அருளிய பதிகம் 'பந்தார்விரல்' (தி. 2 ப. 72) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

அவ்விடத்தில் ஆளுடைய பிள்ளையார் விரும் பித் தங்கியிருந்த நாள்களில், பெய்யும் துளிகளையுடைய மேகக் கூட்டங்கள் மழை சுரத்தலின்றும் நீங்கப் பெருகிய ஒலியுடைய நீரால் சூழப்பட்ட உலகில் எல்லாரும் வெயில் பெறாததனால், அவ் விருப்பம் மேலிட அருகிலுள்ள மலைகளும் குளிர்ச்சி அடையத்தக்க முன்பனிப் பருவம் வந்து சேர்ந்தது. மழைபொழியும் காலம் கூதிர்க் காலம் ஆகும். அது நீங்க முன்பனிக் காலம் வந்தது. இக்கால இயற்கையைத் தொல்காப்பியம் முதலாகவுள்ள இலக்கண நூல்கள் தொடர்ந்து குறித்து வந்துள்ளன. இவ்வாறு மழையும், அது நீங்கியபின் பனியும் தொடர்ந்தமையின், வெயில் வேண்டும் விருப்பைப் பெற்றனர் மக்கள்.

வண்டின் கூட்டங்கள் வெறுத்து நீங்க, தாமரைகள் முகம் கருக, பளிங்கு மணியை மரகதக் கொடியில் கோத்தது போல மெல்லிய அறுகம்புல்லின் நுனியில் பனித் துளிகள் சேர்ந்து அசைய, சூழ்ந்த பனியினால் நேர்ந்த குளிருக்கு ஆற்றாது உடைந்து, குன்றுகளும் வெண்மையான போர்வை போர்த்தன போல விளங்கின. இதில் வரும் உவமைகள் இரண்டும், வருணனைக்கு அழகுக்கு அழகு செய்வன போல் விளங்குகின்றன.

மிக்க பனி செறிந்த குளிரையுடைய வாடைக் காற்று முழுமையாக வீசும் காலமானதால், பறித்தற்குரிய தளிர்கள் தழைத்த மெல்லிய சோலைகளும் குளிர்ச்சி பெற்றுத் தடுமாற, குளிரால் ஒருமருங்கு ஒதுங்கி நிற்கும் கதிரையுடைய சூரியனும் தன் கதிர்களை நிமிர்ந்து
குறிப்புரை

பழமையால் நீடிய அங்குள்ள திருப்பதிகள் எங் கும் நிரல்பட அமைந்த மாடங்களின் வீட்டு இறப்புகள்தொறும், தம் பெடைகளுடன் பவளம் போன்ற கால்களை உடைய புறாக்கள் ஒடுங்கியிருக்கும்; சிறுசண்பக மலரின் இதழ்கள் விரிவதற்கு இடமான மென்மையான கூந்தலையுடைய தம் பெண்களின் இணைக் கலசம் போன்ற விரும்பத்தக்க மார்பகங்களில், ஆடவர்களின் பருத்த தோள்களும் அழகிய மார்புகளும் அடங்குவனவாம்.
குறிப்புரை

விரியும் மென்மையான மலர்களையுடைய மலை சார்ந்த நிலங்களில் எங்கும், அருகில் மஞ்சளும் குங்குமமும் சேர அரைத்து வைப்பர்; பக்க இடங்கள் எங்கும் பெரிய அகில் துண்டு களைப் பிளந்து புகை எழுப்புவர்; இடை இடங்களில் தீயை உமிழ் கின்ற பெரிய வாயை உடைய தோணி வடிவில் அமைந்த இரும்புச் சட்டியைக் குளிர் காய்வதன் பொருட்டுத் தம் அருகில் இழுத்துக் கொள்வர். மஞ்சளும், குங்குமமும் சேர அரைத்து வைத்து அன லூட்டி அகில் பொடி தூவி சூடான நறுமணப்புகை கொள்ள குளிருக்கு இதமாம். இந்நான்கு பாடல்களும் முன்பனிப் பருவத்தைச் சித்தரித்துக் காட்டும் அழகு எண்ணி மகிழ்தற்குரியதாம்.

அந்நாள்களில் கொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்த பிள்ளையாருடன் உள்ள அடியவர்கள், பல நாள்கள் அங்குத் தங்கியிருந்ததால், நடுங்குதற்கு ஏதுவாய குளிரை முன்னே காணும் மலைச்சுரம் வந்து மேல் அடர்வதைப் போல் வருத்தவே, குளிர் முன்னரும், சுரம் பின்னரும் வருதலின், முன்னான பிணி வந்து என்றார். மலைநாட்டியற்கையில் வரும் சுரம் மலைச்சுரம் ஆகும்.

அந்நிலைமையை அங்குச் சூழவுள்ளார்கள் எல்லாம் பிள்ளையாரின் திருமுன் போந்து, அவரிடம் கூறி விண்ணப் பித்துக் கொள்ளவும், இறைவரின் திருவருளைத் தொழுது, 'இந் நாட்டின் இயல்பே இது; ஆயினும் இதன் கொடுமைகள் நமக்கு வந்து சேர மாட்டா' என்ற கருத்துடன், சென்னியில் சந்திரனை அணிந்த இறைவரைத் திருப்பதிகம் பாடுவாராய்,
குறிப்புரை

'அவ்வினைக்கு இவ்வினை' (தி. 1 ப. 116) என்று தொடங்கி, 'இறைவர் உண்ட கொடிய நஞ்சைத் தடுத்து எம் துன்பங்களை யெல்லாம் வராமல் காத்தது அவரது திருநீலகண்டமே ஆகும்' என்ற கருத்தினை வைத்துச் 'செய்வினை எம்மைத் தீண்டப் பெறா' என்று திருநீலகண்டத்தினிடம் ஆணை என அருளினார். 'அவ்வினைக்கு இவ்வினையாம்' (தி. 1 ப. 116) எனத் தொடங்கும் பதிகம் வியாழக்குறிஞ்சிப் பண்ணிலமைந்ததாகும். நீலகண்டம் - கருமை பொருந்திய கழுத்து. பிறவுயிர்கட்கு இறுதிவாரா வண்ணம் காக்க இறைவர் தாம் நஞ்சையுண்டார். அதனால் அவர் கழுத்துக் கருமை பொருந்தியதாயிற்று; இவ்வருஞ் செயலுக்கு இடனாய உறைப்பின் சிறப்புக் கருதி 'திரு' என்னும் அடைமொழி கூட்டித் 'திருநீலகண்டம்' என அழைக்கப் பெறுவதாயிற்று. உயிர்க்கு வரும் வினை இயல்பைப் பாடல்தொறும் குறித்து, அவை திருநீல கண்டத்தை நினைவதால் உயிர்களைத் தீண்டா எனும் கருத்து அமைவை ஈற்றில் காட்டி அருளுகின்றார். பிள்ளையார், 'ஆணை நமதே' என்று அருளிய இடங்களில் இஃது இரண்டாவதாகும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

அத்தகைய அருட் குறிப்புடன் திருஆணை நிகழும்படி செய்து, தூய திருப்பதிகத்திற்குத் திருக்கடைக் காப்பும் தொடுத்து அணிந்தருளவே, பொருந்திய அத்திருப்பதியில் வாழ்பவர்க்கு மட்டுமன்றி, அந்நாளில் அந்நாடு முழுமையும் இருந்த மலைச் சுரம் அப்பொழுதே நீங்கியது.
குறிப்புரை

மான்தோலுடன் கூடிய முப்புரிநூல் அணிந்த மார்பையுடைய பிள்ளையார், அந்நகரத்தில் சில நாள்கள் விரும்பி இருந்தருளியவர், பின் அப்பதியினின்றும் புறப்பட்டுச் சென்று, பவ ளம் போன்ற சிவந்த சடையையுடைய இறைவர் எழுந்தருளி இருக் கும் இடங்கள் பலவற்றையும் வணங்கி, சொல்வதற்கு அரிய சிறப்பை யுடைய திருப்பாண்டிக்கொடுமுடியை உடன்வரும் அந்தணர்களுடன் சென்று அடைந்தார். 'தானம்பலவும்' என்றது திருச்செங்கோட்டிற்கும் கொடுமுடிக்கும் இடைப்பட்ட திருப்பதிகளாகும். பதிகங்கள் எவை யும் கிடைத்தில.

காலம் தவறாது நீரைத்தரும் காவிரிக்கரையில் உள்ள திருப்பாண்டிக்கொடுமுடியில் இறைவர் திருவடிகளை வணங்கி, வளம் தரும் தமிழ்ப் பதிகத்தைப் பாடிச் சாத்தி, ஒளி வீசும் மாடங்களையுடைய 'வெஞ்சமாக்கூடல்' முதலாகச் சிவபெருமானின் ஒப்பற்ற இடங்கள் பலவற்றையும் வணங்கிப் போற்றிக் கிழக்குத் திசையில் செல்ல ஒருப்பட்டவராய், திருப்பாண்டிக் கொடுமுடியில் அருளிய பதிகம், 'பெண்ணமர் மேனியி னாரும்' (தி. 2 ப. 69) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருவெஞ்சமாக்கூடலில் அருளிய பதிகம் கிடைத்திலது. இப்பதியிலிருந்து கருவூர் வரையில், பிள்ளையார் வணங்கி வந்த பதிகளும் பாடியருளிய பதிகங்களும் இவை என அறியக் கூடவில்லை.

செல்வ வளம் பொருந்தி கருவூரில் 'திருவானிலை' என்ற கோயிலில் சென்று வணங்கி, நல்ல இசையுடன் கூடிய வளமான தமிழ்ச் சொல் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, கொங்கு நாடான அதைவிட்டு அகன்று, பொருந்திய மாணிக்க மலை (இரத்தினகிரி) எனும் 'திருவாட்போக்கியினை' முதலில் வணங்கி, மேற்சென்று, பெருகும் அலைகளை உடைய காவிரியின் தென்கரைப் பதிகள் பலவற்றையும் வணங்குபவராய், திருக்கருவூர்த் திருவானிலையில் அருளிய பதிகம் 'தொண்டெலாமலர்' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். பொன்னித் தென்கரைத் தானங்கள் என்பன கருவூருக் கும் திருவாட்போக்கிக்கும் (இரத்தினகிரிக்கும்) இடைப்பட்ட திருப் பதிகளாகும். இவை எவையென அறியக் கூடவில்லை. திருவாட் போக்கியில் அருளிய பதிகமும் கிடைத்திலது.

பல பெரிய குன்றுகளிலும் பரந்த பெரிய காடுக ளிலும் பல பதிகளிலும் அங்கங்கும் இறைவர் நிலையாய் வீற்றிருக்கும் பதிகளிலுள்ள கோயில்களை எல்லாம் விருப்புடன் சென்று வணங்கி, நிலைபெற்ற சீகாழியில் தோன்றிய மறையுண்மையை நிலை நாட்டும் மறையவரான பிள்ளையார், பொன் போன்ற சடையையுடைய தூயவரான சிவபெருமான் வீற்றிருக்கும் 'திருப்பராய்த்துறை' என்ற பதியுள் புகுந்தார். 'பன்னெடுங் குன்றும் படர் நெடுங்கானும் (பெருங்கா னும் என்றும் பாடம்) பலபதியும்' எனக் குறிப்பன திருவாட்போக்கிக் கும் திருப்பராய்த்துறைக்கும் இடைப்பட்ட இடங்களாகும். அவை, இவை எனத் தெரிந்தில. இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

சிறப்புமிக்க திருப்பராய்த்துறை என்ற பதியில் வீற்றிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் திருக்கோயிலை அடைந்து, ஒருமையுணர்வுடன் வணங்கி, குற்றம் இல்லாத தமிழ் மாலையைப் பாடுகின்ற கவுணியக் குலத்தலைவரான பிள்ளையார், கண்களினின்றும் நீர் மழை பெருக, கைகளைத் தலை மீது கூப்பித் தொழுது நின்றார். திருப்பராய்த்துறையில் அருளியது, 'நீறு சேர்வதொர்' (தி. 1 ப. 135) எனத் தொடங்கும் மேகராகக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

வணங்கி வெளிப்போந்து, அத்திருப்பதியினின் றும் நீங்கித் தேவர்கள் வந்து வணங்கி எழுகின்ற திருவாலந்துறை திருச்செந்துறை முதலான குற்றம் அற்ற பல கோயில்களையும் வணங்கி, மகிழ்வுடன் அணைபவரான சம்பந்தர், செழுமை பொருந்திய மலர்ச் சோலைகளையுடைய 'திருக்கற்குடிமலை'யைச் சேரச் சென்றார். திருவாலந்துறை, திருச்செந்துறை ஆகிய பதிகளுக்கு உரிய பதிகங்கள் கிடைத்தில. இப்பதிகளுக்கும் திருக்கற்குடிக்கும் இடைப்பட்ட இடங்களும் இவை என அறியக் கூடவில்லை.

திருக்கற்குடி மாமலையின் மீது வீற்றிருக்கும் பொற்கொழுந்து போன்றவரை, பொன்மேரு மலையை வளைத்த ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டவரைப் போற்றி, நல்ல தமிழ் மாலையைச் சூட்டி, ஞானசம்பந்தர், பொறிவாயில் ஐந்துஅவித்த புனி தரின் 'திருமூக்கீச்சரத்தினைப்' பணிந்து சென்று, 'திருச்சிராப்பள்ளி' மலையை அடைந்தார். திருக்கற்குடியில் அருளியது, 'வடந்திகழ் மென்முலை' (தி. 1 ப. 43) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமா கும். திருமூக்கீச்சரத்தில் அருளிய பதிகம் 'சாந்தம் வெண்ணீறென' (தி. 2 ப. 120) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகமா கும். திருமூக்கீச்சரம் இதுபொழுது உறையூர் என வழங்கப் பெறுவதாம்.

செந்நிறமான மணிகளை வாரிக் கொணரும் அருவிகள் பாய்தற்கு இடனான 'திருச்சிராப்பள்ளி' மலையின் மேல் வீற்றிருக்கும், யானையின் தோலை உரித்து அதைப் போர்த்திக் கொண்ட, நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, உண்மையான மகிழ்ச்சியை அடைந்து, மனம் குளிர்ந்து விளங்கிய சொல் தமிழ் மாலையைப் புனைந்து, கருமை விளங்கும் கழுத்தினையுடைய இறைவரின் 'திருவானைக்கா' என்ற பதியை வணங்கும் விருப்புடனே பிள்ளையார் வந்து அடைந்தார். திருச்சிராப்பள்ளியில் அருளியது, 'நன்றுடையானை' (தி. 1 ப. 98) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகம்.

தேவர்கள் வணங்கும் திருவானைக்காவில் வெண்ணாவல் மரத்தின் கீழ் எழுந்தருளியுள்ள மெய்ப் பொருளான இறைவரை அடைந்து, வணங்கி எழுந்து, நான்கு கொம்புகளை யுடைய வெள்ளை யானை பணிந்த இயல்பையும், பெருமையுடைய கோச்செங்கட் சோழ அரசர் செய்த அடிமைத் திறத்தையும், அழகிய சொற்றொடையில் வைத்துப் பண் பொருந்திய செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தை அடிமைத் திறம் பிழையாது நின்ற பான்மையினால் போற்றினார். இதுபொழுது அருளியது, 'மழையார் மிடறா' (தி. 2 ப. 23) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகம். இப் பதிகத்தின் 4ஆவது பாடலில், வெள்ளை யானைக்கு அருள் செய்த மையையும், 5ஆவது பாடலில் கோச்செங்கட் சோழருக்கு அருள் செய்தமையையும் பிள்ளையார் குறித்தருளுகின்றார்.

திருமாலும் நான்முகனும் காணாத உண்மைப் பொருளாயவரும் வெண்ணாவலிலும், உண்மைப் பொருளை அருளிய மயேந்திரத்திலும், சிறப்பும் அழகும் பொருந்திய திருக் கயிலையிலும், செல்வத் திருவாரூரிலும் எழுந்தருளியிருக்கும் பண்பு டையவருமான மறைகளின் உட்பொருளாய் உள்ள இறைவரைத் திருவானைக்கா என்ற பதியில் பாடி, அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவரான பிள்ளையார் எல்லையற்ற இன்பத்தைப் பெற்றார். இந்நான்கு திருப்பதிகளையும் ஒருங்கு இணைத்துக் கூறிய பதிகம், 'மண்ணது வுண்ட' (தி. 3 ப. 109) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பண்ணிலமைந்த பதிகமாகும். மயேந்திர மலை இமயத் தின் ஒரு பகுதி என்பாரும், குமரிக் கடலிலிருந்து நீரில் மூழ்கியதொரு மலை என்பாரும் ஆக இருதிறத்தார் உளர். 'ஒலிதரு கயிலை உயர் கிழவோனே' (தி. 8 ப. 2 வரி. 146) என்றும் 'மன்னு மாமலை மகேந்திர மதனுள் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்' (தி. 8 ப. 2 வரி. 9) என்றும் திருவாசகத்துட் காணும் திருவாக்குகளால் இவற்றுள் முன்னைய கருத்தே வலியுடைத்தாகலாம். ஆகமம் அருளிச் செய்யப்பட்ட இடம் ஆதலின் 'உண்மை மயேந்திரம்' என்றார்.

கையால் தொழுது போற்றி வெளியே வந்து, அழகிய அப்பதியில் சிலநாள்கள் தங்கி வணங்கி மகிழ்ந்து, மேல் செல்பவராய், நிலை பெற்ற 'தவத்துறை' (இலால்குடி)யில் உள்ள இறைவரின் திருவடிகளை நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து நின்று, இனிய தமிழ் மாலை பாடிப் போற்றி, மேற்சென்று வைதிக நெறியின் மணிபோன்ற அப்பிள்ளையார், அம் மருங்கில் மற்றும் உள்ள திருப் பதிகளையும் வணங்கிச் செல்வாராய், திருவானைக்காவில், சில நாள் வதிந்த பொழுது அரு ளிய பதிகம் 'வானைக்காவல்' (தி. 3 ப. 55) எனத் தொடங்கும் கௌசி கப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருத்தவத்துறையில் அருளிய பதிகம் கிடைத்திலது. மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார் என்றது, திருமங்கலம், திருமாந்துறை முதலியினவாகலாம். பதிகங்கள் கிடைத்தில.

விடைக்கொடியை உடைய இறைவரின் திருப் பாற்றுறையும், திருவெறும்பியூர் மாமலையும் முதலான பிற பதிகளை வணங்கி, மனமியைந்து பரவி வரும் தொண்டர்கள் பலரும் சூழவரும் எல்லையற்ற புகழையுடைய சீகாழித் தலைவர், எண்திசையில் உள்ள வர்களும் தொழுது வணங்கத் திருநீற்றை அணிந்த செம்பவள மலை போன்ற சிவபெருமானின் திருநெடுங்கள மாநகரைச் சென்று அடைந் தார். திருப்பாற்றுறையில் அருளியது, 'காரார் கொன்றை' (தி. 1 ப. 56) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருஎறும்பியூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. வேறு பதிகள் பலவும் போற்றி என்பதில் குறிக்கத்தக்க பதிகள் இவை என அறியக் கூடவில்லை.

திருநெடுங்களத்தில் வீற்றிருக்கின்ற மூலமூர்த்தி யான இறைவரை, 'அன்பால் உம்மிடம் உள்ளம் செல்லாதவாறு தகைக்கும் இடும்பைகளையெல்லாம் தீர்த்து அருள் செய்வீராக!' என வேண்டிக் கொள்ளும் குறிப்பைக் கொண்ட இன்னிசைத் திருப்பதிக மான மாலையினால் போற்றி, மேற்சென்று, கொல்லும் இயல்புடைய பாம்பைச் சூடிய சிவந்த சடையினரான சிவபெருமானாருடைய திருப்பதிகளை வணங்கி, திருநியமத்தைப் போற்றி, வலிய துதிக் கையை உடைய யானையை உரித்த இறைவர் மகிழ்வுடன் வீற்றிருக் கும் 'திருக்காட்டுப்பள்ளி' என்னும் திருப்பதியைக் கைதொழுவாராய், திருநெடுங்களத்தில் அருளியது, 'மறையுடையாய்' (தி. 1 ப. 52) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகப் பாடல்தொறும் 'இடர்களையாய்' என வருவது பற்றி, நம்மனோர்க்கெல்லாம் அவ்வப்பொழுதும், அடுக்கி வரும் உலகியல் துன்பங்களை யெல்லாம் நீக்க வேண்டும் எனும் குறிப்புடையதாக, இப்பதிகத்தைப் பன்முறையும் ஓதி வருகின்றோம். இதுவும் வாய்மை எனினும், ஆசிரியர் சேக்கிழார் தரும் விளக்கம் வேறாகும் என்பது அறியத்தக்கது. பெருமானிடத்துக் கொள்ளும் அன்புள்ளத்திற்கும் ஆற்றிவரும் வழிபாட்டிற்கும் இடையூறாக வரும் இடர்ப்பாடுகளை நீக்க வேண்டும் எனும் குறிப்பில் அருளுவதாகவே குறிக்கின்றார் சேக்கிழார். பதிகத்து வரும் பாடல்களை ஊன்றிப் படிப் பின் அவர்தம் திருவுள்ளக் கருத்தே உண்மை என்பது தெளியலாம். திருநியமம் என்னும் தலத்தில் அருளிய பதிகம் கிடைத்திலது. 'செஞ்சடையார் பதிகள் அணைந்து போற்றி' என்பது, திருநெடுங்களத் திற்கும் திருநியமத்திற்கும் இடைப்பட்ட பதிகளைக் குறிக்கும். கடையக் குடி முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவ்வாறு வரும் இடங்களைக் குறித்துக் கொண்டு, அவ்வவ் விடங்களில் உள்ள பதி களை நேரில் சென்று தெளிவு பெறல் நலம் பயக்கும்.

சென்று விளங்கும் மேலைத் திருக்காட்டுப் பள்ளியில் வீற்றிருக்கும் செஞ்சடையை உடைய சிவபெருமானின் கோயிலை அடைந்து, திருமுன்றிலை வலமாக வந்து வணங்கி, வீழ்ந்து எழுந்து வலிய கழலை அணிந்த திருவடிகளை வணங்குவாராய், கன்றைச் சேர்ந்த பசுவின் கருத்தையுடைய அன்பு உள்ளத்தில் பொருந்த நெற்றிக் கண்ணையுடைய இறைவரைத் திருமுன்பு நின்று வணங்கி, மன்றினுள் இருந்து இயற்றும் அருட்கூத்தைத் தம் உள்ளத் தில் கொண்டு, 'வாரு மன்னும்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி வாழ்வு பெற்றார். 'வாரு மன்னும்' (தி. 3 ப. 29) எனத் தொடங்கும் பதிகம் கொல்லிப் பண்ணிலமைந்ததாகும்.

அவ்விடத்தே அப்பதியினின்றும் புறப்பட்டுச் சென்று, அழகிய திருஆலம்பொழிலினை வணங்கிப் பொங்கும் நீர் வளம் வாய்ந்த காவிரி நடுவிலுள்ள 'திருப்பூந்துருத்தி' என்ற பதியுள் வீற்றிருக்கும் 'பொய்யிலியப்பரைப் ' பணிந்து போற்றி, எங்கும் நிலவி வரும் திருத்தொண்டர் கூட்டம் எதிர் வந்து அழைத்துச் செல்ல, அம்மருங்குள்ள பலபதிகளையும் வணங்கிச் சென்று, செங்கயல்கள் பாய்வதற்கு இடமான வயல்களும் ஓடைகளும் சூழ்ந்த 'திருக் கண்டியூரை' வணங்குவதற்குச் சென்று சேர்ந்தார். திருவாலம்பொழிலிற்கும் திருப்பூந்துருத்திக்கும் பதிகங்கள் கிடைத்தில. எப்பதியும் என்பன திங்களுர் திருநெய்த்தானம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

திருக்கண்டியூர் வீரட்டனாரின் கோயிலை அடைந்து, சூழவந்த அடியார்களுடன் அன்பு மேலிட, விருப்பத்துடன் கீழே விழுந்து வணங்கி, பொருந்திய மகிழ்ச்சியினால் திருத்தொண்டர் குழாத்தினைப் பார்த்து நின்று, தாம் பாடிய இசைத் தமிழ் மாலையான திருப்பதிகத்தில், சிவபெருமானின் திருவருள் வண்ணங்கள் பலவற் றையும் அடியவர் வாயிலாக வெளிப்படுத்தும் வகையால் வினவியருளி, திருக்கண்டியூரில் அருளியது, 'வினவினேன் அறியா மையில்' (தி. 3 ப. 38) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகம் முழுமையும் பெருமானின் திருமேனியிற் காணும் அணிகலன்கள் பற்றியும், அவன்மேற் கொண்ட அருட்செயல் களில் சிலவற்றைப் பற்றியும் அடியவர்களிடம் அவற்றிற்கான காரணங்களை வினவுவதாக அமைந்துள்ளது. இவ்வாறான பதி கத்தை வினாவுரைப் பதிகம் என்பர்.

அங்ஙனம் 'வினவினேன்' எனத் தொடங்கிய திருப்பதிகத்தில் பொருந்திய திருக்கடைக்காப்பினில் நினைத்தற்கரிய சிவபெருமானின் அருட்செயலின் திறங்களை, அடியாரைக் கேட்டு மகிழ்ந்த இயல்பைக் கூறிய பாடலால் துதித்து, மேற்சென்று, சீகாழியில் தோன்றிய கவுணியர் குலத் தேன்றலார் விரைவாய்ச் செல்லும் நீரையுடைய காவிரியின் அலைகள் வலம் கொண்டு செல்கின்ற திருச்சோற்றுத்துறையினைச் சென்று அணைவாராகி, திருக்கண்டியூர் பதிகத் திருக்கடைக்காப்பில் 'கருத் தனைப்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை அருத் தனைத்திறம் அடியார்பால்மிகக் கேட்டுகந்த வினாவுரை' என வரு வது கொண்டு ஆசிரியர் இவ்வாறு அருளிச் செய்வாராயினர்.

'அப்பரின் திருச்சோற்றுத் துறையைச் சென்று அடைவோம்' என்று முடியும் கருத்துடையதாய், ஒப்பிகந்த வளமை மிகுந்த தமிழ் மாலையை உள்ளத்தில் கொண்ட ஒருமைப் பாட்டுடன் பாடிச் சென்று, பகைவரின் முப்புரங்களையும் எரித்த முதல்வரின் கோயில் முன்பு பிள்ளையார் சென்றனர். இப்பதியை அணுகவரும் நிலையில் அருளிய பதிகம் 'செப்ப நெஞ்(தி. 1 ப. 28) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும். பாடல்தொறும் திருச்சோற்றுத்துறை சென்றடை வோம் எனும் குறிப்புடையதாய் அமைந்துள்ளது. முதற்பாடலில் 'அப்பர் சோற்றுத்துறை சென்றடைவோம்' என வருவதை ஆசிரியர் எடுத்து மொழிந்துள்ளார்.

நீண்ட பழமையுடைய திருச்சோற்றுத்துறையுள் எழுந்தருளிய அருட் செல்வரான சிவபெருமானின் கோயிலை வலம் வந்து, வணங்கித் தேவர்களின் துன்பங்களைத் தீர்க்கும் பொருட்டு நஞ்சினை உண்ட பெருமானின் திருவடிகளை அளவற்ற அன்பு பெருக வணங்கினார்.
குறிப்புரை

வணங்கிப் போற்றி எழுந்து நின்று இனிய பண் ணிசை நிறைந்த செந்தமிழ்ப் பதிகம் பாடி, அப்பதியில் தங்கியவர், அடியவருடன் கூடிச் சிறந்த சீர்மை மிகுந்த திருவேதிகுடியில் வந்து சேர்ந்தார். திருச்சோற்றுத்துறை இறைவர் திருமுன்பு அருளிய பதிகம் கிடைத்திலது.

மறைகளை ஓதும் மறையவர் வாழும் திருவேதி குடியில் முதல்வரின் கோயிலை அடைந்து, நன்மை பெருகும் திருவடி மலர்களை வணங்கி எழுந்து நின்று, தமிழால் மறைகளினும் சிறந்த இசையையுடைய திருப்பதிகத்தை அருளினார்.
குறிப்புரை: இவ்விடத்து அருளிய பதிகம், 'நீறுவரி' (தி. 3 ப. 78) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

எழுகின்ற பெருமறையான இசையுடைய திருப்பதிகத்தை நிறைவாகப் பாடி, இறைவரை வணங்கி, மேற்சென்று அழகிய சோலைகளால் சூழப்பட்ட குற்றம் அற்ற சிறப்புடைய 'திரு வெண்ணி' என்னும் திருப்பதியை அடைந்தார்.
குறிப்புரை

திருவெண்ணிப் பதியில் எழுந்தருளியிருக்கும் ஆனேற்றினையுடைய இறைவரின் திருக்கோயிலை அடைந்து, உள் ளம் பொருந்தி அன்பால் இளம்பிறைக் கண்ணியை அணிந்த இறை வரின் திருவடியைப் போற்றிப் பண்ணால் மிக்க திருப்பதிகத்தையும் பாடினார். திருவெண்ணியூரில் அருளியது 'சடையானை' (தி. 2 ப. 14) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். பதிகமும் - பதிகமுன் என்றும் பாடம்.

பதிகம் பாடி நின்று போற்றி வணங்கி, மேற் சென்று அருட்கூத்தியற்றும் இறைவர் வீற்றிருக்கும் அம்மருங்கில் உள்ளனவாகிய கோயில்களைச் சென்று வணங்கிச் சீகாழியில் தோன் றிய நிறைந்த புகழையுடைய பிள்ளையார் மகிழ்ச்சி அடைந்தார். கோயில் அங்குள்ளன என்றது, திருவெண்ணியூரில் இருந்து திருச்சக்கரப்பள்ளி வரையிலான இடங்களில் உள்ள கோயில் களாம். பதிகங்கள் எவையும் கிடைத்தில. வெண்ணிக் குயத்தியார் எனும் சங்க காலப் பெண்பாற் புலவர் இவ்வூரினர் என்பதும் குறிப் பிடத்தக்கதாம்.

நெருங்கிய சோலைகள் சூழ்ந்த தாமரைத் தண்டுகளின் முட்காடு எனப்படுகின்ற பொய்கைகள் மிக்க மருத நிலத் தில் சென்று, மெய்ப்பொருளை உணர்ந்து செய்யும் அறிவும் அன்பும் இல்லாத தக்கனின் வேள்வியை அழியச் செய்த சிவபெருமான் வீற் றிருக்கும் 'திருச்சக்கரப்பள்ளி' என்ற பதியில், இயல் இசை வல்ல பிள்ளையார் வந்து சேர்ந்தார். 'வெள்ளத் தனைய மலர்நீட்டம்' (குறள், 595) என்ப வாகலின், அத்தண்டுகள் காடாக மண்டிக் கிடக்கும் காடுகள் குளங்கள் எனப்பட்டன.

திருச்சக்கரப் பள்ளியில் வீற்றிருக்கும் இறைவ ரின் ஒப்பற்ற கோயிலுள் புகுந்து, விருப்பத்துடன் அழகிய மலரனைய திருவடிகளை வணங்கி, எலும்பு மாலையைச் சூடிய அரையை உடைய இறைவரிடத்து, அன்புமிகும் ஆற்றல் மிக்க சொற்களாலான தமிழால், நான்மறைப் பொருள்களையும் உள்ளீடாகக் கொண்ட திருப்பதிகத்தையும் பாடியருளினார். திருசக்கரப்பள்ளியில் அருளிய பதிகம் 'படையினார்' (தி. 3 ப. 37) என்று தொடங்கும் கொல்லிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

அரிய மறையின் உட்பொருளான ஞானத்தைத் தம் அறிவில் நிரம்பப் பெற்ற பிள்ளையார், சிவபெருமானின் திருச் சக்கரப் பள்ளியினின்றும் நீங்கி, அலையும் நீர் பரந்த வயல்களின் அருகாகச் சென்று, 'திருப்புள்ளமங்கை' என்ற திருப்பதியில் விளங் கும் 'திருவாலந்துறை' எனப் பெயர் பெறும் கோயிலை அடைந்தார். திருப்புள்ளமங்கை ஊர்ப்பெயர். ஆலந்துறை கோயில் பெயர்.

நிலைபெற்ற அக்கோயிலில் எழுந்தருளி இருக் கும் மான் கன்றை ஏந்திய கையையுடைய இறைவரின், பொன்னார் திரு வடிகளை அன்புடன் தொழுது, எழுந்து, இனிய இசையையுடைய தமிழ்ப் பதிகத்தைப் பாடி, இறைவர் வீற்றிருக்கின்ற திருச்சேலூரை வணங்கிப் புகழ்ந்து, சொல்லப் பெறும் 'திருப்பாலைத் துறை' என்ற பதியையும் வணங்கினார். திருப்புள்ளமங்கையில் அருளியது, 'பாலுந்துறு திரளா யின' (தி. 1 ப. 16) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருச்சேலூரிலும், திருப்பாலைத்துறையிலும் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

பொய்கைகளில் பொருந்திய ஆண் நண்டுகள், பெண் நண்டுகளுடன், மலரும் நல்ல மணமுடைய தாமரை மலரின் மேல் விரும்பி இருத்தற்கிடனாய சீகாழித் தலைவரான பிள்ளையார், சோலைகளின் மீது மேகங்கள் தவழ்கின்ற மணம் கமழும் நல்ல முல்லை நிலத்தின் வழியிலே சென்று, ஆனேற்று ஊர்தியின் மேல் எழுந்தருளும் இறைவரின் திருநல்லூரை வந்து அடைந்தார்.
குறிப்புரை

பிள்ளையார், மணம்கமழும் அழகிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வாழும் மறையவர்கள், நெருங்கிய மங்கலப் பொருள்களின் நிறைவுடனே வரவேற்கப் பொன் விளங்கும் ஒளி பொருந்திய முத்துச் சிவிகையின் மீது அழகு விளங்கச் சென்று அடைந்தார்.
குறிப்புரை

முத்துச் சிவிகையினின்றும் இழிந்த பிள்ளையார், சூழ இருந்த அந்தணர்கள் முன் செல்லப் பின் செல்கின்ற அடியவர் களும் அருகிருந்து பணிசெய்து வரும் தொண்டர்களும் தம்முடன் ஒருங்கிருந்து போற்றிவர, இறைவரின் கோபுரத்தை வணங்கிக் கோயிலுக்குள் சென்றார்.
குறிப்புரை

வெள்ளி மலையைப் போல விளங்கும் ஒளியை யுடைய அக்கோயிலைப் பிள்ளையார் வலம் வரும் பொழுது, பெரு கிய சிறப்பு மிக்க ஆனந்தக் கண்ணீர் வழிந்து திருமேனி எங்கும் பொழிய, அம்மாடக் கோயிலின் மேல் ஏறிச் சென்று, கங்கை நீர் பெரு கப் பொருந்திய சடையையுடைய இறைவரை வணங்கித் திருமுன்பு நின்று வணங்குவாராய்,
குறிப்புரை

போற்றத்தகும் சொற்களாலான பதிகத்தினைப் பாடியவராய், மிக்க அன்புடன் மேலிட்டதால் தம்மையும் மறந்து உருகும் நேர்மைபெற்ற உள்ளத்துடன் கோயில் புறத்தை அடைந்து பாம்புகளைப் பூண்ட சடையையுடைய இறைவரின் திருவருளைப் பெறும் பெருமையால், இறைவர் வீற்றிருக்கும் அத்திருப்பதியில் விரும்பி வீற்றிருந்தார். திருநல்லூரில் பாடியது, 'வண்டிரிய' (தி. 3 ப. 83) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இவ்விரு பாடல் களும் ஒரு முடிபின.

அவ்வாறு அப்பதியில் தங்கி, மின் போன்ற சிவந்த சடையையுடைய இறைவரின் திருவடிகளை விருப்புடன் வணங்கிப் புகழ்ந்து சொல்லப்படுகின்ற இனிய இசையுடன் கூடிய பல்வேறு யாப்பமைவுகளும்இசைக் கட்டளைகளும் பொருந்தப் பாடி, நன்மை நீடிய மறையவர்கள் வணங்கி நிற்ப, அங்குத் தங்கியிருந்தார். இவ்வாறாய இன்னிசைப் பதிகம் பல பாடி என்றாரே னும், இதுபொழுது இசைத்தருளியனவாகக் கிடைத்துள்ள பதிகங்கள் இரண்டேயாம். 1. 'கொட்டும் பறை': (தி. 1 ப. 86) - குறிஞ்சிப் பண். 2. 'பெண்ணமரும்': (தி. 2 ப. 57) - காந்தாரப் பண்.

நிலை பெற்ற அப்பதியினின்றும் நீங்குபவரான பிள்ளையார், விளங்கும் அத்திருநல்லூரில் எழுந்தருளிக் கூத்தியற்றும் இறைவரின் திருவருளைப் பெற்று, அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்று, அருகிலுள்ள திருப்பதிகளை வணங்கிய வண்ணம், தம்மைத் தேடிய திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரியவரான இறைவரின் திருக்கருகாவூரில் வந்து சேர்ந்தார். மாடும் உள்ளன பதிகள் எவை எனத் தெரிந்தில.

வந்து, பந்தலில் படர்ந்து ஏறிய முல்லைகள் மணம் கமழ்கின்ற 'திருக்கருகாவூரில்' எழுந்தருளியிருக்கும் இசையமைதி உடைய பெருமறைகளைத் தந்த இறைவரின் திருவடிகளை வணங்கி, என்றும் அழியாமல் நிலைபெற்றிருக்கும் சிவபெருமானின் நிறம் தீயின் நிறமேயாம் என்ற கருத்தும் முடிபும் உடையதாய செந்தமிழ்ப் பதிகத்தை உள்ளம் மகிழப் பாடினார். இப்பதியில் பாடியருளிய பதிகம் 'முத்தி லங்கும்' (தி. 3 ப. 46) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணிலமைந்ததாகும். பதிகப் பாடல்தொறும் 'இறைவனின் வண்ணம் அழல் வண்ணமே' என்னும் கருத்து முடிபுடையதாக அமைந்திருத்தலின், ஆசிரியர் சேக்கிழார் இவ்வாறு அருளிச் செய்வாராயினார்.

இவ்வாறாய இன்னிசைப் பதிகங்களைப் பாடிச் செல்பவர் பிற பதிகளிலுள்ள கங்கையாற்றை அணிந்த சிவபெரு மானின் கோயில்களை அடைந்து வணங்கிப் பொன்னம்பலத்தில் கூத்தாடுகின்ற ஒலிக்கும் சிலம்பினையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற 'திருஅவள்இவள்நல்லூரை' இனிய முத்தமிழும் பொருந்திய திருவாக்கையுடைய பிள்ளையார் அணைந்தார். 'பிற பதிபலவும்' எனக் குறிக்கப்பட்டன தென்குடித் திட்டை முதலாயினவாகலாம். தென்குடித்திட்டையில் அருளிய பதிகம் 'முன்னை நான்மறை' (தி. 3 ப. 35) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

நிலைபெற்ற அத்திருப்பதியில் தேவர்களும் போற்ற மகிழ்ந்து எழுந்தருளும் இயல்பு கொண்ட இறைவரின் கோயிலுக்குள் புகுந்து, 'தம்பரிசு உடையார்' என்ற பெயரும் வெளிப் பட வைத்துப் போற்றித் திருமுன்பு வணங்கிச் சொல்லுதற்குரிய சிறப்புடைய பதிகள் பலவற்றிலும் சென்று வணங்குபவராய், திருஅவள்இவள்நல்லூரில் அருளிய பதிகம் 'கொம்பிரிய' (தி. 3 ப. 82) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணி லமைந்த பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் முதற் பாடலில் தம்பரிசி னோடு சுடுநீறு தரவந்து இடபம் ஏறி, எனவருவதால் தம்பரிசுடையார் என்ற நாமமும் வெளிப்பட என்றார். இறைவர், தம்பரிசுடையார் சாட்சிநாதர் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகின்றார். . ஈண்டுப் பன்னுசீர்ப் பதிபலவும் என்றவை எவை எனத் தெரிந்தில.

குற்றங்கள் இல்லையாகச் செய்யும் சிறப்புடைய 'திருப்பரிதி நியமத்ததை' வழிபட்டு, அங்கே எழுதும் மறையாகும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி, எல்லாமாய் இருக்கும் சிவபெருமானின் திருக்கோயிலை வணங்கி, முறைமையினின்றும் தவறாத சிறப்புடைய 'திருப்பூவனூரை' வந்து சேர்ந்து, திருப்பரிதி நியமத்தில் அருளிய பதிகம் 'விண் கொண்ட' (தி. 3 ப. 104) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பதிகமாகும். வழுவில் சீர் - வழுவி லார் எனவும் பாடம்.

வளரும் விருப்ப மிகுதியினால் போற்றி அவ் விடத்தினின்றும் நீங்கிச் சென்று, தாமரை மலர்களையுடைய பெரிய வயல்கள் சூழ்ந்த பதிகள் பலவும் போற்றி, அன்பர்கள் யாண்டும் ஒலிபெருக வாழ்த்தி வரச் சிவபெருமான் அமர்ந்தருளும் பழைய பதியான 'திரு ஆவூரினை' அடைந்தார். திருப்பூவனூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. பதிகள் பலவும் என்பன திருவெண்ணியூர், திருஅரதைப்பெரும்பாழி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருவெண்ணி யூருக்கு முன்னரே சென்று தொழுததாக 228ஆவது பாடலில் காணலாம். திருஅரதைப்பெரும்பாழியைப் பின்னரும் வழிபட்டதாக 403ஆவது பாடலில் காணலாம். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பணியும் அப்பதியில், பசுபதீச்சரக் கோயிலில் இனிதாக வீற்றிருந்தருளும் மணியான இறைவரைக் கோயிலுள் புகுந்து வழிபடும் விருப்பத்தினால் வணங்கிக் குறைவில்லாத அன்புடன் குளிர்ந்த தமிழ் மாலைகள் பாடிச் சாத்தி, அழகுடைய திருநல்லூரின்கண் மீண்டும் வந்தடைந்தார். திருஆவூர் - ஊர்ப்பெயர். பசுபதீச்சரம் - கோயில் பெயர். இங்கு அருளிய பதிகம் 'புண்ணியர்' (தி. 1 ப. 8) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும்.

மறைகள் விளங்குதற்கு இடமான அப்பதியில் கரிய கழுத்தினையுடையவரான இறைவரின் பொன்னடிகளை நிறைவான அன்புடன் வணங்கியவாறே எழுந்தருளும் ஆளுடைய பிள்ளையார், பிறைசூடிய இறைவரின் நிலைபெற்ற திருவருளைப் பெற்று, உலகம் உய்வு பெற, தேன் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கின்ற மணம் வீசும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியின்கண் வந்து சேர்ந்தார்.
குறிப்புரை

பிறைச் சந்திரனைச் சூடிய இறைவர் திருவலஞ் சுழியில் வாழ்கின்ற பெருந்தவத்தின் முதிர்ச்சியுடைய அன்பர்கள் திரண்டு முத்தமிழ்ச் செல்வரான பிள்ளையாரின் முன்வந்து, மதியை ஒளி பொருந்திய வெண்மேகங்கள் சுற்றிச் சூழ்ந்தது போல, எதிர் கொண்டனர்.
குறிப்புரை

திரண்டு வந்த அன்பர்கள் கீழே வீழ்ந்து தொழுது எழுந்து நிற்க, கவுணியர் தலைவரான பிள்ளையார், அப்பொழுது அலர்ந்த செந்தாமரை மலர் போன்ற கைகளைக் கூப்பி அணைபவ ராய்த் திருவலஞ்சுழி இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் கோயிலைச் சேர்ந்து, பொன்மயமாக ஒளிவிட்டு விளங்கும் கோபு ரத்தை வணங்கி உள்ளே புகுந்தனர்.
குறிப்புரை

பகைவரின் முப்புரங்களையும் எரித்த இறை வரின் திருமுற்றத்தை வலம் வந்து, உளம் உருகும் அன்புடனே, தலையின் மேல் கைகுவித்து வணங்கித் திருவலஞ்சுழி இறைவரின் திருவடிகளில் பெருகும் அன்புடனே பெரியவரான சம்பந்தர் பணிந்து எழுந்தார்.
குறிப்புரை

ஞானப்பாலையுண்ட பிள்ளையார் சிவபெரு மானின் திருமுன்பு தொழுது எழும் விருப்பத்தினால் விளைந்த ஆசையினால் இறைவரை முன்னிலைப்படுத்தி, வினவுகின்ற கருத்தை உடைய குற்றம் அற்ற இசையுடனே விளங்கும் திருப்பதிகத்தைக் குவளை மலர் போன்ற கரிய கழுத்தினையுடைய இறைவரை வணங் கிப் போற்றினார். இதுபொழுது அருளிய பதிகம் 'விண்டெலாமலர்' (தி. 2 ப. 2) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிள்ளையார் இறைவரை நோக்கியும், அடியவரை நோக்கியும் வினவும் வினாவுரைப் பதிகங்கள் பல. அவ்வினாக்களுள் ஒன்றாய் வருவதும், வேறு வேறாய் வருவனவுமாக அமையும். இப்பதிகத்தில் இறைவரை நோக்கிப் பாடல் தொறும் பலிதேர்ந்து உழல்வது எற்றுக்கு? என ஒரே வினாவாய் அமைந்திருக்கும் பாங்கு அறியத்தக்கது.

உளங்கொளற்குரிய அருளுரையாக நன்மக்கள் உள்ளத்தில் கொள்ளும் இனிய இசைத் தமிழ்ப் பதிகங்ளைச் சாத்தி வணங்கியவராய்க் கோயிலின் வெளியே போந்து, பெருகிவரும் நீரையுடைய காவிரி சூழ்ந்த அப்பதியில் தங்கியிருந்து, நன்மை பொருந்திய அன்பினால் இறைவரின் திருவடிகளை நாள்தோறும் வணங்கிப் பெருமானின் தொண்டர்களுடனே கூடி மகிழ்வுடனிருந்து வந்தார். இப்பதியில் இருந்தருளிய பொழுது பாடியருளிய பதிகங்கள் இரண்டாம். 1) 'என்ன புண்ணியம் செய்தனை' (தி. 2 ப. 106) - நட்டராகம். 2) 'பள்ளமதாய' (தி. 3 ப. 106) - பழம்பஞ்சுரம். இவ்விரு பதிகங்களிலும் வரும் முதற் பாடல்கள், பிள்ளையார் தம் நெஞ்சிற்கும் நம்மனோர்க்குமாகக் கூறிய அருளுரைகளாக அமைந் துள்ளன. இரண்டாவது பதிகத்தில் 3 முதல் 6 முடிய உள்ள பாடல்களும் அவ்வாறே அமைந்துள்ளன. ஆதலின் 'புலங்கொள் இன்தமிழ்' எனப் போற்றினர் ஆசிரியர்.

மகிழ்வுடன் அப்பதியில் அவர் வாழ்ந்து வரு கின்ற நாள்களில், வானத்தில் விளங்கிய கதிரவன், மிதுன ஓரையுள் சேரப் பொருந்தி, ஏழ்கடலும் தம் நீர்மை குறையுமாறு சினத்துடன் வெம்மையான கதிர்களைப் பரப்புதலால் அக்காலம் முதுவேனிற் பருவமாகச் சிறந்தது. வானவீதியிற் செல்லும் கதிரவன் அவ்வவ்விடத்தும் பொருந்திவரும் ஓரைகளாலேயே திங்கள் பெயர்கள் வேறுபடுகின் றன; பருவநிலைகள் மாறுபடுகின்றன. அவ்வகையில் கதிரவன் மிதுன ஓரையில் சேரும்பொழுது வரும் பருவம் முதிர்வேனிற் பருவமாகும். முதிர்ந்தது வேனில் - முதுவேனில் வந்தது. முதிர்ந்தது வேனில் என்றது சமாதியணியாம். இப்பருவத்திற்குரிய திங்கள் ஆனியும் ஆடியுமாகும். 'ஏழ்கடல் நீர்மை குன்ற' என்றது 'நெடுங்கட லும் தன்நீர்மை குன்றும்' (குறள், 17) எனும் குறளை முகந்து நிற்ப தாகும்.

குளிர்ச்சியுடைய நீர்க் கலப்பால் குளிர்ந்து வீசும் காற்றையும், மணம் பொருந்திய சந்தனத்தையும், மணத்தால் ஊறுபாடு அற்ற நறுமணமுடைய பூக்களுள் பொதிந்த பனிநீரையும், ஒன்றற் கொன்று இயைபுடைய ஒளிபொருந்திய இணைமணிகளால் இயைந்த முத்து மாலைகளையும், உண்ணக் கூடிய சுவைப் பண்டங்களையும் உலகத்தவர் விரும்புமாறு வேனில்காலம் முதிர்ந்தது. ஒன்றற் கொன்று இயைபுடைய இணையான மணிகள். நண்புடைத் துணை மணி - அன்புடைய வாழ்க்கைத் துணை என்றலும் ஒன்று. முதுவேனிற்காலத்தில் விரும்புதற்குரிய நுகர்ச்சிப் பொருள்களை ஒருங்கு குறித்திருக்கும் அருமை எண்ணற்குரியதாம்.

கரியமணல் மிக்க காட்டினிடம் நீர்பெறும் விருப்பத்தால் சேர்ந்த மான் கூட்டம் (அங்கே நீரைப் பெறாததால்) பெறுதற்கு அரிய நீர் என்ற தோற்றம் பற்றி மயங்கிக் கானல்நீரின் பின்னால் தொடர்ந்து செல்லும்; மழைத் துளிகளை உணவாகக் கொள்ளும் சாதகப் பறவைகள், உணவு பெறாது வருந்தி வேறு உணவைத் தேடித் திரியும். பறவைகள் சிறகுகளை விரித்துக் கொண்டு வெம்மை பொறுக்க இயலாது தாம் ஒடுங்குவதற்குத் தக்க குளிர்ந்த இடங்களில் தங்கும்.
குறிப்புரை

உயர்ந்தோங்கும் மாளிகைகளின் மீதும், நிலா முற்றங்களின் அருகிலும், ஒளியுடைய நிழலைப் பரப்பும் சோலை யிலும், மலர்ப் பொய்கைகளின் கரைகளிலும், முத்துக்களைக் கொண்ட பூங்குழலையுடைய மாதர்களின் கொங்கைத் தடங்களிலும், ஆடவர் மகிழ்ந்துறைவர்.
குறிப்புரை

மயில்கள் ஒடுங்கவும், வண்டுகள் சூழ்ந்து முரலவும், தாமரை அரும்புகள் மலரவும், வளங்குன்றாத சோலை களின் மெல்லிய தளிரைக் கோதிக் குயில்கள் கூவி எழவும், துயில் கொள்ளாத உயிர்கள் எல்லாம் துயில் கொள்ளவும், வானத்தில் விளங்கும் ஒளிக் கதிர்களையுடைய கதிரவன், தன் வெம்மையான கதிர்களை ஒடுக்காமல் வெம்மை தருகின்ற முதுவேனிற் பருவத் திற்குரிய நாள்களில்,
குறிப்புரை

காழிப்பதியில் தோன்றியருளிய பிள்ளையார், சடையை முடியணியாகக் கொண்ட சிவபெருமானின் திருவலஞ்சுழி என்ற அப்பதியினை எண்ணம் பெருகப் போற்றி, பழையாறை என்ற பதியைச் சார்வதற்காக, நட்புக் கொண்டிருக்கும் அடியவர்களுடன் போவதை விரும்பி, நடந்து சென்று, வான் அளாவிய நீண்டுயர்ந்த மதிலையுடைய திருப்பழையாறைமேற்றளியை அடைந்தார்.
குறிப்புரை

பழையாறைமேற்றளியில் வீற்றிருந்தருளும் செந்தீ நிறத்தவரான இறைவரின் திருவடிகளை உருகிய அன்புடனே வணங்கிப் போற்றி, மணம் பொருந்திய கூந்தலையுடைய மலையர சன் மகள் வழிபட அருள் செய்த இறைவரின் 'திருச்சத்தி முற்றம்' என்ற பதியின் புறத்தே அடைந்தருளினர் பிள்ளையார். பழையாறைமேற்றளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.

திருச்சத்திமுற்றத்தினைச் சென்றடைந்து திரு மலைவல்லியார் போற்றி வழிபட்ட அழகிய திருவடிகளை ஆர்வத் துடனே வணங்கி, பிறவிச் சுழலில் அகப்படாமல் கைதந்து ஈடேற்று பவரான இறைவரின் திருவடிகளைப் பாடி, விருப்புக் கொண்டு 'திருப்பட்டீச்சரத்தை' வணங்கச் சென்ற போழ்து,
குறிப்புரை

வெப்பத்தை மிகுதியாய் அளிக்கும் முதுவேனிற் காலத்தின் வெம்மையைத் தணித்து ஆற்றும் பொருட்டு, முத்தமிழ் வல்லுநரான சம்பந்தரின் திருமுடியின் மீது, தம்மை அறியாத வகையால் சிவபூதம் குளிர்மை தரும் முத்துப் பந்தரை எடுத்துப் பிடித்து, 'பட்டீசர் எங்களை இதனுடன் சென்று தருமாறு திருவாய் மலர்ந்தருளினார்' எனக் கூற,
குறிப்புரை

அச்சொற்களும் அழகிய முத்துப் பந்தரும் வானத்தில் எழுந்தனவாக, செம்மையான சிவஞானத்தை உணர்ந்த ஆளுடைய பிள்ளையார், 'இச்செயல்தானும் இறைவரின் திருவருளா யின் நமக்கு இயைவதாகுக!' என்று உள்ளத்தில் எண்ணி மேனியில் மயிர்க் கூச்சல் உண்டாக, நிலத்தில் வீழ்ந்து வணங்கினார்.
குறிப்புரை

அதுபோழ்து உடன் வந்த ஏவலர் அழகிய முத்துப் பந்தரைத் திருவருள் சிறக்க ஒளிவீசும் அழகிய காம்புகளைக் கையில் பிடித்தனர். இனிய மொழியையுடைய தமிழ் மறைத் தலைவர் ஆன பிள்ளையாரின் அருகில், தேவர்கள் பொழிந்த மணமுடைய தெய்வப் பூக்களால், அம்முத்துப் பந்தர், பூம் பந்தர் போலவும் விளங்கியது.
குறிப்புரை

தொண்டர் கூட்டமானது மகிழ்வொலி செய்யவும், மறைகளின் பேரொலி எண்திசைகளிலும் நிறைந்து எழவும் எழுந்தருளி வருகின்ற பிள்ளையார், வெண்மையான முத்துப் பந்தரின் நிழலானது தம் முடியின் மீது நிழற்றுவதால், பொன்னம் பலத்தில் கூத்தப்பிரானின் தூக்கிய திருவடி நீழலில் அமர்ந்திருத் தலைப் போல் அமர்ந்திருந்தார்.
குறிப்புரை

நிலத்தின் மீது தொண்டர்களுடன் வருகின்ற பிள்ளையார், பாம்புகளையே மாலையாகச் சூடிய இறைவர் அளித்த பெருங்கருணைத் திறத்தைப் போற்றிய வண்ணமே, அன்பு நிறைந்த உள்ளம் களிப்புக் கொள்ள எதிர்கொள்ளும் பொருட்டு முகமலர்ந்து வருகின்ற திருத்தொண்டர்களுடன் திருப்பட்டீச்சரத்தை அடைந்தனர்.
குறிப்புரை

சென்று சேர்ந்து வாயிலின் வெளியில் வணங்கி, உள்ளே புகுந்து, வெற்றி பொருந்திய ஆனேற்றை ஊர்தியாக உடைய சிவபெருமானின் திருக்கோயிலை வலம் வந்து, வெள்ளைக் கொம்பு டைய பன்றி உருவெடுத்த திருமால் நிலத்தைத் தோண்டியும் காண இயலாத திருவடித் தாமரைகளைக் கண்டு, திருமுன்பு வணங்கி, நிலத்தில் வீழ்ந்து எழுந்து சொல்மாலை கொண்டு போற்றினார். இறைவன் திருமுன்பு அருளிய பதிகம் 'பாடல்மறை' (தி. 3 ப. 73) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

திருக்கருணைப் பெருக்கின் திறத்தைப் போற்றி அதனால் அளவிடற்கரிய இன்ப வெள்ளத்தில் திளைத்து, மாறாத பெருங்காதல் கொண்ட உளம் பெருகிய அன்புடன், செம்பொன் மலையரசனின் மகளாரான உமையம்மையார், பொற்கிண்ணத்தில் தந்தருளிய ஞான அமுது உண்டருளிய பிள்ளையார் திருக்கோயில் புறத்தே அடைந்தார்.
குறிப்புரை

அப்பதியில் விரும்பி எழுந்தருளிய ஆளுடைய பிள்ளையார் சொலற்கரிய சிறப்பினையுடைய பழையாறைவடதளி யில் சென்று வணங்கி, ஒப்பில்லாத தமிழ்ப் பதிகத்தைப் பாடித் தாம் உடனாய் விரும்பிய தொண்டர்களுடனே எல்லாப் பொருள்களுமாய் நின்ற சிவபெருமானின் 'திருவிரும்பூளையினை' அடைந்தார். பழையாறை வடதளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.

பிள்ளையார், தேவர்களின் தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருவிரும்பூளையினைச் சென்றடையப் பந்தல்களைத் தோரணங்களுடன் நிறுத்திப் பெருகிய மகிழ்ச்சி ஓங்குதலால் நிறம்பொருந்திய மலர்களால் அமைந்த அழகிய பெரிய மாலைகளைத் தொங்கவிட்டு, நீர்நிறைந்த குடங்களை நிரல்பட அமைத்து, அனைவரும் போற்றத் தொண்டர்கள் அங்கு எதிர் கொண்டனர்.
குறிப்புரை

வளம் பொருந்திய தேவாரத் தமிழையருளும், முகனமர்ந்து இன்சொற்களைப் பேசும் தலைவரான பிள்ளையார், அழகிய முத்துச் சிவிகையினின்றும் தம்மை எதிர்கொண்டு வரவேற்ற தொண்டர் கூட்டத்தின் எதிரே இறங்கி, அவர்கள் தம்மை வணங்கத் தாமும் அவர்களை வணங்கி, தேவர் தலைவரின் திருக்கோயிலை அடைந்து, வணங்கித் திருமுன் நின்று, பண்ணிசையை வெளிப்படுத் தும் இனிய இசையுடைய திருப்பதிகத்தால், மேலாய பொருளான இறைவரைப் பாடுவாராய்,
குறிப்புரை

ஒப்பற்ற பெரிய மேருமலையும் ஓர் அணுவாகு மாறு நீண்ட பெருமையுடையவராகியும், துய்ப்பனவும், உய்ப்பனவும் எல்லாம் தாமேயாகத் துய்க்கின்ற தொண்டர்களுக்கு அமுதமாயும் எளியராயும் விளங்கி நிற்கும் அம்மேலாய பொருளைத் தகுதி மிக்க அடியவரை வினவும் தன்மையில், தமிழ் வல்லுநரான பிள்ளையார், சொல்லப்படுகின்ற அரிய மறைகளின் உட்பொருள் விளங்கப் பாடினர். திருஇரும்பூளையில் பாடியருளிய பதிகம் 'சீரார் கழலே' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிகம் முழுவதும் அடியவர்களிடம் பலபட அமைந்த வினாக்க ளைக் கேட்டு மகிழும் வினவுரைப் பதிகமாக அமைந்துள்ளது.

போற்றப் பெறுகின்ற 'அரதைப் பெரும்பாழி' முதலாக அறிவுடையவர்கள் வாழ்கின்ற 'திருச்சேறையும்', 'திரு நாலூரும்', 'திருக்குடவாயிலும்', சிறப்புகள் பலவும் தாமே நாடி வருதற் குரிய 'திருநறையூரும்', 'தென் திருப்புத்தூரும்' ஆகிய இப்பதிகளை விருப்புடன் வழிபட்டு, நீண்ட தமிழ் மாலைகளைப் பாடி, அத்தென் திருப்புத்தூரில் இனிதே வீற்றிருந்தார் பிள்ளையார். இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:பதியின் பெயர் பாட்டுமுதற்குறிப்பு பண் அரதைப்பெரும்பாழி பைத்தபாம்போடரை கொல்லி

அவ்வரிசில்கரைப் புத்தூரில் பிள்ளையார் எழுந்தருளியிருந்த பொழுது, வன்மையுடைய வெண்மையான பன்றி வடிவைக் கொண்ட சிவந்த கண்களையுடைய திருமால் வணங்கும் சிவபுரத்திற்குச் சென்று, கங்கையைச் சடையில் அடக்கிய இறைவரின் திருவடிகளை வணங்கி, மிக்க விருப்பத்தால் இசை பெருகும் திருப்பதிகங்களைத் திருமுன்பு நின்று பாடினார். இப்பதியில் அருளிய பதிகங்கள் மூன்று. 1 புவம்வளி : தி. 1 ப. 21 -

போற்றி, இறைவரின் திருவருளைப் பெற்று, எவ்வுயிர்களையும் இறைவரின் ஆணையின் வண்ணம் பிறவியில் புகுத்தும் நான்முகன் வணங்கும் திருத்தோணிபுரத்தில் தோன்றிய பிள்ளையார், ஆனேற்றின் மீது வருதலை விரும்பிய இறைவரைப் போற்றுதற்காக, நாற்றிசையில் உள்ளவரும் வணங்கும் திருக்குட மூக்கை அடைந்தார்.
குறிப்புரை

தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த திருக்குட மூக்கினில் வாழ்கின்ற செல்வப் பெருமறையோர், காழி வள்ளலார் ஆகிய பிள்ளையாரை மறையொலி பெருகவும், மங்கல இயங்கள் ஒலிக்கவும், மன்னரை எதிர் கொள்ளும் முறையில் எதிர் கொண்டு, தம் பதியினிடத்து அழைத்துச் சென்றனர்.
குறிப்புரை

திருக்குடமூக்கினைச் சேர வருபவரான திருஞான சம்பந்தர், தம் இறைவரை வளமையுடைய தமிழ்ப் பதிகத்தால் உள்ளம் உருகி மகிழத் திருக்குடமூக்கை உவந்து விரும்பி வீற்றிருந்த பெரு மான் எம் இறைவர் என்று பெருகிய இசையால் பாடினார். இதுபொழுது அருளிய பதிகம் 'அரவிரி' (தி. 3 ப. 59) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். பாடல் தொறும் 'குடமூக்கை உவந்திருந்த பெருமான் எம்மிறை' என நிறைவு பெறுதலின், அக்குறிப்பினை எடுத்து மொழியலானார் ஆசிரியர்.

மேற்கூறியவாறு போற்றி வந்து, திருக்கீழ்க் கோட் டத்தில் வீற்றிருந்த இறைவரை மனம் மகிழ வணங்கித் தொண்டர் கூட்டத்துடன் செல்பவரான சம்பந்தர், அந்தணர்கள் சூழப் போற்றி வர, அவரோடும் கூடி, மணம் பொருந்திய பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்காரோணத்தைச் சென்று அடைந்தார். கு-ரை: திருக்குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் அருளிய பதிகம் கிடைத்திலது.
குறிப்புரை

மலர்கள் பொருந்திய கங்கை முதலான தூய நதிகள் பலவும், தத்தம் இடங்களிலிருந்து இப்பதியிலுள்ள குளத்தில் மாமகத்தன்று ஆடும் பொருட்டாக வந்து வழிபடுகின்ற பெருமை உடைய அக்கோயிலைத் தூய்மையான மலர்போன்ற கைகளால் தொழுது, வலம் வந்து, மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்த இறை வரின் திருவடிகளை வணங்கிக் கண்டுகளித்தனர். 'தாவி முதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க் கோவியொடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே' (தி. 6 ப. 75 பா. 10) எனவரும் அப்பர் அடிகளின் திருவாக்கை யுளங்கொண்டு ஆசிரியர் சேக்கிழார் இப்பாடலை அருளிச் செய்துள்ளார்.

கண்ணகத்தே நின்று களிதரும் அரிய மணி போன்றவரும், திருக்குடந்தைக் காரோணத்தில் எழுந்தருளியிருக்கும் அமுதம் போன்றவரும், பகைவரின் முப்புரங்களை எரித்த நான்மறை களின் பொருளாக விளங்குபவருமான இறைவரை வணங்கிப் பண்ணமைந்த திருப்பதிகத்தைப் பாடிப் பணிந்து, போற்றிப் பிற பதிகளையும் வணங்க எண்ணி, எண்ணிறந்த அடியவர்களுடன் பணிந்து, அங்கிருந்து மேற்செல்வார். திருக்குடந்தைக் காரோணத்தில் அருளிய பதிகம் 'வாரார் கொங்கை' (தி. 1 ப. 72) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிறபதிகள் என்றது திருக்குடமூக்கில் உள்ள பிற திருக்கோயில்களான, திருக்கருக்குடி, திருக்கொட்டையூர், திருக்கலயநல்லூர் முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருக்கருக்குடியில் அருளிய பதிகம் 'நனவிலும் கனவிலும்' : (தி. 3 ப. 21) எனத் தொடங்கும் காந்தாரபஞ்சமப் பண்ணிலமைந்ததாகும். பிற பதிகளின் பதிகங்கள் எவையும் கிடைத்தில.

திருநாகேச்சரத்தில் வீற்றிருக்கும் செம்பொன் மலை போன்ற கரிய யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட பெருமானை வணங்கி, அரிய ஞானம் விளங்கும் செந்தமிழின் இனிய திருப்பதிகத்தைப் பாடி அருள் செய்து, பெருகும் அன்பினால் இன்பம் ஆர்ந்திருந்தார். இப்பதியில் இதுபொழுது அருளிய பதிகம் 'தழை கொள்' (தி. 2 ப. 119) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

ஆதிசேடன் வழிபட்ட தாமரை போன்ற திருவடிகளை வணங்கி, நாளும் வணங்குபவர்களின் பிணிகளைப் போக்கும் நன்மையினைப் போற்றி, ஞானப்பாலமுதின் மணம் கமழும் திருவாயினையுடைய பிள்ளையார், மலர்கள் மலர்ந்து மணம் வீசும் காவிரியின் வடகரை வழியாகச் சென்று, இறைவரின் 'திருவிடை மருதூரில்' புகுகின்றவர், திருநாகேச்சரத்தில் பாடிய பதிகம் 'பொன்னேர் தரு' (தி. 2 ப. 24) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். 'வல்வினை மாய்ந்தறும்' இன்புறும் என்பனவாகிய குறிப்பு கள் அமைந்திருத்தலின், 'நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி' என்றார்.

உயர்ந்த திருப்பதிகத்தை 'ஓடேகலன்' எனத் தொடங்கித் தாங்குதற்கரிய மகிழ்ச்சி மேன்மேலும் பெருகுதலால், 'இங்கு என்னை ஆளுடைய இறைவர் வீற்றிருக்கும் திருவிடைமருது இதுதானோ?' என்ற கருத்துடன் நல்ல இயல்புடைய இசை பொருந்தப் பாடி அந்தப் பதியினுள் புகுந்தார். இதுபொழுது அருளியது 'ஓடேகலன்' (தி. 1 ப. 32) எனும் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமா கும். பாடல்தொறும் 'இடைமருது ஈதோ' என வரும் தொடர் அமைந்து இருத்தலின் அதனை ஆசிரியர் குறிப்பிடுவாராயினர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அப்பதியிலுள்ளார் எதிர்கொள்ளச் சென்று, அப்பதியை அடைந்து, நிலைபெற்ற பரம்பொருளான இறைவரின் பெருங்கோயிலை முன்னே வணங்கி, வலம் வந்து, திருமுன்பு அடைந்து, தரையில் விழுந்து அன்பு நிறைவதால் பொழியும் கண்ணீர் இடையறாது வழிய,
குறிப்புரை

இறைவரைப் போற்றுகின்ற செந்தமிழ்ப் பதிகம் பாடி, விருப்பத்துடன் அப்பதியில் இருந்தருளும் சம்பந்தர், மேலும் பல திருப்பதிகங்களையும் பாடி, வெண்மையான பிறைச் சந்திரனுடன் பாம்பையும் சடையில் அணிந்த பெருமானாரின் திருவடிகளைப் போற்றி, உறைப்புடைய திருத்தொண்டர்களுடன் இறைவரை வணங் கிப் போற்றி, அன்பு மிகுதியால் அங்குத் தங்கியிருந்த காலத்தில், இறைவரின் திருமுன்பு அருளிய பதிகம் 'பொங்கு நூல்' எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். மேலும் இப்பதியில் அருளிய பதிகங்கள் நான்குள்ளன. அவை: 1 'தோடோர்' : தி. 1 ப. 95 -

அருகில் உள்ள பலபதிகளையும் வணங்கிக் காவிரிப் பெருங்கரை வழியே சென்று, திருத்தென்குரங்காடுதுறை யினைச் சேர்ந்து, இறைவரின் ஒலிக்கும் கழல் பூண்ட திருவடிகளைப் பெருங் காதலால் வணங்கி, விரும்பிய இனிய இசை பெருகவுள்ள அரிய கலை நூல்களின் பொருள்களை விரிக்கும் திருப்பதிகத்தைப் பாடி வணங்கினார். தென்குரங்காடுதுறையில் அருளிய பதிகம் 'பரவக் கெடும்' (தி. 2 ப. 35) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாகும். 'மருங்குள நற்பதிகள்' என்பன இன்னவென அறிதற் கியன்றிலது. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

அழகிய தாமரை மலர்கள் நிறைந்த குளங்களை உடைய அத்திருப்பதியை வணங்கிப் பின், அதனின்றும் நீங்கிச் சென்று அருகிலுள்ள கருநிறக்கண்டத்தையுடைய இறைவரின் கோயில்களை வணங்கி, நம் பாசத்துன்பங்களை நீக்குவதற்கென்றே தோன்றிய ஞானச் செம்மலாம் சம்பந்தர், திருவாவடுதுறையைச் சேர்ந்தார். இறைவரின் கோயில்கள் என்றது சாத்தனூர் முதலா யினவாகலாம்.

அயன் முதலிய மூவர்க்கும் அறிதற்கு அரிய மூலப் பொருளாய தேவரான சிவபெருமானின் திருவாவடுதுறையில் வாழ்கின்ற தொண்டர்கள், மலர்களை வாரிக் கொண்டு பொங்கி வரும் குளிர்ந்த அலைகளையுடைய நீர் நிரம்பிய பொய்கைகளையும் வயல்களையும் உடைய சீகாழித் தலைவரான பிள்ளையாரை எதிர் கொள்வதற்கென மிக்குப் பெருகும் அன்புடனே வந்து சேர்ந்தனர். திருமூல நாயனார் வழிபட்ட குறிப்பும் தோன்றத் திருவாவடுதுறைப் பெருமானை 'மூலத்தேவன்' என்றார் ஆசிரியர் சேக்கிழார்.

அங்ஙனம் வந்த தொண்டர்கள் தம்மை வணங்கு வதற்கு முன்னம், விரியும் புகழையுடைய சீகாழி அந்தணர்களுக்கு எல் லாம் அரிய மறையின் பொருளாக உள்ளவர் இவர் என்று தியானப் பொருளாகக் கொள்ளும்படி தோன்றிய பிள்ளையார், அழகான முத் துச் சிவிகையினின்றும் இறங்கி, அவர்களின் எதிரில் வணங்கிப் பின், மனம் இன்பம் அடைய இறைவரின் திருக்கோயில் முன் சென்றார்.
குறிப்புரை

உயர்ந்த கோபுரத்தை வணங்கி, உட்சென்று நீண்ட வரிசையாக அருகில் சுற்றிலும் உள்ள மாளிகையை வலமாக வந்து வணங்கி, அருட்பெருங் கூத்தை இயற்றுகின்ற ஆதிமூர்த்தியும், திருவாவடுதுறையுள் எழுந்தருளியுள்ள நிறைந்த அமுதம் போன்ற வருமான இறைவரை, நாடும் பேரன்பினால் வணங்கி எழுந்து அரிய தமிழால் திருப்பதிகத்தைப் பாடினார். இவ்வருந் தமிழ்ப்பதிகம் கிடைத்திலது.

அன்பால் பெருகிய கண்ணீர் அருவிபோல் பொழிகின்ற ஆர்வத்தால், திருமுன்பு போற்றி, பின்பு வெளியே வந்த பிள்ளையார், துன்பம் இல்லாத உள்ளம் கொண்ட தொண்டர்களுடன் தொழுது, இன்பம் பொருந்த அப்பதியில் இனிதாய் விரும்பி வீற்றிருந்தார்.
குறிப்புரை

விரும்பி, அத்திருப்பதியில் வீற்றிருக்கும் காலத் தில், வேள்வி செய்வதற்குரிய காலம் வந்து சேர, குற்றம் இல்லாத சீகாழியின் தலைவரான பிள்ளையாரிடம் வந்து, தந்தையாரான சிவபாத இருதயரும் விடைபெற்றுச் சீகாழிக்குச் செல்லும் பொருட்டு, வேள்வி செய்தற்குரிய பொருளைப் பெறுதல் வேண்டும் என்று அவரிடத்துக் கூறினார்.
குறிப்புரை

தம் தந்தையாரின் சொல்லைக் கேட்டதும் சீகாழித் தலைவரான பிள்ளையார், முன் நாளில் கூறியதையும் நினைவு கூர்ந்து, திருவருளை எண்ணி, 'அந்தம் இல்லாத பொருளாய் உள்ளவை எம் இறைவரின் திருவடிகளே அல்லவோ?' என்று மனத்துள் எண்ணி எழுந்தார். முன்நாளில் கூறியது 'இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான்செயவேண்டும்' (பா. 278) என்பதாகும்.

பிள்ளையார் தேவ தேவரான இறைவர் மகிழும் கோயிலில் சென்று, திருமுன்பு நின்று வணங்குபவராகி, 'பெருஞ் செல்வம் வேண்டிய தந்தையார்க்கு ஈவதற்கு என்னிடம் ஒரு பொருளும் இல்லை, பொருளாகும் உன் திருவடியன்றி வேறொன்றும் அறியேன்?' என்று இறைவரின் பேரருளை வினவிய கருத்துடைய செந்தமிழ்ப் பதிகத்தைத் தொடங்கிப் பாடலானார்.
குறிப்புரை

தொடங்கி வளம் கொண்ட தமிழ்ப் பதிகத்தை நான்கடியின் மேலும் இரண்டு அடிகள் தொடுத்த மேல் வைப்பாய்த் தொடர்பு பெற அமைத்த இனிய இசைப் பதிகத்தால் வணங்குபவராய், நிரம்பக் கொண்ட காதலால், வள்ளலாரான இறைவரின் திருவடி களைப் போற்றிப் பொருந்திய சிந்தையால் அன்புமிக்குக் கைகள் கூப்பித் தொழுதார். நான்கடிகளின் மேலும் இரண்டடிகள் வைக்கப் பெற்றிருத்தலின் 'நாலடி மேல் வைப்பு' என யாப்பமைவு கூறப் பெறுவதாயிற்று. இப்பதிகம் 'இடரினும் தளரினும்' (தி. 3 ப. 4) எனத் தொடங்கும் காந்தார பஞ்சமப் பண்ணில் அமைந்ததாகும். 'இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்' எனப்பாடல் தொறும் வரும் கருத்தை நினைவு கூர்ந்தே ஆசிரியர் 'பேரருள் வினவிய செந்தமிழ்' எனக் குறிப்பாராயினர்.

விரும்பிய இனிய தமிழ்ப் பதிகத்தைப் பாடிய ஞானசம்பந்தரின் விருப்பப்படியே, முன்பு அருள்செய்த இறைவரின் திருவருளால், அச்சிறப்பை அருளும் சிவபூதம் ஒன்று விரைவில் வந்து, இடம் அகன்ற பலிபீடத்தின் உச்சியின்மேல், ஆயிரம் பசும் பொன் கொண்ட முடிப்பு ஒன்றை வைத்தது. கிழி - பொன் முடிப்பு. 'கழுமலவூரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே' (தி. 4 ப. 56 பா. 1) எனவரும் அப்பர் அடிகளின் திருவாக்கு இதற்கு அகச் சான்றாய் அமைகிறது.

அங்ஙனம் வைத்த அப்பூதம் அங்குப் பிள்ளை யார் முன் நின்று, நல்ல வாக்கினால் பிள்ளையாரை நோக்கி, 'வைத்த இம் முடிப்பு பொன்னைக் கொண்டதாகும். எடுக்க எடுக்கக் குறையாத நிதியுமாகும். இறைவர் உமக்கு அருள் செய்தது இது' என்று உரைக் கப், பிள்ளையார் இறைவரை நேராகத் தொழுது, தந்தையாரான பெரு மானின் திருவருளினை நினைந்து நிலத்தில் விழுந்து வணங்கினார்.
குறிப்புரை

வணங்கி எழுந்து கைகளைக் கூப்பித் தொழுது, குளிர்ந்த மலர்கள் சூழ்ந்த பலிபீடத்தில் வைக்கப்பட்ட பொன் முடிப்பை எடுத்துத் தலைமீது கொண்டு, அரிய மறைகளால் துணிய நின்ற பெரும் பொருளான இறைவர் அளித்த அப்பொருளைத் தூய வாய்மையால் தணிந்த மனமுடைய தந்தையாருக்குத் தந்து சொல்லலானார். தணிந்த சிந்தை - செருக்கு, சினம் முதலாய அறுவகைக் குற்றங்களும் நீங்க அடங்கிய சிந்தை. இது தூய வாய்மையால் ஆயது. தூய வாய்மை - 'அவரவருக்கு உள்ளபடி ஈசனருளாலே. . . . எல்லாம் சிவன்செயல் என்று எண்' (சிவபோகசாரம்) என எண்ணும் வாய்மை.

'பழமையும் பெருமையும் வாய்ந்த மறைகளில் விதித்த முறைப்படி, கங்கையை முடித்த சடையையுடைய முழுமுதற் பொருளான சிவபெருமானையே தலைமையாகக் கொண்டு செய் கின்ற நல்ல சிவ வேள்வியைத் தீமை நீங்கி இன்பம் அடையும் பொருட்டு நீவிர் செய்திடவும், சீகாழியில் உள்ள மறையவர் அனை வரும் செய்திடவும் குறைவில்லாமல் மிகும்'. தந்தையாரை இவ்வாறு செய்க என்று பணிப்பதும் தவறு; தாம் நினைந்ததைக் கூறாதிருப்பதும் தவறு. இந்நிலையிலே சிவபெருமானை தலைமையாகக் கொண்டு செய்கின்ற வேள்வியைத் தாங்கள் செய்யவும் என்று தொடங்கிக் கூறுவாராயினர். காமியத் தழுந்திச் செத்துப் பிறக்கின்ற தெய்வங்களைத் தலைமையாகக் கொண்டு வேள்வி செய்தல் தக்கதன்று என்பது பிள்ளையாரின் திருவுள்ளமாகும். 'எரிபெருக்குவர் அவ்வெரி ஈசனது உருவென அறிகிலார்' (தி. 5 ப. 100 பா. 7) என்பது அப்பர் திருவாக்காகும்.

என்று கூறி அவ்விடத்தினின்றும் தம் தந்தை யாரை விடைகொடுத்து அனுப்பிய பின்பு, அச்சிவபாத இருதயரும் பெருகும் இன்பம் பெற்றுச் சீகாழியை நோக்கிச் செல்ல, ஞான வெற்றியையுடைய திருஞானசம்பந்தரும் விருப்புடனே வணங்கி, மணம் மிகுந்த திருவாவடுதுறையில் மகிழ்வுடன் இனிதாய் அமர்ந்து இருந்தார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

திருவாவடுதுறையில் வீற்றிருந்தருளும் இறை வரை உளம் நிறைந்த காதலால் வணங்கி, அங்குத் தங்கி, உலகெலாம் உய்யும் பொருட்டுத் தோன்றிய பிள்ளையார் அங்கிருந்து சென்று, நீண்ட சடையில் தெளிந்த பிறைச்சந்திரனைச் சூடுபவரின் திருக் கோழம்பத்தினைச் சேர்ந்தார்.
குறிப்புரை

கொன்றை மலரைச் சூடிய நீண்ட சடையை உடைய இறைவரைத் திருக்கோழம்பத்தில் வணங்கி, என்றும் அழி யாது நிலைபெற்றிருத்தற்கு ஏதுவாய இன்னிசை உடைய திருப்பதி கத்தைத் திருமுன்பு நின்று பாடி, பொன்னம்பலம் உடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் 'திருவைகல் மாடக் கோயிலின்' அருகே முத்திச் செல்வம் வளர்தற்கு இடனான சீகாழித் தலைவர் சென்று அடைந்தார். திருக்கோழம்பத்தில் அருளிய பதிகம், 'நீற்றானை' (தி. 2 ப. 13) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

வைகலில் நீண்ட மாடக் கோயிலில் பொருந்திய பெருமருந்தான இறைவரைத் தம் கைகள் கூப்பி, விழுந்து வணங்கி, எழுந்து, கண்களினின்றும் நீர் அருவியாய்ச் சொரிய, இனிய இசையை உடைய செந்தமிழ் மாலைகளால் போற்றி, உருகி இளகும் மனத்தை உடையவராகித் 'திருநல்லம்' என்ற பதியை அடைந்து, திருவைகல் மாடக்கோயிலில் அருளிய பதிகம், 'துளமதியுடை' (தி. 3 ப. 18) எனத் தொடங்கும் காந்தார பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

நிலைபெற்ற மாளிகைகளைக் கொண்ட திருநல் லத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் விளங்கும் திருவடிகளை வணங்கி, இனிய தமிழ் மாலை பாடி, அருகிலுள்ள திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிச் செல்லும் பிள்ளையார், அலைகளை உடைய நீர் சூழ்ந்த திருஅழுந்தூர் மாடக் கோயிலைச் சென்றடைந்தார். திருநல்லத்தில் அருளிய பதிகம் 'கல்லானிழல்' (தி. 1 ப. 85) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

நிலையான மாமடம் என்று திருப்பாட்டினுள் குறிக்கப்பெற்ற கோயிலில் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற பெரும் பொருள் ஆன இறைவரை, போற்றி ஏத்தும் திருப்பதிகத்தைப் பண்ணுடன் பாடி, வணங்கி, காவிரிக் கரையில் மீளவும் வந்து சேர்ந்து, சொன்னவாறு அறிவாரைத் திருத்துருத்தியில் பிள்ளையார் வணங்கினார். திருவழுந்தூரில் அருளிய பதிகம், 'தொழுமாறு' (தி. 2 ப. 20) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிகத்தில் 5ஆவது பாடல் நீங்கலாக மற்றப் பாடல்களில் எல்லாம் 'மாமடம் மன்னினையே' என அருளப் பெறும் நிலைகண்டு, 'மன்னுமாமடம் மகிழ்ந்த வான் பொருளினை' என்றார். ஏழாவது பாடலில் 'மாநகர்' என்று அருளுகின்றார்.

அலைகளையுடைய காவிரி நீர் சூழ்ந்த திருத்துருத்தியில் 'வரைத்தலைப் பசும் பொன்' எனத் தொடங்கும் வளமை உடைய திருப்பதிகத்தைப் பாடி, உடல் நிலம் பொருந்தப் பணிந்து, சென்று உலவுகின்ற அக்காவிரி ஆற்றின் கரையில் திருமூவ லூரில் இறைவரை வணங்கினார். 'வரைத்தலைப் பசும்பொன்' (தி. 2 ப. 98) எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணிலமைந்ததாகும்.

மூவலூரில் வீற்றிருக்கும் இறைவரைப் போற்று கின்ற சொற்களால் மிகுந்த விருப்புடன் போற்றி நின்று, காதல் மிக மலர் களைக் கொண்டு வரும் குளிர்ந்த நீரையுடைய வயல்கள் சூழ்ந்த சீகாழித் தலைவரான சம்பந்தர், பொய்கைகள் சூழ்ந்த 'மயிலாடு துறைக்கு' வந்தார். மூவலூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.

நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த மயிலாடு துறையில் திருவுடை அந்தணர்கள் தொண்டர்களுடன் சூழ எதிர் கொண்டு நிற்பப் புகுந்து, கொல்லையில் வாழும் மான்கன்றைக் கையில் உடையவரைக் கோயிலுள் புகுந்து வணங்கி, அளவில்லாத ஒப்பற்ற மகிழ்ச்சி பெருக எழுந்தார்
குறிப்புரை

உள்ளத்தில் வைத்து, இன்பம் அடைய, அவ் வுணர்ச்சியுடன் கூடிய அன்பு மிகுதியால் உருகி, கங்கை வெள்ளத் தையுடைய சடையினரான இறைவரையே விளங்கும் சொல் பதிகத் தில் வைத்துப் பாடி, அத்தெளிந்த இனிய இசையுடன் கூடிய மகிழ் வுடன் வெளியே வந்து அவ்வளமுடைய பதியில் மகிழ்ந்து இருந்தார். திருமயிலாடுதுறையில் இறைவரின் திருமுன்பு அரு ளிய பதிகம் 'கரவின்றி' (தி. 1 ப. 38) எனத் தொடங்கும் தக்கராகப் பண் ணிலமைந்த பதிகமாகும். இங்கிருந்த நாள்களில் பாடிய பிறிதொரு பதிகம், 'ஏனஎயிறு' (தி. 3 ப. 70) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணி லமைந்த பதிகமாகும்.

அத்திருப்பதியினின்றும் நீங்கிச் சென்று, அழகு விளங்கும் சூலப்படையைக் கையில் கொண்ட வீரரான இறைவரின் திருச்செம்பொன்பள்ளியைக் கருதிச் சென்று பணிந்து, மெய்ம்மை யான பெருவிருப்பால் 'திருவிளநகரில்' எழுந்தருளிய விடையை உடைய இறைவரின் திருவடிகளை அடியார்களுடனே கூடிப் பணிந்து இசையுடைய திருப்பதிகத்தினைத் திருமுன்பு பாடினார். திருச்செம்பொன்பள்ளியில் அருளிய பதிகம் 'மருவார் குழலி' (தி. 1 ப. 25) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும். திருவிளநகரில் அருளிய பதிகம் 'ஒளிரிளம் பிறை' (தி. 2 ப. 78) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

நிறைவான மறைத் தலைவரான பிள்ளையார் முற்கூறியவாறு திருப்பதிகம் பாடிய திருவிளநகர் என்ற அப்பதியை வணங்கிச் சென்று, 'திருப்பறியலூரில்' வீற்றிருக்கும் இதழ்களை யுடைய கொன்றையையும் தும்பையையும் கடம்ப மலரையும் அணிந்த சிவந்த சடையையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக் கும் திருவீரட்டானத்தை அடைந்து வணங்கினார்.
குறிப்புரை

சிவபெருமானின் திருப்பறியலூர் வீரட்டத்தைப் பணிந்து, பொருந்திய அன்பால் அங்கு நின்றும் கடலின் கரையை அடைந்து, பாம்பை அணிந்த இறைவரின் பல திருப்பதிகளையும் சென்று வணங்கிச் சீகாழித் தலைவரான பிள்ளையார், அங்கங்கும் தொண்டர்கள் சூழ வந்து வரவேற்கச் செல்பவராய், திருப்பறியலூரில் அருளிய பதிகம் 'கருத்தன் கடவுள்' (தி. 1 ப. 134) எனத் தொடங்கும் மேகராகக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இங்குப் பதி பல என்றது திருவிடைக்கழி, திருஅளப்பூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவை யும் கிடைத்தில.

அடியவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடையத் திரு வேட்டக்குடியைச் சென்று வணங்கி, அவ்விடத்தினின்றும் கடற்கரை வழியே சென்று மணம் கமழும் மலர்களையுடைய வயல்கள் நிறைந்த சோழநாட்டின் பெரும்பதிகளை அடைந்து, உள்ளம் குளிர வணங்கி, அவற்றினின்றும் நீங்கிச் சமண சாக்கியர்களின் கொள்கைகள் குற்றம் உடையவை என்று உலகம் அறிய எடுத்துக் காட்டி, உய்யும் நெறி யைக் காட்டும் பவள வாயை உடைய பிள்ளையார் கொடிகள் கட்டப் பட்ட மதில்கள் சூழ்ந்த தருமபுரத்தை அடைந்தார். திருவேட்டக்குடியில் அருளிய பதிகம்: 'வண்டிரைக் கும்' (தி. 3 ப. 66), பண் - பஞ்சமம். 'அகன் பதிகள் கலந்து' என்பதற் கேற்பப் பிள்ளையார் வணங்கிய பதிகள் எவை எனத் தெரிந்தில. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

தருமபுரம் திருநீலகண்டயாழ்ப்பாண நாயனா ரின் தாயாரது பிறப்பிடம் ஆதலால், அப்பதியைச் சாரவரும் அவரு டைய சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அவர் திருவடியை வணங்கி வாழ்த்தினார்களாக, அதைப் பார்த்துப் பெருமை பொருந்திய திரு நீலகண்ட யாழ்ப்பாணர் அவர்களுக்குத் தாம் செய்து வரும் பணியை எடுத்துக் கூறுவாராய், ஆளுடைய பிள்ளையார் அருளிய அரிய திருப்பதிகங்களைத் தாம் யாழில் இட்டுப் பயிற்றப் பெற்ற பேற்றை அருளிச் செய்தார்.
குறிப்புரை

உறவினரும்அதைக் கேட்டு, பொருந்திய திருப் பதிகத்தில் பொதிந்த ஓசையானது அளவு பெறும்படி யாழாகிய இசைக் கருவியில் நீவிர் பொருந்தும்படி வைத்து வாசிப்பதானால், உலகம் எல்லாம் அவ்விசை வளரும்படி நிகழ்கின்றது எனக் கூறியதும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் உள்ளம் நடுக்கம் கொண்டு, வளமுடைய சீகாழித் தலைவரான பிள்ளையாரின் திருவடிகளில் விழுந்து வணங் கிச் சொல்வாராய், பிள்ளையார் அருளிவரும் பதிகங்களை யாழிலிட்டு வாசிப்பதால், யாழிசைக்குப் பெருமையாகுமேயன்றி, அப்பதிகங்க ளுக்குப் பெருமையாதல் இல்லை. உண்மை இதுவாகவும் மாறுபடச் சொன்னமையால் உள்ளம் நடுங்கினார். பதிகங்கள் இசைநுட்பம் உடையன மட்டுமன்றி, இறைவனின் பொருள்சேர் புகழையும் பலபட விரித்துரைப்பன. எனவே அப்பதிகங்கள் பெரிதும் போற்றப்படுகின் றன. யாழிசை, கேட்கும் அளவில் நின்றுவிடுவது என்பதை உள்ளவாறு உயர்ந்த நிலையாலும், தம் தன்னடக்கத்தாலும் இவ்வாறு கருதுவராயினர் பெரும்பாணர்.

'அளவற்ற திருப்பதிக இசைக் கூறுகளைக் கருவியில் அளவுபடாதவாறு, இவர்களே அன்றி இன்னும் உலகில் உள்ளவரும் அறிந்து அவ்வுண்மையை உணர்ந்து உய்யுமாறு உணர்த்தும் தன்மையினால், பலதிறத்தவரும் புகழும் ஒரு திருப்பதி கத்தைப் பாடியருளுகின்ற பேறுபெறுவேனானால், பண்பினால் நீண்டு விளங்கும் அவ்விசையானது யாழில் அடங்காத நிலையை நான் அவர்க்கு எடுத்துக் காட்டப் பெறுவேன்' என்று பிள்ளையாரிடம் பாணர் விண்ணப்பித்துக் கொண்டார். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

மறைகளின் நெறியை வளர்ப்பவரான பிள்ளை யாரும் ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட இறைவர் திருமுன்பு நின்று, திருப்பதிகத்தின் உண்மைத் திறமானது, உலகத்தவரின் மிடற்றிலும் கருவியிலும், உலகினர் மறைவழிவகுத்த இசைநூல்களின் நாத வகை களினாலும் அடங்காத வகையினை அறியக் காட்டுமாறு நிலைநாட்டு பவராய்த் தேவர்களும் வணங்கிப் போற்றும்படி 'மாதர் மடப்பிடி' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி வணங்கினார். மாதர் மடப்பிடி' (தி. 1 ப. 136) எனத் தொடங்கும் இவ்வரிய பதிகம் மேகராகக் குறிஞ்சியில் அமைந்த பதிகமாகும். வியாழக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்தது என்றும் சிலர் கருதுவர். யாழ்மூரி என்பது பண்ணன்று, பாணர்தம் வேண்டுகோளால் பாடி, யாழை முரிக்க நேர்ந்த வரலாற்றைக் குறிக்க வந்த தொடருமன்று. யாழில் இசைக்க இயலாதவாறு அமைந்த இசையமைப்பாகும்.

வளம் மிக்க சீகாழியில் தோன்றிய பிள்ளையார் 'மாதர் மடப்பிடி' எனத் தொடங்கி அழகு பொருந்தப்பாடிப் பண் பயில்கின்ற திருக்கடைக்காப்புச் சாத்தி நிறைவு செய்யத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அங்கு நின்று யாழ்க் கருவியில் அமைத்து முன் போல் அப்பதிக இசையினை இசைக்கப் புகுந்த அளவில், அவருக்கு அப்பதி கத்தின் இசை, யாழ் நரம்பில் வைத்து வாசிக்க அடங்காமல் போயிற்று.
குறிப்புரை

அதுபொழுது திருநீலகண்ட யாழ்ப்பாணர், யாழ் வாசிப்பதைக் கைவிட்டு, உடலில் நடுக்கமும், உள்ளத்தில் வருத்தமும் பொருந்தப் பிள்ளையாரின் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்து நின்று, அவரைப்பார்த்து, 'இந்தப் பெரியவர் அருளிச் செய்த திருப் பதிகத்தின் இசையை யாழில் இசைப்பேன் என்று மேற்கொள்ளச் செய்த இந்த யாழ்க் கருவியை நான் தொடுதலால் விளைந்ததன்றோ!' என்று உள்ளத்தில் தெளிந்து, அதற்குத்தக, மேற்கொண்ட செயலைச் செய்வாராய்,
குறிப்புரை

'முறுக்கிக் கட்டப்பட்ட நரம்பையுடைய யாழால் இக்குற்றம் உண்டானது' எனக் கூறி, அதனை முரிப்பதற்குத் திருநீல கண்ட யாழ்ப்பாணர் முயன்ற போது, உலகம் செய்த நற்பேற்றின் வடிவாய் உள்ள பிள்ளையார், பாணரின் அச்செயலைத் தடுத்து 'ஐயரே! பொருந்திய இசை நூலில் விதித்த அளவுப்படி நீவிர் இயற்றும் இந்த யாழ்க்கருவியைத் தாரும்' என்று, அதனைத் தம் கையில் பெற்றுக் கொண்டு, மேலும் ஆணையிடுபவராய்,
குறிப்புரை

'ஐயரே! இந்த யாழை முரிப்பது ஏன்? ஆளு டைய பிராட்டியாருடன் எழுந்தருளியிருக்கும் சிவந்த சடையை உடைய சிவபெருமான் அளித்த திருவருளின் பெருமையெல்லாம், நம்மிடத்தில் பொருந்திய இக் கருவியின் அளவில் அடங்குமோ? நம் இயல்புக்குத் தக்கவாறு இவ்வுலகத்தவர் மகிழ, இந்தக் கருவியின் அளவுக்குள் அமையும் நிலையில் இயற்றுவதே ஏற்றதாகும்' என்று அருளி,
குறிப்புரை

'மனத்தானும் அளவுபடுத்தற்கியலாத இசையின் பெருமையைச் செயலுள் பொருந்தச் செய்ய வருமோ? இந்த யாழைக் கருவியாகக் கொண்டு இறைவர் திருப்பதிகத்தை இதனுள் பொருந்த வந்த அளவில் இயைத்து இசைப்பீராக!' எனப் பிள்ளையார் பணித்துக் கொடுத்த யாழை, அவரைத் தொழுது ஏற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணர், அதனைத் தலைமீது வைத்துப் போற்றிக் கொண்டார். பாணரின் வேண்டுகோளுக்கு ஏற்பவே, பிள்ளையார் பதிகம் அருளினார்; ஆனால் அப்பதிகம் தம் யாழில் இயைத்து இசைக்க இயலாததாயிற்று. அங்ஙனமாகப் பாணனார் யாழை முரிப்பானேன்? என்ற வினா எழலாம். பதிகப் பெருமை, பெரு மானின் அருள் வழிநின்று பாடிவரும் பிள்ளையாருடையதாகத் தம்யாழ் வழியதே எனக் கருதிய சுற்றத்தார்க்கு அது பொய்ம்மை யாதலைக் காட்ட விரும்பியே, பிள்ளையாரிடம் அத்தகையதொரு பதிகம் பாடவேண்டினர். அவ்வளவில் அவரே, அதனைத் தாம் இசைக்க இயலாத நிலையில் மேலும் ஓர் எண்ணம் அவருக்குத் தோன்றியது. இவ்யாழ் இருந்தமையால் அன்றோ முன்னர் (பா. 140) பிள்ளையார் அருள் செய்யும் அறிவரிய திருப்பதிகத்தை யாழிலிட்டு வாசிக்க வேண்டிக் கொள்ள நேர்ந்தது. இஃது இன்றேல் அவ்வெண் ணமே தோன்றியிராதன்றோ எனக் கருதவே அவ் யாழை முரிக்க ஒருப்பட்டார் என்பது எண்ணத் தக்கதாம். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

சூழ இருந்த சுற்றத்தாருடன் பெரும்பாணர், ஆளுடைய பிள்ளையாரின் இரு மலர் அனைய திருவடிகளையும் வணங்கிப் போற்றிட, சீகாழியில் தோன்றிய தலைவரும், ஒப்பில்லாத பெருஞ்சிறப்புக்களை அவர்களுக்கு அளித்து, தம் தொண்டர்களு டனே அப்பதியில் இனிதாய் அமர்ந்திருந்த பின், அவர் பெரிய நீண்ட துதிக்கையையுடைய யானையை உரித்த இறைவரின் பிற பதிகளை யும் வணங்கச் செல்பவராய், பிள்ளையார் பாணனாரின் சுற்றத்தாருக்கு அருளிய பெருஞ்சிறப்புக்களாவன, அன்புரைகளும் அருளாசியுமாம். பதி பிறவும் என்பன எவை எனத் தெரிந்தில.

இலைகள் பொருந்திய தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த வயல்களையுடைய சோழ நாட்டின் பெரிய பதிகள் பலவற் றையும் அடைந்து, உமையம்மையாரை ஒருகூற்றில் கொண்ட இறை வர் மகிழ்ந்து வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கிப் போற்றிச் சிவந்த கைகளில் மானையும் மழுவையும் ஏந்தும் சினமுடைய விடை யினரான இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் 'திருநள்ளாற் றினை' இசை பொருந்திய பாணருடனே அந்தணர் தலைவரான பிள்ளையார் சென்று அடைந்தார். 'பதிகள் பலவும் நண்ணி' என்றும், 'கோயில் எனைப் பலவும் வணங்கி' என்றும் ஆசிரியர் குறிப்பதால், பிள்ளையார் வணங்கிய பதிகளும் கோயில்களும் மிகப்பலவாம் எனத் தெரிகிறது. எனினும் அவை இவை என அறிதற்கு இயன்றிலது. திருத்தக்களூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். தருமபுரத்திலிருந்து திருநள்ளாற்றிற்கு இடைப்பட்டும், அப்பகுதியைச் சூழவும் இருக்கும் திருப்பதிகளையும் கோயில்களையும் நேரில் சென்றோ அல்லது தக்கார்வாய்க் கேட்டோ அறிதல் தக்கதாம். திருவருள் முன்னிற்க.

திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் இறைவரின் அடியவர் கூட்டமானது விரும்பிச் சென்று, முறையாக எதிர்கொண்டு, மகிழ்வுடன் சூழ்ந்து வரச் சென்று அடைந்து, தெளிவான கங்கை ஆற்றைச் சூடிய சடையையுடைய இறைவரின் செல்வம் வளரும் கோபுரத்தை வணங்கி, அருட்செல்வம் மிக்க கோயிலுள்ளே பன் முறையும் வலம்வந்து, ஞானவுணர்வுடைய பிள்ளையார், பெருமான் திருமுன்பு வணங்கி எழுந்தார்.
குறிப்புரை

உருகுதற்குக் காரணமான அன்பு மீதூர்ந்த பெருவிருப்பத்தால் மனம் உருக, அதனால் பெருகும் ஈரத்தைப் பெற்றது போல், பொருந்திய திருமேனி முழுதும் எழுந்த மயிர்க் கூச்சலை வளர்க்கும் நீர்போல அருவி போன்று வழிகின்ற ஆனந்தக் கண்ணீர்ப் பெருக்குப் பெருகி அலைய நின்று, ஒப்பில்லாத பதிகத்தைப் 'போகமார்த்த பூண் முலையாள்' என்று தொடங்கிப் போற்றினார். 'போகம் ஆர்த்த' (தி. 1 ப. 49) எனத் தொடங்கும் பதிகம், பழந்தக்கராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

யாழ்நரம்பில் பொருந்த இயல் தமிழும் இசைத் தமிழும் கூடுமாறு பாடி, எண்ணிறந்த காலப் பகுதிகளிலும், விண் ணுக்கு அப்பாலும் நிலைபெறுமாறு, ஓங்கும் திருக்கடைக்காப்புச் சாத்தியருளிச் சிவந்த கண்ணையுடைய பாம்பணியையுடைய மார்பர் ஆன இறைவரின் திருவடிகளைப் போற்றி செய்து, புறமுற் றத்தை அடைந்து, பாலறா வாயரான ஞானசம்பந்தர், உலகம் போற்றும் பெரும்பாணனாரை யாழில் இயற்றும்படி ஆணையிட்டருளினார். பின்னர்ப் பிள்ளையார் சமணரொடு வாதிடும் பொழுது, நெருப்பில் இட்டும் வேகாதிருந்த பச்சைப் பதிகம் இதுவாக அமைதல் நோக்கி, 'எண்ணில் கற்பச் சேணளவு பட வோங்கும் திருக்கடைக்காப்புச் சாத்தி' என எதிரது போற்றியுரைத்தார் ஆசிரியர்.

ஞானப் பிள்ளையார் திருத்தாளத்தைக் கொண்டு அளவு ஒத்து அறுத்து அப்பதிகத்தைப் பாட, அதைப் பின்தொடர்ந்து பெரும்பாணனாரும் தெள்ளிய அமுதமான இனிய இசைத்தேன் பொழியும் நரம்புகளையுடைய யாழைப் பண் அமைதி மிகுமாறு செய்து, பதிக இசையை அமைத்துப் பாடும் போது, உலகத்தவர் யாவ ரும் மகிழ்ச்சியடைய, விளங்கும் சீகாழிப் பெருவள்ளலாரான பிள் ளையார் திருவுள்ளம் கொண்டு மகிழ்ந்து தொண்டர்களுடனே அங்குத் தங்கியிருந்தார். யாழ்மூரிப் பதிகத்தை அடுத்துப் பாடிய பதிகம் இது வாதலின், பிள்ளையாரின் திருத்தாளத்தோடு பாணனாரின் யாழிசையும் சிறக்க இப்பதிகம் அமைந்ததாகக் குறிக்கின்றார் ஆசிரியர் சேக்கிழார்.

பின், நிலைபெற்ற திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் மருந்தான இறைவரை வணங்கி, விடைபெற்றுச் சென்று, மணமுடைய நல்லநீர் பொருந்திய காவிரியாறானது பல வளங்களையும் தருகின்ற சோழ நாட்டின் புறம்பணை சூழ்ந்த பல திருப்பதிகளையும் வணங்கி வழிபட்டு, மெய் அடியார்கள் சூழச் சைவசிகாமணியாரான பிள்ளையார் செந்நெல் வயல்களிலே செந்தாமரை மலர்கள் மாதர் முகம் என மலர்தற்கு இடமான 'திருச்சாத்தமங்கை' என்ற பழம் பதியை அணுகினார். புறம்பணைசூழ் திருப்பதிகள் பிறவும் என்றது, அருகி லிருக்கும் பழம் பதிகளைக் குறிப்பினும், அவை இவை எனத் தெரிந்தில. எனினும் திருக்கோட்டாறு எனும் பதி இடைப்படவுள்ளது. அங்கு அருளிய பதிகங்கள் இரண்டாம். 1 'கருந்தடங்கண்ணின்' : (தி. 2 ப. 52) -

நிறைந்த செல்வத்தையுடைய சாத்தமங்கையில் வாழ்கின்ற திருநீலநக்க நாயனாரும், சைவ அந்தணரான பிள்ளையார் எழுந்தருளும் நற்செய்தியைக் கேட்டுப் பெருவாழ்வு அடைந்தவராய், அவர் வரும் வழி எல்லாம் விளக்கம் செய்து, எங்கும் இடையிடையே நெருங்கிய தோரணங்களையும் வாழை பாக்கு மரங்களையும் கட்டி, அங்கங்கே நிறைகுடம், நறுமணப் புகை, ஒளிவிளக்கு முதலான வற்றையும் அமைத்து, முறையாக வந்து எதிர்கொள்ள, ஞானசம்பந்தர் இறைவரது கோயிலை அடைந்தார்.
குறிப்புரை

'அயவந்தி' என்னும் அக் கோயிலில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரின் திருக்கோயிலின் பக்கத்தைச் சார்ந்து, தேவர்கள் உய்யும் பொருட்டு வழிபாடு செய்து வருகின்ற திருமுன் றிலின் பக்கமாக வந்து, உட்புகுந்து, கங்கையாறு ஒழுகுவதற்கு இடமான, சிவப்பு மயமான அந்தி மாலையில் தோன்றும் மதியினைச் சூடிய சடையையுடைய சிவபெருமானின் திருமுன்பு தாழ்ந்து வணங்கி, இப்பூவுலகம் முழுவதும் பெருந்தவம் செய்ததன் பயனாய், இங்கு வந்து தோன்றிய அந்தணராம் சம்பந்தர் தம் செங்கையினைத் தலைமீது குவித்து வணங்கி எழுந்து நின்றார். சாத்த மங்கை - ஊர்ப்பெயர். அயவந்தி - கோயிலின் பெயர்.

ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டு வீற்றிருக்கும் இறைவர் திருமுன்பு நின்று, போற்றிசெய்கின்ற பாடல்களால், மேன் மேலும் பொங்கியெழும் அன்புபெருகிக் கண்ணீர்விட்டுப் போற்றி செய்து, ஆனேற்றின் மீது இருந்தருளும் இறைவனின் எதிர் நின்று வெளியே வந்து அளவுபடாத திருநீற்று நெறியான சைவ நெறியை விளக்கும் அந்தணரான பிள்ளையார், திருநீலநக்க நாயனாரின் இல்லத்தில் தங்கி இருந்து, அன்பால் செய்யப்படுகின்ற விருந்து இயல்புக்கு உரியவற்றை அவர் அமைக்க, அன்பர்களோடு இன்பம் பொருந்த உண்டருளினார். இது பொழுது அருளிய பதிகம் கிடைத்திலது.

அன்பு நீடும் திருநீலநக்க நாயனாரின் பெரிய இல்லத்தில் விருந்து அமுது உண்டு, நல்ல நீர்மையுடன் பாடும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் உடன்தங்க அன்று அங்குப் பள்ளி அமர்ந்து, கூத்தியற்றும் இறைவரின் 'அயவந்தியினைப்' பணிவதற்கு, அன்பர்களுடனே சேர்ந்து சென்று, நாடிய நட்பையுடைய நீலநக்க நாயனாருடன் இறைவன் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
குறிப்புரை

குற்றம் அற்ற அரிய அமிழ்தத்தைப் போன்ற இறைவரை, அழகிய இளம் கொம்பைப் போன்ற அம்மையாருடன் வணங்கி ஏத்தி, பழைய மறைகளின் பொருள் விளங்க அரிய தமிழின் திருப்பதிகம் பாடுவார், மறைவழி ஒழுகும் திருநீலநக்கரின் பெருஞ் சிறப்புகள் விளங்க வைத்து, திருநீற்று நெறியைப் போற்றி வரும் தொண்டர்கள் போற்றுமாறு, தூய இயல் இசை உடைய பதிகத்தை அருளிச் செய்தார். இதுபொழுது அருளிய பதிகம் 'திருமலர்க் கொன்றை மாலை' (தி. 3 ப. 58) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். 'கோமளக் கொம்புடன் கூடக் கும்பிட்டேத்தி' என்றது, இப்பதிகப் பாடல் தொறும் வரும் முன்னிரண்டு அடிகளில் அம்மையுட னாதலைப் போற்றியிருக்கும் குறிப்பை உளங்கொண்டதாகும். 'நிறை யினால் நீலநக்கன் நெடுமா நகர் என்று தொண்டர் அறையும் ஊர் சாத்த மங்கை' எனவரும் திருக்கடைக் காப்பில் நீலநக்கர் சிறப்பிக்கப் பெறுகின்றார்.

பாலறா வாயரான திருஞானசம்பந்தர், பெருகிய அன்பு மிகுதியால் கோயிலின் வெளியே வந்து, அன்புடன் பொருந் திய நட்புக்கொண்ட திருநீலநக்க அடிகளின் விருப்புடைய ஆசையி னால் அங்குத் தங்கியிருந்த நாள்களில், பாம்பை அணிந்த இறைவரின் மற்றப் பதிகளையும் வணங்க எழுந்த அன்பினால், அவ்வப் பதிகளுக் கும் செல்வாராய், அறிவால் உள்ளத்தில் எழும் கருத்து ஒன்றேயான மனத்தையுடைய திருநீலநக்கரிடம் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுப் புறப்பட்டார்.
குறிப்புரை

பிள்ளையார், அந்நீலநக்கரின் பெருநட்பை மகிழ்ந்து மனத்துட் கொண்டு, நான்முகன், திருமால் என்பவர்க்கும் அரிய சிவபெருமானின் பதிகள் பலவும் சென்று வணங்கிப் போற்றி, இறைவரின் தொண்டர் கூட்டமானது உடன் சூழ்ந்து வரச்சென்று கற்றவர் வாழும் 'திருநாகைக் காரோணம்' என்ற பதியில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, இசையுடன் கூடிய சொல் நிறைந்த தமிழ் மாலை களைப் பாடிச் சிலநாள்கள் அங்குத் தங்கி, வணங்கி விடைபெற்று நீங்கினார். மருவுதானம் பற்பலவும் என்றது இறையான்சேரி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். எனினும் தெளி வாக எவையும் தெரிந்தில. திருநாகைக்காரோணத்தில் அருளிய பதிகங்கள்: 1. 'புனையும் விரி' : (தி. 1 ப. 84) - குறிஞ்சி 2. 'கூனல் திங்கள்' : (தி. 2 ப. 116) - செவ்வழி. இப்பாடற்கு முன்னும் பின்னும் உள்ள சந்தத்திற்கும் இப் பாடல் சந்தத்திற்கும் இடையறவு இருத்தல் கண்டு இதனை இடைச் செருகல் என்பர் சிவக்கவிமணியார். எனினும் இப்பாடலில் கடல்நாகைக் காரோணப் பெருமானை வணங்கினார் எனக் கூறி, அடுத்து வரும் பாடலில் 'அந்நாகைக்காரோணத்தினின்றும் நீங்கி' என வருதலின் பொருளியைபு காணத்தகும் இப்பாடலை இடைச் செருகலாகக் கொள்ள வேண்டுவது இல்லை என்றே தெரிகிறது.

உப்பங்கழிகள் நிறைந்த சோலைகளின் பக்கங் களில் உள்ள நாகப்பட்டினத்தை நீங்கிச் சென்று, கங்கையாற்றின் சுழிகளில் ஒலித்தல் பொருந்திய சடையையுடைய இறைவரின் பதிகள் பலவும் வணங்கிச் சென்று, மயில் போன்ற சாயலை உடைய மகளிரின் கண்கள் போன்ற கருங்குவளை மலர்கள் மலர்வதற்கு இடனான வயல்கள் சூழந்த திருக்கீழ்வேளூரில் வீற்றிருக்கும் இறைவரின் திரு வடிகளை வணங்கிப் போற்றி, அன்பு மிகுதியால் தமிழ்ப் பதிகங்க ளான மாலைகளைப் பாடி, அப்பழைய பதியினின்றும் புறப்பட்டார். பதிகள் பலவும் என்றது திருச்சிக்கல், திருக்கண்ணங் குடி, திருவாழியூர் முதலாயினவாகலாம். இப்பதிகளுள் திருச்சிக்க லுக்கு மட்டும் ஒருபதிகம் கிடைத்துள்ளது. அப்பதிகம் 'வானுலாவும் மதி' (தி. 2 ப. 8) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருக்கீழ்வேளூரில் அருளிய பதிகம் 'மின்னுலாவிய' (தி. 2 ப. 105) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பெருகிய ஞானத்தைப் பெற்ற பிள்ளையார், அருகிலுள்ள பதிகளில் எல்லாம் இறைவரை வணங்கிப் போற்றி, எழுந்தருளி வருகின்ற செய்தியைச் செவியேற்றுச் செல்வம் பொருந் திய திருச்செங்காட்டங்குடி என்ற பதியினின்றும், சிறுத்தொண்ட நாயனார், அங்கு ஓடிச் சென்று, அன்பால் உருகும் மனம் மகிழ்ச்சி மிக, எதிர் கொண்டு வரவேற்றுத் தம்பதியுள் அழைத்துக் கொண்டு சென்றார். அருகிலுள்ள பதிகள் எவை எனத் தெரிந்தில.

சிறுத்தொண்ட நாயனாருடன் கூடத் திருச்செங் காட்டங்குடிக்கு எழுந்தருளிச் சென்று, தம் சிறப்பை எண்திசையிலும் நிலை நிறுத்திவரும் பெருந்தொண்டரான அவருடைய நட்பை விரும்பி, உலகியல் இன்பங்களை எல்லாம் வெறுத்துத் துறந்து பிச்சை ஏற்ற உண்டியைத் துய்த்துவரும் மெய்த்தொண்டர்களுடனே சேர்ந்து, நீலகண்டத்தைத் தாம் தாங்கித் தேவர்களை உய்யுமாறு கொண்ட இறைவரின் 'கணபதீச்சரம்' என்ற கோயிலில், மறைப்பொருளை இசைப் பாடல்களாகப் பாடும் சம்பந்தர் சென்று அடைந்தார்.
குறிப்புரை

சென்றவர் கணபதியீச்சரக் கோயிலைச் சேர்ந்து, அதனை வலமாக வந்து, பாம்பை அணிந்த இறைவரின் திருவடிகளில் விழுந்து வணங்கிக் கண்களிலிருந்து கண்ணீர் அருவி இழிய, திரு முன்பு பணிந்து எழுந்து, சிவந்த கைகளைக் குவித்து வணங்கி, தம்மை ஆண்ட இறைவரைச் சிறுத்தொண்ட நாயனார் தொழுமாறு வீற்றிருந்த தன்மையைப் போற்றி, மேலும் மேலும் பொங்கி எழுகின்ற பதிகத்தைப் பாடிப் பரவி, அங்கிருந்து ஒருவாறாக அரிதின் நீங்கி வெளியே வந்தார். இதுபொழுது அருளிய பதிகங்கள் இரண்டாம். 1. 'பைங்கோட்டு மலர்ப் புன்னை' : (தி. 3 ப. 63) - பஞ்சமம் 2. 'நறை கொண்ட' : (தி. 1 ப. 61) - பழந்தக்கராகம்.

கோயிலினின்றும் வெளிப்போந்த பிள்ளையார், மாமாத்திரர் மரபில் அவதரித்த போர் ஏறு போன்ற சிறுத்தொண்ட நாயனாரின் இல்லத்தில் புகுந்து, மாதவம் வாய்ந்த அவர் மனத்தில் மகிழ்ச்சி பொங்க விரும்பி அங்குத் தங்கியிருப்ப, முப்புரங்களையும் எரித்த, திருமாலை ஊர்தியாகக் கொண்ட இறைவரின் கணபதீச் சரத்தைப் போற்றி மகிழும் அன்பு மேன்மேலும் மீதூரப் பூணூலை அணிந்த அழகிய மார்பினையுடைய பிள்ளையார், இன்பம் பெருக அங்கு அன்பர்களுடன் தங்கியிருந்த நாள்களில்,
குறிப்புரை

'திருமருகல்' என்ற நகரத்திற்கு எழுந்தருளிப் பிறைச் சந்திரனுடன் சிவந்த கண்களுடைய பாம்பு தங்குவதற்கு இடமான நீண்ட சடையையுடைய மாணிக்க வண்ண நாதரின் திருவடிகளை வணங்கிப் போற்றி, உருகிய அன்பு பெருகிய ஆசையானது உள்ளத்தில் பொருந்தி அலைக்க, தெளிந்த இசையுடன் பொருந்தப் பெருகும் தமிழ் மாலையைச் சார்த்தி, அப்பதியில் சீகாழித் தலைவர் எழுந்தருளியிருந்தார். இதுபோது அருளிய பதிகம் கிடைத்திலது. மாணிக்க வண்ணர் - இறைவரின் பெயர். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

அந்நாள்களில் வணிகன் ஒருவன் நடந்து செல்பவனாய்த் தன்னுடன் ஒரு கன்னிப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு செல்பவன், பொன்மலையான மேருவை வில்லாக உடைய சிவபெருமானின் கோயிலின் அருகில் உள்ள ஒரு மடத்தில் இரவில் தங்கி உறங்கும் போழ்தில், ஒளிபொருந்திய பற்களையுடைய பாம்பு அவனைத் தீண்டியதால், நஞ்சின் வேகமானது விரைவாய்த் தலை யில் ஏறிடத் தன் உயிர் நீங்கும் அவனுடைய நிலைமையைப் பார்த்து, அவனுடன் வந்த மென்மையான சாயலைக் கொண்ட இளங்கன்னி நிலை கலங்கித் தளர்ந்து சோர்பவளாய்,
குறிப்புரை

ஒளியுடைய பாம்பானது அவனைத் தீண்டவும், தான் தீண்டாதவளாகிய அப்பெண், தனக்கு ஆறுதல் கூறுவார் எவரும் இல்லாதவளாய், ஆண்சிங்கம் போன்ற அவ்வணிகனை அணுகிய நிலையில், அருகில் விழுந்து, அசைந்து வீழ்ந்த மலர்க்கொம்பைப் போல்வாள் ஆன அவள் புலம்பும் போது, வலிய இடியையும் பறவை மன்னனான கருடனையும் போன்ற மந்திரவாதிகள் எல்லாவகையான கொள்கையின் மூலமாகவும் தீர்க்க முயலவும், அந்நஞ்சு குறையா தாக, நீண்ட அவ்விரவில் விடியற்காலம் வரையிலும் மணமுடைய மாலைசூடிய நெறிந்த கூந்தலையுடைய அப்பெண், பெரிதும் தளர்ந்து புலம்புகின்றவள், தீண்டத் தகாதது பாம்பு, தீண்டும் உரிமையுடையவள் இவள். எனினும் அது தீண்டவும் தான் தீண்டாதிருந்தது மணமாகாத நிலையில் அவனைத் தீண்டல் தகாது எனும் பண்பாடு பற்றியாம். தீண்டாத நிலை மட்டும் அன்று, துன்பம் மீதூர்ந்த நிலையில் அவனை யன்றி ஒரு பற்றுக்கோடும் இல்லாத நிலையிலும் தளர்ந்து வீழ்ந்து அரற்றும் அவள். உடலின் மீதன்றி, அவனருகேயே வீழ்ந்து அரற்று கின்றாள். இவை எல்லாம் நினைந்து நினைந்து போற்றற்குரிய பண்பாடாகும். இவ்வரிய பண்பாடுகளையெல்லாம் நினைந்து இக்காலவுலகம் கடைப்பிடித்துப் போற்றத் திருவருள் முன்னின்றருள வேண்டுவோம். இடி, பாம்பு போன்றவற்றால் தாக்குண்டவர்கள், அவ்வத் துன்பங்களினின்றும் நீங்கவேண்டும் எனில், அவ்விடி, கருடன் போல்வதொரு வலிமையைப் பெறுதல் வேண்டும். மந்திர வலிமை யால் அத்தன்மைகளைப் பெற்றோர், அத்துன்பங்களை நீக்க இயலும், இதுபற்றி மாதவச் சிவஞானமுனிவர் உரைத்தருள்வதும் ஈண்டு நினைவு கொள்ளற்குரியதாம். கருட பாவனை யென்றது யாதெனிற் கூறுதும்: ஆதிபௌதிக கருடன், ஆதிதைவிக கருடன், ஆத்தியான்மிக கருடன் எனக் கருடன் மூன்று வகைப்படும். இவ்வாறு பொருள்தோறும் கண்டுகொள்க. அவற்றுள், உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபௌதிக கருடன். அதற்கு அதிதெய்வமாய் மாந்திரிகர் உள்ளத்தில் அது போல வைத்துத் தியானஞ்செய்து கணிக்கப்படும் மந்திரம் ஆதிதைவிக கருடன். அம் மந்திரத்தினிடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆத்தியான்மிக கருடனெனப்படும். அவற்றுள், ஈண்டுக் கருடன் என்றது கருடனுக்கதிதெய்வமாய் மாந்திரிகனுளத்திற் காணப் படும் மந்திரரூபமாகிய ஆதிதைவிக கருடனை. அதனைப் பாவித்த லாவது நாடோறும் பயின்று வந்த பயிற்சி விசேடத்தால் அம்மந்திர ரூபமே தானாக அநந்நிய பாவனை செய்து தன்னறிவு அதன் வசமாம்படி உறைத்து நிற்றல். அங்ஙனம் நின்று அம்மந்திரக் கண் கொண்டு பார்க்கவே, அஃது அவ் விடவேகத்தை மாற்றுதல் ஒருதலை யாதலின், அப்பாவனை ஈண்டைக்கு உவமையாயிற்று. இதனானே கருட பாவனை சத்தியமா மென்பதூஉம், அதனை அசத்திய மென்பார் மதம், போலியென்பதூஉம் தெற்றென உணர்க. புள், விலங்கு, மரம் முதலிய சராசரங்களுக்கெல்லாம் அதிதெய்வ மந்திரம் உளவென்பதூஉம், படிகம் போல அதுவதுவா மியல்புடைய ஆன்மா அவற்றுள் எவ்வெவ் மந்திரங்களைக் கணிப்பினும் அவ்வம் மந்திர சொரூபியாவான் என்பதூஉஞ் சர்வ ஞானோத்தர முதலியவற்றுட் காண்க. சிவஞானப் போதப் பேருரை; 9 - 2.

'அன்னையையும் தந்தையையும் பிரிந்து உன்னையே சார்வாய் அடைந்து உன்னுடனே வந்தேன், பாம்பு தீண்டப் பெற்று உயிர் நீங்க என்னை விட்டு அகன்றாய்! நான் என் செய்வேன்? இத் துன்பத்தைத் தீர்ப்பார் எவரும் இல்லையே! நிலை பெற்ற சிறப்பையுடைய வணிகர் குலமணியே! நானும் இனி வாழேன்!' என்று பலவாறாக வருந்தும் அப்பெண், தன் அறிவால், தலையில் இளம்பிறையை அணிந்த இறைவரின் திருக்கோயில் வாயில் திசையை நோக்கி, வேறு செயல் ஒன்றும் இல்லாதவளாய்க் கைகூப்பித் தொழுது அழுவாளாய், இரவெல்லாம் அழுதபோதும், மனித முயற்சியால் எத்துணையும் செய்தபொழுதும் துன்பம் நீங்கப் பெற்றிலாத சூழலில், இனி இறைவனே பற்றுக் கோடாவன்; அவன் எத்துன்பத்தையும் நீக்கவல்லன் எனக் கருதிக் கோயில் வாயிலைத் திசைநோக்கி அழுதாள். அவ்வாறழுததுவே 'அவள் மதியினால்' என்றார். பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்
பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்
சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்


'அடியவர்களாகிய தேவர்களின் கூட்டம் முழுதும் உய்யும் பொருட்டாய் அலைபொருந்திய பாற்கடலினி டத்துத் தோன்றிய நஞ்சையுண்டருளிய அமுதமே! சிவந்த கண் களையுடைய நீண்ட திருமாலும் நான்கு முகங்களையுடைய நான்முக னும் காணாத கோலம் உடைய நீலநிறமுடைய நச்சுப் பாம்புகளை அணியாய் அணிந்த விமலனே! வெந்து சாம்பலாகிவிட்ட காமனின் உயிரை அவன் மனைவியான இரதியின் வேண்டுதலுக்கு இணங்க மீண்டும் அளித்த புண்ணியனே! மலர்களின் மணம் மிக்க சோலைகள் எங்கும் சூழவுள்ள அழகுடைய திருமருகலில் வீற்றிருக்கும் இறை வனே! காப்பாயாக!' என்று கூறியவள் பின்னும், இறைவனை அழைத்துக் கூறும் இவ்வழைப்பு விண் ணப்பங்கள் ஆழமும் அருமையும் உடையன. அமரரும் அசுரரும் தத்தம் நலங்கருதி, வாசுகி என்ற பாம்பை வருத்தியதால் எழுந்தது அப்பெருவிடம். இங்கோ அடியவளாய யானும், முறைமையுடைய வனாய் ஏமாற்றப்பட்டவனுமாய என் தாய்மாமனின் வருத்தங்கண்டு, அதனை நீக்க விண்ணப்பித்துக் கொள்கின்ற தகவாகும். அந்நிலையில் அப்பெருமகனை நஞ்சுண்டது தகுமோ? அன்றியும் அங்கெழுந்ததோ அலைகடல்வாய் எழுந்த பெருவிடம். இங்கு ஏற்பட்டதோ ஒருசிறு பாம்பினால் ஏற்பட்ட விடம். அந்நிலையில் இந்நஞ்சை நீக்கலா காதோ? என்பாள், 'அடியாராம் இமையவர்தம் கூட்டம் உய்ய அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே' என்றாள். அந்நஞ்சு பாற்கடலில் தோன்றிய ஒருபெருவிடம் எனினும், அது வாசுகியாம் பாம்பால் ஏற்பட்ட விடமே யாகும். நீயோ அப்பாம்பையே அணிகலனாக அணிந்தவன். அந்நிலையில் இப்பாம்பினாலாய விடத்தை நீக்கல் ஆகாதோ என்பாள், 'நீல விட அரவு அணிந்த விமலா' என்றாள். அமரரும் அசுரரும் விடம் தாக்கும் முன்னமேயே காப்பாற்றப் பெற்றனர். நின்நிலை அதுவன்றே எனின், இரதி, தன் கணவன் வெந்து பொடியான பின்னும் அவள் வேண்ட, நீ உயிர் கொடுத்தவன். அந் நிலையில் உயிர்நீத்த எம்மாமன் உயிரையும் அளித்தருள இயலுமே என்பாள், 'வெந்து பொடியான காமன் உயிர் இரதி வேண்டப் புரிந் தளித்த புண்ணியனே!' என்றாள். நின்மகிழ்வு மட்டுமன்றி, நீ வீற்றிருக் கும் திருமருகலும் மணமும் மலரும் சூழ அழகு பொலிந்திருக்க, யான் மட்டும் அவலத்தில் அழுந்திநிற்பது அறமோ என்பாள், 'பொங்கர் வாசக் கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும் கவின் மருகற் பெருமானே! காவாய்' என்றாள்.

'உம்மிடம் வந்தடைந்த சிறு மறையவனான மார்க்கண்டேயனின் உயிர்மீது சினந்து வந்த இயமனின் பெரிய நஞ்சின் வடிவனைய சிவந்த கொடுங்கண்ணையும், வெண்மையான பற்களையும் கொண்ட கரிய கோலம் சிதைந்து உருளுமாறு உதைத் தருளிய சிவந்த திருவடியை யுடையவரே! இந்த நஞ்சின் கொடிய வேகம் நீங்குமாறும், நான் துன்பமான குழியினின்றும் மேல் ஏறுமாறும் பிறைச் சந்திரன் வளர்வதற்கு இடமான சிவந்த சடையை உடைய அழகிய மருகலில் வீற்றிருந்தருளும் பெருமானே! அருள் செய்வீராக! என்றாள். மேலும், நின் தலைவனின் உயிர் கவர்ந்தவன் இயமன். அவனோ என் ஆணைவழி நின்றே அச்செயலைச் செய்து வருகின்றவன். அந்நிலையில் அவனிடத்திருக்கும் உயிரை மீட்பது அறமோ? எனின், நீ முன்னொருகால், ஒரு சிறுமறையோன் (மார்க்கண்டேயன்) உயிர் நீங்கும் காலம் வர, நின் ஆணைவழி நிற்கும் அவ்இயமனே அவ் வுயிரைக் கவர வர, நீ முற்பட்டு நின் காலால் அவனை உதைத்தருளி, அச்சிறுமறையோனைக் காத்தது பலரறிந்த வரலாறன்றோ? அங்ஙன மாக என் தலைவன் உயிரையும் அவ்இயமன் வழிப்படாது மீட்டல் அறனுடையதாகாதோ? என்பாள், 'வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேற் சீறிவருங்காலன் பெருங்காலவலயம் போலும் செந்தறு கண் வெள்ளெயிற்றுக் கரிய கோலம் சிதைந்தருள உதைத்தருளுஞ் செய்யதாளா!' என்றாள். இவ்வாறெல்லாம் குறிப்பின் வேண்டும் பெறற்கருந் தொடர்களால் முறையிட்டுக் கொண்ட அப்பெண், இனி வெளிப்படையாகவும் தன் வேண்டுகோளை விண்ணப்பித்து அருள வேண்டுவாள், 'இந்தவிடக் கொடுவேகம் நீங்குமாறும் யான்இடுக் கண் குழியினின்றும் ஏறுமாறும், அந்திமதிக் குழவிவளர் செய்ய வேணி அணிமருகற் பெருமானே! அருளாய்!' என்றாள்.

இங்ஙனம் சிவபெருமானின், அருளையே எண்ணிய வண்ணமாய் வருந்தும் இளங்கொடியைப் போன்ற துவ ளும் இடைகொண்ட ஏழையான அம்மங்கையின் துன்பத்தின் வயப்பட்ட முறையீடு, எம் இறைவரான சீகாழி ஆண்டகையார் இறை வரைக் கும்பிடும் பொருட்டு வந்து சேர்கின்றவரின் மெய்த்தன்மை யுடைய செவிகளில் சேரப் பொருந்தவும், திருவுள்ளத்தில் கருணை மிகக் கொண்டு, அன்னப் பறவை போன்று வருந்துகின்றவள் பக்கத் தில், அடியார்கள் சூழ்ந்து வர எழுந்தருளி வந்தார். இவ் ஆறு பாடல்களும் ஒருமுடிபின.

சீகாழியில் தோன்றிய அந்தணரான பிள்ளை யார், அப்பெண்ணின் அருகே சென்று, சிவபெருமானின் அருளையே எண்ணித் துன்புற்று அத்திருவருளையே நினைந்து போற்றும் அப் பெண்ணை நோக்கி, 'நீ அஞ்ச வேண்டா! உன் துன்பத்தையும் அதற் குரிய சூழலையும் கூறுவாயாக!' என்று கேட்க, கையாகிய மலர்களைத் தலைமீது குவித்து வணங்கிக் கண்களினின்று நீர் அருவி சொரிந்து வழியச் சீகாழியிலிருந்து வந்த அந்தணரின் சேவடியில் விழுந்து வணங்கி, தாங்கள் அங்கு வந்த வரலாற்றையும் அத்துன்பம் புகுந்தவாற்றையும் கூறுவாளாயினாள்,
குறிப்புரை

வளம் சூழ்ந்த வைப்பூரின் தலைவரான 'தாமன்' என் தந்தையாவான். இவன் அவனுடைய மருமகன். என் தந்தைக்கு இளம்பிடி போன்ற ஏழு பெண் மக்கள். அவ்வேழு பெண்களில் மூத்த வளை இவனுக்கு மணம் செய்வதென்று சொல்லி, அயலவனிடம் இருந்து நிறையப் பணம் பெற்றுக் கொண்டு, அயலவனுக்கு மணம் செய்து தந்து, அதன் பின்னரும் ஒவ்வொருவராய் என்னைத் தவிர மற்றப் பெண்கள் ஐவரையும் அங்ஙனமே மணம் செய்து தந்து விட்டான். மனம் தளர்ந்து வருந்தும் இவனுக்காக அன்பு பூண்டு அங்கு அவர்களை விட்டு நீங்கி இவனையே சார்பாகக் கொண்டு நான் வந்தேன்,
குறிப்புரை

'என்னுடன் வந்த இவனும் கொல்லுதலை யுடைய பாம்பு தீண்டப் பெற்று இறந்தான். மடிந்து விழும் அலை களையுடைய கடலின் நடுவில் கப்பல் கவிழ்ந்தது போல் நிற்கின்றேன். என் உறவினர்போல் தோன்றி என்னிடம் உற்ற துன்பங்கள் எல்லாம் நீங்குமாறு அருள் செய்தீர்!' எனக் கூறினாள். கற்றவர்கள் வணங்கிப் போற்றும் காழித் தலைவரான பிள்ளையார், அருள் மிக்கதனால் அப்பெண்ணுக்கு நல்குமாறு, தீண்டிய பாம்பின் நஞ்சு தீருமாறு வயல்கள் சூழ்ந்த திருமருகல் இறைவரைப் பாடலானார்.
குறிப்புரை

சடையை உடையவரை, எல்லா உயிர்களுக்கும் தாயானவராகிய சங்கரரை, பிறைச் சந்திரன் தங்கும் முடி உடைய வரை, ஆனேற்றை ஊர்தியாக உடையவரை, வேதியரை, திருவெண் ணீற்றை உடையவரை, பகைவரின் முப்புரங்கள் எரியுமாறு அழித்த படைக்கலமுடையவரை, தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனும், பாம்பணையில் துயிலும் திருமாலும் போற்றுகின்ற கோலம் உடைய வரை, திருவாயால் அழைத்து, 'பெருமானே! இந்த ஒளி பொருந்திய அணிகளை அணிந்த பெண்ணின் உள்ளம் மெலிவதான துன்பம் உனக்குத் தகுதியாமோ?' என்று தொடங்கிப் பாடினார். இவ்வமைப்பில் அருளிய பதிகம் 'சடையாய் எனு மால்' (தி. 2 ப. 18) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்ததாகும். இப்பதிகத்தில் வரும் ஒவ்வொரு தொடரும் கருத்துடை அடை மொழியாய் நின்று, அப்பெண்ணின் துயரத்தையும், அதனை அகற் றுதற்குரிய குறிப்பையும் கொண்டு நிற்கின்றன. முதற்பாடலின் நான்காவது அடியையே இங்கு எடுத்து மொழிந்துள்ளார்.

அவ்வளவில், வணிகன் நஞ்சு நீங்கப்பெற்று எழுந்து நின்றான். சூழ இருந்த ஒப்பில்லாத அடியவர்களின் கூட்டம் மிகுந்த மகிழ்வொலி செய்தது. கைகளை உச்சிமீது குவித்துக் கொண்டு அங்கு அருளுடைய பிள்ளையாரின் திருவடிகளில் வீழ்ந்த நங்கை யான அப்பெண்ணை, அன்பு செய்த நம்பியான அந்த வணிகனோ டும் இவ்வுலகத்தில் இன்பம் பொருந்தி வாழுமாறு, மேகம் தவழும் சோலை மிகச் சூழ்ந்த சீகாழித் தலைவர், மணம் புணர்கின்ற பெரு வாழ்வைச் செய்து இல்வாழ்வில் இயைவித்தார். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

வணிகனுக்கும் அப்பெண்ணுக்கும் விடைதந்து, சீகாழித் தலைவர், திருமருகலில் தங்கி இருக்கும் நாள்களில் வலிய ஆணவ மலத் திண்மையினை அழித்த புகழுடைய சிறுத்தொண்ட நாயனார், திருமருகல் நகரில் வந்து வேண்டிக் கொள்ள, மீண்டும் பிள்ளையார் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளுவதற்கான, மேன் மேலும் தொடர்ந்து எழுகின்ற பெருவிருப்புமிக, இறைவரின் திருவருளைப் பெற எண்ணி, சூழ்ந்திடும் அடியார் கூட்டத்தோடும் திருக்கோயிலை அடைந்து, ஒளியுடைய மழுப் படையை உடைய இறைவரின் திருவடிகளைத் தொழுவதற்காக உள்ளே புகுந்தார். வலிய பாசம் - ஆணவ மலம்; மலக்கல் என உரு வகிப்பதும் காண்க. அதனை யழித்த புகழாவது சிறுத்தொண்டர் என அழைக்கப் பெற்றமையாகும். 'மேதகையார் அவர்முன்பு மிகச் சிறிய ராய் அடைந்தார், ஆதலினால் சிறுத்தொண்டர் எனத் திகழ்ந்தார் அவனியின் மேல்' (தி. 12 சிறுத். 15) எனப் பின்னர் அருள இருப்பதும் காண்க.

கோயிலுக்குள் புகுந்து வணங்கிப் போற்றுகின்ற பிள்ளையார், பொங்கும் அலைகளையுடைய நீர் நிறைந்த கங்கையும் பிறைச் சந்திரனும் கூடிய சிவந்த சடையான மகுடமுடைய திரு வெண்ணீற்றை அணிந்த இறைவரின் திருமேனி ஒருபாகம் பசுமை யாக, நஞ்சு விளங்கும் கழுத்தையுடைய இறைவர், திருமருகல் கோயி லில் எழுந்தருளியிருந்த நிலைமையினை உள்ளத்தில் எண்ணிக் கொண்டு வணங்குவாராக அவர் முன்பு, கையில் தீயையுடைய இறைவர், கணபதீச்சரத்தில் பொருந்திய காட்சியை இங்குத் தந்தருளும் பொருட்டுக் காட்டியருளக் கண்டார். 'ஒருபாகம் பசுமையாக' என்றது அம்மையாரை இடனாகக் கொண்டிருப்பது பற்றியாம். திருமருகலில் வணங்குவாருக் குத் திருச்செங்காட்டாங்குடியில் வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைக் காட்டியது, அவரை அங்கு வருமாறு அருளிய திருக்குறிப்பாகும்.

திருமருகலில் விரும்பி நிறைந்த கோலமானது, பொருந்திய திருச்செங்காட்டங்குடியில் நிலைபெற்றுக் காணத்தகும் கணபதீச்சரத்தாரின் பெருமையுடைய கோலமேயாகித் தோன்ற, உள் ளம் உருகுவதால் உள்ளதான காதல் மேன்மேலும் பொங்கவும், உலகத் தார்க்கு அறிவுறுத்தும் கருணை உணர்வு நீடவும், கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் அருவி போல வடிய, 'அங்கமும் வேதமும்' எனத் தொடங்கிப் பாடுவாராய், இத்தொடக்கமுடைய பதிகம் நட்டபாடைப் பண்ணில மைந்த பதிகமாகும் (தி. 1 ப. 6). பாடல்தொறும், 'கணபதியீச்சரம் காமுறவே, மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்' என வருவதே இவ்வகையில் ஆசிரியர் கூறுதற்குக் காரணமாயிற்று. 'மைந்த சொல் லாய்' எனப் பதிகம் முழுதும் அமைந்திருத்தலின் வினாவுரைப் பதிகமாயிற்று.

அவ்வகையில் தோன்றப் பார்த்து, நேரே போற்றி, இவ்வாறு அருளுதற்குக் காரணம் என்ன? என வினவிய கருத்துப்படப் பாடி, கணபதீச்சரத்தில் விரும்பி எழுந்தருளியிருக்கும் தேவதேவரைச் சென்று வணங்கி, அத்திருச்செங்காட்டங்குடியில் சில நாள்கள் தங்கிப் போற்றித் தொண்டர்களுடன் விடைபெற்று, அப் பழைய பதியை நீங்கி, தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த வயல்களை யுடைய பூம்புகலூரினைச் சென்று வணங்குதற்கு எழுந்தருளுவாராகி,
குறிப்புரை

சீர்மை மிகுந்த சிறப்புடைய சிறுத்தொண்டர் நட்பின் பிணிப்பால் தம்மோடு வர, நல்ல தேன் பொருந்திய மணம் உடைய மாலையைச் சூடிய அந்நாயனாரும் விடைகொடுக்கப் பெற் றுத் தம் நகருக்குத் திரும்பிய பின்பு, கங்கை பொருந்திய சடையை யுடைய இறைவர் எழுந்தருளியிருக்கும் பல பதிகளையும் பணிந்து சென்று பிள்ளையார், உலகில் பெருகி நிறைந்த செல்வம் மிக்க புகலூர் நகரின் அருகணைந்தார். 'விடையருளப் பெற்று' என்றார், சிறுத்தொண்டருக்கு உடன் வரும் விருப்பே மீதூர்ந்திருந்தமை தோன்ற. பதிகள் பல என்பன, திருஇராமனதீச்சரம், திருப்பனையூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இராமனதீச்சரப் பதிகம் ஒன்றேயுள்ளது. அது 'சங்கொளிர்' (தி. 1 ப. 115) எனத் தொடங்கும் வியாழக்குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

திருப்புகலூரில் வாழ்கின்ற தொண்டர்களுடன் கூடிச் செம்மை மிக்க முருக நாயனார், மெய்ம்மை மிக்க விருப்பத் துடன் நகரின் வெளியே வந்து தம்மை எதிர்கொண்டு வரவேற்க, நகரத்தின் உள்ளே வந்து, மறைகளை ஓதாதுணர்ந்த ஞானசம்பந்தர், அவற்றையருளிய முதல்வரான சிவபெருமானின் கோயிலை அடைந்து, மலைபோன்ற கோபுரத்துள் புகுந்து, அழகிய திருமுன்றி லின் அருகே வலமாக வந்து, ஒன்றுபட்ட உள்ளத்துடன் கோயிலுக் குள் புகுந்தார். செம்மை முருகனார் - திருநின்ற செம்மையே செம்மை யாகக் கொண்ட முருகனார்.

கோயிலுக்குள் புகுந்து இறைவரின் திருமுன்பு வணங்கி, நிலத்தில் விழுந்து எழுந்து, பூம்புகலூரில் நிலைபெற எழுந்தருளியிருக்கும் புண்ணியரான சிவபெருமானை நெகிழ்ந்து உருகும் உள்ளத்தில் அன்பானது பெருக, மலர்க் கண்களில் நிறைந்த நீர், அருவிபோல் வடிய, சொற் சுவையானும், பொருள் திறத்தானும் மிக்க தமிழ்த் திருப்பதிகத்தைப் பொருந்திய ஏழிசையுடன் பாடி, வெளியே வந்து, எண் திசையிலும் நிறையும் சிறப்பையுடைய முருக நாயனார் முன்னே அழைத்துச் செல்ல அவரது திருமடத்தில் சம்பந்தர் சென்று சேர்ந்தார். இப்பதியில் அருளிய பதிகம் 'வெங்கள் விட்டு' (தி. 2 ப. 115) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

அத்திருமடத்தில் பிள்ளையார், அவர் வழிபட்டு விருந்தேற்கும் சிறப்பைப் பெற்றுத் தங்கியிருக்கும் நாள்களில், வளைத்த மலையான வில்லையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந் தருளுகின்ற வர்த்தமானீச்சரத்தை வணங்கி, பெருகிய அன்பினால் முருகநாயனார் அங்குச் செய்துவருகின்ற உயர்ந்த தொண்டைச் சிறப்பித்துப் பாராட்டி, ஓங்கிய பண்பையுடைய வளமான தமிழ்ப் பதிகத்தைப் பாடி, சிவபெருமான் திருவடிகளை வணங்கி மகிழ்ந் திருந்தார். வர்த்தமானீச்சரம் - திருப்புகலூர்த் திருக்கோயிலில் உள்ள தனிக்கோயில். இவ்விடத்து அருளிய பதிகம் 'பட்டம் பால்நிற' (தி. 2 ப. 92) எனத் தொடங்கும் பியந்தைக் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். 'குறிப்பறி முருகன் செய்கோலம்' (3) 'முருகன் முப்போதும் செய்முடிமேல் வாசமாமலருடையார்' (5) என இப்பதிகத்து முருக நாயனார் இருமுறை பாராட்டப் பெறுகிறார்.

அப்பதியில் பிள்ளையார் தங்கியிருக்கும் நாள்களில், திருநாவுக்கரசர் புற்றிடங்கொண்ட இறைவரை வணங்கி, அழகிய மதில்களையுடைய திருவாரூரைப் புகழ்ந்து போற்றி, சிறிய இடையையும், பொன்னாலான அணியையும் உடைய உமையம்மை யாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவர் வீற்றிருக்கின்ற திருப்புகலூ ரைச் சென்று வணங்க உள்ளம் கொண்டு, இறைவரின் திருவருள் பெற்ற தொண்டர் கூட்டத்துடன் அவ்வூரை அணுக வந்தார்.
குறிப்புரை

திருநாவுக்கரசர் அப்பதிக்கு வருகின்றார் என்ற நல்ல திருவார்த்தையைக் கேட்டபொழுதே, ஆனேற்று ஊர்தியை யுடைய சிவபெருமானின் மகனாரான திருஞானசம்பந்தர், தம் உள்ளத்தில் அன்பு பொங்கிய ஆசை மிகுதியால் விரைவாய் எதிர் கொள்ளும் பொருட்டு மெய்யன்பர்களுடனே மலர்களால் நிறைந்து விளங்குகின்ற வாவிகள் சூழ்ந்த திருப்புகலூரின் நகர்ப்புறத்து எல் லையைக் கடந்து சென்றார். புறம்பணை - நகர்ப்புறத்திருக்கும் பகுதிகள்.

சிவபெருமானின் திருவாரூரை வணங்கிவந்த திருநாவுக்கரசரும் எதிரில் வந்து சேர, மணம் கமழும் நீர் நிறைந்த சீகாழியில் தோன்றிய அந்தணர்களின் தலைவரான திருஞானசம்பந் தரும் அணிதிகழக் கூடி, ஒருவருக்கொருவர் தம் அன்பின் முறைமை யால் எதிர்கொண்டு தாழ்ந்து வணங்கி, அவரவரும் தனித் தனியே மங்கலம் பொருந்திய நல்வரவின் மெய்ம்மையான நிகழ்ச்சியினைக் கேட்டு மகிழ்ந்தபோது,
குறிப்புரை

மெய்ம்மையின் வடிவான திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரை நோக்கி, 'விருப்பினால் அப்பராகிய தங்களை இங்கு வந்து அணையப் பெறுவதான பேற்றினைப் பெற்றோம். அழகிய குளிர்ச்சியையுடைய திருவாரூரினை வணங்கிவந்த பான் மையை அருள வேண்டும்' என்று கேட்டருள, எல்லையில்லாத பெருந்தவத் தையுடைய திருநாவுக்கரசர் அதற்கு விடையாகக் கூறியருளிய வள மான தமிழ்மாலைத் திருப்பதிகத்தினால் திருவாரூரில் திருவாதிரைத் திருவிழா நிகழும் சிறப்புச் செய்தியை எடுத்துக் கூறினார். நாவரசர் இது பொழுது அருளிய பதிகம், 'முத்து விதானம்' (தி. 4 ப. 21) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். கி. பி. ஏழாம் நூற்றாண்டிலேயே திருவாரூரில் திருவா திரைப் பெருவிழா நிகழ்ந்து வந்த சிறப்புச் செய்தியை, இப்பதிக வழி நன்கு அறியலாம். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

திருநாவுக்கரசரும் திருப்பதிகத்தால் விடை கூறி யதைக் கேட்ட அப்பொழுதே அவ்விடத்தில், திருவருளால் ஞானவ முது உண்டருளிய சீகாழித் தலைவரான பிள்ளையாரும், தென்திரு வாரூரையடைந்து வணங்குதற்கு மனத்திலுண்டான காதலால் அங்குச் சென்று போற்றி மீண்டும் வந்து உம்மைக் கூடுவன் என்று, வலிய கடலைக் கல்லான மிதவையால் கடந்து வந்த அரசர் பெருமகனார் இடத்துச் சொல்லி, அவரது உடன்பாட்டைப் பெற்று விரைந்து சென் றருளினார்.
குறிப்புரை

திருநாவுக்கரசரும் சீகாழிப் பதியில் தோன்றிய பெருந்தகையாரான சம்பந்தரின் பின்னால் தம் காதல் தொடர்ந்து செல்லத் திருப்புகலூரில் தொழுவதற்குச் சென்று சேர்ந்தார். சீகாழித் தலைவரான பிள்ளையாரும் இடைவிடாத நினைவுடைய மனத்துடன் திருவிற்குடி வீரட்டானத்தை அடைந்து, ஆனேற்றூர்தியையுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கிய பின்பு, பற்பல ஆயிரம் தொண்டர்களுடனே 'பாடலன்நா மறை' (தி. 1 ப. 104) எனத் தொடங் கும் பதிகத்தைப் பாடியவாறு திருவாரூரை நோக்கிச் சென்றார். பிள்ளையார் விடைபெற்றுச் சென்றதும், நாவரசரின் மனம் அவர்பின் தொடர, அவர் திருப்புகலூர் தொழச் சென்றார். பிள்ளையாரிடத்தும் பெருமானிடத்தும் அரசர் கொண்டிருந்த அன்பு மீதூர்வை விளக்கியவாறு. திருவிற்குடி வீரட்டத்தில் அருளிய பதிகம் 'வடிகொள் மேனியர்' (தி. 2 ப. 108)எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருவாரூர்ப் பெருமானை நினைந்து 'பாடலன் நான் மறை' (தி. 1 ப. 104)எனத் தொடங்கும் வியாழக்குறிஞ் சிப் பண்ணிலமைந்த திருப்பதிகத்தைப் பாடியவாறே சென்றருளினார். 'வெள்ளேற்றான் மேய அள்ளலகன் கழனி ஆரூர் அடைவோமே' என இப்பதிகத்து வரும் மூன்றாவது பாடற் கருத்தை யுளங்கொண்டே ஆசிரியர் இப்பதிகத்தைப் பாடியவாறே திருவாரூர்த் தொழப் போந் தார் என்றருளினார். இதனை வரும் பாடலில் அவரே விளக்குமாற் றானும் அறியலாம்.

மலர்க்கொத்துகளையுடைய சோலைகளையும், நெல்லை வேலியெனக் கொண்ட நீர்த் துறைகளையுடைய வயல்களை யும், மணம் பொருந்திய கரும்புக் காடுகளையும் ஞானமுண்ட பிள் ளையார், இரு மருங்கும் கண்டு மகிழ்ந்து, அணைபவராய் 'அள்ள லகன் கழனியாரூர் அடைவோமே' எனக் கூறி, அன்பு மேன்மேல் பொங்க இசையுடன் கூடிய செந்தமிழ்ப் பதிகத்தால் போற்றி, அழகிய மதிலையுடைய திருவாரூரின் புறத்தே அடைந்தார்.
குறிப்புரை

வானத்தே உயரச் செல்கின்ற சிவந்த கதிர் களையுடைய ஞாயிற்று மண்டலத்தின் பக்கத்தில் அணையும் நீண்ட கொடிகள் பொருந்திய திருவாரூர் நகர், ஒருபொன் உலகு என்ன விளங்கக் கண்டு, சீகாழியில் தோன்றிய பால் போன்ற வெண்மையான திருநீற்றினை அணிந்த சம்பந்தர், 'பருக்கையானை' எனத் தொடங் கும் திருப்பதிகத் தமிழ் இசையினைப் பாடியும் ஆடியும் சென்று, தேனுடன் வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த அப்பதியின் எல்லையை அடைந்தார். திருவாரூர்த் திருநகரின் ஒளியைக் கண்ட பிள்ளையார் 'பருக்கையானை' (தி. 2 ப. 101) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகத்தைப் பாடியருளினர். இப்பதிக முதற்பாடலில் 'அருக்கன் மண்டலத் தணாவும் அந்தண்ஆரூர்' (தி. 2 ப. 101 பா. 1) எனப் பிள்ளையார் அருளிய குறிப்பை உளங்கொண்டே ஆசிரியர் சேக்கிழாரும், இப்பாடலை அருளிச் செய்வாராயினர். தேனீ - ஈக்க ளில் ஒரு வகை; தேன் எடுப்பதால் தேன்+ஈ = தேனீ.

உள்ளத்தினின்றும் பெருகிய பெருங்காதலாகிய வெள்ளத்தைச் சொரிந்து நிலவுலகத்தின் மீது விளங்குவதைப் போன்று எல்லாப் பக்கமும் குளிர்ந்த ஒளியை வீசும் முத்துப் பல்லக்கினின்றும் இறங்கி, தமிழ் வல்லுநரான பிள்ளையார், சிவந்த திருக்கைகளில் நிறைய மலர்களைக் கொண்டு தூவி வழிபட்டு உய்யுமாறு ஆற்றுப் படுத்தும் திருவிருக்குக்குறட் பதிகத்தைப் பாடி வணங்கி, தம் பெரு மான் ஆட்சி செய்கின்ற திருவாரூர் நகரைப் பணிந்தார். இதுபொழுது அருளிய திருவிருக்குக்குறட் பதிகம் 'சித்தம் தெளிவீர்காள்' (தி. 1 ப. 91) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். ஆரூரை மலர்தூவி வழிபடல் வேண்டும் என்னும் குறிப்பை, இப்பதிகத்தின் 1, 3, 5, 6, 7 ஆகிய பாடல்களில் அருளுகின்றார். இத னையுளங் கொண்டே ஆசிரியர் சேக்கிழாரும் 'நிறைமலர் கொண்டு தூவிப். . . பாடி. . . பணிவுற்றார் தமிழ்விரகர்' என்றருளுவாராயினர்.

ஒப்பில்லாத ஞான அமுதத்தை உண்ட சம்பந்தரைப் பணிவதற்காக அடியவர்கள் சென்று எதிர்கொள்ள எழுந்தருளும் அந்நாளில், வடித்தலைக் கொண்ட சூலத்தையுடைய இறைவர் நிலையாய் எழுந்தருளிய பொன்மதிலைக் கொண்ட திரு வாரூரின் ஒளி பொருந்திய அணிநலன்களை முழுமையாகக் காண வல்லவர் யாவர்? ஒருவரும் இலர். காழிப் பிள்ளையாரின் வருகையறிந்த ஆரூர் அடிய வர்கள், அந்நகரை அணி செய்து புனைவித்த பாங்கை யாவரே முழு மையாகக் காணவல்லார்? என்பதால், அந்நகரைத் தோள் கண்டார் தோளே கண்டார் என்புழிப் போல, தாம் தாமும் ஒவ்வொரு பகுதி யைக் கண்டு மகிழ இயலுமேயன்றி முழுமையாகக் கண்டு மகிழ இயலாது என்பதாம்.

புனுகும் கத்தூரியும் கலந்த குளிர்ந்த பெருஞ் சேற்றில் உயர்ந்த பொன்னைப் போன்ற தூய சுண்ணப் பொடிகளைத் தூவுவதால், ஒளி பொருந்த அணிசெய்யப்பட்ட அத்தெருக்கள், அடி வழுக்குமாறு அந்தச் சேறும் துகளும் கரைந்து போக, வானத்தினின்று விழும் மழை போல் பூக்களிலிருந்து தேன்மாரி பொழிந்தது. நறுமணக் கலவைகளைத் தெளித்தலும், அவற்றின்மீது சுண்ணம் தெளித்தலும், வீதிகளை அழகுபடுத்தவாம். எனினும் அவ் வழிதொறும் செல்வோர்க்கு வழுக்குதலை ஏற்படுத்த, அச்சேறு கரைய மலர்களிலிருந்து தேன்மழை பொழிகின்றதாம்.

மாடங்கள், மாளிகைகள் மண்டபங்கள் ஆகிய இவற்றின் பக்கங்கள் எல்லாம், துணிக் கொடிகளும், அழகான கூந்த லையுடைய பெண் கொடிகளும் ஆடலில் நீடுவன, வண்டுகளும், பொன் குடங்களும் மலர் இதழ்களில் சூழ்வன, வாழைகளும் தோர ணங்களும் வரிசையான பாக்குகளும் காட்டைப் போன்ற காட்சியுடன் விளங்குவன. 'ஆடலில் நீடுவன' என்றது துணிக் கொடிகளும் ஆட லில் தவிர்வனவாயில்லை; பெண்கொடிகளும் தம் ஆடலில் தவிர் பவராய் இல்லை என்பதை விளக்குகின்றன. பொற்குடங்களில் மலர்கள் வைக்கப்பட்டிருத்தல் எதிர்கொள்வதற்குரிய மங்கலப் பொருள்களில் ஒன்றாக இருத்தல் பற்றியாம்.

அத்தகைய பக்கங்களைச் சூழ்ந்த புறவாயில் களில், மாலைப் பொழுதில், மணிகளையுடைய வரிசையாய்த் தொங்க விடப்பட்ட விளக்குகளின் அழகிய நீண்ட சுடர் ஒளியுடன் தொடர்பு படுமாறு கோவை செய்து இடையிடையே தொங்கவிடப்பட்ட பெரிய நீலமணிகளின் நிழலானது கூடி அலைத்தலால், பவள நிறமுடைய திண்ணைகளின் மேல் உள்ள பூம்பந்தல்களின் செந்நிறம் கருமை நிறத்தையுடையனவாய் ஆயின. திண்ணைகளின் செந்நிறத்தை, அங்குத் தொங்கவிடப் பட்டிருக்கும் மணிகளின் ஒளி கருமைப்படக் கலக்கின்றது என்பது கருத்து. புகர் - கருநிறம்.

தழைத்த பூம்பொய்கைகளும், சாலைகளும், தெற்றிகளும், சதுக்கங்களும், காதணிகளை அணிந்த பெண்கள் ஆடும் அரங்குகளும், தேவர் கூட்டமும் விரும்பும் சிறப்புடைய அகன்ற இடங்களும் ஆகிய எவ்விடங்களிலும் நெருங்கி மழை ஒலிபோல மங்கல இயங்கள் இயம்பின.
குறிப்புரை

மேல் கூறப்பட்டவாறு பொருந்திய வெவ்வேறு வகைப்பட்ட இத்தகைய பேரணிகலன்கள் விளங்கும், தேனையுடைய மென்மையான மலர்கள் நிறைந்த பூஞ்சோலைகளின் பெருமையைக் கொண்ட திருவாரூரில், அரசாளும் தியாகராசப் பெருமான் திருவரு ளால் அடியவர் கூட்டமும் மற்ற மக்களும் நகரத்தின் வெளியே வந்து அணைந்து பிள்ளையாரை எதிர்கொள்கின்ற அளவில். பரிசனங்கள் - அடியவர்களைச் சார்ந்து பணிபுரிந்து வரும் நகர மக்கள்.

தம் எதிரே வணங்கும் மெய்த்தொண்டர் கூட்டத் தின் முன்னம் தாமும் எதிர் வணங்கி; சந்தமுடைய முத்தமிழ் வல்லுநர் ஆன சீகாழித் தலைவர், 'அந்தமாயுல காதியாம்' எனத் தொடங்கு கின்ற திருப்பதிகத்தை அங்குத் தொடங்கி, 'எம்பெருமானார்தாம் என்னை ஏற்றுக் கொள்வாரோ?' என்ற கருத்துடன் பாடி நிறைவு செய்தார். 'அந்தமாயுல காதியாம்' (தி. 3 ப. 45) எனத் தொடங்கும் பதிகம் கௌசிகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

அத்திருப்பதிகத்தைப் பாடி வந்து சேருகின்ற ஞானவித்தகரான பிள்ளையார், மெய்யடியார்கள் தம்மைச் சூழ்ந்து வரவும், அத்திருவாரூர் நகர மக்கள் தூய்மையான மணமுடைய சுண்ணப் பொடியையும், மலர்களையும் பொரியினையும் தூவித் தொழுது வணங்கவும், இவ்வாறு நகரத் தெருக்களைக் கடந்து சென்று தேவர் தலைவரான சிவபெருமானின் கோயில் வாயிலை அடைந்தார்.
குறிப்புரை

தோரணங்கள் நிலைபெற அமைக்கப்பட்டு விளங்கும் வாயிலின் முன்பு வணங்கிக் கோயிலுக்குள் புகுந்தவரான பிள்ளையார், தனக்குள் எல்லா வகையான பெருமையும் கொண்ட நீண்ட ஒளி வரிசையின் பரப்பினைக் கண்டு, தலை வணங்கித் தேவா சிரிய மண்டபத்தை வணங்கினார். இங்குக் குறிக்கப் பெற்ற ஒளி சிவஒளியாகும். ஞானம் உண்ட பெரும் பேற்றால் இவ்வொளி அவருக்குத் தோன்றலாயிற்று.

அம்மண்டபத்தின் அருகே, சுற்றிலும் சூழ்ந்த திருமாளிகையை வலங்கொண்டு வந்து வணங்கிக் கூடும் அன்பு மிகுதியால் கோபுரத்தைப் பணிந்து கைகூப்பித் தொழுது, தம்மைத் தேடிய திருமாலுக்கும், நான்முகனுக்கும் அறிதற்கு அரிய செழுமை யான மணிப்புற்றுள் இடம் கொண்டு நிலையாக எழுந்தருளியுள்ள இறைவரைப் பன்முறையும் நிலத்தில் விழுந்து வணங்கினார்.
குறிப்புரை

பணிந்து விழுந்தார்; பதைத்தார்; உடல் முழுதும் மயிர்க்கூச்செறியப் பரவிய நிலையில் ஆடினார்; பாடினார் தம் அறிவினுள்ளே தெளிவாகக் கண்டு கொண்டிருந்த மெய்ப் பொரு ளான சிவபெருமானை வெளியேயும் பார்த்துப் போற்றுபவராய்த் தம் உள்ளத்துள் விரைந்து எழும் விருப்புடன் வணங்கினார்.
குறிப்புரை

செஞ்சொல்லாலான வண்தமிழ்ப் பதிகத்தைத் தொடங்கி, நஞ்சை அமுதமாய் ஆக்கிய இறைவர் திருமுன்பு போற்றி, மேகங்கள் சூழ்கின்ற மாளிகையின் வாயில் பக்கத்தை அடைந்து, திரு வைந்தெழுத்தின் மெய்ப்பொருளை உணர்ந்தவரான பிள்ளையார் திருமடத்தைச் சேர்ந்தார். இவ்வரிய திருப்பதிகம் கிடைத்திலது.

அத்திருமடத்தில் தங்கியிருந்த பிள்ளையார் 'திருஆரூர்அரனெறி' என்ற கோயிலில் விரும்பி எழுந்தருளியுள்ள சிவந்த கண்களையுடைய ஆனேற்று ஊர்தியை உடைய இறைவரின் சேவடிகளை வணங்கித் திளைத்து, பெருகும் பேரொளியை உடைய புற்றிடங்கொண்ட பெருமானின் தூய்மையான தாமரை போன்ற திருவடிமலர்களைக் காலந்தோறும் தொழுதுவந்தார். திருவாரூர் அரனெறியில் அருளிய பதிகம் கிடைத்திலது.

புற்றிடங்கொண்டருளும் தூயவரான இறைவ ரைப் பணிந்து போற்றி இசைபெருகுமாறு பற்றும் அன்புடனே வணங்கி, இனிய இசையால் திருப்பதிகங்களைப் பாடி நல்ல தவத் தினை மேற்கொண்ட தொண்டர்களுடன், நன்மை சிறந்து ஓங்குமாறு, அவ்வளமுடைய பதியில் தங்கியிருக்கும் நாள்களில், இதுபொழுது அருளிய பதிகங்கள் எவையும் கிடைத்தில. 'ளொடுநலம்' என்பது 'ளுடன்நலம்' என்றும் பாடம்.

உலகின் துன்பங்களைத் தீர்க்க வந்த பிள்ளை யார், திருவருள் செழிப்பால் சிறந்த 'திருவலிவலம்', 'திருக்கோளிலி' முதலாக உள்ள நான்மறைகளின் முதல்வரான இறைவரின் திருப்பதி கள் பலவற்றையும் தொழுது, அளவில்லாத திருப்பதிகங்ளைப் பாடி, மீண்டும் திருவாரூரின்கண் தொழுவதன் பொருட்டாக வந்தார். இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:திருவலிவலம்: 1. பூவியல் புரிகுழல் (தி. 1 ப. 123) - வியாழக்குறிஞ்சி 2. ஒல்லையாறி (தி. 1 ப. 50) - பழந்தக்கராகம். திருக்கோளிலி: 1. நாளாயபோகாமே (தி. 1 ப. 62) - பழந்தக்கராகம். இவை முதலான பல பதிகள் என்பன திருஏமப்பேறூர், திருச் சாட்டியக்குடி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதி கங்கள் எவையும் கிடைத்தில. 'தொழெுதே' என்பது 'தொழல்' என்றும் பாடம்.

மிகுகின்ற அன்பால், ஒளிவீசும் புற்றில் வீற்றி ருக்கும், கங்கை உலாவுதற்கு இடமான சடையை உடைய தலைவரான இறைவரை வணங்கித் 'திருநீறே தம் வாழ்வாகும்' என்னும் திருவுள் ளமுடைய திருத்தொண்டர்களுடனே இறுதியில்லாத சிவஞானம் உடைய ஞானசம்பந்தர் திருவாரூரில் தங்கியிருந்தார்.
குறிப்புரை

அவ்வாறு இருந்தருளிய நாள்கள் சில கழிய, திருநாவுக்கரசரை விரும்பி, பொங்கும் சிறப்பைக் கொண்ட திருப் புகலூரினை வணங்குவதற்கு விடைபெற்றுக் கொண்டு செல்பவராய்த் தங்கிய அத்திருவாரூர்ப் பதியின் புறம்பணையைச் சேர்ந்து அருள் செய்பவராய்,
குறிப்புரை:

மண் உலகத்தில் சிறந்த திருவாரூரின் நகர்ப் புறத்தின் மருதநிலத்தில் போய்ச் சேர்ந்து, அந் நகரத்தையே நோக்கி நின்ற வண்ணம், 'பயனில்லாது கழிந்து போகாத மனமே! நீ அஞ்சாதே! உய்யும் வகையினை அறிவாய் அல்லையோ! சிவபெருமானின் திருவாரூரை நீ மறக்காது தொழுவாயாக!' எனச் சொல்லி சிவந்த கைகளைத் தலைமீது குவித்துக் கொண்டு, 'பவனமாய்ச் சோடையாய்' எனத் தொடங்கும் பதிகத்தை அந்நகரின் முன்பாடி அருளினார். இப்பதிகம் 'பவனமாய்' (தி. 2 ப. 79) எனத்தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். நெஞ்சறிவுறுத்தலாக அமைந்த இப்பதிகம், பிள்ளையார் தம் அளவில் பிரிவாற்றாமை யாகவும், நம்மனோர் அளவில் அறவுரையாகவும் அமைந்த பதிகமா கும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. 'பதிகமுன் பாடினாரே' என்பது 'பதிகமே பாடிநின்றார்' என்றும் பாடம்.

சீகாழியிலுள்ளார் வாழ்வதன் பொருட்டாய்த் தோன்றிய கவுணியர், திருமாலும் அறியமுடியாத இறைவரின் திரு வாரூரினைப் பணிந்து மேற்செல்பவராய், வலிமையும் மதமயக்கமும் உடைய யானையின் தோலைப் போர்த்த சிவபெருமானின் 'திருப் பனையூரைப்' பணிந்து, வாழ்வுடைய பெரிய மறைகளின் பொருளை யும் இசையினையும் உடைய திருப்பதிகத்தையும் பாடி அப்பதியில் தங்கியிருந்து, திருப்பனையூரில் அருளிய பதிகம் 'அரவச் சடைமேல்' (தி. 1 ப. 37) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

அப்பதியினின்றும் அரிதாய்ப் புறப்பட்டுச் செல்வாராய், உலகம் எல்லாவற்றிற்கும் காரணர் ஆன சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் நன்மையுடைய பிற பதிகளையும் வணங்கித் திருப்பதிகம் பாடி, எவ்விடத்தும் உண்மைத் தவமுடைய அடியவர்கள் தம்மை எதிர்கொள்ளத் தொழுது, பொங்கும் குளிர்ச்சியான இலை களை உடைய தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த திருப்புகலூரை அணு கச் சென்றார். பிறபதிகளும் என்பன, எவையெனத் தெரிந்தில. 'காரண ரும்' என்பது 'காரணமும்' என்றும் பாடம்.

திருநாவுக்கரசரும், நம்பி எனத்தகும் முருக நாயனாரும் மற்றும் விடைக் கொடியையுடைய உயர்ந்த சிவபெரு மானின் திருத்தொண்டர்களும் எதிர்கொண்டு, முன்போய்க் குளிர்ந்த பூக்களால் பொலிவுபெற்ற நீர்வளம் கொண்ட சீகாழித் தலைவராம் ஆனைக் கன்றின் திருமுன்பு பணிந்து சேர, அவர்களுடன் தாமும் சென்று இறைவரின் திருக்கோயிலைச் சேர்ந்தார்.
குறிப்புரை:

தேவரின் தலைவர்தம் கோயிலுள் புகுந்து அனைவரும் நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கி, பாக்களின் பாகுபாட்டுக்கு இணங்க அமைந்த தமிழிசை பொருந்திய திருப் பதிகத்தைப் பாடித் திருமுன்பு நின்று போற்றுபவரான ஞானசம்பந்தர், வெளியில் வந்து, குற்றமற்ற சிறப்பையுடைய முருக நாயனாரின் இல்லத்தில் சேர்ந்து, ஒப்பில்லாத முதன்மை கொண்ட அத்திருத் தொண்டரே திருவமுது, உறையுள் முதலான எல்லாவற்றையும் குறைவில்லாது அமைக்க, அங்கு விரும்பித் தங்கியிருந்த நாள்களில், இதுபொழுது அருளிய திருப்பதிகம் கிடைத்திலது.

இந்நற் செய்தியைக் கேட்டு வந்த நீலநக்க நாயனாரும் புகழையுடைய சிறுத்தொண்ட நாயனாரும் கூடிப் பொருந்திய நீர்மையுடைய சீலமுடைய மற்ற மெய்த்தவர்களான தொண்டர்களும் தம்முடன் இறைவரை வழிபடும் செய்கையில் ஒருப்பட்டு நின்று, வாய்மையில் மிகவும் உயர்வுடைய திருத்தொண் டின் உண்மைத் திறங்களையே தெளிவாக நாடி, சீகாழித் தலைவரான பிள்ளையார் அவர்களுடன் கூடிக் கலந்து, காலம் உண்டாகவே காதல் செய்தவாறு அளவளாவியிருந்தார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. 'சாலமிக்கு' என்பது 'சால்பின்மிக்கு' என்றும் பாடம்.

கும்பிடும் கொள்கையின் குறிப்பை உள்ளடக்கிக் 'குறிகலந்த எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தம் பெருந்தலைமைப் பாட்டினால் நன்னிலைமை நிறைந்த அப்பதியின் பெருமையை எடுத்துக் கூறி, தேவர்களும் போற்றுதற்குரிய சொல் வன்மையுடைய பிள்ளையார், உள்ளத்தில் உண்மை அன்பு பெருகி யதால் இறைவரின் பதிகளான பிறபதிகளுக்கும் சென்று வணங்க விருப்பம் கொண்டார். குறிகலந்த (தி. 1 ப. 2) எனத்தொடங்கும் பதிகம் நட்டபாடைப் பண்ணிலமைந்ததாகும். பதிகப் பாடல்தொறும், திருப் புகலூரில் பெருமான் வீற்றிருக்கும் பெருமையையும், அதன் நீர் வளம், நிலவளம், மக்கள் நலம் முதலாய வளங்களையும் குறித்துப் போற்றியிருத்தலின், 'பதியதன் பெருமை சால்புற விளம்பி' என்றார்.

நீர்ப்பறவை ஒலித்தற்கு இடமான குளிர்ந்த நீர் நிலை சூழ்ந்த திருப்புகலூரில் எழுந்தருளிய புனித இறைவரின் அருளைப் பெற்று, பிள்ளையாருடன் திருநாவுக்கரசரும் இறைவரின் மற்றப் பதிகளையும் தொழும் பொருட்டுச் செல்பவராய், வள்ளலா ரான சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்க நாயனாரும் தத்தம் வளம் பொருந்திய பதிகளுக்குச் செல்லவும், உள்ளத்தில் அன்பு கொண்ட முருக நாயனார் அங்கே தங்கியருக்கவும் அவர்கள் உடன் படத் தாமும் இசைந்தார்கள். ஒழிதல் - தங்குதல். 'இசைவித்தார்' என்பது 'இசைந்தார் கள்' என்றும் பாடம். இப்பாடல் முதல் 2515ஆவது பாடல் வரை ஞான சம்பந்தரும், நாவரசரும் சேர்ந்து வழிபட்ட சிறப்பினை விவரிக்கின்றன.

இடம் அகன்ற திருப்புகலூரைத் தொழுது மேற் செல்கின்ற போதில், கடற்கரையில் உள்ள சீகாழிப் பதியில் தோன்றிய பிள்ளையார், திருநாவுக்கரசரை விட்டு நீங்காது அழகிய முத்துச் சிவிகை பின் வரச் செலவு நயப்பைத் தொடங்கிய பொழுது, ஞானி யரின் உளத்தில் நிற்கும் சிறப்புடைய திருநாவுக்கரசர், சம்பந்தருக்கு எடுத்துக் கூறுபவராய்,
குறிப்புரை:

'இறைவன் உமக்கு அருள் செய்த இந்த நன்மை பொருந்திய அழகிய ஒளிபொருந்திய தூய முத்துச் சிவிகையில் இவர்ந்து வருவீராக!' என்று அருளுதலும், 'ஒளி பொருந்திய பிறைச் சந்திரனை அணிந்த சடையையுடைய இறைவரின் திருவருளும் இவ்வாறே இருக்குமாயின், விரும்பும் தொண்டர்களுடனே நீவிர் முன் செல்வது எப்பதியோ? அப்பதிக்கு யானும் பின்தொடர்ந்து வரும்படியாகப் போவது' என விடையளித்தார். இவ்வரிய திருபாடலால் நாவரசரின் திருவுள்ளமும், ஞானசம்பந்தரும் தாமும் ஆகச் செல்லும் செலவு நயப்பை அமைத்துக் கொண்ட பாங்கும் அறிய முடிகின்றன. ஞானசம்பந்தரும் முத்துச் சிவிகையில் வருதலை இறைவர் அருளிய அருளிப்பாடு என்பதால், மறுக்க இயலாது ஏற்பாராயினர். நாவரசர், 'நாயனார் உமக்கு அளித்து அருள் செய்த . . . தூய யானத்தின் மிசை எழுந்தருளுவீர்' என்றது அதனை வெல்லும் சொல் இன்றி வெளிப்படுத்திய திறனுடையதாகும். இதனால் நாவரசர் நாவரசரேயாயினர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

என்று சம்பந்தர் உரைத்திடவும், பெரிய தவவேந்த ரான திருநாவுக்கரசரும் 'நல்லது! நீவிர் அருளியவாறே செய்வேன்' என்று அருள் செய்து, விரும்பிய அந்நாள் முதற் கொண்டு, பிள்ளை யாருடன் செல்லும் எல்லா நாள்களிலும் அவ் வியல்பில் செல்பவ ராய், செய்தவக் கூட்டமான தொண்டர்களோடும் முன் செல்ல, திருவம்பர் என்ற நகரை அடைந்தார்.
குறிப்புரை:

சீகாழிப் பதியில் தோன்றிய பிள்ளையாரும், தம் இறைவரின் அருள் வழியே ஒழுகுவதை மேற்கொண்டு செல்வாராய்ச் சிவப் பண்பினால் மேம்படும் குளிர்ந்த ஒளியையுடைய முத்துச் சிவிகையில் அமர்ந்து, வண்மையும் பெருமையும் கொண்ட திருப் புகலூரைக் கடந்து சென்று, 'தண்ணிய பெருமையையுடைய தவமுனி வரான அரசு எங்குச் சென்றனர்?' எனக் கேட்டுத் தாமும் சென்று, அவர் சேர்ந்த திருவம்பர் நகரத்தை அடைந்து புகுந்தார்.
குறிப்புரை:

திருவம்பர் என்ற பதியை அடைந்து மாகாளத் தில் இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் செம்பொன்னால் ஆன பெருமதிலையுடைய கோயிலை வலம் வந்து, இறைவரின் திருமுன்பு தாழ்ந்து வணங்கிப் போற்றி, மணமுடைய மலர்களைத் தூவியும் முறைப்படி வழிபட்டும், வண்மையுடைய தமிழிசை மாலை பாடிப் போற்றித் தேவர் வாழும் பொருட்டு நஞ்சையுண்ட இறைவரை வணங்கி, உள்ளம் உருகிய அன்பினால் நிலத்தில் விழுந்து வணங் கினார். அம்பர் - பதியின் பெயர். மாகாளம் - கோயிலின் பெயர். இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது.

சீகாழியினர் வாழ்வு அடையுமாறு தோன்றிய மறைத் தலைவரான பிள்ளையார் வணங்கிப் பின் திருநாவுக்கரசு நாயனாருடன் திருக்கோயிலின் வெளியே வந்து, தம்மைச் சூழ்ந்த தொண்டருடனே அப்பதியில் விரும்பித் தங்குபவராய், கங்கை தாங்கிய தாழ்ந்த சடையையுடைய சிவபெருமானைப் பெருகும் காலங்கள் தோறும் விருப்பத்துடன் கும்பிட்டுப் பெருவாழ்வு அடைந்திருந்தார்.
குறிப்புரை:

ஒப்பற்ற சொற்களையுடைய 'புல்கு பொன்னிறம்' எனும் தொடக்கம் உடைய பதிகம் முதலாய பல பதிகங்களினால் போற்றி செய்து, சைவமெய்த்திருவால் நிறைவுடைய கோச்செங்கட் சோழர், அத்திருஅம்பர் நகரத்தில் செய்த மாடக் கோயிலை அடைந்து, வாய்மையுடைய வண்மையான தமிழ்மாலையில் அச்சோழர் பெருமானாரைச் சிறப்பித்து, பெருகும் ஆசையினால் பணிந்து, பேணிக் கொண்ட உணர்வுடன் திருமுன்பு நின்று போற்றினார். 'புல்கு பொன்னிறம்' (தி. 2 ப. 103) எனத் தொடங்குவது நட்டராகப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும். இவ்வாறு காலங்கள் தொறும் வழிபட்டுப் போற்றிய பதிகங்கள் மேலும் இரண்டுள. அவை: 1. 'அடையார்புரம்' (தி. 1 ப. 83) - குறிஞ்சி. 2. 'படியுளார்' (தி. 3 ப. 93) - சாதாரி. கோச்செங்கணார் இப்பதியில் எடுப்பித்த கோயில் திரு அம்பர்பெருந் திருக்கோயிலாகும், இப்பெருமானின் திருமுன்பு அருளிய பதிகம் 'எரிதர' (தி. 3 ப. 19) எனத் தொடங்கும் காந்தார பஞ்ச மப் பண்ணிலமைந்த பதிகமாகும். இத்திருக்கோயில் கோச்செங்கட் சோழரால் எடுப்பிக்கப் பெற்றது என்பதை இப்பதிகத்தில் 1, 2, 5, 9 ஆகிய பாடல்களில் குறித்துப் போற்றுகின்றார் பிள்ளையார்.

இங்ஙனம் சொல்மாலைகளினால் போற்றிப் பணிந்து, அங்கு எழுந்தருளியிருக்கும் நாள்களில், பகைவரால் அழிக் கப்படாத பெருமதில் சூழ்ந்த திருக்கடவூரினைத் தொழுவதற்கு மிகவும் விருப்பம் கொண்டு சென்று, வழியில் பிற பதிகளில் உள்ள கோயில்களில் இறைவரை வணங்கிய வண்ணம், திருநாவுக்கரச ருடனே அப்பெரும்பதியான 'திருக்கடவூரை' அடையும்போது, குங்குலியக் கலைய நாயனாருடன் அடியார்கள் வந்து வரவேற்றனர். பிறபதிமன்னும் கோயில்கள் என்பன வழுவூர், வீரட் டம், திருவிடைக்கழி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவி மணியார். எனினும் பதிகங்கள் எவையும் கிடைத்தில.

முற்கூறிய அந்த வளம் பொருந்திய பதியைச் சேர்ந்து, இளமை பொருந்திய ஆனேற்றையுடைய இறைவரின் வீரட்டத் திருக்கோயிலின் சுற்று மாளிகையை வலமாக வந்து, இயமனை உதைத்து உருட்டிய செம்பொன் சிலம்பணிந்த திருவடித் தாமரைகளைத் தொழுது, துதித்து, உய்ந்து, இனிய இசையுடன் 'சடையுடையானெனும்' (தி. 3 ப. 8) எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி, 'சடையுடையானெனும்' (தி. 3 ப. 8) எனத் தொடங்கும் பதிகம் காந்தார பஞ்சமப் பண்ணிலமைந்ததாகும்.

வணங்கிப் போற்றி, அங்கிருந்து அரிதாக வெளியே வந்து, உலகம் போற்றும் சிறப்புடைய திருநாவுக்கரச ருடனே, பொருந்திய நட்புடைய குங்குலியக்கலய நாயனாரின் இல்லத்தில் எழுந்தருளி, எல்லையில்லாத அன்பினால் அவர் அமைத் தளித்த விருந்தை இனிதாய் உண்ட பிள்ளையார், அருகிலுள்ள திருக்கடவூர்த் திருமயானத்தையும் பணிந்து சிறப்பெய்தித் தங்கி யிருந்தார். திருக்கடவூர் மயானத்தில் அருளிய பதிகம் 'வரிய மறையார்' (தி. 2 ப. 80) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

சிறந்த அத் திருப்பதியில் சில நாள்கள் விரும்பித் தங்கி, வலிய பெரிய யானையை உரித்த சிவபெருமான் எழுந் தருளியிருக்கும் பிறகோயில்களையும் தொழுவதற்கு அருள் பெற்றுச் செல்பவராய், மறைகளைப் பயின்ற பெரிய சைவ மெய்வடிவுடைய குங்குலியக்கலய நாயனாரும் உடன்பட, வணங்கும் பொருட்டுக் கொண்ட பெருமகிழ்வுடன், அறத்தின் பெரும்பயன் போன்ற நாவரச ருடன் திருவாக்கூரினைச் சென்றடைந்தார் பிள்ளையார். கலயனாரும் உடன்பட - பிற திருக்கோயில்களுக்குச் சென்று தாமும் அரசரும் வழிபடக் கலயரும் உடன்பட.

தகுந்த அந்தணர்கள் வாழ்கின்ற அப்பதியில், தான் தோன்றிமாடக் கோயிலில் சிவந்த நீண்ட சடையையுடைய இறைவ ரைப் பணிந்து, இசையையுடைய செந்தமிழ்ப் பதிக மாலையைப் பாடி, பெருமை பொருந்திய பிற கோயில்களையும் உடனே தொழுது சென்று, 'திருமீயச்சூரினையும்' வணங்கி, பூத கணங்கள் அருகிலி ருந்து போற்ற நின்று ஆடும் இறைவரின் 'திருப்பாம்புர' நகரத்தை அடைந்தார். தான் தோன்றிமாடம் - இறைவன் தானே தோன்றி எழுந்தருளியிருக்கும் மாடக் கோயில். சுயம்பு என்பதற்குரிய தமிழ்ச் சொல் தான்தோன்றி என்பதாகும். இவ்விடத்து அருளிய பதிகம் 'அக்கிருந்த' (தி. 2 ப. 42) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணிலமைந்த பதிகமாகும். 'பரவுநின்' என்பது 'பாடநின்' என்றும் பாடம். பிறகோயில்கள் என்பன திருச்செம்பொன்பள்ளி, திருப்பறிய லூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருமீயச்சூரில் அருளிய பதிகம் 'காயச் செவ்வி' (தி. 2 ப. 62) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பிள்ளையார் திருப்பாம்புரத்தில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி நல்ல இனிய இசை பொருந்திய திருப்பதிகத் தைப் பாடியருளி, தாவும் அலைகளையுடைய கங்கை ஆற்றைச் சூடிய முடியையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள பிற பதிக ளையும் போற்றி, மூங்கில் போல் விளங்கும் கரும்பும் செந்நெல்லும் விளைந்த வயல் இடங்களைக் கடந்து, தேனையுடைய சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலையின் அருகே செல்கின்றவராகி, திருப்பாம்புரத்தில் அருளிய பதிகம் 'சீரணி திகழ்' (தி. 1 ப. 41) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிற பதிகளாவன திருச்சிறுகுடி, திருவன்னியூர் முதலாயினவாகலாம். திருச்சிறுகுடிக்கு உரிய பதிகம் 'திடமலி' (தி. 3 ப. 97) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருவன்னியூர்ப் பதிகம் கிடைத்திலது.

அவ்வாறு பிள்ளையார் செல்லும் பொழுது முன் வந்த திருநாவுக்கரசரை எதிர்கொண்ட வாய்மையில் மிக்க பெருமை உடைய அந்தணர்கள், சீகாழித் தலைவர் பின்னர் வந்து சேர இருக்கும் செய்தியைக் கேட்டு மகிழ்ந்து, வரவேற்றற்குரிய எல்லா வகையாலும் குறைவின்றி ஒருங்கு கூடிவந்து அங்கு எதிர் கொள்வார்களாய், எப்பரிசினால் - வரவேற்றற்குரிய எல்லா வகையாலும். உம்மை தொக்கது.

நிறைகுடம், நறுமணப்புகை, ஒளிவிளக்கு என்ற இவற்றைத் தொடர்ந்து வரிசை பெற ஏந்திய வண்ணம், தேன் பொருந் திய புதிய மலர்களையும் பொன்சுண்ணத்தையும் மணமுடைய பொரி களையும் தூவி, மறையின் ஒலிமிகுந்த வானத்தில் நிறையவும், பெரிய முரசுகள் ஒலிக்கவும், இவ்வாறாக இறைவரின் மகனாரான பிள்ளை யாரை எதிர் கொள்ளும் வகையால் வரவேற்றனர். 'எதிர்கொள் வரவேற்றார்' என்பது 'எதிர்கோ ளேற்றார்' என்றும் பாடம். இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

திருவீழிமிழலை என்ற பதியில் உள்ள மறை களில் வல்ல அந்தணர்கள் வந்து போற்ற, பிள்ளையார் தாமும் மணிகளுள் சிறந்த முத்துகளால் ஆன புகழத்தக்க அழகிய சிவிகையினின்றும் இறங்கி, வணங்கி, தம் வருகையால் உய்வு பெற்ற அந்தணர்களுடனே சேர்ந்து அந் நகரத்துள் புகுபவராய்,
குறிப்புரை:

அப்போது, 'அரையார் விரிகோவண ஆடை' எனத் தொடங்கும் ஒப்புக் கூற இயலாத திருப்பதிகத்தில், ஓங்கும் இசையைப் பாடியருளி, கைம்மலர்களைத் தலைமீது குவித்துக் கொண்டு, உண்மையான ஞானத்தால் வழிபடப் பெறும் தத்துவம் முப்பத்தாறாலும் அமைந்த இதய தாமரையில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரின் திருக்கோயிலுள் சென்றார். 'அரையார் விரிகோவணம்' (தி. 1 ப. 35) எனத் தொடங்கும் பதிகம் தக்கராகப் பண்ணிலமைந்ததாகும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

நாவால் ஒப்பற்ற அரசரான திருநாவுக்கரசர் தம்முடன் கூடியிருக்க, நான்முகன் தோன்றுதற்கிடனாய கொப்பூழ்த் தாமரையை உடைய திருமால் வணங்கி வழிபடும் பொருட்டு, விண் ணுலகத்தினின்றும் இம்மண்ணுலகத்தில் இறங்கிய தெய்வ வடிவாய்த் திகழும் அப்பெருமானைக் கண்டு, உள்ளத்தில் பெருவியப்பை அடைந்தார் ஆளுடைய பிள்ளையார்.
குறிப்புரை:

அப்பிள்ளையார், வலமாக வந்து கோயிலுக் குள்ளே புகுந்து, திருமுன்பு சென்று, வானின்றிழிந்த கங்கை நீரைத் தாங்கிய சடையையுடைய ஒப்பில்லாத முழுமுதலான இறைவரைத் திருமேனி முழுதும் நிலத்திலே பொருந்த விழுந்து வணங்கிப் பெருகிய அன்பு வெள்ளமானது மெய்ம் முழுதும் வழிவதைப் போன்று இசையால் பொழிவார் ஆனார். 'வந்து வரநதியின்' என்பது 'நின்று வானநதியின்' என்றும் பாடம்.

அவ்வாறு போற்றுமவர், 'சடையார் புனல் உடை யான்' எனத் தொடங்கிப் பெருமானின் புகழ் நவிலும் பதிகமான தமிழ் மாலையைப் பாடி, நீற்று அழகரான இறைவரின் திருவடிகளின் கீழ் ஆனந்த வெள்ளத்தினுள் நின்று அதன் கரைகாண மாட்டாது அதனுள் நிலைத்திருந்தார். 'சடையார் புனல் உடையான்' (தி. 1 ப. 11) எனத் தொடங் குவது நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும்.

நிலையான பேரன்பு உருகுதலால் திளைத்து நிற்கும் அவர், திருமுன்பு நின்று பாடியும், ஆனந்தக் கூத்தாடியும், போற்றியும், பணிந்தும், எழுந்தும், அருட்பெருங்கூத்து இயற்றும் திருவடிகளை அன்பு பொருந்த மனத்துள் வைத்தவராய், உயர்ந்த திருக்கோயிலின் புறத்தே அரிதாய் வந்து, (ஆளுடைய பிள்ளையாரும், ஆளுடைய அரசரும்) சேர்ந்தனர். திருமுன்பு நின்று இதுபொழுது பாடிய பதிகம் கிடைத் திலது.

அங்ஙனம் வந்து சேர்ந்து பெருவாழ்வு பெற்றுத் திருமதில் புறத்திலுள்ள ஒரு பெருமடத்தில் செந்தமிழ்ச் சொல் அரச ரான திருநாவுக்கரசரும் தவத்தையுடைய திருத்தொண்டர்களும் சேர்ந் திருப்ப, சீகாழியில் தோன்றிய அந்தணர் பெருமானான சம்பந்தர் அழகிய மணிகளையுடைய கோபுரத்தைச் சார்ந்த வடபகுதியில் அங்கு ஒரு திருமடத்தில் விரும்பி எழுந்தருளினார்.
குறிப்புரை:

அங்கு விரும்பி எழுந்தருளியிருப்பவர், சிவ பெருமான் திருவடிகளின் கீழ்ப் பொருந்திக் கிடந்த விருப்பத்தினால் வழிபாட்டிற்குரிய காலம்தோறும், தவறாமல், பொங்கும் புகழை உடைய திருநாவுக்கரசரும் கூடச் சென்று, வழிபட்டுப் போற்றி, எங் கும் துன்பம் தீர்ப்பவர்களாய் இன்பமுடன் விரும்பித் தங்கியிருந்தனர். காலந்தொறும் சென்றிசைத்த பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பெருகும் நீர்வளம் கொண்ட திருப்பேணு பெருந்துறையையும் அதனை உள்ளிட்ட அருகிலுள்ள திலதைப் பதிமதிமுத்தத்தினையும் போய் வணங்கிப் பெருகும் ஒலியுடைய நீர் சூழ்ந்த திருவீழிமிழலையினில் மீண்டும் எழுந்தருளி, அங்கு இனிதாய் வணங்கி விருப்பமுடனே இருந்து வரும் நாள்களில், பேணுபெருந்துறையில் அருளிய பதிகம் 'பைம்மா நாகம்' (தி. 1 ப. 42) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். திலதைப்பதிமதிமுத்தத்தில் அருளிய பதிகம் 'பொடிகள் பூசி' (தி. 2 ப. 118) எனத் தொடங்கும் செவ்வழிப்பண்ணிலமைந்த பதிகமாகும். 'டமர்ந்துறையும்' என்பது 'டமர்ந்தொழுகும்' என்றும் பாடம்.

வானளாவ உயர்ந்த மாடங்களை உடைய சீகாழியில் வாழ்கின்ற மறையவர்கள், திருஞானசம்பந்தப் பிள்ளை யாரைச் சென்று காணவேண்டும் என்ற விருப்பத்தால், பெருகும் ஆசைமீதூரத் திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவரின் மலரடி களை வணங்கி, விடைபெற்றுச் சீகாழியினின்றும் திருவீழிமிழலையை அடைந்தார்கள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

ஊழிக்காலத்தில் பெருகும் நீர் வெள்ளத்தில் ஆழாமல் மிதந்த சீகாழியில், பெருவாழ்வை உடைய அந்தணர்கள் எல்லாம் வந்து, தம் பதியின் அருகே சேர்ந்தனர் எனத் திருவீழி மிழலையில் வாழும் மறையோர்கள் கேள்வியுற்று, மெய்ஞ்ஞான அமுது உண்ட பிள்ளையாரை எண்ணி மனத்துள் கொண்டு, ஏழிசை சூழும் மறைகளில் வல்ல அந்தச் சீகாழி மறையவர்பால் சேர்ந்து, முறைப்படி எதிர்கொண்டு வரவேற்று, அவர்களை அழைத்துக் கொண்டு நகரத்துள் புகுந்தனர்.
குறிப்புரை:

சீகாழியினைச் சேர்ந்த மறையவர்களெல்லாம் கோயிலுள் சென்று, தம் இறைவரை வணங்கிச் சென்று, நட்பால் பெருகிய பெரு விருப்பம் மிக்கு, ஞானசம்பந்தரின் திருமடத்தைச் சேர்ந்து, நற்பண்பினால் பெருகும் சீகாழியில் உள்ளவர்களுக்கு உரிமை உடைய சம்பந்தரின் திருவடிகளை வணங்கித் தலைமீது கொண்டு, 'மேன்மையுடைய திருத்தோணிபுரத்தில் எம்முடனே எழுந்தருளும் பேறு யாங்கள் பெற வேண்டும்' என வேண்டிக் கொண்டனர்.
குறிப்புரை:

என அவர்கள் வேண்டிக்கொண்டபோது எல்லையில்லாத சிவஞானம் பெற்ற சம்பந்தரும் 'மிகவும் நல்லது' ஆனால் திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருவடி களை நாம் வணங்குவதற்கு இன்று கழிந்து நாளைத் திருவீழிமிழலை இறைவரின் அருளைப் பெற்று நாம் போகலாம்!' எனக் கூறி, அன்று அவர் சீகாழி மறையவர்களுக்கு அருள் செய்தார்.
குறிப்புரை:

மேன்மையுடைய திருவீழிமிழலை அந்தணர்கள், சீகாழியினின்றும் வந்த அந்தணர்களுக்கு விருந்தளிக்க, ஏற்ற அவர் களும் அன்பு கொண்ட உள்ளம் உடையராகி, மகிழ்ந்து இறைவரை வழிபட்டுப் போற்றும் சீர்மை பொருந்திய கால எல்லை இனிதாய்க் கழியத் திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவர், தாமே மேகம் போன்ற வண்மையுடைய பிள்ளையாருக்குக் கனவில் தோன்றி அருள் செய்வாராய்,
குறிப்புரை:

அச் சீகாழியில் 'தோணியில் தாம் இருந்த காட்சியை இங்குத் தூய மறைவடிவாகிய திருவீழிமிழலையுள் விண் ணினின்றும் இழிந்த இந்தச் சிறப்புடைய விமானத்திடம் காணும்படி காட்டுகின்றோம். கண்டு வழிபடும் வகையினால் அறிவாயாக!' என்று கூறி மறைந்து போக, சீகாழிப் பதியினர் முன் செய்த தவத்தால் தோன்றிய பிள்ளையார், தம் உடலில் தோன்றிய மயிர்க்கூச்சலுடன் துயிலுணர்ந்து எழுந்தார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

விழிப்புற்ற சிந்தையுடையவராய் எழுந்து அதிசயம் அடைந்து, தலையின் மேலே அழகிய கைகளை வைத்துக் கூப்பித் தொழுது, மணம் பொருந்திய கொன்றை மலரைச் சூடிய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளும் விண்ணிழி விமானமுடைய கோயிலுள் புகுந்து மானேந்திய கையையுடைய இறைவரைத் திருத்தோணியின் மேல் முன் வணங்கும் அந்த வண்ணமே அங்குக் கண்டு, வாழ்வடைந்து, அக்குறிநிலையின் பெருமை காட்டும் திருப்பதிகத்தைப் பொருந்திய கொள்கையால் பாடுபவராய்,
குறிப்புரை:

'மைம்மரு பூங்குழல்' (தி. 1 ப. 4) எனத் தொடங்கி ஒப்பில்லாத பெருந் திருத்தோணி மீது இளங் கொங்கையையுடைய திருநிலைநாயகி அம்மையாருடன் கூடநீடும் திருக்கோலம், விளக்கம் உடைய திருவீழிமிழலையில் செம்மை தருகின்ற விண்ணிழி விமானத் தில் விளங்க இருந்த வண்ணம் இது என்? என வினவும் பொருளுடன் உண்மை விளங்கும் திருப்பதிகத்தை, மறைவாயினரான சம்பந்தர் பாடியருளினார். 'மைம்மரு பூங்குழல்' (தி. 1 ப. 4) எனத் தொடங்கும் திருப்பதிகம் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். 'புகலி நிலாவிய புண்ணியனே, மிழலை விண்ணிழி கோயில் விரும்பியது என்கொல்? சொல்லாய்' எனும் பொருண்மை பாடல் தொறும் அமைந்திருத்தலின், அதுகொண்டு இவ்வரலாற்றுப் பின்னணியை ஆசிரியர் அமைத்துக் கூறுவாராயினர்.

செம்மையான சொற்கள் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடித் திருக்கடைக்காப்பும் பாடி நிறைவுசெய்து, கைகளைக் கூப்பி, நிலத்தில் விழுந்து எழுபவரான பிள்ளையார், பெருகிய ஆனந்தம் தம்மை அலைப்ப வெளியே வந்து, மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியினின்றும் வந்த மறையவர்களை நோக்கி, உண்மைவடிவாய்த் தம் உள்ளத்தில் நிறைந்த திருவருள் குறிப்பால் உணர்த்தப் பெற்ற அருளியல்பை அருளிச் செய்பவராய்,
குறிப்புரை:

சீகாழியில் வீற்றிருக்கின்ற முக்கண்களை உடைய பெருமான், தம் பெருமாட்டியுடன் வீற்றிருக்கும் இடங்கள் எங்கும் சென்று, விரும்பிப் பணிந்து போற்றி வருதலை அப்பெருமான் தாம் அறிந்துகொண்டு, அங்குத் திருத்தோணியில் வீற்றிருந்த வகையினை இங்குக் காணுமாறு அளித்தார்' என்று விளங்கக் கூறி, 'நீங்கள் சீகாழிக்குச் செல்லுங்கள்' என்றுரைத்தார். காழிக்காட்சியை வீழியிற் காட்டியது, காழிக்குத் தாம் வருதலைத் தவிர்க்கும் திருவுளக் குறிப்பாதலை யுணர்ந்த பிள்ளை யார், அங்கிருந்து அழைக்க வந்தார்க்குக் கூறி அனுப்பி வைத்தார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

என்று கவுணியர்குலத் தோன்றலான பிள்ளை யார் அருள, வணங்கி அவர் உரைத்த கட்டளையை ஏற்றுக் கொண்டு, பொருந்திய பெருவிருப்பத்தால் தங்கள் மனம் அங்கு நிற்க, நீங்காத இயல்பிலே ஒருவாறாக அரிதின் நீங்கிச் சென்றார்கள். நீங்கிச் சென்று, திருக்கூத்தியற்றும் பெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் பதிகள் பலவற் றையும் வணங்கிச் சென்று, நிலையான புகழையுடைய தோணிபுரத் தில் வீற்றிருக்கும் இறைவரை நாளும் பணியும் நியதி உடையவராய் விளங்கினர்.
குறிப்புரை:

சீகாழி மறையவர்கள் விடைபெற்றுச் சென்றபின்பு, திருவீழிமிழலையில் மேவிய இறைவரின் திருவடிகளை வணங்கி, எந்நாளும் அடிமைப் பண்பினின்றும் நீங்காமல் ஒழுகும் திருத்தொண் டர் சூழ்ந்திருக்க, சிறந்த தமிழால் தொடுக்கப்பட்ட திருப்பதிகங்களைச் சாத்தி, அன்புமிக்க திருநாவுக்கரசருடன் கூடிப் பெருகிய நட்புமிக்கு ஓங்கப் பொருந்தி இனிதாய் அப் பதியில் தங்கி இருந்தனர். அந்நாள் களில், இதுபொழுது அருளிய பதிகங்கள் பல. அவற்றுள் கிடைத்தவை: 1 'தடநிலவிய' (தி. 1 ப. 20) #NAME? 2

இம்மண்ணுலகில் மழை மறுத்ததனால் ஆறுகளில் பருவவெள்ளம் பாயாது தவறி, அது காரணமாய் உலகத்து உயிர்கள் வருந்தி, உணவின்றி நின்றமையால், தேவர்களுக்கும் சிறப்பு வழி பாடுகளும் நாள்வழிபாடுகளும் செய்யப்படாமல் மிக்க பெரும் பசியின் கொடுமை உலகில் பொருந்திய நிலையைக் கண்டு, பண் பொருந்திய சொல்லையுடைய உமையம்மையாரின் கொங்கையின் பால் நீங்காதவாயினரான பிள்ளையாருடன் திருநாவுக்கரசரும் 'உலகில் நெற்றிக் கண்ணரான திருநீற்றுச் சார்புடைய தொண்டர் களுக்கும் கவலை வருமோ?' என்று தம் உள்ளங்களில் எண்ணினர். பெருமழையாலும் பஞ்சம் வரும், மழையின்மை யாலும் பஞ்சம் வரும். இப்பஞ்சந்தானும் மழையின்மையால் வந்ததாகும். இப்பாடலின் முன்னிரண்டடிகள், திருக்குறட் கருத்து களைப் பெரிதும் முகந்து நிற்கின்றன. 'வான் பொய்த்து' - விண் ணின்று பொய்ப்பின் (குறள், 13); 'நதிகள் தப்பி' - நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் (குறள், 17); 'மன்னுயிர்கள் கண் சாம்பி' - விசும்பில் துளி வீழின் அல்லால் (குறள், 16); 'உணவு மாறி' - ஏரின் உழாஅர் உழவர் (குறள், 14); 'விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசையாற்றா' - சிறப்பொடு பூசனை செல்லாது (குறள், 18) - மிக்க பெரும்பசி உலகில் விரவக் கண்டு - உள் நின்று உடற்றும் பசி என ஒப்பிட்டுக் காண்க. எனினும் இதனாலாய வறுமை நெற்றிக்கண் உடைய பெருமானின் திருநீற்றுச் சார்புடையோர்க்கும் வருமோ? வராது என்ற நிலையில் அவர்கள் கருதினர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

வானமும், மண்ணும், தீயும், காற்றும், கதிரவன், சந்திரன் ஆகிய இருசுடர்களும், நீரும் ஆகியும், ஊனும் உயிரும் உணர்வுமாகியும், உலகங்கள் எல்லாம் ஆகியும்அவற்றின் அப்பாற் பட்டதாகியும், கேடில்லாத வடிவாகி நின்ற இறைவரின் சிவந்த திருவடிகளைப் போற்றி உறங்கும் போது, சுடுகாட்டில் எலும்பணிந்து கூத்தியற்றுபவராய் இருந்தருளும் திருவீழிமிழலைப் பெருமான் கனவில் தோன்றி அருள்செய்வாராய்,
குறிப்புரை:

'உலக இயல்பு நிகழ்வினால் வந்து அணைந்த தீமை பொருந்திய பசிநோய், உங்களை அடையாது என்றாலும், உங்களைச் சேர்ந்த அடியவர்களின் வருத்தம் நீங்குதற்காக, நித்தமும் ஒவ்வொரு பொற் காசினைக் கிழக்கிலும் மேற்கிலும் விளங்கும் அழகிய பலிபீடங்களில் உங்களுக்கு அளிப்போம்; அளவற்ற புகழை உடையவர்களே, இப்பஞ்சகாலம் நீங்கினால் அது நிறுத்தப்படும்' எனத் திருவீழிமிழலை இறைவர் உரைத்தருளினார். இறைவன் வழங்கும் பொருளை நாளும் ஒரு காசாக அருளியமைக்குக் காரணம், அவ்வடியவர் பெருமக்கள் இருவரின் திருப்பாடல்களை நாளும் செவிமடுத்து ஏற்கவாம் என்பர் சுந்தரர். 'இருந்து நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையால் நித்தல் காசு நல்கினீர்' (தி. 7 ப. 88 பா. 8) என்பது அவர் திருவாக்காகும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

தம் இறைவர் இங்ஙனம் கனவில் உரைத்து நீங்கவும், சீகாழியின் தலைவரான இளைய ஏறு போன்ற சம்பந்தர், துயில் உணர்ந்து, 'நம் இறைவரின் அருள் இருந்த வண்ணம் இவ் வாறு!' என்று வியப்புக் கொண்டவராய், அவ்வாறே இறைவர் அரு ளப் பெற்றுத் துயிலுணர்ந்த நாவுக்கரசரோடு கூடச் சேர்ந்து, மணம் கம ழும் கொன்றை மலரைச் சூடிய திருவீழிமிழலை நாதரின் மணிக் கோயிலை வலமாக வரப் புகுந்தபோது, உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவருளால், பிள்ளையார் தாம் கிழக் குத் திசையில் உள்ள பலிபீடத்தின் மீது ஒரு பொற் காசைக் கண்டார்.
குறிப்புரை:

பத்திமையோடு வணங்கி அப்பொற்காசை எடுத்துக் கொண்டு, நின்று கைகளைக் குவித்து வணங்கிப் பெரு மகிழ்ச்சி உள்நிறைந்து பொங்க, 'இறைவர் விரும்பும் அடியார்கள் ஒவ்வொரு நாளும் நல்ல விருந்தாய் உணவு உண்பதற்கு வருக!' என்று தீமையில்லாத பறையறைந்து, அங்ஙனம் வந்த தொண்டர்கள் திருவமுதும், கறிகளும், நெய்யும், பாலும், தயிரும் என்று உள்ள இவற்றைக் குறைவில்லாதபடி இனிதாய் உண்ணும்படி உண்பித்து, அத்திருநகரில் இருபெருமக்களும் தங்கியிருந்தனர். அந்நாள்களில், நாவரசருக்கும் இறைவர் இவ்வாறே மேற்குப் பீடத்தில் பொற்காசு வைத்து வழங்கினார். இதனை அவர் வரலாற்றில் (தி. 12 பு. 21 பா. 247) விளங்க உரைத்திருப்பதால், இங்கு இவ்வளவே கூறு வாராயினர்.

திருநாவுக்கரசரின் மடத்தில் தொண்டர்கள், நாள் தொறும் ஒளிநிறைவாக விளங்கும் உச்சிப் போதளவில் திருவமுது செய்து முடிப்பதைப் பார்த்த விடையுடைய சிவபெருமானின் திரு வருள் பெற்ற சம்பந்தர், தமது மடத்தில் உணவு சமைக்கும் பரி வாரங்களை நோக்கி, 'தீய தொழிலுக்கு நீங்கள் எப்போதும் இடம் அளிக்க மாட்டீர் அல்லீரோ! ஆதலால் காலத்தால் உணவு சமைத்து இங்கு வரும் அடியவர்களுக்கு அளிக்காதமைக்கு உரிய காரணம்தான் என்ன? சொல்லுங்கள்!' என வினவினார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அந்தணர்களின் தலைவரான பிள்ளையார் மேற்கண்ட வண்ணம் உரைசெய்ய, 'இதன் மெய்ம்மையை நாங்கள் ஒருவிதத்திலும் அறியோம்! உம்மை அடிமையாக உடைய இறைவரிடம் பெறுகின்ற படிக்காசு ஒன்றைக் கொண்டு அமுது சமைக்க வேண்டிப் பொருள்களை வாங்குதற்குச் சென்றால், கடைவீதியில் உள்ள வணிகர்கள் காசுக்கு வட்டம் தரவேண்டும் என்று உரைக்கின் றனர்; பெருமுனிவரான திருநாவுக்கரசர் பெற்ற காசுக்கு அங்ஙனம் கூறாது மிக்க விருப்புடனே ஏற்றுக் கொள்கின்றனர். இதுவே காலம் தாழ்தற்குக் காரணம்' என்று உரைத்தனர். வாசிபட - வட்டம் கொடுக்க; அதாவது குறையுடைய காசு ஆதலின், உரிய தொகையின்றிக் குறைத்துக் கொடுப்பது.

திருஞானசம்பந்தர், அதனைக் கேட்டு, எண்ணுப வராய், 'இறைவர் நமக்குத் தந்த ஒரு காசு வாசிபட, மற்ற ஒருகாசு வாசிபடாததற்குக் காரணம், அப்பெருவாய்மையுடைய திருமுனிவ ராய திருநாவுக்கரசர் தம் கைத் தொண்டினால் பெறும் காசாகும்; ஆதலால் இனிவரும் நாளில், வழங்கப்பெறும் காசு வாசி நீங்கியதாக அமைய இறைவரைப் பாடுவன்!' எனத் துணிந்து, தம் மனத்துள் கொண்டார்.
குறிப்புரை:

அடுத்த நாளில் ஞானசம்பந்தர் தம் இறைவரின் கோயிலுள் புகுந்து, 'வாசிதீர்த்தருளும்' என்று வேண்டிப் பதிகம் பாட, அதன் பயனாகப் பிள்ளையார் பெற்ற நல்ல படிக் காசினைக் கைக் கொண்டு பணியாளர்கள் கடைத்தெருவுக்குச் சென்று வணிகர்களிடம் காட்டினர், அதைக் கண்ட வணிகர், நல்ல தவத்தைச் செய்தவர்களே! இக்காசு மிக நல்லது! நீங்கள் வேண்டுவனவற்றை நாங்கள் தருவோம்!' எனச் சொல்லி அங்ஙனமே வேண்டும் எல்லாப் பண்டங்களும் தர, அந்நாள் தொடங்கி நாள் பகுதியாக நண்பகலில் அடியவர்களுக்கு உணவு உண்ணும்படி செய்வித்து அன்பு பெருக்கினர். வாசி தீரப் பாடிய பதிகம், 'வாசிதீரவே' (தி. 1 ப. 92) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

அரிய விலைக்கும் பெறுவதற்குரிய காசும் அவைகளேயாகி, அமுதுசெய்வதற்குரிய தொண்டர்கள் அளவு இல்லாது மேன்மேலும் பெருக, வருபவர்கள் எல்லோருக்கும் முன்பு வந்தவர்களுக்கும் மகிழ்ச்சியுடன் உணவு உண்ண, இனிய அடிசில் குறைவின்றி இருக்குமாறு, சடையில் திங்களும், பாம்பும், அணியும் இறைவர் திருவருள் செய்ய, சிறப்பால் மிக்க சீகாழி நகரின் அரசரான பிள்ளையாரும், வாக்கின் அரசரான திருநாவுக்கரசரும் என்ற இருவரும் பெருஞ்சோற்று மலைகளை அமுதமாய்த் தந்தருளினர்.
குறிப்புரை:

உலகில் மழை பெய்ததால் உணவுப் பொருள்கள் பெருகி, அதனால் எல்லா உயிர்களும் துன்பம் நீங்கித் திருவருளி னால் உலகம் முற்றும் செழிப்படையும் நற்காலம் வரவே, பிள்ளையார் சுருண்ட சடையையுடைய இறைவரின் திருவடிகளைப் பலநாள்கள் போற்றி, அங்கு எழுந்தருளியிருந்த பின்பு, தவ முனிவரான நாவுக் கரசரோடு கூடத் தம் இறைவரின் திருவருள் பெற்றுக் கொண்டு, உலகத் தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடங்கள் பலவற்றையும் வணங்கிச் செல்பவராய் அழகிய திருவாஞ்சியம் என்ற பழைய பதியைச் சென்று அடைந்தனர்.
குறிப்புரை:

நிலைபெறும் 'திருவாஞ்சியத்தில்' விரும்பி எழுந்தருளியிருக்கும், மூன்று கண்களும் திருநீலகண்டமும் உடைய அரிய மணியான இறைவரை வணங்கிப் போற்றிப் பெருமை பொருந் திய ஒலியையுடைய நீர் சூழ்ந்த திருத்தலையாலங்காடும், அதன் அருகிலுள்ள இறைவரின் திருப்பெருவேளூரும் பாடி, நாடும் புகழை உடைய ஒப்பில்லாத திருச்சாத்தங்குடியில் சென்று அடைந்து, இறை வரின் திருக்கரவீரத்தையும் விரும்பிப் பாடியருளித் தேடுகின்ற மறைக ளுக்கும் எட்டாத இறைவரின் திருவிளமரையும் போற்றிப் பின் திருவா ரூரைத் தொழுவதற்கு நினைந்து சென்று அந்நகரில் புகுந்தார். இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: திருவாஞ்சியம் #NAME? #NAME? திருப்பெருவேளூர் #NAME?

சிவபெருமான் மகிழும் திருவாரூரை வணங்கிச் சென்று, நன்மைகொண்ட திருகாறாயிலைச் சேர்ந்து வணங்கி, பசுமை யான நீரை உடைய மென்மையான வயல்கள் சூழ்ந்த திருத்தேவூ ரினை அணைந்து போற்றி, இறைவரின் திருநெல்லிக்காவைப் பணிந்து திருப்பதிகம் பாடிச் சென்று, தேவதேவரின் கைச்சினமும் போற்றி, தெங்கூரும் மிக்க புகழையுடைய திருக்கொள்ளிக்காடும் போற்றி, மேற்சென்று, செம்பொன்னால் அழகுபடுத்தப்பட்ட மதில் களையுடைய திருக்கோட்டூரினை வணங்கிச் சென்று, திருமலிகின்ற திருவெண்துறையினைத் தொழும் பொருட்டுச் சென்று சேர்ந்தார். இத் திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்: திருக்காறாயில் #NAME? (தி. 2 ப. 15) #NAME?

திருவெண்துறை என்ற நகரத்தை வணங்கிப் போற்றி மகிழ்ந்து பதிகம்பாடி, நான்முகன் திருமால் இவர்களுக்கு அறிவதற்கு அரியவரான இறைவர் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் சென்று போற்றிப் பதிகங்களும் பாடிப் பரவும் தொண் டர் கூட்டம் அருகில் வர, கற்றவர் வாழ்வதற்கு இடமான திருத்தண் டலை நீள்நெறி முதலான திருப்பதிகளும், பொன்மதிலை உடைய திருக்களரும், பகைவரின் வேள்வியை அழித்த இறைவர் எழுந்த ருளிய மற்றப் பதிகளையும் சென்று போற்றி, அதுபொழுதே திரு மறைக்காடு என்ற பதியின் அருகே சேர்ந்தனர். திருவெண்துறையில் அருளிய பதிகம், 'ஆதியன்' (தி. 3 ப. 61) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும் 'மருவும் தானம் பற்பலவும்' என்பது குன்றியூர், திருச்சிற்றேமம், மணலி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருச்சிற் றேமத்தில் அருளிய பதிகம், 'நிறை வெண்திங்கள்' (தி. 3 ப. 42) எனத் தொடங்கும் கொல்லிக் கௌவாணப் பண்ணிலமைந்த பதிகமாகும். மற்ற இரண்டு பதிகளில் அருளிய பதிகங்கள் கிடைத்தில. திருத்தண்டலைநீள்நெறியில் அருளிய பதிகம் 'விரும்பும் திங்களும்' (தி. 3 ப. 50) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணில் அமைந்ததாகும். திருக்களரில் அருளிய பதிகம் 'நீருளார்' (தி. 2 ப. 51) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும். பதி பிறவும் என்பதால், மங்களம், திருமுகத்தலை, களப்பாள் தகட்டூர், திருக்குன்றளூர், திருக்கடிக்குளம், திருஇடும்பாவனம், திருஉசாத்தானம், முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவற்றில் முதல் ஐந்து பதிகட்குப் பதிகங்கள் கிடைத்திலது. மற்ற மூன்று பதிகளை வணங்கிய செய்தியைப் பின்னர் 623, 624ஆம் பாடல்களில் ஆசிரியர் சேக்கிழார் குறிக்கின்றார்.

கரிய சமணரான கொடிய பாலை நிலத்தைத் திருவருள் துணைக் கொண்டு கடந்து வந்த திருநாவுக்கரசரும், கடலின் சார்பை உடைய சீகாழிப் பதியினர்க்குத் தலைவரான பிள்ளையாரும் ஒருங்கு எழுந்தருளி வருவதைச் செவியேற்ற திருமறைக்காடு என்ற பதியில் உள்ளவர்கள், சிறப்பால் மிக்கவராய், ஊரை முற்றும் அணி செய்து திருவிழாக் கொள்வதென எதிர்கொள்ள, உயர்ந்த பாக்கு மரங்களும், வாழை மரங்களும், நிறைந்த நீர்க் குடங்களும், விளக்கு களும் சிறக்க, வார்முரசு முதலான மங்கல ஒலிகளும் பெருக, வர வேற்க, அடியார்களுடனே கூட மகிழ்ந்து வந்தனர். கடத்தற்கு அருமையும் கொடுமையும் தோன்ற, அமணரை வெஞ்சுரம் என உருவகித்தார்.

அந்நகரில் முன்பு வந்த திருநாவுக்கரசரை முறைப்படி எதிர்கொண்டு வரவேற்றுப் பெருமகிழ்ச்சியடைந்து, பின்னால் சேரவருகின்ற சம்பந்தரின் பெருகிய காளம் முதலான சின்னங்களின் ஓசையினைக் கேட்டுத் தலைமீது கைகளைக் குவித்துக் கொண்டு சென்று, தொலைவில் நிலத்தின் மேல் விழுந்து வணங்கு தலும், திருந்தும் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் அழகான முத்துச் சிவிகையினின்றும் இறங்கி வணங்கி, அவர்களுடன் மகிழ்ச்சி யுடன் சென்றார்.
குறிப்புரை:

திருநாவுக்கரசருடன் ஞானசம்பந்தரும் தூய மணிகளையுடைய நீர் சூழ்ந்த திருமறைக்காடு என்ற பழம் பதியின் திருவீதியில் புகுந்தபோது, மாதவர்களும் அந்தணர்களும் மற்றும் உள்ளார்களும் 'அரகர' என்று முழங்கிய பேரொலியானது, பெரிய வானமும் எண் திசைகளும் நிறைந்து, மேல் எழுந்து, ஒலி பொருந்திய நீரையுடைய கடல் ஒலியையும் அடக்கி, வானத்தின் மேல் உள்ள விண்உலகத்தின் அப்பாலும் அப்போதே சென்றது.
குறிப்புரை:

அடியவர்களும் அவ்வூர் மக்களும் அருகில் இருந்து போற்றிவர, அழகிய தெருக்களின் வழியே வந்து சேர்ந்து, பக்கத்தில் சுற்றியுள்ள கொடிகள் திகழும் செழிப்பான திருமாளிகை யின் முன் உள்ள பெரிய கோபுரத்தின் முன் தாழ்ந்து, வணங்கி, உள்ளே புகுந்து, எண்ணற்ற தேவர்களும் முனிவர்களும் நெருங்கும் தெய்வத் தன்மையுடைய திருமுன்றிலை வலமாய் வந்து, திருமுன்பு நேராகச் சென்று, முற்காலத்தில் இம் மண்ணுலகத்தில் மறைகள் வழிபாடு செய்து திருக்காப்புச் செய்துவைத்த பசும்பொன் அணிந்த மணிகளை உடைய வாயிலின் பக்கத்தில் வந்தனர்.
குறிப்புரை:

அருமறைகள் காப்புச் செய்து மூடிவைத்த அத்திருக்கதவைத் திருக்காப்பு நீக்கித் திறப்பதற்கு, மறைகள் ஓதும் பெருமையுடைய அன்புடைய அடியவர்கள் வந்து சேர்ந்து, முயன் றும், கதவின் காப்பு நீக்கப் பெறாத காரணத்தால், அந்நாள் தொடங்கி, அவ்வாயிலின் அருகே வேறு ஒரு வாயில் அமைத்துக் கொண்டு வழிபட்டு ஒழுகும் இயல்பை உள்ளவாறு கேட்டு, உயர்வான சீகாழித் தலைவர் ஆன ஞானசம்பந்தர் வியப்புக் கொண்டு திருநாவுக்கரசரிடம் சொல்லுவாராய்,
குறிப்புரை:

'அப்பரே! திருமறைக்காட்டின் இறைவரை, நேராக அமைந்துள்ள திருவாயிலைத் திறந்து புகுந்து, எவ்வகை யானும் நாம் வணங்கிட வேண்டும். இந்த வாயில் காப்பு நீங்கும்படி நீரே மெய்ப்பொருளில் அமைந்த வண்மையுடைய தமிழைப் பாடி யருளவேண்டும்' என்ன, விளங்கும் சொல்லரசும் இசைந்து 'என்னை இது செய்யும்படி கூறுவீரானால் இதனைச் செய்வேன்' எனக் கூறித் திருப்பதிகத்தைத் தொடங்க, அபிமுகத்துத் திருவாயில் - இறைவரின் திருமுன்புள்ள திருவாயில். பாடத் தொடங்கியருளிய பதிகம் 'பண்ணின் நேர் மொழி யாள்' (தி. 5 ப. 10) எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகமாகும்.

பாடிய அத்திருப்பதிகத்தின் தொகையான பத்துப் பாடல்களும் நிரம்பிய பின்னும், பசும்பொன் அணிந்த திருவாயிலின் பெருமையையுடைய பொன்கதவு நீங்காதிருந்த செய்கையால், அப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில், அரிதாக வருந்தி வேண்டி நின்று பாடத் திருக்காப்பு நீங்கவே, அருள் திருக்கூத்து இயற்றும் திருவடி களையுடைய சிவபெருமானின் அடியவர்களும் விண்ணவர்களும் எழுப்பிய அரவொலி முழக்கம் அண்டங்கள் எல்லாம் மூழ்குமாறு எழுந்தது. பதிகத்திற்குரிய பத்துப் பாடல்களையும் பாடிய பின் பும், திருக்கதவம் திறவாதாகத் திருக்கடைக்காப்பில் அரிதில் வேண்டத் திருக்கதவம் திறந்தது என்றருளுகின்றார் ஆசிரியர். எனவே இப் பதிகம் பதினொரு பாடல்களையுடையதாய், இப்பொழுதுள்ள பத்தா வது பாடல் பதினோராவது பாடலாய் அமைய, இடையில் ஒருபாடல் இருந்து சிதைந்திருத்தல் வேண்டுமோ என எண்ணத் தக்கதாயுள்ளது. அரிது வேண்டி நின்றெடுக்க என்றது 'அரக்கனை விரலால் அடர்த் திட்ட நீர், இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே' (தி. 5 ப. 10 பா. 11) எனவரும் பகுதியை உளங்கொண்ட குறிப்பாகும். இப்பாடல் திருக்கடைக் காப்பாதல் நாவரசர் புராணத்தாலும் (தி12 பு. 21 பா. 268) அறியப்படும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பொ-ரை: இறைவர் திருக்கதவம் திறந்தமையைக் கண்ட பொழுதே, நாவுக்கரசரை நோக்கி, அழகிய சீகாழி அரசர் போற்ற அரசரும் அவரைப் போற்ற, அற்புதம் அடைந்த நிலையுடையவர்கள் ஆகி, திருமறைக்காட்டில் ஆளும் இறைவரின் திருமுன்புள்ள நேர்வழி யால் உள்ளே சென்றனர்.
குறிப்புரை:

அங்ஙனம் கோயிலினுள் புகுந்த இருபெருமக் களும், தலைமீது கூப்பிய கைகளுடன் சென்று, தாயினும் இனிய தம் இறைவரைக் கண்டனர். அவர்களின் கண்களினின்றும் அருவியைப் போல் பாயும் நீர் வழிந்திட, நிலத்தின் மீது பொருந்திய திருமேனியை உடையவர்களாய் உடல் விதிர்த்து விரைவாக எழுந்து வணங்கினர்.
குறிப்புரை:

அன்பிற்கு எல்லை காணாதார் ஆகி, ஆனந்த வெள்ளத்துள் மூழ்கி, எலும்பும் நெகிழ்ந்து உருக நோக்கி, மீண்டும் எழுவதும் திருமுன்பு விழுவதுமாய்ப் பின் இறைவரின் திருமுன்பு நிற்பது கூட இயலாதவராய்ச் சொல் தடுமாறும் நிலையில் போற்றி, மின்னல் என விளங்கும் சடையையுடைய இறைவரைத் திருப்பதிகங் களால் போற்றி வெளிப்போந்தனர். அன்பு மீதூர்வால் இத்தகைய மெய்ப்பாடுகளுடன் அருளிய இருவர் பதிகங்களும் இது பொழுது கிடைத்தில.

வெளியே வந்து சேர்ந்த அமயத்து, சீகாழித் தலைவரான பிள்ளையாரை நோக்கி, பொல்லாத மறச் செயல்களைச் செய்கின்ற சமணர்கள் செய்த வஞ்சனைகளை எல்லாம் கடக்க வல்லவரான நாவுக்கரசர், 'பல நிறங்களையுடைய மணிகள் பதித்த கதவு திறத்தலும் அடைத்தலுமாகிய செயல்கள் எப்போதும் வழங்கும் பொருட்டாய்த் திறந்தவாறே அடைக்கவும் பாடியருளுக!' என்று கூறியருளினார்.
குறிப்புரை:

அவ்வாறு நாவுக்கரசர் கூறியருள, அரிய மறை யில் வல்ல சம்பந்தரும் வெற்றி பொருந்திய ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட இறைவரை வேண்டிய விருப்பத்துடன் 'சதுரம் மறை' எனத் தொடங்கும் இனிமையான தமிழ்ப் பதிகத்தின் முதல் பாடலை அருளிச் செய்த அளவில், இரண்டு பக்கத்தும் திறந்து நின்ற அக்கதவுகள் காப்பு நிரம்பிட அடைத்தன. இத்தொடக்கம் உடைய திருப்பாடல், சதுரம்மறை தான்துதி செய்து வணங்கும் மதுரம்பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா இதுநன்கிறை வைத்தருள் செய்க எனக்குன் கதவம்திருக் காப்புக் கொளும் கருத்தாலே. (தி. 2 ப. 37 பா. 1)என்பதாகும். கதவம் திருக்காப்புக் கொள்ளவேண்டிய பாடல் ஈதொன் றேயாக ஏனைய பாடல்கள் எல்லாம் வேறுவேறு வினாக்களை உடைய வினாவுரைப் பாடல்களாய் அமைந்திருத்தலின், இப்பாடல் இசைப்பவே திருக்கதவம் காப்பு நிரம்பிடக் கொண்டது என ஆசிரியர் கூறுவாராயினர்.

அவ்வாறு அடைபடக் கண்டு, சீகாழிப் பெருந் தகையாரான ஞானசம்பந்தரும் அழகிய சொல்தொடைத் தமிழை ஆள்கின்றவராகிய நாவுக்கரசரும் தொழுது எழுந்து நிற்க, அது பொழுது அடியவர்கள் மகிழ்வொலி செய்தனர். அருகெங்கும் கற்பக மலர் மழை பெய்தது. சீகாழித் தலைவரான சம்பந்தரும் சீரிய ஒழுக் கத்தை உணர்த்தும் தம் தமிழ்த் திருப்பதிக மாலையை மேல் பத்துப் பாடல்களும் நிரம்புமாறு அருளிப் போற்ற,
குறிப்புரை:

அன்றுமுதல் அத்திருவாயில் வழியாக நேரே சென்று மெய் வடிவான மறைகளைப் போலவே உலகத்தவர்களும் புகுந்து வணங்குமாறு நிகழ்வித்து, எதிர்காலத்திலும் இவ்வாறு வழங் குமாறு செய்த எல்லையில்லாத பெருமையுடைய அவ்விரு பெருமக் களையும் கைகூப்பி வணங்கிக் கடல் சூழ்ந்த உலகம் பெரு வாழ்வை அடைந்தது. இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

அரிய மறைகளும் அவற்றின் அங்கமான நூல் களும் ஆகிய எல்லாம் இடம் அகன்ற பெரிய வானத்தில் மகிழ்ச்சி மீதூரப் பெருமையுடன் முழங்க, தேவ துந்துபிகள் ஐந்தும் ஒலிக்க, பெருந்தகையாரான அவ்விரு பெரியார்களும் எதிர் எதிர் வணங்கிச் சென்று, செழுமையான அந்நகரம் விழாக் கொள்ளத் தத்தமக்கு அமைந்த மடங்களிலே புகுந்தனர்.
குறிப்புரை:

எண்ணற்ற மறைகள் ஒன்று கூடி நெருங்கிச் செய்த பணியை (திறக்கவும் அடைக்கவுமான பணியை) உயிர்களான நம்மிடம் வரும் குறைபாடுகளையெல்லாம் நீக்குபவர்களாகிய அரச ரும், பிள்ளையாரும் செய்து வைத்தனர். ஒலிவடிவான கங்கை தங்கிய சடையையுடைய இறைவரின் திருவடிகளைப் போற்றும் இப்பெரியவர்களின் பெருமையை யாரே அளவிட்டுச் சொல்ல வல்லார்? எவருமிலர்!
குறிப்புரை:

நான்மறைகளின் இறைவர் முன்பு தாம் வழங்கி யருளிய அருளிப்பாட்டின் வழி நின்று, அவ்வருட்டிறத்தையே நினைந்தும் வாழ்த்தியும் வரும் ஒருமையுணர்வுடைய தொண்டர்கள், தம் பெருமான் அருளிச் செய்யும் அருள்செயல்களைப் போலத் தாமும் செய்ய வல்லவர் என்றார். அவ்வரிய மறைகளுடன் மெய்த் தொண்டர்களுக்கு உள்ள ஒற்றுமை மிகவும் பெரிதேயாம் அன்றோ? மறைகள் திறக்கவும் அடைக்கவும் பாடிய அருள்நிலை யுடையன திருக்கதவுகள். அக்கதவுகள் ஞானசம்பந்தர் ஒருபாடல் பாடிய அளவிலேயே அடைக்கப்பட்டன. என்றால் அம்மறைகட்கும் ஞானசம்பந்தரின் திருவாக்கிற்கும் வேற்றுமை பெரிதேயன்றோ எனப் பாராட்டி மகிழ்கின்றார் நாவரசர். மனம் மொழி மெய்களால் தன் னையே சார்ந்திருக்கும் ஞானியர்க்கு இறைவன் தான் செய்யும் தன்மைகளை அவர்க்கும் ஆக்கியருளுவன். இதனைத் 'துரியங்கடந்த சுடர்த் தோகையுடன், என்றும் பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச் சாக்கிரத்தே செய்தருளித் தான் செய்யும் தன்மைகளும், ஆக்கியிடும் அன்பர்க்கு அவன்' (திருக்களிற்றுப்படியார் - 69) என வரும் ஞானநூற் கூற்றும் காண்க. இடையீடு - வேற்றுமை.

இவ்வாறு நினைத்துத் திருமறைக் காட்டு இறைவரின் திருவடிகளின் இயல்பை நினைந்து கொண்டு மெய்ம் மைத் திறம் தெரிந்து ஒழுகும் நாவுக்கரசர் உறங்கும் போதில், திருநீல கண்டரான சிவபெருமான் சைவக் கோலத்தில் எழுந்தருளி, அவருக்குக் காட்சியளித்துத் 'திருவாய்மூரில் நாம் இருப்போம்! அங் குத் தொடர வா!' எனக் கூறி முன்னே போக,
குறிப்புரை:

அவ்வாறு கனவில் கண்ட பொழுதே, எழுந்து கைகளைக் கூப்பி விரைவாக உடன் செல்பவரான நாவுக்கரசர், நிரம்பிய பேரன்புடன் பொருந்துவார் போன்றிருந்தும் காணாத வராய், எட்டுத் திசையிலும் தேடிப் பார்த்தவருக்குக் கிட்டுவார் போலிருந்து கிட்டாதவராய் நின்ற தேவ தேவரான பெருமானின் பின்பு மிகுந்து எழும் அன்புடனே தொடர்ந்து சென்றார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

திருநாவுக்கரசர் அவர்பின் செல்லச் சீகாழித் தலைவரான சம்பந்தரும், அப்பர் எங்குச் சென்றனர்? என்று வினவ, அறிந்தவர் 'மேன்மேல் பொங்கிய அன்பின் மேலீட்டால் திருவாய் மூருக்குச் சென்றார்' என்று கூற, அப்பர் அங்ஙனம் சென்ற காரணம் தான் என்னவோ? என்று ஐயுற்று அங்குத் தாமும் சேரச் செல்ல லானார்.
குறிப்புரை:

அவ்வாறு சென்றவர், நாவுக்கரசர் இருந்த இடத்தை அடைந்தபோது, இறைவர் அம்மையப்பராக இருந்து தம் திருக்கூத்தைக் காட்டியருளவே, அதுகண்ட பிள்ளையார் அரசருக்குக் காட்டி மகிழ்ந்து 'தளிரிளவளர்' எனத் தொடக்கமுடைய பதிகத்தைப் பாடியருளி, தலை தாழ்த்தி வணங்கி, அரசரோடும் திருவாய்மூருக்குச் சென்று, திருத்தொண்டின் இனிய இயல்பு பொருந்தக் கூடி இருவரும் இறைவரைப் போற்றியிருந்தனர். 'தளிரிளவளர்' (தி. 3 ப. 87) எனத் தொடக்கமுடையது நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

திருவாய்மூரில் நிலைபெற்றெழுந்தருளிய இறைவரைப் பாடும் சொல் பதிகத்தால் போற்றி, அப்பதியில் தங்கி, பொருந்திய அன்பு மேலும் மீதூர, இருபெரு மக்களும் கூடித் தங்கி யிருந்து, பின் அங்கிருந்து மீண்டு, தேடும் பெரிய மறைகளினால் வணங்கிக் காணப் பெற்ற இறைவரின் திருமறைக்காட்டில் சேர்ந்தனர். பாடுசொற்பதிகம் என்று குறிக்கப் பெற்ற பதிகம் இதுபொழுது கிடைத்திலது. அன்றி முற்கூறிய 'தளிரிள வளர்' என்ற பதிகத்தையே மீண்டும் கொண்டு போற்றுவாராயினர் என்றலும் ஒன்று எனக் கூறி, இதுபோன்று முற்கூறிய பதிகத்தையே மீண்டும் எடுத்து ஆண்டமைக்குப் 'போக மார்த்த' எனத் தொடங்கும் பதிகத்தையே அனல் வாதத்திற்கு மீண்டும் எடுத்தாண்டமையையும், திருமறைக் காட்டில் சுந்தரருடன் சென்ற கழறிற்றறிவார் அருட்சேரர் சிறந்த அந் தாதியிற் சிறப்பித்தனவே ஓதித் திளைத்தெழுந்தார் எனக் கூறுதற் கேற்ப, வழிபட்டமையையும் சான்றாகக் காட்டுவர் சிவக்கவிமணி யார். (பெ. பு. திருஞா. பு. உரை, பா. 597)

சீகாழிப் பதியினரான ஞானசம்பந்தர், தமிழ் மொழித் தலைவரான நாவுக்கரசருடன் கூடி, உலகில் பொருந்திய பெருஞ் சிறப்புடைய செல்வம் நிறைந்த திருமறைக்காட்டில் தங்கி இருந்து, நெற்றிக் கண்ணையுடைய பெருமானின் திருவடிகளை வணங்கிப் பண் பொருந்திய திருப்பதிகங்களைப் பாடிப் போற்றி யவாறே அங்கு எழுந்தருளியிருந்தனர். இதுபொழுது அருளிய திருப்பதிகங்கள்: 1 'சிலைதனை நடுவிடை' (தி. 1 ப. 22) #NAME? 2

இங்ஙனம் இவ்விருபெரு மக்களும் அவ்விடத்தே இருந்தனராக, இனி இதுகாறும் கொண்டொழுகிய நல்லொழுக்க நெறியினின்றும் இடைக் காலத்தே தவறிய பாண்டிய நாட்டில், உண்மை நெறியில் நில்லா தீவினைப் பயனான சமண சமயம் மிகுந்து, நல்லொழுக்க நெறிமுறை நீங்கியதால் அனைவரும் கலங்கிய காலத்தில்,
குறிப்புரை:

பாண்டியனும் முன்செய்த தீவினையின் பயனால், அச்சமண நெறியின் சார்பையே நல்லறம் என எண்ணி, அவ்வழியிலேயே ஒழுகினானாக, நிலைபெற்ற வைதிக வழக்கமாகும் சைவத்தின் மெய்ம்மையுடைய நன்னெறி, மக்களிடம் வழக்கில் இல்லாது மாறி, அதுபொழுது குற்றம் பொருந்திய தீநெறியாய ஒழுக்கம் பரவியது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பாண்டியரின் நாடான தண்தமிழ் நாட்டில் ஒப்பில் லாத சிறப்பை உடைய எல்லாத் திருப்பதிகளிலும் சூழ்ந்த இருள் கூட்டம் போல் கட்டிய மயில் பீலியுடன் நீர்க் கமண்டலங்களையும் கையில்கொண்டு சமணர்களே எங்கும் காணுமாறு திரள, சீர்ப்பதிகளாவன - திருபுவனம், திருநெல்வெலி, திருக் குற்றாலம் முதலாயின என்பர் சிவக்கவிமணியார்.

மயிர் பறித்த தலையுடனே பாயையும் தடுக் கையும் தாங்கி, கையிற் செறிந்த முக்குடையையும் கொண்டு திரியும் சமணர்கள் எங்கும் நிறைந்து, தத்தம் அறிவில் அறிந்தவாறே அச் சமயத்தின் நூல் அறிவில் அடங்கிச் சைவநெறியிலே நாட்டம் செல் லாத நிலையில் அந்த நாட்டில் உள்ளவர்கள் வாழும் அமையத்தில்,
குறிப்புரை:

கட்டப்பட்ட வில்லையுடைய பாண்டிய மன்னன் உய்யும் பொருட்டுச் சோழர் பெருமான் மங்கலமாகப் பெற்ற செல்வம் பொருந்திய பாண்டிமா தேவியாரான மங்கையர்க்கரசியாரும், ஒலிக் கும் வீரக்கழலை அணிந்த அமைச்சரான குலச்சிறையாரும் ஆகிய இவ் விருவர் பாலன்றி அந்நாட்டில் சைவநெறி எங்கும் வழங்காதாக.
குறிப்புரை:

அந்நிலையில் அவ்விருபெருமக்களும் பெறு தற்கு அரிய தமிழ்நாடு அடைந்த தீமையின் பொருட்டுத் தங்கள் உள் ளத்தில் அளவற்ற துன்பம் கொண்டவர்களாகித் தாங்கள் ஓங்கிய சைவ நெறியில் நின்று ஒழுகிய தன்மை, கழலை அணிந்த பாண்டியன் முன்பு வெளிப்படா வகையில் கொண்டு செலுத்தினர். அறநெறியோடு, அரன் நெறியையும் காத்துவந்த மரபு பாண்டியர் மரபாகும். கண்ணுதற் பெருங்கடவுளே பாண்டி மன்னன் ஆகவும், கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த புலவர் தலைமகனாகவும் நின்று காத்த பெருமையுடைய பாண்டியநாடு. அந்நாட்டின் தலைவனாய பாண்டி மன்னனும் தொடக்கத்தே சிவ நெறி நின்றவனாயிருந்து இடைக்காலத்தேயே மாறி நின்றனன். இந் நிலையில் அவனைப் புறம் போகாது காத்தற்குரிய கடமை அவன் தன் வாழ்க்கைத் துணைவியார் மேலும், அமைச்சர் மேலும் நிற்பதாயிற்று. அக்கடமையுணர்வில் நின்றமையாலேயே, 'கடைக் கொட்கச் செய்தக் கது ஆண்மை' (குறள், 663) எனும் அறவுரைப்படி அவரிருவரும் சைவ ஒழுக்கத்தில் நின்ற தன்மை, பாண்டியன் முன்பு புலப்படாவகை கொண்டுய்க்க நேர்ந்தது. இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

இவ்வாறு ஒழுகி வந்த மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும், ஏழுலகம் உய்யுமாறு தோன்றிய நிலைபெற்ற சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர், நிலையான மறையின் உள் ளுறையைக் கொண்ட சைவமான செந்நெறியை உலகில் விளங்கச் செய்பவராய் விளங்கித் திருமறைக் காட்டில் அதுபொழுது வீற்றிருந் தருளும் நன்மை தரும் நிலையைத் தம் பாண்டி நாட்டின் நல்வினைப் பயனால் கேட்டு அறிந்தனர்.
குறிப்புரை:

அங்ஙனம் கேட்டபோதே, வாட்படையை உடைய குலச்சிறையாரும் மங்கையர்க்கரசியாரும், உள்ளத்தில் பொங்கி எழுகின்ற மகிழ்ச்சி மீதூர, அப்பொழுது அலர்ந்த செந்தாமரை போன்ற முகத்தையுடையவர்களாகி, தொலைவில் உள்ளவர்கள் ஆயினும் நேரில் சென்று அவருடைய திருவடிகளை வணங்கிய வரைப் போன்றவர் ஆயினர். 'சேணன் ஆயினும் கேள் என மொழிந்து' (பதிற். 44) எனவரும் சங்கச் செய்யுளையும் நினைவு கூர்க.

பெருவிருப்பம் கொண்ட அவ்விருவரும் தாங்கள் நேரே கண்டு தொழும் கருத்தால், மலர்கள் மலர்தற்கு இட மான சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவரான சம்பந்தரின் திருவடிகளைச் சென்று வணங்கி வேண்டிக் கொள்ளுங்கள் என்று தம் ஏவலர்களை மறைவழிபட்ட திருமறைக் காட்டிற்குச் செல்லுமாறு அனுப்பினர்.
குறிப்புரை:

அங்ஙனம் விடுக்கப்பட்ட அறிவுடைய ஏவல் செய்யும் மக்களும் அவ்விடத்தினின்றும் நீங்கிச் சென்று, வளமை உடைய தமிழ்நாட்டின் எல்லை, பின்நிற்குமாறு வழிச்சென்று, இடைப் பட்ட சோழ நாட்டிலுள்ள மருத நிலங்களையும் காடுகளையும் ஆறு களையும் கடந்து, தேன் பொருந்திய தாழைகள் மலரும் நெய்தல் நிலப் பகுதியான திருமறைக்காட்டின் புறத்தே அடைந்தனர். ஞாங்கர் - இடைப்பட்ட நிலம்.

திருமறைக்காட்டில் சேர்ந்து, சீகாழிப் பதியில் தோன்றிய மறையவரான பிள்ளையார் விரும்பி இனிதாய் எழுந் தருளி இருக்கும் செல்வப் பெருமடத்தை அடைந்து, மேன்மேல் பெரு கிய விருப்பினால் தாங்கள் வரும் முறைமை உடைய தன்மை களையெல்லாம் அறியுமாறு வாயிற் காவலர்களிடம் கூறினர்.
குறிப்புரை:

அவ்வாயிற் காவலர்கள் திருமடத்தின் உட்புகுந்து திருஞானசம்பந்தரிடம் 'சோழன் மகளாரும் பாண்டிய மன்னரின் தேவியாரும் ஆன மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் அனுப்பத் தங்களின் பொற்கழல் அணிந்த திருவடி களை வணங்குதற்கு வந்தோம் என்று சிலர் வெளியே வந்து கூறினர்' என்று வணங்கி விண்ணப்பம் செய்து கொண்டனர்.
குறிப்புரை:

சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தர், வாயிற் காவலர் கூறியதைச் செவியேற்று ஒப்பில்லாத அருள்மிகு தலால் உள்ளம் மிக மகிழ்ந்து 'அவர்களை இங்கு அழைத்து வாருங்கள்' என்று ஆணையிட, ஞானசம்பந்தரின் புன்முறுவலோடு கூடிய திரு முகச் செவ்வியைப் பார்த்து, நல்ல தவமக்களான தொண்டர்கள் சென்று அழைக்க, நல்ல தன்மை பொருந்திய பாண்டிய நாட்டு ஏவலர் உட்புகுந்து சம்பந்தரைத் தலையால் வணங்கி எழுந்து நின்றனர்.
குறிப்புரை:

வணங்கி, எழுந்து நின்ற அவர்களைப் பார்த்துச் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர், மங்கையர்கரசியாருக்கும் பெருமையுடைய மலைபோன்று மெய்யடிமைத் திறத்தில் ஒழுகி நிற்கும் குலச்சிறையாருக்கும் நன்மை பொருந்திய நிலையைப் பற்றி வினவ, விடையிறுத்த அப்பணியாளர்கள் பின் பிள்ளையாரின் நல்ல திருவடிகளைப் போற்றுவார்களாய்,
குறிப்புரை:

'சமணர்களால் பாண்டிய நாடு தன் நிலைமை அழிந்து, தங்கள் மன்னனும் அவர்களின் அறியாமைக்குட்பட்டு அழுந்த, அதைப் பார்த்து மாதேவியாரும், அச்சம் தரும் கூர்வேலை ஏந்திய வெற்றியுடைய குலச்சிறையாரும் கூடி இந்த நிலைமையைச் சென்று சீகாழி மன்னவருக்குச் சொல்லுங்கள்' எனக் கூறித் தங்களை அனுப்பியவாற்றைக் கூற,
குறிப்புரை:

என்று அவர்கள் விண்ணப்பிக்க, விடைக் கொடியை உயர்த்திய சிவபெருமானின் தொண்டரெல்லாம் நன்றாக நம்மை ஆளுடைய இறைவரின் திருவடிகளைச் சாராத அளவற்ற சமணர்களாகிய குண்டர்களை வெற்றி கொண்டு, மறைநெறியே எங்கும் விளங்கச் செய்து, அங்கு நிகழும் ஒழுக்கங்கள் எல்லாம் சிவனடியார்களின் செயல்களே ஆகுமாறு தாங்கள் திருவுள்ளம் பற்ற வேண்டும் என்று வேண்டி நின்று போற்ற,
குறிப்புரை:

இவ்வாறு வேண்டிக் கொண்ட அவ்விரு திறத்தவர்களுக்கும் அருள் செய்து, சம்பந்தரும் நாவுக்கரசருடன் சென்று, விடைக் கொடியை உயர்த்திய இறைவரின் திருவடிகளை வணங்கி, வெளியே வந்து, இறைவரின் திருமுன்புள்ள பெரிய கோபு ரத்துள் இருவரும் எழுந்தருளி இருந்து கொண்டு, பாண்டி நாடு அடைந்த நிலையைப் பற்றிப் பாண்டிமாதேவியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் தமக்குக் கூறியனுப்பிய செய்தியை ஒப்பில்லாத நாவுக்கரசருக்குக் கூறி அதன் பொருட்டாகப் பாண்டிய நாட்டிற்குத் தாம் செல்வதற்குத் துணிந்தபோது, ஞானசம்பந்தர் நாவரசரோடு இருந்து, எண்ணித் துணிந்த செய்கையைக் கூறுமிடம், திருக்கோயிலின் உள்ளுமாகாது, புறத்துமாகாது திருக்கோபுரத்திலுள்ளாய அளவில் அமைத்துக் கொண் டது எண்ணற்குரியது. கோயிலின் உட்சென்று இறைவனை வணங் கும் பொழுது எவையும் பேசலாகாது; புறத்தே பலரும் காண்டற்குரிய நிலையில் இத்தகைய செய்தியை எண்ணித் துணிதலும் நலம்பயப் பதன்று. இவ்வகையில் எண்ணித்துணிதற்கென கொண்ட இடம் மிகப் பொருத்தமுடையதாகும்.

அரசர் அருளிச் செய்வாராய். 'பிள்ளாய்! சமண வஞ்சரின் வஞ்சகச் செயல்களுக்கு ஓர் அளவில்லை, மேலும் யாம் சொல்வது ஒன்றுண்டு, கோள் நிலைகளும் தீயனவாய் உள்ளன; ஆதலின் அங்கே செல்வதற்கு இசைவளிப்பது தகாது' என்றுரைக்க, சீகாழித் தலைவரான பிள்ளையார், 'நாம் வணங்கிப் போற்றுவது பெருமானின் திருவடிகளை' என எண்ணும் பொழுது, தீங்கு எவை யும் அணுகா எனப் பெருமானின் திருவடிகளைப் போற்றி, 'வேயுறுதோளி' எனத் தொடங்கும் பதிகம் பாடினார். இந்நிகழ்ச்சியை நோக்கி, நாவரசர் அமணர்க்கும், தீய கோள்கட்கும் அஞ்சியவர், எனக் கருதலாகாது. ஒரு பேரரசின் அழைப்பைத் துச்சமாகக் கருதி, 'நாமார்க்கும் குடியல்லோம்' (தி. 6 ப. 98) என முழங்கியவர் அவர். 'அல்லல் என்செயும்' (தி. 5 ப. 1 பா. 4) 'வானந்துளங்கில் என்' (தி. 4 ப. 112 பா. 8) 'பொய்ம் மாயப் பெருங்கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள், தீவினைகாள்'(தி. 6 ப. 27 பா. 1) என்ற தொடக்கத்தனவாய அரிய பாடல்களை எல்லாம் அருளியவர் நாவரசர். அத்தகைய பெரியவர் ஈண்டு அஞ்சுவது எல்லாம், பிள்ளையாரின் இளம் பருவமும், சமணரின் மலையனைய வஞ்சனைச் செயல்களும் கருதியே யாம் என்பது கருதத் தக்கதாம். 'வேயுறுதோளி' (தி. 2 ப. 85) எனத் தொடங்கும் பதிகம் பியந்தைக் காந்தாரப் பண்ணிலமைந்ததாகும். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபுடையன.

சீகாழியில் தோன்றிய பிள்ளையார் பாடி அருளிய அப்பதிகத்தைக் கேட்ட பின்னர், அவர்தம் உறைப்பைத் திருவுள்ளம் கொண்ட திருநாவுக்கரசரும், பிள்ளையார் பாண்டிய நாட்டுக்குச் செல்ல உடன்பட்டு முன்னெல்லாம் நிகழ்வதுபோல் தாம் அவர் முன்னாகச் செல்ல ஒருப்பட்டபோது, முப்புரம் எரித்த இறைவரின் மகனாரான பிள்ளையார் 'அப்பரே! இந்நீர் நாடான சோழநாட்டில் எழுந்தருளியிருப்பீர்!' எனக் கூறிக் கைம்மலர்களைக் கூப்பி வணங்கி, அவரது செயலைத் தவிருமாறு செய்தார்; நாவுக்கரசர் தாமும் எதிர்வணங்கிப் பிரிதற்கு அரிய திருவுள்ளத்துடன் இசைந்தார்.
குறிப்புரை:

மறைநெறியை வளரச் செய்வதற்கும், சைவத்தை விளக்கம் செய்வதற்கும் திருமறைக்காட்டு இறைவரின் திருக்கோயி லுக்குள் மீண்டும் புகுந்து, நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து, பாடியும் போற்றியும், அவரது அருள் விடையைப் பெற்றுக் கொண்டு புறம் போந்தவராய், மாதவமுடைய நாவுக்கரசர் மறுக்க ஒண்ணாதபடி அவரை வணங்கியருளி விடைதந்து, நிலைபெற்ற விருப்பத்துடன், அருமை பொருந்த அளவளாவி, நீங்கிச் சென்று ஒளியுடைய முத்துச் சிவிகையின் அருகே சீகாழித் தலைவர் வந்தார். இது பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது.

திருநாவுக்கரசரும் அங்குத் தங்கியிருந்தார். இங்குத் திருஞானசம்பந்தர் செழுமையான தன்மையுடைய முத்துக்கள் நிறைந்த பெரும்புகழையுடைய சிவிகையின் மீது ஏறி, விடைக் கொடியை உயர்த்திய இறைவரின் திருவடிகளைத் தலைமேற் கொண்டு பேணும் உள்ளத்துடன், இறைவரின் ஒப்பில்லாத பெயரான திருவைந்தெழுத்தை ஓதி இறைவரின் திருநீற்றுடன் விளங்கும் திருமேனியை எண்ணிக் கைதொழுதனர். உள்ளத்தில் எப்போதும் வரும் இறைவர் பெயரால் அன்பு உருகிப் பெருக, கடல் ஓசை போல அடியார்களின் அரகர ஒலியான மகிழ்வொலி அப்பொழுது உலகம் எங்கும் நிறைந்தது.
குறிப்புரை:

பெருகி எழுகின்ற திருத்தொண்டர்கள் போற்ற வும், நான்கு திசைகளிலும் மங்கல இயங்கள் ஓங்கி இசைக்கவும், மறையொலி பெருகவும், மேகம் போல ஒலிக்கும் சங்கம் முதலிய ஒலிக் கருவிகள் பலவும், எதிரொலி செய்யவும் பெரிய வானவெளி யைக் கொடிகள் மறைக்கவும், படகம், பேரி, தாரை, காளம், தாளம் என்பனவற்றுள், முன்னையது தோற்கருவிகளுள் ஒன்றாகும். ஏனையவை இயங் களின் வகைகளாம்.

மலர்மழையைப் பொழிந்தும், மங்கல வாழ்த்துக்களை இனிதாக இசைத்தும், மலர்களை இட்ட மணமுடைய நீர் நிறைந்த குடங்களையும் அழகிய விளக்குகளையும், நறுமணப் புகைகளுடன் ஏந்தி, நீண்ட தோரணங்களை நிரல்பட அமைத்து, அடியவர்கள் வரவேற்கச் சென்று, ஒரு கலையுடைய மாலைமதி யத்தைச் சூடிய இறைவரின் பதிகள் பலவற்றையும் வணங்குவாராய்,
குறிப்புரை:

தெளிவான அலைகள் சூழ்ந்த கடற்கரையில் உள்ள திருவகத்தியான்பள்ளியில் வீற்றிருக்கும் தேவதேவரான இறைவரின் திருவடிகளை வணங்கி, அரிய தமிழ்ப் பெருமறையின் தேவாரப் பதிகத்தைப் பாடி, மேகங்கள் தங்குவதற்கு இடமான மணற்குன்றுகள் சூழ்ந்த திருக்கோடிக்குழகரை அடியார்கள் சூழத் தொழுதவாறே சீகாழித் தலைவர் மேற்சென்றார். திருஅகத்தியான் பள்ளியில் அருளிய பதிகம் 'வாடிய வெண்தலை' (தி. 2 ப. 76) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணி லமைந்த பதிகமாகும். கோடிக்குழகரை வணங்கி அருளிய பதிகம் கிடைத்திலது. இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

நெற்றிக்கண்ணையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் 'திருக்கடிக்குளம்' என்ற பதியை வணங்கி, மக்களின் மனம்நிறைந்த 'திருஇடும்பாவனம்' என்ற பதியையும் ஏத்திச் சென்று, இவ்வுலகத்தில் நிறைந்துள்ள பிறபதிகளையும் மகிழ்வுடன் கூடிய அன் பினால் வணங்கி, அங்கங்கே பண்பொருந்திய தமிழ்ப் பதிகங்களைப் பாடிய வண்ணமே செல்பவராய், இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:1. திருக்கடிக்குளம் (தி. 2 ப. 104) - பொடிகொள்மேனி - நட்டராகம். 2. திருஇடும்பாவனம் (தி. 1 ப. 17) - மனமார்தரு - நட்டபாடை. 'பதிபிறவும்' என்பன தில்லைவளாகம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.

'திருவுசாத்தானம்' என்ற பதியில் இறைவரின் திருவடிகளைப் பணிந்து, பொருந்திய செந்தமிழ்ப் பதிகத்தை, அப் பதியில் திருமால் வழிபட்டவாற்றை வைத்துப் பாடி, தம்மை வந்த டையும் அடியார்களுக்கு நல்வினை தீவினை என்ற இரண்டின் பற்றுதலை அறுக்கும் ஞானசம்பந்தர், அளவில்லாத திருத்தொண்டர் களுடனே, பெருகும் விருப்பத்தை உடையவராய்ப் பிற பதிகளையும் வணங்கிச் செல்வாராய், திருவுசாத்தானத்தில் அருளிய பதிகம், 'நீரிடைத் துயின்றவன்' (தி. 3 ப. 33) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணி லமைந்த பதிகம் ஆகும். இப்பதிகத்தில், நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன் அனுமான் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்த எம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.
(தி. 3 ப. 33 பா. 1)எனவரும் முதல்பாடலைக் கொண்டே, 'மால் போற்றும்படி பாடி' என்றருளினார் ஆசிரியர். பிறபதிகள் என்பன திருக்களந்தை, திருக் களர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.

கருமையான உப்பங்கழிகளையும் கடலின் பக்கத்தில் உள்ள நெய்தல் நிலத்தையும் கடந்து சென்று, திருந்திய சிறப்புடைய காவிரி நாடான சோழ நாட்டின் தென்மேற்குத் திசையை நோக்கி, அருகில் நெருங்கிய தூறுகொண்டு எழும் பெரிய சாலி என்னும் நெற்பயிர்களையும், எவ்விடத்தும் நெருங்கிய காய்க் குலைகளையுடைய தென்னைகளையும், நெருக்கமாக வளரும் பாக்கு மரங்களையும், சூழக்கொண்ட நிறைந்த மருத நிலத்தின் வழியே சென்றார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

சங்குகள் நிரம்பிய வயல்களில் எங்கும் நெல்லும் கரும்பும் உள்ளன. நறுமணம் எங்கும் கமழும் தாமரைகள் நிறைந்த, குளிர்ந்த மணமுடைய பொய்கைகள் எங்கும் உள்ளன. அங்கங்கே உழவர் கூட்டங்களின் மகிழ்வொலி செய்யும் ஒலிகள் எங்கும் நிறைந்துள்ளன. மலர்கள் நிறைந்த பள்ளமான நிலங்கள் எங்கெங்கும் உள்ளன. இவற்றையெல்லாம் ஞானசம்பந்தர் கடந்து,
குறிப்புரை:

பொய்கைகள் எங்கும் நீராடும் மகளிரின் தொய்யில் குழம்பின் நிறம்; நகர்ப் புறத்தின் இடங்கள் எங்கும் அந்த ணர் ஓதும் இசைகளும், வேள்விச் சாலைகளும்; மடங்கள் எங்கும் தொண்டர் கூட்டங்கள்; இல்லங்களில் எங்கும் திருமண நிகழ்வுகள்; ஆடலின் உடன் எங்கும் பாடலின் ஒலிகள்; இவ்வாறுள்ள தன்மைகள் பலவும் நீங்காமல் நிறைந்துள்ள நல்ல ஊர்களையும் ஞானசம்பந்தர் கடந்து,
குறிப்புரை:

இங்ஙனம் நீர் நாட்டைக் கடந்து சென்று, அதன்பின்னர், நீண்ட காடுகளில் உள்ள சிறு புதர்களில் கார் காலத்தை நாடும் முல்லையரும்புகளின் மணம் கமழும் முல்லை நிலங்களைக் கடந்து, போரை நாடும் வில் ஏந்திய மறவர் பயின்று வாழுகின்ற புன்புலங்களான பாலை சார்ந்த இடங்களின் நடுவே சென்று, சீரை விரும்பும் தென்பாண்டியின் கண்ணுள்ள நல்ல நாட்டைச் சென்று அடைவாராய்,
குறிப்புரை:

நறுமணமுடைய பூக்குவியல்களை இருமருங்கி லும் அலைகளால் வீசி வருகின்ற பல ஆறுகளையும் கடந்து சென்று, முறுக்குடைய கொம்புகள் பொருந்திய கலைமான்களும் அவற்றுடன் இணைந்து வரும் பெண்மான்களும் அவற்றின் கன்றுகளும் கூட்ட மாய் துள்ளிப் பாய்கின்ற நாடுகளின் இடையே உள்ள வழிகளைக் கடந்து, கொன்றை மலர்களின் மணமுடைய சடையையுடைய இறைவர் வீற்றிருக்கும் 'திருக்கொடுங்குன்றத்தைச்' சேர்ந்தார். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

திருக்கொடுங்குன்றத்தில் இனிதாய் விரும்பி வீற்றிருக்கும் செழுமையான பவளமலை போன்றவரான, யானையை உரித்த இறைவரை வணங்கி, அரிய தமிழ் மாலையைப் பாடி, நீண்ட குன்றுகளையும் படர்ந்த காடுகளையும் நிறைந்த நாடுகளையும் கடந்து சென்று, சந்திரனைத் தீண்டுமாறு உயர்ந்த மலை போன்ற மதில்களை உடைய மதுரை மாநகரை ஞானசம்பந்தர் சென்று அடைவாராயினார். திருக்கொடுங்குன்றத்தில் அருளியது, 'வானிற் பொலி' (தி. 1 ப. 14) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

இவ்வாறு ஞானசம்பந்தர் எய்துவாராக, ஆனைமலை முதலிய எண்பெருங் குன்றங்களிலும் வாழ்ந்துவரும் சமணர்களுக்கு, உண்டாக இருக்கும் அழிவை முன்னால் அறியுமாறு செய்து, பன்முறையும் காரணம் இன்றி அச்சம் கொண்டு மனம் பதைக் குமாறு தீக்கனவுகளுடன் அங்குத் தீயநிமித்தங்கள் பலவும் நிகழ்வன வற்றை இனி யாம் சொல்வாம்.
குறிப்புரை:

சமணரின் கோயில்கள் மேலும், அவற்றின் அருகில் சமணக் குருமார் தங்கும் குகைகளின் மேலும், ஒள்ளிய இதழ்களை யுடைய அசோக மரங்களின் மேலும், உணவு செய்யும் கவளங்களைக் கையில் ஏந்திக் கொள்ளுவதற்குரிய மண்டபங்களின் மேலும், கோட் டான்களுடன் ஆந்தைகளும் பிற தீய பறவைக் கூட்டமும் தமக்குள் போர் செய்து, பின் நேர இருக்கும் கேட்டைப் புலப்படுத்தும்.
குறிப்புரை:

மயிற் பீலியும், தடுக்கும், பாயும், அவற்றைப் பிடித்த கைப்பிடி முதலியவற்றினின்றும் தாமே நழுவி விழுந்திடவும், கால்களும் பின்னித் தடுமாற்றத்தை அடையவும், கண்களும் இடப் பக்கமாய்த் துடிக்கவும், சமணர்கள் எல்லாம் பின்னால் தமக்கு வரும் அழிவை நீக்குவதற்கு வேறு காரணம் ஒன்றையும் அறியாதவர்களாய் மயக்கம் அடைந்தனர்.
குறிப்புரை:

சமணப் பெண்கள், தமக்குள்தாம் சினந்து எழும் கலகங்களைச் செய்தனர்; தேர்ந்த சமண முனிவர்களும் தம்முள் மாறுபட்டு ஒருவர்க் கொருவர் ஊறு செய்தனர்; தங்கள் பழைய நூல் களில் விதித்த பொறுமை முதலிய நற்பண்புகளையும் கைவிட்டு, உள் ளத்தில் சினம் முதலாய தீய குணங்களில் சிறந்து நின்றனர். கந்தியர் - சமணத் தவமகளிர். ஆரியாங்கனைகள் என்று அழைக்கப்படுவர்.

இவ்வாறு சமணர்கள் தங்கும் எவ்வகைப்பட்ட பதிகளிலும் பொருந்தி ஒப்பில்லாத தீய நிமித்தங்களையெல்லாம் ஒருவர்க்கொருவர் தங்களுக்குள் சொல்லிக் கொண்டு, தீமை அளிக்கக் கூடிய தீய கனவுகளையும் வெவ்வேறாகக் கண்டு அவற்றையும் சொல் லும் பொருட்டு, வெளியே உள்ளவர்களும் பாண்டியனின் மதுரை யைச் சேர்ந்தனர்.
குறிப்புரை:

இவ்வாறு சமணர்கள் தங்கும் எவ்வகைப்பட்ட பதிகளிலும் பொருந்தி ஒப்பில்லாத தீய நிமித்தங்களையெல்லாம் ஒருவர்க்கொருவர் தங்களுக்குள் சொல்லிக் கொண்டு, தீமை அளிக்கக் கூடிய தீய கனவுகளையும் வெவ்வேறாகக் கண்டு அவற்றையும் சொல் லும் பொருட்டு, வெளியே உள்ளவர்களும் பாண்டியனின் மதுரை யைச் சேர்ந்தனர்.
குறிப்புரை:

'சிறந்த அசோக மரத்தின் கீழ் அமர்ந்தருளிய நம் அருகக் கடவுளின் மீது அம்மரம் வேரொடு சாய்ந்து வீழப் பார்த்தோம். அதன்பின்பு, அழகிய முக்குடையும் தாமுமாக அத்தேவர் எழுந்து கைகளைத் தொங்க விட்டுப் போக ஊரவர் ஓடிச் சென்று காணவும் கண்டோம்' என்று உரைப்பவர்கள், நாற்றிப்போக - தொங்கவிட்டுச் செல்ல.

'கமண்டலத்தை உடைத்துப் பாயையும் கிழித்து ஒரு பெண் குரு ஓட, புலமை பெற்ற சமண முனிவர்கள் தம் குகைகளி லிருந்து கழுதைகள் மேல் ஏறிச் செல்வாராக, அவர்களின் பின்னால் ஒளியுடைய வளையலை அணிந்த தவப் பெண்களும் ஊளையிட்டு அழுது கொண்டு ஓடக் கண்டோம்!' என்று கவலை கொண்டவர் களாய் உரைத்தனர். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

'சுடுகாட்டில் நடனம் ஆடும் நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமானின் அடியார் எல்லாம், மீன்கொடியையுடைய பாண்டி யனின் மதுரையில் வந்திடக் கண்டோம்' என்றனர் சிலர். 'மதுரையின் மன்னனும் வெவ்விய கொழுந்து விடும் தீயில் முழுகக் கண்டோம். முழுகிய அவன், பின்பு அதனின்று மேல் எழுவதையும் பார்த்தோம், ஈதோர் அதிசயம்' என்பார்,
குறிப்புரை:

'இளமையுடைய ஆன்கன்று ஒன்று வந்து, நம் சங்கத்தைச் சுழல மிதித்துக் கலக்க, அதனால் சிதறுண்டு ஓடி, யாரும் அதைத் தடுக்க அஞ்சி, அடைக்கலமாய் விழுந்து ஒளிக்க, வேறு ஒரு புகலிடமும் இல்லாது, பூமியை விட்டு, நிழல் இல்லாத மரங்களின் மீது ஏறி நிற்கவும் பார்த்தோம்' என்பார்,
குறிப்புரை:

'பாவிகளே! இக்கனவின் விளைவுதான் யாதோ? எண்ணிப் பார்க்கின், இந்தக் கனவின் விளைவு நம் அடியார்களுக்குப் பொருந்திய தீமையை விளைவிப்பது உறுதியாகும்!' எனத் துணிந்து சொல்லி, துன்பம் உடைய மனம் கொண்டவராய், உண்ணத் தக்க உணவுகளையும் உண்ணாதவர்களாய், என்ன செய்வது? என்று நினைத்துத் துன்பமடைந்து இவற்றைக் கேட்பவர்கள் வருந்தினார்கள். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

அவ்வாறு அமணர்கள் எல்லாம் அத்தகைய வருத்தமுற்றவர்களாக, சைவ நன்மரபில் தோன்றிய மாமயில் போன்ற இளமையாகிய மெல்லிய சாயலையும், பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையும் உடைய பாண்டிமா தேவியரான மங்கையர்க்கரசியா ருக்கும், உண்மை நெறியில் நிற்கும் குலச்சிறையாருக்கும் நல்ல நிமித்தங்கள் மேன் மேலும் நிகழ்வனவாயின.
குறிப்புரை:

அளவற்ற மகிழ்ச்சியை யுண்டாக்கும் அத்தகைய அரிய பெரிய நல்ல நிமித்தங்கள் வந்து பெருக, மனதில் மகிழ்ச்சியை உணரும் அவ்வமையத்தில், உலகம் உய்யும் பொருட்டாக வந்து தோன்றிய, வளரும் ஒளியையுடைய, ஞான அமுதுண்ட ஞானசம் பந்தர் வந்து கொண்டிருக்கிறார் எனும் சொல்லை, கிளர்ச்சி பொருந் திய உவகைச் செய்தியை, அறிந்தவர்களாய் ஆண்டு வந்தவர்கள் கூற, அம்மையாரும் குலச்சிறையாரும் கேட்டனர்.
குறிப்புரை:

அத்தகைய நற்சொல்லைக் கூறியவர்களுக்கு வேண்டுவனவற்றை நிறைய வழங்கி, மெய்ம்மையில் விளங்கும் விருப்பம் பொருந்திய அன்பு வெள்ளமானது பெருகிட, தம்மையும் அறியாத நிலையில் எல்லை கடந்து பொங்கித் திரண்ட மகிழ்ச்சி பெருக, இவ்வாறு பொருந்திய சிறப்புமிக்கவர் ஆயினர்.
குறிப்புரை:

மங்கையர்க்கரசியார் தம்மிடம் வந்து அடி வணங்கிய குலச்சிறையாரை நோக்கி, 'நம் பெருமானாரான ஞான அமுது உண்டவர் திருமுன்பு சென்று சேர்ந்து 'இங்குத் தாங்கள் எழுந்தருளியமையால் யாங்கள் உய்வு பெற்றோம்' எனக் கூறி வரவேற்பீராக! என மொழிந்தார்.
குறிப்புரை:

அமைச்சரான குலச்சிறையாரும், மணம் பொருந் திய கூந்தலையுடைய மங்கையர்க்கரசியாரை வணங்கி, வெளியே வந்து, 'வெற்றியையுடைய மன்னருக்கும் இச்செயல் உறுதியை அளிப்பதே ஆகும்' என்று மனத்தில் எண்ணி, பொன் வேலைப் பாடுகள் பொருந்தி விளங்கும் மாடங்களையுடைய திருவீதிகளை உடைய மதுரையின் புறத்தே விரைவாகச் சென்று, இனிய தமிழால் மறைகளை அருளிச் செய்துவரும் சம்பந்தரை வரவேற்கும் பொருட் டாய்ச் செல்லும் பொழுது, அரசியாரின் ஆணைவழியே செல்லினும், அச்செயல் அரசருக்கும் உய்திபயத்தற் சிறப்புடையதாதலின் அவ்வாறு சென்றார் என்பதாம். உறுதி உழையிருந்தான் கூறல் கடனாதலின் இச்செயற்பா டும் அன்னதாதல் வேண்டுமன்றோ? எனவே அச்செயல் ஏற்புடைத் தேயாம்.

தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற மங்கையர்க்கரசியார், திருவாலவாயில் வீற்றிருக்கும் பெருமானைத் தாம் சென்று கும்பிட வேண்டும் என்று மன்னனுக்குக் கூறி, தம்பணியாளர்கள் சூழ்ந்து வர, தனித்த காவலுடன் சென்று தாமும் ஞானசம்பந்தரை வரவேற்க நின்றார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

சிவபெருமானின் அருட்செல்வம் பொருந்திய அழகிய முத்துச் சிவிகையின் மேலே வணங்கியவாறு வருகின்ற நிலவு பொழியும் மதிபோல் வளரும் ஒளி பொருந்திய முத்து வெண் குடை நிழலைச் செய்யவும், பெருகும் ஒளியுடைய திருநீறணிந்த திருத் தொண்டர்களின் கூட்டம் சூழ்ந்து வரவும், திருவருள் பெருக வந்து தோன்றிய சிவஞானஅமுது உண்ட சம்பந்தர் மதுரையை வந்தடைவா ராயினர்.
குறிப்புரை:

துந்துபி முதலான இயங்களின் ஓசை மேல் எழாமல், அந்தணர்களான மறைமுனிவர்கள் பலமறைகளை எடுத்துச் சொல்ல வும், வந்து எழுகின்ற மங்கல ஒலிகள் எல்லாத் திசைகளிலும் ஒலிக்க வும், செந்தமிழுடன் வரும் தென்றற் காற்று எதிர்கொண்டு வரவேற்று எம்மருங்கும் வழிபடவும்,
குறிப்புரை:

செய்த வஞ்சனை பொருந்திய தவத்தை நிலைக்களனாகக் கொண்டு, பாண்டி நாட்டில் பரவிய எண்ணற்ற சமணம் என்ற பாவமான பெரிய படை உடைந்து ஓடும்படியாக, இவ்வுலகம் அல்லாமல் வான் உலகமும் கூடிச் செய்ததான பெரும் புண்ணியமான படைஎழுச்சியைப் போலப் பொருந்திய பொலிவு உண்டாகவும், எண்ணில் சேனை எனக் கூட்டுக.

நெருங்கிப் பொருந்தியுள்ள உடல் அழுக்கி னாலும், தீய சூழ்ச்சியையுடைய உணர்வின் மாசினாலும், நெறியல் லாத நெறியில் முழுதும் சேர்ந்த சமணம் என்ற அழுக்கைக் கழுவித் தூய்மை ஆக்குவதற்காக, நிலைபெற்று விளங்கும் வெண்மையாலும், தூய தன்மையாலும், கங்கையாறே பாண்டியரின் கன்னிநாட்டில் வந்து சேர்ந்ததைப் போன்ற அழகை எடுத்துக் காட்டவும், கங்கை வெண்மையும் தூய்மையும் உடையது. ஞான சம்பந்தரும் வெண்ணீற்று ஒளியும், திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்து வருவதாலாய உள்ளத் தூய்மையும் உடையவர். ஆதலின் இவர் வருகை, கங்கையாற்றின் வருகையை ஒப்பதாயிற்று.

குவளை மலர்களையுடைய வயல்கள் சூழ்ந்த தமிழ்நாடானது பழியை அடையுமாறு, அங்குப் பரந்து சூழ்ந்த மானம் இல்லாத சமணம் என்னும் வன்மையான இருளானது கெட்டு மாய்வ தற்காகப் பெருகிய ஒளியின் ஆய பரப்பினால், எல்லா அண்டங் களையும் தன் நிறைவுள் அடக்கிக் கொண்டதான ஒப்பில்லாத ஞான விளக்கு ஒன்று, எழுந்து வருவதைப் போன்ற நன்மையைச் செய்யவும்,
குறிப்புரை:

கழுத்தில் கயிற்றையும், வெற்றியையும், மதத்தையும் கொண்ட யானையையுமுடைய பாண்டியரின் தமிழ் நிலம் செய்த தவத்தின் பயன் விளங்கவும், சைவநெறி தழைத்தோங் கவும், போற்றிக் கூறத்தகும் எல்லாப் பெயர்களையும் எடுத்து ஒலிக்கும் முத்துச் சின்னங்கள் யாவும் 'பரசமய கோளரி வந்தான்' என இயம்பவும், பணிமாற - இயம்பவும்

இவ்வாறாய இயல்புடன் அணைகின்ற சீகாழித் தலைவர் வரும்பொழுது, இசைக்கின்ற ஒப்பில்லாத முத்துக்களாலான அழகிய தனிக் காளமானவை உலகம் உய்ய எடுத்துச் சொல்வதால் எழும் ஓசையானது, சொலற்கரிய பெருமையுடைய குலச்சிறையா ரின் திருச்செவிகளில் நிறையும் அமுதம் போல் பெருகிட, அப் பொழுதே அறிந்து, நிலத்தின்மீது உடல்பட விழுந்து, பணிந்து, அளப் பதற்கு அரிய மகிழ்ச்சியுடையவர் ஆயினார். இவ் ஆறு பாடல்களும் ஒருமுடிபின.

வணங்கிக் கூப்பிய கைகளும் தலையின் மேலே சேர விரைந்து சென்று அணைவாராகி, நஞ்சையுண்ட கண்டரான இறைவரின் மகனாருடன் வரும் நல்ல தவமுடைய அடியவர்களின் கடல் போன்ற திருக்கூட்டத்தை, உள்ளத்தில் நிரம்பிய ஆசை முன் செல்ல அகநோக்கில் அறிந்தாராதலால், பாண்டிய மன்னரின் அமைச்சருள் தலைவராகிய குலச்சிறையார் பாங்குறச் சென்று, நீண்ட நிலத்தின்மீது திருமேனி பொருந்த விழுந்து வணங்கினார்.
குறிப்புரை:

நிலத்தின் மீது விழுந்து வணங்கிய குலச்சிறை யாரை, நீண்ட பெருந்தவத்தவரான தொண்டர்கள் பலரும் முன் வந்து சேர்ந்து வணங்கி, மற்று அவர் நிலத்தில் விழுந்தவர் எழாமல் இருந்த வகையினைப் பார்த்து, நான்முகன் வழிபட்ட சீகாழித் தலைவரான சம்பந்தரின் திருவடிகளை வணங்கி, 'அங்குப் பாண்டிய மன்னரின் அமைச்சரான குலச்சிறையார் வந்துள்ளார்' எனக்கூற,
குறிப்புரை:

சீகாழிச் செல்வரான பிள்ளையார், அவர்கள் கூறக் கேட்டு, முகமான தாமரை மலர்ந்து, பொருந்திய ஒளியை யுடைய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி விரைவாகச் சென்று, அக்குலச்சிறையாரை அடைந்து பற்றி மேல்எடுப்ப, அக்குலச்சிறை யாரும் கைதொழுது திருமுன்பு நிற்க, வரம்மிகும் செவ்விய தன்மை யுடன் நின்ற அவரது தவம் காரணமாக அவரையே பார்த்து, ஞான சம்பந்தர் இனிய திருவாக்கை அளிப்பவராய்,
குறிப்புரை:

'சோழமன்னரின் மகளாரான மங்கையர்க்கரசி அம்மையாருக்கும், திருந்திய சிந்தையுடைய உமக்கும் சிவபெரு மானின் திருவருள்பெருகும் நலம் தான் சிறந்துள்ளதே!' எனக் கூற, மணம் கமழும் மாலைசூடிய அமைச்சரும் நிலமுற வணங்கி நின்று, தம் பெருந்தவத்தின் பயனைப் போன்ற ஞானசம்பந்தருக்கு, அந்நாட்டில் நிகழ்ந்த நிலைமையை எடுத்துச் சொல்வாராய், சிறந்துள்ளதே என்றது, சிறந்துள்ளதன்றோ என வினவும் குறிப்புப்பட நின்றது.

'சென்ற காலத்தில் பழுது இன்றி நின்ற இயல்பும், எதிர்காலத்தில் வரும் சிறப்புடைய திறமும், இன்று இங்குத் தாங்கள் எழுந்தருளப் பெற்றதால் விளங்கும். இதனால் முக்காலத்திலும் திரு வருள் உடையோம். நன்மையில்லாத சமண சமயத்தில் அழுந்திய இந்த நாடும் நற்றமிழ் மன்னனும் உய்வு பெற்று வெற்றிகொள்ளும் திரு நீற்று ஒளியினில் விளங்கும் மேன்மையையும் பெற்றோம். ' என்பாராய், பிள்ளையார் முன் வினாவிய வினாவிற்கு விடையாய் இப்பாடல் அமைந்துள்ளது. கடந்த காலத்தில் யாங்கள் செய்த தவத் தால் தாங்கள் இதுபொழுது எழுந்தருள, இந்நற்பேற்றால் எதிர்காலமும் நன்மை பெருக அருள் நெறியே மிகுவதாகும் என்பது விடையாகும்.

இங்குத் தாங்கள் எழுந்தருளியதைக் கேட்ட உடனே, மங்கையர்க்கரசியாரும் 'நம்முடைய வாழ்வு எழுந்தருளி வருகின்றது' என இயம்பி 'அங்கு நீவிர் எதிர்சென்று வரவேற்றுத் திரு வடிகளைப் பணிவீர்' என அருள் செய்தார் என்று அன்பு பொருந்திய களிப்பினால் வணங்கி அரசனின் அமைச்சரான குலச்சிறையார் போற்றினார். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

அவ்வாறு சொல்லித் திருவடியை வணங்க, ஞானசம்பந்தர் அளவற்ற கருணைமிக்க சொற்களால் பொருந்திய வற்றைச் சொல்லி, அருள் செய்தபோது, உயர்ந்த மதில்கள் நாற்புறத் தும் சூழ்ந்த மதுரையம்பதி கண்ணில் புலப்படக் கண்டு, உயர்ந்த தவத் தையுடைய தொண்டரைப் பார்த்து 'இவ்விடத்து நம் இறைவர் எழுந் தருளுகின்ற திருவாலவாயானது எம்மருங்கில் உள்ளது?' என வினவ,
குறிப்புரை:

அங்ஙனம் வினவப் பெற்ற சிறப்புடைய அடி யவரான குலச்சிறையார், ஞானசம்பந்தரின் இருதிருவடிகளையும் வணங்கித் திருமுன்பு நின்று, எடுத்த கைகளால் சுட்டிக்காட்டி, 'மணம் கமழும் சோலைகளால் சூழப்பட்டு, ஒளிவிளங்கும் வானை அளக் கும்படி நீண்ட கொடிகள் சூழ்ந்த பெரிய நெடிய கோபுரங்கள் தோன் றும் இடமே, எலும்பின் அணிகளை அணிந்த இறைவர் இனிதாய் விரும்பி, வீற்றிருக்கும் திருவாலவாய் ஆகும்' என உரைத்தார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பெருந்தொண்டரான குலச்சிறையார் தாமே இவ்வாறு போற்றிக் காட்டக் கண்டு, மலர் போன்ற கைகளைத் தலை மீது குவித்து, மீதூர்ந்த அன்பினால், தரையின் மீது விழுந்து, பணிந்து, எழுந்து நின்று, 'மங்கையர்க்கரசி' எனத் தொடங்கி, எண்திசையில் உள்ளவர்களும் போற்றும் திருஆலவாய் ஆவது இதுவே என்ற நிறை வுடன் கூடிய, அம்மையாரும் அமைச்சருமாகிய இருவரின் தொண்டு களையும் சிறப்பித்தருளிய திருப்பதிகத்தைப் பாடியருளினார். 'மங்கையர்க்கரசி' (தி. 3 ப. 120) எனத் தொடங்கும் பதிகம் புறநீர்மைப் பண்ணிலமைந்ததாகும். இப்பதிகத்தில் 1, 3, 5, 7, 9 ஆகிய பாடல்களில் மங்கையர்க்கரசியாரையும், 2, 4, 6, 8, 10 ஆகிய பாடல்களில் குலச்சிறையாரையும் சிறப்பித்தருளிய பிள்ளையார், திருக்கடைக்காப்பில் 'பன்னலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும் அந்நலம் பெறுசீர் ஆலவாய்' என இருவரையும் ஒருங்கு சிறப்பித்து அருளியுள்ளார். இதனை உளங் கொண்டே ஆசி ரியர், 'இருவர் தம் பணியும் கொண்டமை சிறப்பித்தருளி நற்பதிகம் பாடினார்' என்றார்.

அவ்வாறு பாடிய திருப்பதிகத்தில் போற்றியவாறே வந்து, அரியபண்புடைய அடியவரோடும், தேடும் திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரிய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருவால வாய்க் கோயிலின் அருகே அடைந்து, நீண்ட உயர்ந்த கோபுரத்தின் உள்ளே புகுந்து, அருகேயுள்ள மாளிகையை வலமாகச் சூழ்ந்து வந்து, இறைவரின் கோயிலுள் அமைச்சர் குலச்சிறையாருடன் புகுந்தார்.
குறிப்புரை:

உயிர்களை ஆட்கொண்டருளுகின்ற அழகிய கண்ணை உடையவராய் ஆலவாயில் விரும்பி இனிதாக வீற்றிருக்கும் கரிய கழுத்தை உடைய இறைவரை, கண்கள் பெற்ற இனிய பயனை அடையுமாறு வழிபட்டும், நீள நினைந்து எழும் அன்பினால் பணிந்து எழுந்தும், அமைதி பெறாதவராய், திரும்பவும் நிலமிசைப் பலமுறை விழுந்து வணங்கி எழுவார் ஆனார்.
குறிப்புரை:

எட்டு உறுப்புகளாலும், ஐந்து உறுப்புகளாலும் அளவுபடாத வணக்கங்கள் செய்து, உள்ளத்தில் நிறைவு பொங்கி எழும் அன்பின் மிகுதியால் உடலில் மயிர்க்கூச்செறிதலும், சிவந்த கண்கள் பொழிகின்ற நீர் அருவிபோன்று பெருகுதலும், திருநீற்றின் ஒளி விளங்கும் திருமேனி முழுவதும் பொருந்துமாறு நின்று, சீகாழித் தலைவர் வணங்கிப் போற்றினார்.
குறிப்புரை:

'நீலமாமிடற்று ஆலவாயிலான்' எனத் தொடங்கி, நிலவும் மூலமான 'திரு இருக்குக் குறள்' பதிகத்தைப் பாடிப் பொருந் திய மேன்மையுடைய தலைச் சங்கப் புலவரான சோமசுந்தரப் பெருமான் திருமுன்பு, ஒழுக்கத்தால் மிக்க மாதவமுடைய தொண்டர் ஆன குலச்சிறையாருடன் கூடி அன்பினுள் மகிழ்ந்தார். அளவில் அமைந்த ஈரடிகளைக் கொண்ட பாவகை திருவிருக்குக்குறள் ஆகும். இவ்வகையில் அமைந்த இத்தொடக்கமுடைய பதிகம், குறிஞ்சிப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 1 ப. 94).

கருதிய பயனைச் சேர்க்கின்ற இனிய இசையை உடைய இப்பதிகத்தையும் திருக்கடைக்காப்புடன் சாத்தி நிறைவாக்கி, நல்ல இசையுடைய தமிழ்ச் சொல்லால் ஆன மலர் மாலையைத் திரும் பவும் இன்பம் பொருந்தப் பாடி, வெண்மையான பிறைச்சந்திரனை அணிந்த முடியையுடையவரின் திருவடிகளைப் போற்றி, திருமுன் றிலை வந்து அணையும் பொழுதில், பேர்த்தும் இன்புறப் பாடிய பதிகம் கிடைத்திலது.

முன்னர்ப் பிள்ளையார், திருக்கோயிலினுள் புகுந்த அப்பொழுது, கங்கை தாங்கும் திருச்சடையையுடைய இறைவரைத் தொழும் விருப்பால் உட்செல்ல தெளிந்த நீர் பொருந்திய கண்களை யுடைய மங்கையர்க்கரசியாரும், அப்பிள்ளையாரின் எதிர்செல்லாது ஒதுங்கியிருந்து, இதுபொழுது அவர் திருமுன்பு எய்த,
குறிப்புரை:

உடன் வந்த குலச்சிறையார் சம்பந்தப் பெருமானின் திருவடிகளை வணங்கி நின்று, கரிய கூந்தலின் மீது கூப்பிய கைத் தளிர்களையுடைய அம்மையார், பருத்த கைகளை யுடைய யானைகள் வாழ்கின்ற சோழமன்னரின் மகளார் என்று சொல்லப் பெருமகிழ்ச்சியுடன் விரைந்து, அவ்வம்மையார் எதிரே அவர் சேர்ந்திட,
குறிப்புரை:

பாண்டிய மன்னனின் மனைவியாரான மங்கையர்க்கரசியார், சிவக்கன்றான ஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளில் பொருந்த முன் விழுந்தார். நிலைபெற்ற சீகாழிப் பதியினரின் தலைவரான பிள்ளையார், மகிழ்ச்சி மிகஅளிக்கும் இனிய அருள் உடைய பெருஞ்சிறப்பினோடும் திருக்கைகளால் அவரை எடுத்து அருளினார். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

ஞான அமுது உண்ட ஞானசம்பந்தரின் எதிரில் வணங்கி எழுந்த அரிய தவத்தையுடைய அம்மையாரான மங்கை யர்க்கரசியார், தம்மனத்துள் கொண்ட கருத்தான சைவ சமய நிலை பேறும், பாண்டி நாட்டின் மீட்சியும் நிறைவு பெற்றன என்றே துணிவு கொண்டு, நீலமலர் போன்ற கண்களில் நீர் பொருந்தப் பவளம் போன்ற வாய்குழறி 'யானும் எனது பதியும் தாங்கள் இங்கு எழுந்தருளும் இப் பேற்றைப் பெறும் பொருட்டு முன் செய்த பெருந்தவம்தான் என்னோ!' எனக் கூறினார்.
குறிப்புரை:

யாழ் போன்ற இனிய மென்மையான மொழியை உடைய அம்மையார், இவ்வாறு கூறி மீண்டும் தம் திருவடிகளை வணங்கிடச் சீகாழி வாழுமாறு வந்து தோன்றிய கவுணியர் தலை வரும், அவர் சொன்னதைக் கேட்டு, 'சுற்றிலும் பரவிய பிற சமயச் சூழலிடையே திருத்தொண்டின் நெறியை விடாது பற்றி வாழ்கின்ற தன்மையுடையவர்களே! உங்களைக் காணும் பொருட்டு வந்தோம்!' என்று அருளிச் செய்தார்.
குறிப்புரை:

இங்ஙனம் ஞானசம்பந்தர் அருள் செய்திட, மங்கையர்க்கரசியார் அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி னார். நிலை பெற்ற சீர்மையுடையஅமைச்சரான குலச்சிறையார், பாண்டி நாட்டில் நேர்ந்த துன்பமான நிலைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல, அவற்றை யெல்லாம் கேட்டு, ஞானசம்பந்தர், அன்னம் போன்ற நடையுடைய மங்கையர்க்கரசியாருக்கு அருள்செய்து விடைதந்து அனுப்பினார். பின் நெருங்கிய மெய்த் தொண்டர்கள் சூழ்ந்து வர அவர் எழுந்தருளி வரும்பொழுது,
குறிப்புரை:

செல்வம் பெருகிய திருஆலவாய்த் திருக்கோயி லில் பணி செய்யும் தொண்டர்கள், பிள்ளையார் அருகில் வந்து சேர்ந்து வணங்கி, நிரம்பிய கரிய சமணமான இருள் கெட, இங்குத் தாங்கள் முழுமதிபோல் எழுந்தருளியதற்கு எல்லையில்லாத பெருந் தவம் செய்தோம் எனக் கூறி வணங்கினர்.
குறிப்புரை:

அவ்வாறு கூறிய அத்தொண்டர்களுக்கு அருள் முகத்துடன் விடை தந்து, உண்மை பொருந்திய விருப்புடன் அவர்க ளோடு கோயிலின் வெளியே வந்து, உள்ளத்தில் இன்பம் பொருந்திய அமைச்சரான குலச்சிறையார், ஞானசம்பந்தர் இருத்தற்குரிய திரு மடத்தைக் காட்ட, அடியார்கள் சூழ்ந்து போற்றத் தம் பரிவாரங் களுடன் அவர் அங்குத் தங்கியிருந்தார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

போற்றும் மங்கையர்க்கரசியாரது அருளால், பொருந்தும் அன்புடனே குலச்சிறையார் விருந்து அமைத்து அளிக்க, சீகாழியில் தோன்றியருளிய செல்வரான ஞானப்பிள்ளையார் அத்திருமடத்தில் வீற்றிருந்தருளினர். அதுபொழுது, கதிரவன் மேலைக் கடலில் சென்று அடைய, இரவு வந்த அளவில்,
குறிப்புரை:

பாண்டியரின் பெருநகரத்தில், சிறந்த அந்தணர் தலைவரான ஞானசம்பந்தர், குற்றம் இல்லாத சிறப்புடைய அடியார் களுடனே பகலில் வரக் கண்ட, பேய் போன்று வரும் கரிய அமணர் கள், கலக்கத்தை அடைந்து, குழம்பான மை போன்ற இருளுக்கும் மேம்பட்ட இருள்போல ஒருமருங்கில் கூடினார்கள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அவ்விடத்தில் கூடிய சமணர்கள், ஞானசம்பந்தர் எழுந்தருளிய பெருந்திரு மடத்தில், திருத்தொண்டர் கூட்டங்கள் எங்கும் கூடிப் பெருகி, ஓதிய திருப்பதிகத்து இசை ஓங்கி, மேலெழும் பேரொலியானது தம் செவிகளில் புக, அதைப் பொறுக்க மாட்டா தவர்களாய்,
குறிப்புரை:

'மற்று, இப்பெரும் பழியினைப் பாண்டியனை அடைந்து சொல்வோம்,' என்று எண்ணித் தம் சூழ்ச்சி முடிவையும் ஒருபடியாக மனத்துட் கொண்டு, மன்னனின் வாயில் காப்போர் முன் சென்று, 'வெற்றியுடைய வேல் ஏந்திய மன்னனுக்கு யாங்கள் வந்த செய்தியைத் தெரிவியுங்கள்!' என இயம்பினர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

வாயில் காவலர் உள்ளே சென்று, அரசன் முன்பு வணங்கிச் 'சமண அடிகள்மார் எல்லாரும் கூட்டமாய் வந்துள்ளனர்!' என்று கூற, அந்தச் சமணத் துறவியருடன் ஒத்த கருத்துடையவனான மன்னனும் 'அவர்கள் வருவார்களாக!' என்ன, அக்காவலர்களும் புறத்தே சென்று, சமணத் துறவிகளிடம் அதனை உரைத்தனர். பாய் உடுக்கையால் உடலை மூடும் அவர்களும் பதற்றத்துடன் உள்ளே வந்தனர். ஏயினான் - ஒத்தவன்: சமணர்களொடு ஒத்த கருத்துடை யவன்.

அவர்கள், அவ்வாறு புகுந்த அளவில், அவர்களின் உள்ளத்தில் வாட்டம் மிக்கிருந்த தன்மையினை மன்னன் கண்டு, 'நீங்கள் யாவரும் ஒன்றாகத் திரண்டு இங்கு வருவதற்குக் காரணம் யாது?' என்று வினவ, அம்முனிவர்கள், 'சொல்லத்தகாத தீமை வந்தது' என மொழிந்தனர்.
குறிப்புரை:

'அங்ஙனமாயின் உமக்கு நேர்ந்ததை எடுத்துக் கூறுங்கள்!' என்று பாண்டியன் அன்புடன் உரைக்க, கரிய சமண வஞ்சகர்கள், 'யானை வீரனான மன்ன! உம் மதுரை மாநகரத்தில் சைவ வேதியர்கள் வந்து பொருந்தியதைக் கண்டதால் இன்று யாங்கள் 'கண்டு முட்டு' ஆனோம்' என்று கூற, கண்டு முட்டு - இவ்வகையாரைக் காண்பதால் வரும் தொடக்கு, தீட்டு. பிறசமயத்தவரைக் கண்டால் அதைத் தீட்டாய் எண்ணிக் கழுவாய் தேடிக் கொள்ளுவர் சமணர்கள்.

என்று சமண முனிவர்கள் உரைக்கவும், 'யானும் அதனைக் கேட்டமையால் 'கேட்டு முட்டு' ஆயினேன்' என்று கூறி 'நான் நல்லறம் புரிந்தவாறு நன்றாக இருந்தது!' எனத் தன்னையே இகழ்ந்து, நகைத்துக் கறுவு கொண்ட உள்ளத்துடன், அந்நெற்றிக் கண்ணை உடைய சிவனடியார்கள் இன்று இப்பெருநகரத்தை அடைந்த காரணம் தான் யாது? அவர்கள் யாவர்? என வினவினான். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

'ஆத்தி மாலையையும் வெண்கொற்றக் குடையையும் கொண்ட சோழரின் வளம் மிக்க சீகாழியில், சூலத்தைக் கையில் கொண்ட சிவனிடத்தில் ஞானம் பெற்றான் என்று, அந்தணச் சிறுவன் அடியார் கூட்டத்துடன் குளிர்ந்த முத்துச் சிவிகையின் மேல் ஏறி, எங்களை வாதில் வெல்ல வந்துள்ளான்',
குறிப்புரை:

என்று இவ்வாறு கூறுவாராய், இத்திறங்களைத் தாம் முன்னம் அறிந்த செய்திகள் ஒன்றையும் விடாமல் கூறவும், மணமுடைய அழகிய சோலைகள் சூழ்ந்த சீகாழி வள்ளலாரின் திருப்பெயர் சென்று செவியில் சேரவும், சினம் கொண்டு முற்படக் கூறுவானாகி,
குறிப்புரை:

'மற்று அவ்வந்தணச் சிறுவன் அங்ஙனம் இங்கு வந்தானாகில், செயத்தக்க தொழிலாய் யாது செய்வோம்?' என மன்னன் வினவ, மேன்மேலும் பொங்கி எழும் சினமுடைய மனமும், தொழிலும் கொண்ட அச்சமணர், வெற்றித் திருவுடைய மன்னன் மொழிகளுக்கு விடையாகக் குறித்துக் கூறுவாராய்,
குறிப்புரை:

'இங்கு அவ்வந்தணனை, வன்முறை செய்து போக்கும் எண்ணம் இன்றி, அவ்வந்தணச் சிறுவன் தங்கியுள்ள மடத்தில், வெம்மையான அழல் சேருமாறு, வித்தையாகும் மந்திரச் செயல் செய்வோமானால், இப்பெருநகரத்தில் இல்லாது போய் விடுவான்!' எனக் கூறினர். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

'செயத்தகுவது ஈதொன்றேயாயின், அதனையே விரைந்து செய்யச் செல்வீராக!' எனக் கூறி அவர்களைச் செல்லுமாறு அனுப்பிய, பொய்யினைப் பொருள் என்று கொண்ட மன்னன், யாதும் எவரிடமும் பேசாமல் உளம் நிறைந்த கவலையுடன், மலர்கள் பரப்பிய படுக்கையில் சேர்ந்தான்; பேரெழிலையுடைய பாண்டிமா தேவியாரும் அங்குச் சேர்ந்தார்.
குறிப்புரை:

அரசன் இங்ஙனம் உரையாடாமல் இருத்தலைக் கண்டு, அப்பேரரசியார், 'என் உயிர்க்கு உயிராய் உள்ள இறைவரே! நீவிர் என்ன துன்பத்தை அடைந்தீர்? முன் உள்ள மகிழ்ச்சியின்றி முகம் வாடியுள்ளீர்! இன்று இவ்வாறு எண்ணத்தகும் தம் உள்ளத்தில் பொருந்திய வருத்தத்தை உரைப்பீராக!' என்றார்.
குறிப்புரை:

தன் துணைவியாரை நோக்கிப் பாண்டிய மன் னன் கூறுவானாய், 'குவளை மலர் போன்ற நீண்ட விழியை உடை யாய்! கேட்பாயாக. காவிரி பாயும் நாட்டில் நிலை பெற்றுள்ள குற்றம் அற்ற சிறப்பையுடைய சீகாழிப் பதியினன், சங்கரனின் அருள் பெற்று இங்கு நம் சமண அடிகள்மார்களை, வாதில் வெல்வதன் பொருட்டாக வந்துள்ளான்' என்று கூறி, மேலும் கூறுவானாய்,
குறிப்புரை:

'வெண்மையான திருநீற்றைப் பூசும் சிவன் அடியார்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களையெல்லாம் கண்டதால் அடிகண்மார் 'கண்டு முட்டு'. அச்செய்தியைக் கேட்டதால் நானும் 'கேட்டு முட்டு'. என் அன்புக்குரிய, வண்டுகள் தேன் உண்ணுதற்குரிய நெருங்கிச் சேர்த்த மாலை சூடிய மானியே, இங்கு நிகழ்ந்த தன்மை இதுவாகும்! வேறு ஒன்றும் இல்லை!' என்றான். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

இங்ஙனம் பாண்டியன் உரைக்க அதனைக் கேட்ட மங்கையர்க்கரசியார், 'உம் நிலைமை இதுவே யானால் வருந்தாமல், நீடிய தெய்வத் தன்மை விளங்கும்படி அவர்கள் வந்து வாதம் செய்தால், அதில் வென்றவரின் பக்கம் சேர்ந்து பொருந்துவதே நன்மை தருவதாகும்! ஆதலின் வருந்த வேண்டாம்' என்றார்.
குறிப்புரை:

உள்ளத்தில் மகிழ்ச்சி மிகுந்து, 'திருக்கழுமலத் தவரின் தலைவர் எம்மை ஆளும் பொருட்டு வந்த விதந்தான் என்னே!' என்று எண்ணுவதால் உண்டாகும் மகிழ்ச்சியுடன், மலரும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய மங்கையர்க்கரசியார் வந்த போது, அமைச்சர் குலச்சிறையாரும் அங்கு வந்து சேர, இந்த நல்ல சொற்களை எல்லாம் அவரிடம் சொல்லிய பின்னர்,
குறிப்புரை:

மன்னவரின் அமைச்சரான குலச்சிறையாரும் கைகளைத் தலைமீது குவித்து வணங்கி நின்று, 'பிள்ளையார் இங்கு வந்து சேர்வதற்குப் பெரும் பேறுதான் பெற்றோம்!' எனக் கூறத் தொடங்கி, 'இன்று இறைவரின் அடியாரை நாம் கண்டு வணங்கப் பெற்றோம்! இனிச் சமணர் செய்யக் கூடிய வஞ்சனை எதுவோ, அறியோம்!' எனக் கூறினார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அரசமாதேவியாரும் அச்சம் கொண்டு 'வஞ்சகர் களாகிய அப்புலையர்கள் ஈனமான செயல்களையே செய்யவல்லார்! அதற்கு நாம் என்ன செய்வது?' என எண்ணி, 'ஞானசம்பந்தருக்கு நன்மையல்லாத செயல்களை இவர்கள் செய்து அதன் மூலம் கேடு வருமானால் நாமும் உயிர் துறப்போம்!' என்று இயம்பினார்.
குறிப்புரை:

இவ்விருவர்தம் நிலை இவ்வண்ணமாகவும், விளங்கும் வேல் ஏந்திய பாண்டியனான அவன் நிலை அதுவே யாகவும், அன்றைய நாளில் சமணர்களின் நிலையாது என்றால், தவ வேடத்துள் மறைந்து நின்று தீய செயல்களைச் செய்பவர்களான அவர்கள், தம் மந்திரத்தால், சிவநெறி வளர்க்கத் தோன்றியுள்ள ஞான சம்பந்தரின் திருமடத்தில் செந்தீ சேர்தற்குரிய செயலைச் செய்தனர். 'தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று' (குறள், 274) எனும் திருக்குறள் நினைவு கூருமாறு 'தவம் மறைந்து அல்லவை செய்வார்' எனும் தொடர் அமைந்துள்ளது.

ஆதி மந்திரமான திருவைந்தெழுத்தை ஓதுகின் றவர்கள், நோக்கும் திசையிலும், மற்ற மந்திரச் செயல்கள் சென்று சேருமோ? சேரா. திருநீற்றுச் சாதனம் பூண்ட ஞானசம்பந்தரின் திரு மடத்தில் தாம் புனைந்த சாதனைகள், ஏவியவாறு குறித்த பயனைத் தாராது ஒழிந்ததைப் பார்த்து, அச்சமணர்களாகிய கீழ் மக்கள் தளர்ச்சி யடைந்தனர். ஏகாரம் எதிர்மறைக்கண்வந்தது. 'கண்ணுதலான் திரு நீற்றுச் சார்பினோர்க்கும் கவலை வருமோ?' என்றவிடத்து ஓகாரம் எதிர்மறைக் கூற்றில் வருமாறும் நினைவு கூர்க. படைக்கலமாகப் பெருமானின் திருவைந்தெழுத்தையும், கவசமாக இறைவரின் திரு நீற்றையும் கொண்டார்க்கு என்றும், எவ்விடத்தும், எவ்விதத் தீங்கும் வாராது என்பதாம்.

மற்று, அவர்கள் தாம் செய்த அத் தீத் தொழில், பயன் அளிக்காமல் விழுவதைக் கண்டு, மனம் தளர்ந்து, எழுந்த அச்சமானது முன்னே மிகுந்ததால், கீழான அவ்வமணர்கள் ஒன்றாகக் கூடி, விளங் கும் நீண்ட முடிமன்னனான பாண்டியன் இதை அறியின் நம் வளர்ச்சி யில் மனம் கொள்ளமாட்டான், நாம் பிழைக்கும் வழியையும் ஒழித்து விடுவான் என்று உணர்ந்தாராய்,
குறிப்புரை:

'மந்திரச் செயல், குறித்த பயனைத் தரவில்லை! இனிச் செயத்தகும் செயல் இதுவேயாகும்!' எனத் துணிந்து, பொதியும் தழலினை எடுத்துக் கொண்டு புகுந்து, அழகிய குளிர்ச்சியுடைய மாத வர்களாகிய சிவனடியார்கள் உறங்கும் திருமடத்தின் வெளிப்பக் கத்தில், வஞ்சனை நிறைந்த மனத்தையுடைய அச்சமணர்கள் இருள் என வந்து தம் செயலைச் செய்தனர்.
குறிப்புரை:

அம்மடத்தின் புறச்சுற்றில் தீய பாதகர்களான சமணர்கள் செய்த அத்தீத் தொழில் வெளிப்படுதலும், பரிவாரங்கள் கலக்கம் கொண்டு சுழன்று, பதைப்புடனே அத்தீயை அணைத்துப் போக்கிச் சமணர்களே இத்தீயசெயலைச் செய்தனர் எனத் தெளிந்து அடைவாராய்,
குறிப்புரை:

சீகாழிப் பதியில் கவுணியர் குடியில் தோன்றிய கற்பகக் கன்றான பிள்ளையாரை, அவர்கள் வணங்கித் தொழுது நின்று, சமணர் செய்த கீழான செயலைச் சொன்ன போது, 'சிவனடியார்கள் ஆகிய மாதவர் உறங்கும் இத்திருமடத்தின் வெளிப் பக்கத்தில் தீமை செய்வதோ! பாவிகளே!' என்று பரிவு கொண்டருள,
குறிப்புரை:

இச்செயல் என்பொருட்டாக அவர்கள் செய்த தீங்கு எனினும், சிவபெருமானின் அடியவர்க்குப் பொருந்துமோ? என உட்கொண்டு, மேலும் அச்சம் முன் வரப் பின் சினமும் வர, முத்தமிழ் வல்லலுநரான அப்பிள்ளையார், 'அரசன் காவல் செய்யும் நீதிமுறை தவறியது' என்று மனத்தில் எண்ணம் கொண்டவராய்,
குறிப்புரை:

எனவே 'வெம்மையான இத்தீங்கு வேந்தன் மேல் ஆகும்' என்ற விதிமுறையால், 'செய்யனே! திருஆலவாய்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தில் 'சிவனடியார் வாழும் மடத்தில் சமணர் வைத்த தீ மெல்லச் சென்று பாண்டியனுக்கு ஆகுக' என்றுபாடி ஆணையிட்டருளினார். இம்முதற் குறிப்புடைய பாடல் கௌசிகப் பண்ணில் அமைந்ததாகும்(தி. 3 ப. 51). 'செய்யனேதிரு ஆலவாய் மேவிய, ஐயனே அஞ்சல் என்று அருள் செய்யெனைப் பொய்யராம் அமணர் கொளுவும் சுடர், பைய வேசென்று பாண்டியற்கு ஆகவே' எனவரும் முதற் பாடற் கருத்தை முகந்து ஆசிரியர் இங்ஙனம் அருளுவார் ஆயினர். 'ஆகஎன' என்பது அகரம் தொக்கு 'ஆகென' நின்றது. ஆக - பொருந்துக. அந்நிலையிலன்றி அது ஆக்கச் சொல்லாய், அம்மன் னன் பின்பெறும் பேறுகளுக்கு நிலைக்களனாகவும் உள்ளமை அறிதற்குரியது.

பாண்டிமாதேவியரின் அழகிய நீண்ட திருமங்கல நாண் பாதுகாக்கப்பட வேண்டியதாலும், ஆண்தகைமை உடைய குலச்சிறையாரது அன்பினாலும், அரசனிடம் சிவஅபராதம் நேர்ந்திருத்தலாலும், மீண்டும் சிவநெறி அடையும் நியதி இருத்த லாலும் வெப்பு நோய் தீருமாறு மன்னனின் மேனியைத் தீண்டித் திரு வெண்ணீற்றைச் சீகாழி மன்னவர் இடும் பேறு, அரசனுக்கு உடைமை யாலும், அத்தீய நோயைப் 'பையவே செல்க' என்று பணித்தார். இப்பாடல் இடைச்செருகலாக இருக்கலாம் எனச் சிவக்கவிமணியார் கருதுவர். இப்பாடலுக்கு அவர் தந்திருக்கும் விளக்கக் குறிப்பைக் காண்க. எனினும் இது ஆசிரியர் திருவாக்கு என்றே கருதத் தக்கதாக உள்ளது. இப்பாடற்கு முன்னும் பின்னும் உள்ள சந்த இசைக்கு இப்பாடல் மாறியிருப்பினும், இப்பாடற் பொருண்மை இதற்கு முன்னும் பின்னும் உள்ள பாடல்களில் பெறப் படாமையானும், ஆசிரியர் சேக்கிழார் தேவாரத் திருமுறைகளுக்கு ஆங்காங்கு விளக்கம் தந்து செல்லும் இயல்பைக் கடப்பாடாகக் கொண்டிருத்தலானும், இங்குக் காழிப் பிள்ளையார் 'பையவே செல்க' என்றருளியமைக்குக் கூறிய காரணத்தைக் கூறுதல் அவர்தம் திருவுள் ளமாகவே இருத்தல் இயல்பு ஆதலானும், இப்பாடல் ஆசிரியர் திருவாக்காகவே கொள்ளத் தோன்றுகிறது. காழிப் பிள்ளையார் 'பையவே செல்க' என்றது தீயையேனும், பாண்டியரிடத்துப் பற்றப் பட்டது பிணியே ஆதலால் ஈண்டுத் தீப்பிணியை என்றார்.

சீகாழியில் தோன்றிய தலைவரான ஞான சம்பந்தர் திருஆலவாய் என்ற கோயிலில் வீற்றிருக்கின்ற அருமருந் தாம் இறைவரை, திருந்தும் இசையையுடைய திருப்பதிகம் புனைந்து போற்றிட, அவரது திருவருளால் விரிந்து செலுத்தப்பட்ட செவ்விய தீத்தொழில் முழுவதும் கூடிய வெம்மையின் தொகுதி சென்று, பாண்டியனை அடைந்து, பெரிய தீயின் பொதியான வெப்பு நோய் எனப் பெயர் பெற்றது.
குறிப்புரை:

சிவந்த திருமேனியையுடைய சிவபெருமானின் மகனாரான ஞானப் பிள்ளையார் வீற்றிருக்கும் திருமடத்தில், கவலை யினால் வாடும் மனம் உடையவர்களாய்ச் சமணரான கீழ்மக்கள் அருகில் வந்து, கையினால் கொண்டு சென்று தீயை இட, உடனிருந்து உடன்பட்ட இரவுப் போது மறையக் கதிரவன் கிழக்குக் கடலின் மீது தோன்றினான். நீங்கக் கதிரவன் தோன்றினன் என்பது கருத்து. அதற்குச் சமணர்கள் கையில் கொண்டு சென்று, சைவர்வாழ் மடத்தில் இட்ட தீயைக் கண்டும் இராப் பொழுது வாளாதிருக்க, இதுபொழுது அது தானும் நீங்கியது என ஆசிரியர் தற்குறிப்பேற்றம்பட அருளி யுள்ளார்.

முந்நாள் இரவில் பாதகரான சமணர்செய்த இத்தீங்கைக் கதிரவன் மரபில் தோன்றிய குரா மலரை அணிந்த கூந்தலையுடைய மங்கையர்க்கரசியார் குலச்சிறையாருடன் கேட்டுச் 'சீகாழிப் பிள்ளையாரை, இத்தீயவர் நாட்டில் வருமாறு அழைத்த நாம் உயிர் துறந்து விடுவதே இதற்குக் கழுவாயாகும்' என உள்ளம் மயங்கி,
குறிப்புரை:

மேன்மேலும் பெருகும் அச்சத்துடன், அரிய உயிர் பதைக்கும் அவர்கள் இருவரும், அதன் பின்பு திருமடத்தின் வெளியில் தீமை இல்லாமையைக் கேட்டதால் தெளிவடைந்து, 'கரிய முருட்டுடல் உடைய சமணர்கள் செய்த இத்தீங்கு இதன் மூலமாக விளைவது எப்படியாகுமோ?' என்று உளங்கொண்டபொழுது,
குறிப்புரை:

'மன்னனுக்கு வெப்புநோய் உண்டாயிற்று' என்று அவன் அருகில் இருக்கும் கஞ்சுகி மாக்கள் வந்து சொல்லத் துடித்து, ஒப்பில்லாத அரசமாதேவியார் அரசனது இருப்பிடத்தில் புக, விரைந்த செலவும் அச்சமும் பொருந்தக் குலச்சிறையாரும், மலை போன்ற அழகிய தோள்களையுடைய மன்னனின் அருகே வந்து சேர்ந்தார். கஞ்சுகி மாக்கள் - சட்டை அணிந்த காவலர்கள். இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

மன்னனுக்கு உடல் நடுக்கம் வர வெதுப்புறும் நோயின் வெம்மை எரிதலால், வெப்பத்தை வீசும் தீப்போல விரைவாய் உடல் உள்ளும் புறமும் பரவி, அரண்மனையின் புறத்தே நின்றவர்களும் வாடித் தீய்ந்து போகுமாறு உடல் உலர்ந்து கருக மேலே எழுந்தது.
குறிப்புரை:

உணர்வும் உயிரும் ஒழிவதற்காக ஒருபக்கமாய் நிற்கவும், அருகில் வருபவர் தொலைவில் சென்று அகலவும், பொருந்தும் வாழையின் இளங்குருத்தையும் தளிரையும் அருகில் கொண்டுவரினும் வெப்பத்தால் அவை காய்ந்து சுருங்கி நுண்ணிய துகளாக ஆகவும், உடலில் வெப்பம் மிகும் பொழுது, வாழைக் குருத்தில் கிடப்பித்தல் பண்டைய முறை. அதனால் அவ்வெப்பம் குறையும். இக்காலத்துப் பனிக்கட்டியை வைத்துக் கட்டுதல் இயல்பாகவுள்ளது.

மருத்துவ நூலில் வல்லவர், தாம் கற்றபல கலைகளிலும் வகுத்துக் கூறப்பட்ட சிறந்த தக்க மருத்துவத் தொழில்கள் எல்லாவற்றையும் செய்யவும், அந்நோய் மேலும் முடுகி எழுந்து, உயிரையும் உருக்குவதாய் ஆக, நினைவு ஒழிந்து உரை யொழிந்து மன்னன் கிடந்தான். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

இங்ஙனம் வன்மையாக அந்நோய் மூண்டு கிடந்த போழ்து, சமணர்கள் அனைவரும் மன்னனின் நிலைமையைக் கேட்டலும், பெருமூச்சு விட்டு, வருத்தம் அடைந்தனர். அச்சமணர் கள், 'கடந்த இரவில் செய்த செயலால் வந்த விளைவுதானோ இது?' என்று ஐயம் கொண்டு, தமக்கு நேர்ந்த கீழ்நிலை (அவமானம்) முன் தெரியாதவாறு மறைத்து, அரசனிடம் வந்து சேர்ந்தனர்.
குறிப்புரை:

மயக்கத்தைப் பெருக்கும் சமணரான வஞ்சகர் அருகில் வந்து சூழ்ந்து, பாண்டியனின் வெப்பு நோய் முற்றிய நிலை யைப் பார்த்து, உள்ளம் அழிந்து, அவனுக்கு நேர்ந்த நோயின் மூலத்தை அறியாமலேயே தங்கள் இறைவனின் மொழியை எடுத்துச் சொல்லிக் கொண்டு, மயில் இறகால் முன்னும் பின்னுமாகத் தடவுவ தற்கு எடுத்த போது, கையில் பிடித்த பீலிகள் அவற்றுடன் சேர்ந்த பிரம்போடும் தீப்பற்றி எரிதலால் தீப்பொறிகள் சிதறி விழக்கண்டு, வெப்பத்தின் வியக்கத்தக்க நிலையை நோக்கி மிகவும் அஞ்சினர்.
குறிப்புரை:

கருகிய அழுக்குடைய யாக்கையை உடைய தீயவரான சமணர் தம்கையில் தொங்குகின்ற குண்டிகையின் நீரை மேலே தெளித்து 'அருகனே! காப்பாயாக! காப்பாயாக!' என்று கூறிப் பாண்டியனின் மேல் தெளிக்க, அந்நீர் பொங்கிப் பெருகி எரியும் தீயின் மேல் சொரிந்த நெய்போல் ஆகி, அதன்மேலும் ஒரு நெருப் பினை வாரித் தூவியதுபோல் ஆக, 'நீங்கள் எவரும் இங்கு இல்லாது அகன்று செல்லுங்கள்' என்று மன்னன் அவர்களைப் பார்த்துச் சொல்லி, உணர்வு தளர்ந்து தன்னிலை மறந்தனன். இப்பாடலையும் இதற்கு முன்னுள்ள பாடலையும் இடைச்செருகலாக இருக்கலாம் என்று ஐயுறுவர் சிவக்கவிமணியார். அதற்கு அவர் கூறும் காரணங்கள் இரண்டாம்:- 1. யாப்பு வேறுபாடு. 2. இவ்வரலாற்றில் வரும் 713ஆம் பாடலில் அரசன் நோய் மிகுதியால் 'கருத்தொழிந்து உரை மறைந் தனன்' எனக் கூறியிருப்ப, இப்பாடலில் 'ஒருவருமிங்கு இருமருங்கும் இராது போம்' எனக் கூறியிருப்பது முரணாகும் என்பது. 2. 714ஆம் பாடல் அமணர்கள் மன்னன் மாட்டணைந்தமை யைக் கூறுகின்றது. அவர்கள் பாண்டியன் மாட்டுச் செய்த செய்கை இவ்விரு பாடல்களில் கூறப்படுகின்றன. ஆதலின் சந்த இசை மாறுவது கூடத் தவறில்லை எனக்கருதலாம். 714ஆம் பாடலில் மன்னன் மாட்டு அணைந்தார் எனக் கூறப்பெற்ற அமணர்கள் மன்னனின் துயர் நோக்கி வாளா இருத்தற்கு இடனில்லை. ஆதலின் அவர்தம் செய்கை களாக இவ்விரு பாடல்களும் இருத்தல் பொருத்தம் என்றே தோன்றுகிறது.

அரசமாதேவியாரும் அச்சத்தை அடைந்து, அமைச்சர் பணியை மேற்கொண்டிருக்கும் குலச்சிறையாரைப் பார்த் துச் 'சீகாழியில் தோன்றி நம்மை ஆளாகக் கொண்ட சம்பந்தரிடத்து இரவில் சமணர்கள் செய்த தீங்குதான் இங்ஙனம் முடிந்ததோ!' என்று சொல்ல,
குறிப்புரை:

இதனைக் கேட்ட மன்னனின் அமைச்சரான குலச்சிறையாரும் பணிந்து, இவ்வெப்புத் தானும், இச்சமண வஞ்சர் கள் மதில்கள் மூன்றையும் எரித்து அழித்த இறைவரின் அன்பரான ஞானசம்பந்தரிடம் செய்த ஒவ்வாச் செயலால் இங்கு அரசரிடம் இவ்வாறு வந்து நிரம்பியது! இவர்கள் தீர்க்க முயன்றால் இதுமேலும் பெருகி, முடுகியே நிற்கும் என்று உரைத்தனர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அம்மையாரும், அமைச்சரும் ஆகிய இருதிறத் தவர்களும், மன்னனை எதிர்நின்று வணங்கி, இவ் வெப்புநோய் வரும் திறமாவது, சீகாழி என்ற பதியில் தோன்றிய வள்ளலாரான ஞானசம்பந்தர் மதுரையில் வந்து தங்க, அதைப் பொறாமல் சமணர் செய்த தீங்கேயாம் என்றுகூறி, இதற்குத் தீர்வு செய்யவல்லது ஞான சம்பந்தரின் அருளேயாகும்! என்று எடுத்துச் சொல்லி, சைவநெறி நிற்றலில் இருவரும் ஒன்றுபட்டவர் எனினும், மன்னருக்கு வாழ்க்கைத் துணை நலமாகவும், அமைச்ச ராகவும் அமைந்திருக்கும் முறையில் அம்மையாரும் குலச்சிறை யாரும் 'இருதிறத்தவர்' ஆயினர்.

'உடலிலும் மனத்திலும் பொருந்திய அழுக்கைக் கழுவாத சமணர்கள் செய்யும் இம் மாயத்திறங்களெல்லாம், இந் நோயை மேலும் வளர்க்குமேயன்றிக் குறைத்தல் செய்யா. வளரும் பிறைச் சந்திரனை அணிந்த சடையையுடைய இறைவரிடம் ஞானத் தைப் பெற்ற அப்பிள்ளையார் விரும்பி நோக்குவாராயின், தீய இந்நோயே அன்றிப் பிறவிநோயும் நீங்கும்' என்று கூறினார். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பாண்டி மன்னனின் செவியிலே, மெய்யுணர்வு அளிப்பவரான மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் மேற் கூறியவாறு கூற, அதனுள் 'ஞானசம்பந்தர்' என்னும் திருப்பெயரான மந்திரமும் உடன் செல்ல, அதுபொழுது தளர்ச்சி நீங்குதலால், சமணர் கள் என்னும் மானம் இல்லாத மக்களைப் பார்த்து, அம்மன்னவன் சொல்லத் தொடங்கினான். இறைவரின் திருப்பெயராய திருவைந்தெழுத்தே ஆதிமந்திரமாகும், அருந்தமிழ் மந்திரமுமாகும். அதுபோன்றே, ஏகனாகி இறைபணி நிற்கும் அடியவர்களின் திருப்பெயர்களும் மந்திரமாகும். அதுபற்றியே 'ஞானசம்பந்தர்' என்னும் நாம மந்திரமும் சொல்ல என்றார் ஆசிரியர். 'திருநாவுக்கரசு' எனும் திருமந்திரத்தைச் சொல்லியே அப்பூதியடிகளார் உய்திபெற்றதும், நம்பியாரூரர் எனும் திருப்பெயரைச் சொல்லியே சடங்கவி சிவாசாரியார் திருமகளார், பெருமிழலைக் குறும்பர், சோமாசிமாறர் ஆகியோர் உய்தி பெற்றதும் நினைவு கூர்க. ஞானசம்பந்தர், நாவுக்கரசர், நம்பியாரூரர், மணி வாசகர் ஆகிய நால்வர் பெருமக்களின் திருப்பெயர்களிலும் உள்ள ஒற்றுகளை நீக்க, அவை ஒவ்வொன்றும் ஐந்தெழுத்தாக அமைதல் காணலாம்.

மற்று இவர் செயல்கள் எல்லாம் இத்தகைய நோய்க்கே காரணமாயின என்று மனத்தில் எண்ணி அரசன் அவர் களைப் பார்த்து, 'நிலைபெற்ற சைவ ஒழுக்கம் சான்ற பெருமறைச் செல்வரான பிள்ளையார் இங்குவர, அவரது அருளால் இந்தநோய் நீங்குமாயின் தெளிவுபெறுவேன்!' என மன்னன் இயம்பினன். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. முன்னைய பாட்டில் சமணர்களைப் பார்த்துச் சொல்லலானான் என்பது கொண்டு, இப்பாடற் கருத்தை அவர்களிடம் கூறினான் என்றல் சாலாது. அவர் களைப் பார்த்து இவர் செய்தவையெல்லாம் நோய்க்கே ஏதுவாயின என்று கூறியவன் பின்னுரைக்கும் கருத்துக்களை யெல்லாம் அம்மை யாரையும் அமைச்சரையும் நோக்கிக் கூறியனவேயாம். வரும் பாடல் தொடர்பு கொண்டும் இவ்வுண்மை யறியலாம்.

என்று முன் கூறிய மன்னன், பின்னும் அங்கிருந்த அம்மையாரையும் அமைச்சரையும் பார்த்து 'யான் அடைந்த நோயைப் போக்கி வெற்றி கொள்பவரின் பக்கம் சேர்வேன். என் நோய் நீங்கும் வழியுண்டாயின் அவரை அழையுங்கள்!' என்று அவர் களிடம் கூற, அவர்களும், அணையை உடைத்துச் சென்ற வெள்ளம் போல், காழியார்பால் பேரன்பு கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்துடன் செல்பவராய், விரகுண்டேல் - அச்சிறுவரை அழைத்தற்குரிய வழி யுண்டேல் என்பாரும் உளர். விரகு - வழி (உபாயம்).

பாயை உடையாய்க் கொண்ட சமணர்களாகிய பாதகர்கள் திருமடத்தில் செய்த தீவினைச் செயலை எண்ணி, உள் அழியும் திருவுள்ளத்தில் பொருந்திய அத்துன்பம் நீங்குமாறு, விருப் பம் மிக்க விரைவுடன் தம் தலைவரான பிள்ளையாரின் சீரிய திருவடி களைப் பணிவார்களாய்,
குறிப்புரை:

அரசனின் துன்பம் நீங்குமாறு அவனது பணியை மேற்கொண்டு, அன்னம் போன்ற மென்மையான நடையுடைய மங்கையர்க்கரசியாரும், அழகிய மணிகள் பதித்த சிவிகையின் மேல் அமர்ந்து மின்போன்ற இடையையுடைய பெண்கள் சூழ்ந்து வர, வேற்படையை யுடைய அமைச்சரான குலச்சிறையார் முன்னால் செல்லச் சீகாழித் தலைவர் இருக்கும் திருமடத்தைச் சேர்ந்தனர். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

திருமடத்தைச் சேர நெருங்கிச் சென்றபின், சிவந்த வரிகள் படர்ந்த கண்களையுடைய அம்மையாரின் முன்பு ஏறி வந்த குதிரையினின்றும் இறங்கி நின்ற அமைச்சர் தாமும், 'நாங்கள் இங்கு வந்துள்ளதைச் சீகாழிப் பிள்ளையாரிடம் கூறுங்கள்!' என அங்குள்ள பணியாளர்களிடம் கூற, அவர்களும் உள்ளே சென்று விண்ணப்பிக்கத் தக்கதோர் அமையம் அறிந்து கூறுவாராய்,
குறிப்புரை:

'பாண்டிமாதேவியாரும், அன்புடைய அமைச்ச ரும் ஈண்டு வந்துள்ளனர்' என்று பணியாளர்கள் உரைக்க, சீகாழித் தலைவரும் 'அவர்களை உடன் அழையுங்கள்' என்று அருள, பணியா ளர்களும் அழைப்பப் பெருவிருப்பத்துடன் அவர்கள் உட்புகுந்தனர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

சிவஞானமே உருவாய் அமைந்த திருவுரு உடையாரை, நான்மறைகளின் ஒப்பற்ற துணையாயினவரை, வானத்தின் மீதன்றி மண்உலகத்தில் வளரும் பிறைச்சந்திரன் போன்ற வரை, தேன்ஊறி வழியும் கொன்றை மலரையணிந்த சிவந்த சடை யுடைய சிவபெருமானின் சீர்மைகளை இடையறாது தொடுத்து இசைக்கும் கானத்தின் ஏழு பிறப்புக்கு இடமான பிள்ளையாரைக் கண்கள் களிப்படையப் பார்த்தனர். சிவஞானம் கலந்த திருமுலைப் பாலை உமாதேவியார் ஊட்ட, உண்ட பிள்ளையார், அப்போதே கலைஞானமும் மெய்ஞ் ஞானமும் பெற்றுச் சிவஞானசம்பந்தராயினார் என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். மேலும் திருத்துருத்தித் தேவாரத்தில், 'திருந்தடி மறக்குமாறிலாத என்னை மையல் செய்து மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்' என்று ஞானசம்பந்தரே குறிப்பிடுகிறார். எப்போதும் திருவடி மறக்குமாறிலாத பிள்ளையார், ஞானவடிவாகவே திகழ்கிறார். எனவே மங்கையற்கரசியாரும் குலச்சிறையாரும் அத்திருவுருவத் தைச் சிவஞானத்தின் திருவுருவாகவே கண்டு போற்றினர். உள்ளும் புறமும் ஒரு தன்மைக் காட்சியர் என்பது கருத்து. வேதம் நான்கினும் மெய்ப்பொருளாய நாதன் நாமத்தையே என்றும் ஓதியும் உணர்த்தி யும் வருதலின் 'நான்மறையின் தனித்துணை' என்றார். மதி இரவில் காணவல்லது, விண்ணகத்தது, சாபத்தால் வளர்ந்தும் தேய்ந்தும் வருவது. ஆனால் இம்மதியோ எப்பொழுதும் காண்டற் குரியது, மண்ணகத்தது, ஞானத்தால் வளர்ந்து கொண்டே வருவது, என்றும் அழகியது, இளமையானது, இனையபல வேற்றுமைகள் தோன்ற, 'வானத்தின் மிசை யன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்து' என்றார். கானம் - இசை, அது எழுவகைப்பட்ட சுரங்களில் பிறந்து விரிவது. பிள்ளையாரும் எழுவகைக் கானங்களும் ஒன்றி எழும் இசைப் பாடலை, 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்' எனப் போற்றி மகிழுமாறு பாடிமகிழ்ந்து வருபவர். ஆதலின் அவரைக் 'கானத்தின் எழுபிறப்பு' என்றார். பாண்டியரின் உடற்பிணியையன்றி உயிர்ப்பிணியையும் நீக்க வரும் குருமூர்த்திகளாயிருத்தலின், ஆசிரி யர் சேக்கிழார், 'தெளிவு குருவின் திருமேனி காண்டல்'(தி. 10 பா. 138) என்பது பற்றி, அவர்தம் திருவுருவை இவ்வாறு காட்டுவாராயினர்,

அங்ஙனம் பார்த்த பொழுது, சமணரான கொடிய வர்கள் செய்த கொடுந் தொழிலை எண்ணி, கண்களினின்றும் அருவி போல மிகுந்த நீர் சொரிய, மலர் போன்ற கைகளைக் கூப்பி, பிள்ளை யாரின் தாமரை மலர் அனைய சிவந்த திருவடிகளின் கீழே பொருந்தும் படி நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கியவர்களாய், உட்கொண்ட குறிப்புடன் பெருமூச்செறிந்து, உள்ளம் அழிந்த நிலைமையராய், உட்கொண்ட குறிப்பு - பிள்ளையாருக்கு அமணர்கள் செய்த கொடுஞ்செயல்பற்றிய குறிப்பு.

சொல் தடுமாறி உடல் நடுங்கி உள்ளம் கலங்கிய தால் ஒன்றும் அறியாதவர்களாகி, நிலத்தின்மீது புரண்டு, தளர்ச்சி கொண்டு, பிள்ளையாரின் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொண்டு, எல்லை இல்லாத கவலைக் கடலில் விழுந்து தளர்பவர்கள், அதனின்றும் ஏறுதற்கு உரிய கரையைப் பற்றிக் கொண்டவர் போல், விரைகின்ற உள்ளத்து அன்பு காரணமாக, விடாமல் பற்றிய படியே கிடந்த அவர்களைப் பார்த்து,
குறிப்புரை:

அரிய மறைகள் வாழ்வதற்காகச் சீகாழியில் வந்து தோன்றிய அண்ணலாரான பிள்ளையார், தம் திருவடிகளைப் பற்றிக் கொண்டு கிடந்த அவ்விருவரையும், தம் கைகளால் எடுத்துத் தேறுதல் செய்யவும், உள்ளச் சுழற்சியில் தெளிவடையாமல் கலங்கிய அவர் களைப் பார்த்தருளிச் சிறப்பு செய்து, 'திருவுடையவர்களே! உங்க ளிடம் ஏதேனும் தீமை நேர்ந்துளதோ?' என வினவ,
குறிப்புரை:

'கொடிய சமணர்கள் முன்பு செய்த வஞ்சனை களைப் பற்றி மிகவும் கலங்கி அச்சம் கொண்டோம். தங்கள் திருமேனி யிடத்து அவை ஒன்றும் தீங்கு செய்ய இயலாது எனத் துணிந்து, அவ்வச்சம் தவிர்ந்தோம். வஞ்சகர்களாகிய அவர்கள் செய்த தீய செயலே மன்னனிடத்து அளவில்லாத கொடிய வெப்பு நோயாய் உருக்கொண்டு நிற்கின்றது' எனக் கூறி வணங்கி,
குறிப்புரை:

'கொடிய செயல் செய்துவரும் சமணர்களான கீழ்மக்கள் செய்த தவற்றால் உண்டான வெப்பு நோயானது, அவர்கள் செய்யும் மாயத் தீர்வுத் தொழில்களாலே நீங்காமையின், தீய நோயால் மயக்கம் அடைந்த அரசன் முன்பு, அவர்களை வென்று அருளிச் செய்யின், எம் உயிரும் மன்னவர் உயிரும் உய்யும்!' என்று உரைத்தனர். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

என இங்ஙனம் அவர்கள் உரைத்தபோது, அழகு பொருந்திய பொலிவுமிக்க தலைவரான பிள்ளையார், 'நீவிர் ஒன்றற்கும் அஞ்சவேண்டா! உணர்வற்ற சமணர்களை இன்று நீவிர் மகிழ்ச்சியடையுமாறு எல்லோரும் காணுமாறு வென்று, பாண்டிய னைத் திருநீறு அணியும்படி இறைவன் ஆணையினால் செய்வன்!' என மொழிந்தருளினார்.
குறிப்புரை:

இவ்வாறு ஞானசம்பந்தர் உரைத்ததை அவர்கள் கேட்டுத் திருமுன்பு வணங்கி, முகம் மலர்ச்சி கொண்டு, 'ஆழ்ந்து கிடந்த துன்பக் கடலினின்றும் அடியோமை மேலே எடுத்தருளும் பொருட்டுச் செழுமையான முத்துச் சிவிகையின் மீது தென்னாடு செய்த பெருந்தவப் பயனால் எழுந்தருளும் பெரும்பேறு பெற்றோம், எனவே இனி என்ன பேறுதான் பெறமாட்டோம்' என்று சொல்லி வணங்கியதும், இதனையும் இதற்குமுன்னுள்ள பாடலையும் இடைச்செருகலாக இருக்கலாமோ என்று ஐயுறுவர் சிவக்கவிமணி யார். அதற்கு அவர் கூறும் காரணங்கள் இரண்டாம்: (1) யாப்பு வேறு பாடுடைமை (2) 736ஆவது பாடலில் ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் எனக் கூறும் பிள்ளையார் 'சேவுயர் கொடியினார்தம் திருவுள்ளம் அறிவேன்' என்றும் கூறுகின்றமை. அவ்வாறு கூறுமவர் 734ஆம் பாடலில் 'யாவரும் காண வாதில் வென்று மீனவனை வெண் ணீறு அணிவிப்பன்' எனக் கூறுவதாக இருப்பது பொருந்துவதாகத் தோன்றவில்லை என்பது அவர் கருத்து. எனவே சிவக்கவிமணி யாரின் கருத்துப்படி இவ்விரு பாடல்களும் இடைச்செருகலாக இருக்கலாமோ? எனும் ஐயமே வலுப்பெறுகின்றது.

ஆக்கம் அழிவு ஆகிய அவையெல்லாம் 'அவர் செயல்' என்று மறைகள் சுட்டிக் கூறும் இறைவரின் செயலே ஆகும். சமணராய பாவம் செய்பவர்களைப் பார்க்கவும், பேசவும், மற்றும் சிலசெயல்கள் செய்யவும் நேர்தலால் வரும் குற்றங்கள் எல்லாம் அவ்வச் செயல்களுடன் நீங்கவும், அவர்களை வெல்லவும், விடைக் கொடியை உயர்த்திய சிவபெருமானின் திருவுள்ளக் குறிப்பை அறிவேன்' எனக் கூறி, மலர்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவரான பிள்ளையார் செல்பவராய், தீயவர்களைக் காண்டலும், அவரொடு பேசுதலும், தீய செயல்கள் செய்ய நேர்தலும் தீங்கேயாகும். ஆதலின் இவ்வனைத்துச் செயல்களுக்கும் நேரும் குற்றம் நீங்க இறையருளை வேண்டுவன் என்றார். 'பிரட்டரைக் காணாகண், வாய்பேசாது அப்பேய்களோடே' 'வெண்ணீறணி கிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே' (தி. 8 அச்சப். 5) எனவரும் திருவாக்குகளும் காண்க.

இவ்வுலகுய்ய வந்த ஞானசம்பந்தர், தாம் இருந்த மடத்தினின்றும் உடலில் திருநீற்றை அணிந்து கொண்டுள்ள தொண் டர்களின் வெள்ளமும் தாமுமாகச் சென்று இருகைகளும் தலைமீது குவியவும், கண்கள் மலர்ச்சியைக் காட்டவும், சிவந்த சடையை யுடைய இறைவர் நிலைபெற எழுந்தருளியிருக்கின்ற திருவாலவாய்க் கோயிலுக்குள் புகுந்தனர். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

'தீயைப் போன்ற திருமேனியையுடையவரே! நோக்குதற்குத் தகுதியில்லாத சமணரை நோக்கி யான் வாது செய் தற்குத் தங்களுக்குத் திருவுள்ளமே?' என்று எண்ணற்ற நற்பேற்றின் பயனாய் உள்ள பாலறாவாயரான ஞானசம்பந்தர், திருவருளின் உண்மைத் திறத்தை நோக்கி, வளமை பொருந்திய தமிழால் ஆய மாலையான திருப்பதிகத்தைப் பாடியருள்வாராய்,
குறிப்புரை:

சுடுகாட்டில் ஆடல் செய்பவரான இறைவரைக் 'காட்டு மாவுரி' எனத் தொடங்கிப் பாடி, தேன் சிந்துகின்ற கொன்றை மலர் சூடிய இறைவரின் திருவுள்ளக் குறிப்பை அறிந்து கொண்டு , மேலும் ஊனத்தை இல்லையாகச் செய்யும் 'வேத வேள்வி' எனத் தொடங்கி, நற்சொற்களாலாய பதிகத்தை மானம் இல்லாத சமணர் களை வாதத்தில் வென்று அழிக்கப் பாடி, 'காட்டுமாவதுரித்து' (தி. 3 ப. 47) எனத் தொடங்கும் பதிகம் கௌசிகப் பண்ணிலமைந்ததாகும். 'வேத வேள்வியை' (தி. 3 ப. 108) எனத் தொடங்கும் பதிகம் பழம்பஞ்சுரப் பண்ணிலமைந்த பதிகமாகும். இவ்விரு பதிகங்களிலும் 'வாது செய்யத் திருவுள்ளமே' என்பதோடு, 'அவர்களை அழிக்கத் திருவுள்ளமே' எனவரும் குறிப்பும் அமைந்துள்ளன. இவற்றுள் முன்னைய பதிகத்தில் வரும் திருக்கடைக்காப்பு, 'தெந்தெனாமுரலும் திருஆலவாய், மைந்தனே என்று வல்லமண் ஆசறச் சந்தமார் தமிழ் கேட்ட மெய்ஞ் ஞானசம், பந்தன் சொற்பகரும் பழி நீங்கவே' என்பதாகும். பின்னைய பதிகத்தில் வரும் திருக்கடைக்காப்பு, 'கூடல் ஆலவாய்க் கோனை விடை கொண்டு, வாடல் மேனி அமணரை வாட்டிட, மாடக் காழிச்சம் பந்தன் மதித்த இப், பாடல் வல்லவர் பாக்கியவாளரே' என்பதாகும். இவ்வரிய குறிப்புகளை உளங்கொண்டே, 736ஆவது பாடலில், சமணர்களைப் பார்த்தும், பேசியும், சில வாதங்களைச் செய்தும் கொண்ட பழிகளைப் போக்கவும், அவர்களை அழிக்கவும் இறை வனின் திருவுளக்குறிப்பை அறிகுவன் எனப் பிள்ளையார் திருக் கோயிலுக்குள் சென்றார் என ஆசிரியர் அருளுவாராயினர்.

நான்மறைகளும் போற்றும் சீலமானவரே! திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் பெருமானாரே! தாங்கள் நஞ்சினையே அமுதமாய் உண்டு தேவர்க்கு அருள் செய்ததுடன், மார்க்கண்டேயருக்காகக் காலனையும் உதைத்து அருளினீர்! இன்று அடியேனுக்கு அருள் சுரந்தீர். இந்நிலவுலகம் முழுதும் தங்களது புகழே ஆகப் பரவவேண்டும் என வேண்டிக் கொண்டார். 'ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயி லுறை எம் ஆதியே' எனப் பதிகப் பாடல்தொறும் வரும் பொன் மொழிகளை ஆசிரியர் இப்பாடலில் கொண்டெடுத்து மொழிகின்றார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

இறைவரின் திருவருளை முன்னே பெற்றுக் கொண்டு, நாடிய அருள் உணரப் பெற்றமையால், பெற்ற மகிழ்ச்சி பொங்கச் செல்பவராய், வணங்கிப் போற்றி, வாதில் வெல்ல இறைவர் அருள் பெற்றுக் கொண்டு, தூய திருநீற்றின் திருக்கோலப் பொலி வுடன் அன்புடைய தொண்டர்கள் சூழ்ந்துவரப் பழமையான மதில் பொருந்திய முதல் திருவாயிலை அடைந்தார். 'வாது செய்யத் திருவுள்ளமே' 'அமணரை அழிக்கத் திருவுள்ளமே' என்றெல்லாம் விண்ணப்பித்துக் கொண்டமைக்கு, இறைவன் அருள் சுரந்தமை தோன்ற, 'நாதர்தம் அருள் முன் பெற்று' என்றார்.

அழகிய மலர்களைச் சூடிய கூந்தலையுடைய மங்கையர்க்கரசியாருக்கும் குலச்சிறையாருக்கும் அருள்செய்ய வேண்டி, சிவந்த மணிகள் பொருந்திய பலகையுடைய முத்துச் சிவிகை மீது சம்பந்தர் ஏறியருளியபோது, எம்மருங்கிலும் இருந்த தொண்டர் கள் எழுப்பிய மகிழ்வொலி அப்பொழுதே அளவில்லாது பெருகி, மூன்றாயுள்ள உலகங்களிலும் நிறைந்தது.
குறிப்புரை:

பலவகையான இயங்களின் ஒலிமிகுந்து ஒலிக்க, எங்கும் படர்ந்து பெருகும் திருநீற்றின் ஒளியானது ஒரு நல்ல ஒளிவட்டமாய் உருக்கொண்டு பொருந்தி மேலே வருவது போல, ஒளி பெருகும் முத்துக் கோவைகளையுடைய வெண்குடையானது நிழலைச் செய்ய, வேறு வேறாக அளவில்லாத முத்துக் காளமும் தாரை யும் சங்குகளும் எங்கும் ஒலிக்க,
குறிப்புரை:

கண்ணினுக்கு அணியாக விளங்கும் பிள்ளை யாரின் திருவெழுச்சியின் காட்சியைப் பெற்ற அந்நகர மக்கள், தாங்கள் சார்ந்த சமண சமயத்தை நம்பினராயினும், 'பாண்டிய மன் னன் அடைக்கலம் புகும் பொருளாய்ப் பொருந்திப் புண்ணிய வடிவி னரான இவர், மதுரையில் வருதற்கு இந்தப் பாண்டியன் முன் செய்த தவங்கள்தாம் எவையோ?' என உரைத்தனர். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பாண்டியனின் மனைவியாரும் அழகிய மணி களையுடைய சிவிகையில் அமர்ந்து பின்வர, அமைச்சரான குலச் சிறையார், தம் திருமுன்பு செல்லும் தொண்டர் கூட்டத்துடன் கலந்து செல்ல, இவ்வாறு பொன் அணிகளையுடைய மாடவீதியின் வழியாய் எழுந்தருளிச் சென்று, சீகாழி நாட்டுத் தலைவரான ஞானசம்பந்தர், கன்னிநாட்டரசனான பாண்டியனின் அரண்மனைக்குள் புகுந்தார்.
குறிப்புரை:

பாண்டியன் முன்னால் குலச்சிறையார் வந்து சேர்ந்து, பொன்னால் ஆன மதில் சூழ்ந்த சீகாழித் தலைவரான ஞான சம்பந்தரின் வருகையை அறிவிக்க, முன்னிருந்த துன்பம் சிறிது நீங்கப் பெற்ற அப் பாண்டியன் 'முழுதும் மணிகள் பதித்த பொற் பீடத்தைத் தன் தலைப் பக்கத்தில் இடுவீராக!' என்று சொல்லவல்ல ஆற்றல் உடை யவன் ஆயினன். பீடத்தைத் தலைப் பக்கம் இடுக என்று சொல்லுவதற்கு வல்லன் ஆயினான் எனவே, சமண சமயச் சார்பால் அதுகாறும் அத் துணையளவு பிணியோடிருந்த பான்மை தெரிய நின்றது.

மேலும், தன் அமைச்சரைச் சென்று ஞானசம் பந்தரை அழைத்து வருமாறு ஏவிட, அவரும் மனத்தில் மகிழ்ச்சி உடை யவராய்ச் சென்றார். அசோக மரத்தினடியில் இருக்கும் அருகனது சமயத்தில் உள்ள சமணர்கள், பசிய பூங்கொத்துகளால் ஆன வேப்ப மாலையை அணிந்த மார்பையுடைய பாண்டிய மன்னனின் தன்மை யைப் பார்த்து 'நம் ஒப்பற்ற சமயத்தைப் பண்பாய் நாட்டும் வழி இதுவோ!' எனக் கூறி மேலும் சொல்வார்களாய், செயலை - அசோகமரம். அதன் அடியில் இருத்தலின் அருகனைச் 'செயலையான்' என்றார்.

'நின் அறநெறியான சமயத்தை நீயே காத்தருள் செய்வாயானால், அவரை இங்கே வருமாறு அழைப்பினும், அவரும் நாங்களும் உன் முன்னே ஒருங்கு கூடி, இந்நோயைத் தீர்க்கும்படி சொல்லி, மற்று அவரால் நோய் தீர்ந்தாலும் நாங்களும் தீர்த்தோம் என்று கூற, உடன்படுவாயாக!' எனக் கூறினர். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பொய்யை மெய்த்தவமாகக் கொண்ட புன்மை யான தலையையுடைய சமணர்கள் இவ்வாறு சொல்ல, 'முன்செய்த தவத்தின் பயன் வந்து நன்மை அளிக்கும் காலம் பொருந்துவதனால், சேர்ந்த உங்கள் தெய்வங்களின் சார்பினால் இருபக்கத்தவரும் தீருங்கள்! நான் நடுவு நிலையினின்று தவறி வஞ்சம் பேசமாட்டேன்!' எனப் பாண்டியன் கூறினான். கைதவம் - வஞ்சனை ; அஃதாவது நடுவின்றிச் சொல்லு தல், கைதவன் - பாண்டியரின் மரபுப்பெயர்; கைவந்த தவத்தினை யுடையவன் எனினும் ஆம்.

என்று அப்பாண்டியன் உரைக்க, அமணர்கள் தம் கருத்தழிய மனம் குன்றியிருந்தநிலையில், தென்தமிழ் நாடான பாண்டிய நாடு முன்செய்த தவத்தின் கொழுந்து அனைய ஞான சம்பந்தர், வலிய ஒப்பில்லாத அரண்மனையின் முன் உள்ள வாயிலை அடைந்து, எம்மருங்கும் பொன் அணிந்து விளங்கும் முத்துக்களை உடைய சிவிகையினின்றும் இறங்கி உள்ளே புகுந்தார்.
குறிப்புரை:

மன்னனிடம் அறிவித்த பின்பு, குலச்சிறையார் ஞானசம்பந்தரின் திருமுன்பு சேர, அரசமாதேவியாரும் அரண்மனை வந்து தம் சிவிகையினின்றும் இறங்கி வந்தனர். குளிர்ந்த தமிழ் நாட்டின் மன்னனான பாண்டியன், வானத்தினின்றும் நீண்ட இருள் நீங்குமாறு, நிலத்தில் வந்து நிறைந்த, நிறை நிலவு எனவரும் கவுணியர் பெருமானைக் கண்டான்.
குறிப்புரை:

பார்த்த அப்பொழுதே மன்னன் கைகளைத் தூக்கி வழிபடும் பண்பினை நோக்கி, குளிர்ந்த மலர்களையுடைய தன் முடியின் பக்கத்தில் இடப்பட்ட பீடத்தில் அமருமாறு கைகளைக் காட்டிட, வளம் மிக்க தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் அப்பீடத்தின் மீது அமர்ந்தருளினர். மாயங்களைக் கொண்ட அமணர்கள் எல்லோ ரும் தம் மனத்துள் எழுந்த குறிப்பால் அச்சம் கொண்டனர்.
குறிப்புரை:

பாண்டியனும் ஞானசம்பந்தரின் திருமேனியைக் காணப் பெற்றவனாய், விழி பொருந்த நோக்கியதால், வெப்பு நோய் மேலும் சிறிது நீங்கப் பெற்று, ஒருநிலையில் நில்லாத தன் மனம் ஒருமையுற்று நிற்ப, அந்தணர் தம் பெருவாழ்வெனத் தோன்றிய ஞானசம்பந்தரைப் பார்த்து, 'உமது ஊர் யாது?' என்று விருப்புடன் வினவ, முன்னர் (பா. 720) மீனவன் செவியினூடு ஞானசம்பந் தர் என்னும் நாமமந்திரம் சொல்ல அவன், அயர்வு நீங்கியது என்றார். பின்னர் அவர் தம் திருவுருக் கண்டபோது, வெப்பு நோய் சிறிது நீங்கவும் மனம் ஒரு நெறிப்படவுமானது என்றார். இதுபொழுது அவரைப் பார்த்த அளவில் அவரது ஊர் யாது எனக் கேட்க, அவரும் தம் திருவாயாலேயே சொல்ல, அதனைக் கேட்கவும் நேருகிறது. படிப்படியாக நிகழ்வுறும் இந்நிகழ்ச்சி, 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள், பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்' எனவரும் அருள் வாக்கை நினைவு கூரவைக்கும். இது பெண்ணின் அநுபவம், பெருமானின் பெயரும் வண்ணமும் ஊரும் கேட்கும் அளவில் அமைகிறது. இப்பாண்டிய னின் அநுபவமோ காணும் பேற்றையும் பெறுமாறு அமைந்துள்ளது. இனி, அவள்தன் தலைவனின் ஆரூரைப் பிறர் சொல்லக் கேட்க, பாண்டியனோ ஊரின் பெயரை உரியவரே சொல்லக் கேட்கின்றான். அவள் பெற்ற அநுபவம் அகவழியது. பாண்டியன் பெறும் அநுபவம் புறவழியது; குருவருள் அநுபவமாக அமைவது, இனி ஞானச் செல்வரின் திருக்கைகளால் திருநீறு பூசப்பெறும் பேறும், அவர்தம் உரையளவானும், பதிக அளவானும் கேட்கப் பெறும் உபதேசப் பேறும் பெறவுள்ளமையும் நினைவு கூரத்தக்கன. இவ்வாறெல்லாம் ஒப்பிட்டுக் காண உவகை தரும்.

காவிரியாறு பாய்ந்து வளத்தை அளிக்கும் சோழ நாட்டில் நீர் நிறைந்த வயல்களையுடைய மருத நிலம் சூழ்ந்த அழியாத மதிலால் சூழப்பெற்ற 'திருக்கழுமலம்' (சீகாழி) என்பது எமது ஊரா கும் என்று சிறப்புடைய பன்னிரண்டு பெயர்களையும் போற்றிய கருத் துடைய திருப்பதிகத்தை ஆளுடைய பிள்ளையார் அம்மன்னனின் முன்பு பாடியருளினார். 'பிரமனூர்' (தி. 2 ப. 70) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகத்தில் காழிக்குரிய பன்னிரண்டு பெயர்களுள.

ஞானசம்பந்தர் பொன் பீடத்தில் அமர்ந்திருந்த போது, உள்ளத்தில் உண்டான பொறாமையினால், அருகிருந்த கருநிற முடைய சமணர்கள் தம் மனத்திடைக் கொண்ட அச்சத்தை மறைத்து, முகத்தில் சினத் தீயானது துள்ளி எழுவதுபோல் கண்கள் நெருப்பெனச் சிவந்து பலவாறு சொல்பவராய்,
குறிப்புரை:

காலையில் தோன்றும் கதிரவனைச் சூழ்ந்த கருமையான மேகக் கூட்டத்தைப் போல், மயில் இறகை ஏந்திய சமணர்கள் பிள்ளையாரைச் சூழ்பவராய்ப் பொருந்தியவாறு வாதில் வெல்வதற்கு எண்ணம் கொண்டு, தாம் போற்றும் ஆருகத நூலில் கண்ட பொருள்களை எடுத்துக் கூறித் தலைகள் அசைத்துக் குரைத்தார்கள். தலைதிமிர்ப்ப - தலையசைய.

ஞானசம்பந்தர் அதனைக் கேட்டு, 'உங்கள் கொள்கையின்படியுள்ள பொருள் முடிவுகளை உள்ளபடி கூறுங்கள்' என்று அருள, ஊத்தை வாயையும் பறித்த தலையையும் உடைய சமணர்கள், துள்ளிப் பலராக எழுந்து, பிள்ளையாரைச் சூழ்ந்து, பதறிக் கதறவே, ஒளியுடைய அணிகளை அணிந்த மங்கையர்க்கரசியார் அதைக் கண்டு பொறாமல் உள்ளம் நடுங்கி,
குறிப்புரை:

பாண்டிய மன்னனைப் பார்த்து, 'இனிய அருளை யுடைய பிள்ளையாரான இவர் சிறுவர், ஆனால் சமணர்கள் ஆகிய இவர்கள் எண்ணற்றவர்கள். மன்ன! உம் வெப்பு நோயின் மயக்கத்தை எங்கள் பிள்ளையார் நீங்குமாறு அருள் செய்வார். அதன் பின் இவ் அமணர்கள் வாது செய்ய வல்லவரானால் பேசுவாராக!' என்று கூறினார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பாண்டியனும் மங்கையர்கரசியாரைப் பார்த்து 'நீ வருந்தற்க!' என்று கூறிப் பின் 'பிற வாது என்ன வேண்டும்? அருகர் களாகிய நீங்களும், கங்கையை அணிந்த சடையை உடையவர்க்கு அடியவரான இவரும், என்னிடத்ததான இவ்வெப்பு நோயை ஒழியச் செய்து, பின், நீங்கள் அவ்வவர் தெளிந்த தெய்வங்களின் உண்மைத் தன்மையை என்னிடத்தில் விளக்குக' எனக் கூறினான்.
குறிப்புரை:

ஞான அமுதை உண்ட ஞானசம்பந்தர் நற்றவம் உடைய மங்கையர்க்கரசியாரை நோக்கி, 'மானின் நேர் விழியினாய்! கேட்பாயாக! என்னைச் சிறுவன் என்று எண்ணி அச்சம் கொள்ள வேண்டுவதின்று, நல்ல நிலையில் ஒருமையுறாத சமணர்களுக்கு என்றும் நான் எளியன் அல்லேன்' எனும் கருத்துப்பட எழுகின்ற திருப்பதிகத்தைப் பாடி, இதுபொழுது அருளிய பதிகம்,
மானி னேர்விழி மாத ராய்வழு
திக்கு மாபெருந் தேவிகேள்
பானல் வாயொரு பாலன் ஈங்கிவன்


திருவருளைப் பற்றிய தன்மையால் அவ்வாறு திருப்பதிகம் பாடியருளிய பிள்ளையாருக்கும், தன் முன்பு சூழ்ந்து நின்று உரைப்பதைக் கைவிடாத சமணர்களுக்கும், ஒன்று போலவே, 'இன்று என்னை அடைந்த இவ்வெப்பு நோயை நீவிர் இருவரும் தனித்தனி வேறாகி இகல் வைத்து ஓட்டித் தீருங்கள்! தெளிவுபெறத் தீர்த்தவர்களே வெற்றியுற்றவர் ஆவர்!' என்று பாண்டிய மன்னன் உரைக்க,
குறிப்புரை:

பாண்டிய மன்னன் சொல்லைக் கேட்டு, வடிவத்தைப் போன்றே மனமும் மாசுடையராய அமணர்கள், பாண்டிய மன்னனைப் பார்த்து, 'நாங்கள் உம் உடலில் ஒரு பக்கமா கிய இடப்பாகத்து வெப்பு நோயை மந்திரித்துத் தெய்வ முயற்சியால் நீக்குவோம். ' என்றனர். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

சற்றும் உண்மை நிலையை அறியாதவரான சமணர்கள், இருளைப் போல மன்னனை நெருங்கிச் சென்று, வாதத்தின் பொருட்டு முற்பட்டு, மன்னனின் இடமருங்குள்ள நோயைத் தீர்க்கத் தொடங்கி, அவனது உடலின் மீது தம் மயிற்பீலிக் கற்றையை மந்திரித்துத் தடவ, வெப்பு நோய் மேன்மேலும் மிகுந்து தீமை செய்ததால், அதை ஆற்றமாட்டாதவனாகி, மன்னன், சீகாழித் தலைவரைத் தன் பிணியைப் போக்க வேண்டும் என்ற குறிப்புடன் நோக்கினான்.
குறிப்புரை:

பாண்டியனின் பார்வையின் கருத்தை உணர்ந்த சீகாழிச் செல்வரான ஞானசம்பந்தர், அவனது வலப்பக்க நோயைத் 'திருவாலவாய் இறைவரின் திருநீறே நிலையான மந்திரமும் மருந்துமாகித் தீர்ப்பதாகும்!' என்று மனத்துள் கொண்டு கூறிய மறைகளின் கருத்தைப் போற்றி எடுத்துக் கூறுகின்ற 'மந்திரமாவது நீறு' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி, இத்தொடக்கமுடைய திருப்பதிகம் (தி. 2 ப. 66) காந்தா ரப் பண்ணில் அமைந்ததாகும். இப்பதிகத்தில், 'மந்திரமாவது நீறு' 'வேதத்திலுள்ளது நீறு' என வருவன கொண்டு, திருவாலவாயான் திருநீறே 'மந்திரமும்' ஆவது என்றார். 'வருத்தந் தணிப்பது நீறு' 'ஏலவுடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு' என வருவன கொண்டு, 'மருந்துமாகித் தீர்ப்பது' என்றார்.

திருவளரும் திருநீற்றைக் கொண்டு ஞானசம்பந்தர், தம் திருக்கையினால் மன்னவன் உடலில் தடவிட, அப்பாண்டியன் ஒப்பில்லாத வெப்பு நோயினின்றும் நீங்கியதால், வலப் பக்கம் தண்ணீர்ப் பொய்கை போல் குளிர்ந்தது. பொருந்திய இடப் பக்கம், மேலும் மிகுந்த அனலின் தன்மை எழுந்ததால், செறிந்த தீயைப் போல இரு பக்கத்து வெப்பும் கூடி, இடம் கொள்ள மாட்டாது பெருகிட,
குறிப்புரை:

உறியைக் கையில் கொண்ட, பாயினை உடைய சமணர்கள், நடுக்கம் அடைந்து, செறிந்த மயில்பீலி தீய்ந்து போக, மன்னனின் வெப்பு நோயின் வெப்பம் தம்மைத் தாக்குதலால், மாசு கொண்ட உடல் மேலும் கருகி வெதும்பியதால், மன்னனிடமிருந்து அகன்று, தொலைவில் சென்று நிற்பவர்களாய் அறிவில்லாத நெறியில் நின்றவராயினும், அறிவுடையாரைப் போன்று விளங்கினர். இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பலராலும் வணங்கப்படும் சீகாழித் தலைவர் ஆன பிள்ளையார், அரசனின் வலப்பக்கத்து வெப்பத்தைப் போக்க, மலர்தலையுடைய உலகில் அறிவால் சிறந்தவர் அதிசயித்து வந்து சூழ, வேல் ஏந்தும் பாண்டியனின் உடல், வலப்பக்கத்தில் தண்மையும் இடப்பக்கத்தில் வெம்மையும் கூடியதால், நீண்ட உலகில், தண்மையும் வெம்மையும் இணைந்து ஓரிடத்து ஒதுங்கினாற் போல் அப்போது விளங்கியது.
குறிப்புரை:

பாண்டிய வேந்தன், 'என்னே வியப்பு' எனக் குறிப்பிட்டு, ஒரே காலத்தில் கொடிய நரகம் ஒரு பக்கத்தில் உளதாகும், முத்தியின்பம் ஒருபக்கத்தில் உளதாகும், மிக்க நஞ்சின் நுகர்ச்சி ஒருபக்கத்தில் உளதாகும், சுவையுடைய அமுதின் நுகர்ச்சி மற்றொரு பக்கத்தில் உளதாகும், 'என் உடல் ஒன்றிலேயே இங்ஙனம் மாறுபட்ட இருவேறு தன்மைகளையும் நான் அடையப்பெற்றேன்' என்பவனாய், நுகர்ச்சியும், நுகரும் பொருள்களும் வெவ்வேறான காலத்திலும் வெவ்வேறான இடத்திலும் நிகழ்வதே இயற்கை. ஆனால் என்னளவிலோ ஒரே உடம்பில் ஒரே காலத்தில் வேறுவேறாகிய இரு தன்மைகளும் ஒருங்கு நிகழ்கின்றனவே என்று வருந்தினன் மன்னன்.

'கொடிய தொழிலையுடைய அமணர்களே! நீங்கள் தோற்றீர்கள்! என்னை விட்டு நீங்கிச் செல்லுங்கள்! இங்கு வந்து என்னை உய்யுமாறு ஆட்கொண்டருளிய அந்தணர் குலத்து வள்ள லாரே! இவ்வெப்பு நோய் முழுமையாக நீங்குமாறு எனக்கு அருள் செய்வீராக!' என மனத்தால் வணங்கி, நற்கதிக்கு நெருங்கியவனான பாண்டியன் உரைத்தான். அடைய - முழுமையாக. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

திருமுகத்தின் பொலிவு, உள்ளத்தில் நிறைந்த கருணையினைப் புறத்தே புலப்படுத்த, திருக்கையினால் திருநீற்றைக் காட்டி, அரிய மறைகளும் போற்றும் வகையால், ஞானசம்பந்தர் போற்றிப் பின்னும் ஒருமுறை பாண்டியன் உடலில் தடவிட, வெப்பு நோயானது அப்போதே உடலை விட்டு முழுமையாக நீங்கியமையால் இடப்பக்கத்தில் முன்பொருந்திய வெப்புநோயும் நீங்கப் பாண்டிய னும் முழுதும் உய்தி அடைந்தான்.
குறிப்புரை:

பாண்டியன் மனைவியாரும், குலச்சிறையாரும், தீங்கினை அழித்த பிள்ளையாரின் சிவந்த திருவடித் தாமரைகளைத் தம்முடி மீது சேர்த்து வணங்கி, 'நாங்கள் பெருமை பெற்றோம், இன்றே உய்திபெறப் பிறந்தவர் ஆனோம். மன்னன் இனிப் பிறவியில்லாத மேன்மையை அடைந்தான்!' என்று கூறி, மனம் களிப்பு அடைந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
குறிப்புரை:

பாண்டிய மன்னன், தன்னிடத்துள்ள வெம்மை முழுவதும் நீங்கியதனால் உண்டான பெரிய இன்பத்தை அடைந்து, தலையின்மீது கைகளைக் குவித்துக் கொண்டு 'மானம் ஒன்றுமில்லாத சமணர்கள் முன்னே, வலிய நோய் நீங்குமாறு வந்தருளிய ஞான சம்பந்தரின் திருவடிகளைச் சேர்ந்து நான் உய்ந்தேன்!' எனக் கூறிப் போற்றினன்.
குறிப்புரை:

கட்டுத்தறியைச் சீறிவரும் மதயானைபோலப் பாண்டியனும், சமணர்பால் அமைந்த கருத்துப் பிணிப்பினின்றும் நீங்கி, நேர்பட வந்து உண்மை நிலையைக் கூற, அழுக்குப் படிந்த உடலை உடைய இழிந்தவர்களான சமணர்கள், தாம் முன்னால் கைக் கொண்ட மந்திரத்தின் வித்தை முழுதும் வலியில்லாததாகி ஒழியக் கண்டு, அச்சம்கொண்டு, சிந்தித்துத் தாம் வெற்றியடையும் திறத்தை எண்ணி ஆராய்பவராய்,
குறிப்புரை:

'சைவ மகனாரான பிள்ளையாருடைய சொற்க ளின் வெற்றிச் சிறப்பை, அவருடைய சொல் மாலைப் பதிகத்தால் பாண்டியனின் வெப்பு நோய் முழுவதும் நீங்கின தன்மையைக் கண்ட னம், ஆதலால் உண்மை தெரிந்த தருக்க வாதத்தில் வெற்றி பெறுவது இயல்வதன்று, பொருந்திய தீயிலும் நீரிலும் வெற்றி பெற முயல்வோ மாக!' எனத் தங்களுக்குள் எண்ணினார்கள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

ஞானசம்பந்தரும், சமணர்களைப் பார்த்து 'உங்கள் சமய உண்மையினைப் பேசுங்கள்' என்று சொல்ல, அதைக் கேட்டு, ஏற்பட்ட இரு நிலைகளிலும் (மடத்தையும், மன்னனின் வெப்பையும் மந்திர விதியால் தாம் எண்ணியவாறு செய்தலில்) தவறிய அந்தச் சமணர்கள், 'வேறு தருக்க வடிவான கடா விடைகளால் வரும் வெற்றி பெறுதலையும் விடுத்து, அவரவர்களும் தாம்தாமும் கொண்டிருக்கும் கொள்கையின் உண்மைத் தன்மையை உள்ளவாறு கண் முன் நிறுத்திக் காட்டுதலே இப்போது செய்யத் தக்கது' எனச் சூளுரைத்தனர்.
குறிப்புரை:

என்று சமணர் தங்கள் வாதத்தைக் கூற, நோய் நீங்கப் பெற்ற பாண்டியனும், அவர்களைப் பார்த்து, 'என் உடல் முழு தும் வெதும்பி வெப்பு நோய் என்னை உள்ளாக்கியபோது, ஒரு சிறிதும் அந்நோயைத் தீர்க்காது தோற்றீர்கள். ஆதலால் இனி உங்க ளுக்கு வாது என்ன இருக்கின்றது?' எனக் கூற, மன்னனுக்கு முன்னும் பின்னுமாகச் சென்று அணுகி நின்று கொண்டு, ஓட்டை வாயர்களான சமணர்கள் கூறுவார்களாய்,
குறிப்புரை:

'நீங்கள் செய்வதற்கு என்ன வாது இருக்கின்றது' என்று, தோல்வியுற்ற உமக்கு வாதம் ஒன்றுமில்லை என்ற குறிப்புப் படச் சொன்னதையே, தம்மை என்ன வாது செய்வது? என்று வினவியதாகக் கொண்டு, முன் தாம் சொன்ன வாசகத்தையே தொடர்ந்து கொண்டு, 'ஏட்டைக் கையில் கொண்டு அறிவால் சூழ்ந்து நிலைபெறும் தம் தம் சமய உண்மைப் பொருட் கருத்தினை எழுதி, நெருப்பில் இட்டால் வேகாது இருப்பதுவே வெற்றியாம்' என்று கூறினார். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

என்று சமணர் உரைத்தபோது, அதற்கு விடையாய் மன்னன் ஒன்று சொல்வதன் முன்பே, ஞானசம்பந்தர் 'நீங்கள் கூறிய வழிநன்று! தீயில் இட்ட ஏடு, தான் வேகாது இருக்கின்றமை காட்டி வென்றால், அதில் எழுதிய பொருட் கருத்து உண்மை யுடையதாகும்' எனக் கூறுவீராயின், வலிய ஒற்றைக் கையையுடைய யானையை யுடைய மன்னன் முன்னர், 'அவ்வாறே வாதம் செய்து முடிவு கொள்ள வாருங்கள்' என்றுரைத்தார்.
குறிப்புரை:

அங்ஙனமே எதிர் ஏற்றுச் சமணர்களும் வந்து பொருந்திய அளவில், ஒப்பில்லாத உண்மையையும் புகழையும் உடைய சீகாழித் தலைவரின் சொல்லால், சொலற்கரிய வன்மை உடைய மன்னனும் 'திருந்தும் அரசவையின் முன்பு வெம்மை உடைய தீயை அமைப்பீராக!' என்று ஏவி, அதற்கான ஏவலர்களையும் அனுப்பினன்.
குறிப்புரை:

தீயை அமைக்க, ஏவப்பட்ட பணியாளர்களும் விறகை வெட்டி உடனே அடுக்கித் தீயினை அமைக்கவும், கொழுந்து விட்டு எரிதலால் புகையானது எழுந்து, பின் அது மாறப் பெற்று, சுடும் வெம்மையான தீக் கடவுளும் படரும் ஒளியினைக் காட்ட, உயர்ந் தோர் ஆய்கின்ற முத்தமிழ் வல்லுநரான பிள்ளையாரும், அத் தீயினுக்கு அருகே நெருங்கி வந்து,
குறிப்புரை:

சிவந்த கண்களையுடைய ஆனேற்று ஊர்தியை உடைய சிவபெருமானே உண்மைப் பொருளாவார் என, உலகம் அறிய உபதேசித்தருளிய, பொங்கும் இசையுடன் கூடிய திருப்பதிகங் களை எழுதிய நல்ல திருமுறைச் சுவடியைப் போற்றி, எங்கள் தலைவரான சிவபெருமானே முழுமுதற் கடவுளாய் எல்லோர்க்கும் மேலான பரம்பொருளாவார் என்று வணங்கி, கையால் எடுத்துத் திரு முடிமேற்கொண்ட பின்பு, அதன் காப்பான கயிற்றை அவிழ்த்தனர். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

வணங்கும் மெய்ப்பொருளைத் தரும் திருமுறையினைத் தாமே திருநீறு பொருந்திய வள்ளன்மையுடைய கையினால் பிரித்த பொழுது, நான்கு பெரிய தோள்களையுடைய இறைவர் எழுந்தருளிய திருநள்ளாற்றினைப் போற்றிய பதிகம் நேர்பட வந்தது, அப்பதிகம் 'போகமார்த்த பூண்முலையாள்' (தி. 1 ப. 49) எனத் தொடங்கும் திருப்பதிகமாக அமைந்திருந்தது.
குறிப்புரை:

அந்தத் திருப்பதிகத்தை விரும்பி மேற்கொண்டு, இருண்ட வெவ்விய நஞ்சு பொருந்திய கழுத்தையுடைய திருநள் ளாற்று இறைவரைப் போற்றி, உண்மை பொருந்திய நல்ல அவ்வேட் டைத் திருமுறைச் சுவடியினின்றும் பிரித்து எடுத்து, மெய்ம் மகிழ்ந்து ஞானசம்பந்தர் கையில் வைத்துக் கொண்டார்.
குறிப்புரை:

நன்மையில் செலுத்தும் மெய்யான அப்பதிகத் தால் போற்றப்பட்ட இறைவன் என்று எடுத்துக் கொண்டு, என்னை ஆளாக உடைய இறைவரின் நாமமே எப்போதும் நிலைபெறும் பொருளாம் எனக் காட்டும்படி, 'தீயில் வேகாது இருப்பதாகுக!' என்று 'தளரிள வளரொளி' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி, 'தளரிள வளரொளி' (தி. 3 ப. 87) எனத் தொடங்கும் பதிகம் சாதாரிப் பண்ணிலமைந்ததாகும்.

செந்தாமரை மலரின் அக இதழை விட மிகச் சிவந்த கையில் கொண்ட அந்த ஏட்டை, பாண்டியனின் அவையினர் காணுமாறு, ஆடையில்லாத அரையை உடைய சமணர்களின் மனங் கள் வெந்து அழியுமாறு, உலகுய்ய, கவுணியர் தலைவர் வெம்மை மிக்க தீயிடத்தில் மகிழ்ச்சியுடன் முன்னர் இட்டார். 'போகம் ஆர்த்த' எனும் தொடக்கமுடைய திருப்பதிகத் தைத் தழலிலிட்டபொழுது அருளிய திருப்பதிகம், 'தளிரிளவளர்ஒளி' எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த திருப்பதிகமாகும்.

மேற்கூறியவாறு ஞானசம்பந்தர் தம் கையால், தீயில் இட்ட ஏட்டில் எழுதப்பட்ட திருநள்ளாற்றுப் பதிகம், மணம் வீசும் கூந்தலையும் அழகிய மார்பகங்களையும் உடைய மலைமகளான உமையம்மையாரை ஒருமருங்கில் கொண்டவராகவும், எண்வகைப் பொருளாகவும் விளங்கும் சிவபெருமானையே பொருளாகக் கொண்டமையால், பொருந்திக் கிடந்த தீயிடையே வேகாமல் இருந்த துடன் பச்சையாயும் விளங்கியது. போகமார்த்த பூண்முலையாள் தன்னொடும் பொன்னகலம்
பாகம்ஆர்த்த பைங்கண் வெள்ளேற் றண்ணல் பரமேட்டி
ஆகம்ஆர்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகம்ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
(தி. 1 ப. 49 பா. 1) எனவரும் முதற்பாடலையுடைய பதிகமே தீயினில் இட்டதாகும். இதில் உமையம்மையாரைப் 'போகமார்த்த பூண்முலை யாள்' என்றும், பெருமானை 'நாகம் ஆர்த்த நம்பெருமான்' என்றும் குறிக்கப் பெறுகின்றது. இவ்வமைவு பதிகப் பாடல் தொறும் அமைந் துள்ளது. இப்பதிகம் பாடல்தொறும் உமையம்மையாரை மார்பக உறுப்பொடுபடுத்துக் கூறற்குக் காரணம், அம்மையாரிடத்துள்ள அவ்வுறுப்பு உடற்குற்ற போகத்தைக் கொடுத்து வினையை வீட்டு தலன்றி, உயிர்க்குற்ற போகத்தைக் கொடுத்துச் சிவஞானத்தையும் வழங்கி உய்விக்கும் தகையதாலேயாம். இவ்வநுபவம்தானும், தாம் பெற்றமை தோன்றத் திருக்கடைக்காப்பில், 'சிற்றிடை அரிவைதன் வனமுலை இணையொடு செறிதரும், நற்றிறம் உறுகழுமலநகர் ஞான சம்பந்தன்' என்றார். நற்றிறம் - சிவஞானம். 'துணைமுலைகள், பொழி கின்ற பால் அடிசில் பொன்வள்ளத்து ஊட்டுக' என இறைவன் அருளி யதும், அம்மையார் 'வார்இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்தருளி எண்ணரிய சிவஞானத்து இன்னமுதமும் குழைத்தருளி உண்அடிசில்' என ஊட்டியதும் பிள்ளையாரின் திருஉள்ளத்தில் அழுந்தி நின்றதால் அவ் அருள்திறனே இப்பதிகத்தில் கமழ்கின்றது. திருநள்ளாற்றிற்குத் தாம் சென்ற பொழுது 'போகமார்த்த பூண் முலையாள்' எனத் தொடங்கிப் பாட நேர்ந்ததும், இதுபொழுது திருமுறைத் தொகுப்பில் கயிறு சார்த்திப் பார்க்க இப்பதிகம் வர நேர்ந்ததும் ஆகியன திருவருள் தந்த அநுபவமேயாகும். இப்பதிகத்தில் 'நம்பெருமான்' எனப் பாடல் தொறும் வரும் குறிப்பும் 'தளிர் இள வளர்ஒளி' எனத் தொடங்கி வரும் பதிகத்துப் பாடல்தொறும் பெருமானின் நாமமே எரியிடில் பழுதில என அரு ளும் நெறியும் ஒப்பிட்டுக் காண, அப்பெருமானின் திருநாமம் நம் பெருமான் என்பதே ஆகும் என்பது தெளிவு. இதுவன்றித் தற் பொழுது தர்ப்பாரண்யேசுவரர் என அழைத்து வருவது பின்வந் தோரின் புனைவேயாகும்.

மயக்கம் கொண்ட மனமுடையவர்களான சமணர்களும், தம் சமய உண்மைப் பொருளை எழுதிய தம் கையில் கொண்ட ஏட்டை, வெப்பம் மிகுந்து காய்கின்ற தீயில் இடுபவராய் 'இது தீயிலே வேகாது எஞ்சியிருக்குமோ?' என்ற கவலை கொண்ட உணர்வால், அழிகின்ற உள்ளத்தை உடையவராய், நடுங்கியவாறு தீயில் இட்டனர்.
குறிப்புரை:

அச்சம் கொண்ட உள்ளம் உடையவர் ஆயினும் அதனால் அறிவு பெறாத சமணர்கள், வெம்மையான தீயில் இட்ட ஏடு நெருப்பிலிட்ட பஞ்சென அழிந்ததைக் கண்டு, அச்சத்தினால் மனம் தளர்வடைந்த பின்பும், கையில் ஏந்திய மயிற்பீலியை விடாதவராய் நின்றனர்.
குறிப்புரை:

பெருமை உடைய பாண்டியனின் அவை முன்பு வளர்க்கப்பட்ட தீயினில் இட்ட ஏடு, குறிப்பிட்ட நாழிகையளவில் அழிவு பெறாமல் இருந்ததைப் பார்த்து, முன்னைவிடப் பசுமையான தன்மையும் புதிய தன்மையும் உள்ளதாய் இருக்க, அனைவரும் வியப்படைந்த நிலையில், தீயினின்றும் ஞான அமுது உண்டவரான சம்பந்தர் எடுத்தார்.
குறிப்புரை:

அங்ஙனம் அத்தீயினின்றும் எடுக்கப்பட்ட அவ்வேட்டை, அவையின் முன்காட்டி, முன்பிரித்து எடுத்த முறை யிலே மீளப் பொருந்தும்படி சுவடியுள் கோத்தலும், பாண்டியன் வியப்பு அடைந்து, கற்றையாய்க் கட்டிய மயிற்பீலியைக் கையில் கொண்ட அமணர்களைப் பார்த்துச் சினந்து, 'நீவிர் தீயில் இட்ட ஏட்டைக் காட்டுங்கள்!' என்றான்.
குறிப்புரை:

சமணர்தாம் இட்ட ஏட்டைத் தீயினின்றும் எடுக்க அணுகியபோது, பெருகிய தீச் சுட்டமையால், உடல் வெந்து புடை பெயர்ந்து சென்றதைப் பார்த்த மன்னன், கொண்டு தரப்படும் நீரைக் கொண்டு தீயைத் தணிக்கச் செய்தான். சமணர்கள் அங்கே சாம்பலும் கரியுமல்லாமல் வேறு எதனைக் காண்பார்?
குறிப்புரை:

மேல் செயத்தக்கது ஒன்றும் அறிய மாட்டாத அச்சமணர்கள், திகைப்பால் அங்கே திரண்ட சாம்பலைக் கையால் பிசைந்து தூற்றி ஏட்டைத் தேடிப் பார்த்தலைக் கண்ட மன்னன், பொருந்திய புன்சிரிப்புடன் 'இன்னும் ஏட்டை அரித்துப் பாருங்கள், பொய்ம்மை நெறியைத் துணையாய்க்கொண்டு அதனை மெய்ப் பொருளாக விளக்கப் புகுந்த நீங்கள் அகன்று செல்லுங்கள்' என்று சொன்னான்.
குறிப்புரை:

'வெப்பு நோயான தீயினின்றும் நான், முன் சம்பந்தரால் வீடுபெற்று உய்ந்திட, நீங்கள் வாதில் அழிந்து தோற்றீர்கள், ஆகையால், அதனைத் தொடர்ந்து இப்போது தீயில் இட்ட ஏடு, நிலை பெறாமல் ஒழிந்து விட்டது என்றால், வல்லமை மிக்கவர்களே! நீங்கள் தோற்கவில்லைப் போலும்', எனக் கூறினான்.
குறிப்புரை:

பாண்டியன் இகழ்ச்சியான புன்சிரிப்பையும், சொல்லிய மாற்றங்களையும் உள்ளத்துள் தெளிந்து கொள்ளாதவ ராய், சொன்ன சொல்லளவில் அதன் பொருள் இது எனத் தெளியாது, அச்சொல்லையே மேற்கொண்டு கூறுபவர்களாய்த் தொடர்ந்த வாத மாக, 'முன்பு இரு முறை செய்தோம், மும்முறையில் ஒருமுறை யேனும் வெற்றியடைவோம்! ஆதலால் உண்மைத் திறம் இனியும் ஒரு முறை காணத் தக்கதாகும்!' என்றனர்.
குறிப்புரை:

ஒருமுறைக்கு இருமுறை தோற்கவும் ஆசை நீங்கப் பெறாத உண்மைத் தெளிவிலாத சமணர்கள், இவ்வாறு கூறக் கேட்ட, மன்னன் 'இம் மாற்றத்தால் ஆவதென்ன?' என்று கூறி மறுத்த பின்பும், திருநீற்றின் அழகு விளங்கும் திருமேனியையும், நிறைந்த புகழையுடைய சீகாழித் தலைவர், 'இனிச் செய்யக் கூடிய வேறு வாது யாது?' என வினவவும், வாதம் செய்வதை மேற்கொண்ட அச் சமணர்கள்,
குறிப்புரை:

'நிலையான மெய்ப்பொருளின் வாய்மையா னது நிலைபெறும் தன்மையில் தொடுத்து, ஏட்டில் பொருந்த எழுதி, அவ்வேடுகளை யாமும் நீரும், ஓடிக் கொண்டிருக்கின்ற நீரினை உடைய ஆற்றில் இடுவோமானால், நீருடனே ஓடுவதின்றி, இட்ட அந்த இடத்தைப் பற்றி முன்னர்த் தங்கும் ஏடுஎதுவோ அதுவே நல்ல பொருளை உடையதாகும்!' என்று உரைத்தனர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

என்று அச்சமணர்கள் சொல்ல, மேன் மேலும் பெருகும் சிறப்பையுடைய சீகாழித் தலைவர், 'நல்லது! அதுவே செய்வோம்!' என்று அருளிச் செய்தார். வெற்றியுடைய வேல் ஏந்திய அமைச்சரான குலச்சிறையார் அருகில் வந்து, 'வேறு இனிச் செய்யப் புகும் இந்த வாதம் ஒன்றிலும் தோற்பவர், அதன்பின் செய்வது இது என்று ஒட்டுதல் வேண்டும்' என்று இயம்பினார். ஒட்டுதல் - தோற்றவர் இழக்க நேர்வதையும், வென்றவர் பெற நேர்வதையும் முற்கூறித் தொடங்குவதாகும். இதனை உலகிய லில் பந்தயம் என்பர்.

அங்கு அவர் உரைத்ததைக் கேட்ட சமணர்கள், அவ்விடத்து மேற்கொண்டு பொங்கிய சினம் மிகுதியால், பொறா மைக் குணமும் மீதூர, தம் வாய் சோர்ந்து, 'இந்த ஒரு வாதத்திலும் தோற்றோம் எனில், இம்மன்னனே எங்களைக் கொடிய கழுவில் ஏற்றுவானாக!'என்று தாங்களே கூறினர்.
குறிப்புரை:

அவர்கள், அங்ஙனம் உரைத்ததைக் கேட்ட பொதியமலையின் அரசனான பாண்டிய மன்னன், 'நீங்கள் சினம் மிகுதியினால் இங்ஙனம் கூறி விட்டீர்கள். உங்கள் செய்கைகளையும் மறந்துவிட்டீர்கள்!' என்று சொல்லிப்பின், 'உண்மை பற்றிய பொருளை உட்கொண்ட உம் ஓலைகளை ஓடும் நீரையுடைய வைகையாற்றில் அழகுபொருந்த விடுவதற்குச் செல்லுங்கள்' என்று கூற, உங்கள் செய்கை, இதுகாறும் ஒவ்வொன்றாக வாதம் செய்து வருவதும், அவையனைத்திலும் தோல்வியுற்று வருவதுமாய செய்கை.

ஞானசம்பந்தர் பசும் பொன்னால் ஆன பீடத் தினின்றும் முன்னம் எழுந்து, வெளியில் வந்து, தெளிந்த நீர்மையு டைய முத்துக்கள் நிரல்படப் பதித்த சிவிகையின் மீது ஏறி வைகைக் கரைக்குச் சென்றார். வள்ளலாரான அவர் பின்பு, மன்னன் குதிரை மீது ஏறிச் சென்றான். உண்மையை உள்ளபடி உணர்ந்து ஒழுகுகின்ற ஆற்றல் அற்ற சமணர்கள், தம் உணர்வெனும் மயக்கத்தை மேற் கொண்டு சென்றனர். வள்ளலாரும், மன்னனும் தத்தமக்கு ஏற்ற ஊர்தியின் மேல் ஏறிச் செல்ல, அமணர்கள் மட்டும் ஊர்தியின்றிச் செல்லல் தகாது எனத் திருவுளம் கொண்ட ஆசிரியர் சேக்கிழார், தத்தம் மனத்துட் கொண்ட மயக்கமாகிய ஊர்தியில் ஏறிச் சென்றார்கள் என நகைச் சுவைபடக் கூறியிருக்கும் திறம் அறிந்து இன்புறற்குரியதாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பாண்டியன் வெப்பு நோய் நீங்கிச் செழுமையான அரண்மனையினின்றும் புறப்பட்டுத் தம் பின்னே நெருங்கிவர, பெருகும் செல்வம் நிலையாக நிறைந்த மதுரையான பழம் பதியின் தெருவில் பிள்ளையார் வந்தருளுவதைக் கண்டு, வந்து நெருங்கிய மங்கையரும் மைந்தர்களும் வணங்கி, தத்தமக்குத் தோன்றியவாறே தம்மனத்துட் பட்ட கருத்துக்களைச் சொல்வாராயினர்.
குறிப்புரை:

'பாண்டியன் அடைந்த வெப்புநோயை நீக்கி, நம் வருத்தத்தை நீக்கியருளிய திருஞானசம்பந்தர் இந் நாயனார்! பாருங் கள்!' என்பார்கள், 'பால் மணம் கமழும் குதலைச் சொல் எழும் பவளம் போன்ற வாயையுடைய பிள்ளையார் பெருஞ் சிறப்புடைய பாண்டிய நாடு வாழும் பொருட்டு இங்கு வந்து சேர்ந்தார்' என்பார்கள்.
குறிப்புரை:

'நெருப்பில் செய்த வாதத்தில் நம் சமணக் குருமார்கள் தோற்றது இவருக்கு என்பார், புரிந்த சடையையுடைய சிவபெருமானின் திருநீறே மெய்ப்பொருளாவது என்பதைக் கண் ணாரக் கண்டோம் என்பார், பெருகும் ஒளியுடைய முத்துகள் பதித்த பசும் பொன்னால் இயன்ற சிவிகையில் மேலே பிள்ளையார் வரும் அழகுதான் என்னே! என்பார், 'இக்காட்சியைக் கண்டு நம்கண்கள் வாழ்ந்தன' என்பார்.
குறிப்புரை:

'இச் சமணக் குருமார்கள் இயல்பால் தீமையே விளைந்தது என்பார். 'முழுமுதற் கடவுளாவார் ஆலவாயில் வீற்றி ருக்கும் இறைவனே எனக் கண்டு மகிழுங்கள்' என்பார். 'மூன்று கண் களையுடை பழமையான சிவபெருமானை அறிவதே ஞானமாகும்' என்பார். 'மறைகளும் திருநீறுமே எங்கும் நிறைந்தனவாகிப் பரவி டும்!' என்பார்.
குறிப்புரை:

'சமண முனிவர்களின் முகங்கள் எல்லாம் வாடிவிட்டன பாருங்கள்' என்பார். 'கொடிய வஞ்சனைகள் எல்லாம் அழிந்தன போலும்' என்பார். 'கூர்மையான வேலையுடைய பாண்டி யன் சமணக் குருமார்கள் மீது வைத்திருந்த பற்று மாறிவிட்ட வண் ணம்தான் என்னே' என்பார். 'இக் கொடிய சமணமாகும் இருளும் நீங்கி இன்று புலர்ந்து விடிவதாய் முடிந்தது' என்பார்.
குறிப்புரை:

'அனல் வாதத்தில் தோற்றவர், புனல் வாதத்தில் வெல்வார்களோ!' என்பார். 'இரும்பு மனம் உடையவராயினும் இப்பிள்ளையாருக்கு எதிராக நிற்க வல்லரோ?' என்பார். 'நுண்பொ ருளை விடுத்துப் பருப்பொருளை மட்டும் உணர்ந்த அவ்வளவில் அடங்கிய சமணர்கள்பட இருக்கும் முடிவினைப் பாருங்கள்' என்பார் 'கொம்புகளைப் போன்ற கூர்மையான கழுமரங்களை அமைச்சரான குலச்சிறையார் தாம் செய்வித்துள்ளார்' என்பார். எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள், 355)என்பர் திருவள்ளுவர். உணர்வில் நேர்பெறக் காணத்தக்க மெய்ப் பொருளை, உடலானும், உரையானும் முறையே கொண்ட வேடத் தானும், மனத்தின் அமையாது சொல்லும் சொற்களாலும் மட்டுமே காண்டற்கு முற்படின் காணத் தகுமோ? தகாது. ஆதலின் சமணர்களைப் 'பருப்பொருள் உணர்ந்தார்' என்ற அளவிலேயே வைத்துப் பேசு கிறார் ஆசிரியர்.

'சமணர்கள் வைகை ஆற்றில் ஏடுகளை இடுவதற்காக வந்தார்கள்' என்பார். 'ஓடுகின்ற நீரில் இடப்பட்ட ஓலை, ஓடாது ஓரிடத்தில் நிற்குமோ?' என்பார். 'சீரிய ஞானம் கைவரப்பெற்ற பிள்ளையார், அவ்வேடுகளை நிறுத்தவும் வல்லார்' என்பார். 'நாடெல் லாம் காணத்தக்க பிள்ளையார் இதுபொழுது வருவர், நேரில் பாருங்கள்!' என்பார்.
குறிப்புரை:

'தோல்வியுற்றவர் கழுவில் ஏறச் சமணர் துணியலாமோ?' என்பார். 'இதுகாறும் செய்து காட்டி அருளின் மேம் பாட்டினையுடைய பிள்ளையாருக்கு இஃது அழகேயாகும்' என்பார். 'திருநீற்றினால் பாண்டியர் தீங்கினின்றும் நீங்கிய தன்மையைக் கண்டவர் யாவரும் சைவத் திறத்தைப் போற்றுவர், ஆதலால், எல்லோரும் சைவ நெறியினையே போற்றுங்கள்' என்பார். மடத்தில் மந்திர விதியினால் தீயிடத் துணிந்தது, பாண்டி யருக்குற்ற வெப்புத் தீயை நீக்க முற்பட்டது, அனல் வாதம் செய்யத் துணிந்தது ஆகிய மூன்றினுமே தோல்வியுற்றவர்கள் சமணர்கள். இங்ஙனம் தொடர்ந்து தோல்வியுற்று வருபவர்களை வெங்கழு ஏற்று வான் வேந்தனேயாக என்றல் தகுமோ எனில் தகும். சைவரோடு தாம் வாழ்ந்திருந்த திருமடத்தில் தீயிட்ட போதும், அதனைப் 'பையவே சென்று பாண்டியற்காகவே' என்று கூறிப் பாண்டியற்கு ஆக்கம் கண்டவர் பிள்ளையார். அச்சமணர்களை வெல்லவும் அவர்கள் குற்றம் நீங்க ஒறுக்கவும் இறைவனின் திருவருட்குறிப்பை ஒரு முறைக்கு இருமுறை அறிந்து வந்தவர். அவர்கள் கூறிய வாதங்களை எல்லாம் தொடர்ந்து ஏற்றுக் கொண்டவர். இவ்வாறு அமைதியும் அருளும் கொண்டு நிற்கும் பிள்ளையார், இறுதியாக அவர்கள் தாமே ஒட்டி நின்ற வாதிற்கு இசைதல் ஏலாதாயின், சைவ மெய்ப் பொருள் உண்மையை நிலைநாட்ட இயலாமல் போகும். அன்றியும் அவ்வம ணர் தாமே ஒட்டிச் செய்யும் வாதில் அரசன் முறை செய்யுங்கால் தாம் தடுப்பது முறையும் அன்று. ஆதலின் பிள்ளையாரின் அருட்செயல் அழகிது என்றார். இவ்வகையான் எல்லாம் அறியத்தக்கது சைவ மெய்ச் சார்பே ஆதலின் அதனை அனைவரும் போற்றும் கடப்பா டுடையர் என்றனர். இக்கூற்றுக்கள் இனி நிகழப் போகும் நிலையினை உட்கொண்டனவாயும் கண்டோரின் கூற்றுக்களின் நிறைவானவை யாயும் அமைந்திருப்பது அறிந்து மகிழ்தற்குரியதாம். இவ்வேழு பாடல்களும் பொருள் வகையால் ஒருமுடிபின.

தெருவின் இருமருங்கிலும் நின்றவர்கள் இன்னோரன்னவற்றை எடுத்துக் கூற, மின் போன்ற ஒளியையுடைய அழகான பொற்காம்பையுடைய வெண்குடைமேலே நிழற்றப் பல மணிகள் பதித்த சிவிகையின் மீது நான்மறைகளும் வாழும் பொருட்டு வந்தருளிய பிள்ளையார், பாண்டிய நாட்டில் உள்ளவர்களுக்கு நன்னெறியைக் காட்டும் பொருட்டு வந்தருளினார்.
குறிப்புரை:

அழகிய தமிழ் மேலும் விளங்குமாறு தோன்றிய திருக்கழுமலத்தோரான பிள்ளையார் வந்தருளினார், தில்லைக்கூத்தர் அளித்த சிவஞானப் பாலையுடைய பொற்கிண்ணத்தைப் பெற்ற அருட்கொடை வளரும் திருக்கைகளையுடைய பிள்ளையார் வந்த ருளினார், முன்னுற்ற வாதங்களில் வென்ற பிள்ளையார், இனிவரும் புனல் வாதத்திலும் வெல்ல வந்தருளினார் என்று இவ்வாறு பல அழ கிய முத்துச் சின்னங்கள் எண் திசைகளிலும் நெருங்கி ஒலிக்க.
குறிப்புரை:

அழகிய முரசுகள் பலவுடன் இணைந்த பலவகை இயங்களும் ஒலிக்க, தம் பின்பு அரசனும் அரசமாதேவியாரும் சேர்ந்து வரக் கூட்டமாய்த் திரண்டு வரும் புல்லிய நெறியில் நின்ற சமணர்கள் வேறு ஒரு பக்கத்தில் வரச் சீகாழி வேந்தரான ஞான சம்பந்தர், நிலை பெற்ற வைகையாற்றின் கரைமீது பொருந்தும்படி எழுந்தருளி வந்தார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

கார்காலம் வந்ததும் விருப்பம் மிக்க மகளிரின் மனம் சிறப்புடைய தம் கணவரிடம் விரைந்து செல்வதைப் போல உலகில் புகழால் மிக்க அன்புடைய வைகை ஆறு, நீர் மிக்க கடலை நோக்கி வரிசையான அலைகளால் ஒலி மிக்குச் செல்லும். இப்பாடல் எல்லாப் பதிப்புக்களிலும் உள்ளது. எனி னும் பொருளியைபுபட்டு நிற்கும் வரலாற்றுத் தொடர்போடு இப்பாடல் இயையாமையானும், வைகையாறு கடலோடு கலக்கும் தகையது அன்றாதலானும், இஃது இடைச் செருகலாக இருக்குமெனச் சிவக் கவிமணியார் கருதுவார். 'கடல் ஒருவர்க்கும் உதவாத உவரியென மடுத்தறியாப் புனல் வைகை' (பா. 2) எனப் பரஞ்சோதியாரும் கூறுவர் (வாதவூரர்- உபதேசப் படலம்). இதற்கேற்ப, வைகை இன்றும் இராம நாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் என்னும் கண்மாயிலேயே பாய்ந்து வருகிறது என்ப. எனினும் 814, 816ஆவது பாடல்களில் வைகை கடலில் கலக்குமாற்றை ஆசிரியர் கூறுதலானும், மேலும் எண்ணித் துணிதல் தக்கதாதலானும் இப்பதிப்பில் இப்பாடல் கொள் ளப்பட்டது.

மேற்கூறியவாறு ஞானசம்பந்தரும் மற்றும் உள்ளவரும் ஆற்றின் நீர் விரைந்து செல்லும் வைகையாற்றின் கரையைச் சேர, 'திருநீற்றின் அழகு விளங்கிய நிறைமதி போன்ற ஞானசம்பந்தரும், அதற்கு மாறான உருவு கொண்ட அருகர்களாகிய நீங்களும் முன் இசைந்தவாறு உங்கள் ஏடுகளை இவ்வாற்றில் இடுங்கள்' என்று பாண்டியன் கூறச் சமணர்கள் முதலில் தோற்றவர்கள் பின்னும் தோற்கமாட்டார்கள் என்ற உலகியல் வழக்கை உளங் கொண்டு, முற்பட ஏட்டை ஆற்றில் இடத் துணிந்தனர். இன்ப துன்பங்கள் மாறி மாறி வருதல் இயற்கை என்றும், தோல்வி வெற்றிக்கு அறிகுறி என்றும் உலகியலில் கூறப் படும் வழக்கை நோக்கிச் சமணர்களும் இங்ஙனம் கருதினர். 'துன்ப முற்றவர்க்கலால் இன்பமில்லையாதலால்' (சீவக. 579) எனத் திருத் தக்கதேவரும், 'துன்பம் துன்பம் துன்பம், துன்பத்திற்கோர் எல்லை காணின் இன்பம் இன்பம் இன்பம்' பாரதியாரும் கூறுவன காண்க.

உள்ளீடு இல்லாத நெற்பதர் போன்ற மெய்ம்மையான உள்ஈடு இல்லாத அமணர்கள், மெய்ப்பொருளைப் பொய்ப் பொருள் எனக் கூறுவோராய், ஆருகத நூலில் கூறும் பொருள் தொகுதியான 'அத்தி நாத்தி' என்பதை ஏட்டில் எழுதி, ஆற்றில் விரைந்தோடும் நீரைக் கண்டும், கையில் கொண்ட ஏட்டைப் பேராசை யால் விடுத்திட, அவ்வாற்றின் வெள்ளம் அப்போதே அதைக் கொண்டு கடலை நோக்கி விரைந்து சென்றது. அத்தி நாத்தி என்பது சமணர்களின் மந்திரம். அத்தி - உண்டு. நாத்தி - இல்லை. எனவே இது 'உண்டு' என்பதைத் தாமே மறுத்துக் கூறுவதாகும்.

இழுத்துக் கொண்டு ஓடுகின்ற ஏட்டைத் தொடர்ந்து சென்று, எதிரே ஓடாமல் அணைப்பவர் போலத் தெளியும் உண்மை அறிவு இல்லாத சமணர்கள் ஆற்றின் கரைமேல் ஓடிச் சென்ற னர். அழியும் பொருளை மேற்கொண்ட அவ்வேடு கிட்டாது அங்குக் கீழ் நோக்கி நூறு விற்கிடை தொலைவு எல்லைக்கு மேல் போய்விடக் கண்ணால் அதனைக் காணவும் இயலாதவர் ஆயினர். பட்டிகை - ஓலை. விற்கிடை -ஒருவில் கிடக்கும் தொலைவு.

காணவும் இயலாதவாறு கடலை நோக்கிச் செல்லும் அவ்வேடு, நாணம் என்பது ஒன்று இல்லாத சமணரை நட்டாற்றில் கைவிட்டு அகன்று போய்விட, அவ்வமணர்கள் தாமும், தொலைவில் சென்றவர்களும், பலவாறு சிதறுண்டவர்களும், திகைப்பு அடைந்தவர்களுமாகி, மன்னனின் ஆணையில் தப்ப மாட்டாது அஞ்சுபவராய், அவன் அருகில் திரும்பவும் வந்தனர். 'யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்' (குறள், 895) என்பர் திருவள்ளுவர். ஆதலின் தொலைவில் சென்றவர்களும் சிதறியவர்களும் மீண்டும் வரலாயினர்.

வேறு செய்யத்தக்கது ஏதும் இல்லாதவரான சமணர்கள், அச்சம் கொண்டு நடுங்கித் தங்களுக்கு இறுதி வந்து சேர்ந்து விட்டது என்றே துணிந்து, மன்னன் முன்வந்து சேர்ந்து, புண் பட்ட தம் உள்ளத்தில் அச்சம் வெளிப்பட்டு வரவும், அதனை மறைப் பவர் போல, 'எங்களுடன் மாறுபட்ட பிள்ளையாரும் ஏட்டினை ஆற்றில் இட்டால் அதன் பின்பு வரும் முடிவைக் காணலாம்' என்று கூறினர்.
குறிப்புரை:

அகத்தும் புறத்தும் அழுக்கு மிக்க அமணர்கள் அனைவரும் இங்ஙனம் அறிவு மயங்கிக் கூறக் குற்றத்தை நீக்கும் நெறியில் நிற்கும் பாண்டிய மன்னனும், அச்சமணர்களை விட்டுச் சிவ ஞான ஒளியுடைய ஞானசம்பந்தரின் திருவுள்ளக் குறிப்பு யாதோ? என அறிந்து கொள்ளுமாறு அவரைப் பார்க்க, அவர் பிற சமயங் களால் நேர்ந்த மயக்கம் நீங்குமாறு திருப்பதிகத்தைப் பாடி அருள லுற்றார்.
குறிப்புரை:

தென்னவனான பாண்டியனும், சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருக்கரங்களால் தீண்டப்பெற்றுப் பொன் போன்ற கொன்றையைச் சூடிய சிவபெருமானின் திருநீற்றைப் பூசப் பெற்றதால், இருவினைகளும் ஒத்துப் பொருளைச் சமன்செய்து காட்டும் துலாக்கோலைப் போல நின்றதால், முன்னைய கொடிய வினையினின்றும் நீங்கியவனாய், முதல்வனான இறைவனை அறிந்து கொள்ளும் இயல்பைப் பெற்றவன் ஆனான். இருவினை ஒப்பு - இன்பத்துள் இன்பம் விழையா மலும், துன்பத்துள் துன்பமுறாமலும் இருக்கும் மனநிலை. 'நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே' எனத் திரு வருளில் அழுந்தி நிற்கும் உறைப்பால் உளதாகும் நிலை இது. இந் நிலையால் யான் எனது என்னும் செருக்கற்றுநிற்கும் நிலையும் வந்து றும். இதனையே 'மலபரிபாகம்' என்பர்.

உலகியல் ஒழுக்கம் மறைநூல்களில் விதித்த ஒழுக்கமே என்பதையும், அழியாமல் நிலைபெறுகின்ற வீடுபேற்றை அடைதற்குரிய உண்மைநெறி சிவநெறியேயாகும். என்பதையும், அழிவு பெறும் சமணர்கள் அறிய மாட்டாராயினும், பலராலும் புகழப் படுகின்ற பாண்டியன் அறியும் பான்மையால், கலதி - தீமை, கேடு. வாய் - வாய்ப்பு.

'அந்தணர்களும் அமரர்களும் பசுக்களும் வாழ்க' என்று சொன்ன இந்த மெய்ம்மொழியின் பயனாவது, உலகத்து உயிர்கள் துன்பம் நீங்கி இன்பத்தை எய்தும் பொருட்டு ஒலியுடன் கூடிய மந்திரங்களையுடைய சிவவேள்விகள் முதலாகச் சிவபெருமா னுக்குச் சொல்லப்பட்ட அர்ச்சனைகளும் வழிபாடுகளும் ஆகியவை நிலைபெறுதலாகும். மறைவழிச் செய்வோர் வைதிகர்களாவர். ஆகமவழிச் செய்யும் சிவவேதியர்கள் அந்தணராவர். மறைவழிச் செய்யும் வேள்விகளில் நின்று ஏற்போர் தேவர்கள் ஆவர். ஆகமவழி, குறிப் பாக நம் திருமுறை வழிச்செய்யும் வேள்விகளில், அவ்வேள்விப் பொருளை ஏற்போன் இறைவனேயாவன். இதுவே சிவவேள்வி எனப்படும். பிள்ளையார் ஈண்டுக் குறிப்பதும் இச்சிவ வேள்வியேயாம். வேள்விக்கென இறைவன் வழங்கிய பொருளைத் தந்தையாரிடம் கொடுத்தபொழுது பிள்ளையார் அருளிய திருவாக்கால் இவ்வுண்மை அறியப்படும். இறைவற்குரிய திருமுழுக்கிற்குத் தன்னிடத்தினின்றும் ஐந்துபொருள்களைத் தருதலின் வேள்வி செய்யும் இவர்களோடு பசுவையும் கூட்டி வாழ்க என்றார்.

நல்ல வேள்விகளின் பயன், மழை தவறாமல் பெய்தலாகும் என்று அருள் செய்தது, அதுநாள் தோறும் இறைவரின் அருச்சனைக்கு உறுப்பாதலால் ஆம். உலகை ஆளும் வேந்தனை 'ஓங்குக' என்று வாழ்த்தியது. அருச்சனை முதலாக வரும் இவற்றைக் காக்கின்ற முறையினால் ஆகும். 'புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு' என்ப வாகலின் இறைவழிபாட்டிற்கு வேண்டும் நீரின் முதன்மையும் இன்றி யமையாமையும் விளங்கும். 'சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்கு மேல் வானோர்க்கும் ஈண்டு' (குறள், 18) என்னும் திருக்குற ளும். மன்னனின் ஆட்சி, உயிரினங்கள் வாழ்வாங்கு வாழ்தற்கும், அவை இறைவழிபாடாற்றி இம்மை, மறுமை, அம்மை ஆகிய மும்மை நலங்களையும் அடைதற்கு ஏதுவாகவும் இருத்தல் வேண்டும். 'மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய' எனத் தொடங்கும் தொல்காப் பிய நூற்பாவானும் (தொல். அகத். 28) இவ்வுண்மை அறியப்படும். இது பற்றியே மன்னனை வாழ்த்தினர்.
அரசர்க்குற்ற கடன்களில் இக்கடமை முதன்மையுடைய தாதலை,
நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
நாடோறும் நாடு கெடும்மூடம் நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.
(தி. 10 பா. 238) ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.
(தி. 10 பா. 241) ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையுங்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்


'ஆழ்க தீயது' என்று அருளியதன் பொருள், மறைகள் ஆகமங்கள் ஆகியவற்றிற்குப் புறம்பான நெறிகள் வன்மை யில்லாது ஒழிக என்பதாகும். வேறாக எல்லாம் 'அரன் நாமமே சூழ்க' என்றது, இவ்வயல் நெறிக்கு வேறான சிவநெறித் தொடர்பில் நின்று, பழங்காலம் முதலாக வாழ்ந்து வரும் உயிர்கள் எல்லாம், பெரு வாழ்வைத் தருகின்ற திருவைந்தெழுத்தை ஓதி வளர்க என்னும் பொருட்டாம். சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றுவர் ஆதலின், அவற்றின் மெய்ம்மையுணர்ந்து உண்மை நெறியைப் போற்றக் காலம் நீட்டிக்குமாகலின் ஆழ்க தீயது என்றார். வேறு எல்லாம் - அயல்நெறிக்கு வேறான சிவச்சார்புடைய உயிர்கள் எல்லாம். அரன்பெயர் திருவைந்தெழுத்தேயாதலின் அதனையே ஓதி வளர்க என்றார்.

கூறிய 'வையகமும் துயர் தீர்கவே' என்றதன் கருத் தாவது, 'இம்மையிலும் மறுமையிலும் நிலைத்து நிற்கும் இவ்வுலகத்து வாழும் உயிர்கள் துன்பம் நீங்கியிடவாகும். இக்கருத்துக்கள் எல்லாம் முதல் பாடலில் அமையத் திருஞானசம்பந்தர் உரைத்தருளினார். சொன்ன வையகம் - பதிகத்துள் சொல்லப்பட்ட இந்நில வுலகம். துயர் - துன்பம் : இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் வரும் துயர். 'இம்மைக்கும் மறுமைக்கும் வருத்தம் வந்தடையாவே' எனவரும் திருமுறைத் திருவாக்கும் (தி. 2 ப. 106 பா. 11) காண்க.

முன்செய்யுளில் 'அரன்' என்று உரைத்த ஆதியை, உயிர் தன்னறிவானும் தளையறிவானும் (பசு, பாச, ஞானம்) அறியப்படாத நிலைமையது ஆதலின், 'அரிய காட்சியர்' என்று அருளினர். அங்ஙனம் அவ்விருவகையறிவுகளானும் அறிய மாட்டாமையை அறிந்து, காண்டற்குரிய அன்பின் திறத்தால் காண முயலும் முதிர்ச்சி உடைய அடியவர்களுக்குக் காணுமாறு உள்ளன வாய நல்ல அடையாளங்களையும் எடுத்துரைத்தனர். அடையாளங்களாவன 'அங்கைசேர் எரியர், ஏறுகந் தேறுவர், கண்டமும் கரியர், காடுறை வாழ்க்கையர்' என்பனவாம்.

மேற்கூறிய அடையாளங்களைக் கொண்டு இருப்பினும் அக்காட்சியளவுட்பட்டே நிற்பவர் அல்லர். விண் முதலா கப் பரந்த ஐம்பெரும் பூதங்களும், பல உயிர்களும், அண்டங்களும், மற்றுமுள்ளவையும் ஆக யாவும், பேசப்படும் இவர் பெருவடிவைக் கொண்டிருப்பனவேயாம். 'அப்பெருவடிவை யார் அறிவார் பேசு' (திருக்களிற். 5) எனவரும் திருவாக்கும் காண்க.

மேலும் அவரது இயல்பை யார் அறிவார்? என்று கூறியருளும் இயல்பாவது, அவர் எவரது உணர்வினாலும் சென்று எட்டுவதற்கு இயலாத நிலைமையுடைய தன்மையை உடையவர் ஆவர் என்று அன்புடைய சண்பையை ஆளும் தகையாரான சம்பந்தர் உரைத்தருளினார். 'தன்னறிவதனால் காணும் தன்மையன் அல்லன் ஈசன்' (சித்தியார் 6 ஆம் சூத். 8) எனவரும் ஞானமெய்ந்நூற் கூற்றும் காண்க.

வெந்த சாம்பல் விரை எனப் பூசியே என்றது, தம் அழிவற்ற, நிலையான சிவஒளி அல்லாத மற்ற ஒளிப் பொருள்கள் யாவும், படைப்பு முதலாக அழித்தல் ஈறாக வரும் படிநிலையில், ஒருகால எல்லையில் இருந்து, வெந்து, நீறாகி அழிய, வேறான அச்சாம்பலை, இறைவர் அழகிய சந்தனமாய்க் கொண்ட இயல்பினை விளக்கவாம். 'ஈறிலாதவன் ஈசன் ஒருவனே' (தி. 5 ப. 100 பா. 3) என்பது தெளிய அறிவித்த குறிப்பாம்.

இறைவர், 'தந்தையாரொடு தாய் இலர்' என்று அருளியதன் கருத்து, தம் ஒளியன்றி ஏனைய பொருள்கள் எல்லா வற்றையும் ஒருகால எல்லையில் அழித்தபின் தமக்குள்ளே ஒடுக்கிப் பின்னரும் அவற்றைத் தோற்றுவித்தருளும் குறிப்புடைமையாம். இறைவன் தாயும் தந்தையும் இன்றித் தான் தனியன் ஆயிடினும், இவ்வுலகைக் காத்தும் படைத்தும் கரந்தும் நின்று உய்வித் தருள்பவன் ஆவன். இவ்வாற்றான் உயிர்கட்கெல்லாம் தான் தாயும் தந்தையுமாய் நின்று அருளியதல்லது, தனக்கு ஒரு தந்தை தாயிலன் என்பது கருத்து.

'தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்' என்பது, உண்மையாக நிலைத்து நிற்கும் பொருள் தாமே (இறை வனே) என்று தெளிந்து, அப்பெருமானையே இடையறாது நினைப் பவர்களது இருவினைகளையும், பொய்ம்மையை விளைத்து நிற்கும் பல இருளையும் இம்மையிலேயே நீக்கியருளுவர் என்பது தெளியவாம். பொய்ம்மை அறியப்படாமையும், வன்மை உயிரை முழுமையாக மறைத்து நிற்பதுமாகும். 'இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு' (குறள், 5) என்பது கருத்து.

'எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ' என்றது உலகில் எவ்வகைப்பட்ட பொருட் கூற்றினும், சொற் கூற் றினும் வைத்துச் சொல்ல இயலாதவாறு அவ்வனைத்திற்கும் முன்னே தோன்றி முனைத்தவராய் இருத்தலின், அவனை எக் கூற்றில் வைத்துச் சொல்வது? என்று அழகிய குளிர்ந்த சீகாழித் தலைவர் அருளிச் செய்தனர். இன்னதன்மையன் என்று அறிய வொண்ணாதவன் என்பது கருத்து.

ஆளாகி நிற்கும் தொண்டர்களுக்கு அப்பெரு மான் அருள்செய்கின்ற திறங்களையும், இறைவரின் மாண்பையும் பற்றிக் கேட்பின், அதற்கு விடை சொல்லும் எல்லை அளவின்றி விரியும். எனவே, எவ்வகையானும் அவை ஆராய்ச்சிக்குரியவை அல்ல என்று கூறியவாறாம். உயிர்களின் பண்பும் செய்கைகளும் நூறு நூறாயிரம் இயல்பினவாம். அத்தகைய பல்வேறு உயிர்களையும் ஆட்கொள் ளும் இறைவனும், ஆட்கொள்ளும் இயல்பில் ஒரு நிலையனாய் நின்று ஆட்கொள்ளல் இயலாது. ஆதலின், அவ்விறைவனின் இயல்பும் எண்ணற்ற இயல்பினவாய் அமைதலின், அவற்றை எவ்வாற்றானும் ஆராய்தற்கியலாது என்பது கருத்து.

உயிரியல்பும் இறையியல்பும் இவ்வகையவை யாகவே, இவைபற்றி நீள எண்ணாது, இறைவரின் திருவடிகளை உளங்கொண்டு, அப்பெருமானின் அருங்குணங்களையும், அருட் செயல்களையும் கேட்கலாயின், அத்தன்மையுடைய அடியவர்க ளுக்கு இயல்பாகப் பொருந்திய மலமும் அதன்வழிவரும் பழைய வினைவலிகளும் முடிவு பெறும் என்று சீகாழித் தலைவரான சம்பந்தர் கூறியருளினார். இறைவரின் திருவடிகளையே நினைந்து, அப்பெரு மானின் பொருள்சேர் புகழ்களைக் கேட்டு மகிழ்ந்த வண்ணம் இருப் பின், உயிர்களுக்குத் துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் உளவாகும் என்பது கருத்து. கோட்பால் - தோற்றமில் காலத்ததாய இருள் மலம்.

நிலைபெற்ற ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா என்றதன் உண்மையாவது, இறைவனுக்கு உவமையாகக் காட்டத்தகும் பொருள், வேறு ஏதும் இல்லை ஆகை யால், அப்பெருமானின் தன்மை அவ்வேதுக்களானும், எடுத்துக் காட்டுகளாலும் அவை போன்ற மற்ற அளவைகளாலும் அளந்து கூறற்கரியது என்று விளக்கியபடியாம். இறைவன் தனக்கு உவமையில்லாதவன். உயிர்களோ சிற்றறிவும் சிற்றுணர்வும் உடையன. இந்நிலையில் அவ்வுயிர்கள் அப்பெருமானை ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிப்பது எங்ஙனம்? இயலாது என்பது கருத்து. எடுத்தமொழி - எடுத்துக் காட்டு.

தோன்று காட்சி 'சுடர்விட்டுளன்' என்பதன் பொருளாவது, அமைந்த நெருப்பின் ஒளியாய்ப் புறத்தே காணப் பட்டு, அன்பின் உறைப்பால் அழுந்திக் காண்பார்க்கு, அவன் உள் எழும் ஒளியாயும் விளங்குதல் கண்டு, அவ்வொளிவழி நின்று காண் பவர்க்கு இது பொருளாகும் என்று அவர் விளக்கியபடியாம். 'மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே' (தி. 8 சிவ புரா. வரி. 62) எனவரும் திருவாசகத்துள் மாசற்ற சோதி என்றது 'தோன்று காட்சி' என்பதனோடும், 'மலர்ந்த மலர்ச் சுடரே' என்றது 'சுடர்விட்டுளன்' என்றதனோடும் ஒப்பிட்டுணர்தற்குரியவாம். ஒளி விட்டு விளங்குவது அகத்தும் புறத்துமாம் என விளக்கியிருப்பதும் அறிதற்குரியதாம்.

'மாதுக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றும்' என்ற தொடரின் பொருள், மூலமான சுடர் ஒளியை அன்பால் உயிருணர் வில் கண்டு, ஐந்தெழுத்தால் அகவழிபாடு செய்து, ஞானாசிரியரால் அருளப்பெற்ற திருவருள் வயப்பட்ட உள்நோக்கில் கண்டு, கூடிய சிவபோகத்தினால் இடையறாமல் கூடி, சிவஞான வாழ்க்கையிலே வாழ்ந்து, தோற்றமில் காலத்தேயே (அநாதியே) தொடர்ந்து அறிவை மறைத்து வேறுபடுத்தி வரும் ஆணவத்தால் ஆன பிறவியில் வரும் நெறியினின்றும் நீங்கள் நீங்குவீர் ஆவீர் என்று விளக்கியதாம். மாதுக்கம் என்பது பிறவித் துன்பம் என்றும், குருவரு ளும் திருவருளும் முன்னின்றும் உள்நின்றும் உணர்த்த உணர்ந்து வரும் பயிற்சியால் உயிரில் நேர்பெற நிற்கும் சிவபோகத்தைத் துய்ப்பதுவே 'மனம் பற்றி வாழ்தல்' என்றும் விளக்கியவாறாம்.

'சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே' என்று இங்குக் கூறப்படுவது, விரும்பும் வேட்கைகள் ஆவன எல்லாம், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய இறைவரின் திருவடிகளை உளங்கொண்ட அன்பினால் வணங்குவதேயாம் எனக் கொண்ட உள்ளம் உடையவர்களே! வந்து சாருங்கள்! என்று சண்பையின் மன்னர் விளக்கியருள் செய்தார். விரும்பும் வேட்கைகள் எல்லாம் இறைவரை வணங்கி வாழ்வதே என்பதை உளங்கொண்டவர்களே, அதனை மறவாது இறைவனின் திருவடியே சார்பாகக் கொண்டு வாழுங்கள் என்பது கருத்து. 'சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகும் நிலையினர்' சாதுக்கள் ஆவர்.

ஆடும் எனத் தொடங்கும் திருப்பாட்டில் அமைந் திருக்கும் இறைவனின் அருட்செயல்கள் மூன்றும் அப்பெருமானின் புகழுக்காகவோ, அல்லது உயிர்கட்குற்ற துன்பத்தை நீக்குதற்காகவோ என்று ஆராயும் உணர்வுடையவர்களே! இச்செயல்களெல்லாம் இறைவன் உயிர்கள் மீது வைத்த கருணைத் திறத்தினாலேயே ஆகும் என உரைத்தனர் கொள்கையின் மிக்க காழிப் பிள்ளையார். இப்பாட்டில் குறித்த அருட்செயல்கள் மூன்றாம். அவை: 1) இறைவன் இடையறாது திருக்கூத்து இயற்றுவது, 2) இய மனை உதைத்தது, 3) மறைகளை அருளியது, ஆகியவையாம். இவற்றுள் முன்னையது உயிர்கள் படிப்படியாக வினை நீக்கம் பெற்றுத் தம்மை அடையவாம். இரண்டாவது சார்ந்தாரைக் காக்கும் கருணைத் திறமாம். மூன்றாவது உலகினர் செயத் தகுவனவும் தவிரத் தகுவனவும் அறிந்து உய்திபெறவாம்.

'கருதத்தகும் கடிசேர்ந்த' எனவரும் திருப்பாட்டில், இறைவன் விரும்பி ஏற்றருளும் சிறந்த பூசையினைச் சிதைவு செய் தவர்களைக் கொல்லுதல் அறச்செயலும் வீடுபேறு அடையத்தகும் அருட் செயலும் ஆகும் என்பதைச் சண்டீசர் வரலாற்றால் அறியத் தகும் எனத் தக்கவர்கள் சொல்லக் கேட்டனம் என்றார் பிள்ளையார். 'பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்' (தி. 8 ப. 15 பா. 7) 'பாதகத் துக்குப் பரிசுவைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே' (தி. 9 ப. 29 பா. 10) எனவரும் திருமுறைக் கூற்றுகளையும்,
பாதக மென்றும் பழியென்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டும் - சேதிப்பக்
கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே
கண்டீசர் தஞ்செயலால் தான்.
-திருக்களிற்றுப்படியார் 19
அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும்
பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும்
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
நரரினில் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே.
-சிவஞானசித்தியார் 29எனவரும் மெய்ந்நூற் கூற்றுக்களையும் காண்க.

வேத முதல்வன் எனத் தொடங்கும் உண்மை யுணர்த்தும் திருப்பாடலில் புலப்படவரும் பொருளாவது, உயிர்களின் துன்பங்களை நீக்குதலையே திருவுளமாகக் கொண்ட இறைவர், உலகுயிர்கள் தத்தம் பிறவித்துன்பம் நீங்கவும் மெய்யுணர்ந்து ஏத்தவும் திருக்கூத்தியற்றுகின்ற திருவடிகளை யுடைய சிவபெரு மானே யாவர். அவரே முதற்கடவுள். பதினெண் புராணங்களும் அவ்வுண்மையைத் தெளிவாக விளக்குவனவாம் எனத் துணிந்து அவற்றை ஓதுவாயாக! என்று, யாவற்றையும் ஓதாமல் உணர்ந்தவரான ஞானசம்பந்தர் உரைத்தருளினார். பதினெண் புராணங்களில் மச்சம், கூர்மம், வராகம் வாமனம், சிவமகாபுராணம், இலிங்கம், பவிடியம், காந்தம், மார்க்கண் டேயம், பிரமாண்டம் என்ற இவை சிவ புராணங்கள். விஷ்ணு புராணம், பாகவதம், கருடம், நாரதீயம் என்ற நான் கும் திருமாலுக்குரிய புராணங்களாம். பிரமம், பதுமம் என்ற இரண் டும் நான்முகனுக்குரிய புராணங்களாம். ஆக்கினேயம் தீக்கடவுளைப் பற்றியும், பிரமகைவர்த்தம் கதிரவனைப் பற்றியும் கூறுவனவாம். சூதன் - புராணங்களைக் கூறிய முனிவர். ஒலிமாலை - உண்மைக் கருத்துக்களைக் கூறும் நூல் வரி சைகள். கலிக்கோவை - கலிவிருத்தம் என்னும் யாப்பு வகையில் அமைந்த புராணங்கள்.

திருப்பதிகத்தில் பொருந்திய 'பாராழி வட்டம்' எனத் தொடங்கும் பாடலின் உண்மையாவது, உலகம் காக்கும் தொழிலை மேற்கொண்ட திருமால், அக்காவல் தொழிலைப் பெற்ற தற்குக் காரணம் 'எல்லோருக்கும் மேலானவரான சிவபெருமானின் அருளும் உருளும் (சக்கரமும்) பெற்ற சிறப்பினாலாகும்' என்று மறைகள் வெளிப்படும் திருவாக்கையுடைய ஞானசம்பந்தர் அருள் செய்தார். வண்டமரும் தண்டுழாய் மாயோன் இறுமாப்பும், புண்ட ரிகப் போதுறையும் புத்தேன் இறுமாப்பும், அண்டர் தொழவாழும் நின் இறுமாப்பும், 'ஆலாலம் உண்டவனைப் பூசித்த பேறு என்றுணர்ந் திலையால்' (திருவிளை. வெள்ளை யானைச். 14) எனவரும் பரஞ்சோதியார் வாக்கும் காண்க.

'மாலாயவன்' எனத் தொடங்கும் திருப்பாட்டில், திருமாலும், மறைகளில்வல்ல நான்முகனும், அவர்களைத் தொடர்ந்த தேவர்களும் தாங்க இயலாதவாறு சுட்ட நஞ்சினைத் தாம் உண்டு, அவர்கள் இறவாத வண்ணம் காத்த மேலான பெருங்கருணையின் வெற்றிப் பாட்டினை 'வெங்குரு' என்ற சீகாழிப் பதியினரான பிள்ளையார் அறியவைத்தார். தோலாமறை - எந்நூல்களானும் மறுக்கப்படாத மறை. இறவாமை காத்த - ஒரு கால எல்லைவரை இறவாது காத்த. ஈறிலா தவன் ஈசன் ஒருவனே யாதலின், இக்கால எல்லை குறிக்க வேண்டுவ தாயிற்று.

பதிகத்தின் நிறைவான 'அற்றன்றி அந்தண்' எனத் தொடங்கும் திருப்பாட்டில், நான்மாடக் கூடல் என்ற மதுரையில் முச்சங்கங்களையும் நிறுவிய பாண்டியன் தெளிவுபெறவும், தெளிவு பெறாத கீழ்மக்களான சமணர்கள் வாதில் தாம் சொன்ன எல்லையில் முடிவு காணுமாறு இட்ட ஏடு, நீரில் எதிர்த்து மேலே செல்ல நேருமா யின் அதனால் உறுதியாய்க் கொள்ளப்படும் உண்மையாவது, 'ஈசனிடத்துக் கொள்ளத்தகுவது அன்பே யாகும்' என்று சிவஞான அமுது உண்ட சம்பந்தப் பிள்ளையார் விளக்கியருளினார். பதிகத்தின் நிறைவான 'அற்றன்றி அந்தண்' எனத் தொடங்கும் திருப்பாட்டில், நான்மாடக் கூடல் என்ற மதுரையில் முச்சங்கங்களையும் நிறுவிய பாண்டியன் தெளிவுபெறவும், தெளிவு பெறாத கீழ்மக்களான சமணர்கள் வாதில் தாம் சொன்ன எல்லையில் முடிவு காணுமாறு இட்ட ஏடு, நீரில் எதிர்த்து மேலே செல்ல நேருமா யின் அதனால் உறுதியாய்க் கொள்ளப்படும் உண்மையாவது, 'ஈசனிடத்துக் கொள்ளத்தகுவது அன்பே யாகும்' என்று சிவஞான அமுது உண்ட சம்பந்தப் பிள்ளையார் விளக்கியருளினார்.

மணம் வீசுகின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழியின் மன்னவரான ஞானசம்பந்தர் அருளிய மெய்ப்பொருள் விரித்த பதிகத்தை, அதன் அருட் குறிப்புச் செல்லும் அளவு அறிந்து போற்றி னேன் அல்லேன், ஆயினும் இதுவரை போற்றி உரைத்தது என்னை எனில்? சிறியவனான என் சிற்றறிவுக்கு அவர்தம் திருவடிகள் உணர்த்திய வழியே நின்று, சிறிய அளவில் நான் அறிந்த தன்மை பற்றுக் கோடாகக் கொண்டு, அதன்பால் அன்பு காரணமாகக் கும்பிட்டு வணங்கினேன். இவ்வரிய திருப்பாசுரத்திற்கு மேல் 822ஆவது பாடல் முதல் 844ஆவது பாடல்வரை 23 பாடல்களில் விளக்கங் கூறி இருப்பி னும் ஆசிரியர் சேக்கிழார், 'இப்பாசுரத்தை இதுகாறும் அன்பின் வழி நின்று போற்றினேன் என்பதன்றி விளக்கம் தந்தேன் அல்லேன்' என்றருளியிருப்பது, இப்பாசுரத்தின் அருமையும் ஆசிரியரின் அடக் கமும் உணர நின்றது.

மலர்கள் மலர்தலால் உண்டாகும் மணம் சூழ்ந்த சோலைகளையுடைய சீகாழிப் பதியில் தோன்றிய சிவஞானம் கமழும் திருவாக்கினையுடைய வள்ளலாரான ஞானசம்பந்தர், உண்மைப் பொருள் நிலையினைப் பலரும் அறிந்து உய்யுமாறு அருளிச் செய்து, எழுதுவித்து, என்றும் அழியாத மெய்ப்பொருளை உடைய அத்திரு வேட்டினை வைகையாற்றில் தம் திருக்கையினால் நீட்டி இட்டார். ஆற்றில் இட்ட பதிகம் 'வாழ்க அந்தணர்' (தி. 3 ப. 54) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணிலமைந்த பதிகமாகும். இதனைத் திருப்பாசுரம் என்பர். 23 பாடல்களையுடையது. சிவஞான போத நூற்பாக்களோடு ஒப்பிட்டுக் காண்டற்குரியது. இத் திருப்பாசுரத் திற்கு மேல் வரும் 23 பாடல்களால் ஆசிரியர் சேக்கிழார் விளக்கம் தருகிறார். மிக நுணுகியதும் அமைவுடையதுமான இவ்விளக்கம் அறிந்து இன்புறுதற்குரியதாம். இவ்வரிய பாக்களின் பொருளைச் சமணர்கள் அறியமாட்டாராயினும், இருவினைஒப்பும் மலபரிபாக மும் உற்ற நிலையில் பாண்டியன் கேட்டு உய்தற்குரியனாகுவன் என எண்ணி இதனை அருளினார். பக்குவம் உற்ற மன்னன் முன் (பா. 819) இவ்வாறு வினைகளொத்து துலையென நின்றதை உளங்கொண்டே அருணந்தி சிவாசாரியாரும் 'மன்னவன் கேட்பக் கிளந்த மெய்ஞ் ஞானம்' என இதனை அருளுவாராயினர். இச்செய்யுள் சில பதிப்புகளில் 820ஆம் பாடலுக்கு அடுத்த பாடலாக வருவதும் காண்க.

சைவ மெய்த்திருவுடைய ஞானசம்பந்தர் தம் திருக்கையினால் ஆற்று நீரில் செலுத்திய அவ்வேடு, பொருந்திய பிறவியான ஆற்றிலே மாதவரின் உள்ளமானது எதிர்த்துச் செல்வ தைப் போன்று, பெருகி ஓடும் நீரையுடைய வைகையாற்றில் பெரிய இவ்வுலகில் வாழ்பவர்களுக்குக் கெல்லாம், 'இதுவே உண்மைப் பொருள் உடையது' என்று எடுத்துக் காட்டிக் கீழ்நோக்கி ஓடும் ஓட்டத்தை எதிர்த்து நீரின் நடுவில் அதைக் கிழித்துக் கொண்டு மேல்நோக்கிச் செல்லலாயிற்று. ஆற்றில் எதிர்த்துச் சென்ற ஏட்டிற்கு, மாதவர் மனத்தை உவமை காட்டியிருக்கும் அருமை அறிதற்குரியது. 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்துங்காப்பான் வரன் என்னும் வைப்பிற்கு' (குறள், 24) வித்தாவர் அல்லரோ?

'எம் இறைவரான சிவபெருமானே முழுமுதற் பொருளாவர்' என்று எழுதிய அவ்வேட்டில், தம் இறைவரின் அருளாலே 'வேந்தனும் ஓங்குக' என்று மன்னனை ஓங்குமாறு பாடிய காரணத்தால், திருமகளை மார்பில் உடைய அனபாயன் என்னும் சிறப்புப் பொருந்திய சோழ மன்னனின் செங்கோலைப் போல் பாண்டியனின் கூனும் அப்போதே நிமிர்ந்தது. நிமிர்ந்து நிற்கும் உடலிற்கு, என்றும் நிமிர்ந்து நிற்கும் (நிற்கவேண்டிய) செங்கோலை உவமை கூறிய அருமையும் அறிதற் குரியதாம். 'வளையாத செங்கோல்' என இளங்கோவடிகள் குறிப்ப தும் நினைதற்குரியது.

ஞானசம்பந்தர் இட்ட ஏடு வையையாற்றின் நீரில் முன் கூறியபடி எதிர்த்துச் செல்லும் போது, வானவர்கள் எல்லாம் நீண்ட வாழ்த்து மொழிகளால் வாழ்த்தி மிக்க மலர்மழை பொழிந்து நிலத்தை மறைத்தனர். வெற்றிபெறும் இயல்புடைய யானைப் படை உடைய பாண்டிய மன்னன் வியப்படைந்து நின்றான். அறிவழிய நின்ற சமணரெல்லாம் பயந்து பதைப்புடன் தலைகுனிந்து நின்றனர்.
குறிப்புரை:

ஆற்றின் நடுவில் நீரை எதிர்த்து மேல் நோக்கிச் சென்ற அவ்வேட்டைத் தொடர்ந்து போய் எடுப்பதற்காக, ஆட்சியைத் திருந்தச் செய்யவல்ல குலச்சிறையார் என்ற அமைச்சர் காற்றைப் போல் விரைவாய்ச் செல்லும் குதிரைமீது ஏறி அவ்வேட்டின் பின் சென்றார். ஞானசம்பந்தர் விடைக் கொடியை யுடைய சிவபெரு மானை, அந்த ஏடு மேற்கொண்டு செல்லாது ஓரிடத்தில் தங்கி நிற்குமாறு பாடினார்.
குறிப்புரை:

பிள்ளையார் தாமும் அவ்வேடகத் திருப்பதி கத்தை 'வன்னியு மத்தமும்' எனத் தொடங்கிப் பாடியருளவும், ஆற்று நீரொடு சேர்ந்து வந்த ஏட்டினிடத்துக் குலச்சிறையாரும் சென்று அடைந்து, பெருஞ் சுடுகாடே இடமாய் ஆடுகின்ற நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமானது கோயிலின் அருகில் நிலைபெற ஓடிக் கொண்டிருக்கும் வைகை ஆற்றின் நடுவில் புகுந்து, மேற்செல்லாமல் நின்ற ஏட்டை எடுத்துக் கொண்டார். 'வன்னியும் மத்தமும்' (தி. 3 ப. 32) எனத் தொடங்குவது கொல்லிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகத் திருக்கடைக் காப்பில் 'வைகைநீர் ஏடுசென்று அணைதரும் ஏடகம்' எனவருவது இவ்வரலாற்றிற்குரிய அகச் சான்றாகும்.

குலச்சிறையார் எடுத்த ஏட்டைத் தம் தலைமீது வைத்துக்கொண்டு, தாங்கற்கரிய மகிழ்ச்சி மீதூர, அலைகளையுடைய நீர் நிறைந்த வையை ஆற்றின் கரையில் ஏறி, அவ்விடத்து அமர்ந்திருக் கும் மேருவை வில்லாக வளைத்த இறைவரை வணங்கி, மீண்டு மலைமகளாம் உமையம்மையார் குழைத்து ஊட்டிய ஞானத்தை உண்டவரான ஞானசம்பந்தரிடத்து வந்து சேர்ந்தார்.
குறிப்புரை:

வந்த குலச்சிறையார், பிள்ளையாரின் தாமரை மலர்போன்ற திருவடிகளைப் போற்றி நின்று, அரசன் முதலாக அங் கிருந்தோர்அனைவரும் காணுமாறு, முற்படத் தம் தலைமீது எடுத்துக் கொண்டுவந்த ஏட்டைக் கையில் ஏந்திப் பண்பால் அனைவர்க்கும் காட்ட, இம்மையும் மறுமையுமாய பற்றுக்களை அறுத்துத் திருவரு ளைப் பெற்ற தொண்டர்கள் செய்யும் 'அரகர' என்ற ஒலி முழக்கம், அதுபொழுது எங்கும் எழுந்தது.
குறிப்புரை:

பாண்டிய மன்னன் அமைச்சரை நோக்கிப் பொருந்திய வாதத்தில் தாமே சூளுரைத்துத் தோற்ற இச்சமணர்கள், அச்சூளுரையில் தோற்றதால், ஒறுத்தற்குரியராகின்றனர். அன்றியும் முன்பே ஞானசம்பந்தரிடத்தில் செய்யத்தகாத தீய செயலை முழுமை யாகச் செய்துள்ளனர். ஆதலால் அவர்களைக் கழுவிலேற்றி முறை செய்து ஒறுக்க எனக் கூற,
குறிப்புரை:

சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர், அங்ஙனம் பாண்டியமன்னன் ஆணையிட்டதைக் கேட்டும், சமணரி டத்துப் பகைமை இல்லாதவராயினும், சைவத்தொண்டர்கள் இருந்து வாழும் மடத்தில் தீங்கைச் செய்த சமணர்களின் தகுதியற்ற தன்மை யினால் இவ்வொறுப்பு மிகவும் பொருத்தமானதேயாகும் என்று எண்ணி, நேர்மையில் திறம்பாத மன்னரின் ஆணைச் செய்தியை விலக்காமலிருந்தார். அப்போது, 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்' (குறள், 550) 'குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில்' (குறள், 549) எனவரும் குறட் பாக்களையும் காண்க.

நற்பண்புடைய அமைச்சரும், உலகில் உள்ளவர் அறியும்படியாகக் கணுக்களைப் பக்கங்களில் வெட்டிக் கூர்மையான கழுக்களை நிரல்பட அமைத்திட, அன்புடைய ஞானசம்பந்தர் எழுந்தருளிய மடத்தில் தீயைக் கொளுத்த வேண்டும் எனச் சூழ்ச்சி செய்து கொளுத்திய எண் பெருங்குன்றுகளிலும் இருந்து வந்த எண்ணாயிரம் சமணக் குருமார்களும் கழுவில் ஏறினர். எண்பெருங்குன்றங்கள் - மதுரையைச் சூழ்ந்துள்ள ஆனைமாமலை, ஆதியாய குன்றுகள். அவை பரங்குன்று, ஒருவகம் பப்பாரம்பள்ளி, அருங்குன்றம், பேராந்தை, யானை, இருங்குன்றம் என்பன. ஏற்ற என்றது அரசன் ஆணையை முறைப்படி செயற்படுத் தியமையைக் குறித்தது. அரசனின் ஆணை என அறிவித்ததும் அவர்களே கழுவில் ஏறினார்கள். சமணர்கள் வாதத்தின் பொழுது தாமே கூறிய கூற்றினாலன்றிப் பிறிதில்லை இச்செயல் என்பதும் கருதத்தக்கது.

வாதத்தில் தோற்றவர்களான சமணர்கள் எண்ணாயிரம் பேரும் கழுவில் ஏறிட யாவரும் காணும்படி நின்ற அக்கழுமரங்கள், ஆற்றில் சமணர்கள் இட்ட ஓலை அழிந்து போன காரணத்தால் நிறுத்திய வெற்றித் தூண்களாகவும், சிவபெருமானை யன்றி வேறு ஒரு கடவுள் இல்லை என்ற உண்மையினை உலகத்திற்கு விளக்கிக் காட்டி உயர்த்திய கொடித் தூண்களாகவும் விளங்கின. உலகம் போற்றும் சிறப்பையுடைய காழிப் பிள்ளையாரின் புகழைப் புலப்படுத்திய வெற்றித் தூண்களாகவும் அவை விளங்கின. பதாகை - வெற்றிக்கொடி.

பாண்டிய மன்னனுக்குச் சீகாழிச் செல்வரான பிள்ளையார் திருநீறு அளித்தார். அவன், அதனை வணங்கி ஏற்றுத் தன் உடல் முழுவதும் முறைப்படி அணிந்து கொண்டான். மன்னன் திருநீறு அணிந்து கொண்டான் என்பதால், அம் மதுரையில் வாழும் நெருங்கிய மக்கள் எல்லாரும் தூய திருநீற்றை அணிந்து கொண்டனர்.
குறிப்புரை:

ஞானப் பிள்ளையார் அளித்தருளிய திருநீற்றை உடலுக்கு மருந்தாக அணிந்து கொண்டு, மன்னன் தூயவனாகப் பெற்று உய்வுபெற்ற அப்போது, அரசியலறங்களும் மறைகளில் விதித்த நீதியேயாக நாடு எங்கும் நிகழலாயின. உலகம் தூய்மை யாகுமாறு திருவெண்ணீற்றினின்றும் விரிந்த பேரொளியானது, எண் திசைகளிலும் தூய்மை செய்தலால், அப்போதே உயிர்களைச் சூழ்ந் திருந்த சமண் இருளும் அழிந்தது.
குறிப்புரை:

மன்னவனுக்கு உயிரைத் தந்ததுமன்றி உண்மை நெறியையும் காட்டி, மிக்க கேட்டை விளைவிக்கும் சமண சமயத்தைப் போக்கி, உலகம் எல்லாம் உய்யுமாறு ஆட்கொண்டருளும் திரு ஞானசம்பந்தரின் மெய்ந்நெறி, உலகில் பெருகி ஓங்குவதால், வண்டு கள் ஒலிப்பதற்கு இடமான கொன்றை மலர்மாலையைச் சூடிய சிவ பெருமானது திருநெறி அப்பொழுதே பரவுவதாயிற்று.
குறிப்புரை:

அந்தணர்கள் வேள்விகளைச் செய்ய, அதுகார ணமாகத் தேவர்கள் மழைபெய்யச் செய்ய, மன்னன் நன்னெறியில் நிற்க, இவ்வாறாக இவ்வுலகம் இம்மை இன்பங்களைக் குறைவின்றித் துய்த்தது. ஆயினும் அதன் துய்ப்பு, பிறவித்துன்பத்துக்கு ஏதுவாத லன்றி, வீட்டின்பத்திற்கு ஏதுவாக அமையாமை கண்ட நகர மாந்தர் கூற்றுவனைக் காலால் உதைத்தவரான சிவபெருமான் திருநாமத்தைக் கூறிவர, நிறைந்த கடல் அலைபோல மேன்மேலும் தொடர்ந்து வரும் பிறவியான துன்பத்தினின்று நீங்கவும் ஏதுவாயிற்று.
குறிப்புரை:

'வாழ்க அந்தணர்' எனும் திருப்பாடலை மீண்டும் நினைவு கூரும் வகையில் இப்பாடற் கருத்து அமைந்துள்ளது. 'அங் கயற்கண்ணியுடனாகத் திருவாலவாயில் விரும்பி வீற்றிருந்தருளும் பேரருளாளரான இறைவரின் தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்குவன்' என்று, வைகைக் கரையினின்றும் எழுந்து சென்று, மேன்மேலும் ஒளிமிகுந்து நிற்கும் முத்துச் சிவிகையில் இவர்ந்து, சீகாழி மன்னவர் வந்தருளினர். மங்கையர்க்கரசியாரும், நின்றசீர் நெடுமாறனாரும் அவரைப் போற்றியவாறு அவர்பின் வந்தனர்.
குறிப்புரை:

எண்ணுதற்கரிய பெருமையுடைய தொண்டர்கள் எல்லோரும் மகிழ்ந்து சிவபுண்ணியப் பிழம்பாகும் பிள்ளையாரைப் புகழ்ந்து, அவருடைய திருவடிகளை வணங்கிப் போற்றிவர, பாண்டிய நாட்டவர் அனைவரும் உலகுய்தற்கென்றே தோன்றிய ஞானசம்பந்தரை நேரே காணப் பெற்றதால் கண்கள் படைத்த பயன் களை அடைந்தவர் ஆயினர்.
குறிப்புரை:

இறைவரின் 'ஆலவாய்' என்னும் கோயிலானது அங்குத் தோன்றக் கண்டு பிள்ளையார், மிக்க அடிமைப் பண்பினால் வணங்கிச் சென்று, திருமாலும் நான்முகனும் போற்ற நிலைபெற எழுந்தருளிய இறைவரின் கோயிலின் திருவாயில் முன்பு, ஒழுக்க முடைய அடியார்களின் முன்னம், முத்துச் சிவிகையினின்றும் இறங்கி உள்ளே புகுந்தார்.
குறிப்புரை:

பாண்டிய மன்னனும், எங்கள் சோழமன்னரின் மகளாரான மங்கையர்க்கரசியாரும், உலகை நன்னெறிப் படுத்தி வருகின்ற குலச்சிறைநாயனாரும் திருஞானசம்பந்தரின் செம்மை யான அழகிய திருவடிகளைப் போற்றியவாறு உட்புக, திருஞானசம் பந்தர், புனிதரான இறைவரின் திருக்கோயிலை வலமாக வந்து உள்ளே சென்றார்.
குறிப்புரை:

இரு கைகளும் தலைமீது குவிந்திடவும், கண் களினின்றும் பெருகும் நீர்வெள்ளம் திருமேனி முழுவதும் பொழிய வும், மறைமுதல்வரான இறைவரைப் பணிந்து போற்றி, 'ஐயனே! அடி யவனையும் அஞ்சேல் என்று அருளிச் செய்து ஆட்கொள்ளவல்ல மெய்ப் பொருளானவரே' என்று 'வீடலாலவாய்' (தி. 3 ப. 52) எனத் தொடங்கும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். இம்முதற் குறிப்புடைய பதிகம் கௌசிகப் பண்ணில் அமைந்ததாகும். 'ஐயனே! அஞ்சல் என்று அருள் செய் எனை' என முன்வேண்டியதற்கேற்ப, 'ஆட் கொண்டருளினீர்' என அவர் தம் கருணையை எண்ணி மகிழ்ந்தவராய், இப்பதிகத்தை அருளினார்.

'பற்றற்குரிய வேறு உணர்வு ஒன்றும் இல்லாத வனாய, யான் நீக்கம் இல்லாது எங்கும் நிறைந்த அழகிய சிற்றம்பலத் தில், நான்மறைகளும் போற்றுமாறு மக்கள் உய்யும் பொருட்டாய் நீ அருட்கூத்து ஆடுவதை இடைவிடாமல் எண்ணுவதே என் நியமமா கும்' என்ற கருத்துடன், அழகிய சீகாழியின் தலைவர் ஆன ஞான சம்பந்தர் இனிய தமிழ்ப் பதிகத்தைப் பாடி அருள, மேற்கூறிய 'வீடலாலவாய்' எனவரும் திருப்பதிகத்தில் ஆறாவது பாடலில், 'கூடலாலவாயிலாய் நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே' எனவரும் கருத்தை முகந்து இங்ஙனம் ஆசிரியர் அருளினர். 'நினைப்பதே நியமமே' எனவரும் தொடர், இப்பதிகத்தில் 8ஆவது பாடலிலும் வருகின்றது.

பாண்டியன் வணங்கி எழுந்து நின்று 'திரு ஆலவாயில் எழுந்தருளிய அரசே! சமணர்களின் வஞ்சனைக்கு ஆளாகி மயங்கி உன்அருட் பெருமையினை ஒருசிறிதும் அறியாத என்னை, இறைவனே! உற்ற நோயைத் தீர்த்து ஆட்கொள்ள இனிய அருள் உருவான திருஞானசம்பந்தரை எனக்கு அளித்து அருள் செய்தனை!' என வணங்கினான். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
குறிப்புரை:

மிகுபுகழுடைய பாண்டிய அரசரும், சோழரின் மகளாரான மங்கையர்க்கரசியாரும், அருகிற் சென்று வணங்கிப் பின், தம் அரண்மனைக்குள் சென்றனர். மீதூர்ந்த மகிழ்ச்சிமிக வழிபடும் விருப்பினால் நாடி அங்கிருந்து தம் இறைவரைப் பாடுபவராகி,
குறிப்புரை:

திருநீலகண்டயாழ்ப்பாணருக்கு இறைவர் அருள் செய்த திறத்தைத் 'திருவியமகத் திருப்பதிகத்துள்' வைத்துப் போற்றி, அவருடனே உரையாடியிருந்து, தெளிவுடைய அறிவினராய திருத்தொண்டர்கள் பலரும் சூழ இருப்ப, திருத்தொண்டின் அழியாத உண்மைத் திறத்தை நோக்கி மகிழ்ந்து, இருள் கெடுமாறு மண்ணுலகில் தோன்றியருளிய பிள்ளையார் அங்கு இனிதாய்த் தங்கியிருந் தருளினார். பிள்ளையார் அருளிய திருஇயமகப் பதிகம் 'ஆலநீழல்' (தி. 3 ப. 115) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்த பதிகமாகும். ஒரு பாடலில் ஓரடியில் வரும் சொல்லோ அல்லது சொற்றொடரோ மீண்டும் அவ்வடியில் வரப்பெறின் அது இயமகம் ஆகும். அவ்வகையில் இப்பதிகம் முழுவதும் வருதலின் இவ்வியமக வகையதாயிற்று. இதன்கண் 'தாரம் உய்த்தது பாணர்க் கருளோடே' (தி. 3 ப. 115 பா. 6) எனவரும் தொடரை நினைவு கூர்ந்தே, 'பாணர்க்கருளும் திறம் போற்றி' என்றார் ஆசிரியர். தாரம் - பண்பாடும் திறம். நாளும் பண்ணின் திறங்கொள யாழிசைத்துவரும் பாணருக்கு, இறைவன் தன் திருமுன்பழைத்துப் பலகையிடச் செய்து, அதன்மீதிருந்து பாடுக என அருளியது இங்குக் குறிக்கப் பெறும் கருத்தாகும்.

பாண்டிய மன்னனின் மதுரை நகரத்து மக்களும், மதுரையின் புறத்துப் பல இடங்களிலும் உள்ளவர்களும், சமணத் துற வியர் தங்கியிருந்த பாழிகளையும், அவர்தம் இறைவர் இடம் கொண்ட பள்ளிகளையும் முழுமையாகக் கீழ்நிலம் காண அகழ்ந்து போக்கி, ஒளி பெருகத் தூய்மை செய்து, வாழ்வுபெறும் அப்பதிகள் எல்லாவற் றிலும் சிவச் சின்னங்களை விளங்கச் செய்தார்கள். மேற்கூறிய இடங்களில் எல்லாம் விடைக்கொடி, விடை இலச்சினை, சூலம் ஆகிய சிவச்சின்னங்களை அமைத்தனர் என்பதாம்.

பாண்டியனின் மனைவியாரான மங்கையர்க் கரசியாரும் குலச்சிறை நாயனாரும் மிகு சைவத்துறை நிற்கும் ஞானசம்பந்தரின் திருவடிகளை நாள்தோறும் வணங்கிப் போற்றிவர, சீகாழித் தலைவரான பிள்ளையாரும் திருவாலவாயில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளை ஊனும் உருகுமாறு போற்றி உள்ளம் மகிழ அங்கு வீற்றிருந்தருளிய நாள்களில்,
குறிப்புரை:

முன் செய்த தவத்தால் பெற்றெடுத்த சிவபாத இருதயரும், தம் திருமகனாராய் மறைவழிப் பட்டவர்களின் மணி முடியாய் நிற்பவரை, மாதவத்தோர்களாகிய சிவஞானியர்களின் பெருவாழ்வாக இருந்தருளுபவரை, நஞ்சுடைய திருக்கழுத்தை உடைய இறைவரின் திருவருள் பெற்று மெய்ப் பொருளாய் விளங்கு பவரைச் சீகாழியில் தங்கியிருந்த அந்நாள்களில் மிகவும் நினைந்தார். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

'திருவருளாலாய புகழையுடைய திருநாவுக் கரசரிடம் பிழை செய்த, மானம் இல்லாத சமணர்களுடன் வாதம் செய்து, அவரை வெற்றி கொள்வதற்கும், பாண்டிய நாடு உய்யும் வண்ணம் திருநீற்று நெறியைப் பெருக்குதற்கும் சென்றருளிய பிள்ளையாரிடம் நிகழ்ந்தவற்றை அறிவேன்' என்று சிவபாத இருதயர் புறப்படுவாராகி, நாவரசரை நினைவு கூர்ந்தது முன்னம் அவர்தம் வரலாற்றை யறிந்தமையாலாம்.

துடியைப் போன்ற இடையுடைய திருநிலை நாயகியம்மையாருடனாகத் திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கி, அழகிய சீகாழியினின்றும் புறப்பட்டு வரும் வழியில் இம்மண்ணுலகில் மேம்பட்டு விளங்கும் சிவபெருமானின் கோயில்கள் பலவற்றையும் வணங்கிப் போற்றிக் கூரிய வேல் ஏந்திய பாண்டியனின் வளம்மிக்க நாட்டில் வந்து சேர்ந்தார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

சிறந்த அந்தணரான சிவபாத இருதயர், வளம் மிக்க பாண்டிய நாட்டுப் பதிகளுள் தங்கிச் செல்வாராய்த் தேன் பொருந்திய மணம் கமழும் பசுமையான வேப்ப மாலையையுடைய பாண்டியனின் தலைநகரமான மதுரையை அடைந்து, திருஆலவாயில் விரும்பி வீற்றிருக்கும் ஒப்பற்ற முதல்வரான சொக்கநாதப் பெருமா னின் மலர்கள் பொருந்திய சிவந்த திருவடிகளின் கீழ்ச் சென்று மிக்க ஆர்வத்துடன் வணங்கினார்.
குறிப்புரை:

இறைவரை வணங்கி வெளியே வந்து அருகில் வந்து சேர்ந்த நகர மக்களான அடியார்களை, ஞானசம்பந்தர் தங்கி யுள்ள மடம்பற்றி வினவ, இங்குக் குருடராய் இருந்த எம்மைக் கண் திறக்கச் செய்து ஒளிநெறிகாட்டிய சீகாழிப் பதியினரின் இளஞ்சிங்க மான ஞானசம்பந்தர் தங்கும் இடமாவது, திருநீற்றுத் தொண்டர் கூட்டம் சூழும் இடமாய்ச் செந்தாமரை போன்ற திருமடம் இதுவேயாகும் என அவர்கள் அறிந்து கூறினர்.
குறிப்புரை:

அவர்கள் அங்ஙனம் கூறக் கேட்ட சிவபாத இருதயர், அம்மடத்தில் சென்று சேர, அங்கு அவரைக் கண்டவர்கள் அடிவணங்கி, ஒப்பில்லாத புகழையுடைய ஞானசம்பந்தருக்கு, அந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கூறவே, அவர் 'எப்பொழுது வந்தருளி யது' என வினவிக் கொண்டு எதிரே எழுந்தருள,
குறிப்புரை:

சிவபாத இருதயர் தாம் அப்பிள்ளையார் முன்பு தொழுது சென்றருளத் தவநெறியில் நின்றருளும் தந்தையார் எதிரில், தாமும் தொழுவாராகி, பிள்ளையார், அவரைக் கண்ட அளவில் திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் பிறவிப் பிணிப்பை அறுத் தருளியவரான தோணியப்பரின் திருவடியினை நினைவு கூர்ந்தார். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பெரிய தவத்தினரான அச்சிவபாத இருதயர் முன்னே, மலர் அனைய இரண்டு கைகளையும் கூப்பியருளி, 'அரிய தவத்தையுடையவரே! என்னை அறியாப் பருவத்தில் எடுத்தாண்ட பெருந்தகையாரான தோணியப்பர் எம் பெரியநாயகி அம்மையா ருடன் நன்கு எழுந்தருளியிருந்ததே!' என்ற கருத்துடன் பொருந்தும் புகழுடைய சீகாழியின் மேல் திருப்பதிகத்தினைப் பாடுபவராய்,
குறிப்புரை:

'மண்ணில் நல்ல' என்று தொடங்கித் திருவுள் ளத்தில் எழுந்த பெருமகிழ்ச்சியுடன் உளம் நிறைந்த ஆசைப் பெருக் கால், கண்களிலிருந்து அருவி எனக் கண்ணீர் பாய்ந்து வழிய, தோணி யப்பர் இனிதாய் இருந்தமை பற்றித் தம் தந்தையை வினவிக் குளிர்ந்த மணமுடைய அழகிய செந்தாமரை மாலையை அணிந்த தமிழ் வல்லுந ரான பிள்ளையார் திருப்பதிகத்தைத் திருவாய் மலர்ந்தருளினார். இத்தொடக்கமுடைய திருப்பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும்(தி. 3 ப. 24). ஒருவர் தம் பதியை விடுத்துப் பிற பதிக்குச் சென்று அங்குத் தங்கியிருக்கும்பொழுது, தம் பதியிலிருந்து ஒருவர் வரக் காணின், நம்மவர் நலமாக இருக்கின்றார்களா? என வினவுதல் இயற்கை. உலகியல் வயப்பட்ட இவ்வழக்கு, அருளியல் வயப்பட்ட பிள்ளையாரிடமும் அமைந்திருந்தது. எனினும் இவ்வினா அருளியல் வயப்பட்டதாய்த் தம் உடல் தந்தையாரைக் கண்ட பொழுதே உயிர்த் தந்தையாரும், தாயாரும் திருவுள்ளத்திற்கு வர அருளப்பட்டதாகும். தோணிபுரத்து வீற்றிருக்கும் அம்மையப்பரிடம் அவருக்கிருந்த உணர்வுதானும் அரியதும் பெரியதுமாயதை இந் நிகழ்ச்சி விளக்குவதாகும்.

அப்பதிகத்தின் திருக்கடைக்காப்பையும் அருளி நிறைவித்து, மிக்க விருப்பத்துடன் அத்தந்தையார் தமக்கு விருந்து அளித்து, மகிழ்ச்சிப் பெருக்குடன் இருக்கும் நாளில், அரும்பு எனப் புதியதாய் மலர்ந்த உண்மையன்பின் மிகுதியால், திருத்தொண்டை இடையறாது நினைந்து செய்யும் அடியவர்கள் வீற்றிருக்கும் மற்றப் பதிகளையும் சென்று வணங்குதற் பொருட்டுச் செல்வாராய்,
குறிப்புரை:

கல்லால மரத்தின்கீழ் அமர்ந்து அக்காலத்தில் நான்கு முனிவர்கட்கு அறம் உரைத்த இறைவரை, தமிழ் நூல்களுள் சிறந்த பொருள் இலக்கணத்தைப் பாடி நூலறியும் சங்கப் புலவர் களுக்குத் தந்தருளியவரை, உரியகாலம் அறிந்து சேரப்பெற்று இனி தாக வணங்கிக் கையால் தொழுது, சைவ ஒழுக்கத்தை மேற்கொண்ட பாண்டியனும், அவரது தேவியாரும் உடன்வர, ஞானசம்பந்தர் வெளியே வந்தருளினார். நூலின்கண் - தமிழ்நூல்களுள். பொருள் பாடி - இறை யனார் அகப்பொருள் எனும் அகப்பொருள் இலக்கணத்தைப் பாடி. நூலறிவார் - சங்கப் புலவர்கள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோகைள் சூழ்ந்த மதுரை மாநகரின் வெளியே வந்து பாண்டியரும், தேவியா ரான மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் தம் ஊன் உருகும் வண்ணம் உள்ளம் அழிந்து, அதனால் பெருகிவரும் கண்ணீர் இடையறாது ஒழுகிவிழ, உணர்வு இழந்து விழுந்ததைக் கண்டு 'நான் உங்களைப் பிரியாதவாறு இந்நாட்டின் இறைவரது பதிகள் பலவற் றையும் வணங்குவீர்களாக!' எனச் சிவஞான உணர்வினரான பிள்ளையார் உரைத்தருள, அவ்வாறே அதற்கு இசைந்து அவர்களும் உடன்வர, இறைவரின் திருப்பரங்குன்றத்தைச் சென்று அடைந்தனர். ஊன் நெகிழ, ஒழுகு கண்ணீர்வழிய, உணர்விழந்து மூவரும் விழுதற்குக் காரணம் பிள்ளையாரின் பிரிவாற்றாமையே யாகும். அதனை யுணர்ந்த பிள்ளையாரும் தம்முடன் அவர்கள் மூவ ரும் போதர இணங்கினர். 'யான் உம்மைப் பிரியாத வண்ணம்' என் றது நனிநாகரிகம் பட நின்றது.

கங்கையாற்றைத் திருமுடியிற் கொண்ட சிவபெருமானை அப்பதியில் போற்றி, அழகிய ஆப்பனூரை அடைந்து வணங்கிப் பாடி, திருநீறு பூசிய இறைவரின் பதிகள் பல வற்றையும் சேர்ந்து, பொருந்திய பதிகங்கள் நிகழுமாறு பாடி, சேறு பொருந்திய வயல்கள் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய செல்வரான பிள்ளையார், சிவந்த கண்களை உடைய விடையைக் கொடியாய் உடைய இறைவரின் திருப்புத்தூரை இனிதாய் அடைந்து, வணங்கிச் சிலநாள்கள் அங்குத் தங்கியிருந்தார். கங்கையாற்றைத் திருமுடியிற் கொண்ட சிவபெருமானை அப்பதியில் போற்றி, அழகிய ஆப்பனூரை அடைந்து வணங்கிப் பாடி, திருநீறு பூசிய இறைவரின் பதிகள் பல வற்றையும் சேர்ந்து, பொருந்திய பதிகங்கள் நிகழுமாறு பாடி, சேறு பொருந்திய வயல்கள் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய செல்வரான பிள்ளையார், சிவந்த கண்களை உடைய விடையைக் கொடியாய் உடைய இறைவரின் திருப்புத்தூரை இனிதாய் அடைந்து, வணங்கிச் சிலநாள்கள் அங்குத் தங்கியிருந்தார்.

பகைவரின் முப்புரங்களை, மலையாகிய வில்லினால் அழித்த இறைவரின் திருப்புத்தூரைப் பணிந்து சென்று, புற்றில் வாழும் இயல்புடைய பாம்பை அணிந்த தூயவரின் 'திருப் பூவணம்' என்ற திருப்பதிக்குச் சென்று இறைவரை வணங்கிப் புகழ்ந்து பாடி, கற்றவர் வணங்கிப் போற்றும் 'திருக்கானப்பேர்' என்ற பதியை யும் வணங்கித் தமிழ்ப் பதிகம்பாடி, 'திருச்சுழியலைப்' போற்றி, அதன்பின் 'திருக்குற்றாலத்தையும்' வணங்கிக் கூற்றுவனை உதைத்து அருளிய இறைவரின் திருநெல்வேலியை அடைந்தார். இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருப்புத்தூர்: வெங்கள் விம்மு (தி. 1 ப. 26) - தக்கராகம்2. திருப்பூவணம்: 1. அறையார் புனலும் (தி. 1 ப. 64) - தக்கேசி 2. மாதமர் மேனியன் (தி. 3 ப. 20) - காந்தாரபஞ்சமம் 3. திருக்கானப்பேர்: பிடியெலாம் (தி. 3 ப. 26) - கொல்லி. (காளையார் கோயில்). 4. திருக்குற்றாலம்: வம்பார்குன்றம் (தி. 1 ப. 99) - குறிஞ்சி. (குறும்பலா) : திருந்தமதிசூடி (தி. 2 ப. 71) - காந்தாரம். திருச்சுழியலில் அருளிய பதிகம் கிடைத்திலது.

புண்ணியரான சிவபெருமானின் திருநெல்வே லியை வணங்கிப் பணிந்து, போற்றி, முறுக்கிய சடையையுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று, விரும்பி அங்கங்கும் பாடி, நல்ல தொண்டர்களுடனே நாளும் போற்றிச் செல்பவரான பிள்ளையார், தேவர்களை அழித்து மகிழ்ந்த இராவணனின் இலங் கையை அழித்த மிகப் பெரும் பாதகத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வலிய அழகிய வில்லை ஏந்திய பெரிய கையையுடைய இராமன் நிறுவிய திருஇராமேச்சுரத்தைச் சென்றடைந்தார். திருநெல்வேலியில் அருளிய பதிகம் 'மருந்தவை' (தி. 3 ப. 92) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருப் பதிகள் பிறவும் சென்று என்பன திருப்புடைமருதூர் (திருப்பிடவூர்), திருஅகத்தீச்சுரம், திருவுத்தரகோசமங்கை முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.

சிவந்த கண்களையுடைய திருமால் வழிபட்ட இராமேச்சுரத்தை அடைந்து, அதன் திருமுன்பு வீழ்ந்து எழுந்து, பாண்டியனோடும் மங்கையர்க்கரசியாரும் உண்மை ஒழுக்கத்துடன் நிற்கும் அமைச்சரான குலச்சிறையாரும் தம்மைச் சூழ்ந்து தொடர்ந்து வர, அவர்களுடனே அழகிய நீண்ட வாயிலுள் மேன்மேலும் எழு கின்ற விருப்பத்தினால் புகுந்து, உள்ளே சேர்பவராய், மன்னனும் வணங்கிப் போற்றத் தாமரை போன்ற கைகளைக் கூப்பி வணங்கி நின்று பாடியருளினார். இதுபொழுது அருளிய பதிகங்கள்: 1. அலைவளர் - (தி. 3 ப. 10) காந்தார பஞ்சமம். 2. திரிதருமாமணி - (தி. 3 ப. 101) பழம் பஞ்சுரம்.

சேதுவிடத்தில் சிவந்த கண்களையுடைய திருமால் வணங்கிய சிவபெருமானை வணங்கிப் பாடி, புறத்தே வந்து, விருப்பத்துடன் அந்நகரத்தில் தங்கியிருந்து நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமானின் தொண்டர்களுக்கெல்லாம், குற்றமற்ற புகழை யுடைய பாண்டிமாதேவியாரும் உண்மை நெறி நிற்கும் குலச்சிறை நாயனாரும் குறைவின்றி வேண்டுவனவற்றை யெல்லாம் தந்து போற்றிவர, இராமநாதரான இறைவரை நாள்தோறும் வணங்கிப் போற்றியவாறு, குளிர்ந்த கடற்கரை நகரில் விருப்புடன் ஞானசம் பந்தர் தங்கியிருந்தார். உடன்வரும் மாறனாரின் விருப்பினை நிறைவேற்றி வரும் கடப்பாடுடைமை பற்றி அரசியாரையும் அமைச்சரையும் கூறி னார். சேது - அணை. அதனையுடைமைபற்றி அப்பெயராலேயே அப்பதியும் அழைக்கப் பெறுவதாயிற்று.

அத்திருப்பதியில் பிள்ளையார் இனிதாக இருந்தருளும் பொழுது, கடல் சூழ்ந்த இலங்கையில் பொருந்தியுள்ள திருக்கோணமலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் சிவந்த கண்களை உடைய இளைய ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட இறைவரை வணங்கிப் பாடி, பிறைச் சந்திரன் தவழுமாறு உயர்ந்த மாடங்களை உடைய மாதோட்ட நகரத்திலிருக்கும் 'திருக்கேதீச்சரம்' என்ற கோயிலில் வீற்றிருக்கும் இறைவரின் செம்மையான திருவடிகளை மிகவும் நினைந்து போற்றிப் பணிந்து, இறைவரிடம் பொற்கிழி பெற்ற ஞானப்பிள்ளையார் அன்பர்களுடன் கூடியிருந்து மகிழ்ந்தார். இத்திருப்பதிகளை நினைந்து அருளிய பதிகங்கள்: 1. திருக்கோணமலை: நிரைகழல் (தி. 3 ப. 123) - புறநீர்மை 2. திருக்கேதீச்சுரம்: விருதுகுன்ற (தி. 2 ப. 107) -நட்டராகம்.

அப் பதியை வணங்கி, வடதிசைநோக்கிச் செல்ப வராய், அழகிய கையில் தீயை ஏந்திய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் கோயிலுள் புகுந்து வணங்கிப் பல பதிகளையும் வணங்கிச் சென்று, கடல் அலைகள் புரண்டு வரும் அவ் எல்லைகள் பிற்படக் கடந்து சென்று, சொலற்கரிய புகழையுடைய திருவாடானை என்னும் பதியை அடைந்து, செந்தமிழ் மாலைகளைச் சாத்தி, உலகம் உய்யும் பொருட்டுச் சிவஞானம் உண்ட பிள்ளையார் ஒப்பில்லாத திருப் புனவாயிலைத் தாழ்ந்து வணங்கினார். இதுபொழுது அருளிய பதிகங்கள்:1. திருவாடானை: மாதோர் கூறு (தி. 2 ப. 112) - நட்டராகம். 2. திருப்புனவாயில்: மின்னியல் (தி. 3 ப. 11) - காந்தார பஞ்சமம். அப்பதி என்றது திருக்கேதீச்சுரத்தையும், கோயிலுள் புகுந்து என்றது இராமேசுவரத்திலுள்ள திருக்கோயிலுள் புகுந்து என்றும் பொருள்படும். பலபதியும் தொழுது என்றது உப்பூர், திருவெற்றியூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

பலபதிகளும் விளங்கும் பாண்டியநாட்டில் முக்கண்களையுடைய சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் இடங்கள் பலவற்றையும் வணங்கி, ஒழுகலாறுகள் பலவற்றையும் விளங்க உணர்த்துகின்ற மறைநூல்களின் நெறியையே எங்கும் எவரும் பின்பற்றும்படி செய்து, வெண்மையான திருநீற்றின் சார்பு பெற்றதால் உயர்ந்த நற்பேற்றை யாவரும் பெறும்படி அருள்செய்து, சீகாழிப் பதிவாழ வந்தருளிய சம்பந்தப் பெருமான், இறைவரின் திருத் தொண்டர் பலரும் சூழ்ந்துவரச் சந்திரகுல மரபில் வந்த பாண்டியனார் போற்றி உடன் வரவும் சென்று, அமைச்சர் குலச்சிறையாரின் பதியான 'திருமணமேற்குடிக்கு' வந்தருளினார். பரமனார் மகிழ்விடங்கள் ஒலியூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.

அம்மணமேற்குடியில் இனிது விரும்பி எழுந்தருளும் பிள்ளையார், அருகிலுள்ள பதிகளில் உள்ள இறை வரின் திருக்கோயில்களுக்குச் சென்று வணங்கிச் சூழவரும் தொண் டர்கள் உடனே மீண்டும் வந்து சேர்ந்து, பாண்டியரும் மங்கையர்க்கரசி அம்மையாரும், வடித்த கூர்மையான வேலையுடைய குலச்சிறை யாரும் சேர்ந்து, ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பணிந்து போற்ற, சீகாழிச் செல்வரான ஞானசம்பந்தர், தலையில் பிறையைச் சூடிய இறைவரின் திருவடிகளைப் போற்றி, இனிதாக அமர்ந்திருக்கும் அந்நாள்களில், அருகு சூழ்ந்த பதிகள் என்பன திருப்பெருந்துறை முதலிய பதிகளாகலாம். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பெருகிவரும் நீர்ப்பெருக்கையுடைய காவிரி பாய்கின்ற நாடான சோழ நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்குத் திரு வுள்ளம் கொண்டு, மங்கையர்க்கரசியம்மையாரும் பாண்டிய மன்ன ரும் அமைச்சரும் கூட அவர்தம் திருவடிகளைப் பிரிய மாட்டாதவர் களாகி உடன்வருதற்கு மனம் துணியும் அந்நிலையினைப் பார்த்து, 'இங்கு நான் கூறுதற்கு இசைந்தீராயின் இந்நாட்டிலிருந்து இறைவரின் சிவநெறியைப் பாதுகாத்து வருவீராக' என்று உரைத்து,
குறிப்புரை:

பிரிவாற்றாமல் மிகவும் மனம் தளர்பவர்களைத் தளர்ச்சியடையாதவாறு தக்க இன்சொற்களைச் சொல்லித் தேற்றினர். அவர்களும் மேன்மையான அவர்தம் ஏவலை மறுக்க அஞ்சி, சோழ நாட்டிற்குப் பிரிந்து செல்வதற்கு ஒருப்பட்டு, அவரிடம் விடைபெற்றுக் கொள்ளும் வகையால், அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி, உலகுய்யத் தோன்றிய அப்பெருமகனாரைப் பிரியமாட்டாத நண்பு டன் வணங்கி நின்றனர். அப்பிள்ளையாரும் விடைபெற்றுக் கொண்டு, நஞ்சை உண்ட இறைவரை வணங்கிப் போற்றி அந்நாட்டை விட்டு நீங்கித் தம் நாட்டிற்குத் திரும்பவும் செல்பவராய்,
குறிப்புரை:

காவிரியாறு வளம் பெருக்குகின்ற சோழநாட்டில் புகுந்து, ஒப்பில்லாத மிகுந்த சிறப்புகளையுடைய தொண்டர் கூட்டத் துடன், பாம்பை அணியாய்ப் பூண்ட இறைவரின் திருக்கோயில்கள் தோறும் இருந்தருளும் அன்பர்களுடன், அப்பதியில் உள்ளவர்களும் எதிர்கொண்டு போற்றச் சென்று, பகைவரால் அழித்தற்கரிய மதிற் சிறப்புடைய 'திருக்களர்' என்ற பதியையும் போற்றிப் பின்பு, கழுத்தில் நஞ்சுடைய இறைவரின் 'பாதாளீச்சுரத்தினையும்' பாடி வணங்கி, முன்னே வழிபட்டுச் சென்ற மற்றப் பதிகளையும் வணங்கிப் போற்றி, முந்நூல் அணிந்த மார்பையுடைய ஞானசம்பந்தர் முள்ளிவாய்க் கரையைச் சேர்ந்தனர். திருக்களரில் இதுபொழுது பாடிய பதிகம் கிடைத்திலது. திருப்பாதாளீச்சுரத்தில் அருளியது, 'மின்னியல்' (தி. 1 ப. 108) எனத் தொடங்கும் வியாழக்குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். கோயில் தொறும் என்றது திருவெண்ணியூர், திருவிரும்பூளை முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். முள்ளிவாய்க்கரை என்பது இப்பொழுது ஓடம்போக்கியாறு என வழங்குகிறது. இது காவிரியின் கிளையே. இதனருகே உள்ள ஊர் திருக்கொள்ளம்பூதூராகும். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

மலையில் வளர்கின்ற சந்தனம், அகில், தேக்கு முதலிய மரங்களை உந்தி அலைத்துக் கொண்டு, மலைபோன்ற மலர்க்குவியல்களை வண்டுகள் ஒலிக்கச் சுமந்து பெருகி, ஆள்கள் இயங்காதபடி ஆறு பெருகிவருவதால், அத்துறையில் அணையும் ஓடத்தை, நீரில் நிலை கொண்டு செலுத்தும் ஓடக்கோல் நிலைக்க மாட்டாமையால், நீர்வாழ் மக்களான இனத்தவர் கரையில் நிறுத்தி விட்டுச் சென்றுவிடவே, கலைகள் பலவற்றானும் புகழப் பெறும் கவுணியர் தலைவரான பிள்ளையார் அதைப் பார்த்து அக்கரையில் எழுந்தருளி நின்றபோது,
குறிப்புரை:

தேவர்களின் தலைவரான இறைவர் வீற்றிருக் கும் 'திருக்கொள்ளம்பூதூர்' என்ற திருப்பதி எதிரில் தோன்ற, அதைப் பார்த்து, அங்குச் சென்று பணிவதற்கு உள்ளம் எண்ணியதால் ஓடம் செலுத்துபவர்கள் அங்கே இல்லாத நிலையில், மிகு விரைவாகச் சீகாழித் தலைவரான பிள்ளையார், ஓடத்தின் கட்டை அவிழ்த்து, நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானின் தொண்டர்களை அவ் வோடத்தில் ஏற்றித் தன் நாவின் வல்லமையையே கோலாகக் கொண்டு அவ்வோடத்தின் மீது நின்று, இறைவரைப் பணிந்து 'கொட்டமே' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாட, 'கொட்டமே' எனத் தொடங்கும் திருப்பதிகம் காந்தார பஞ்சமப் பண்ணிலமைந்ததாகும் (தி. 3 ப. 6).

வானவர் உய்யுமாறு நஞ்சை உண்டருளிய இறை வரின் திருவருளினால், அவ்வோடம் செல்லும்படி உந்தப்படுதலால், செம்பொன் போன்ற சடையுடைய இறைவரின் திருக்கொள்ளம் பூதூரினைச் சேரும் வண்ணம் அக்கரையில் சேர்ந்த பின்பு, நம்பரான சிவபெருமானை வணங்குதற்கு ஞானப்பால் உண்ட ஞானசம்பந்தர் நல்ல திருத்தொண்டர்களுடனே ஓடத்திலிருந்து கீழே இறங்கிச் சென்று, மணம் கமழ்கின்ற கொன்றை மலரை விரும்பிச் சூடிய சிவ பெருமானின் திருக்கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார். மேற்கூறிய பதிகத்தில் பாடல்தொறும் 'செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்குமாறு அருள் நம்பனே' என அருளப் பெறுதலின் ஓடம் கரையைச் சேருவதாயிற்று. 'ஓடம் செலச் செல்ல உந்துதலால்' என ஆசிரியர் அருளியதைக் காண்க. இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

நீண்ட நிலைகளைக் கொண்ட திருக்கோபுரத்தை வணங்கி வாயிலுள் புகுந்து, ஒப்பில்லாத தொண்டர்கள் சூழ நெருங் கிச் சென்று, ஒளியுடைய திருக்கோயிலை வலங்கொண்டு, பிறைச் சந்திரனைச் சூடிய சடையையுடைய இறைவரின் திருமுன்பு வணங்கி நின்று, 'அனைத்துயிர்களையும் தாங்குபவரே! ஆற்றிடையே ஓடம் செலுத்தி வர அருள் சுரந்த தலைவரே! பாம்புகளை அணியாய் அணிந் தவரே! யானையின் தோலைப் போர்த்திக் கொண்ட முக்கண்களை யுடைய தூயவரே!' எனப் பணிந்து போற்றினார். தாணு - தாங்குபவர். 'சடையவனே தளர்ந்தேன் எம்பி ரான் என்னைத் தாங்கிக் கொள்ளே' (தி. 8 நீத்தல். 1) எனவரும் திருவாசகத் திருவாக்கும் காண்க.

இங்ஙனம் இறைவரைப் போற்றி, வெளியில் வந்து, அப்பதியில் தங்கியிருந்த நாள்களில், பாண்டியனின் முன்னிலையில், புன்மையான சமயத்தவரான சமணர்களுடன் மேற்கொண்ட பெரிய வாதத்தில், தீயில் வேகாமல் இருந்து வெற்றி தந்த திருப்பதிகத்தின் தலைவரான திருநள்ளாற்றின் இறைவரை வணங்க வேண்டி, வழியில் முன்சென்று வணங்கிய பதிகளையும் திரும்பவும் வணங்கி, அன்பர் கூட்டம் சூழ்ந்துவரச் சென்று, நாற்றிசையும் போற்ற வரும் திரு நள்ளாற்றைச் சார்ந்து, நாடுடை நாயகரின் கோயிலை ஞானசம்பந்தர் அடைந்தார். முன்னணைந்த பதிகளாவன: திருக்குடவாயில், திருவாஞ்சியம், திருவம்பர், திருப்புகலூர் முதலாயினவாகலாம். நாடுடை நாயகர் - இறைவரின் பெயர் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பெருகவரும் தொண்டர்கள் அருகில் சூழ்ந்து வர, அங்கு முத்துச் சிவிகையினின்றும் இழிந்தருளிச் சென்று, பெருமை உடைய வாயிலை வணங்கி உள்ளே புகுந்து, பிறைச் சந்திரனைச் சூடிய இறைவர் நிலைபெற்று வீற்றிருக்கும் கோயிலின் உள்பக்கத்தேயுள்ள திருச்சுற்றுக்களில் வலமாக வந்து, மகிழ்வுடன் உள்ளே புகுந்து, வள்ளலாரான இறைவரைப் 'பாடகமெல்லடி' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி நின்று, கண்களினின்றும் நீர் அருவி பெருகப் போற்றினார். 'பாடகமெல்லடி' எனத் தொடங்கும் பதிகம் நட்ட பாடைப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 1 ப. 6). வினாவுரையாக வரும் இப்பதிகப் பாடல் தொறும் வரும் கருத்தை உளங்கொண்டே வரும் பாடலை அருளுகின்றார் சேக்கிழார்.

பாண்டிய மன்னன் முன்பு, சமணர் செய்த வாதில் தீயில் இட்ட ஏடு பச்சையாக இருச்கச் செய்தும், என் மனத்தின்கண் துணையாகியும், ஆலவாயிலில் வெளிப்பட வீற்றிருந்த தன்மைதான் என்ன அதிசயம்! எந்தையே! என நயம் பெறப் போற்றி, நலம் குலாவிப் பன்முறையும் எடுத்துக் கூறும் தமிழ்த் தொடையான திருப் பதிகத்தைப் பாடிப் போற்றி, வெளியே வந்து, அடிமைப் பண்பினால் இனிமை தருகின்ற தொண்டர்களுடன் கூடி அத்திருப்பதியில் தங்கி யருளி, நிலையான புகழையுடைய திருப்பதிகள் பலவற்றையும் வணங்குதற்காகச் சம்பந்தர் திருநள்ளாற்றினை வணங்கி விடை பெற்றுச் செல்வார், இதுபொழுது அருளப் பெற்ற பதிகம் 'ஏடுமலி' (தி. 2 ப. 33) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

சிறப்புக்கள் பொருந்திய 'திருத்தெளிச்சேரி' யைச் சேர்ந்து இறைவரைப் போற்றி மேற்செல்லுபோது, நற்சார்பு இல்லாத புத்தர்கள் தங்கும் 'போதிமங்கை' என்ற ஊரின் அணித்தாக வருதலும், அச்செய்தியை அறிந்த சைவர் எல்லாரும் கடல் கிளர்ந்து எழுந்தது போல் தாரை சங்கு முதலான அளவற்ற பல இயங்களையும் ஒலித்து, உலகம் விளங்கும்படி எக்காளம் திருச்சின்னம் ஆகிய எல்லாவற்றிலும் பரசமய கோளரி வந்தார் என்று சொல்லி ஊத, கோளரி - சிங்கம். பரசமயம் - பிறசமயங்கள்; பிறசம யங்களாகிய யானைகளைச் சிங்கம் என நின்று வெற்றிகொள்பவர். யானை வடிவாற் பெரியதாயினும் ஊக்க மிகுதியிலாதது : ஆதலின் சிங்கம் அதனை வெல்லும் என்பதாம். திருத்தெளிச்சேரியில் அருளிய பதிகம் 'பூவலர்ந்தன' (தி. 2 ப. 3) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

இதனைப் புல்லிய அறிவுடைய சாக்கியர்களுள் அறிந்தவர்கள் ஒன்று சேர்ந்து, சீகாழியினரின் காவலரான ஞானசம் பந்தர் ஊரின் எல்லையுள் புகுந்தபோது, திருத்தொண்டர்கள் எடுத்த சிவ ஒலிகளின் முழுக்கத்தாலும், அவர்களின் எதிரே முன் அணியில் திரண்டு எழுந்து ஒலிக்கும் திருச்சின்னம் எக்காளம் என்ற இவற்றின் ஒலிகளாலும், தம் உள்ளத்துள் கொண்ட பொறாமையால், மயக்கம் அடைந்து, தம் கல்வியிலே மேம்பட்ட புத்தநந்தி முதலானவர்களுக்குச் சினத்துடன் கூறினர். இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

மற்று அவர்களின் கொடிய சொற்களும், அதுபொழுது ஞானசம்பந்தர் முன்வரும் சின்னங்களின் பெருகிய ஒலியும், நிலைபெற்ற தொண்டர்களின் மகிழ்வொலியும் கூடி ஒருசேர வந்து தம் காதினுள் காய்ச்சி அடித்த வேல்நுனிபோல் புகுந்த போது, சினம் மிகுந்த புத்த நந்தி மேலும் சினந்து, தம் கூட்டம் சூழ்ந்துவரத் திருக்கூட்டத்தினிடையேபோய் 'வெற்றிக்கறிகுறியாக முழக்கப்படும் சின்னங்கள் எம்மை வாதில் வென்ற பின்னன்றோ பிடித்தல் வேண் டும்!' எனக் கடுமையாகச் சினந்து சொன்னான். அவர்கள் - புத்த நந்தியிடம் சொன்ன சாக்கியர்கள். புடைத்த - காய்ச்சி அடித்த, நாராசம் - அம்பின் நுனி, 'நெருப்பு நுனை யுறீஇக் கருநாராசம் செவிசெறித்தாங்கு' எனவரும் பெருங்கதையும் காண்க.

புத்தர் கூட்டம் தன்னைச் சூழ்ந்து வரப் புத்த நந்தி ஒப்பற்ற ஞானமுடைய தூய பிள்ளையாரின் திருமுன்பு, ஊதப்பட்ட உண்மைத்திறம் உடைய திருச்சின்னங்களை விலக்கிய போது, சினத்துடன் எழுந்த திருத்தொண்டர்கள், அவனது செய்கையை வெறுத்துப் பார்த்து இவ்வாறு செய்யும் கொடிய செயலுக்கு இவர்களை ஒறுக்காது பொறுத்துக் கொண்டு போயின், தங்கள் நிலையையே மேலும் மேற்கொண்டொழுகுவர் என எண்ணி, முத்துக்கள் நிரல்படப் பதித்த சிவிகையில் அமர்ந்துள்ள முடிமணியான பிள்ளையாரிடம் வந்து அவரை முறையாய்த் தொழுது, நேர்ந்த செயலைக் கூறி நின்றனர்.
குறிப்புரை:

'வரும் இடத்தில் இது நேர்தல் நமக்கு அழகியதே! மாறுபாடு கொண்ட இவர்களது பொருளுண்மை மறுக்க இயலாதபடி வாதிடும் இடத்தில், புத்த நந்தியின் பொய் மேற்கொண்டு வரும் கொள்கையின் நிலையை உள்ளபடி காட்டுவோம்' என்று சீகாழித் தலைவர் உரைக்க, அரிய திருமுறைகளாகிய திருப்பதிகங்களை எழு தும் வழக்கத்தையுடைய சம்பந்த சரணாலயர் என்பார், ஆளுடைய பிள்ளையாரின் திருவாக்கின் ஆணையால், 'புத்த நந்தியின் தலை, இடிவிழ உருண்டு வீழக் கடவது' எனத் தாங்கற்கரிய சொல்லை முன்கூறிச் செல்ல விட்டார். பிள்ளையாரின் திருப்பதிகங்களை எழுதிவரும் அன்பர் சம்பந்த சரணாலயர் என்றும், அவர் பிள்ளையாரின் அம்மான் முறையினர் என்றும் கூறுவர். அவர் தாம் தொகுத்திருக்கும் சுவடித் திரளில் கயிறு சார்த்திப் பார்த்ததில், 'புத்தர் சமண் கழுக்கையர் பொய் கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின, வித்தக நீறணிவார் வினைப் பகைக்கு, அத்திர மாவன அஞ்செழுத்துமே' (தி. 3 ப. 22 பா. 10) எனவரும் திருப்பாட்டுவர, அதனையே அத்திரமாகக் கூற, அப் புத்தன் தலை வீழ்ந்தது.

விடைக்கொடியையுயர்த்திய சிவபெருமானின் சைவ நெறியின் ஆணையை உலகெங்கும் நடத்த, எதிரே வந்து அடையும் இடையூறுகளை வேர் அறக் களைந்து நீக்கும் ஒப்பில்லாத வலிமையுடைய மந்திரமான இடிபோன்ற உண்மைத் திருவாக்கான சமபந்தரின் திருவாக்கு, வேறுபட்ட மொழிகளால் செய்யும் போரை மேற்கொண்டு வந்த புத்த நந்தியின் உடம்பையும் தலையையும் வெவ்வேறு கூறுபடச் சிதைவு படுத்தியது. அதுபொழுது புத்தர்களின் கூட்டம் விரைந்து அஞ்சி ஓடி நடுங்கியது.
குறிப்புரை:

அப் புத்தர்களின் நிலையையும், வாக்கால் போர் செய்ய வந்த புத்த நந்தியின் தலையும் உடலும் வேறாய் அறுபட்டு விழுமாறு அம்பு போன்ற வாக்கினால் தொண்டர் செய்த செயலையும் கண்ட சிவனடியார்கள் எல்லாம், அவ்வெற்றியை அளிக்கும் ஞான சம்பந்தரிடத்துச் சென்று கூறினர், 'எதிர்ப்பட்ட இடையூறு நீங்கும்படி பொருந்திய இறைவரின் அருள் ஆணை அதுவாகும்; ஆதலால் சிவ பெருமானை வணங்கி 'அரகர' என்று எல்லாரும் சிவன் நாமத்தை ஓதி முழக்கம் செய்க!' என்று பிள்ளையார் உரைத்தருள, அங்ஙனமே அனைவரும் 'அரகர' என்று முழங்கினர். அப்பேரொலியானது வானத்தில் அப்பொழுதே சென்று பொருந்தியது.
குறிப்புரை:

அச்சம் கொண்டு ஓடிய அப்புத்தர் எல்லாம் வியப்படைந்து, மீண்டும் தம்முள் ஒன்று கூடி, 'அந்நிகழ்ச்சிதான் வஞ்சனையால் உண்டானதோ அல்லது அவர்களது சைவ சமயத்தின் உண்மைத் திறத்தால் விளைந்ததோ' என்று மயக்கம் கொண்டு, மனத்தில் அதை எண்ணிக் 'குறைவில்லாத மந்திர வாதத்தாலன்றி எம்முடன் எதிர்த்து உண்மைப் பொருள் இது என்று பொருள் உண்மை பேசி வாதம் செய்வதற்கு இசைவீராக!' என்று தம் சமய நிலையில் மிக்க வலிமையுடைய சாரி புத்தன் என்பவனையே தலை வனாகக் கொண்டு பின்னும் வந்து சார்ந்தனர்.
குறிப்புரை:

அவர்கள் கூறிய அதனைச் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தர் திருவுள்ளத்தில் 'இது அழகிது!' என்று கொண்டு, மிக்க மகிழ்ச்சியோடும் விரைவாகச் சென்று, வெண்மை யான முத்துச் சிவிகையினின்று இறங்கி, வேறு ஒரு சத்திரத்தின் மண்டபத்தில் ஏறி, பெருகிய சைவர்களுடனே அமர்ந்து 'முற்கூறிய வண்ணம் எதிர்த்துப் பொருள் பேசச் சார்கின்ற புத்தர்களை அழை யுங்கள்!' என்று சொல்ல, அவரது திருமுன்பு நின்ற தொண்டர்கள், சீகா ழித் தலைவரின் ஆணையை ஏற்று, அவ்வாறே புத்தரை அழைக்கச் சென்றனர்.
குறிப்புரை:

ஞானசம்பந்தரின் ஆணையின்வண்ணம் சென்ற அடியவர்கள், புத்தர் கூட்டத்தை அடைந்து, 'நீங்கள் கூறி வருகின்ற பொருளின் உண்மை நிலையைத் தெரிவிக்குமாறு, எங்களின் வெற்றி பொருந்திய இளங்களிறும் சண்பை நகரத்தவரும் மறைத்தலைவரும் முத்தமிழ் மன்னருமான ஞானசம்பந்தப் பெருமான் மகிழ்ந்து அழைக் கின்றார்; நீங்கள் வாருங்கள்!' எனக் கூறவும், அதைக்கேட்டு, நன்னெ றியை இதுவரை சாராத புத்தர்களுடனே கூடிச் சாரி புத்தன் சத்திர மண்டபத்தின் முன்னே வந்தான். தேரர் - புத்தர்.

அங்குச் சென்ற சாரிபுத்தன், மண்டபத்தில் புத்தர்களுடன் கூடிப் பிள்ளையார் அருகில் நெருங்கி நின்ற அமை யத்து, எங்கள் ஆணை செலுத்துகின்ற திருச்சின்னத்தைத் தடுத்த புத்த நந்தியின் பெரிய தலையை அழிவு செய்த ஒப்பில்லாத அன்பரான சம்பந்த சரணாலயர், மேன்மேலும் பெருகும் புகழையுடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளைப் போற்றி, அவரது அருளைப் பெற்று, வாதத்தில் புகுவாராய்ச் சாரி புத்தனைப் பார்த்து, 'உங்கள் தலைவனான கடவுளையும் அவன் கூறும் பொருளான வீடுபேற்றையும் இன்ன தன்மைய எனப் பேசுவாயாக!' என்று சொல்ல, பொருந்திய சமயவாதத்தை மேற்கொண்டு அச் சாரி புத்தன் சொல்கின்றவனாய்,
குறிப்புரை:

எல்லாக் கற்பங்களிலும் அளவற்ற பிறப்பு வகைகளில் பிறந்தும் இறந்தும் அந்நிலையினின்றும் மாறி வீடு பெறுகின்ற கணபங்க இயல்பு கூறம் புத்த சமயத்தில், அழகு உடைய தானம், தவம், பண்பு, மிகுந்த யோகம் என்னும் இவற்றைத் தான் பொருந்தும்படி செய்யவே, அதனால் உண்டாகும் நீங்குதல் இல்லாத நிலையில், சொன்ன ஞானத்தால், அழியாத பேரின்பம் தரும் கந்தவீடு பெற்றவன். பலரும் பிறவித் துன்பத்தினின்றும் நீங்கி உய்யும் பொருட் டாக அறங்கள் பலவற்றை முன்னே சொன்ன அருள் உடையவன், அவனே, நாங்கள் தொழும் கடவுளாவான்' எனச் சொன்னான். கற்பங்கள் - 432 கோடி ஆண்டுகள் கொண்ட கால எல்லை. பிறப்புவகை - வினைக்கீடாக வரும் மக்கள், தேவ, பிரம, நாக, விலங்கு, பேய் எனவரும் அறுவகைப் பிறப்புக்கள். கணபங்கம் - கணந்தொறும் அழிவது. ஈண்டுக் கணம் என்பது ஷணம் என்பதன் திரிபாகும். இதற்குரிய கால அளவாவது நூறு தாமரை இதழ்களை அடுக்கி, ஊசியினால் குத்த, அவற்றுள் எட்டு இதழ்கள் அறும் காலமாம். இவ்வியல்பைக் கூறுவது புத்த சமயமாகும். புத்தர் இருபத்து நால்வர் என்றும், இவர்களுள் இறுதியாக நின்ற கௌதம புத்தனே இங்குக் கூறப்படும் ஆதி புத்தன் என்றும் கூறுவர். இப்புத்தனைப் பற்றிய வரலாறு:- இவன் தன் தாயின் வலது இடையில் பிறந்து, பின் ஆறு நாள்களில் அத் தாயை உயிர்துறக்கச் செய்தவன். உயிர்கள் உய்தற்கென எண்ணற்ற கற்பங்களில், எண்ணற்ற பிறப்புக்களில் பிறந்தும் இறந்தும் உயிர்கட்கு உறுதி செய்து, பின் அந்நிலை மாறி, வீடு பெற்றவன். (புத்த சரித்திரக் குறிப்பு).

இவ்வாறு கூறிய தன் தலைவன் தன்மை பற்றி விடை சொன்ன சாரி புத்தன் முன்னம், வாதத்தை ஏற்று நின்ற பெரிய தவத்தையும், பெருந்தன்மையையும் உடைய அன்பரும், 'உங்கள் தலைவன் பெற்ற பேறு என உங்கள் சமயம் உறுதிப்படக் கூறும் வீடு பேற்றின் இயல்புதான் யாது?' என வினவினார். நின்ற உரு, வேதனை, குறிப்பு, செய்கை, நேரே நின்ற ஞானம் என நிகழும் ஐந்தும் கூடிய பஞ்ச கந்தத்தின் அழிவே முத்தியாவது எனத் திரிபிடகம் என்ற புத்த சமய நூலில் அறிவுமிக்க சாரி புத்தன் கூறினான். பஞ்ச கந்தங்கள் : 1. உரு - காணப்படும் பெயரின் கருக் கெல்லாம் காரணமாகிய பொருளை யுணர்வது அது. ஐவகையான் வரும் உணர்வுகள். அவை: நிலம், நீர், தீ, வளி ஆகிய நான்கும் அவற் றிற்குக் காரணமான வன்மை, சுவை, நிறம், மணம் எனும் நான்கும் ஆக எண்வகைப் பொருள்வழி வரும் உணர்வு. 2. வேதனை மூன்று: அவை: சுக அறிவு, துக்க அறிவு, சுகதுக்க அறிவு என்பன. 3. குறிப்பு ஆறு: வாய், கண், மூக்கு, செவி, மனம் என்பனவற்றான் வரும் பொதுவும் சிறப்புமாகிய உணர்வு. 4. பாவனை: மனம், மொழி, மெய்களால் வரும் பக்குவம். இதற்கு ஏதுவாக அமைவன. தீக்குணம் பத்தும் நற்குணம் பத்துமாம். தீக்குணங்களாவன: பொய்சொல்லல், கோட்சொல்லல், சினந்து சொல்லல், பயனில சொல்லல் எனச் சொல் லின் வழிவரும் குணம் நான்கு; களவுக்குப் போதல், வறிதே தொழில் செய்தல், கொலை செய்தல் என உடம்பின் வழிவரும் குணம் மூன்று ; கொலை நினைத்தல், காமப்பற்று, ஆசை என மனத்தின் வழிவரும் குணம் மூன்று; ஆகப் பத்து. நற்குணங்களாவன: மெய்யுரை, நல்வார்த்தை, இனியவை கூறல், பயன்படுசொல் எனச் சொல் குணம் நான்கு; பள்ளி வலம் வரல், தவம் புரிதல், தானஞ்செய்தல், என உடற்குணம் மூன்று; அருள்நினைவு, ஆசையறுத்தல், தவப்பற்று என மனத்தின் குணம் மூன்று; ஆகப் பத்து செய்கை மூன்று ; இவை மனம் மொழி மெய்களால் வருவன. விஞ்ஞானம் 5. அறிவுடையாரிடத்து நின்று அதன் வழிப்படும் உணர்வு. அவை சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், சித்தம் என்பன.

அப்போது அந்தச் சாரி புத்தன் உரைத்ததைக் கேட்ட அன்பரான சம்பந்த சரணாலயர், அவன் கூறிய மொழியைத் தாம் எடுத்து மொழிந்து, அவனைப் பார்த்து, அவன் (புத்தன்) முன் தங்கியிருந்த ஞானம் முதலான ஐந்து கந்தங்களும் தாம் ஒருங்கே அழிந்து கெட்டவனானால், அத்தலைவன்தானே அங்கு வீற்றிருக்கின் றான் என்று கொண்டு, அவன் கொள்ளும்படி எல்லாவற்றையும் செய்வதற்காக, விகாரம் என்னும் கோயில் எடுப்பித்து, அதனுள் அவனது பெரிய வடிவத்தையும் வைத்து, விழாச்செய்யும் பூசையை ஏற்றுக்கொள்பவர் யார் கூறுக? என்று வினவ, சாரிபுத்தன் சொல்லத் தொடங்கினானாக,
குறிப்புரை:

இருவினை காரணமாக வந்த ஐவகை உணர்வு கொண்ட உடம்பு கெட, எம் தலைவன் முத்தியில் சேர்ந்திருக்கின்றான், அதனால் கோயிலும் விழாவும் எடுப்பது பொருந்தும் என்று சாரி புத்தன் உரைத்திட, அவன் அங்ஙனம் முத்தியில் சேர்ந்திருக்கும் உன் தலைவனுக்குப் பொருள்களை உணரும் கருவிகளான கண் முதலாய கருவிகள் இல்லாது ஒழிந்ததால், அவனுக்கு உணர்வு தோன்றல் இல்லையாகும் என்று சம்பந்த சரணாலயர் மறுத்துச் சொன்னார் 'முற்பட்ட உணர்வு கெட்டு உறங்குபவனை கழித்துத் தூற்றி அவன் உடலின் மீது மிதித்தாடிய ஒருவனுக்கு, அதனால் தீவினைப் பயன் வருவதைப் போல், ஐந்து கந்தமும் கெட்டு முத்தியடைந்த எம் முதல் வனை வணங்கியவர்க்கும் அந்த நல்வினைப் பயன் வரும் அன்றோ!' எனச் சாரிபுத்தன் மறுத்துச் சொன்னான். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

சாரிபுத்தனின் இம்மறு மொழியைக் கேட்ட அன்பரான சம்பந்த சரணாலயரும், நீ தொடர்ந்து வழிபாட்டை ஏற்றுக் கொள்ளும் உன் தலைவனுக்கு, உணர்ந்து கொள்வதற்குரிய கருவிகள் இல்லாமையால் அவற்றில் விருப்பும் வெறுப்பும் இல்லை. அங்ஙனமா யின் அவ்வாறான வழிபாட்டை ஏற்றுக்கொள்வதும் இல்லை!' என்று சொன்னார். தன் முன்புள்ள பொருள்களில் விருப்பும் வெறுப்பும் இன்றி நல்ல உறக்கத்தை உடைய ஒருவனைச் சினந்து கொன்றால், அங்ஙனம் கொல்லப்பட்டவனுக்கு உயிர் போகும். கொன்றவனுக்கு கொலைப் பழியும் வந்து சேரும் அன்றோ? இவ்வாறே எம் இறைவ னுக்கும் எம் வழிபாடு சென்று பொருந்தும் என்று சாரி புத்தன் உரைத்தான். முறுகு துயில் - மிகுதியான தூக்கம்.

இங்ஙனம் வழிபாட்டில் பயன் தருதல் எம் தலைவன்பாலும் பொருந்தும் என்று நீ இங்கு மேற்கோளாக எடுத்துக் காட்டிய, உடன்பாடும் மறுப்பும் இல்லாது உறங்குபவனின் தன்மை போல், உடம்பில் உள்ள கரணங்களும் உயிரும் ஈண்டு இச்செயலுக்கு வழிபாடு கொண்டு பயன்படும் நிலைக்கு உன் தலைவனுக்கு இருக்க வேண்டும் அன்றோ! அங்ஙனம் உடலும் கரணமும் உயிரும் வழிபாடு கொள்ளும் நிலையில் உள்ளவன் ஆனபோது, உன்னால் முன்பு கூறப்பட்ட ஐந்து கந்தத்தின் விளைவும் இல்லாது போகவே, உம் தலைவனான அவன் முத்தியில் சேர்ந்தவன் அல்லன் ஆகின்றான். அங்ஙனம் அக்கந்தத்தின் அறிவும் கெடுமே ஆனால் அந்த முத்தியுடன் இன்பம் சேராது என்று சம்பந்த சரணாலயர் மொழிந்தார்.
குறிப்புரை:

அம்மொழியைக் கேட்டு அதற்கு எதிராக ஒன்றும் கூறுவதற்கின்றி, அம் முத்தியில் தலைவன் சேர்ந்துள்ளான் எனச் சொல்லப்பட்டதும் பாழாய் முடிந்த சிறுமையுடன், வருத்தத்தோடு சாரி புத்தன் நின்றான். அத்தகையவனை மீண்டும் பார்த்து, ஞானம் என்ற கடலில் கடைந்தெடுத்த அமுதம் போன்ற ஆளுடைய பிள்ளையாரின் அன்பரான சம்பந்த சரணாலயர், கந்தங்கள் அவிந்து பொய்யாய் முடிந்தபின் முத்தியில் சேர்பவனான உன் தலைவன் அதற்கு முன்பே, எல்லாப் பொருள்களையும் உணர்ந்து அறம் உரைத்துச் சென்றான் என்று கூறினாய்! அவன் அவ்வாறு எல்லாவற்றையும் எங்ஙனம் முழுதும் உணர்ந்து கொண்டவன் ஆனான்? எனவே அனைத்தையும் உணர்ந்து கொண்டான் என்பதும் இல்லையாகின்றது! இதற்கு மறுமொழி கூறுவாயாயின் அதனை யாம் ஏற்றுக் கொள்வோம் என்று சொன்னார். எவையும் கணம் தொறும் அழியும் என்று கொண்ட உம் தலைவனுக்கு ஒன்றுணர ஒன்றழிய இவ்வாறே முழுதும் அழியுமே யன்றி, எல்லாப் பொருள்களையும் முற்ற உணர்ந்தவன் என்றல் எங்ஙனம்? என்பது வினா.

உணர்வு என்பது 'பொது', 'சிறப்பு' என இரு வகைப்படும். அவற்றுள் பொதுவுணர்வு, ஒரு காட்டில் உள்ள மரங் களை மரம் எனப் பொதுவாய் உணர்வது. மற்ற சிறப்பு உணர்வாவது, அக்காட்டில் உள்ள மரங்களை இன்னவகை என்று பிரித்து உணர்வது. இங்ஙனமே எல்லாப் பொருள்களின் உணர்வும் ஆகும். கொண்டு வரும் விறகுகளைக் கூட்டித் தீயில் மொத்தமாக இட்டாலும், அங்ஙன மில்லாது வெவ்வேறாக வெட்டித் தனித்தனியே தீயில் இட்டாலும் வெப்பமுடைய தீயின் கொழுந்து அதைச்சுட்டு நாசமாக்க வல்லவாறு போல், தொகையாய்க் கூட்டியும் தனித்தனியே விரித்தும் பழைய வனான எம் இறைவன் தெரிவிப்பான் எனச் சாரி புத்தன் கூறினான். மரக்காட்டினைப் பொதுவும் சிறப்புமாக உணர்தல் போல, உலகியலுண்மையையும் பொதுவும் சிறப்புமாக உணரவும் உரைக்கவும் வல்லானாய எம் முதல்வன், முத்தியடையும் முன்னும் பின்னுமாக அவற்றை உரைத்துச் சொன்னான். அவ்விருவகை உணர் வும் ஒன்றேயாதல், விறகுக் கட்டைச் சேர்த்து எரிப்பினும், தனித்து எரிப் பினும் ஒன்றேயாதல் போலவாம் என உவமைப் பொருட்படுத் துக் கூறினான் புத்தன்.

இங்ஙனம் எடுத்துக்காட்டி விடை கூறிய சாரி புத்தன் எதிரில், வாதம் கூறும் அன்பர், 'நீ, தீயின் செயலுக்குக் காட்டாக உணர்வின் செயலைக் கூறினாய். ஆனால் பொருள்களை அடுத்து நின்ற உணர்வு, வடிவுடையதன்று. அந்த உணர்வுக்குக் காட்டாகக் கூறிய தீயோ வடிவுடையது. அதையும் நீ அறிவாயாக! அன்றியும் உம் இறைவன், நிகழ்காலமன்றி மற்ற இறந்த காலமும் எதிர்காலமும் அறிபவனாயின், அவன் அவ்வாறு அறியும் முக்கால உணர்வுக்கு நீ எடுத்துக் காட்டிய பொருளான எரிக்குந் தீ காட்டாகாது. காரணம் அது நிகழ்காலத்தில் இட்டபோது சுடுவதே அல்லாது, மற்ற ஏனை இரு காலங்களிலும் சுடாதாகும்' என்றார்.
குறிப்புரை:

ஆதலால், நீ காட்டிய பொருள் பொருத்தமா னதாக இல்லாததால் உம் தலைவன் எல்லாப் பொருள்களையும் முழுவதும் ஒருங்கே உணர்ந்த செய்தியும், நீ கூறிய முத்தி இலக்க ணமும் பாழாய் முடிந்தவாறுபோல், இதுவும் பாழாய் முடிந்தது. இத்தகைய நிரம்பாத அறிவால் அவன் உரைத்த உம் பிடக நூலும் குற்றமுடையதாகும் என்று அந்தச் சாரி புத்தனுக்கு ஏற்கும் வகையில் உண்மையை உணர்த்தச் சாரி புத்தன் அதன்மேல் வாதிடுவதற்கு ஒன்றுமின்றித் தோல்வியுற்றான். அன்பரான சம்பந்த சரணாலயரும், மாறுபட்ட அவனை இங்ஙனம் வென்று அருளி, சீகாழி மன்னரான பிள்ளை யாரின் திருவடித் தாமரைகளை வணங்கினார். தங்கள் சமயத் தன்மை அழிந்த புத்தர்களும் ஞானசம்பந்தரின் திருவடிகளில் பணிந்து விழுந்தனர்.
குறிப்புரை:

அறிவையே பற்றுக்கோடாகக் கொண்டு, அப் புத்தர்கள் கூறிய பொருள் உண்மைகள் உண்மை அல்லவாகி முடியும் இயல்பைச் சம்பந்த சரணாலயர் பொருத்தமாக எடுத்துச் சொல்ல, மந்தமான அறிவுடைய அப் புத்தர்களைப் பார்த்துச் 'சைவத் திறமே அல்லாது மற்றொன்றும் இல்லை' என்று அழிவற்ற சிறப்புடைய மறைகளையும் ஆகமங்களையும் அவற்றின் வழிவரும் மற்ற அள வற்ற கலைப் பொருள்களையும் உணர்ந்த ஞானசம்பந்தர் அருளிச் செய்ய, அவ்வுண்மை உணர்ந்த புத்தர்கள், சீகாழியில் தோன்றிய அந்தணராய பிள்ளையாரின் செம்மையான திருவடிகளைச் சென்று வணங்கினர்.
குறிப்புரை:

அன்று அப்புத்தர்களுக்குச் சீகாழித் தலைவரான குருமூர்த்திகளின் அருட்பார்வை பட்டதால், அறிவை மறைக்கும் தன்மையுடைய ஆணவம் தம்மை விட்டு நீங்கிய நிலையில், அப் புத்தர்கள், ஞானசம்பந்தரின் திருமுன்பு விழுந்து வணங்கி எழுந்து அவரால் திருநீறு தரப்பெற்று, அணிந்து சைவர் ஆயினர். தேவர்களின் மலர் மழை எங்கும் பொழிந்தது. 'நிற்பனவும் நடப்பனவுமான எல்லா உயிர் வகைகளும் சைவமே யாகும்' என்ற நிலைமையை அப்புத்தர் கள் அறிந்து உய்யுமாறு அருளிச் செய்து, சீகாழித் தலைவரான ஞான சம்பந்தர் சிவபெருமான் எழுந்தருளிய மற்றப் பதிகளுக்கும் சென்று வணங்கும் பொருட்டுத் திருக்கடவூரின் அருகே வந்து சேர்ந்தார். 'நிற்பனவும் நடப்பனவும் சைவமே' என்றது, உயிர்த் தொகை யனைத்தும் சிவபெருமானோடு சம்பந்தமுடையவாய், அப்பெருமானின் ஐந்தொழில்களில் ஆட்பட்டு ஒரு கால எல்லையில் அழியத் தக்கனவாய் அமைந்தமையைக் காட்டுகிறது.

அத்திருக்கடவூரில், தொண்டர்கள் தம்மை வரவேற்க, ஞானசம்பந்தர் திருக்கோயிலினுள்ளே எழுந்தருளி, உயிரைப் பிரிக்கவரும் இயமனை உதைத்த இறைவரின் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கிப் போற்றி, விரும்பி அங்குத் தங்யிருக்கும் நாள்களில், 'திருநாவுக்கரசு நாயனார் எந்தத் திருநகரில் எழுந்தருளியுள்ளார்?' என்று அடியவர்களைக் கேட்டருள.
குறிப்புரை:

அப்பொழுது அவ்வடியவர்களும் ஞானசம்பந் தரின் திருவடிகளை வணங்கிப்போற்றி நின்று, ஆண்ட அரசு, பெரு கும் நீர் வளம் உடைய காவிரி சூழ்ந்த திருப்பூந்துருத்தியில் எழுந் தருளி, இறைவரைப் போற்றி, அங்குத் தங்கித் திருத்தொண்டு செய்யும் மகிழ்ச்சியால் எங்கும் தம்பண்பு நிலவுமாறு இருந்தருளும் பாங்கை யெல்லாம் எடுத்து மொழிந்தனர். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

அவ்வாறு கூற, நாவுக்கரசரைக் கண்டு மகிழ வேண்டும் என்ற ஒப்பில்லாத அரிய பெருவிருப்பம் மிக்கு, ஒளிமிகும் கருமை பொருந்திய கழுத்தையுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி, அவரது அருள் விடையைப் பெற்றுச் சொலற்கரிய புகழு டைய சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர் செல்கின்றாராகி,
குறிப்புரை:

மலர்கள் மலரும் பெரிய சோலைகள் நிலவ, நீர் பரந்து ஓடுகின்ற காவிரி ஆற்றின் தென்கரை வழியாய்ச் சென்று, நெற் றிக் கண்ணையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருப்பதிகளை அடைந்து, இனிதாய் விரும்பி வணங்கிச் சென்று, விருப்பம் பொருந் திய உண்மை வாய்ந்த அடியவர்களுடன் நாவுக்கரசரிடம் ஞானசம் பந்தப் பெருமான் நண்ணுவாராகி, திருக்கடவூருக்கும் திருப்பூந்துருத்திக்கும் இடைப்பட்ட திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்றுள்ளார் பிள்ளையார். அப்பதிகள் இவை என அறிதற்கு இயன்றிலது.

மறையவர்களின் மணிமுடியாய் விளங்கும் ஞானசம்பந்தர் திருப்பூந்துருத்திக்கு அண்மையாய் வந்தருளுகின்ற பெருமொழியைக் கேட்ட, நாவரசுப் பெருந்தகையாரும் 'நம்மை ஆளாகவுடைய பிள்ளையாரை நாம் எதிர் கொண்டு வணங்குவது முற் பிறவியில் செய்த நல்வினையின் பயனாகப் பெறக் கூடியதாகும்' என எண்ணி அகமும் முகமும் மலர,
குறிப்புரை:

'எதிர் கொண்டு வணங்குவன்' என்று, தம் உள் ளத்தில் மேன்மேலும் எழும் பெருவிருப்பத்தால், கங்கை சூடிய சடை யாரின் நல்ல திருவடிகளைத் தொழுது, அத்திருப்பதியினின்றும் புறப் பட்டுச் சென்று, பிறசமயங்களின் தீங்கை அழித்த பிள்ளையார் இடத்து, முதிரும் பெருந்தவத்தவர்களான அடியவர்களின் முன் வந்து சேர்ந்தார். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

திருச்சின்னம் பிள்ளையாரின் புகழ்களை எடுத்து முழங்கக் கேட்டவர்களான நாற்றிசைகளிலிருந்தும் வந்த அன்பர்கள், பெருகும் ஆசையால் ஞானசம்பந்தரைச் சூழ்ந்து வரும் நெருக்கத்தில், ஞானசம்பந்தர் காணாத வகையில் நிலத்தில் விழுந்து பணிந்து, உள்ளத்தை உருக்கி எழும் மனம் ஓங்கத் திருத்தொண்டர் கூட்டத் துடன் சேர்ந்தார். இப்பாடல் சில பதிப்புகளில் இல்லை.

அங்ஙனம் தொண்டர் கூட்டத்துள் வந்து சேர்ந்த திருநாவுக்கரசர், கொடைத்தன்மை வாய்ந்த சீகாழிப் பதியை வாழ் விக்க வந்தருளிய பிள்ளையாரது அழகிய முத்துச் சிவிகையைத் தாங்குகின்றவர்களுடன் கூடி, தாமும் தாங்கி உள்ளக் களிப்புடனே வருவாராக, திருஞானசம்பந்தர் தம் உள்ளத்தில் திருவருட் குறிப்பாற் வேறொரு உணர்ச்சி உண்டானதால் முற்படக் கூறுவாராய், வேறொரு உணர்ச்சி - அப்பரைப்பற்றிய நினைவு ணர்ச்சி.

'அப்பர் தாம் இப்போது எங்கு எழுந்தருளினார்?' என்று வினவியருள, சொலற்கரிய புகழையுடைய திருநாவுக்கரசரும் விடை தருபவராய் 'ஒப்பற்ற தவத்தை முன்னே செய்தேனாதலின் இப்போது உம் திருவடிகளைத் தாங்கிவரும் பெரும்பேற்றை அடைந்து உய்ந்தேன்' என்று அருளிச் செய்தார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அத்திருமொழிகளைக் கேட்டு அச்சம் கொண்ட ஞானசம்பந்தர், சிவிகையினின்றும் இறங்கியருளி, 'இவ்வாறு தாங் கள் செய்தருளுவது என்னோ?' எனப் பதைப்புடன், வணங்குதலும் செம்மையே மொழியும் நாவுடைய அரசரும் 'திருஞானசம்பந்த ருக்கு, வேறு யாது செய்தல் தக்கதாகும்?' எனக் கூறி வணங்கினார்.
குறிப்புரை:

சூழ்ந்து நெருங்கி வரும் உண்மைத் தொண்டர் கள் எல்லாம் அதைப்பார்த்துத் தாழ்ந்து நிலத்தில் பொருந்த வணங்கி எழுந்து அழகிய கைகளைத் தலைமீது குவித்து உள்ளக் களிப்புடைய வராய், 'இவ்விரு பெருமக்களையும் வணங்கப் பெற்றதால் நாம் ஆழ்ந்துள்ள பிறவிக் கடலினின்றும் ஈடேறி உய்யப் பெற்றோம்' என மொழிந்து அண்டங்கள் எல்லாம் பொருந்த மகிழ்வொலி செய்தனர்.
குறிப்புரை:

திருஞானசம்பந்தப் பெருமான், பெருகும் விருப்பத்தோடும் திருநாவுக்கரசரை அணைந்து தழுவிக் கொள்ள, நாவுக்கரசர் மணம் கமழும் மலர் போன்ற பிள்ளையாரின் அடிகளை வணங்கி உடன் வர, அலைகள் மோதுகின்ற கங்கை நீரைச் சடையில் கொண்ட இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற திருப்பூந்துருத்திக்கு வந்து சேர்ந்தனர்.
குறிப்புரை:

அடியார் கூட்டத்துடன் செல்பவரான ஞானசம் பந்தர், விடைக்கொடியை யுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்கோயில் முன்பு அருகில் சென்று, கோபுரத்தை முன் வணங்கித் துன்பம் இல்லாத தொண்டருடன் தொழுத வண்ணமே உள்ளே சென்று எலும்பும் உருகுமாறு கோயிலுள் வலமாக வந்து பணிந்து வணங்கிப் போற்றினார்.
குறிப்புரை:

திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும் பொய்யிலி யப்பரை வணங்கிப் போற்றிப் பின்னர், புற முற்றத்தில் சேர்பவரான ஞானசம்பந்தர், சிவந்த சடையையுடைய இறைவரின் கோயிலின் வாயில் முன்பு குற்றமறும் சிறப்புடைய தொண்டர் கூட்டம் வந்து, தம்மைச் சுற்றிச் சூழ்ந்து வர, உலகம் உய்யும் பொருட்டு வருகின்ற நாயன்மார்கள் இருவரும் அடியார்கள் சூழ அவர்களுடன் மகிழ்ந்து அங்கு இனிதாய் விரும்பித் தங்கியிருந்தனர். பூந்துருத்தியில் பொய்யிலியப்பரைப் போற்றிப் பணிந்த பதிகம் கிடைத்திலது.

சொற்குறுதிக்கு ஒப்பில்லாத அரசரான திருநாவுக் கரசர், வளமையுடைய சீகாழி மன்னரான ஞானசம்பந்தரை அவர் பாண்டி நாட்டுக்குச் சென்றருளியதும் அங்கு நின்று மீண்டதும் ஆகிய வரலாறுகளை வினவ, அங்கு நிகழ்ந்த வரலாறு முழுவதையும், தமிழ்ப் பாட்டின் தலைவரான பிள்ளையார், சொலற்கு அரிய ஞானமறை களைத் தேக்கும் தம் திருவாக்கால் உரைத்தருளினார். திருமறைக்காட்டினின்றும் பிரிந்த இருபெருமக்களும், திருப்பூந்துருத்தியில் மீண்டும் கூடுகின்றனர். ஒருவர் ஒருவரைப் பார்த்தவுடனேயே பாண்டிய நாட்டு நிகழ்ச்சிகளைப் பரிமாறிக் கொள் ளாது, பெருமானை வழிபட்டு, அதன்பின்னரே அதுபற்றி அளவளா விக் கொள்வது அறிந்து கடைப்பிடித்தற்குரியதாம். அதுவும் திருக்கோ யிலினுள் அளவளாவுதலின்றிப் புறத்தணைந்தபின் நிகழ்த்துவதும் குறிக்கொள்ளதக்கதாம்.

சீகாழியில் தோன்றிய கவுணியர் குலத்தவரின் போர் ஏறு என விளங்கும் ஞானசம்பந்தரை, கடல்மீது கல்லையே மிதப்பாகக் கொண்டு வந்தருளிய திருநாவுக்கரசர் வணங்கி, 'வாழ்வை வழங்கும் திருத்தொண்டு என்னும் பெரிய பயிர் ஓங்கி வளர்ந்து பயன்தரச் செய்வதற்கு உரியதாய்ச் சூழும் பெரிய வேலிபோல் நீவிர் ஆயினீர்' எனக் கூறித் தொழுதனர். வாதம் செய்து வென்றமை தோன்றப் 'போர் ஏறு' என்றார். நாவரசர் தமக்கே உரிய பாங்கில் பிள்ளையாரைத் திருத் தொண்டாம் பயிர்காக்கும் வேலி எனப் புகழ்ந்தது, அவருக்கும் பொருந்துவதாகும். எனவே நம்மளவில் சூழும் பெருவேலியானவர் கள் இவ்விருவருமே யாவர் என்பது அறியத்தக்கதாம்.

ஞானசம்பந்தப் பெருமானார் நாவுக்கரசர் முன் தொழுது, பெரிய அன்பின் வெள்ளத்தைப் போன்ற புகழையுடைய மங்கையர்க்கரசியாரின் மேம்பாட்டையும், பெருமையுடைய குலச் சிறையாரின் திருத்தொண்டின் சிறப்பையும் உள்ளவாறு கூறியருளி அங்கு மகிழ்ந்திருந்தார்.
குறிப்புரை:

பாண்டிய மன்னருக்கு உயிருடனே திருநீற்றை அளித்தும், செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் அன்னப் பறவை போன்ற மங்கையர்க்கரசி அம்மையாருக்கும் குலச்சிறையாருக்கும் அன்பைச் சுரந்தருளியும், தூய மறைவழிவரும் சைவ நெறியையே பொருந்தும் நெறியாக ஆக்கியதால், நிலைபெற்ற புகழையுடைய திருநாவுக்கரசர் அதனைக் கேட்டு மகிழ்ந்தார்.
குறிப்புரை:

சொல்லரசரான திருநாவுக்கரசர் திருத்தொண்டை வளநாட்டைச் சேர்ந்து, மிகுபுகழுடைய காஞ்சிபுரத்தில் நிலைபெற வீற்றிருக்கின்ற செல்வரான ஏகம்பநாதரின் திருவடிகளை வணங்கி வந்த வரலாற்றையெல்லாம் கூறியருளவும், பொருந்திய நூலையு டைய மார்பரான பிள்ளையாரும் அங்குச் சென்று வணங்கத் திருவுள் ளம் பற்றினார். தலைமை பற்றிக் காஞ்சித் திருப்பதியில் வணங்கியதை விதந்து கூறினாரேனும் 'சென்றதெல்லாம் செப்புதலும்' என்றமை யால், தொண்டைநாட்டில் அமைந்த பல திருப்பதிகளையும் வணங்கி வந்தமையைக் கூறினார் என்பது பெறுதும்.

ஞானசம்பந்தர் இறைவரை வணங்கி எழுந்து, ஆளுடைய அரசர் விரும்பி எழுந்தருளியிருக்கும் அன்புமிக்க திரு மடத்தில் சேர்ந்து, அங்கு விரும்பி வீற்றிருந்தருளி, திங்களின் பிளவு அனைய பிறையைச் சூடிய திருமுடியையுடைய இறைவரின் சேவடி யின் கீழ்த் தங்கும் திருவுள்ளத்துடன் தாமும் போற்றி எழுந்தருளி யிருந்த காலத்தில்,
குறிப்புரை:

வாகீச முனிவரான நாவுக்கரசருக்கு, நிலைபெற்ற திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் பாம்பை அரையில் கட்டிய இறைவரின் திருவடிகளை வணங்குவதற்காகச் செல்ல வேண்டும் என்ற பெரிய விருப்பம் மேன்மேலும் எழவும், ஞானசம்பந்தரும் சீகாழியில் சென்று சேரும் பெருகிய காதலை மேற்கொண்டவராய்,
குறிப்புரை:

திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும் இறைவரைத் திருக்கோயிலுள் புகுந்து வணங்கிப் போந்து, வாயில் பக்கத்தை அடைந்து, திருநாவுக்கரசரின் உள்ளம் பொருந்த அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, பெருமையுடைய பிள்ளையார் அளவில்லாத தொண்டர்களுடன் தம் செலவினை மேற்கொண்டார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

அருகில் உள்ள காவிரியில் இறங்கிச் சென்று, ஆற்றின் வடகரையில் நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானத்தையும், திருவையாற்றையும் சேர்ந்து பணிந்து, பெருமையுள்ள தமிழ் மாலைக ளையும் அருளிப் போற்றிச் சென்று, திருக்கூத்து இயற்றும் இறைவரின் திருப்பழனத்தைப் போய்ச் சேர்ந்தார். திருநெய்த்தானத்திலும், திருஐயாற்றிலும், திருப்பழ னத்திலும் இதுபோது அருளிய பதிகங்கள் கிடைத்தில.

சிவந்த கண்களையுடைய ஆனேற்றை ஊர்தி யாகக் கொண்ட இறைவரின் திருப்பழனத்தை அடைந்து வணங்கி, பொங்கிய காதலின் முன்போற்றிய திருப்பதிகள் பலவற்றிலும் தங்கிச் சென்று, ஒப்பில்லாத பொன்மலை வல்லியான அம்மையாரின் திரு முலைப் பாலையுண்டருளிய வள்ளலாரான பிள்ளையார், சீகாழிப் பதியினை அணைவாராயினர். முன்பு வணங்கிய பதிபலவும் என்றது திருக்குடந்தை, திருவடகுரங்காடுதுறை, திருப்பனந்தாள், திருப்புள்ளிருக்குவேளூர் முதலாயினவாகலாம் என்பார் சிவக்கவிமணியார்.

பாண்டிய நாட்டில் சமண் சார்பாய குற்றங்களை அழித்துத் திருநீற்றினை அந்நாடு முழுதும் அணியும்படி செய்தருளிய ஞானசம்பந்தர் வருகின்ற திருமொழியைக் கேட்டு, எந்நாளில் அவ ரைப் பணியப் பெறுவோம்? என்று ஆர்வம் கொண்டிருந்த மறைய வர்கள், மறைகள் முழங்க அவர்முன் சென்று எதிர் கொண்டனர்.
குறிப்புரை:

ஞானம் மிக்க மாமறையவர்கள் தம்மை எதிர் கொண்டு வரவேற்கச் சீகாழித் தலைவரான பிள்ளையாரும், குளிர்ந்த முத்துகளால் இயன்ற சிவிகையினின்றும் இறங்கி, அவர்களின் எதிரே செல்பவர், அதுபொழுது திருத்தோணியில் வீற்றிருக்கும் திருக்கோ யில் முன்னே தோன்ற, புதியதாய் மலர்ந்த தாமரை மலரனைய கைகளைக் கூப்பி, இறைஞ்சிச் சென்று, ஊழி வெள்ளத்தில் மேலே மிதந்த அக்கோயிலின் அழகிய கோபுர வாயிலைச் சென்றடைந்தார்.
குறிப்புரை:

தரையில் எட்டு உறுப்புக்களும் பொருந்த வணங்கிக் கோயிலுக்குள் புகுந்து, கைகள் குவித்தவாறு திருமுடியின் மீது பொருந்த, மேன் மேலும் மீதூர்ந்து எழும் அன்புடன் திருக்கோயி லைச் சூழ்ந்து வலமாக வந்து, திருமுன்னர்ப் பணிந்து, பெரிய நீண்ட பெருந்தோணியான கோயிலை அருளால் தொழுது, மலையின் மீது ஏறி, அம்மையாருடன் எழுந்தருளிய இறைவரின் தாமரை மலர் அனைய திருவடிகளை வணங்கியவராய்,
குறிப்புரை:

திருமேனி முழுவதும் மயிர்க்கூச்செழவும், முன் னுறக் காணும் கண்கள் களிப்புக் கொள்ளவும், அம்மெய்ப்பாடுகளைக் கொண்ட திருவுள்ளத்தில் ஆனந்தம் பொங்கி வழியவும், வணங்கி 'உற்றுமை சேர்வது' எனத் தொடங்கும் 'திருஇயமகத் திருப்பதிகத்தை' மகிழ்வுடன் எடுத்துப் போற்றி, வெற்றிஆகுமாறு பாண்டியனின் அவையிலும், நீர் எதிர்த்துச் செல்ல வைகையாற்றிலும் வரும் திருவருள் செயல் கொண்டவர் எனப் போற்றுபவராய், 'உற்றுமை சேர்வது' (தி. 3 ப. 113) எனத் தொடங்கும் திருப்பதிகம் பழம்பஞ்சுரப் பண்ணிலமைந்ததாகும். 'பருமதில் மதுரையின்மன் அவையெதிரே பதிகம தெழுதிலை அவையெதிரே வருநதியிடைமிசை வருகரனே வகையொடும் அலர்கெட வருகரனே' என வரும் இத்திருப்பதிகத் திருக்கடைக் காப்பினையுளங் கொண்ட வகையில் ஆசிரியர் சேக்கிழார் இவ்வாறு அருளுகின்றார்.

சீர்மை பொருந்திய திருப்பதிகத்தில் திருக்கடைக் காப்பும் சாத்திக் கச்சணிந்த அழகிய மார்பகங்களையுடைய திருநிலை நாயகியம்மையாருடன் நிலைபெற்ற தோணியப்பரை வணங்கி, நிறைந்த அவரது இனிய அருளைப் பெற்று, மீண்டு அணைபவராகி, அங்கைகள் கூப்பித் தொழுது போற்றி அழகால் நிறைந்த திருக்கோயி லின் முன் வணங்கிச் சென்று திருவாயிலை அடைந்து தொழுதார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

அப்பொழுது அவருடைய தந்தையார் சிவபாத இருதயரும் பணிந்து உடன் அணைந்திடச் சீகாழிப் பதியினரின் சிங்க ஏற்றைப் போன்ற பிள்ளையார், பழமையான மதிலுடன் கூடிய வாயிலை வணங்கிச் சென்று, மலர்களை அணிந்த கூந்தலையுடைய மங்கையர் அன்புடனே வாழ்த்தும் உரைகள் இரு மருங்கிலும் திரண் டெழ, அழகிய வீதியில் சென்று, அன்புடனே வந்தவர்க்கு அருள் செய்து, திருமாளிகையின் முன் வாயிலைச் சேர்ந்தார்.
குறிப்புரை:

தேன்பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த சீகாழியை அடைந்தருளிய திருஞானசம்பந்தர், பாடினியார் உடன் வரும் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு மிகவும் அருள் சுரந்து, அவர்தம் இருக்கையான திருமாளிகைக்குச் செல்லுமாறு விடை அளித்து, தம் திருமாளிகைக்கு எழுந்தருளும் பொழுது, கரிய மணல் போன்ற கூந்தலையுடைய பெண்கள் அழகான விளக்குகளை ஏந்தி வரவேற்க, அவர் உள்ளே சென்றருளினார்.
குறிப்புரை:

அங்குச் சேர்ந்து, அரிய மறையவர் மரபில் வந்த தாயாரான பகவதியார் வந்து அடிவணங்க, தாமும் தூய்மையான நீண்ட பெரிய திருத்தோணியில் எழுந்தருளிய தாயாரான பெரிய நாயகியம்மையாரின் திருவடிகளை உள்ளத்தில் கொண்டு, எதிர் தொழுவார், அங்கே தங்கியிருக்கும் விருப்பால் எழுந்தருளியிருக் கின்ற நாள்களில், தம் இறைவரின் திருவடிகளைப் போற்றி, பெருகும் இனிய இசையுடைய பல திருப்பதிகங்களையும் பாடினார். சீகாழியில் அருளிய பதிகங்களாக முன் குறித்தனவற்றுள் சில இங்குப் பாடியனவாய் இருக்கலாம். அன்றி மேலும் சில பதிகங்களையும் அருளியிருக்கலாம். அவை இவை எனத் தெளிவாக அறிய முடியவில்லை.

நீலநிறமான பெரிய நஞ்சைத் திருக்கழுத்தில் அடக்கிய குற்றமற்றவரான தோணியப்பரை நேரே சென்று வணங்கு தற்குரிய காலங்களில் எல்லாம் சென்று வணங்கி, உடன் கலந்த அடி யார்களோடும் கூடிப் பலநாள்கள், அச் சீகாழிப் பதியில் தங்கியருளிய ஞானசம்பந்தர், காமாட்சி அம்மையார் தழுவிடத் திருமேனி குழைந்து காட்டிய ஏகம்பநாதரின் திருக்கோலத்தைச் சென்று மணம் நிறைவு பெற வழிபடவேண்டும் என்னும் ஆசை மேற்கொண்டு எழும் உள்ளக் குறிப்பு உடையவரானார்.
குறிப்புரை:

தொண்டை நாட்டைச் சேர்ந்து சென்று நம் இறைவர் வீற்றிருக்கும் திருக்கோயில்களைக் கண்டு போற்றி வணங்கு வோம்! என அடியார்களுக்கு அருள் செய்பவராய், உரிய காலத்தில் நேர்பட்டுத் தேவர்களுக்கும் அரிய பெரிய திருத்தோணியில் வீற்றி ருக்கும் இறைவர்பால் விடைபெற்றுத் திருத்தொண்டர் தம்முடன் சூழ்ந்து வரப் புறப்படத் தாமும் உடன்வரும் பொருட்டாகப் புறப்பட்ட தந்தையாருக்கு உரை செய்பவராய், தொண்டைநாடு, தண்டகன் என்ற அரசனால் ஆளப் பெற்ற காலத்துத் தண்டக நாடு என்றும், பின் துண்டீரன் எனும் அரசனால் ஆளப் பெற்ற காலத்துத் துண்டீர நாடு என்றும் பெயர் பெற்று வந்து. பின் தொண்டைமானால் ஆளப்பெற்ற காலத்திலிருந்து தொண்டை நாடு எனப் பெயர் பெறுவதாயிற்று.

அப்பரே! நீங்கள் இனி எம்முடன் வருவதைக் கைவிட்டு, இங்கு அருமறை விதிப்படி தீவளர்த்து வேள்விசெய்து கொண்டு, அன்புடன் பவளம் போன்ற சடையையுடைய இறைவரைப் போற்றித் தங்கியிருப்பீராக! எனக் கூறி, பெருமையுடைய மெய்த் தொண்டர்களுள் தம்முடன் வாராது தங்குகிறவர்க்கெல்லாம் விடை தந்து, தமக்கு ஒப்பில்லாத இறைவரை வழியில் கண்டு வணங்கிக் கொண்டு, உருகும் அன்புடனே மேற் செல்பவராய், சீகாழியிலிருந்து தில்லைவரையுள்ள இடைப்பட்ட பதிகளை வணங்கினர் என்பார் 'வழியிடைப் பணிந்து' என்றார்

செல்வம் நிறைந்த 'தில்லை' என்ற பழம் பெரும் பதியில் இறைவரின் திருக்கூத்தை வணங்கிப் போற்றிப் பெருந் தொண்டர்கள் பலரும் வரவேற்கச் சென்று, இறைவரின் 'திருத்தினை' நகரை அடைந்து பாடிச்சென்று, அத்தொண்டர்களுடன் 'திருமாணி குழியினை' அடைந்து போற்றி, செறிந்து பொருந்திய நீண்ட சடையை உடைய இறைவரின் 'திருப்பாதிரிப்புலியூரை' வந்து அடைந்தார். இத்திருப்பதிகளில் திருமாணிகுழிக்கமைந்த பதிகம் மட்டுமே கிடைத்துளது. அப்பதிகம் 'பொன்னியல்' (தி. 3 ப. 77): பண்:சாதாரி. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

ஞானசம்பந்தர் பெரிய 'கன்னிவனத்தைத்' தம் காவலிடமாகக் கொண்டு எழுந்தருளிய சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் பணிந்து, அப்பதியில் முன் நாளில் முடங்கிய காலுடன் முயலாய் ஒறுக்கப்பட்ட மங்கண முனிவர் சாபநீக்கம் பெற அருள் செய்த தன்மையையும் பதிகத்தில் மொழிந்து போற்றிச் சென்று, நீண்ட சோலைகள் சூழ்ந்த திருவடுகூரினை அடைந்து, நீண்ட சடை யுடைய இறைவரின் 'திருவக்கரை' என்ற பதியை அடைந்தார். உமையம்மையார் தவம் செய்து அருள்பெற்ற இடம் ஆதலின், இவ்வூர் கன்னியாவனம் என்றும் அழைக்கப்பெற்றது. திருப்பாதிரிப்புலியூரில் அருளிய பதிகம் 'முன்னம் நின்ற' (தி. 2 ப. 121) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப் பதிகத்தின் முதற் பாடலில், 'முன்னம் நின்ற முடக்கால் முயற்கருள் செய்து, நீள் புன்னை நின்று கமழ்பாதிரிப் புலியூருளான்' எனவருவது கொண்டு, ஆசிரியர் இவ்வரலாற்றை எடுத்து மொழிகின்றார். திருவடுகூரில் அருளிய பதிகம் 'சுடுகூர்எரிமாலை' (தி. 1 ப. 86) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

அத் திருவக்கரையில் ஞானசம்பந்தர் இறைவ னைத் தொழுது வணங்கித் தங்கியிருந்த நாள்களில், திருவருட் குறிப் பினால் சிவந்த வானம் போன்ற சடையையுடைய இறைவரின் 'திரு விரும்பைமாகாளத்தை'யும் சென்று வணங்கி, உடனே திரும்பி, மிக்க சிறப்புகள் வளர்கின்ற 'திருவதிகைவீரட்டானத்தைச்' சென்று சேர்பவரான அவர், தமக்கு, முன்கூடிய உண்மைத் தொண்டர்கள் வந்து எதிர் கொள்ளத் தொழுது அங்கு அணைந்தார். இரும்பைமாகாளமும் என்ற உம்மையால் திருஅரசிலி யையும் கொள்ளத்தக்கதாம் என்பர் சிவக்கவிமணியார். இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருவக்கரை: 'கறையணி' (தி. 3 ப. 60) - பஞ்சமம். 2. திருவிரும்பைமாகாளம்: 'மண்டுகங்கை' (தி. 2 ப. 117) -செவ்வழி. 3. திருஅரசிலி: 'வண்டறை' (தி. 2 ப. 95) - பியந்தைக் காந்தாரம்.

முதன்மையுடைய தேவராய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருவீரட்டானத்தைச் சென்று அடைபவ ரான சம்பந்தர் முன்பு, பூத கணங்கள் பாட நின்றாடும் இறைவர், தம் திருக்கூத்தைக் கண்ணுக்குப் புலனாகும்படி காட்டவே, மறைகளில் வல்லுநரான அவர் வணங்கி, மெய்யுணர்வுடன் உள்ளம் உருகி விருப்பத்துடன் குற்றம் அற்ற இசையுடன் கூடிய 'குண்டைக் குறட் பூதம்' என்று தொடங்கிப் போற்றி, வேதபாரகர்: பாரம் - கரை, கர் - கண்டவர். மறைகளின் கரையைக் கண்டவர். 'குண்டைக் குறட் பூதம்' எனத் தொடங்கும் பதிகம் குறிஞ்சிப் பண்ணிலமைந்ததாகும் (தி. 1 ப 46). இப்பதிகப் பாடல் தொறும், வீரட்டானத்தில் பெருமான் கூத்தியற்றும் சிறப்பைக் குறித்துப் போற்றும் பிள்ளையார், 'ஆடும்வீரட்டானத்தே' என நிறைவுபடவும் அருளுகின்றார். ஆதலின் ஆசிரியர் சேக்கிழார் 'பூதப் படை நின்றாடுவார் திருநடம் புலப்படும்படி காட்ட' என அதனை வரலாற்று இயைபுபடுத்திக் காட்டுவாராயினர்.

போற்றி வழிபட்ட அப்பதிகத்தின் இசையினை நிறைவுறப் பாடிப் பணிந்து, அத் திருப்பதியில், அன்புடன் மகிழ்ந்து இனிதாகத் தங்கியவரான சீகாழியில் தோன்றிய அந்தணர் குலத்துப் பிள்ளையார், பாம்பும் கங்கையும் தங்கிய சடையையுடைய இறைவர் மிக்க மகிழ்ச்சியுடன் எழுந்தருளிய திருஆமாத்தூரினைச் சென்று சேர்ந்தார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

சென்றடைந்து, உள்ளத்தில் மகிழ்ச்சி மீதூரக் கொண்ட விருப்பத்துடனே, விளங்கும் திருஆமாத்தூரில் பொன் போல் விளங்கும் கொன்றையையும் வன்னியையும் அணிந்து வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளைப் போற்றிக் 'குன்றவார் சிலை' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை, மெய்ம்மை விளங்கும் இசை யுடன் பாடி, இன்பம் மிகப் பொருந்த வணங்கிச் செல்பவரான ஞான சம்பந்தர், திருக்கோவலூரை அடைந்தார். இத்திருப்பதிக்கு இத் தொடக்கமுடையதொரு பதிகம் அன்றிப் பிறிதொரு பதிகமும் உளது. முன்னர்ப் பாடியது: 'குன்றவார் சிலை' (தி. 2 ப. 50) - சீகாமரம். பின்னர்ப் பாடியது: 'துன்னம்பெய்' - (தி. 2 ப. 44) - சீகாமரம்.

திருக்கோவலூரில் திருவீரட்டக் கோயிலில் விரும்பி எழுந்தருளியிருக்கும் இறைவரின், ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கிப் போற்றி, ஆனினிடமாகத் தோன்றும் ஐந்து பொருள்களையும் விரும்பியாடுபவரான இறைவரின் திருஅறை யணி நல்லூரைச் சென்றடைந்து போற்றிப் பாவாக மலர்ந்த தமிழ்ப் பதிகத் தினால் போற்றுபவரான பிள்ளையார், இறைவரின் பொருள் சேர் புகழ்களையே போற்றி வாழும் தொண்டர்களுக்கு, அன்பினால் உள வாகும் மேம்பாடான தன்மைகளை உலகம் அறிந்து உய்யுமாறு அருளிச் செய்தார். இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருக்கோவலூர்: 'படைகொள்' (தி. 2 ப. 100) - நட்டராகம். 2. திருஅறையணிநல்லூர்: 'பீடினால்' (தி. 2 ப. 77) - காந்தாரம். திருஅறையணிநல்லூரில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்குவோர்க்கு உளவாகும் நலன்களை இப்பதிகப் பாடல் தொறும் பிள்ளையார் அருளுவதை உளங்கொண்டு ஆசிரியர் இங்ஙனம் அருளுவாராயினர்.

இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருக்கோவலூர்: 'படைகொள்' (தி. 2 ப. 100) - நட்டராகம். 2. திருஅறையணிநல்லூர்: 'பீடினால்' (தி. 2 ப. 77) - காந்தாரம். திருஅறையணிநல்லூரில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்குவோர்க்கு உளவாகும் நலன்களை இப்பதிகப் பாடல் தொறும் பிள்ளையார் அருளுவதை உளங்கொண்டு ஆசிரியர் இங்ஙனம் அருளுவாராயினர்.
குறிப்புரை:

அவ்விடத்தினின்றும் திருவண்ணாமலை தோன்றும் காட்சி, தேவர் தலைவரான சிவபெருமானின் வடிவம் போல் தோன்றவும், கண்ணால் கண்டு, பருகுவார் அன்ன ஆர்வத் தராகி, கைகளால் தொழுது, போற்றுதற்குரிய பெருவிருப்பத்தால் 'உண்ணா முலையாள்' என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடித் தொண்டருடன் சென்று, தெளிந்த கங்கையைத் தலையிற்கொண்ட இறைவரின் திருவண்ணாமலையைச் சேர்ந்தார். திருஅறையணிநல்லூரின் மலையிலிருந்தவாறே திருவண்ணாமலையை அன்பர்கள் காட்டக் கண்ட பிள்ளையார், அவ் வண்ணாமலையை நோக்கியருளிய பதிகம் இத்தொடக்கம் உடைய பதிகம் ஆகும். இது நட்டபாடைப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 1 ப. 10). அலரவனும் மாலவனும் காணாமே அழலுருவாய் நின்ற மலை ஆதலின், பெருமானின் வடிவு போல்வதாயிற்று.

அண்ணாமலையை அடைபவரான ஞானசம் பந்தர், நிலத்தில் விழுந்து வணங்கி, அம்மலையின் மீது தங்கும் விருப் புடன் வீற்றிருக்கின்ற இறைவரின் திருவடிகளாகிய தாமரைகளைத் தம்முடியின் மீது மேல் எழுகின்ற ஆசையுடன் சூடி, திருமேனி முழு தும் மயிர்க் கூச்செறியக் கண்களில் பொழியும் ஆனந்தக் கண்ணீரை அருவி எனப் பெருக்கினார்.
குறிப்புரை:

ஆதி மூர்த்தியான அண்ணாமலையாரின் திரு வடிகளை வணங்கி, அங்கு இனிதாய் விரும்பித் தங்கியிருக்கும் நாள் களில், பூதங்களுக்குத் தலைவரான அவரைப் 'பூவார் மலர்' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிப் போற்றி, விருப்புடன் அம்மலையில் சில நாள்கள் தங்கி, மறைகளை இசையுடன் பாடுபவரான ஞான சம்பந்தர், இறைவரின் திருப்பதிகள் பிறவற்றையும் சென்று வணங்கும் விருப்பத்தை மேற்கொள்பவராய், 'பூவார் மலர்' எனத் தொடங்கும் திருப்பதிகம் தக்கேசிப் பண்ணிலமைந்ததாகும் (தி. 1 ப. 69).

ஞாசம்பந்தர் உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவருளால் வணங்கி விடைபெற்றுச் சென்று, சிவந்த கண்களையுடைய விடையை ஊர்தியாகக் கொண்ட இறைவ ரின், வடக்கில் உள்ள பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று, பெரிய மலைகளையும் காடுகள் பலவற்றையும் கடந்து, திருத் தொண்டை நாட்டில் பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய இறைவர் இனிதாய் விரும்பி வீற்றிருக்கின்ற 'திருவோத்தூரைச்' சேர்ந்தார். வடதிசையில் பதிபலவும் பணிந்து என்றது, திருத் தெள்ளாறு, திருவெண்குன்றம், புரிசை நாட்டுப் புரிசை முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். 'துங்கவரைகள் கான்பலவும் கடந்து' என்றது பல்குன்றம், இளங்காடு, திண்டிவனம், புலிவனம், புறவார் பனங்காட்டூர் முதலிய ஊர்ப் பெயர்களை உளங்கொண்டு கூறியிருக்கலாம் என்பர் அவர். இவற்றில் புறவார் பனங்காட்டூரில் அருளிய பதிகம், 'விண்ணமர்ந்தன' (தி. 2 ப. 53) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மறைகளை ஓதுவித்து அருள் செய்த திருவோத்தூரில் வாழும் திருத்தொண்டர் கள், குற்றம் அற்ற சீகாழிப் பதியில் தோன்றிய தமிழ்வல்லுநரான ஞானசம்பந்தர் அங்கு வரவே, மிகவும் மகிழ்ந்து, வாழைகளையும் தோரணங்களையும் விளக்குகளையும் நிரல்பட அமைத்து, நிறை குடங்களையும் பூவும் பொரியும் சுண்ணமும் என்ற இவற்றையும் முன்னே ஏந்திப் போற்றிசெய்து எதிர் கொண்டனர். ஓத்து - மறைகள். 'உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான' (தொல். அகத். 31) என்னும் தொல்காப்பியமும். அவற்றை இறைவன் உபதேசித்த அருளிய இடமாதலின் ஓத்தூர் எனப்பட்டது.

சீகாழியில் தோன்றிய பிள்ளையார், முத்துச் சிவிகையினின்றும் இழிந்து, அன்பின் சிறப்புடைய அடியவர்கள் தம்மைச் சூழ்ந்துவர, இறைவரின் கோபுரத்தைச் சூழ்ந்து, வானமும் கீழ்ப்படும் வண்ணம் முன்னால் உயர்ந்து விளங்கும் பெரிய பொன் மதிலை வலமாக வந்து வணங்கிப் பண்பில் நீடிப் பணிந்து, எழுந்து, இறைவரின் திருக்கோயிலினுள் சென்றார்.
குறிப்புரை:

சீகாழியில் தோன்றிய பிள்ளையார், முத்துச் சிவிகையினின்றும் இழிந்து, அன்பின் சிறப்புடைய அடியவர்கள் தம்மைச் சூழ்ந்துவர, இறைவரின் கோபுரத்தைச் சூழ்ந்து, வானமும் கீழ்ப்படும் வண்ணம் முன்னால் உயர்ந்து விளங்கும் பெரிய பொன் மதிலை வலமாக வந்து வணங்கிப் பண்பில் நீடிப் பணிந்து, எழுந்து, இறைவரின் திருக்கோயிலினுள் சென்றார்.
குறிப்புரை:

தொழுது நிலத்தில் விழுந்து பணிந்து எழுந்து, சொல் மாலைகளால் போற்றி, எல்லாமாய் நின்ற இறைவரின் திரு வருள் பெற்று, வெளியே வந்து தங்கியிருந்தவராய், இறைவரைக் காலங்கள் தோறும் சென்று வணங்கிப் போற்றி, அங்கு விரும்பி இருப்பவரான அப்பிள்ளையாரின் திருமுன்பு, ஒரு தொண்டர் அழுது நின்று, சமணர்களின் தன்மை பற்றிய ஒரு செய்தியை அறிவிக்கத் தொடங்கி,
குறிப்புரை:

'உள்ளங்கையில் தீயினைக் கொண்ட இறைவற்கு அடியவனாகிய யான், வளர்க்கும் பனை மரங்கள் எல்லாம் மேக மண் டலம் பொருந்த நீண்டு வளர்ந்தும், ஆண் பனைகளாய்க் காய்க்காது இருப்பதைக் கண்ட சமணர்கள், 'இங்கு நீவிர் வைத்து வளர்க்கும் பனை மரங்கள் காய்ப்பதற்கு வழியுண்டோ?' என்று எள்ளி மிகவும் நகைத்து, இழிவாய்ப் பேசுகின்றனர்; தாங்கள் அவ்விழிவைப் போக்கி அப் பனைகள் காய்க்குமாறு அருள் செய்ய வேண்டும்' என விண் ணப்பிக்க,
குறிப்புரை:

சிவபெருமானது திருத்தொண்டரின் அடிமைத் திறத்தைத் திருவுளங்கொண்ட திருஞானசம்பந்தர், மிகவும் இரங்கி, பொருந்திய பெருவிருப்பத்துடன் விரைந்து சென்று, இறைவரின் திருக்கோயிலுக்குள் புகுந்து, பாம்பையும் பிறைச்சந்திரனையும் பகை தவிர்த்துத் தலையில் சூடிய சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கித் திருவருளை இரந்து 'பூத்தேர்ந்தாயன' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பண் இசை பெருகப் போற்றியருள, 'பூத்தேர்ந்தாயன' எனத் தொடங்கும் பதிகம் பழந்தக் கராகப் பண்ணிலமைந்ததாகும் (தி. 1. ப. 54).

விரும்பத்தக்க மேன்மை பொருந்திய திருக்கடைக்காப்பில், இறைவரின் திருவருளால் 'குரும்பைகளை ஆண் பனைகள் ஈனும்' என்னும் வாய்மை பொருந்தி விளங்குதலால், நெருங்கிய அவ்வாண்பனைகள் எல்லாம், நிறைந்த குலைகளை உடையனவாய்க் குரும்பையுடைய பெண்பனைகளாக மாறிவிடவே, கண்டவர் அனைவரும் வியப்படைந்தனர். குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளைப்
பெரும்பு கலியுண் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.
(தி. 1 ப. 54 பா. 11)என்பது திருக்கடைக்காப்புப் பாடலாகும். 'ஆண்பனைக் குரும்பைக் குலைஈன் ஓத்தூர்' என மாறுக. திருவருள் வயப்பட்ட இத்திருவாக்கு மெய்ம்மை பொருந்தி நிற்பதால் ஆண்பனை குலை ஈன்றது. ஆதனால் பெண்பனையாயிற்று. இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

சிறப்பால் நிலைபெற்ற திருக்கடைக்காப்புச் சாத்திப் பதிகத்தை நிறைவாக்கி, இறைவரின் திருவருளைப் பெற்று, உலகத்தில் நீடிய ஆண்பனைகள் முன்னே காய்த்துப் பழுக்கும் தன்மை வர, விரும்பும் அன்பரின் கருத்தை நேர்பட முடித்துத் தந்து நிறைவான மகிழ்ச்சியடைய, திருத்தொண்டர் போற்ற, அந்நகரத்தில் இனிதாய் எழுந்தருளியிருந்தார் ஞானசம்பந்தர்.
குறிப்புரை:

பாண்டிய நாட்டில் சமணமான குற்றத்தை நீக்கிய ஞானசம்பந்தரின் இச் செயலைக் கண்டு, திகைத்த சமணர்களிற் சிலர், அந்நாட்டை நீங்கிச் செல்பவர்களாகி, சிலர் தம் கையில் ஏந்திய தம் சமயச் சின்னங்களுள் ஒன்றான நீர்க் குண்டிகைகளை இவற்றால் என்ன பயன் என்று கூறி உடைத்தெறிந்து, 'முழுமுதல் கடவுளாவார் விடைக்கொடியை யுயர்த்திய பொன்போன்ற மேனியையுடைய புரிந்த சடையையுடைய சிவபெருமானே!' என்று போற்றினர்.
குறிப்புரை:

திருஞானசம்பந்தரின் உண்மைத் திருவாக்கி னால் பெண்பனையாய அப்பனைமரங்களுள், பனையாய்ப் பிறப் பதற்குரியதான வினைநீங்க, ஓயாமல் தொடர்ந்து வருகின்ற பிறவிப் பிணி நீங்கி, உடம்பு இருப்பதற்குக் காரணமான ஏன்ற வினையை நுகரும் கால அளவு நீங்கியபின், சிவப்பேற்றை அடைந்தன. இந் நிலையைக் காண, வள்ளலாரான பிள்ளையாரின் அருளிப் பாட்டை எடுத்துக் கூறுவது என்பது ஒரு வரம்புக்கு உள்ளாகுமோ? ஆகாது. இவ்வாற்றான் ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாக உள்ள அனைத்துயிர்களுமே வினைவயத்தால் தோன்றின என்பதும், அவ் வினைநீங்கியபின் அவை வீடுபெறற்குரியன என்பதும் விளங்கும். உமாபதிசிவம் முள்ளிச் செடிக்கு முத்தி கொடுத்த வரலாற்றையும் நினைவு கூர்க.

அவ்விடத்துத் தேவதேவரான இறைவரை வணங்கிச் சென்று, ஆடும் பாம்புடன் பெருகும் நீரையுடைய கங் கையை முடியில் சூடிய இறைவர் மகிழும் பதிகள் பலவற்றையும் போற்றி, உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவர் வீற்றி ருக்கும் வயல்கள் சூழ்ந்த திருமாகறலைப் போற்றிச் சென்று, மணம் கமழும் மலர்களையுடைய நீர் சூழ்ந்த திருக்குரங்கணில்முட்டத்தின் அருகில் செல்வாராயினர். பதிகள் பல என்றது, திருவன்பார்த்தான் பனங்காட்டூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருமாகறலில் அருளிய பதிகம் 'விங்கு விளை' (தி. 3 ப. 72) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

ஆதிமுதல்வரான சிவபெருமானின் திருக்குரங்கணில்முட்டத்தைச் சேர்ந்து வணங்கிப் போற்றிச் சைவநெறியில் வழுவாத ஒழுக்கமுடைய திருத்தொண்டர் போற்றச் சென்று, ஒப்பில்லாத சீகாழிப் பதியில் மறைநெறியுடனே சைவநெறியும் விளங்குமாறு தோன்றியருளிய கவுணியரான ஞானசம்பந்தர், உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட ஏகம்பவாணர் நிலையாக எழுந்தருளியுள்ள மதில் சூழ்ந்த காஞ்சிப் பதியின் அருகில் அடைந்தார். முட்டம் - காகம். குரங்கு, அணில், காகம் ஆகிய மூன்றும் வழிபட்ட திருப்பதியாதலின் இப்பெயர் பெற்றது. இப்பதியில் அருளிய பதிகம் 'விழுநீர்' (தி. 1 ப. 31) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பெருமைமிக்க காஞ்சிமாநகரத்தில் வாழும் மக்களும், மெய்ம்மை நெறி நிலைபெற்ற திருத்தொண்டர்களும், நகரத்தின் அருகே திருஞானசம்பந்தர் வந்து சேர்ந்த மகிழ்ச்சியினால் உண்டான இன்பம் காரணமாக, காடு எனச் செறிந்த பாக்கு மரங் களையும், வாழைகளையும், அழகிய தோரணங்களையும் நிரல்பட அமைத்து வீதிகளை அணிசெய்தனர்.
குறிப்புரை:

கொடிகளை நிரல்படக் கட்டிய வீதியில், அழகிய திண்ணையின் பக்கத்தில் மணமுடைய பந்தலில், மணநீர் நிறைந்த நிறைகுடங்களுடன், கெடுதல் இல்லாத பொன் விளக்குகளை ஏந்திப் பெண்களும் ஆண்களுமாய் நிறைந்து கூடுவார்களும், உலகில் அன்பு நெறியை விளக்கம் செய்யும் அன்பர்களும் பரவிப் போற்றும் இயல்புடன் வந்து நெருங்குபவர்களாகி,
குறிப்புரை:

மாலை சூடிய பெண்களின் ஆடல் ஓசையும், மறை ஒலியும் கூடி மிக்கு எழுந்து பெருகப் பெருவிருப்பினால் காஞ்சி வாழும் மக்கள் மகிழ்வொலி செய்து, எழுந்து சென்று, பழைமை உடைய மதிலின் வெளியில் சென்று கூடி முன்னம் வணங்கினர். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர் முன்பு, அந்தத் தொண்டர்கள் வந்து சேர்ந்தபோது அவர் அடிமைப் பண்பில் தலைநின்று, முத்துச் சிவிகையினின்றும் இறங்கி, வணங்கும் இயல் பைப் பார்த்து, எண்ணம் பெருக்கிய தொண்டர்கள் 'அரகர' என்று எழுப்பிய ஒலி உலகத்தில் பரவ, நிலத்தில் விழுந்து எழுந்து, வானம் அளாவ மகிழ்வொலி செய்தனர்.
குறிப்புரை:

பெருகும் சிறப்புக் கொண்ட சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர், ஒளி பொருந்திய திருநீற்றுக் கோலம் திருமேனியினில் விளங்கிட, உள்ளத்தில் சிவபெருமான் மீது கொண்ட அன்பையே அணிகலனாகவுடைய அடியவருடன், வான் அளாவ உயர்ந்த நக ரத்து மதில் புறவாயிலுள் புகுந்தபோது, நகர்ப் புறத்தினின்றும் வந்து கூடிய மக்கள், பிள்ளையாரைக் காண்கின்ற ஆசையினால் வரிசை யாய்க் கைகளைத் தலைமீது குவித்தவாறு வணங்கினர்.
குறிப்புரை:

அகன்ற நீண்ட தெருவினிடையே கூடிய தொண் டர்களின் முழக்கம் எழ, கயல்மீன் போன்ற நீண்ட கண்களை உடைய பெண்களும் காதலால் மிக்க மக்களும், மேகம் மழைபெய்தது போல் பூக்களுடன் பொன் சுண்ணப் பொடியைத் திருமேனியில் ஒவ்வுமாறு தூவி வாழ்த்துக் கூறி இருமருங்கிலும் நின்று கவரி வீசினர்.
குறிப்புரை:

இங்ஙனம் எல்லோரும் இன்பம் அடையுமாறு சேர்பவரான ஞானசம்பந்தர், சுருண்ட நீண்ட சடையையுடைய சிவ பெருமான் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் பலகோயில்களுள் இடைப் பட்ட கோயில்களை வணங்கிச் சென்று, மலையரசன் மகளான உமையம்மையாரின் நிலைபெற்ற பூசனையை என்றும் மகிழ்ந்து ஏற்றருளும் ஏகம்பரான இறைவரின் திருக்கோயில் முன்பு சேர்ந்தனர். காஞ்சி நகரில் கோயில்கள் பல உளவாதலை முன்னரும் (பா. 1153) ஆசிரியர் குறித்துள்ளார். அக்கோயில்களுள் தம் வழியிடைப்பட்ட கோயில்களை வணங்கிச் சென்றனர் பிள்ளையார்.

ஏகம்பவாணரான இறைவரின் திருக்கோயில் வாயிலை நோக்கி, கைகளைக் குவித்துத் தலைமேற் கொண்டு வணங்கி, வானளாவ ஓங்கி நிற்கும் கோபுரத்தின் முன் வணங்கி, கோயிலுள் சென்று சேர்ந்து, அழகிய பொன் மாளிகையின் புறச் சுற்றில் அன்பர்களுடன் வலமாக வந்து, உலகம் உய்யுமாறு தோன்றி யருளிய ஞானசம்பந்தர் வணங்குவாராய்,
குறிப்புரை:

சிவந்த பொன்மயமான மலையரசனின் மகளா ரான கொடிபோன்ற காமாட்சியம்மையார் தழுவக்குழைந்த மேனியை யுடைய ஏகம்பரநாதரை, திருமுன்பு சென்று வணங்கும் கவுணியர் தலைவரான ஞானசம்பந்தர், துளிக்கும் துளிகளாகி அருவி எனக் கண்ணீர் பெருகத் திருமேனியில் மயிர்க்கூச்செறிந்து, தம் உள் ளத்தில் நிறைந்து பெருகும் பெருவிருப்பம் உந்த, நிலத்தின்மீது விழுந்து வணங்கியவராய்,
குறிப்புரை:

பலமுறையும் வணங்கி எழுந்து, தாமரையனைய சிவந்த கைகள் குவிய, மலர்கின்ற திருமுகத்தில் தோன்றிய அழகிய ஒளி விளங்கும் வாக்கினால் 'மறையானை' என உலகம் உய்யுமாறு தொடங்கி, உள்ளம் உருகிய அன்பு எலும்பையும் உருக்குவதால் பொருந்திய பண்ணும் தாளமும் கூட நிரம்பிய தன்மையில், இவ்வாறாய மெய்ப்பாடுகள் நிகழ அருளிய பதிகம் 'மறையானை' (தி. 2 ப. 12) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த திருப்பதிகமாகும்.

பன்றியும் அன்னமுமாய் உருவெடுத்து முறையே அடியும் முடியும் தேடியவர்களான இருபெருந் தேவர்களும் அறிதற்கு அரியராய் நிமிர்ந்த இறைவரின் திருமகனாரான பிள்ளையார், பாடி னார், பணிந்தார், அன்பினால் நிறைந்த ஆனந்தக் கூத்து ஆடினார் மனம் குழைந்து உருகினார், கைகளைக் குவித்த அஞ்சலியைத் தலை மேல் கொண்டார், உடல் எங்கும் மயிர்கூச் செறியப் பெற்றார். சூகரம் - பன்றி.

பொருந்திய ஏழிசைகளையும் வாக்கானது பொழிய, மனத்தினின்றும் மேலிட்டு எழும் அன்பினால் கண்களில் நீர் ஊற்றெடுத்துப் பெருகப் பெருமையுடைய சீகாழியில் தோன்றிய ருளிய பெருந்தகையாரான பிள்ளையார், உள்ளம் உருகுவதற்குக் காரணமான அன்பு மனத்தை அலையச் செய்ய, காமாட்சியம்மையார் தழுவக் குழைந்த ஏகாம்பரநாதரை அநுபவித்த மெய் உணர்ச்சியோ டும் போற்றிசெய்து, கோயில் வெளிப்பக்கத்தை அடைந்தார். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

தம்முடன் வந்தருளிய திருத்தொண்டர்களுடன் சென்று, தாம் எழுந்தருளும் பேறுபெற்ற திருமடத்தில், பெறற்கரிய பேறான சிஞானத்தை உலகம் உய்யும் பொருட்டாய்ப் பெற்று, அவ் வாறே உலகுக்கு அருளும் ஞானசம்பந்தர், இறைவரை மறவாத பெரு விருப்புடன் வந்து மகிழ்ச்சியுடன் தங்கியருள்வார், அறங்கள் எல்லா வற்றையும் வளர்த்து வரும் உமையம்மையார் எழுந்தருளியுள்ள பெரிய செல்வம் பொருந்திய காமக் கோட்டத்தை அடைந்து வணங் கினார். இறைவனையன்றித் தனித்து அம்மையாரையும் வணங்கியதாகக் குறிக்கும் இடம் இஃது. சுந்தரரும் இவ்வாறு வணங் கியமையைப் பின் (தி. 12 பு. 29 பா. 84) காண்க.

திருஏகம்பத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் செழுமை பொருந்திய ஞானச் சுடரான இறைவரின் திருவடிகளை வழிபட வேண்டிய காலங்களில், ஒரு பொழுதும் தவறாது உள்ளம் உருகிப் பணிகின்றவராய், ஞானசம்பந்தர், அணிபொருந்திய 'திரு இயமகமும்', பொருளால் வளர்கின்ற 'திருவிருக்குக்குறளும்', மேலும் பெருகுகின்ற இசை பொருந்திய திருப்பதிக மாலையையும் இறை வருக்கு அணிவித்தார். திருஏகம்பத்தில் பாடிய பதிகங்கள்:1. திருஇயமகம்: பாயும் மால்விடை (தி. 3 ப. 114) - பழம்பஞ்சுரம். 2. திருவிருக்குக்குறள்: கருவார் கச்சி (தி. 3 ப. 41)) - கொல்லி. 3. மேலும் பாடிய பதிகமாலை: வெந்த வெண்பொடி (தி. 1 ப. 133) - மேகராகக் குறிஞ்சி.

பெருகிய சோலைகள் சூழ்ந்த 'திருக்கச்சி நெறிக்காரைக்காடு' என்னும் திருக்கோயிலைச் சென்று வணங்கி, அணியும் பிறையான கண்ணியையுடைய இறைவரின் துணையான மலர் அனைய திருவடிகளைப் பாடி, கூத்தியற்றும் இறைவர் இனிதாய் வீற்றிருக்கும் 'திருக்கச்சிஅனேகதங்காவதம்' என்னும் திருப்பதியைப் போற்றி, அருகில் உள்ள பல கோயில்களையும் பணிந்து போற்றி அங்குத் தங்கியிருக்கும் நாள்களில், திருக்கச்சிநெறிக்காரைக்காட்டில் அருளிய பதிகம் 'வாரணவு' (தி. 3 ப. 65) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருக்கச்சிஅனேகதங்காவதத்தில் அருளிய பதிகம் கிடைத்திலது. 'மாடு திருத்தானங்கள்' என்பன காஞ்சியிலும் அதற்கு அண்மையிலும் உள்ள பல கோயில்களுமாம்.

எட்டுத் திசைகளில் உள்ளவர்களும் போற்றும் திருப்பதியான காஞ்சிபுரத்தின் புறத்தில், திருத்தொண்டர்களுடன் கூடி இனிதாய்ச் சென்று, முன்நாளில் நஞ்சை உண்டு அதனால் கருநிறம் உடைய கழுத்தையுடைய இறைவர் மகிழ்வுடன் வீற்றிருக்கும் 'திரு மேற்றளி' முதலான பதிகளில் சென்று போற்றிச் செறிந்த பெருங் காதலால் வணங்கி, திருக்கச்சி நகரில் மீண்டும் இனிதாய் எழுந்தருளித் தங்கியிருந்தார். திருமேற்றளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.

இவ்வாறு காஞ்சி நகரத்தில் மிக்க விருப்புடன் இறைவரை வணங்கியவாறு விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பிள்ளையார், கூறுதற்கரிய புகழுடன் கூடிய பாலியாற்றின் தெற்குக் கரையின் வழியில் சென்று, நஞ்சு விளங்கும் கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற 'திருமாற்பேற்றை' மகிழ்ச்சியுடன் வணங்கி, முப்புரங்களை எரித்த சிவபெருமானுக்குச் சொல் மாலை ஆன திருப்பதிகம் சாத்தியருளினார். இவ்வாறு காஞ்சி நகரத்தில் மிக்க விருப்புடன் இறைவரை வணங்கியவாறு விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பிள்ளையார், கூறுதற்கரிய புகழுடன் கூடிய பாலியாற்றின் தெற்குக் கரையின் வழியில் சென்று, நஞ்சு விளங்கும் கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற 'திருமாற்பேற்றை' மகிழ்ச்சியுடன் வணங்கி, முப்புரங்களை எரித்த சிவபெருமானுக்குச் சொல் மாலை ஆன திருப்பதிகம் சாத்தியருளினார்.

திருமாற்பேற்றில் வீற்றிருக்கும் இறைவரின் திருவருளைப் பெற்று, அங்கிருந்து எழுந்தருளிச் சென்று, கரிய நிறம் கொண்ட திருமால் பன்றி வடிவு எடுத்தும் காண இயலாத திரு அடிகளைச் சுமந்து வரும் வலிமை பெற்றுள்ள இளைய விடையை உடைய இறைவரின், திருவல்லம் என்னும் பதியினை வணங்கித் தம் இறைவர்க்குத் திருப்பதிகமான மாலையைச் சார்த்தியருளினார். இப்பதியில் அருளிய பதிகம் 'எரித்தவன் முப்புரம்' (தி. 1 ப. 113) எனத் தொடங்கும் வியாழக்குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

அவ்விடங்களிலுள்ள திருப்பதிகளில் திருமா லுக்கு அரியவரான இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருகும் நீரைக் கொண்ட பாலியாற்றின் அருகே வடபாலில் இறைவர் எங்கும் எழுந்தருளியுள்ள திருப்பதிகளையெல்லாம் வணங்குவாராகி, திருஇலம்பையங்கோட்டூரினைத் தொழுது, சிவந்த கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாகச் செலுத்தி வருபவரைத் திருப்பதிகம் பாடி யருளினார். பாலியாற்றின் வடபாலுள்ள திருப்பதிகளாவன திருச்சுரபுரம், விரிஞ்சிபுரம், மகாதேவமலை, தீக்காலி, வள்ளிமலை முதலாயினவாகலாம் என்பார் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில. திருஇலம்பையங்கோட்டூரில் அருளிய பதிகம் 'மலையினார்' (தி. 1 ப. 76) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

திருத்தொண்டர்கள் பலரும் தம்மைச் சூழ்ந்து வரத் திருவிற்கோலம் என்ற திருப்பதியைத் தொழுது, மெய்ப்பொருளைப் புலப்படுத்தும் திருப்பதிகமான மாலையினைச் சிவபெருமான் திரிபுரம் எரித்த பொருண்மை அமையப் பாடியருளி, அருளுடைய சீகாழிப் பிள்ளையார் 'தக்கோலம்' என்ற பதியைச் சேர்ந்து, விருப்பத்துடன் அங்கு அமைந்திருக்கும் 'திருவூறல்' என்ற கோயிலில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கினார். திருவிற்கோலத்தில் அருளிய பதிகம் 'உருவினார்' (தி. 3 ப. 23) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணில் அமைந்த திருப் பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் 2, 4, 6, 7, 9 ஆகிய பாடல்களில் முப்புரம் எரித்தமை அருளப்படுகின்றது. அதனை உளங்கொண்டே ஆசிரியர் சேக்கிழார் இங்ஙனம் அருளுவாராயினர். இங்குள்ள இறை வரின் தீண்டாத் திருமேனியின் நிறம் பருவ காலத்திற்கேற்ப மாறு படுகிறது என்பர். தக்கோலம் எனும் பதி பழங்காலத்தே திருவூறல் எனும் பெயரில் வழங்கப்பட்டது. எனினும் தக்கோலம் ஊர்ப் பெயராகவும், திருவூறல் கோயில் பெயராகவும் கருதத்தக்கதாம்.

வணங்கிப் பலமுறையும் போற்றித் தேவ குருவான வியாழனின் தம்பி சம்வர்த்த முனிவர், குற்றம் இல்லாத தவத்தைச் செய்து போற்ற எழுந்தருளிய இறைவரைப் போற்றி, அன் பால் மலர்ந்த குற்றம் இல்லாத செழுந் தமிழ் மாலையான பதிக இசையைப் பாடி, எல்லாவற்றையும் படைத்தளித்த இறைவரிடம் விடைபெற்று முத்தமிழ் வல்லுநர் சென்றார். இப்பதியில் உள்ள கோயிலின் பெயர் திருவூறல் என்பதாகும். இறைவனின் திருவடிகளிலிருந்து நீர் பெருகி வருதலின் இப்பெயர் பெற்றது. இப்பதியில் அருளிய பதிகம் 'மாறில் அவுணர்' (தி. 1 ப. 106) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும்.

இப்பதியில் உள்ள கோயிலின் பெயர் திருவூறல் என்பதாகும். இறைவனின் திருவடிகளிலிருந்து நீர் பெருகி வருதலின் இப்பெயர் பெற்றது. இப்பதியில் அருளிய பதிகம் 'மாறில் அவுணர்' (தி. 1 ப. 106) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும். 'பதிபிறவும்' என்றது மணவூர், திருஎவ்வளூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

இப்பிறவியில் இம்மண்ணுலகத்தில் எவரும் நேரில் காணும்படி, ஏழ் உலகத்தவரும் போற்றுமாறு எம்மை ஆளு கின்ற அம்மையாரான காரைக்கால் அம்மையார், தம் திருத்தலையி னால் நடந்து சென்று போற்றிய அம்மையப்பர் வீற்றிருக்கின்ற பதி இத்திருவாலங்காடாகும் என்று உள்ளத்தில் எண்ணி, தம்மை ஆளு டைய இறைவரின் பழமை பொருந்திய அவ்வூரைக் காலால் மிதித்து உள் செல்ல அச்சம் கொண்டு, சீகாழியில் தோன்றியருளிய பிள்ளை யார், அப் பதியின் அருகில் சாரச் செம்மை நெறியினின்று சற்றும் வழுவாத தூய ஒழுக்கமுடையவர்கள் வாழ்கின்ற ஒரு செழுமையான நகரில் சென்று இரவிலே தங்கி உறங்கலானார். இத்திருப்பதி யாதெனத் தெரிந்திலது.

மாலைப் பொழுது கழிய நடுயாமத்தில் பள்ளி கொண்டருளும் வேதியரான பிள்ளையாரின் கனவில் வெளிப்பட்டுத் திருவாலங்காட்டில் வீற்றிருக்கும் இறைவர், 'நம்மைப் பாடுவதற்கு மறந்தாயோ?' என்று வினவியருள, உலகம் இருள்நீங்கி உய்யும் பொருட்டுத் தோன்றியருளிய சீகாழித் தலைவர், அந்நள்ளிருள் யாமத் தில் உறக்கத்தினின்று உணர்ந்து எழுந்து, கடலில் உண்டான நஞ்சை உண்டருளிய சிவபெருமானின் திருவருளைப் போற்றி, மெய் உருகித் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.
குறிப்புரை:

'துஞ்ச வருவாரும்' என்று தொடங்கி ஓசையுடைய மறைநெறி தவறாதவாறு பாடிய பாடலில், குறைவற்ற வகையினால் அறநெறிவழுவாத பழையனூர் வேளாளர், தாங்கள் கூறிய சொல்லைத் தவறாது காத்து, அருள் பெற்ற வரலாற்றைச் சிறப்பித்துப் பாராட்டி, கரிய யானையை உரித்த இறைவரின் திருவருளேயாகும் இது என்று அவர் அருள் செய்யும் தன்மையைத் திருக்கடைக்காப்பில் வைத்து, குறிஞ்சியாழ்ப் பண் அமைதித் திறமும் கிழமையும் பொருந்தப் பாடினார்.
குறிப்புரை: 'துஞ்ச வருவாரும்' எனத் தொடங்கும் திருப்பதிகம் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகம் எனத் திருமுறையில் குறித்துள்ளனர். (தி. 1 ப. 45). எனினும் ஆசிரியர் சேக்கிழார், பஞ்சுரமாம் பழையதிறம் கிழமை கொள்ள (அஃதாவது குறிஞ்சியாழ்த்திறன் வகைகளுள் ஒன்றான பழம்பஞ்சுரமாகப்) பாடினார் என்றருளுகின்றார். தமிழோடு இசைப்பாடல் திறனையும் ஒருங்கு அறிந்த அறிஞர்களால் இஃது ஆராயத் தக்கதாம்.

எக்காலத்தும் நிலைபெறும் இசையமையந்த திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி, பின் நீண்ட இரவின் இருள் புலர்ந்த பகற் காலத்தே, திருத்தொண்டர்களின் கூட்டம் வந்து சேர்ந்த போது, இரவில் திருவாலங்காட்டுப் பதியில் ஆடுகின்ற இறைவர், தமக்கு அருள் செய்த பாங்கை எல்லாம் அவர்களுக்குச் சொல்லி, அத்திருப் பதிகத்தைத் திரும்பவும் உள்ளம் மகிழப் பாடிப் போற்றிய பின்பு, பெரியவர்கள் வாழ்கின்ற அப்பதியை வணங்கி அகன்று போய்த் 'திருப்பாசூர்' அருகில் செல்வாராய், சேடர் - பெருமை மிக்கோர்.

திருப்பாசூரை அணைந்து, அங்கு அச்செழும் பதியார் வந்து எதிர்கொள்ளப் பதியுள் போய்ப் புகுந்து, மலை அரச னின் மகளான பார்வதி அம்மையாரை இடமருங்காகக் கொண்ட பழமை உடையவரும், மூங்கிலை இடமாகக் கொண்டவருமான இறைவரின் திருக்கோயிலுள் விருப்பத்துடன் வலமாக வந்து, உள்ளே புகுந்து, இறைவரின் திருமுன்பு, நிலம் பொருந்த விழுந்து வணங்கி எழுந்து, திருமேனி முழுதும் மயிர்க்கூச்செறிய நின்று, அருட்கருணை என்ற செல்வத்தை உடைய இறைவரின் திருநாமத்தைச் 'சிந்தை யிடையார்' எனத் தொடங்கி இசையுடன் கூடிய அத்திருப்பதிகத்தைப் பாடியருளினார். 'சிந்தை யிடையார்' எனத் தொடங்கும் பதிகம் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும் (தி. 2 ப. 60). இம்முதற் பாடலில் வரும் தொடர்கள் பலவும் பெருமானின் திருப்பெயர்களாய் அமைந்திருக்கு மாறும் காணலாம்.

பிள்ளையார் நிலைபெறும் இசையையுடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிச் சென்று, அப்பதியில் எழுந்தருளி யிருந்தவர், பின்பு அத்திருப்பதியின் அருகில் இறைவர் எழுந்தருளி இருக்கும் திருவெண்பாக்கம் முதலான பிற பதிகளையும் வணங்கிச் செல்வாராய், பெருகும் அன்பால் முன் திருவாய் நிறைந்த நீரால் இறைவரைத் திருமுழுக்காட்டும் முதல்வரான கண்ணப்ப நாயனாரை எண்ணி, விளங்கும் திருக்காளத்தி மலையைத் தொழுவதற்குப் பொருந்திய பெருவிருப்புடன் மகிழ்ந்து சென்றருளினார். திருவெண்பாக்கம் முதலாயுள்ள பதிகள் திருக்கள்ளில் முதலாயினவாகலாம். திருவெண்பாக்கப் பதிகம் கிடைத்திலது. திருக் கள்ளிலில் அருளிய பதிகம் 'முள்ளின்மேல் முதுகூகை' (தி. 1 ப. 119) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்ததாகும்.

மிக்க பெருவிருப்புடனே தொண்டர் சூழ்ந்து வர, மெல்லியதாய்ப் பாய்கின்ற நீர்வளம் கொண்ட பாலியாற்றின் வடகரையில் உள்ள நாட்டின் பகுதியை நீங்கி, மலையும் காடுக ளுமாய்ச் சேர்ந்து நெருங்கிய வலிய காட்டிடங்களை அடைந்து, சூலமும் மண்டை ஓடும் கையில் கொண்டு ஒளி விளங்கும் திருமேனி யையும் மூன்று கண்களையுமுடைய இறைவரின் இடமாகிய மேகம் சூழ்ந்த 'திருக்காரிகரையினை' முன்னர்ச் சென்று, இறைவரை வணங் கிப் போற்றி, அப்பதியில் தங்கித் தொண்டருடன் ஞானசம்பந்தர் மகிழ்ந்திருந்தார். இப்பதியில் அருளிய பதிகம் கிடைத்திலது. பாலியாறு ஊற்றுநீர் சுரக்க வருவதாதலின், அதனைச் சூழ்ந்த நாட்டை 'மென் புனல் நாடு' என்றார்.

சிவபெருமானின் திருக்காரிகரையைத் தொழுது, மேற்சென்று அளவில்லாத பெரிய மலைகளின் இருபக்கங்களிலும் எங்கும் நீர் நிறைந்த அருவிகள் பல வரிசையான மணிகளையும் பொன்னையும் நிறைந்த நீர்த்துளிகளையும் பக்கங்களில் நிரம்பச் சிதற, ஒலிக்கின்ற கழலை அணிந்த தேவேந்திரனின் வச்சிரப் படைத் தாக்குதலால் அறுபட்ட இறகுகளைப் பெற்று, அவன் மீது போருக்கு எழுவதற்காகச் சிறகுகளை விரித்துப் பறக்க முயன்று உயர்ந்தன போன்ற காட்சிதரும் மலைகள் சூழ்ந்த நாட்டின் பகுதியில் எழுந்து அருளிச் செல்பவராய், மலைகள் ஒருகால எல்லையில் சிறகுடையனவாய்ப் பறக்கும் நிலையில் இருந்தன என்றும், அச்சிறகுகளை ஒரு காலத்தில் இந்திரன் அரிந்தனன் என்றும் பண்டைப் பனுவல்கள் கூறுகின்றன. அதனை உளங் கொண்டே சேக்கிழார் அவ்வாறு சிறகை யரிந்த இந்தி ரனை, மலைகள் மீண்டும் சிறகுகள் பெற்று, அவனை அழிக்க முயல் வன போன்று, அம்மலைகளினின்று இழிந்து வரும் அருவிகள் விளங்குகின்றன என்றும் கூறுகின்றார். மலைகள் - பறவைகள். அருவிகள் அவற்றின் சிறகுகள் இது தற்குறிப்பேற்ற அணியாம்.

திருத்தொண்டர்களின் கூட்டம் பரந்து செல்ல, அழகிய முத்துச் சின்னங்கள் உண்டாக்கும் ஓசை அளவில்லாது எழ, திருநீறு நிறைந்த கடல் அணைவதைப் போல் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் வரும்போது, திருச்சின்னங்களின் ஒப்பில்லாத ஒலி பல முறையாலும் மேன்மேல் மிக, எங்கும் 'திருஞானசம்பந்தர் வந்தார்' என்று உண்டாகும் ஒலி நிறைந்த காதுகளை உடையன ஆதலால், ஐந்து அறிவுடைய விலங்குச் சாதிகள் எல்லாம் தம் இயல் பான தீமையின்றி நன்மை பொருந்திய நினைவு ஒன்றையே மேற் கொண்டு பக்கங்களில் வந்து பொருந்த, ஞானசம்பந்தர் எனும் திருப்பெயரைக் கேட்ட அள வில், பொல்லா விலங்குகளும் புன்மை நீங்கி நன்மை பெருக அவரை எதிர் கொள்வனவாயின.

வேடுவர் குலத்தை உலகமானது போற்றுமாறு, அக்குலத்தில் வந்து தோன்றிய கண்ணப்ப நாயனாரின் திருவடிகளில் அணிந்த செருப்புத் தேயுமாறு பெரிய கட்டமைந்த வில் வேட்டை ஆடும் காடுகளும், வானத்தை மறைக்குமாறு நீண்ட பெரிய மரச் சோலைகளும், தூறுகளும், தேவர்களும் போற்றும் பெருமையுடைய அளவில்லாத மற்ற இடங்களும் ஆகியவற்றையெல்லாம் கடந்து சென்று, திருக்காளத்தி மலையை அணுகச் சென்றார் சீகாழித் தலைவர். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

அழகிய இமவானின் மகளாரான கொடி போன்ற உமையம்மையாரின் திருமுலைப்பாலில், குழைத்த ஞான அமுதத்தை உண்ட 'ஆளுடைய பிள்ளையார் வருகின்றார்' என்று எண்ணி, மேருமலையை வில்லாகக் கொண்ட இறைவரின் திருக் காளத்தியில் உள்ள திருத்தொண்டர் கூட்டம் நெருங்கி வர, நெருங் கிய சடையையுடைய முனிவர்களும், மண்டை ஓட்டை ஏந்தும் காபாலியர்களும், மற்றும் மாவிரதம் முதலான பற்பல வேடங்களை உடைய சைவர்களும், மேன்மையான தவம் செய்தவரும், அப்பதி யில் உள்ளவருடன் கூடி மகிழ்ந்து, எதிர் கொள்ள, அவர் அருகே சேர்ந்தனர்.
குறிப்புரை:

எல்லாத் திசைகளிலும் திருநீற்றின் ஒளி பரவ, 'இந்த உலகத்தில் சிவலோகம் வந்து சேர்ந்தது' எனக் கூறுமாறு சென்றபோது, மேலே விளங்கும் அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி, மறைகளில் வல்ல ஞானசம்பந்தர், வணங்கி, எதிர் கொண்ட மன அசைவற்ற பெரிய திருத்தொண்டர் கூட்டம் தொழுது வணங்கி 'அர அர!' என்ற பேரொலியால் அண்டம் முழுதும் நிறையுமாறு செய் யப் புகழினால் எங்கும் விளங்கும் தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி, 'இங்குத் தோன்றும் மலைகளுள் திருக்காளத்தி மலை எது?' என்று வினவினார்.
குறிப்புரை:

எதிர்கொண்டு வரவேற்ற தொண்டர்கள் ஞான சம்பந்தரை வணங்கி 'மறையவர்களின் வாழ்வாகியவரே! சைவத் தலைவர்களுள் சிறந்தவரே! நம் எதிரே தோன்றும் இம் மலைதான், முன்நாளில் 'காளன்' என்னும் பாம்பும், 'அத்தி' என்னும் யானையும், தம்முள் மாறுபட்டுத் தம்மைப் பூசை செய்த இறைவர் எழுந்தருளி யுள்ள கேடில்லாத சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும்' என உரைப்ப, அப்போது ஞானசம்பந்தர் விழுந்து வணங்கி எழுந்து, கைகளைத் தலைமீது குவித்து, மனத்துள் மிக்க மகிழ்ச்சி எழுதலால் 'வானவர்கள் தானவர்கள்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் திருவிராக அமைப்பில் பாடியவாறு மேற்செல்வாராய், 'வானவர்கள் தானவர்கள்' எனத் தொடங்கும் பதிகம் சாதாரிப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 3 ப. 69). 'வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன் மலராகு நயனம், காய்கணையினாலிடந்து ஈசன் அடிகூடு காளத்திமலையே' எனக் கண்ணப்பரைப் பிள்ளையார் போற்றப்பெறும் சிறப்பே இங்கு எடுத்து மொழியப்படுகிறது.

திருந்திய இனிய பண்ணமைதி பெறத் திருக் கண்ணப்பரின் திருத்தொண்டைச் சிறப்பித்துப் பாடியருளி, பொரு ந்திய பெரிய திருத்தொண்டர் கூட்டம் சூழ்ந்து போற்ற எழுந்தருளி வந்து, பொன்முகலி யாற்றின் கரையை அடைந்து, வணங்கிச் சென்று, அரிய தவத்தவர்களான திருத்தொண்டர்கள் எம்மருங்கும் சூழ்ந்து வர, ஆளுடைய பிள்ளையார், நான்முகனும் திருமாலும் தேடிக் காண இயலாத மருந்தான இறைவர், வெளிப்பட எழுந்தருளியிருந்த திருக் காளத்தி மலையின் அடிவாரத்தினை அணுக வந்து, நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கினார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

ஞானசம்பந்தர் தாழ்ந்து எழுந்து அம்மலையை வணங்கியவாறே அகன்ற மலைப்படிகளின் வழியே ஏறிச் சென்று, வாழ்வடைந்த தேவர்களின் கூட்டம் நெருங்கியுள்ள மணிகளை உடைய நீண்ட திருவாயிலின் முன் வணங்கிக் கோயிலுள் புகுந்து, அக்கோயிலை வலமாக வந்து, இறைவரின் திருமுன்பு சார்ந்து, தொழுது, தலையின் மேலே கூப்பிய சிவந்த திருக்கைகளுடன் போற்றி, நிலம் பொருந்த விழுந்து வணங்கி, எழுந்து செல்பவராய், அவ்வாறு கும்பிட்டதன் பயனைக் காண்பவரைப் போல், மெய்ம்மையான வேடர் பெருமானாம் திருக்கண்ணப்ப நாயனாரைக் கண்டு அவரு டைய அடிகளில் வீழ்ந்தார். காளத்தி இறைவரை வணங்கும் பேறு தேவர்களுக்குக் கிடைத்தமையின் 'வாழ்வடைந்து' என்றார். உயிர்கட்கு இறைவனை வணங்குதலே பெரும்பயன்; அப்பயனுக்கும் பயன் அவன் அடியார் களை வணங்குதலாம் என்பார் , 'கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்' என்றார். 'பேணலால் எம்மைப் பெற்றார்' என்பதால், அடியவர்தாமும் இறைவனையே தம் மனத்தகத்துப் பெற்றிருத்தலின், அவரை வணங்குதல் பயனுக்குப் பய னாயிற்று. சிலாதலம் - மலை. சோபானம் - படிப்படியாகப் படிகளின் வழியே ஏறிவருதல்.

மனத்தில் தெளிவாய்க் கொள்கின்ற அன்பின் மெய்ம்மையான வடிவத்தையும், அந்த அன்பினுள் நிலையாய் வீற்றிருக்கின்ற கங்கை தாங்கிய சிவந்த சடையையும் நெற்றியில் சிவந்த விழியையும் உடைய குற்றமற்ற இறைவரையும் ஒருசேர ஓரிடத்தில் கண்டதால் ஆன விருப்பமும் மேலிடத்தினின்றும் பள்ளத் தில் இழிந்து ஓடும் நீர்போல் மேன்மேல் மிக பசும்பொன் மலை மன்னன் மகளான கொடிபோன்ற உமையம்மையார் அருளுடன் அளித்த செம்பொன் கிண்ணத்தில் ஞானஅமுதை உண்டருளிய ஞான சம்பந்தர் மகிழ்ந்து வணங்கி எழுந்து பலமுறையும் வணங்குவாராகி,
குறிப்புரை:

தாமரை போன்ற கண்களினின்றும் கண்ணீர் வழிந்தோட நின்று, போற்றும் பண் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடி, ஆனந்தக் கூத்தாடி, தம் உள்ளத்துள் தங்கிக் கிடக்கும் பெருங்களிப்பும் காதலும் வலிந்து தம்மை அங்கேயே தகைத்து நிறுத்த, அதனால் தம் பெருமானின் திருவடிகளைப் போற்றி நிற்கும் இயல்பு நீடித்தலால், அங்கிருந்து அரிதாக வெளியே போந்து, நான்முகனும் திருமாலும் போற்றுதற்கரிய இறைவரின் திருக்காளத்தி மலையின் அடியில் வந்து அணைந்து, வணங்கிச் சென்று, பெருகிய தொண்டர்கள் திருமடத்தைக் காட்டச் சென்று, புகுந்த பிள்ளையார் அங்குத் தங்கியிருந்தார். இதுபொழுது அருளிய திருப்பதிகம் கிடைத்திலது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

யாவரும் அறிதற்கரிய இறைவரை, ஏழ் உலகங்களையும் உடையவரை, எண்ணிறந்த தேவர்களின் தலை வரை, திருக்காளத்தி மலையின் மீது வீற்றிருக்கும் சிவந்த தேனை, மலர் கள் மலரும் சோலை சூழ்ந்த சீகாழியை ஆளும் வேந்தரான திருஞான சம்பந்தர், உரிய காலங்கள் தோறும் சென்று திருக்கோயிலுள் புகுந்து, பதிகம் என்ற மலர் கொண்டு அருச்சனை செய்து, போற்றிப் பருகி, நிறைவாகத் துய்த்துச் செம்மையான பண்புகளால் இனிய அத்திருப் பதியைப் பொருந்தித் தங்கியிருந்த அந்நாள்களில், உரிய காலங்கள் தொறும் சென்று பாடிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.

அவ்விடத்திற்கு, வடக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளில் அரிய தமிழின் வழக்கு நிகழாததால், ஞானசம்பந்தர், பிறைச் சந்திரனைச் சூடிய முடியையுடைய இறைவரின் பிற பதிகள் தோறும் சென்று திருப்பதிகத் தமிழ் இசைபாடும் செயல் போல், தேவர்கள் தொழுது போற்றுமாறு எழுந்தருளியிருக்கும் சிவபெரு மானின் வடகயிலை மலையை இங்கு இருந்தபடியே வணங்கித் திருப்பதிகம் பாடிச் செந்தாமரை மலர்கள் மலர்வதற்கு இடமான நீர் நிலைகளைக் கொண்ட திருக்கேதாரத்தையும் வணங்கித் திருப்பதிகம் இசையுடன் பாடி, இப்பதிகளை நோக்கி அருளிய பதிகங்கள்:1. வடகயிலை:- 1. பொடிகொள் உருவர் (தி. 1 ப. 68) -தக்கேசி. 2. வாளவரி (தி. 3 ப. 68) - சாதாரி. 2. திருக்கேதாரம்:- தொண்டர் (தி. 2 ப. 114) - செவ்வழி.

இயமனைக் காலால் உதைத்த இறைவர் மகிழ்ந் தருளும் கோகரணத்தைப் பாடி, விடையின் மீது எழுந்தருளி வரும் இறைவரின் இந்திரநீலபருப்பதத்தையும் பாடி, மற்றும் போற்றுதற்குரிய செம்மலர்களால் திருப்பதிகள் பிறவற்றையும் பாடி, சீகாழிப் பதியினரின் தலைவரான ஞானசம்பந்தர், தூய திருநீற்றின் விளக்கம் மிகுகோலமுடைய தொண்டர்கள் சூழ்ந்து வர, மிகவும் மகிழ்ந்து அப்பகுதியில் தங்கி இருப்பவராய், இப்பதிகளை நோக்கியருளிய பதிகங்கள்:1. திருக்கோகரணம்: என்றும் அரியான் (தி. 3 ப. 79) - சாதாரி. 2. திருப்பருப்பதம்: சுடுமணி (தி. 1 ப. 118) - வியாழக் குறிஞ்சி. 3. திருஇந்திரநீலப் பருப்பதம்: குலவு பாரிடம் (தி. 2 ப. 27) - இந்தளம். மற்று இறைவர் தானம் பிறவும் என்பன: வாரணாசி, அனேக தங்காவதம், கோடீச்சுரம், சோமேசம், பீமேசம், பிரயாகை, மதுரை, காஞ்சி, அவந்திகை முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவற்றுள் பதிகம் கிடைத்துள்ள பதி ஒன்றே. அது - அனேகதங்கா வதம்: பதிகம்: நீடல் மேவு - பண்: இந்தளம்.

தெற்குத் திக்கில் உள்ள திருக்கயிலை எனக் கூறப்படுகின்ற திருக்காளத்தியைப் போற்றி இனிதாக அங்குத் தங்கியிருப்பவர், அலைசூழ்ந்த கடலின் கரைசார்ந்த திருவொற்றி யூரில் வீற்றிருக்கும் இறைவரைச் சென்று வணங்குதலை மனத்தில் கொண்டு, அங்கிருந்து இனிய தமிழ் விரகரான ஞானசம்பந்தர், இறைவரின் திருவருள் விடைபெற்று, மீண்டு வருபவர், 'எந்தையார் இணையடி என் மனத்துள்ளவே' என்ற கருத்துடன் பொன்னும் முத் தும் கொழித்து வரும் பொன் முகலியாற்றையும் குறித்துத் திருப்பதிக இசையால் போற்றிவருவாரானார். இதுபொழுது அருளிய பதிகம் 'சந்தமாரகிலொடு' (தி. 3 ப. 36) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிக முதற்பாடல் முதல் இரண்டு அடிகளில், பொன் முகலியாற் றின் வளம் கூறி, நிறைவாக 'எந்தையார் இணையடி என்மனத்துள் ளவே' என்றருளுகின்றார் பிள்ளையார். இக்கருத்தை முகந்தே ஆசிரியர் சேக்கிழார், இப்பாடலில் அருளுகின்றார். நிறைவாகவுள்ள இக்கருத்தே, காளத்தியினின்றும் விடைகொண்டு போதருங்கால் பாடியது என அருளுதற்கேதுவாயிற்று.

நிலைபெற்ற புகழையுடைய தொண்டர் கூட்டத்துடன் மறைகள் வாழும் படியாய்த் தோன்றிய ஞானசம்பந்தர், மலைகளையும், காடுகளையும் சேர்ந்த பதிகள் பலவற்றையும் கடந்து வந்து, முழுமுதல்வராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் போற்றிச் சென்று, பலமணிகளையும் பொன்னையும் இழுத்துக் கொண்டும், அகில், சந்தனம் முதலான மரங்களை மோதி அடித்துக் கொண்டும் ஓடும் பாலியாற்றின் வடக்குக் கரையில் நிலைபெற்ற திருச்சடையில் பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் திருவேற்காட்டினைச் சிவஞான அமுது உண்ட செல்வரான பிள்ளை யார் சென்று அடைந்தார். நிலைபெற்ற புகழையுடைய தொண்டர் கூட்டத்துடன் மறைகள் வாழும் படியாய்த் தோன்றிய ஞானசம்பந்தர், மலைகளையும், காடுகளையும் சேர்ந்த பதிகள் பலவற்றையும் கடந்து வந்து, முழுமுதல்வராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் போற்றிச் சென்று, பலமணிகளையும் பொன்னையும் இழுத்துக் கொண்டும், அகில், சந்தனம் முதலான மரங்களை மோதி அடித்துக் கொண்டும் ஓடும் பாலியாற்றின் வடக்குக் கரையில் நிலைபெற்ற திருச்சடையில் பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் திருவேற்காட்டினைச் சிவஞான அமுது உண்ட செல்வரான பிள்ளை யார் சென்று அடைந்தார்.

ஞானசம்பந்தர் திருவேற்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் செழுஞ்சுடரான இறைவரின் அழகான கோயிலில் சென்று சேர்ந்து, வணங்கித் திருப்பதிகம் பாடியருளி, செந்நெறிகளை எதிர்த்துவரும் வேறுபட்ட உள்ளமுடைய பகைவரான அவுணரின் முப்புரங்களையும் எரித்த இறைவரின் 'திருவலிதாயத்தில்' வந்து போற்றி, அழகான விடையூர்தியையுடைய இறைவர் விரும்பி வீற்றி ருக்கும் குளிர்ந்த கடற்கரையில் உள்ள திருவொற்றியூரை வணங்குவ தற்குச் சென்ற போது, பெருவிருப்பம் கொண்டு வாழ்வு பெற்ற தொண்டர்களும் அப்பதியில் உள்ளவர்களும் அவரை எதிர்கொண்டு வரவேற்க அன்புடன் வந்தனர். இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:1. திருவேற்காடு: ஒள்ளிதுள்ள (தி. 1 ப. 57) - பழந்தக்கராகம். 2. திருவலிதாயம்: பத்தரொடு (தி. 1 ப. 3) - நட்டபாடை.

பெருகிய திருத்தொண்டர்கள் தொழுத வண் ணம் வந்து சேர, பிள்ளையார் தாமும் அவர்களை வணங்கிய வண் ணம் முத்துச் சிவிகையினின்றும் இழிந்து, 'விடையவன்' என்ற தொடக்கம் உடைய பதிகத்தை எடுத்துப் பாடி, கருமை பொருந்திய திருக்கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோயிலின் முன்னுள்ள கோபுரத்தருகில் வந்து, நிலத்தில் விழுந்து வணங்கிப் பொருந்திய திருக்கடைக்காப்பினையும் பாடி, இறைவரின் கோயில் வாயிலின் வழியே உள்ளே புகுந்து, வலம் வந்து, தூயவரான இறைவர் திருமுன்பு போற்றி நிலம் பொருந்த வீழ்ந்து வணங்கினார். 'விடையவன்' என்று தொடங்கும் பதிகம் பஞ்சமப் பண்ணிலமைந்ததாகும் (தி. 3 ப. 57). தொண்டர்கள் எதிர்கொள்ளத் தொடங்கிய இத்திருப்பதிகம், திருவீதி கடந்து, திருகோயிலின் முன் திருக்கடைக்காப்பு அமைய நிறைவுற்றுள்ளது. பாடல் தொறும் 'உறை யும் இடம் ஒற்றியூரே' என நிறைவு பெறுவதும், திருக்கடைக்காப்பில் 'ஒற்றியூரைச் சொன்ன' என அமையப் பெற்றிருப்பதும் இப்பதிகம் அருளப் பெற்ற இடவகைமையை அறிவதற்கு அரணாகின்றன.

பொன்னின் திரள் என முறுக்கிய சடையை உடைய இறைவர்பால் பெருகி எழுகின்ற பெருவிருப்பம் மிகவும் மேலோங்க விம்மித் திருமேனியைப் பற்றி, மேல் எழுகின்ற மயிர்க் கூச்சு மேனி எங்கும் நிரம்பப் பரவி, வழியும் கண்ணீர்ப் பெருக்குப் பாய்ந்தொழுக நின்று, சொற்பொருள் மிகவும் விளங்கும் திருப்பதிகத் தைப் பாடி, உலகம் உய்யும் பொருட்டுக் கெடுதல் இல்லாத சிவஞான அமுதுண்ட சம்பந்தர், திருவொற்றியூரில் விரும்பி அங்குத் தங்கி யிருந்தார். பொன்னின் திரள் என முறுக்கிய சடையை உடைய இறைவர்பால் பெருகி எழுகின்ற பெருவிருப்பம் மிகவும் மேலோங்க விம்மித் திருமேனியைப் பற்றி, மேல் எழுகின்ற மயிர்க் கூச்சு மேனி எங்கும் நிரம்பப் பரவி, வழியும் கண்ணீர்ப் பெருக்குப் பாய்ந்தொழுக நின்று, சொற்பொருள் மிகவும் விளங்கும் திருப்பதிகத் தைப் பாடி, உலகம் உய்யும் பொருட்டுக் கெடுதல் இல்லாத சிவஞான அமுதுண்ட சம்பந்தர், திருவொற்றியூரில் விரும்பி அங்குத் தங்கி யிருந்தார்.

இங்ஙனம் ஞானசம்பந்தர் எழுந்தருளி இருந் தார். இவ்வுலகில் புகழ்ந்து பேசப்படுகின்ற திருமயிலாப்பூர்ப் பதியில் நிலைபெற்ற புகழையுடைய பெருவணிகர் குடியில் வந்த பெருமை யுடையவரின் வாழ்நாளில் நிகழ்ந்ததொரு வரலாற்றை இனிப் புகல் வாம்.
குறிப்புரை:

அரிய செல்வ வகைகளைப் பெருக்கச் செய்வதற் காக பெரிய மரக்கலங்கள் பலவற்றையும் அலைமோதும் கடலின்கண் செலுத்தி, அவ்வணிகத்தால் திரட்டிய செல்வக் குவியல்கள் நிரம்பத் தம் இல்லத்தில் சேரும்படி கொண்டுவரும் மரக்கலன்களின் குவியல், வரிசை பெறக் குவிக்கும் பெருநிதி முதலான பெருஞ்செல்வங்களின் எல்லையில்லாத வளங்களை யுடையவராய்,
குறிப்புரை:

தம்மை உள்ளவாறு அறிந்து கொண்டமையின் அதன்பின், இன்பந் தருபவரான இறைவரிடத்தில் அடிமைத் திறத்தை மெய்ந்நெறி பிறழாது செய்யும் விருப்பத்துடன் கூடிய அன்பினால், பொய்ம்மையைக் கடிந்த மெய்ப் பொருள் இதுவே எனத் தெரிந்து கொண்ட உள்ளத்தில், செம்மை நெறியையே இடைவிடாது எண்ணி ஒழுகும் திண்மை உடையவர் ஒருவர்; அவர் சிவநேசர் என்று அழைக் கப்படுவர்.
குறிப்புரை:

தொகுதியான நீண்ட சடையையுடைய இறை வரின் அடியவர்கள் வரின், பொருந்திய செய்கையில் இடை விடாது உருகிய உள்ளத்தையும், இறைவரிடத்து அன்பு இல்லாத நெறிகளை யுடைய பிறசமயங்களை நீக்குவதில் சினம் பொருந்திய நல்லொழுக் கத்தையும் உடையராய் விளங்குவர்.
குறிப்புரை:

அவ்வாறான நாள்கள் பலசெல்ல, அரிய வேதி யரான கவுணியர் குலத்தில் தோன்றிய தலைவரான ஞானசம்பந்தப் பெருமான் சிவஞானம் உண்டதையும், உலகம் உய்யும் பொருட்டா கப் பிற சமயங்களான கொடிய சமண புத்த சமயங்களின் கீழ் நிலையை விளக்கி, அவை அடைந்திருந்த தலைமையை ஒழித்ததையும், குற்றம் இல்லாத அடியவர்கள் வந்து சொல்லக் கேட்டு மகிழந்தவராய்,
குறிப்புரை:

அருட்செல்வம் நிறைந்த சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளின்பால் அளவில்லாத ஒப்பற்ற பெரு விருப்புடன் இடையறாத அன்பு பூண்ட உணர்ச்சியால், இரவும் பகலும் இடைவிடாது அவரையே எண்ணியவராய், அவரது அருள் தன்மையையே தம் வாக்கினால் புகழ்ந்து பாராட்டுதலும் அருட் செயல்களை அன்பர்களிடம் கேட்டலுமாகிய இவையே தம் வாழ்க்கைக்குரிய செயல்களாக மேற்கொண்டவர் ஆனார்.
குறிப்புரை:

அருட்செல்வம் நிறைந்த சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளின்பால் அளவில்லாத ஒப்பற்ற பெரு விருப்புடன் இடையறாத அன்பு பூண்ட உணர்ச்சியால், இரவும் பகலும் இடைவிடாது அவரையே எண்ணியவராய், அவரது அருள் தன்மையையே தம் வாக்கினால் புகழ்ந்து பாராட்டுதலும் அருட் செயல்களை அன்பர்களிடம் கேட்டலுமாகிய இவையே தம் வாழ்க்கைக்குரிய செயல்களாக மேற்கொண்டவர் ஆனார்.
குறிப்புரை:

அரிய தன்மையுடன் அருந்தவம் ஆற்றிவரும் சிவனடியார்களுக்குரிய அளவற்ற அருச்சனைகளைச் செய்துவர, அந் நன்மையால் அவரது கரிய சிறந்த கூந்தலையுடைய மனைவியாரின் வயிறு என்னும் தாமரையில், உரிமை பொருந்திய பூமகள் போன்ற பெண் ஒருத்தி பிறந்தாள். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

நல்லநாளில் நல்ல ஓரையில் நலம் பல பெறுதற் குரிய அக்குழந்தை பிறக்க, பல பெரிய சுற்றத்துடன் பெருவணிகரான சிவநேசர், அளவற்ற செல்வங்களை முகந்து எடுத்து, யாவரும் மகிழச் செழிப்புடைய வீதியில் பொழிந்து உள்ளம் மகிழ்ந்தார்.
குறிப்புரை:

கங்கையைச் சூடிய சடையையுடைய சிவபெரு மானின் அடியார்களுக்கு, அன்பு மிகுதியினால் எல்லையற்ற பூசை களை மிகவும் செய்தும், ஒப்பில்லாத மறையவர்களுக்கு அவர்கள் வேண்டியவற்றை எல்லாம் தந்தும், இதுவே பெரும் பேறாகும் என்று சொல்லும்படி உள்ளம் மகிழ்ந்தார்.
குறிப்புரை:

குழந்தை பிறந்தவுடன் செயத்தக்க நல்ல செயற் பாடுகளையெல்லாம் முறைப்படி செய்யத் தொடங்கி, மறைவழித் தவறாது விரித்துக் கூறிய சாதகன்மம் முதலாக வரும் செயற்பாடுகளை குழந்தை பிறந்தபின் பத்து நாள்களிலும் செய்து, பெருவிருப்பம் பொருந்திய சிறப்பால் மங்கல விழாவையும் செய்தனர். குழந்தை பிறந்தவுடன் செயத்தக்க நல்ல செயற் பாடுகளையெல்லாம் முறைப்படி செய்யத் தொடங்கி, மறைவழித் தவறாது விரித்துக் கூறிய சாதகன்மம் முதலாக வரும் செயற்பாடுகளை குழந்தை பிறந்தபின் பத்து நாள்களிலும் செய்து, பெருவிருப்பம் பொருந்திய சிறப்பால் மங்கல விழாவையும் செய்தனர்.

யாவரும் பெருமகிழ்ச்சியால் இன்பத்தை அடையப் பெற்றெடுத்த பாவை போன்ற பெண்ணின் அழகு விளங் கும் பண்புகளை எல்லாம் பார்த்து, அவை திருமகளின் திருத்தகவு என விளங்கலின், அப்பெண்ணுக்குப் 'பூம்பாவை' என்ற பெயரை உலகத்தில் மேலாய் விளங்குமாறு கூறிச் சூட்டினர். பூப்பாவை - பூம்பாவையாயிற்று.

பூப்பாவை - பூம்பாவையாயிற்று. ஓராண்டில் தளர்நடை பயின்றாள்.

ஓராண்டில் தளர்நடை பயின்றாள். ஏழாண்டுகளில் பூம்பாவையினிடத்துப் பொருந்திய பொற்பு இது.

ஏழாண்டுகளில் பூம்பாவையினிடத்துப் பொருந்திய பொற்பு இது. ஏழாண்டுகளில் பூம்பாவையினிடத்துப் பொருந்திய பொற்பு இது.

பொன்னால் ஆன வளையலை அணிந்த சிறுபெண்களின் கூட்டத்துடன் கூடிச் சிற்றில்களை முற்றக் கட்டியும், அதனுடன் சமைக்கும் தொழிலில் சிறு சோற்றுடன் பொருந்திய உணவு கள் அமைத்தும், உண்டும் பழகியும், ஒளியையுடைய மணிகள் கட்டிய ஊஞ்சல் ஆடியும், இன்னும் இங்ஙனம் இன்பம் பொருந்தும் வண்டல் பயிலும் ஆடல்களை ஆடியும் வளர, இறைவனையோ இறைவியையோ அல்லது பெரியவர் களையோ பிள்ளைமைத் தன்மையில் வைத்துப் பாடுவது பிள்ளைத் தமிழாகும். இப்பூம்பாவைக்கோ உண்மையிலேயே பிள்ளைமைத் தன் மையில் இவ்வருஞ் செயல்களை வைத்துக் கூறுகின்றார் ஆசிரியர்.

தந்தையான சிவநேசரும், அந்தத் தளிர்த்த இளங்கொம்பைப் போன்ற பெண்ணுக்கு ஒத்த பண்பு இவ்வுலகத்தில் வேறு எவருக்கும் இல்லாததால், இன்பத்துடன் கூடிய களிப்புப் பொங் கிய உள்ளத்தில் மகிழ்ச்சியடைந்து, பெறற்கரிய பேறாகிய இவளை மணம் செய்து கொள்ளும் மணமகனே என் எல்லையற்ற அரிய செல் வங்களுக்கெல்லாம் உரிமை உடையவன் ஆவன் என்று சொன்னார். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.
குறிப்புரை:

அனல் வாதத்தில் தோற்று அஞ்சிய சமணர் களைப் புனல் வாதத்தால் வென்ற பின்பு, கூர்மையான கொம்பைப் போன்ற நீண்ட கழுமரங்களில் அந்தச் சமணர்கள் ஏறியதும் விருப்பத்துடன் பாண்டிய மன்னனுக்குத் திருநீற்றை அளித்து அதன்மூலம் மலையா கிய வில்லையுடைய சிவபெருமானின் திருநீற்றுச் சாதனத்தைப் போற்றுவித்தும்,
குறிப்புரை:

(ஆகிய) இவ்வரிய செயல்களை எல்லாம் அறிந் தவர் அங்குச் சொல்ல, வந்து சொன்னவர்க்கெல்லாம் பெருநிதியங் களை ஆடைகளுடன் அளித்து, நிலைபெற்ற சீகாழிப் பதியின் வள்ள லாரான ஞானசம்பந்தரை, அவர் இருந்த திசையை நோக்கித் தலைமீது கைகுவித்துக் கூப்பிக் கொண்டு நிலமுற விழுந்து, வணங்கி எழுந்து நேர்நின்று,
குறிப்புரை:

சுற்றத்தவரும் நீண்ட கிளைஞர்களும் கேட்கு மாறு, உரத்த குரலில் 'கற்றவர்களாகிய மக்கள் வாழ்கின்ற சீகாழிப் பிள்ளையாருக்கு, அடியேன் பெற்ற பூம்பாவையையும், விளக்கமான என்பெருஞ் செல்வத்தையும், முற்றவும் அடிமையாக என்னையும் யான் தந்தேன்!' என உரைத்தார். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின. சுற்றத்தார் - பெண்ணை மணங்கொள்ள உரிமையுடையவர்கள். கிளைஞர் - ஆண்மகவு இல்லாத நிலையில் தம் உடைமையைத் தமக்குப் பின் பெறுதற்குரியார். (சிவக்கவிமணியார்).

அளவு இல்லாத பெரு மகிழ்ச்சியினால் இவ் வாறு சிவநேசர் சொல்லி, முல்லையரும்பைப் போன்ற கூர்மையும் வெண்மையுமான பல்வரிசையையும், முகிழ்க்கும் மார்பகங்களை யும், உடைய மகளுடன் எல்லையற்ற நிரம்பிய செல்வ வளங்களை யும், மறையவரின் சீகாழிப் பதியில் தோன்றிய செல்வரான ஞானசம் பந்தரே உடையவர் என்று துணிவு கொண்ட உள்ளத்தில் மகிழ்வும் அடைந்தார்.
குறிப்புரை:

இங்ஙனம் சிவநேசர் செயல் ஆற்றிவரும் நாள்களில், தெய்வப் பெண் போன்ற பூம்பாவையார் கன்னிமாடத் தில், பால் போன்ற தூய நீர் நிறைந்த பொய்கை அருகில், குளிர்ந்த மலர்களைக் கொய்வதற்காகத் தம்மைப் போற்றும் நீண்ட கூந்தலை உடைய தோழியருடனே வெளியே சென்று, திரண்ட வளையலை அணிந்த தளிர் போன்ற கைகளால் முகைக்கும் பருவத்து மலர்களைக் கொய்ய,
குறிப்புரை:

அன்பரான சிவநேசர் இன்பம் பொருந்துகின்ற விருப்பத்தால் அளித்த அளவிலன்றிப் பொன்கொழிக்கும் நீரை உடைய சீகாழித் தலைவராய ஞானசம்பந்தருக்கு இது சேர்வுறாது என்பதை மனத்துள் கொண்டுள்ள ஊழானது, நச்சுப் பற்களையுடைய ஒரு பாம்பாகி முன்வந்ததைப் போல, முள் போன்ற பற்களையுடைய ஒரு பாம்பு, சிவநேசர், சீகாழித் தலைவருக்கெனத் தம் மகளாரை யும், பொருள்களையும் உரிமைப் படுத்திய அளவிலன்றி, அத்திரு மக ளாரோ, அப்பொருள்களோ அவரைச் சார்தற்குரிய ஊழ்இல்லை. ஆத லின் அவ்வூழே ஒருபாம்பாக வந்தது என ஆசிரியர் குறிப்பாராயினர்.

மல்லிகையும் முல்லையுமாகப் படர்ந்த பந்தலில் மறைந்து வந்து சேர்ந்து, பூம்பாவையார் புதிய அரும்புகளைப் பறிக் கின்றபோது, மான்போன்ற கூர்மையான கண்களையும், நல்ல நெற்றி யையும், செறிவும் நெறிவும் உடைய கூந்தலையும், கோவைக் கனி போன்ற வாயையும் உடைய பூம்பாவையரின் மலர் போன்ற கையில், பூக்கொய்யக் கூப்பிய விரலைக் கடித்தது. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

நச்சுப் பற்கள் நான்கும், எலும்பளவும் அழுந்தக் கடித்து, நஞ்சைச் செலுத்திப் படத்தை விரித்து நின்று ஆடிய அப்பாம்பு, வேறு இடத்தில் மறைந்து விட்டது. அவ்வாறாகவே, கரிய கொடிய நஞ்சு அதனைத் தொடர்ந்து மேலே எழுந்ததால், மென்மை ஆன பூமா லையில் தீப்பட்டதைப் போல, நல்ல அணிகளை அணிந்த பூம்பாவை யார் உள்ளம் மயங்கி, 'இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்' (குறள், 308) என்னும் திருக்குறளும்.

நிலத்தில் விழ, தோழியர் திடுக்கிட்டு அஞ்சித் தாங்கிச் சென்று, அவருக்கென்று அமைக்கப்பட்ட கன்னிமாடத்தில் கொண்டு புக, அதனால் சிவநேசர் சொல்லும் மனமும் நிலையழிந்து துன்பம் மேலிட, அளவற்ற சுற்றத்தாரும் தாமும் முன்கலங்கி அழுதனர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

நஞ்சைத் தீர்த்திடும் கலையில் கைவந்த பெரி யோரான மேலோர் பலர், கொடிய அந்நஞ்சைப் போக்குதற்குச் சேர்ந் தவர்களாய், வன்மையுடைய மந்திரமும் தியானமும் பாவனையும் முட்டி நிலையுமாய்த் தொடர்ந்த தீர்வுச் செயல்களைத் தனித்தனிச் செய்யச் சூழ்ந்து, மந்திரம் - கருடமந்திரம். தியானம் - அம்மந்திரத்திற்கு அதிதெய்வமூர்த்தியை அழுந்தியறிதல், பாவனை - அம்மூர்த்தியாகத் தன்னைப் பாவித்தல். முட்டிநிலை - மந்திரம் செய்வோர், தன் கை விரல்களில் பெருவிரலை விடுத்து ஏனைய நான்கு விரல்களையும் முட்டியாக மடித்துக் கொண்டு நஞ்சின் வேகத்தைத் தடுத்தற்காகத் தலை முதல் கடிவாய் இறுதியாகத் தீண்டப்பட்டோர் உடலைத் தடவுதல்.

மேற்கூறப்பட்ட நான்குடன், அளவில்லாத இணையற்ற மருந்துகளைக் கொடுத்தும் தடவியும் சிகிச்சை செய்யவும், வன்மையாய்ப் பற்றிக் கொண்ட கொடிய நஞ்சு, ஏழு வேகமும் முறையாய் மேல்ஏறி, அகன்ற கண்களையுடைய மென்மை ஆன கொடி போன்ற பூம்பாவையாரின் தலையை மேற்கொண்டு விளங்க, திருந்துமாறு செய்த தீர்வினைகள் எல்லாவற்றையும் கடந்து தீராமல் போகவே,
குறிப்புரை:

உயிர் உடம்பில் தங்குவதற்கு உரிய பல குறிகளும் பொருந்தாது போக, வந்து சேர்ந்த காருடக் கலையில் வல்லவரும் இது ஊழ் என்று கைவிடும் வேளையில், பொருந்திய பல சுற்றத்தார்களும், கடலைப் போல் அலறிப் பாவை மீது விழுந்து அழுதனர். காருடக் கலை - கருடனாகப் பாவித்து நஞ்சைத் தீர்க்கும் கலை.

உள்ளத்தில் கொடிய துன்பம் அடைந்த சிவநேசரும், பின்பு தெளிந்து, செய்யக்கூடிய தீர்வினை ஏதும் இல்லா ததால், 'உலகத்தில் உள்ளவர்களில் யாவராயினும் இந்தக் கொடிய நஞ்சை ஒழித்தார் அவருக்கு இங்குள்ளன எல்லையில்லாத செல்வத் திரள் அனைத்தையும் அளிப்பேன்' என்று எங்கும் யாரும் அறியுமாறு பறை சாற்றினார்.
குறிப்புரை:

இங்ஙனம் பறை சாற்றிய பின்னர், மூன்று நாள் எல்லையில், அரச அவையில் உள்ளவர் உட்பட உலகத்தில் உள்ள எல்லை இல்லாத கல்வியுடைய யாவரும் வந்து சேர்ந்து, தாம் தாமும் உறுதியாய்க் கண்ட குற்றமற்ற தீர்தொழில்கள் எவற்றாலும் தீராது ஒழியாமற் போக, நீங்கிச் சென்றனர்.
குறிப்புரை:

அந்நிலைமையைக் கண்ட சிறப்புப் பொருந்திய சிவநேசர் உள்ளம் மயங்கி, மேகம் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட சீகாழித் தலைவர் வந்து சேரும் நாள் வரையிலும், பூம்பாவையாரின் உடலைத் தீயில் இட்டு அடங்கச் செய்து, அதில் சேரும் எலும்புடன் சாம்பலையும் பாதுகாத்து வைப்பது எனும் தெளிவுடையவராய்,
குறிப்புரை:

ஞானசம்பந்தப் பெருமானுக்கு இவளை அளித்தேன் என்று கூறிவிட்டதால், இதனால் தமக்குத் துன்பம் அடைவதற்கு இயைபு இல்லையாம் என்று துணிந்து, துன்பம் நீங்கிய நிலையில், தீயில் எரிந்த எலும்பையும் சாம்பலையும் வாய் அகன்ற குடத்தில் இட்டு வைப்பார் ஆனார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

கன்னிமாடத்தில் முன்போலவே காவல் பொருந்த அக்குடத்தை வைத்துப் பொன்னும் முத்தும் மேல் அணி கலன்களும், அழகான மேன்மையான துகில்களும் சுற்றிப் புனைந்து, புகழ்ந்து பேசப்படும் அன்னத்தூவியிட்ட படுக்கையான மணம் கம ழும் பஞ்சணையில் வைத்து, அதன்மேல் நிலைபெற்ற பொன்னரி யான கழுத்தணி வகைகளையும் அழகுபெறக் கோலம் செய்து வைத்தார்,
குறிப்புரை:

மாலையும், சந்தனத்துடன் திருமுழுக்கும், நாள்தோறும் விடாமல், பால்சோறும், பகல் விளக்கும் என்ற இவையும் இவை போன்றவற்றையும் பொருந்திய நன்மையினால் தக்கவையாக நாள்தோறும் அமைத்துப் பொருந்தும்படி செய்ய, யாவரும் அதைக் கண்டு வியப்படைந்துவரும் நாள்களில்,
குறிப்புரை:

சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் திருவொற் றியூரில் வந்து சார்ந்து, பண்புமிக்க நல்ல தொண்டர்களுடன் இறை வரைப் பணிந்து அங்கே எழுந்தருளியிருக்கின்றார் என்ற பொருந்து வதற்குரிய நல்ல சொல்லை, அந்நற்பதியில் வாழும் அடியார்கள், வண்மையும் புகழும் உடைய பெருமை சான்ற வணிகர் தோன்றலார் ஆன சிவநேசரிடம் வந்து கூறினர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அங்ஙனம் ஞானசம்பந்தரைப் பற்றித் தம்மிடம் வந்து கூறியவர்களுக்கெல்லாம் சிவநேசர், ஆடையும், காசும், பொன் னும் அன்புடனே கொடுத்து, இன்ன தன்மைதான் பெற்றார் என்று சொல்ல முடியாத மகிழ்ச்சி மேல் ஓங்க, திருச்சடையில் வாழ்வு பெறும் மதியைத் தாங்கிய இறைவர் எழுந்தருளிய திருவொற்றியூர் அளவும் நெருங்கிய நடைக் காவணம் இட்டுத் துணியால் விதானமும் கட்டி,
குறிப்புரை:

மகர தோரணங்களும், வளம்மிக்க குலைக் கமுகுகளும், வாழைகளும், ஒப்பில்லாத பலகொடிகளும், மாலை களும் ஆகிய இவற்றை அழகு பொருந்த நிரல்பட அமைத்து, நகரம் முழுமையும் உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்த அணிசெய்து, குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கிய தாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

இவ்வாறு பலவாற்றானும் அணி செய்து, குறைகள் எவையும் இல்லாமல் செய்யும் பணியாட்களை ஏவி, 'முன்சென்று திருவொற்றியூர் நகரில் முத்தமிழ் விரகரான பிள்ளை யாரின் பொன்னார் திருவடிகளை வணங்கித் தலைமீது சூட்டிக் கொள்வேன்' என்று எழுவாராகி, அம் மயிலையில் வாழும் பெருந் தொண்டர்களும் தம் உடன் வரத் திருவொற்றியூரை நோக்கிச் சென்றார். குறைவு + அறுப்பு = குறைவறுப்பு - குறைகள் எவையும் இல்லையாகச் செய்தல்.

அவ்வமையத்தில் சீகாழித் தலைவரான ஞானசம் பந்தப் பெருமானும், தாம் தங்கியிருந்த திருவொற்றியூரைப் பணிந்து, அப் பெருநகரை விட்டு அகன்று, உப்பளங்கள் சூழ்ந்த கடற்கரையின் துறையையுடைய திருமயிலையை நோக்கித் தூய்மையான தொண்டர் களின் திருக்கூட்டத்தோடும் எதிரில் வந்து தோன்ற,
குறிப்புரை:

ஒப்பற்ற கொடைத்திறனுடைய பெருவணிக ரான சிவநேசரும், அவருடன் வந்த பெருந் தொண்டர்களும், ஒளி விளங்கும் வெண்ணீறு புனைந்த தவத்தையுடைய அடியார் கூட்டத் தினை நெடுந்தொலைவில் பார்த்து, 'கங்கையாற்றைச் சூடிய இறைவரின் மகனார் வந்தனர்' என்று இறுதியில்லாத ஒப்பற்ற மகிழ்ச்சியால் நிலத்தில் விழுந்து போற்ற,
குறிப்புரை:

சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் ஒளி வீசும் முத்துச் சிவிகையினின்றும் இழிந்து, சூழ்ந்த பெரிய தொண்டர் களின் முன்னே, தொழுது எழுந்தருளி, வாழ்வுடைய மாதவர்களா கிய அடியவர்கள் சிவநேசரின் அடிமைப் பண்பை எடுத்துச் சொல்லக் கேட்டு, கடற்கரை சூழ்ந்த திருமயிலைத் திருநகரைச் சேர்ந்தார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

அத்திறத்தின் முன்னே நிகழ்ந்த நிகழ்ச்சியைத் தம் உள்ளத்தில் ஞானசம்பந்தப் பெருமான் அமைத்துக் கொண்டு, உள்ளத்தில் இன்பமடையும் தொண்டரான சிவநேசரின் செயல் வாய்த்திட, பொய்யான தவத்தை மேற்கொண்ட சமணர் சாக்கியரின் புறத்துறைகள் அழியத் திருவுளங் கொண்ட அப் பெரிய அருள் நோக்கத்தினால் மகிழ்ந்தருளி,
குறிப்புரை:

கங்கையைச் சூடிய நீண்ட சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் 'திருக்கபாலீச்சரம்' என்னும் திருக்கோயிலைச் சேர்ந்து, உயர்ந்த நீண்ட ஒளியுடைய கோபுரத்தைத் தொழுது, புகுந்தருளி, உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவர் கோயிலை வலமாக வந்து வணங்கி, சிவந்த கை தலைமீது குவித்திடத் திருமுன்பு வந்து சேர்ந்தவராய்,
குறிப்புரை:

தேவரின் தலைவராயுள்ள இறைவரை, திருக் கபாலீச்சரத்தில் அமர்ந்தருளிய அமுதம் போன்றவரை, உமையம் மையை ஒருகூற்றில் கொண்ட முதல்வரை, அன்பு பொருந்திய பண்பி னால் போற்றிப் பொருந்திய காதலால், விரும்பிய விரைவினால் நிலத்தில் பொருந்த விழுந்து, திருநாவில் பொருந்திய உண்மைத் திருவாக்கினால், ஞானசம்பந்தர் போற்றியருளினார். இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

அங்ஙனம் போற்றி, மெய்யருள் திறத்தைப் பெறும் இடைவிடாத எண்ணத்துடன் வணங்கி, திருநீறு பூசிய மேனி யில் நிறைவாக மயிர்க் கூச்செறிய, இயமனைக் காலினால் உதைத்து உருட்டிய இறைவரின் கோயிலின் வெளிப்புறத்தில் சென்று, செய் கின்ற இனிய அருள், வணிகரின் மீது செல்வதாய் அருளிச் செய்பவராய்,
குறிப்புரை:

'பெருமானின் அடிமைத் திறத்தில் ஒன்றித்து வைத்த உணர்வுடையீர்! உலகத்தவர் எல்லாம் அறியுமாறு, அரிய தவத்தின் பயனாய்ப் பெற்ற மகளுடைய எலும்பு நிறைந்த அக் குடத்தை, பெரிய மயானத்தில் கூத்தாடுகின்ற இறைவரின் கோயிலின் திருமதில் புறத்துத் திருவாயில் முன்னர்க் கொண்டு வருக' எனக் கூறியருள,
குறிப்புரை:

எல்லையற்ற பெருமகிழ்ச்சியால் நிலத்தின் மீது விழுந்து வணங்கிக் கோயிலினின்றும் வந்து, தம் திரு இல்லத்துள் சேர்ந்து, அங்கு மணம் பொருந்திய நீண்ட சோலையிடையில் உள்ள கன்னி மாடத்தில் புகுந்து, மகளது உடல் வெந்தமையாலாய சாம் பலுடன் எலும்பையும் இட்டு வைத்த குடத்தை, பஞ்சணை முதலியவற் றினின்றும் வேறாய் எடுத்து வந்து,
குறிப்புரை:

பலமணிகளால் இழைக்கப்பெற்ற மூடிய சிவிகையுள் அக்குடத்தை இனிதாக வைத்து, அதனை முன்போக விட்டு, இருமருங்கிலும் தோழியர் கூட்டம் சூழ்ந்து வர, ஆடலைச் செய்யும் இறைவரின் திருக்கபாலீச்சரத்தைச் சேர்ந்து, நீண்ட கோபுரத் தின் வெளியே எதிரில், மணிச் சிவிகையின் திரையை விலக்கி,
குறிப்புரை:

இறைவரின் திருமுன்பாக, அவரது திருவடியில் பதிந்த அன்பின் உறைப்பால், பெண்ணின் எலும்புடைய குடத்தை எடுத்து வைத்துப் பிள்ளையாரின் திருமுன்பு சிவநேசர் வணங்கி நிற்ப, பொங்கிவரும் பெருநீர்ச் சிறப்புடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர், இவ்வுலகத்தில் இருந்துவரும் மக்களுக்கு உறுதிப் பொருள் இதுவாம் என நேரே காட்டியருள, அபிமுகம் - திருமுன்பு.

மாடங்கள் ஓங்கிய மயிலைப் பெருநகரத்தில் உள்ளவர்களும், மற்றும் அந்நாட்டில் உள்ளவர்களும், நன்றி இல்லாத மற்ற சமயத்தில் உள்ளவர்களும், எம்மருங்கிலும் சூழ்ந்து, இதன் விளைவைக் காண்பதற்கு வந்து பெருகவும், நீடிய தேவர்களும் மற்றவர்களும் வானத்தில் நெருங்கவும்,
குறிப்புரை:

திருத்தொண்டர்கள் தம் அருகே சூழ்ந்து வரவும், பழமையான தேவரது கோபுர வாயிலின் நேரில் வந்து சேர்ந்து, வண்டுகள் தங்கும் நீண்ட கூந்தலையுடைய பூம்பாவையாரின் எலும்பு நிறைந்த அம் மண்குடத்தை, அருட்பார்வை செய்து, இறைவரின் கருணையின் பெருமையை உள்ளத்துள் பெரிதும் நினைந்து,
குறிப்புரை:

இவ்வுலகத்தில் இறந்தவரின் எலும்பை, மேலும் பெரிய நன்னெறியில் பொருந்தியிட, நன்மையாகின்ற தன்மையா னது அவ்வெலும்புடன் கூடிய தொடர்ச்சியால் ஆவதாகும் என்று எண்ணிய அருள் நோக்கத்தினால், சிந்திய அந்த எலும்பை, முன் உடம்பில் வாழ்ந்த பூம்பாவை என்ற பெயரால் விளித்துச் சொல்லி அருளி, என்புக் குடத்தை நோக்கிப் பூம்பாவை என்றது, எலும்பும் அதனொடு கூடிய தசைத் திரளாய உடம்பும், அதனுள் வாழும் உயிருமாய் நின்ற முன் தொடர்ச்சி பற்றியாம். எலும்பை வைத்துச் செய்யும் நற்செயல், அதனொடு தொடர்புற்றிருந்த உடற்கும், அதனோடு இயைந்து வாழ்ந்த உயிர்க்கும் ஆதலினாற்றான் இன்றும் அத்தகைய நற்செயல்கள் நடைபெற்று வருகின்றன. 'என்போடி யைந்த தொடர்பு' (குறள், 73) எனத் திருவள்ளுவர் இத்தொடர்ச்சி யைக் கூறுவதும் காண்க. நந்துதல் - பெரிதாதல்; தழைத்தல்.

'இம்மண்ணுலகத்தில் வினைக்கு ஈடாக வந்து பிறந்த உயிர்கள், பெறும் பிறவிப் பயனாகிய உறுதிப் பொருள்களா வன, பிறையை அணியும் பெருமானின் அடியவர் தமக்குத் திரு வமுது செய்வித்தலும், கண்களால் அவ்வடியவர்களின் உள்ளத்து உயிர்க்கு உயிராய் நிற்கும் இறைவரின் திருவிழாக்களின் பெரும் பொலிவைக் கண்டு மகிழ்தலும் ஆய இவ்விரண்டுமே என்பது உண்மையானால், பூம்பாவையே! இவ்வுலகத்தார் முன் உடலும் உயிரும் பொருந்த வருவாயாக! எனச் சூள் செய்து எடுத்துச் சொல்பவராய், 'அண்ணலார் அடியார்' என இருசொற்கள் முன் இருத் தலின், பின்வரும் அவர் என்ற சுட்டு இறைவர், அடியவர் ஆகிய இரு வரையும் குறிக்கும். எனினும், பதிகப் பொருண்மை வகையால் இறை வர் என்றே கொள்ளத்தகும். 'உருத்திரபல்கணத்தார்க்கு அட்டிட்டல் காணாதே போதியோ' என முதற் பாட்டில் வருதல் கண்டு, அண்ண லார் அடியார் தமை அமுது செய்வித்தலை முன்னர்க் கூறினார். அடுத்து வரும் பாடல்களிலெல்லாம், இறைவற்கு எடுக்கும் விழாக்க ளைக் குறித்துத் தனித்தனியே அவ்வவ் விழாக்களையும் 'காணாதே போதியோ' எனக் குறித்தலின், கண்ணினால் அவர்தம் (இறைவர்) நல்விழாக் காண்டலை இரண்டாவதாகக் குறித்தார்.

நிலைபெற்ற நீண்ட சடையையுடைய இறைவ ரைத் தொழுது 'மட்டிட்ட' எனத் தொடங்கும் அந்தத் திருப்பதிகத்தில் 'போதியோ' என்றுகூறும் அந்த மெய்த் திருவாக்கு என்னும் அமுதமா னது, அக்குடத்தினுள் இருந்த எலும்பினுள்ளே வந்துவந்து பொருந் தப் பெண்ணுருவமாகக் கூடியது. 'மட்டிட்ட' (தி. 2 ப. 47) எனத் தொடங்கும் பதிகம் சீகாமரப் பண்ணிலமைந்ததாகும். 'போதியோ' என்றவிடத் தமைந்த ஓகாரம், 'போகமாட்டாய், மீண்டும் வந்து விடுவாய்' எனப் பொருள் படுதலின் எதிர்மறைப் பொருளதாம். ஞானத்தின் திருவுருவாய் நின்றருளும் பிள்ளையாரின் திருவாயில், இவ்வரிய சொல் வருத லின், ஆசிரியர் இதனை 'மெய்த் திருவாக்கு' என்றார். அன்றியும் ஓகாரம் பிரணவமாதலும் அறியத்தக்கதாகும். பாடல்தொறும் வரும் அவ்வரிய திருவாக்கு எலும்பினுள் வந்து வந்து பொருந்த அரிய பெண்ணுருவாயது.

முன் நான்கு பாட்டுகளில் கூறிய அத்தகைய தன்மையால் 'மட்டிட்ட' எனத் தொடங்கிய அத்திருப்பாட்டைத் தொடர்ந்து முறையே பாடுந்தோறும், போன உயிரும் உருவம் பெறும் உறுப்புப் பகுதிகளும் அழகுபட முறையாய் நிரம்பி, வேறாகிய அக்குடத்தில் முன்பு தொக்குக் கூடியிருந்து உரியபடி வெளிப்பட்டு எழுவதன் முன்பு ஞானஅமுது உண்ட சம்பந்தப் பெருமான், பின் முறையாய் அருளும் சமண் பாட்டான பத்தாம் திருப்பாட்டை அருளிச் செய்பவராகி,
குறிப்புரை:

முன் நான்கு பாட்டுகளில் கூறிய அத்தகைய தன்மையால் 'மட்டிட்ட' எனத் தொடங்கிய அத்திருப்பாட்டைத் தொடர்ந்து முறையே பாடுந்தோறும், போன உயிரும் உருவம் பெறும் உறுப்புப் பகுதிகளும் அழகுபட முறையாய் நிரம்பி, வேறாகிய அக்குடத்தில் முன்பு தொக்குக் கூடியிருந்து உரியபடி வெளிப்பட்டு எழுவதன் முன்பு ஞானஅமுது உண்ட சம்பந்தப் பெருமான், பின் முறையாய் அருளும் சமண் பாட்டான பத்தாம் திருப்பாட்டை அருளிச் செய்பவராகி, இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

'மட்டிட்ட' எனத் தொடங்கிய பாட்டில் பாவை யார் வடிவத்தைப் பெற்று, அதன்மேல் அருளிய எட்டுத் திருப்பாட்டு களில் அம்முறையே பன்னிரண்டு ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியைப் பெற்றுத் தொடுத்த கொடிய சமணர் பாட்டை அருளிய அளவில், குட மானது உடைந்து, பூம்பாவை வெளிப்பட்டுத் தோன்றக் கண்டு, பற்றற்ற பான்மை யுடைய பிள்ளையார், அதன்பின் திருக்கடைக் காப்பை விரித்துக் கூறினார். எடுத்த பாட்டு - இப்பதிகத்தின் முதற் பாடல். அதனைப் பாடிய அளவில், அவ்வென்பும் சாம்பலும் உயிருடன் கூடத் தொடங்கி ஒரு வடிவு பெற்றன. அடுத்து அருளப் பெற்ற எட்டுப் பாடல்களையும், ஒவ்வொன்றாய் அருளப் பெற்ற நிலையில், அவ்வடிவும் வளரப்பெற்று பன்னிரண்டாண்டு நிரம்பப் பெற்ற பூம்பாவை யாயினள். பாம்பு தீண்டி இறந்தது ஏழாவது ஆண்டில் ஆகும். இதுபொழுது பன்னிரண்டு ஆண்டாய் நிரம்பினள் எனவே, அப்பெண் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னையது இந்நிகழ்ச்சி என்பதும் அறியத்தக்கதாகும். திருக்கடைக்காப்பில் இப்பதிகம் பூம்பாவைப் பாட்டு என்றே குறிக்கப் பெற்றுள்ளது.

அவ்வாறு தோன்றிய தெய்வ நலம் வாய்ந்த பூம்பாவையாரைப் பார்த்தவர் எல்லாம் 'இங்கு இதனைப் பாரீர்' என்று எடுத்துச் சொல்லி அற்புதத்தை அடைந்த போது, அருகில் சூழ்ந்திருந்த திருத்தொண்டர்கள் 'அரகர' என்று இவ்வுலகத்தில் முழங்கிய பேரொலி, அப்போதே சென்று வானுலகத்தை அடைந்தது.
குறிப்புரை:

வானத்தில் நெருங்கிய தேவர்கள் முனிவர்கள் முதலானவர்கள் சிவபெருமானின் திருவருட் சிறப்பை நோக்கித் தெய்வ மரங்களின் மலர்களால் ஆன மணமுடைய மலர் மழையைப் பெய்தனர். முன்கூறப்பட்டவர்கள் ஒழிய, மற்றவர்கள் எல்லோரும் 'இங்ஙனம் நிகழ்ந்த இவ்விளைவின் வண்ணம் எம்தலைவரான சிவபெருமானின் திருவருட்கருணையே யாகும்' எனச் சொல்லிப் பொருந்திய கைகளை உச்சிமீது குவித்து வணங்கி, நிலத்தில் விழுந்து தொழுதனர்.
குறிப்புரை:

அங்கு அப்பூம்பாவையின் வடிவத்தைக் காண்பவரான மற்ற சமயத்தில் உள்ளவர்கள், மிக்க அதிசயம் அடைந்து, இச்செய்தியால் தம்தம் சமயங்களும் மறுத்து ஒதுக்கப்பட அவ்வவரும் தோல்வி அடைந்தவர் போல் ஆயினர். இச்செய்கை எங்குத் தான் உள்ளது? எவ்வாறு செயல்பட்டது? எனத் துணிய மாட்டாமல் ஐயம் கொண்ட சமணர், தள்ளாடி நிலத்தில் தடுமாறி விழுந்தனர்.
குறிப்புரை:

பூம்பாவையாரின் அழகு முழுமையும், தம் கண்களால் முற்றும் காணாதவராகி அவ்வளவில் அமைந்தார்க்கு எல்லாம், தோன்றிய நிலையாவது, செறிந்து வளர்ந்த கருமையான கூந்தலான பளுவைப் பொருந்திய முகமான செந்தாமரையில், கரிய வண்டுக் கூட்டம் நெருங்கி மொய்த்து வரிசையாகச் சூழந்திருந்தாற் போன்று கரிய நிறம் அடைந்து காணப்படவும், செந்தாமரையில் வண்டின் கூட்டம் மொய்த்திருந்தாற் போல, முகத்தின் மேலதாகக் கூந்தல் அமைந்திருந்தது.

பக்கத்தில் அழகிய வண்டுகள் மொய்த்த குளிர்ந்த பூக்களை அணிந்த கூந்தல் ஒழுங்கின் கீழ், மணம் வீசும் திலகம் அணிந்த நெற்றிப் பொலிவைப் பார்க்கில், பூம்பாவையரான பூங்கொடிக்கு அழகின்மழை பொழியும் பொருட்டாக மேகத்தின் கீழே இட்ட வளைந்த வானவில்லின் மிக்க ஒளி பொருந்திய அழகு பொருந்தவும், கூந்தலைச் சேர்ந்து இருந்த நெற்றி, மேகத்தின் கீழிருந்த வானவில்லைப் போன்றது.

புருவம் என்ற இரண்டு கொடிகள், முற்காலத்தில் முப்புரம் எரித்த சிவபெருமானின் நெற்றித் தனிக்கண்ணில் வந்த தீயினால் சாம்பலாகிப் பின், அருள் பெற உள்ளவனான காமனின் போரில் ஏந்திய வில் ஒன்றும் சேமமாய் வைக்கப்படும் வில் ஒன்றுமாக இருபெரு விற்களின் தன்மையை முன்னே கொண்டு தோன்றி எழுந்தாற்போல் அழகு செய்ய, நெற்றியின்கீழ் அமைந்த இருபுருவங்களும், மன்மதன் கைக்கொண்டிருந்த இருபெரு விற்கள் என இருந்தன. 'அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப் படைவழங்குவதோர் பண்பு உண்டாகலின், உருவிலாளன் ஒருபெருங் கருப்புவில், இருகரும் புருவமாக நிற்க' (சிலப்பதி. - புகார்க். மனையறம் 42 - 44) என இளங்கோவடிகள் கூறியதும் நினைவு கூர்தற்குரியதாம்.

கடைந்தெடுத்த மாணிக்கத்தினும் செம்மையாய ஒளிபொருந்திய மேனியைக் கொண்ட பாவையாரின் இரண்டு கண் களின் அழகானது, அழகுமிக்க முகமான சந்திரனின் குளிர்ந்த கதிர்கள் விரிந்த நிலவொளியான வெள்ளத்தில் தடுக்கப்படாத நீளமுடைய ஒள்ளிய நிறமும் கருமையும் செம்மையும் கலந்த இரண்டு கயல் மீன்களைப் போன்று உலாவ, கண்கள் இரண்டும், ஒருநிலா வெள்ளத்தில் இரு கயல்கள் உலாவுவன போலிருந்தன.

கண்கள் இரண்டும், ஒருநிலா வெள்ளத்தில் இரு கயல்கள் உலாவுவன போலிருந்தன. காமரூபி - பச்சோந்தி. வேண்டியவாறு நிறம் கொள்ளும் இயல்பினது. வாய் இந்திர கோபப் பூச்சியையும், மூக்குப் பச்சோந்தி யையும் ஒத்தன. நீண்டிருக்கும் மூக்கின் கீழ் வாய் இருப்பது கவரவரும் பச்சோந்தியின் கீழ்க் கோபப் பூச்சிஇருப்பதைப் போன்றது. வடிவும் நிறமும் பற்றி வந்த உவமை.

இளம் மயிலைப் போன்ற சாயலையுடைய ஏந்திய இழை அணிந்த பூம்பாவையின் காதணி அணிந்த காதுகள், வளமான அழகாலும் வடிந்த காதுத்தண்டை உடைமையாலும் மிக்க ஒளியுடைய ஆண் சுறா மீனானது பொருந்திய தன்மையினாலும் அளவில்லாத சிறப்புடைய மன்மதனின் வெற்றிக்கொடியான மீனக் கொடிகளைப் போன்று விளங்க, இளம் மயிலைப் போன்ற சாயலையுடைய ஏந்திய இழை அணிந்த பூம்பாவையின் காதணி அணிந்த காதுகள், வளமான அழகாலும் வடிந்த காதுத்தண்டை உடைமையாலும் மிக்க ஒளியுடைய ஆண் சுறா மீனானது பொருந்திய தன்மையினாலும் அளவில்லாத சிறப்புடைய மன்மதனின் வெற்றிக்கொடியான மீனக் கொடிகளைப் போன்று விளங்க,

ஒளி திகழும் முத்துக் கோவைகள் விளங்கும் கழுத்து, நல்ல பெரிய சங்கம் என்னும் நிதியைப் போன்றும், அதன்மீது விளங்கும் அழகமைந்த முகம் பதும நிதியைப் போன்றும் தோன்றி விளங்குவது, இருள்போலும் கரிய நஞ்சு விளங்கிய கழுத்தையுடைய திருநீலகண்டரான இறைவர் தந்த பெருங் கருணைக்கு அடையாளத் தைக் காட்ட, தாமரை முகத்திற்கும், சங்கு கழுத்திற்கும் உவமையாம். ஆசிரியர் சேக்கிழார் இவ்விரண்டையும் முறையே பதும நிதி, சங்க நிதி என உருவகித்து, அவை யிரண்டும் அழகுபெற அமைந்தாற் போலப் பாவையாரின் முகமும் கழுத்தும் விளங்கின என்றார். இவ்விரு நிதியினையும் வழங்கத்தக்கவன் இறைவனே. இச்செல்வியா ரும் அப்பெருமானின் அருளால் தோன்றியவராதலின், அதற்குரிய அடையாளங்களைக் காட்டி விளங்குபவராயினார் என ஆசிரியர் கூறுகின்றார்.

கரிய நீண்ட கயல்மீன் போன்ற கண்களை உடைய பாவையாரின் கைகளைக் காணும்போது, தீயைப் போல் மலர்ந்த மெல்லிய செங்காந்தள் பூக்களைத் தலைத்தலை பொருந்தத் தொடுத்துப் பொருந்துமாறு வைத்து அதன் திரட்சி வரவரச் சுருங்கி வருமாறு அமைந்த வெட்சிப் பூ மாலையோ, அதுவன்றி வேறொரு வகையால் ஆராயுமிடத்து உடலில் உள்ள மேனியின் ஒளி மிகுதி இரு பக்கங்களிலும் மிகுந்து வழிந்தனவோ எனும் அதிசயம் தோன்ற அக்கைகள் அமைய, தோளினிடமாகத் தோன்றிய இருகைகளும் மேலே பருத்தும், வரவரச் சிறுத்தும் இருக்கும். அதற்குக் காந்தட் பூக்களைத் தலையில் கொண்டு, கீழ் வரவர வெட்சிப் பூவைத் தொடுத்துக் கட்டிய மாலையை உவமை கூறினார். அக்கைகளின் ஒளிக்கு உடலின் ஒளி இரு மருங்கும் வழிந்தொழுகியது போல்வது என்றார். இவ்வுவமை யழகுகள் எல்லாம் தனித்தன்மை வாய்ந்தன.

அழகு பொருந்திய மார்பில் பெருகி எழுகின்ற மார்பகங்கள், பாம்பின் கரிய நஞ்சைப் போக்கும் கவுணியர் தலைவரான ஞானசம்பந்தப் பெருமானின் நோக்கத்தால் பொருந்திய திருவருள் என்னும் அமுதத்தால் நிறையப் பெற்று, அமைந்த கும்பத் தினை மேல் மூடிய முகிழ் போன்ற தன்மையில் விளங்கித் தோன்ற, 'போகம் ஆர்த்த பூண்முலையாள்' (தி. 1 ப. 49 பா. 1) என அன்னையின் மார்பகங்கள் போற்றப்படுதல் போல, இப்பாவையின் மார்பகங்களும் திருவருள் ஆர்த்த பூண் முலையாக விளங்குகின்றன என ஆசிரியர் திருவுள்ளம் பற்றுகின்றார்.

அழகிய மேகலை என்ற அணியை அணிந்த கொடியைப் போன்ற பூம்பாவையாரின் இடையை அடுத்த கொப்பூழி னின்று தொடங்கி மேல் எழும் மயிர் ஒழுங்கானது, காமன் என்ற வேடன் கொப்பூழுக்குள் மறைந்திருந்து மேலே உள்ள கொங்கைகள் என்ற அழகிய சக்கரவாளப் பறவைகளைப் பிடிப்பதற்கு நேரான கயிற்றில் நீண்ட கண்ணிகளைக் கோத்த ஓர் அம்பினை உயர்த்தியது போல விளங்கிட, மார்பகங்களுக்குச் சக்கரவாளப் பறவைகளும், உந்தியிலிருந்து மேற்செல்லும் மயிர் ஒழுங்கிற்கு மன்மதனின் அம்பும் உவமையாயின.

கட்டவிழ்ந்த மலர்களைச் சூடிய மென்மையான கூந்தலையுடைய பெண்களுள் அமுதத்தை ஒத்த பூம்பாவையாரது செம்பொன் அணிகளை அணிந்த அல்குலானது, நாக உலகத்தை ஆளும் ஆதிசேடன் தம் உறவாகியதொரு பாம்பு, பூம்பாவையைத் தீண்டிய பிழையின் பொருட்டு, அச்சம் கொண்டு, செம்மணிகள் விளங்கும் காஞ்சி என்னும் எட்டுக் கோவை வடத்தால் சூழப்பெற்று அழகுடைய அல்குலாகிப் படத்தை விரித்துச் சேர்கின்ற தோற்றத்தைக் காட்ட, : அல்குலுக்கு ஆதிசேடனின் படத்தை உவமை காட்டிய ஆசிரியர், தற்குறிப்பேற்றமாக அதற்கு ஒரு காரணமும் கூறினர்.

வரி பொருந்திய மயில் போன்ற சாயலைக் கொண்ட பாவையாரின் பொன் போன்ற தொடைகளின் அழகானது, இளம் பெண் யானையின் துதிக்கையின் அழகை வெற்றி கொண்டு, வாழையின் மெல்லிய தண்டின் அழகையும் புலப்படுத்திக் காட்டக் காண்பவர்க்கு மென்மையுடைய செழுமையான முழந்தாளின் அழகானது கைத்திறம் அமைந்த பொன்னால் ஆன பந்தைப் போல விளங்கி ஒளி பொருந்திப் பெருக, தொடைக்குப் பெண்யானையின் துதிக்கையும், வாழைத்தண்டும் உவமையாதல், 'ஈர்ந்து நிலம் தோயும் இரும்பிடித் தடக்கையிற், சேர்ந்துடன் செறிந்த குறங்கு, குறங்கென மால்வரை ஒழுகிய வாழை' (தண்டியலங்காரம்) எனவரும் வாக்காலும் அறியலாம்.

மலர்கள் மலர்வதற்கு இடமான மென்மையான கூந்தலையுடைய பொற்கொடி போன்ற பாவையாரின் கணைக்கால், காமனின் அம்பறாத் துணியே போன்ற அழகால், மேன்மை பொருந்த, பொருந்திய செம்பொன்னால் ஆன துலாத் தட்டின் அழகை வெற்றி கொண்டு, எக்காலத்தும் சித்திரம் தீட்டுவோர்க்கும் எழுத இயலாத கணைக்காலின் ஒளி விளங்கித் தோன்ற, கணைக்காலிற்குக் காமனின் அம்புப் புட்டிலும் தராசுத் தட்டும் உவமையாகின்றன.

கற்பக மரம் தந்த சிவந்த அழகிய பவளத்தின் ஒளி வீசும் பொன் திரளுடன் வயிர வரிசைகளையுடைய மலர்க் கொத் துகள் மலர்ந்தவை போன்ற அழகை நல்ல அடிகள் புலப்படுத்த, இம் மண்ணுலகமும் விண்ணுலகமும் மற்ற எல்லா உலகங்களும் அற்புதம் பொருந்தத் தோன்றி அழகுக்கு அழகு செய்யும் பொருளாக நின்றார். இந்நூலுள் முடிமுதல் அடிவரை வருணிக்கப்பட்ட பாவை இப்பூம்பாவையாரே யாவர். காரணம், கண்ணுதல் கருணை வெள்ளத்தால் தோன்றியமையே யாகும். இப் பதினான்கு பாடல்களும் ஒருமுடிபின.

அளவற்ற ஆண்டுகள் கழிந்த நான்முகன், தான் படைத்த திலோத்தமை என்ற மங்கையின் அழகின் வண்ணங்களைத் தனக்குள்ள நான்கு முகங்களால் கண்டு மகிழ்ந்தான். அவளை விட மேலான நலங்கள் பலவும் அமைந்த பூம்பாவையாரிடம், பதினாறு ஆண்டு எனக் கணக்கிடத்தகும் சீகாழித் தலைவராம் ஞானசம்பந்தர், நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானின் அருட் பெருக்கையே ஆயிர முகங்களால் காண்பார் ஆயினார். நான்முகனுக்கும் காழிச்செல்வருக்கும் உளவாகும் இடையீடு பெரிதாமாற்றை, ஆசிரியர் சேக்கிழார் இப்பாடலில் காட்டிப் பெரிதும் மகிழ்விக்கின்றார்.
நான்முகன், எண்ணில் ஆண்டு எய்தியவன். வயது முதிர்ந்த வன். தம்மால் படைக்கப்பட்டவள் திலோத்தமை. மகண்மை முறையி னள். அத்திலோத்தமையின் அழகைத் தன் நான்முகங்களாலும் கண்டு, அவளை விரும்பினன்.
பிள்ளையார், பதினாறு ஆண்டு வயதை நெருங்கும் மிக இளைஞர். அவர்தம் திருவருள் திறத்தால் தோற்றுவிக்கப்பட்டவர் பூம் பாவையார். சிவநேசர் மகளாயிருந்த நிலையில் இவருக்கென உரிமை யாக்கப் பெற்றவர். திருவருள் வயத்தால் தம்மால் தோற்றுவிக்கப்பட்ட மகண்மை முறையையும், திருவருள் திறத்தையுமே நினைந்து தம் ஆயிரம் திருமுகங்களானும் அத்திருவருள் பொலிவாகவே கண்டார். இதற்குக் காரணம் என்ன? நான்முகன் படைப்புத் தொழிற்கு உரியவனாயினும், கலையறிவையே (வேதா) பெற்றவன். காழிப் பிள்ளையாரோ அம்மையாரின் பாலமுதத்தோடு சிவஞானமும் குழைத்து ஊட்டப் பெற்றவர். ஆதலின் அந்நான்முகன் பார்வை யினும் இவர் பார்வை வேறுபட்டும் உயர்ந்தும் இருப்பதாயிற்று. 'நூலுணர்வு உணரா நுண்ணியோன் காண்க' (தி. 8 ப. 3 வ. 49), 'நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக' (தி. 11 ப. 4 பா. 33) என்றல் தொடக்கத்தனவாய திருவாக்குகள் எள்ளளவும் மறக்கப் போமோ?

இங்ஙனம் விளங்கிய அழகுடைய மென்மை யான சாயலையுடைய பூம்பாவையைக் கண்முன் பார்த்த தந்தையா ராகிய சிவநேசர், பொன்னால் அணியப்பட்ட மாளிகைகளை உடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளைத் தம் தலையில் பொருந்தும்படி முன்சென்று வீழ்ந்து வணங்கினார்.
குறிப்புரை:

: திருமகளினும் மேன்மையுடையவராய் அன் னம் போன்றவரான பூம்பாவையார், படம் பொருந்திய ஐந்து தலைப் பாம்பை அரையில் அணிந்த கபாலீச்சுரரை முன் வணங்கி, அதைக் கண்ட உலகத்தவர் தொழுமாறு, மேகம் தவழும் மதில்களை உடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரை வணங்கி நின்றார். பூம்பாவையார், முன்னர் இறைவனை வணங்கிப் பின் னர்ப் பிள்ளையாரை வணங்கி நின்றது உலகத்தவரும் ஏற்றுப் போற்று தற்குரியதாகும்.

சிறப்புப் பொருந்திய சிவநேசரை, முன்னம் மேகம் சூழ்ந்த சோலைகள் பெருகிய சீகாழித் தலைவர், 'அழகால் மிகச் சிறப்புடைய உம்மகளை உலகில் ஓங்கி விளங்கும் இல்லத்துக்கு இனி அழைத்துச் செல்வீர்' என்று அருளிச் செய்யவும்,
குறிப்புரை:

பெருகிய திருவருளைப் பெற்ற வணிகரான சிவநேசர், ஞானசம்பந்தரின் தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்கிப் போற்றி நின்று, 'அடியேன் அருமையாய்ப் பெற்றெடுத்த இப்பூம்பாவைப் பெண்ணை மணம் கொண்டருளும்' என வேண்டிக் கொள்ளவும்.
குறிப்புரை:

அவ்வாறு வேண்டிக் கொண்ட வணிகரான சிவநேசரைப் பார்த்து, வளம் பொருந்திய சீகாழிச் செல்வரான ஞான சம்பந்தர், 'நீவிர் பெற்ற பெண் நஞ்சினால் இறந்த பின்பு, தொகுதியான நீண்ட சடையையுடைய கபாலீச்சுரரின் அருள் விளங்க மீளவும் நான் உயிர் பெறச் செய்தலால், நீவிர் சொல்லும் அச் சொல் பொருந்தாது!' என்று கூறியருள, மகளாராகிய நிலையில் மணக்கச் சொல்லுதல் தகாது என்றார். கோட்புலியார் மகளாரைச் சுந்தரர் மகண்மையாகக் கொண் டதையும் எண்ணுக.

வணிகரான சிவநேசரும் அவருடைய சுற்றத் தவரும் அதைக் கேட்டு மயங்கி, ஞானசம்பந்தரின் அழகிய மலரடிக ளில் விழுந்து பலவும் கூறிக் குறையிரந்து அழுது புலம்பக் கண்டு, அப்போது அவர்களின் ஆற்ற இயலாத நீண்ட பெருந்துன்பம் தணியு மாறு, தூய்மையான வாய்மையுடைய ஞானசம்பந்தர், மறை நூல் களில் விதிக்கப்பட்டிருக்கும் முறைமைகளை எடுத்துக் கூறித் தேற்றியருளினார். மறைநூல் முறைமையாவது மகளாராகக் கருதத் தக்கவரை, மனைவியாராக ஏற்றல் முறைமையும் அறனும் அன்று என் பதும், 'அன்றே அனாதி அமைத்தபடி யல்லாது ஒன்று, இன்றே புதி தாய் இயையுமோ - என்றும், சலியாது இயற்றுவான் தன்னையே நோக்கி, மெலியாது இருந்து விடு' (சிவபோகசாரம், 95) என்பதும் போன்ற நியதிகளாகும்.

தெளிந்த நீதி நூல்களின் ஒழுகலாற்றைக் கேட்ட சிறப்புடைய சுற்றத்தவரான பெருங்கூட்டமும், சிவநேசரும் தாம் கொண்ட விருப்பம் நீங்கிட, ஞானசம்பந்தரும் மேட்டுநிலத்தினின்றும் பள்ளத்திற்குப் பாயும் நீரென விரைவுடன் கோபுர வாயிலினின்றும் இறைவரின் திருக்கோயிலுக்குள் எழுந்தருளினார். இறைவரை ஆர்வமிகுதியோடு விரைந்து சென்று வணங்குதற்காம் உள்ளமிகுதிக்கு, பள்ளநீர்ச் செலவினை உவமை காட்டியது மரபுவழிவரும் உவமையாகும். 'பள்ளந்தாழ் உறுபுனலின்' (தி. 8 ப. 5 பா. 25) எனவரும் திருவாசகத் திருவாக்கும் காண்க.

பழவினை வயத்தால் சிவநேசரும், 'பூம்பாவை யாரை மற்றவர் எவர்க்கும் மணம் செய்விக்க நான் சம்மதியேன்' என எண்ணித் துணிந்து, வான் அளாவ உயர்ந்த அவரது கன்னிமாடத்தில் வைத்து, அங்கு வாழச் செய்தார். வண்டுகள் மொய்த்தற்கு இடமான மாலையை அணிந்த பூம்பாவையாரும் சிவபெருமானை அடைந்தார். சடங்கவியார் மகளார், திலகவதியார் ஆகியோர்களின் நிறைவு நிலையும் ஈண்டு ஒப்பிட்டுணர்தற்குரியவாம்.

தேவர்களின் தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருக்கபாலீச்சுரத்தினுள் எழுந்தருளிய ஞான சம்பந்தர், நான்முகன் முதலான எல்லா உயிர்களுக்கும் காவலரான இறைவரின் பெருங்கருணை, கைகொடுத்தருளியதைப் போற்றிப் பாக்களாக மலர்ந்த செந்தமிழைப் பாடிப் பன்முறையும் பணிந்து எழுவாராய், முன் அருளிய பதிகம் (தி. 2 ப. 47) கிடைத்தது போல, இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது; நம்மனோரின் நற்றவக் குறைவே.

ஞானசம்பந்தர் தொழுது வெளியே வந்து, திருத்தொண்டர்களின் கூட்டம் அருகில் சூழ்ந்துவர, குற்றம் இல்லாத புகழையுடைய அம்மயிலைத் திருப்பதியில் விரும்பித் தங்கி இருந் தருளும் நாள்களில், எல்லா உலகங்களையும் தந்து காத்தருளும் இறை வர் எழுந்தருளும் முதன்மையுடைய பதிகள் பலவற்றையும் சென்று வணங்குவதற்காக, அழுது உலகை வாழ்வித்தவரான ஞானசம்பந்தர், அப்பதியினின்றும் நீங்கிச் செல்வாராய்,
குறிப்புரை:

அங்கு இருக்கும் திருத்தொண்டர்கள் விடை பெற்றுக் கொள்ளச் சிவநேசரின் வருத்தம் நீங்கும்படி அவருக்கு இனிய சொற்களைச் சொல்லி விடைதந்து, சிவபெருமான் வீற்றிருக் கும் பிறபதிகளையும் வணங்கிச் சென்று, நிறைந்த காதலால் விளைந்த அன்புடனே திருவான்மியூரை வணங்கச் செல்வாரானார். பிறபதிகளாவன திருமயிலைக்கும் திருவான்மியூருக் கும் இடைப்பட்ட புலியூர், கோட(கன்)ம்பாக்கம், வெளிச்சேரி, முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

திருவான்மியூரில் நிலைபெற்று வாழ்கின்ற தொண்டர்கள் சிறப்பாக வரவேற்க வருபவர்களாய், மங்கலம் பொருந் திய அணிகளைத் தெருவில் நிரல்பட அமைத்து, எதிர்கொண்டு அருகே வந்த பொழுது, முத்துப் பல்லக்கினின்றும் இறங்கி அருளி, அத்தொண்டர்கள் தம்மை வணங்கத் தாமும் அவர்களை வணங்கி, அன்பை அளித்து ஆட்கொள்கின்ற இறைவரின் திருக்கோயிலின் அழகிய பெரிய நீண்ட கோபுரத்தைச் சேர்ந்தார்.
குறிப்புரை:

மிகவும் உயர்ந்த கோபுரத்தை வணங்கி, பெரிய முற்றத்தினுள் புகுந்து, கோயிலை வலமாக வந்து, உட்சென்று கொக்கு இறகும் பிறைச் சந்திரனும் கங்கையும் விளங்கும் அந்தி மாலையின் சிவப்புப் போன்ற சடையையுடைய இறைவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
குறிப்புரை:

நிலத்தில் விழுந்து பன்முறையும் வணங்கி, முன்நின்று, வாழ்வு பெற்று, மகிழ்ச்சி பொருந்த, பிறவி நோய்க்கு மருந் தான பெருந்தகைமை மிக்க இறைவரை உளங்கொண்டவாறு, பண் பொருந்திய திருப்பதிகமான வினாவுரையாய் வரும் சொல்மாலையை மிக்க விருப்புடனே பாடி இன்பம் அடைந்தார். இப்பதியில் இதுபொழுது அருளியது, 'கரையுலாங் கடலில்' (தி. 2 ப. 4) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிகப் பாடல்கள் முழுதும் இறைவனிடத்துக் கேட்கும் வினாவுரையாக அமைந்துள்ளன.

: சீகாழித் தலைவர், பரவி வருகின்ற ஆனந்தக் கண்ணீர் விழிகளினின்றும் துளித்துப் பெருகவும், மேனி முழுதும் மயிர்க் கூச்செறியவும் பெற்று, கோயிலின் வெளியே வந்து, ஒலி பொருந்திய நீண்ட அலைகளையுடைய கடற்கரையில் அமைந்த அழகிய திருவான்மியூரில், சில நாள்கள் இனிதாய்த் தங்கியருந்தார்.
குறிப்புரை:

அவ்விடத்தில் தங்கியிருப்பவரான ஞானசம் பந்தர், உலகங்களுக்கெல்லாம் தலைவராகிய இறைவரை, அரிய தமிழில் மேன்மேல் வாழும் இசையையுடைய பதிகங்கள் பலவற்றால் போற்றி, அங்கிருந்து நீங்கிக் கங்கையை அணிந்த அழகிய சடையை உடைய இறைவரின் பதிகள் பலவற்றிற்கும் அங்கங்கும் சென்று சேர்ந்து, வணங்கி சிவந்த கண்ணையுடைய விடையைக் கொடியாக உடைய சிவபெருமானின் திருவிடைச்சுரத்தை அடைந்தார். 'பதிகங்கள் பலபோற்றி' என்றாரேனும், 'விரையார் கொன்றையினாய்' (தி. 3 ப. 55) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணிலமைந்த ஒருபதிகமே கிடைத்துள்ளது. பதிபலவும் என்பன, குன்றத்தூர், திருநெடுங்குன்றம், திருக்கச்சூர், ஆலக்கோயில், மாடன் பாக்கம், பல்லவபுரம், திருச்சுரம், திருச்சிவப்பேறூர், கோவூர், மாங்காடு, சோமங்கலம், மணிமங்கலம், படூர், பூஞ்சேரி, திருக்கச்சூர், வயலூர், வீராபுரம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

திருச்சடையில் பிறையை அணிந்த இறைவர் வீற்றிருக்கின்ற திருவிடைச்சுரத்தில், நிலைபெற வாழ்கின்ற திருத் தொண்டர் கூட்டம் எதிர்கொள்ளச் சென்றருளி, நன்மை தரும் நீண்ட கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்து, கோயிலை வலம் வந்து, தம் இறைவர் திருமுன்பு வந்தணைந்தார்.
குறிப்புரை:

: தம் இறைவரைக் கண்ட பொழுதே, மனம் கலந்து எழுந்த பெருவிருப்பத்தால், கைகளைத் தலைமீது கொண்டு, நிலத்தில் விழுந்து பொருந்திய பெருமகிழ்ச்சியுடன் பெருகிய பேரன்பினால் உள்ளம் உருகி, மெய்ம்மயிர் சிலிர்க்க வணங்கி, எழுந்து, தேவ தேவரான சிவபெருமானின் திருமேனியின் வண்ணத்தைப் பார்த்து வியப்படைந்தார்.
குறிப்புரை:

உலகத்தவரின் பெரும்பேறாகத் தோன்றிய ஞானசம்பந்தர், சாரல் விளங்க இருந்த அத் திருவிடைச்சுரத்தில் வீற்றி ருக்கும், 'பெருமானின் வண்ணம்தான் என்ன அதிசயம்' என்று அரிய தமிழால் ஆன இனிய திருப்பதிக மலர் மாலையால் போற்றி, உள்ளம் கரைந்து உருகத் திருக்கடைக்காப்புப் பாடியருளி, பெரிய ஒப்பில்லாத சிவானந்தப் பெருவாழ்வினில் திளைத்து நின்றார். இதுபொழுது அருளிய பதிகம் 'வரிவளர் அவிரொளி'(தி. 1 ப. 78) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். பாடல் தொறும் 'இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே' எனவருவதையே ஆசிரியர் இங்குக் குறித்துக் காட்டுகின்றார்.

சிவானந்தப் பெருவாழ்வில் நிறைவுற்று ஆராத வேட்கையினால் நீண்ட நேரம் நின்று வணங்கி, வெளியே வந்து, அப் பதியில் தங்கியிருந்து பணிந்து வரும் பிள்ளையார், அவ்விறைவரின் அருள்விடை பெற்றுக் கொண்டு, சிறந்த திருத்தொண்டர்களுடன் எழுந்தருளிச் சென்று, செந்துருத்தி என்ற பண்ணைப் பாடி, வண்டுகள் மொய்க்கின்ற சாரலையுடைய திருக்கழுக்குன்றத்தை அடைந்தருளினார். செந்துருத்திப் பண்ணில் அமைந்த பதிகத்தைப் பாடிய வாறு, திருக்கழுக்குன்றத்தினை அடைந்துள்ளார். இப்பதிகம் கிடைத் திலது. செந்துருத்திப் பண்ணில் அமைந்த 'மீளா அடிமை' (தி. 7 ப. 95) எனத் தொடங்கும் சுந்தரரின் திருப்பதிகம் ஒன்றே இதுபொழுது கிடைத்துள்ளது.

திருக்கழுக்குன்றத்தில் சென்று அடையும் போதில், அப்பகுதியில் வாழ்கின்ற தொண்டர்கள் வந்து வரவேற்க, பொன் விளங்கும் முத்துச் சிவிகையினின்றும் கீழே இறங்கி, அவர் களுடன் சேர்ந்து, மணம் விரிந்து கமழும் நல்ல மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த அம்மலையை வலமாக வந்து, மின்போல் விளங் கும் சடையையுடைய இறைவரை விருப்பத்தோடு பணிபவராய்,
குறிப்புரை:

அத் திருக்கழுக்குன்றத்தின் மீது விரும்பி வீற்றிருந்தருளும் ஒப்பில்லாத செம்பொன்குன்றம் போன்ற மறைக ளின் தலைவரான சிவபெருமானை, வளரும் விருப்பத்தினால் வணங்கி, எழுந்து, ஒன்றிய கருத்துடன் காதல் செய்யும் கோயில் கழுக் குன்று என்ற நிறைவுடைய திருப்பதிகத்தைப் பாடி, உளம் நிறைந்த மகிழ்வை அடைந்தார். : இதுபொழுது அருளிய பதிகம், 'தோடுடையான்' (தி. 1 ப. 103) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகப் பாடல் பத்தும் 'காதல்செய் கோயில் கழுக்குன்றே' என நிறைவு பெறுதலை உளங்கொண்டு ஆசிரியர் இங்ஙனம் கூறுவார் ஆயினர். திருக்கடைக்காப்பிலும் இத்தொடர் எடுத்து மொழியப்பட் டுள்ளது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

இன்புற்ற நிலையில் அப்பதியில் விரும்பி எழுந்தருளியிருந்து, எல்லை இல்லாத பெருந்தொண்டர்களுடனே, மின்போன்ற சடையையுடைய சிவபெருமானின் திருவருள் பெற்று, அங்கிருந்து நீங்கி, எலும்பு மாலைகளை அணிந்த அழகான மார்பை யுடைய இறைவர் எல்லையில்லாத வண்ணம் ஆட்சி செய்து அன்பு பொருந்தி மகிழ்ந்து எழுந்து அருளியுள்ள அச்சிறுபாக்கத்தைச் சேர்ந்தார்.
குறிப்புரை:

பழமையுடைய சிவபெருமானை வணங்கி 'ஆட்சி கொண்டார்' எனக் கூறும் நிறைவையுடைய குற்றம் இல்லாத திருப்பதிகத்தைப் பண்பொருந்தி விளங்கும் திருப்பாடல்களால் போற்றி, மாதவமுடைய முனிவர்களுடன் வணங்கி, மகிழ்ந்து, இன்பம் அடைந்து, தீமையை நீக்குவதே தம் செய்கையாகக் கொண்டருளிய ஞானசம்பந்தர், சில நாள்கள் அங்கே தங்கியிருந்து, இப்பதியில் அருளிய பதிகம் 'பொன் திரண்டன்ன' (தி. 1 ப. 77) எனும் தொடக்கம் உடைய குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். பதிகப் பாடல் தொறும், 'அச்சிறுபாக்கமது ஆட்சிகொண் டாரே' எனவருதலை ஆசிரியர் கொண்டெடுத்து மொழிந்துள்ளார்.

விடையைப் பொறித்த வெற்றி பொருந்திய கொடியையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள பிறபதிகள் பல வற்றையும் திருநீறு அணிந்த தொண்டர்கள் அங்கங்கும் எதிர்கொளச் சென்று, விரிந்த சடையில் கங்கையாற்றை அணிந்த இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற 'திருவரசிலிப் பதியினை' வந்தடைந்தார். 'பதிபிறவும்' என்பன பெரும்பேறு, திருநெற்குன்றம், உலகூர், உலகாபுரம், கந்தாடு, கிடங்கில், கிளியனூர், தேவனூர், திண்டீச்சுரம், பேராவூர், மரக்காணம், முன்னூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவ்விருபாடல்களும் ஒரு முடிபின.

திருஅரசிலியில் விரும்பி வீற்றிருக்கும் இறை வரைப் பணிந்து போற்றி, திருப்புறவார் பனங்காட்டூர் முதலான, மணம் கமழ்கின்ற கொன்றை மலரைச் சூடிய இறைவர் எழுந்தருளி யிருக்கின்ற பல பதிகளையும் வணங்கிச் சென்று, அலைகளையுடைய நீண்ட கடல் அணிமையாய்ச் சூழ்ந்த திருத்தில்லை நகரை அடைந்தார். திருஅரசிலியில் அருளியது, 'பாடல் வண்டறை' (தி. 2 ப. 95) எனும் முதற்குறிப்புடைய பியந்தைக் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருஅரசிலி மற்றும் திருப்புறவார்பனங் காட்டூரில் இதுபோது அருளியது, 'விண் அமர்ந்தன' (தி. 2 ப. 53) எனும் முதற்குறிப்புடைய சீகாமரப் பண்ணிலமைந்த பதிகமாகும். பதிபலவும் என்பன திருவக்கரை, திருவடுகூர், திருஇரும்பைமாகா ளம், திருவாமாத்தூர், திருவதிகை, திருச்சோபுரம் முதலாயினவாக லாம் என்பர் சிவக்கவிமணியார். இவற்றுள் திருச்சோபுரத்திற்கு அமைந்தது, 'வெங்கண் ஆனை' (தி. 1 ப. 51) எனும் முதற்குறிப்புடைய பழந்தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிறபதிகளுக்குரிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.

அளவற்ற சிவஞானத்தைப் பெற்றவரான ஞானசம்பந்தர் வந்தருளுவதை அறிந்து, அவரை எதிர் கொள்பவ ராய்த் தில்லைவாழ் அந்தணர்களும், சைவத் தொண்டர்களும் எதிர் கொள்வதற்குரிய சிறப்புகளுடனே கூடிச் சென்று, அவரை எதிரே வணங்கிட, அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கிப் பெருங் காதலுடன் அஞ்சலி செய்து ஞானசம்பந்தர் அணைபவராய்,
குறிப்புரை:

தில்லையின் எல்லையைப் பணிந்து மேற்செல்ப வராகி, நீண்ட வானளவு உயர்ந்து விளங்கும் ஒளிபெருகும் வடதிசை வாயிலை வணங்கி, உள்ளம் உருகும் பெருங்காதலுடன் நகரத்தின் உள்ளே புகுந்து, மறைகளின் ஒலி பெருகி வளர்வதற்கு இடமான அழகிய மாடங்கள் நிறைந்த பெரிய வீதியை அடைந்தார். தில்லைநகரின் வடஎல்லை நிவா நதிக் கரையும், தெற்கெல்லை கொள்ளிடக் கரையும், மேற்கு எல்லை வாய்க்காலும், கிழக்கெல்லை கடற்கரையும் ஆகும் இவ்வகையிலேயே வடதிசை வாயிலைக் கடந்ததும் நகரினுட்புகுந்து என்றார். இவ்விரு பாடல்க ளும் ஒருமுடிபின.

நன்மை பெருகும் திருவீதியை வணங்கி, நல்ல தவமுடையவர்களின் குழுநிறைந்த திருவாயிலைச் செங்கைகளைத் தலைமீது குவித்துக் கொண்டு நிலத்தில் விழுந்து தாழ்ந்து வணங்கிச் சென்று, பொன்மாளிகையான அம்பலத்தின் அருகே வலமாக வந்து, உயர்ந்த பேரம்பலத்தை வணங்கினார்.
குறிப்புரை:

வணங்கி, உள்ளம் மகிழ்ந்து, திருமாலும் நான் முகனும் தொழும் சிவகணங்களும் நெருங்கிய திருவணுக்கன் திரு வாயிலை வணங்கி எழுந்து, கண்கள் களிகூர, சிவகாமி அம்மையார் தனித்திருந்து கண்டருளுமாறு அம்பலத்தில் ஆடல் செய்து அருளு கின்ற குணங்களைக் கடந்த மெய்ஞ்ஞான வெளியில், தனிப்பெருங் கூத்தரின் பெருங்கூத்தை வணங்குபவராய், 'பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென, நோயுண் மருந்து தாயுண் டாங்கு' (சிதம்பர மும்மணிக் கோவை அ. 14, 15) அம்மையார் இறைவனின் தனிக்கூத்தைத் தாம் தனியே கண்டு, பின் அதன் பயனை உலகுக்கு அருளுவர். ஆதலின் 'அணங்கு தனி கண்டருள' என்றார்.

தொண்டர்களின் மனத்தினின்றும் பிரியாது விளங்கும் திருக்களிற்றுப் படியை வணங்கி, செறிந்த பெருங் காதலால் நோக்கி முகமலர்ச்சி பெற்று எழுபவராய ஞானசம்பந்தர், அண்டங்கள் எங்கும் நிறைந்து எழுகின்ற சிவானந்தப் பெருக்கினுள் அலைந்து, தம் அநுபவத்துள் கண்ட பேரின்பத்தில் கரையில்லாத நிலையினை அடைந்தார். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

அத்தகைய நிலையை அடைந்து, அந்த அநுப வத்தில் மூழ்கியிருந்து, அங்குத் தங்காத காலத்தில், நிலையான திருச்சிற் றம்பலத்தை வலமாக வந்து வெளியே சென்று, பொன்னால் அழகு பெற்ற மாளிகைகளையுடைய வீதியின் பக்கத்தை அடைந்து, காலந் தோறும் இனிய இசையுடன் கூடிய பாக்களைப் பாடியருளிக் கும்பிட் டுக் கொண்டு அங்கு இனிதாய்த் தங்கியிருந்தனர். அங்குத் தங்காத காலம் வழிபாட்டிற்கு உரியவல்லாத காலம். அவை கதவம் திருக்காப்பிட்டிருக்கும் காலமாகும். இறைவற் குத் திருமுழுக்கு முதலியன நிகழும் காலமும் ஆம். இது பொழுது அருளிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.

உலகம் திருந்துவதற்குக் காரணமான சிறப் புடைய தந்தையார் சிவபாத இருதயரும், பொருந்திய சைவத் திரு வளர்வதற்கு இடமான சீகாழியில் வாழும் அந்தணர்களும், சிவனடி யார்களும் பெருந்திருவுடைய திருமாலும் நான்முகனும் போற்றி வரும் பெரும்பற்றப் புலியூரில், பெருந் தமிழாகரரான ஞானசம்பந்தர் வந்திருக்கின்றார் எனக்கேட்டு, தாங்கள் அங்கு வந்து அடைந்தனர்.
குறிப்புரை:

உலகம் திருந்துவதற்குக் காரணமான சிறப் புடைய தந்தையார் சிவபாத இருதயரும், பொருந்திய சைவத் திரு வளர்வதற்கு இடமான சீகாழியில் வாழும் அந்தணர்களும், சிவனடி யார்களும் பெருந்திருவுடைய திருமாலும் நான்முகனும் போற்றி வரும் பெரும்பற்றப் புலியூரில், பெருந் தமிழாகரரான ஞானசம்பந்தர் வந்திருக்கின்றார் எனக்கேட்டு, தாங்கள் அங்கு வந்து அடைந்தனர்.
குறிப்புரை:

அழகிய சீகாழி அந்தணர்களும், தில்லையில் வாழும் அந்தணர்களும், அன்பு நெறியைப் பெருகச் செய்து, இறை வரின் திருவடிகளைப் போற்றிப் பொன்போற் புரிந்த சடையை உடைய கூத்தரின் திருவருள் விடைபெற்று, வெளிவந்து, இன்பம் செய்யும் திருத்தோணியில் வீற்றிருக்கும் தோணியப்பரை வணங்கு வதன் பொருட்டு,
குறிப்புரை:

நல்ல தவமுடைய அடியவர்களின் கூட்டத்து டன் கூடி, இறைவர் திருநடனம் செய்கின்ற அழகிய அப்பதியின் திரு எல்லையை வணங்கிப் புறத்தில் சென்று, விடைக் கொடியை உடைய இறைவர் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற பிற பதிகளையும் போய்த் தொழுது, கற்றவர்கள் போற்றுகின்ற சீகாழிப் பதியை அடைபவராய், பிறபதிகள் என்பன, திருமயேந்திரப்பள்ளி, திருநல் லூர்ப் பெருமணம், திருக்குருகாவூர் முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

பலதிருப்பதிகளையும் கடந்துசென்று, பன்னி ரண்டு பெயர்களையுடைய பழமையான வளம் வாய்ந்த சீகாழிப் பதியானது தொலைவில் காணப்பட, திருந்திய முத்துச் சிவிகையி னின்றும் இறங்கி, வணங்கி, திருவருட் செல்வம் நிறைந்த அச்சீகாழிப் பதியின் மீது திருப்பதிகத்தை அருள்பவராய்,
குறிப்புரை:

நிலைபெற்ற இசையுடைய 'வண்டார் குழல்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை அருளத் தொடங்கி, ஒளிவீசும் சுடர்களைக் கொண்ட மாளிகைகள் விண்தாங்குவன போல் உள்ளன என்னும் கருத்துக்கொண்ட இசையுடன் கூடிய திருப்பதிகத்தை எடுத் துப் போற்றி, மேற்சென்று, புன்னை மரங்களின் மணம் வீசுவதற்கு இடமான சீகாழியின் புறநகர்ப்பகுதியில் வந்து சேர்ந்தார். 'வண்டார் குழல்' எனத் தொடங்கும் பதிகம் நட்டபா டைப் பண்ணிலமைந்ததாகும் (தி. 1 ப. 9). இப்பதிக முதற்பாடலில், 'தண்டாமரை மலராளுறை தவளந்நெடுமாடம், விண்தாங்குவ போலும் மிகு வேணு புரம் அதுவே' எனவரும் கருத்தை முகந்தே ஆசி ரியர் இங்ஙனம் அருளிச் செய்வாராயினர். புறம்பணை - புறத்தே உள்ள வயல்கள். புறநகர்ப் பகுதி. இந்நான்கு பாடல்களும் ஒரு முடிபின.

ஊழிக்காலத்திலும் அழியாது வளர்கின்ற புறம்பணையின் அருகில் வந்து, வரிவண்டுகள் மொய்க்கின்ற மலர்க ளாலும், நல்ல மணமுடைய நறும்புகை, ஒளி விளக்கு ஆகியவற் றாலும், வழிபட்டுத் தொழுது 'சீகாழி நகரினுள் சேர்மின்கள்' எனும் நிறைவுடைய இறுதிச் சீர்களால் அமைந்த திருப்பதிகத்தை ஏழிசை களுடனே பாடியருளியவாறே, மதிலையுடைய அப்பழைய நகரினுள் புகுந்தார். இவ்வருங் குறிப்புக்களையுடைய பதிகம், 'நம் பொருள் நம்மக்கள்' (தி. 2 ப. 97) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும். 'காழிநகர் சேர்மினே' எனவரும் நிறைவுத் தொடர் இப்பதிகப் பாடல்தொறும் வருகின்றது. 'தீபமாலை தூபமும் செறிந்தகையராகிச் சேர்மினே' எனும் அருளுரை இரண்டாவது பாடலில் வருகின்றது. இவற்றை யெல்லாம் முகந்து நிற்ப இப்பாடலை அருளியுள்ளார் ஆசிரியர்.

வானளாவ உயர்ந்து நிற்கும் திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளை, நினைந்த அன்பின் மேன்மையை எண்ணியவராய், நீண்ட நிலைகளையுடைய கோபு ரத்தை அடைந்து, எதிரில் நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கி எழுந்து, உள்ளே புகுந்து, ஒளி விளங்கும் பெருந்திருக்கோயிலை வல மாக வந்து, வணங்கி முன்னின்று தொழுதார்.
குறிப்புரை:

கோயிலுள் ஞானசம்பந்தர், பிரமபுரீசர் திரு முன்பு வணங்கி, அவரது திருவருளின் முழுநோக்கமும் பெற்று, திருத் தோணியான மலையின் மீது ஏறிச் சென்று, பொன்மலை எனும் இமயமலை அரசனின் மகளாரான திருநிலை நாயகியம்மையாருடன் வீற்றிருந்தருளுகின்ற தோணியப்பரைத் தலைமீது கூப்பிய கைக ளுடன் நிலம் பொருந்த விழுந்து வணங்கித் திளைத்தெழுந்து, நிலை பெற்ற வாழ்வையடைந்து, மனம் மகிழ வணங்குபவராய்,
குறிப்புரை:

போற்றுகின்ற திருப்பதிகங்கள் பலவற்றையும் பண்ணுடன் பொருந்தப் பாடி, பொருந்திய கண்ணீர் வெள்ளத்தில் முழுதும் தோய்ந்தருளி, பாம்பை அணியாய் அணிந்த இறைவரின் திருவருள் பெற்று, வெளியே வந்து, அன்பர்களுடன் சீகாழிப் பதியி னரான ஞானசம்பந்தர் தம் திருமாளிகையுள் சேர்ந்தார். இதுபொழுது அருளிய பதிகங்கள் எவை எனத் தெரிந் தில. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

சம்பந்தப் பெருமான் தம் மாளிகையுள் புகுந்து, தம்மைக் காண வந்த அந்தணர்களுக்கெல்லாம் அருள்விடை தந்து, தம் திருவடிகளை வணங்கி நின்ற பெரிய சுற்றத்தவர்களுக்குத் தகுதிக்கு ஏற்றவண்ணம் தலையணி செய்து, விடை தந்து, தம்மை ஆள்கின்ற இறைவரின் அடியாருடனே விரும்பி எழுந்தருளியிருந்து, நீண்டு பெருக வரும் பேரின்பமானது மேன்மேலும் பெருகும்படி நிகழ்ந்து வரும் நாள்களில்,
குறிப்புரை:

சீகாழி நாட்டின் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளை வணங்கி, மகிழ்ச்சி எய்த எண்ணி, கடலை விடப் பெரி தாகப் பெருகும் ஆசையுடன், திருமுருக நாயனார், வாழ்வு பெருகும் திருநீலநக்க நாயனார் முதலிய தொண்டர்களும், மற்றவர்களும் தம்மைச் சூழ்ந்த பெரிய சுற்றத்துடனே வந்து, திருத்தோணிபுரத்தை வணங்கி, பிள்ளையார்பால் வந்தார்கள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அங்ஙனம் வந்தவர்களை எதிரேசென்று அழைத்து, திருவுள்ளம் மகிழ்ந்து, சீகாழிப் பெருமான், அளவில்லாத சிறப்புக்களை உடைய அவ்வடியவர்களுடனே இனிதாக விரும்பி யிருந்து, அழகின் நிலைக்களமான பெரிய நாயகியம்மையாருடன் திருத்தோணியில் வீற்றிருந்தருளும் தோணியப்பரைச் செந்தமிழ் யாப்பால் பல பதிகங்களையும் பாடி, இதுபொழுது அருளிய திருப்பதிகங்கள்:1. கறையணி (தி. 2 ப. 65) - காந்தாரம்.
2. கரமுனம் மலரால் (தி. 3 ப. 37) - கொல்லி.
3. இறையவன் ஈசன் ( தி. 3 ப. 56) - பஞ்சமம்.
4. நிலவும் புனலும் (தி. 2 ப. 17) - இந்தளம்.
5. பூதத்தின் படையினீர் ( தி. 2 ப. 81) - காந்தாரம்
6. விதியாய் விளைவாய் (தி. 1 ப. 30) - தக்கராகம்.
7. ஆடல் அரவசைத்தான் (தி. 1 ப. 104) - வியாழக்குறிஞ்சி.
8. உகலியாழ்கடல் (தி. 2 ப. 25) - இந்தளம்.
9. உருவார்ந்த (தி. 2 ப. 54) - காந்தாரம்.
10. விடையதேறி (தி. 2 ப. 122) - செவ்வழி.
11. கண்ணுதலானும் ( தி. 3 ப . 7) - காந்தார பஞ்சமம்.
12. காலைநன்மாமலர் (தி. 1 ப. 75) - குறிஞ்சி.
13. வண்டரங்க (தி. 1 ப. 60) - பழந்தக்கராகம்.
14. கரும்பமர் (தி. 3 ப. 100) - பழம்பஞ்சுரம்.
15. செந்நெலங்கழனி (தி. 2 ப. 1) - இந்தளம்.
16. பந்துசேர்விரலாள் (தி. 3 ப. 2) - காந்தாரபஞ்சமம்.
17. மின்னன (தி. 3 ப. 13) - காந்தாரபஞ்சமம்.
18. பல்லடைந்த (தி. 1 ப. 47) - பழந்தக்கராகம்.
19. வாருறு (தி. 1 ப. 109) - வியாழக்குறிஞ்சி.
20. எய்யாவென்றி (தி. 1 ப. 97) - குறிஞ்சி.
21. பங்கமேறு (தி. 1 ப. 66) - தக்கேசி.
22. அடலேறமரும் (தி. 1 ப. 34) - தக்கராகம்.
23. நல்லார் தீமேவும் (தி. 1 ப. 81) - குறிஞ்சி.
24. உரவார்கலை (தி. 1 ப. 102) - குறிஞ்சி.
25. நல்லானை (தி. 2 ப. 11) - இந்தளம்.
26. பண்ணின் நேர் (தி. 2 ப. 49) - சீகாமரம்.
27. நலங்கொள் (தி. 2 ப. 59) - காந்தாரம்.
28. விண்ணியங்கு (தி. 2 ப. 75) - காந்தாரம்.
29. பொங்குவெண்புரி (தி. 2 ப. 96) - பியந்தைக் காந்தாரம்.
30. பொடியிலங்கு (தி. 2 ப. 113) - செவ்வழி.
31. சந்தமார் (தி. 3 ப. 43) - கௌசிகம்.
32. நிலநன் (தி. 2 ப. 83) - பியந்தைக் காந்தாரம்.
33. அறையும் (தி. 2 ப. 89) - பியந்தைக் காந்தாரம்.
34. திருந்துமா (தி. 3 ப. 89) - சாதாரி.
35. அயிலுறு படையினர் (தி. 1 ப. 79) - குறிஞ்சி.
36. சேவுயரும் (தி. 1 ப. 129) - மேகராகக் குறிஞ்சி.
37. மடல்மலி (தி. 3 ப. 118) - புறநீர்மை
38. ஆரூர் தில்லை (தி. 2 ப. 39) - இந்தளம்.
39. கல்லால் நீழல் ( தி. 3 ப. 40) - கொல்லி.


பெருமகிழ்வுடன் இங்ஙனம் இருக்க, பெரிய தவம் செய்ததன் பயனாக ஞானசம்பந்தரைப் பெற்றெடுத்த தந்தையார் ஆன சிவபாத இருதயரும் பொருந்திய சுற்றத்தவராகிய அந்தணர்களும் கூடி, முத்திச் செல்வம் வளர்வதற்கு ஏதுவான ஞானத்தின் தலைவராம் பிள்ளையார் திருமணம் செய்ருளுதற்கு ஏற்ற பருவம் இதுவாகும் என நினைந்து, தம் எண்ணத்தைப் பிள்ளையாருக்கு அறிவிக்கும் பொருட்டு அவரை அடைந்தனர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

உலகியல் நிலையில், மறைவழிபட்ட ஒழுக்கத்தை ஞானசம்பந்தருக்கும் இசைவித்தலை உள்ளத்தில் கொண்டு, குற்றமில் லாத மறைநெறியில் சொல்லப்படும் செயற்பாடுகளுடன் (சடங்குகளு டன்) கூடிய வேள்விகளைச் செய்வதற்கு, உரிமையைப் பெறும் பொருட்டுத் தாங்கள் ஓர் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். 'போனகருக்கும்' என்றவிடத்துவரும் உம்மை அவர் தம் சிறப்புணர நின்றது. ஞானத்தின் திருவுருவாக விளங்கும் ஞானசம்பந் தருக்கு, மறைவழிப்பட்ட செயற்பாடுகளோ, அவற்றைச் செய்தற்கு என ஓர் இல்வாழ்க்கையோ வேண்டுவதின்று என்பது போதர நின்றது.

இங்ஙனம் கூறிய அவர்களின் சொல்லைக் கேட்டு, மாதவத்தின் கொழுந்தென விளங்கும் ஞானசம்பந்தர், சுற்றங்கள் பொருந்திய பெரிய பாசத் தொடக்கினை, விட்டு நீங்குவதற்காக நிலைமை உடையவராகி, விடைக்கொடியை உயர்த்திய சிவபெரு மானின் திருவடி ஞானமான உயர்ந்த சிவஞானத்தை முன்னே பெற்றவர் ஆதலால் அவர்களின் மொழிக்கு இசையாமல் 'நீங்கள் கூறுவது பொருந்திய மொழியாயினும், அது என்னளவில் வேண்டாத ஒன்றாகும்' எனக் கூறியருள,
குறிப்புரை:

அம் மறையவர்கள் மேலும் கைகூப்பித் தொழுது, ஞானசம்பந்தரிடம் அறிவிப்பாராய், பெரிய மண்ணுலகில் மறைவழிவரும் வழக்கினை நீர் உயர்த்தியருளினீர் ஆதலின், அவ் வழிவரும் முறையில் அந்தணர்க்குரிய ஆறு தொழில்களுடன் கூடிய அப்பெருநெறியில் ஒழுகும் திருமணத்தைச் செய்தருளுதற்குத் திரு வுள்ளம் கொள்ளல் வேண்டும் என்று கூற,
குறிப்புரை:

மறைகள் வாழ்வு அடையவும், அந்தணர்களின் மறைவழிப்பட்ட வாய்மையால் வரும் ஒழுக்கம் வாழ்வடையவும், அந்தச் சுற்றத்தார்களுக்கு அருள்செய்து, அவர்களின் வேண்டுகோ ளுக்கு ஞானசம்பந்தர் இசைவு தெரிவிக்கவும், பிறைச் சந்திரன் வாழ் கின்ற திருமுடியில் பெரிய நீர்க் கங்கையுடன் பாம்பையும் அணிந்த நீலகண்டரான இறைவரை வணங்கி, அச்சுற்றத்தார் மகிழ்ந்தனர். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

திருஞானசம்பந்தர் இவ்வாறு திருவுள்ளம் பற்ற, (மணம் செய்து கொள்வதற்கு இசைய), வாய்மையுடைய மறையவர் களும், தந்தையாரான சிவபாத இருதயரும் அளவற்ற, தாங்கற்கரிய பெருவாழ்வைப் பெற்றவர் ஆகி, 'இஃது இறைவரின் திருவருளே யாகும்' எனத் துணிந்து, உள்ளம் உருகி, இன்பம் பொருந்திய மன மகிழ்ச்சியுடையவராகி,
குறிப்புரை:

குற்றமற்ற மறையவர் மரபில், பொருந்திய குலம் முதலியவற்றுடன் இசைந்ததாகையால், இறைவரின் திருப்பெருமண நல்லூரில் வாழும் நம்பாண்டார் நம்பி பெற்ற திருமகளாரை, சீகாழித் தலைவரான பிள்ளையார் மணம்செய்தருளுதல் தகுதியுடையதாகும் என்று பொருத்தமுற எண்ணினர். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

திருஞானசம்பந்தர் சிறப்புப் பெருகும் திரு மணம் செய்து கொள்ளும் பெருவாழ்வைப் பற்றித் தொண்டர்களும் அந்தணர்களும் மிக விரும்பவும், வருபவர்களாகிய பெருஞ் சுற்றம் மகிழ்ச்சி மிகப் பெறவும், மகட் கொடை நேர்தற் பொருட்டு, மரங்கள் நிறைந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருபெருமணநல்லூரைச் சேர் கின்ற தந்தையார்,
குறிப்புரை:

தொண்டர்களும் அந்தணர்களும் உடன்செல்ல, எண் திசையும் புகழ்கின்ற திருநல்லூர்ப்பெருமணத்தைச் சேரத் தகுந்த புகழுடைய நம்பாண்டார் நம்பிகளும், அவர்தம் வருகையைக் கேட்டு, மகிழ்ந்து, சிவந்த வானத்தைப் போன்ற சடையை உடைய சிவபெரு மானின் திருவடிகளை வணங்கி எழுபவராய்,
குறிப்புரை:

ஒப்பில்லாத பெருமகிழ்ச்சி ஓங்கி மேல் எழும் மனத்துடன், நன்னீர் நிறைந்த குடமும் விளக்கும் வைத்து, வீதியை எங்கும் அணிசெய்து, சொலற்கரிய ஆசைமிக்க சுற்றத்தாருடன் சென்று, உறுதிப் பொருள் எல்லாவற்றையும் நான் அடைந்தவன் ஆனேன் எனச்சொல்லி அவர்களை வரவேற்றார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

நம்பாண்டார் நம்பி எதிரே போய் வரவேற்று அழைத்துக் கொண்டு சென்று, தம் மணிமாடத்தை அடைந்து, இன்ப முடைய பணிமொழிகள் பலவற்றையும் கூறி, முறையாக வரவேற்று, விருந்து முதலான சிறப்புகளைச் செய்ய, நான்முகனைவிட மேன்மை யுடைய சிவபாத இருதயரும், முதிர்ந்த உணர்வுடைய திருத்தொண்டர் களும் மற்ற அந்தணர்களும், தாங்கள் வந்த திறத்தைத் கூறுபவர்களாகி,
குறிப்புரை:

ஞானஅமுதுண்ட ஞானசம்பந்தருக்கு நல்ல தவம் பொருந்திய இனிமையான ஒழுக்கத்தால் குற்றமற்ற சிறப்புடைய உம் மகளை மணம் பேசுவதற்கு நாங்கள் வந்துள்ளோம் என்று எடுத் துச் சொல்லவும், இவ்வாறு வரப்பெறுகின்ற பேறு, அந்தணரான நீங்கள் என்மீது வைத்த கருணையாலாகுவதன்றி என் தகுதிபற்றி யன்று என்று வானளவு நிறைந்த பெரும் மனமகிழ்ச்சியுடன், சிவபாத இருதயரை நோக்கி நம்பாண்டார் நம்பி கூறுபவராகி,
குறிப்புரை:

'உம் பெருந்தவத்தினால் தோன்றிய, உலகங்கள் எல்லாம் பெற்றெடுத்த உமையம்மையாரின் திருமுலைப்பாலில் குழைத்த சிவஞான அமுதத்தை உண்டருளிய பிள்ளையாருக்கு, எம் குலக்கொழுந்தான மகளை, யாங்கள் உய்யும் பொருட்டு திருமணம் செய்து தருகின்றோம். வாருங்கள்' என்று சொல்லி, உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க அவர்களைச் சீகாழிக்குச் செல்லுமாறு அனுப்பினார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

மிக்க மகிழ்ச்சியால் நம்பாண்டாரின் இசைவைப் பெற்ற சிவபாத இருதயர் முதலியவர்கள், மீண்டு சென்று, மேகங்கள் தவழ்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த சீகாழிப் பகுதியை வந்து அடைந்து, சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தரிடம் நம்பாண்டாரின் இசைவு பற்றி விரிவாகச் சொல்லி, உலகம் விளங்குதற்குக் காரணமான திருமணத்தின் செயல்முறைகளைத் தொடங்குவார்களாய்,
குறிப்புரை:

திருமணம் செய்யநின்ற நாளையும், விளங்கும் சிறப்புடன் கூடிய ஓரையையும், கணித நூல் உணர்ந்த சான்றோர்கள் வகுத்துச் சொல்ல, பெருகும் மண ஓலையைப் பெருஞ் சிறப்புடன் மணமகள் வீட்டாருக்கும் மற்றச் சுற்றத்தவர் முதலானவர்களுக்கும் அனுப்பி, திருவருள் உணர்த்தியவாறு தேர்ந்தெடுத்த நன்னாளில் அழகிய பாலிகைகளில் அழகான முளையை விதைத்தார்கள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

செல்வம் நிறைந்த சீகாழிப் பதியின் செழித்த வீதிகளில் நிறைகுடங்களையும், விளக்குகளையும், மகர தோரணங்க ளையும் நிரல்பட அமைத்து, பேரொளியையுடைய முத்துமாலைகளை எங்கும் தொங்கவிட்டு, மிக்க பெருந்திரு ஓங்கும்படி, அழகு விளங்க அணிசெய்தனர்.
குறிப்புரை:

அரிய தவத்தவர்களான தொண்டர்களும் மற்ற வர்களும் மற்றும் அயலில் உள்ளவர்களுமாகக் கூடிய ஒப்பற்ற சான்றோர்கள், தாம் உய்யுமாறு பொருந்தும் திருமண நாள் ஓலையை எடுத்துக் கொண்டு வந்து சேர, பெரும் புகழையுடைய நம்பாண்டார் நம்பிகளும், அச்சிறப்பை முறைமையாக ஏற்றுக் கொண்டு, முன்னைய தவத்தின் பயனால் தம் மகளாரைப் பிள்ளையாருக்கு மணமகளாகத் தருபவராகித் திருமணத்திற்கான செயல்களைச் செய்யத் தொடங் குவார்,
குறிப்புரை:

நிலைத்த புகழையுடைய சுற்றத்தவர் அனை வரும் சீகாழியில் வந்து கூடி, திருமணம் நிகழவிருக்கும் நாளுக்கு ஏழுநாள்களுக்கு முன், நல்ல நாளிலே, பல அழகிய மங்கல முரசு களும், பலவகை இயங்களும் நிறைந்து ஒலிக்க, பொன் இட்ட அழகிய பாலிகைகளின் மீது தூய முளையை நிறைத்துத் தெளித்தார்கள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

வானுயர்ந்த மாடங்களையும், செல்வம் மிகும் மண்டபங்களையும், பெரிய நிலைகளை உடைய மாளிகைகளையும் ஒப்பில்லாத அழகு பெறுமாறு அணிசெய்து, காட்சி பொருந்த வரும் ஓவியத்திலும் அழகு மிகுமாறு சித்தரித்துச் சிறந்த உருவங்களை அங்கங்கும் எழுதி, ஒளி பொருந்திய அழகிய மணிகள் பதித்த முதற்கடை வாயிலில் மங்கலக் கோலங்களைச் செய்து,
குறிப்புரை:

உயர்ந்த தோரணங்களை நீண்ட வீதிகள் தோறும் நிரல்பட அமைத்து, பக்கங்களில் உயர்ந்த பசிய கொடி மாலைகளையும் மணிமாலைகளையும் இடையிடையே அமைத்து, ஒளியுடைய திண்ணைகளைச் செழுமையுடைய சுண்ணச் சாந்துகளால் மெழுகி, பெருமை விளங்கும் மணிமுத்துக்கள் நிறைந்த பெரும் பந்தல்கள் பலவற்றையும் அமைத்தனர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

திருமணச் செயல்களுள், முளை வளர்ந்து வரும் நாள் தொடங்கி, வரும் நாள்களில் எல்லாம் வீதிகள் தோறும், மாடங் களின் முற்றங்கள் தோறும், நீண்ட முன்வாயில்தோறும் விளக்கம் செய்யும் மணி விளக்குகளும், மணமுடைய தூயநீர் நிறைந்த பொன் குடங்களும், நெருங்கிய ஒளியையுடைய மாலைகளும், நறுமணப் பொருள்களுமாகிய இவற்றை நெருக்கமாக அமைத்தனர்.
குறிப்புரை:

எல்லா இடங்களிலும் உண்மைத் தொண்டர் களும், அந்தணர்களும், மற்றவர்களும், மங்கலம் பெருகும் மணச் செயல்கள் நிகழும் நாளைக்கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்து, திருப் பெருகும் சீகாழிப் பதியில் நாள்தோறும் வந்து பெருக, அங்ஙனம் அங்கு வந்து சேர்ந்தவர்களுக்கெல்லாம் பெரிய சிறப்பை மிகவும் அளித்தனர்.
குறிப்புரை:

மங்கலம் பொருந்திய இயங்கள், வீதிகள்தோறும் நின்று ஒலிக்க, மேன்மேல் ஓங்கி எழுந்த நான்மறைகளின் ஒலியா னது கடல் ஒலியைவிட மிக்கு விளங்க, நறுமணம் மிக்க அகில் துண் டங்களின் மிக்க செழும் புகையுடன், வேள்விப் புகையும் சேர்ந்து தெய்வ மணம் பெருக,
குறிப்புரை:

எண்திசையில் உள்ள மக்களும், அங்கங்குள்ள வளம் மிக்க பொருள்களுடன் நெருங்க, பண்டங்கள் நிறையச் சேமிக் கும் சாலைகளும் பல்வேறு விதமாக விளங்க, மிக்க பெருநிதியின் குவியல்கள் மலை என மலிய, உணவு உண்பார் உணவருந்தும் வகையில் எழும் ஓசைகள் இடையறாது பேரொலியாய்ப் பெருக, மண்டுபெரு நிதிக்குவைகள்
மலைப்பிறங்கல் எனமலிய
உண்டிவினைப் பெருந்துழனி
ஓவாத ஒலியோங்க.


சிறந்த மறைநூல்களின் வழிச் செயத்தகும் வேள்விகளில், உரிய பொருள்களை அமைத்து ஒழுங்குபடுத்துபவர் களின் தொழில் நெருங்க, நான்முகனைப் போன்று வேள்வி செய்த லில் வல்ல மறையவர்கள் எடுத்த மலர்கள் பொருந்திய பொற்குடங் களில் நிறைந்த புண்ணிய நீர் திகழ,
குறிப்புரை:

குங்குமப் பூவின் செழுமையான சேறான சந்தனக் குழம்பை அமைப்பவர்களின் இனங்கள் கூட, மிக்க மணம் உடைய மணப் பொருள்கள் கூட்டிய கலவையின் நறும்புகை எடுப்பவர் கூட்டம் பெருக, உயர்வுடைய நறுமணம் உடைய கற்பூரச் சுண்ணத்தை இடிப்போர் கூட்டம் நெருங்க, எங்கும் மலர்களாலான பிணையல் முதலான பலவகைப்பட்ட மாலைகளைத் தொடுப்பவர் கூட்டம் பெருக,
குறிப்புரை:

இப்படிப் பலவகைப்பட்ட வெவ்வேறு தொழில் களை எல்லாப் பக்கங்களிலும் ஒழுங்குபடச் செய்யும் மனைகள் உள்ள வீதிகளில் எல்லாம், மணவிழாவை விளக்கமாகக் காட்டும் மறையவர்கள் வாழ்கின்ற அவ்வூர், நினைப்பதற்கும் அரிய பெரிய வளங்கள் நெருங்கிய அதனால், குபேரனைச் சிவபெருமான் ஏவிய தால், அவனே வகுத்ததைப் போல விளங்குகிறது. இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

மாறுபாடில்லாத நிறைந்த வளத்தை அளிக்கும் சீகாழிப் பதியில், திருமணத்தை மேற்கொள்ளும் திருநாளின் முன் நாளில், அந்தணர்களும், திருநீறு அணிந்த தொண்டர்களும் கூடி, ஒப் பில்லாத பிள்ளையாருக்குக் கங்கையைத் தலையில் சூடிய இறைவரின் அருள் பொருந்திய திருக்காப்பு நாணை அணிவிப்பவராகி,
குறிப்புரை:

மறைவழிச் செயத்தகும் செயற்பாடுகள் இத னால் விளங்கவும், கடல் சூழ்ந்த உலக நடைமுறை ஒழுக்கங்கள் மிகவும், அன்புமிக்க திருத்தொண்டர்களும் வேதியர்களும் அழகான மங்கையர்களும் ஆடவரும் கூடிப் பொன்னால் ஆன காப்பு நாணை நகர்வலம் வருமாறு செய்தனர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அவ்வாறு நகர்வலம் வரச்செய்து, மங்கலமனை புகுந்த பின்பு, நவமணிகளால் ஆன குற்றம் இல்லாத ஓவியங்களால் மேற்கட்டி அமைக்கப்பட்ட மண்டபத்தில், நூல்களால் எடுத்துக் கூறப்படும் மறைவழி சமாவர்த்தனமாகிய தன்மையை மேற்கொள்ளச் சிறந்த ஞானசம்பந்தரின் திருமுன்பு வந்து சேர்ந்தனர். சமாவர்த்தனம் - இதுகாறும் ஒழுகிய பிரமசரிய நிலை யினின்றும் நீங்கி இல்லறம் மேற்கொள்ளுதற்குரிய நிலை. இதற்கென விதிக்கப்பட்டிருக்கும் செயற்பாடுகளைச் செய்ய அனைவரும் பிள் ளையாரின்முன் வந்தனர்.

செம்பொன்னால் ஆன தட்டில், செந்நெல்லைப் பரப்பி, அதன்மீது மணம் பொருந்திய நீண்ட மாலைகள் இரு மருங் கிலும் சூழ, அமைக்கப்பட்ட மணமுடைய நீர் நிறைந்த பொன்குடமும், அரசிலையும், தருப்பையும், பரவிய நீண்ட ஒளியையுடைய அழகான விளக்குப் பொருந்திய சூழலில்,
குறிப்புரை:

பல்வேறு இயங்களால் ஆய மங்கல முழக்கத்து டன், நல்ல தவ முனிவர்களின் மறை ஒலியும் நிறைய, நறுமணம் வீசும் மலர்களும், சாந்தும், அணிகளும், அழகான ஆடையும் புனைந்த புண் ணியத்தின் பொலிவென அழகிய மலர் அமளி மீது வீற்றிருந்த பிள்ளையாரின் திருமுன் அடைந்து,
குறிப்புரை:

ஆர்வம் மிகுந்து எழுவதால் ஆன அன்பால், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனைப் போன்ற சிறந்த மறை விதிப்படி செயற்பாடுகளைச் செய்யும் நூல்வல்ல வேதியர்கள், உலகில் பிறவி எடுக்க வரும் இருவினைகளின் சார்பை நீக்குபவரான ஞானசம்பந்தரின், திருக்கையில் காப்புநாணை அணிவிக்க,
குறிப்புரை:

அதனைப் பார்த்தவர்களும், மணத்தைக் காண்ப தற்காக வந்து கொண்டிருப்பவர்களும், பற்றிய வலிய வினைக்கட்டை அவிழ்த்து நீக்கும் கொள்கையுடைய தொண்டர்களும் ஆகிய இவர்க ளின் உள்ளங்களும் முகங்களும் மலர்ச்சி பெற்றன; ஓசை நிறைந்த மறைக் குலங்கள் மகிழ்ச்சி பெற்று மேல் ஓங்கி ஒலித்தன. இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பரவிய இரவில் மறைவழி நிதிமழையாகப் பொழிந்து அனைவர்க்கும் அருளிய ஞானசம்பந்தர், முன் புன்மை யான நெறிகளான புறச்சமயங்களின் துன்பம் தரும் வலிய இருள் நீங்க வந்து தோன்றினாற் போல, பரந்த பேரிருளை நீக்கிக் கதிரவன் தோன்றினான்.
குறிப்புரை:

அழகான வண்டுகள் இசைபாடும் பொழில்கள் சூழ்ந்த சீகாழியின் ஆண் தகையாரான ஞானசம்பந்தர், சிவத் திரும ணம் செய்வதற்கிடமாகத் தவம் செய்யப் பெறும் நாள்இது என்று எண்ணித் திருமஞ்சனத் தொழிலைச் செய்தல் போல, மாசுடைய இரு ளைக் கழுவி நீக்கிப் பகலோனது செஞ்சுடரான கதிர்களின் பேரணி யினைத் திசைகள் பூண்டு கொண்டன.
குறிப்புரை:

பெருகிய தங்களிடத்தில் எவ்வெவ்விடங் களிலும் உள்ள பல வளங்களையும் மிகுதிப்பட முன்கொணர்ந்து, எட்டுத் திசைகளில் உள்ளவர்களும் நெருங்கி வந்து கூடியதால், ஒப்பில்லாதவரான ஞானசம்பந்தரின் திருமணத்தில் அளவற்ற தன் பயனை, நிலம் எடுத்துக் காட்டுவது போல விளங்கியது.
குறிப்புரை:

அடியவரான எங்கள் வாழ்வே உருக்கொண்டு வந்தது போல வரும் திருஞானசம்பந்தரின், மங்கலமான திருமண எழுச்சியில், மங்கல இயங்களின் ஒலி போலப் பெரிய வெண்மை யான அலைகளுடன் சங்குகளின் ஒலியும் சூழ்ந்து, மேன்மேலும் எழும் பெரிய ஒலியான முழக்கத்துடனே கடல் எழுந்தது.
குறிப்புரை:

கடல்கள் ஏழும் ஒன்றாய்ச் சேர்ந்து எழுந்தன என்ற பெருமை கொண்டு, எல்லா உலகங்களையும் விளங்கிடச் செய்கின்ற திருமண நிகழ்ச்சியான விழாவுடனே, தாமும் கூடிப் பயன் பெறும் பொருட்டு, விரைவாகச் செல்ல ஒருப்பட்டு, எழுபவை போன்று, அசைவில்லாத ஒழுக்கத்தையுடைய வேதியர்கள் ஆகுதி யைத் தொடங்குவதற்கு முன்னம், மூன்று தீ வளர்வதற்கிடமான வேதி கைகளில் தீயானது வலம் சுழித்து எழுந்தது.
குறிப்புரை:

அழகான மெல்லிய பூந்தாதுக்களான திரு நீற்றை மெய்யில் தாங்கிக் கொண்டு, கூட்டமாகப் பொருந்தும் வண்டுகளின் வரிசையான உருத்திராக்க மாலைகளைப் பூண்டு, உள்ளம் தூய்மை யான அன்பர்களுடன் கூடித் திருமண எழுச்சியில் கலந்து செல்ல, மென்மையான வேகத்தினால், பூமணங்களைச் சுமந்த வண்ணம் காற்று வந்தது.
குறிப்புரை:

எட்டுத் திசைகளின் பகுதிகளில் வாழ்கின்ற எல்லாத் திறத்தவரும் சீகாழியில் வந்துகூடி, நெருங்கி, எழுந்த அத் திருமண நிகழ்ச்சியில், அழகு பொருந்தும்படி மேற்கொண்டு தூக்கி எடுத்த வெண்ணிறம் பொருந்திய ஒளியையுடைய பெருவெண் மேகங்களாகிய வெண்மையான துணியால் ஆன கொடிகளை, நிரல் பட அமைத்தாற்போன்று வானம் விளங்கியது.
குறிப்புரை:

பொருந்துமாறு வந்த இந்நன்மைகள் யாவும், திருமண எழுச்சியின் முன் காட்டுகின்ற, காலையில் செய்யும் கடப்பாட்டை முடித்தருளிய கவுணியர் தலைவரான ஞானசம்பந்தர், மூலமான திருத்தோணியின் மேல் உள்ள இறைவரை வணங்கிச் செம்மையான திருவருள் பெற்றவராய்த் திருமணத்தை மேற்கொண்டு செல்வாராகி,
குறிப்புரை:

சீகாழிப் பதியில் அந்தணர்கள் கூட்டத்துடன் கலந்து சூழ்ந்த அன்பர்களும், மற்றவர்களும் நெருங்கி முன்னே செல்லச் சென்று, வாழ்வுதரும் பெருமறைகள் முழங்க, வளம் வாய்ந்த சீகாழிப் பதியினை வணங்கி, ஒளி மிக்க வெண்மையான சுடரை உடைய முத்துச் சிவிகையின் மேல் எழுந்தருளி அமர்ந்தார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அவரவர்க்குரிய ஊர்திகளில் அமர்ந்து செல்ப வர்கள், அவ்வவற்றில் ஏறி அமர, காட்டைப் போன்ற தொங்கல் களும், பீலிக் குஞ்சங்களும், குடைகளும், கவரிகளும் மேலே நெருங்க, வானத்திலும் நிலத்திலுமாக முறையே தேவதுந்துபி ஒலியுடன் மங்கல இன்னியங்களின் ஒலியும் ஒருங்கே எழுந்தன.
குறிப்புரை:

சங்கினொடு தாரை, சின்னம், ஒப்பற்ற பெரிய எக்காளம், தாளம், குழல் என்ற இவை போன்ற ஒலி உண்டாகின்ற கருவிகள் எல்லாமும், மேல் எழுந்த ஒலியினால் ஓங்கி, அந்தணர் களின் மறைப் பாடல்களின் ஒலியுடன் பொருந்தி, எங்கும் பெருகத் திருமணமானது எழுச்சி பெற்றுச் சென்றது.
குறிப்புரை:

மங்கையரின் கூந்தலைச் சூழ்ந்த வண்டுக் கூட்டங்களின் ஒலி ஒருபக்கத்திலும், அழகிய மறையவர் ஓதும் மறை ஒலி ஒருபக்கத்திலும், குற்றம் இல்லாத மிக்க வீணையும் யாழுமான இவற்றின் ஒலி ஒருபக்கத்திலும், போற்றும் நாதத்துடன் கூடிய மங்க லங்களைப் பாடலாய்ப் பாடும் இனிமையான ஒலி ஒரு பக்கத்திலும்,
குறிப்புரை:

மிக்க வெண் துகில் கொடிகளின் கூட்டம் வானவெளியை மறைக்கவும், மிக்க ஒளிவீசும் சாமரைகளின் கூட்டம் கண்கள் கூசவும், விளங்கும் மணிகளையுடைய அணிகளும் நீடும் மஞ்சள் நிறம் மிக்க அழகிய அளவற்ற துணிப் பொதிகளின் கூட்டமும் எங்கும் பொருந்த,
குறிப்புரை:

பஞ்சசிகை கொண்ட தோற்றத்துடன், கரியமான் தோலைப் பூணும் நூலில் கொண்ட மறை ஓதும் சிறுவர்களும் ஆசிரிய ரும் ஆகக் கூடிச் செல்லவும், ஓமப் புகைவிடும் வேள்விச் செந்தீயி னைத் தத்தம் மனைவியர்களுடனே கொண்டு அந்தணர் செல்லவும், தடுக்க இயலாத விருப்பத்துடன் பெருமையால் சிறந்த திருப்பதிகங் களை ஓதிக்கொண்டு ஓதுபவர் செல்லவும், ஆறுவகையான பகைகளையும் அறுத்தவர்கள் தத்தம் இயல்புடனே நெருங்கவும், செருக்கு, சினம், காமம், இவறல், மாண்பிறந்த மானம், மாணா உவகை ஆகியன அறுவகைப் பகையாம்.

ஆறுவகையான உட்சமயங்களில் எண்ணற்ற விரதங்களைக் கொண்ட ஒழுக்க வழிகளிலே உரிய வேடங்களால் நீடிய தவத்தில் நின்றவர்களும், குற்றமற்ற மனத்துடன் அன்பின் வழியினால் சிவயோகக் குறியில் நிலைபெற்றவர்களும் கூட்டம் கூட்டமாகச் செல்லவும், உட்சமயம் ஆறாவன, பாடாணவாதம், பேதவாதம், சிவசமவாதம், சிவசங்கிராந்த வாதம், ஈசுவர அவிகாரவாதம், சிவாத்து விதம் என்பன இக்கொள்கையினர், சைவசித்தாந்தச் செந்நெறியோடு முடிவில் சிலவேறு பாடுகளை உடையரேனும், மேலாய உண்மையை ஒரு மருங்கு ஏற்கும் இயல்புடையர் ஆதலின் இவர்களும் பிள்ளை யார் திருமணத்திற்கு வந்தனர். சிவயோகக் குறியில் நிற்பவர்கள் கிரியையில் நிற்போர்.

வித்தியாதரர்களும் இயக்கர்களும் சித்தர்களும் நெருங்கிய தேவர்களும் மைபூசப் பெற்ற கண்களை உடைய கூட்ட மான அரம்பையர்கள் உடன் உள்ளவர்களும், தங்கள் தங்களுடைய ஒளி பொருந்திய வான விமானங்களில் ஏறிக் கொண்டு, மிகு விருப் புடன் மேகங்கள் தவழும் வான் வழியாகத் திருமண நிகழ்ச்சியைக் காண்பதற்காக வந்தனர். வித்தியாதரர், இயக்கர், கின்னரர் ஆகிய இவர்கள் தேவரினத்தவர். சித்தர் தாம் வேண்டியவாறு இயங்கும் வல்லமை உடையவர்.

வித்தியாதரர், இயக்கர், கின்னரர் ஆகிய இவர்கள் தேவரினத்தவர். சித்தர் தாம் வேண்டியவாறு இயங்கும் வல்லமை உடையவர். திருமணஎழுச்சிக்கு விண்ணவர்கள் விண் வழியாகவும், அதே நேரத்தில் மண்ணவர்கள் மண்வழியாகவும் செல்கின்றனர். இவர்களில் மண்ணவர்களின் சாயையே விண்ணவர்களாகக் காட்சி யளிக்கிறதாம். இதனால் மண்ணவர்களின் சிறப்புணரப்படும்.

தவ அரசை ஆட்சி செய்வதற்குப் பிடித்ததைப் போன்று, ஒப்பில்லாத முத்துக் குடைகள் மேலே நிழல் செய்ய, சாரும் பிறவியை அறுத்து ஆட்கொள்ள வல்ல இறைவரின் திருவடிகளைத் தம் திருவுள்ளத்தில் வைத்துக் கொண்டவராய், உலகங்கள் எல்லாம் வாழ்வடையும் பொருட்டு வந்து தோன்றிய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் சென்றருளிச் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருநல்லூர்ப் பெருமணத்தை அடைந்தார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

திருநல்லூர்ப் பெருமணத்தில் உள்ள கோயிலில் உள்ள தொண்டர்கள் மங்கலம் பெருக, இனி நிகழ உள்ள திருமணத்தின் முன், வழியிலே வந்து எதிர்கொள்ள, திருமணம் செய்து கொள்ள வருகின்ற ஞானசம்பந்தர் சென்று, கரிய நஞ்சினைத் தன்னுள் மறைத்து விளங்கும் திருக்கழுத்துடைய இறைவரின் கோயிலுள் புகுந்தார்.
குறிப்புரை:

இறைவரைப் பணிந்து போற்றி, நல்ல பொருள் பொதித்த பதிகத்தைப் பாடி, பெரு விருப்பத்தை விளைக்கின்ற இறை வரின் மெய்யருளை முன் பெற்றவராய்க் கவுணியர் தலைவரான பிள்ளையார் வெளியே போதர, அதுபொழுது மறையவர்கள், திருமணக் கோலத்தைக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்ள, அதனைச் செவியேற்றுப் பூதகணங்களின் தலைவரான இறைவரின் கோயில் அருகே உள்ளதொரு மடத்தினுள் புகுந்தார். இதுபொழுது அருளியபதிகம் கிடைத்திலது.

பொன்குடத்தில் நிறைக்கப் பெற்ற மணமுடைய புனிதமான திருமுழுக்கிற்குரிய நீரால் ஞானசம்பந்தரை நீராட்டி, ஒளிவிளங்கும் வெண்மையான பட்டாடையை அழகுபெற உடுத்தி, நல்ல மேலாடையான நறுமணத் துகிலையும் அணிவித்து, மணம் கமழும் கத்தூரியுடன் பல பொருள்களைக் கூட்டி அமைத்த சாந்தத் தைப் பண்பு அமையச் சாத்திய பின்னர்,
குறிப்புரை:

திருவடி மலர்களின் மீது, பூத்த செவ்விய விளக்கின் ஒளி போன்று பொருந்திய முத்துக் கோவைகளையுடைய மணிவளையைப் பொருந்தச் சாத்தி, விரிகின்ற ஒளியுடைய பரடுகளின் மேல் விளங்கிய பொன்கம்பியில் கோத்த பெருகும் ஒளியுடைய முத்து மாலையில் விளங்கும் குஞ்சத்தைச் சாத்தி இப்பாடல் முதலாவுள்ள ஆறுபாடல்களில், பிள்ளை யாரின் திருவடி முதல் திருமுடி வரை செய்த அணிநலன்கள் குறிக்கப் பெறுகின்றன.

குளிர்ந்ததும், ஒளி வீசுகின்றதுமான பெரிய முத்துக்களைப் பொன் கயிற்றில் கோத்துப் பார்ப்பவரின் கண்களைக் கவரத்தக்க கோவை வரிசையுடைய ஒளிகொண்ட அரைஞாணை, வெண்ணிற ஒளி வீசும் முத்துமாலை விரிந்த சுடர்விடும் கச்சத்தின் மீது வளமை வாய்ந்த அரையில் மிக்க அழகுடனே ஒளிவிளங்க அணிந்து, கடிசூத்திரம் - அரைஞாண், இது உடையின் மேல் அணி தற்குரியது என்பர்.

ஒளியையுடைய முத்துக் கோவைகளாலான அரைப் பட்டிகையின் மீது தளிர்க்கும் ஒளிமிகும் சன்ன வீரத்தைச் சாத்தி, குளிர்ந்த முத்து ஒளிவீசும் முத்துக் கோவையால் ஆன பூண் நூலை அணிந்து, குளிர்ந்த கதிர்களையுடைய முத்து மாலையான ஒளி பொருந்திய ஆரத்தைச் சாத்தி, உதரபந்தனம் - அரையில் ஆடையின் மீது கட்டப்படுவது. சன்னவீரம் - கழுத்திலிருந்து உந்திவரை தொங்குதற்குரிய முத்துமாலை.

ஒளிவீசும் வயிரக் கட்டுக் கொண்ட விரலில் மோதிரத்தை அணிந்து, முழந்தாள்வரையும் நீண்ட வன்மையான கையில் முத்தால் ஆன தண்டையையும், கைச்சரியையும் அணிந்து, நீண்ட ஒளி கொண்ட முழங்கைப் பொட்டுடன் வரிசையாய் ஒளிவீசும் மணிவடங்களையும் சாத்தி, தோள் வளையான முத்தால் ஆன அணியை அழகிய தோள் மீது சாத்தி,
குறிப்புரை:

தெய்வத்தன்மை வாய்ந்த உருத்திராக்க மாலை யுடன் சேருமாறு கழுத்தில் அணியும் ஆரமாய்ப் பெரிய முத்துக்களை ஒழுங்காய்க் கோத்த படரும் ஒளியுடைய வடத்தையும் சாத்தி, மிக்க அழகோடு உரிய இலக்கணமும் அமைந்த திருப்பொருந்திய காதில் நல்ல சாதி முத்துக்களால் ஆன மகர குண்டலத்தை விளங்கச் சாத்தி,
குறிப்புரை:

: திருநீற்றின் ஒளி தழைத்துப் பெருகும் நெற்றி யின் மீது, விரிந்த ஒளிபொருந்திய வெண்மையான சுடரானது மேல் எழுந்ததைப் போன்ற நல்ல தன்மையுடைய முத்தால் ஆன குளிர்ந்த ஒளிவிடும் திரணையை அணிந்து, பொருந்துமாறு வைத்து அழகு படுத்திய முத்தால் ஆன அழகு மிக்க மகுடத்தைச் சாத்தினர். திரணை- மகுடத்தின் கீழ் அதனைப் பொருந்த வைத்தற் குரிய விளிம்பு. இவ்வேழு பாடல்களும் ஒருமுடிபின.

இவ்வாறு நம்மை ஆட்கொள்கின்ற அழகுமிக்க தெய்வத்தன்மை வாய்ந்த மணக்கோலத்தை, அத்தொழிலில் வல்ல அந்தணர்கள் செய்ய, மணம் பொருந்திய தாதுக்களையுடைய புதிய தாய் மலர்ந்த நீண்ட தாமரை மாலையை அணிந்த மார்பரான ஞான சம்பந்தர், திருஅடையாள மாலையான உருத்திராக்க மாலையை எல்லா உலகத்தவரும் போற்றுமாறு வணங்கி, தாமே எடுத்து அணிந்து கொண்டார்.
குறிப்புரை:

அழகுக்கு அழகு செய்கின்ற திருவெண்ணீற் றைத் திருவைந்தெழுத்தை ஓதி அணிந்து கொண்டு, அழகிய அன்பர் கள் சூழ்ந்துவர, ஒலியும் ஒளியும் பொருந்திய தெருவில் வந்து, இளமையான விடையையுடைய சிவபெருமானை மனமார வணங்கி, முழவுகள் ஒலிக்க, முத்துச் சிவிகை மீது அமர்ந்து எழுந்தருளிய பொழுது,
குறிப்புரை:

சங்குகளின் ஒலி எழுந்தன. இனிய இயங்களின் ஒலி எழுந்தன. விண்ணிலிருந்து தேவர்கள் கற்பகப் பூமழையைப் பொழிந்தனர். தொழத்தகும் முனிவர்களும் தொண்டர்களும் எடுத் தோதும் வாழ்த்தொலிகள் மேன்மேலும் பெருகி எழுந்து, எண்திசை களிலும் பரவின. உலகம் மலர்ந்தது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பரந்த பெரிய குஞ்சங்களும், வெண்குடைகளும், பச்சை நிறமுடைய பீலியால் அமைந்த பந்தர்களும், நெருக்க மாய் அழகு செய்யப்பட்ட பொன் தகட்டால் ஆன வட்ட அமைப்பு டைய அழகிய துணிகளால் அமைந்த மேற்கட்டிகளும், நெருங்கக் கடல்மீது வந்து தோன்றும் கலைகள் நிறைந்த சந்திரன் போல, முத்து வடங்களால் அழகு செய்யப்பட்ட முத்துக் குடை மேலே நிழல் செய்ய, ஞானசம்பந்தர் வந்தருளினார். பிச்சம் - வெண்குடை.

அழகிய தெருவில் திருமண எழுச்சி இவ்வாறு அமைந்து செல்ல, முத்தால் ஆன அழகுடைய எக்காளமும், திருச்சின் னமும், ஒளியுடைய தாரையும் ஆகிய இவையெல்லாம், நான்மறை களும் உய்யவந்த திருஞானசம்பந்தர் வந்தார் என இயம்பின.
குறிப்புரை:

இவ்வுலகத்தவரின் துன்பம் நீங்கத் தோன்றி அருளிய ஞானசம்பந்தரின் திருப்பெயர்கள் பலவற்றையும், திருச்சின் னங்கள் பலவும் கூறி வாழ்த்திவரும் அமயத்தில், ஞானசம்பந்தர் திரு மணம் செய்தற்காக அணிநலன் பொருந்த எழுந்தருளப் பெறும் பேறு பெற்ற புண்ணிய அந்தணரான நம்பாண்டாரது திருமாளிகையில், மங் கல இயங்கள் பலவும் பேரொலி செய்ய,
குறிப்புரை:

முற்றிய மெய்ஞ்ஞானத்தையுடைய ஞானசம் பந்தரின் சிவந்த திருக்கையைப் பிடிக்க, நல்ல பெரிய தவத்தன்மை யால் ஆன நலன்களை எல்லாம் கொண்டு எழுந்த தெய்வக் கற்பகப் பூங்கொம்பு போன்ற அம்மையாரையும், காப்பு அணிந்து, திருமணம் செய்தற்குரிய செயற்பாடுகள் பலவற்றையும் முன்னர் விருப்பத்துடன் செய்த போது,
குறிப்புரை:

செம்பொன்னால் ஆன நெற்றி மாலையையும், அழகிய மணிகள் பதித்த ஒப்பனை செய்த அணிகளையும், செல்வம் பொருந்திய பொன் அரிமாலைகளையும், நிரல்படச் சூட்டிய மெல் லிய பவளக் கொடியைப்போன்ற அம்மையாரை, இறைவரின் அரு ளையே வாழ்த்தி, நல்ல அழகு விளங்க ஒப்பனை செய்து, அழகிய பொன்னால் ஆன விளக்கைப் போன்ற அழகையே அழகு செய்தாற் போன்று அழகு செய்தார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

சிறந்த அந்தண மைந்தர்கள் அனைவரும் திரு மண எழுச்சியின் முன்வந்து, பொருந்திய தூய்மையான மலர்களு டன் பொன் சுண்ணத்தையும், தொகுதியான நவமணிகளையும் வீச, தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் போன்ற அந்தணர்கள் அர சிலையும் தருப்பையும் தோய்ந்த அழகிய பொற்குடத்தின்கண் உள்ள நல்ல நீரை மந்திரங்களைக் கூறித் தெளிக்க,
குறிப்புரை:

தேவர்கள் மலர் மழையை வானத்தே ஒளி மிகுமாறு வீச, நிறைந்த மணத்தையுடைய தென்றல் காற்றை மண்ணுல கம் வீச, நெருங்கிய ஒளிமிக்க அழகிய தோரணங்களிடையே சென்று, புண்ணியத்தின் பயனைப் போன்ற திருஞானசம்பந்தர் பூம்பந்தலின் முன் அணைந்தார். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின. காமர்தோ ரணங்க ளூடு
புண்ணிய விளைவு போல்வார்
பூம்பந்தர் முன்பு சார்ந்தார்.


பொன்னை அணிந்த சங்குகளின் கூட்டம் அழகுடன் முழங்கி ஒலிக்க, பொருந்திய முத்து வரிசைகள் பெருகி ஒளி செய்து விளங்கிய சிவிகையினின்றும், பல மலர்களும் மணம் கமழும் பொன் சுண்ணமும் பரவியிருந்த பாவாடையின் மேல் முன்னே இறங்கி, மூவுலகையும் உய்யும் பொருட்டுத் தோன்றிய ஞானசம்பந்தர் வந்தருளினார்.
குறிப்புரை:

அந்தணர் குலத்தவராய் இல்வாழ்வில் வாழும் மங்கலம் உடைய அந்தண மங்கையர் எல்லாம், நிறைந்த நீரையுடைய பொற்குடங்களையும், வரிசையான அழகிய விளக்குகளையும், நறு மணப் புகைகளையும், தேன்பொருந்திய நல்ல மலர் மாலைகளையும், நல்ல ஒளியுடைய முளைப் பாலிகைகளை இட்டு வைத்த பொன் தட்டுகளையும், தேய்த்தெடுக்கப்பட்ட விளங்கும் கலவைச் சாந்தை யும் ஏந்தியவாறு ஒன்றுகூடி, மணமகனாரான ஞானசம்பந்தரை வர வேற்று நின்றார்கள்.
குறிப்புரை:

அவ்விடத்தில் முன்னமேயே இட்டுவைத்த செம்பொன்னால் ஆன அழகிய மணிபதித்த பீடத்தில், திருவருள் வயத்தால் பிறசமயங்களை யெல்லாம் வென்றருளிய ஞானசம்பந்தப் பிள்ளையார், எல்லாவற்றுக்கும் மேலாக ஓங்கிய சிவஞானப் பெருக் கானது உள்ளே நிறைந்து மேல் எழுந்து பொழிவதைப் போல, அணி யாய்ப் பூண்ட முத்தால் ஆன நல்ல அணிகள் குளிர்ந்த ஒளியை வீசு மாறு ஏறி, பக்கங்களில் ஒளிபரப்பி நின்றருளினார்.
குறிப்புரை:

: எதிர் கொண்டு வரவேற்ற, சாயலால் இளைய மயில் போன்ற மங்கையர், இனிய மங்கலச் சொற்களை முன்னாகப் பாடிய வாழ்த்தொலி எங்கும் நிறைய, ஒளி பொருந்திய அழகான கரத்தில் உள்ள மணமுடைய நீரைத் திருமுன் வார்த்து, மிக்க விருப் பத்துடன் விதி முறைப்படி வலமாகச் சுற்றி, பொருந்திய நல்ல மண வினைகளைச் செய்தனர். நீரையுடைய வட்டிலை வலமாகச் சுற்றுதல், கண்ணேறு (திருட்டி) நீங்கவாம்.

எங்களை வாழ்விப்பதற்காக வந்து முன்னாளில் வைகையில் ஏட்டை இட்ட பிள்ளையார், மங்கலப் பொருள்களை எடுத்துக் கொண்டு அந்தண மங்கையர் முன்செல்ல, கங்கையின் கொழுந்து போன்ற வெள்ள ஒழுக்கு, சிவந்த பொன் மலையான இமயத்தில் சேர்ந்தாற்போல, அங்கு நம்பாண்டார் நம்பிகளின் அழகான பொன்மாடத்தில் ஆதி பூமி என்ற மணவறையுள்புகுந்தார். கங்கையின் கொழுந்து - பிள்ளையார்: திருமேனி வெண் ணீறு அணியப்பெற்றும், முத்தாலாய அணிகள் அணியப்பெற்றும் இருத்தலின் இவ்வுருவகத்தால் விளக்கம் பெற்றார். ஆதிபூமி - மணவறை. ஆதி - சிவன், பூமி - நகர்: சிவனகர்.

தம் மகளாரை மணமகளாகக் கொடுக்கும் பேற்றைப் பெற்ற செழுமையான மறை முனிவரான நம்பாண்டார் நம்பி களும், அரிய தவப் பேறுடைய அவர்தம் மனைவியாரும் மிக்க மகிழ் வுடன் பிள்ளையாரின் திருவடிகளை விளக்குபவராய், ஞானசம்பந் தரின் திருமுன்பு, வெண்மையான பசுவின் பாலையும் தூய்மையான நீரையும் ஒருசேரக் கொண்டு வந்தனர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

ஞானசம்பந்தரின் முன்வந்து, தாம் முன்பு செய்த பெருந்தவத்தால் பெற்ற நன்மை பெருகும் நம்பாண்டார் நம்பிகள், மணம் வீசும் நீண்ட கூந்தலையுடைய மனைவியார் பொற் கமண்டலத்தின் நீரை எடுத்து வார்க்க, உள்ளத்தில் நினைத்து வரும் ஒருமைப்பாட்டால் சடையையுடைய சிவபெருமானே இவர் என்ற எண்ணத்துடன் ஞானப்பால் உண்ட அவர்தம் திருவடிகளை,
குறிப்புரை:

விருப்புடன் விளக்கித் தூய நீரைத் தலையின் மேல் தெளித்துக் கொண்டு, அதனை மலைபோன்ற திருமாளிகையின் உள்ளும் வெளியேயும் தெளித்த பின்னர், அழகுமிக்க வயிற்றில் கொள்ளுமாறு மிக்க ஆசையுடன் உட்கொண்டனர். மயிர்க் கூச்செறிய அருகிருந்த உறவினர், மேலும் பெருகும் ஆசையோடு அந்நீரைத் தெளித்தனர். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பெருகும் ஞானஅமுது உண்ட சம்பந்தரின் தாமரை மலர் போன்ற கையில், பொருந்திய மணமுடைய நீர் நிறைந்த கமண்டலத்தை முன் ஏந்தி அதன் மங்கல நீரை வார்ப்பவராய்த் தரும் முறையில், தம் கோத்திரத்துக்குரிய குலப்பெயரையும் எடுத்துக் கூறி 'என் அருமைமிக்க செல்வமான பாவை போன்ற மகளாரைப் பிள்ளையாருக்குத் தந்தேன்' என்று விதிப்படி மும்முறை கூறினார். கோத்திரம் - மரபின் உட்பிரிவு ; குலம் - அக்கோத் திரத்தின் உட்பிரிவு. அருநிதிப்பாவையார் - இவர் பெயரைத் தோத்திர பூரணாம்பிகை என நல்லூர்ப் பெருமணத்தில் உள்ளவர்கள் கூறுவார் கள் என்பர் சிவக்கவிமணியார்.

நல்ல தவத்தையுடைய கன்னியாரின் கையைத் திருஞானசம்பந்தர் தம் செங்கையால் பிடிப்பதற்கு உரிய பண்புடைய குற்றம் இல்லாத நல்லவேளை வந்து சேரக் கன்னியைப் பெற்ற தாய் தந்தையரும் உடன்பிறந்தாரும் பெருமையுடைய மணப் பெண்ணான மான் போன்ற கன்னியை உறவினர்முன் சூழ்ந்து போற்ற, அழைத்துக் கொண்டு மணமகனாரான ஞானசம்பந்தர் முன் கொணர்ந்தனர்.
குறிப்புரை:

ஒருவன் என்னும் ஒருவனாய சிவபெருமா னிடத்திருந்து ஞானத்தை அடைந்த ஞானசம்பந்தரின் வலப் பக்கத்தில் வந்து, பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையுடைய நல்ல தவத்தின் கொழுந்தைப் போன்ற கன்னியாரை, வானத்தில் நிறைந்த ஒளி பொருந்த நிலைபெற்று வீற்றிருந்த வெள்ளை மேகத்துடன் பொருந் தும் மின்னற்கொடி என விளங்குமாறு அமரச் செய்தனர்.
குறிப்புரை:

தூய்மையான மெய்க்கோலத்துடன் நீடிய சீகாழித் தலைவரான பிள்ளையாரை, வளைந்த வில்போன்ற புருவங் களையுடைய மென்மையான பூங்கொம்பைப் போன்ற தேவியாரு டன் ஒருங்கு கண்ட போது, நல்ல மங்கலங்களைக் கூறி, கண்இமை யாது பார்த்து வாழ்த்திய வகையால், மக்களும் தேவர்கள் ஆயினர். விண்ணவர் கண்ணிமையார். அவ்வகையில் இவர்க ளும் பார்த்து வாழ்த்தியமையின் மண்ணவரும் விண்ணவர் ஆயினர் என்றார்.

வரிசை பெற அழகு படுத்தப்பட்ட பசும் பொன்னால் ஆன பவளக் கால்களையுடைய பந்தரின் நடுவில், ஓவியம் அமைந்த மேற்கட்டியின் கீழ், செழுமையுடைய நீலநக்க நாயனார் ஆசிரியராய் இருந்து, முத்தமிழ் வல்லுநரான பிள்ளையா ரின் முன், முதன்மையான மறைவழிச் செய்யும் மணவினையை அம்முறைப்படியே மெய்ப்பொருளான நம் பெருமானின் திருவடிக ளைப் பொருந்தும் உள்ளத்துடன் செய்ய,
குறிப்புரை:

மறையொலிகள் மேன்மேலும் பெருகி ஓங்க வும், மங்கல வாழ்த்தொலிகள் மிகவும், நிறைந்த வளையல்களை அணிந்த மணப் பெண்ணின் சிவந்த கையைப் பிள்ளையார், பற்றும் பொருட்டு நேரிய அணிகளை அணிந்த அக் கன்னியாரின் முன், பொறுமையை அணியாகக் கொண்ட முந்நூல் அணிந்த மார்பினரான திருநீலநக்க நாயனார், குற்றம் அற்ற நெல் பொரியைக் கையிலே எடுத்து வேள்வித் தீயில் ஆகுதியாகப் பெய்து, சிவபெருமானை வணங்கும்போது, எரியை வலமாக வருவதற்கு எண்ணி,
குறிப்புரை:

அரும்பைப் போன்ற மென்மையான கொங்கைகளை உடைய அம்மங்கையின்அழகான மலர் போன்ற கையைப் பிடித்துக் கொண்டு, அங்கு மணவினை செய்தற்கு ஒருப் பட்ட பிள்ளையார், 'மனத்தில் விருப்பம் பொருந்தும் வேள்வித் தீயா யானவர் விடைக் கொடியை உயர்த்திய சிவபெருமானே ஆவார்' எனத் திருநல்லூர்ப் பெருமணத்தைப் பொருந்திய உள்ளத்திலே தெளிந்து செல்பவராய், 'எரி பெருக்குவர் அவ்வெரி ஈசனது உரு என அறிகி லார்' (தி. 5 ப. 100 பா. 7) எனும் நாவரசரின் திருவாக்கும் காண்க. ஒருப் படும் - எண்ணிய மணவினையைக் செய்தற்குத் தலைப்பட.

மந்திர முறையால் வளர்க்கப்பட்ட எரியை வலம் வரும் பொருட்டு அம்மையாரின் கையைப் பிடிக்கும் தாமரை மலர் போன்ற சிவந்த கைகளையுடைய பிள்ளையார், 'இந்த இல்வாழ் வான ஒழுக்க நிலை வந்து வாய்த்ததே! இவளுடன் அழிவில்லாத சிவபெருமானின் திருவடிகளை அடைவேன்' என்ற ஆசை உள்ளத் தில் பெருக,
குறிப்புரை:

மலர்ச்சியுடைய பெரிய உறவினரும், திருத்தொண்டர் கூட்டமும் ஆகிய இவர்களுடனே கூட, அளவில்லாத மெய்ஞ்ஞானத்தினது எல்லையை அடைய வேண்டும் என்ற உள்ளக் குறிப்பினால், அங்கு உலகப்பற்றுத் தம்மைச் சாராது நீங்க, இறைவருடன் சேர விரும்பி, அந்தணர் குலத்துக்குரிய மணத்தைச் செய்வித்த இறைவ ரின் திருப்பெருமணம் எனும் திருக்கோயிலை நோக்கி எழுந்தருளி வந்தார். திருப்பெருமணம் - திருக்கோயிலின் பெயர் ஆகும். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

சிவபெருமான் விரும்பி வீற்றிருந்து, உயிர்க ளுக்கு அருட்செல்வத்தை வழங்கியருளிவரும் திருப்பெருமணக் கோயிலுக்குள் சென்று, தவநெறியை வளர்ப்பதற்கென்றே தோன்றிய வரான ஞானசம்பந்தர், உலகக் காட்சியினின்றும் நீங்கி, வீடுபேற்று நிலையில் சார்வதற்குக் காரணமான அருட்குறிப்பைக் கண்டு, பிறப்பற என்னை முற்பிறவியில் ஆளாகக் கொண்ட அத்தன்மைக்கு ஏற்ப, புதிதாக மலர்ந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை இதுபொழுது அடைவிக்கும் என்ற மெய் உணர்வானது உள்ளத்தில் பொருந்த,
குறிப்புரை:

பெருவிருப்பைப் புலப்படுத்தும் உண்மை உடைய திருப்பதிகத்தைக் 'கல்லூர்ப்பெருமணம்' எனத் தொடங்கி, அங்கு அத்திருமணத்தைக் கண்டோர் அனைவரும் தீய பிறவிக்குக் காரண மான வினை நீக்கம் பெற்று வீடடைவர் என்பதைச் செம்பொருளாகக் கொண்டு, 'இறைவரே! திருநல்லூரில் பொருந்திய திருப்பெரு மணக்கோயிலில் எழுந்தருளிய நம்பரே! உம் திருவடிகளாகிய மெய்ம்மை பொருந்திய நிழலை அடையும் பருவம் இதுவாகும்' என்று பாடியருள, 'கல்லூர்ப்பெருமணம்' எனத் தொடங்கும் திருப்பதிகம் அந்தாளிக் குறிஞ்சி என்னும் பண்ணிலமைந்ததாகும் (தி. 3 ப. 125). இப்பதிகப் பொருளைச் சேக்கிழார் இருவகையால் சுருங்க விளக்குகின்றார். 1 வினைநீக்கம் பெறுவது. 2. இறையடி அடைவது. பிறவிதீயது. அதுபாசத்தால் வருவது. பாசம் உலகியற் சார்பால் வருவது. எனவே 'கல்லூர்ப் பெருமணம் வேண்டா' என்றார். 8ஆவது பாடலில் 'நல்லூர்ப் பெருமணம் புக்கிருந்தீர் எமைப் போக்கு அருளீரே' என்றும், திருக்கடைக்காப்பில் 'நல்லூர்ப் பெருமணத் தானை உறும் பொருளாற் சொன்ன ஒண்தமிழ்' என்றும் அருளுகின் றார். எட்டாவது பாடலில் 'எனை' என்னாது 'எமை' எனப் பன்மை ஆகக் கூறுகின்றார். இவ்வருங் குறிப்புக்களே, 'கண்டோர் தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம்பொருளாக் கொண்டு '. . . நம்பனே! உன்பாத மெய்ந்நீழல் சேரும் பருவம் ஈதென்று பாட' எனச் சேக்கிழார் அருளக் காரணமாயிற்று.

தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெரு மானும், திருவருள் செய்து 'நீயும் நாகணவாய்ப் பறவை அனைய நின் மனைவியும், இங்கு உன் புண்ணியத் திருமணத்தில் வந்தவர்கள் யாவரும் எம்மிடத்தில் இந்தச் சோதியுள் வந்து அடையுங்கள்' என்று அருளாணையிட்டு, மூன்று உலகங்களும் தம் ஒளியினால் மேலிட்டு விளங்கும்படி, முழுமையான சுடர்விட்டெழும் சோதிலிங்கமாய் நிமிர்ந்து எழுந்து,
குறிப்புரை:

திருக்கோயில் தன்னகத்துட்பட, மேலே பரந்து பெருகி எழுகின்ற அச் சோதியுள், ஒரு வாயிலையும் அமைத்துக் காட்ட, நிலைபெற்ற புகழையுடைய சீகாழித் தலைவரான ஞானசம் பந்தர், பரந்த பேரொளியால் நீண்டு விளங்கும் பரஞ்சுடரான இறை வரை வணங்கிப் போற்றி, மிகப் பெரிய உலகில் உள்ள உயிர்கள் எல் லாம் உய்யும் வழியை அருள் செய்வாராய்,
குறிப்புரை:

மெய்ம்மை பொருந்திய ஞான நெறிதான் யாவர்க்கும், 'நமச்சிவாய' என்னும் ஐந்தெழுத்தாலாய சொல்லே ஆகும் என்று, ஆக்கம் பொருந்திய சிறப்புக் கொண்ட நமச்சிவாயத் திருப்பதிகத்தை, அங்கு விண்ணோரும் மண்ணோரும் கேட்குமாறு அருள் செய்து, 'இம் மணத்தில் வந்தவர் எல்லோரும் இழிவான பிறவி நீங்க யாவரும் இவ்வொளியில் புகுக' என்று ஆணையிட்டருள, இதுபொழுது அருளிய பதிகம் 'காதலாகி' (தி. 3 ப. 49) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும். இப்பதிகப் பாடல் தொறும் 'நமச்சிவாய' எனும் திருவைந்தெழுத்து அருளப் பெற்றிருத்தலின், இதனை நமச்சிவாயத் திருப்பதிகம் என்றழைத்தனர். ஞானத்தைப் பெறவும் அதன்வழி வீடு பேற்றை அடையவும் தக்கதொரு நெறி(வழி) திருவைந்தெழுத்தை குருவரு ளால் பெற்று ஓதி வருதலேயாகும். இவ்வருளுரை தானும் யாவர்க்கும் பொருந்தும் என முன்னர்த் தொகுத்துக் கூறிய ஆசிரியர், பின்னர் 'வானமும் நிலமும் கேட்க' என வகுத்தும் கூறினார்.

முறையாய் இடையறாது வரும் பிறவி என்னும் பெருவெள்ளத்தின் எல்லை காணாது அழுந்தி 'உடல்' என்ற துன்பம் நிறைந்த கூட்டினுள் இருந்து உணர்வில்லாது மயங்குபவர்களாகிய அம்மக்கள் தாமும், பிள்ளையாரின் திருமணக்கோலத்தை வணங்கி முன்னால் செல்லப் பெற்ற சிறப்பால், பொருந்திய பிறவி நீங்குமாறு நிலையான அப் பேரொளியில் புகுந்தார்கள். இவ்வாறு பாடல்களும் ஒருமுடிபின.

சிறப்பு மிகும் திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார், முதலிய தொண்டர்களும், தவ ஒழுக்கத்தின் பொலிவு மிக்க சிவபாத இருதயரும், நம்பாண்டார் நம்பிகளும், சிறப்பு நிறைந்த உண்மை ஒழுக்கத்தையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மற்றும் அங்கு வந்தவர்களும், உலகில் நிலவிய சுற்றத்தார்களும் சூழ்ந்து வரத் தத்தம் மனைவியர்களுடன் புகுந்தனர். முன்னையபாடலில் அனைவரும் சோதியுள் புகுதற்குக் காரணம் கூறினார். இப்பாடலிலும் அடுத்துவரும் இருபாடல்களிலும் அங்ஙனம் புகுந்தவர்களை அடைவுபடுத்திக் கூறியருளுகின்றார்.

அழகிய முத்துச் சிவிகையைத் தாங்கிச் சென்ற வரும், மணிமுத்து மாலைகளைத் தக்கவாறு அழகுசெய்த மங்கை யரும், மங்கலம் பெருக வரும் மணிகளை எல்லாம் எடுத்து வந்தவர் களும், மற்றும் பணி செய்தவர்களும், வினையால் வரும் பிறவிக்குக் காரணமான பாசங்களையெல்லாம் அறுத்து, உணர்வு உடையவராய்ப் பிள்ளையாரை வணங்கியவாறே உடன்புகுந்து அப்பேரொளியுள் ஒடுங்கினர்.
குறிப்புரை:

சைவ சமயத்தில் உட்பிரிவான அறுவகைச் சமய நெறியிலும் நின்ற தவத்தவர்களும், சைவத் தொண்டர்களும், மறை வழி ஒழுகும் முனிவர்களும், கும்பிடும் கரத்துடன் வந்து சேர்ந்தவர் களும், முன்சொன்னவாறன்றி எக்காரணமும் அறிய இயலாது திரு வருள் வயத்தால் வந்தவர்களும், எல்லை இல்லாத பெரிய சிவப் பேரொளியுள் எல்லாருமாகப் புகுந்தபின்,
குறிப்புரை:

மனைவியாரைக் கைப்பிடித்தவாறே அச் சோதியை வலம் வந்து, உலகில் உள்ள தீமைகளைப் போக்கிச் சைவ நெறி தழைத்தற்கென்றே தோன்றியருளிய திருஞானசம்பந்தர், சிவ பெருமானின் அழகினதாய் வளர்ந்து எழுகின்ற பேரொளியை அடைந்து, அதனுள் புகுபவராய், ஓரொருகால் உலகியலைத் தழுவி நிற்கும் ஒருப்பாடு நீங்கியதால், உள்ளே புகுந்து, ஒன்றாய்ச் சேர்ந்து சிவானந்த நிறைவாம் தன்மையில் வீடுபேற்றை எய்தினார். போத நிலை என்பது மூன்றாண்டு வரை உலகியல் வயப்பட்ட குழந்தையாய் வளர்ந்ததும், ஞானம் பெற்ற பின்பும், கொல்லி மழவன் மகளார், வணிகர் இருவரின் மகளார் போன்றவர் களுக்கு அருளுதற் பொருட்டும், உலகியல் வயப்பட்டு வீழிமிழலை யிலும், தாதையார் வயப்பட்டுத் திருவாவடுதுறையிலுமாகப் பொருள் வேண்டப் பெற்றும் வந்தன போன்ற சூழல்களாம்.

ஞானசம்பந்தர் உட்புகுந்து உடனாகிய பின் னர்ப் பேரானந்தக் கூத்தரான இறைவர், இவ்வாறு மணத்தில் வந்தோ ரையும் பிள்ளையாரையும் வீடுபேற்றில் உடனாகக் கொள்ளும் அளவும் நீடியிருந்த பேரொளிப் பெருவடிவையும், அதன் உட்புகக் காட்டிய வாயிலையும் மறையுமாறு செய்ய, சிவலோகத் தியாகரின் பழைய பெருமணக் கோயில் தோன்றவும், தெளிந்த நீருடைய உலகத் தில் இவ்வரிய பேற்றைப் பெறாதவர் பலரும் மயங்கி வருந்தினர். தவமும் தவமுடையார்க்கன்றி ஆகுமோ? ஆகாதன்றே.

நெற்றியில் விழியையுடைய சிவபெருமானின் திருமேனியுடன் கூடத் திருஞானசம்பந்தர் சென்று சேர்ந்ததைத் தாம் தாமும் தொலைவான இடத்தில் இருந்தவாறே கண்டும், வந்து அடைகின்ற பேறு பெறாத தேவர்களும் முனிவர்களும் நான்முகன் முதலான பெருந்தேவர்களும் ஆகிய எண்ணில்லாதவர்கள் தம் வருத்தம் நீங்கப் பெருமானைப் போற்றினர்.
குறிப்புரை:

அரிய தமிழுக்கு இருப்பிடமான ஆளுடைய பிள்ளையாரின் வரலாற்றை, அடியேனுக்கு அவருடைய திருவடிகள் அறிவித்தருளிய முறையில் வணங்கிக் கூறினேன். இனிப் பெரிய கொடையும், உறுதிப்பாடான வன்மையும், பேருணர்வும் திருத் தொண்டு செய்த காரணத்தால் பெற்ற அடியவராய ஏயர்கோன் கலிக் காம நாயனார் செய்த திருத்தொண்டின் திறங்களைப் போற்றத் தொடங்குவேன். திருஞானசம்பந்தர் புராணம் முற்றிற்று.


This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history