சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
முனையடுவார் நாயனார் புராணம்  

12 -ஆம் திருமுறை   12.520  
கறைக் கண்டன் சருக்கம்
 
பகைமையை வென்று உலகைக் காக்கும் சோழ மன்னரின் காவிரியாறு பாய்கின்ற நாட்டில், நறுமணமுடைய சோலை களில் மலர் அரும்புகள் விரிய, அவற்றின்றும் வடியும் தேனும் ஆற் றின் வழியே பெருக்கெடுத்து ஓடி, அவ்வெள்ளத்தால் சேறான வய லுள், உழவர்கள் உழுகின்ற சேறும் மணம் வீசுகின்ற, செல்வம் பெருகியுள்ள ஊர் திருநீடூர் ஆகும். *** ஆற்றுப் பெருக்கால் வரும் சேறும், உழவர்கள் உழுத லான் வரும் சேறும் பொருந்திய நீடூர் என்பதாம். செல்வம், நீடு, ஊர் = திருநீடூர் ஆகும். நீடூர் எனவரும் இரண்டனுள் முன்னையது செல்வ நீட்சியையும் பின்னையது ஊர்ப் பெயரையும் குறித்தன. நீடூர் - சோழ நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள ஊராகும். ஊழிக் காலத்தும் அழியாது நிலைபெற்று இருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்ப.
யாவராலும் புகழத்தக்க வள்ளன்மையுடைய திருநீடூரில் வேளாளர் மரபில், தலைமையான குடி முதல்வராய், நஞ்சையுடைய கழுத்தினரும் நெற்றிக் கண்ணருமான சிவபெருமா னின் திருவடியில், செறிந்த பெருவிருப்பத்தை மனத்துள் கொண்ட திருத்தொண்டில் உரிமை பூண்டவராய், பகைவரைப் போரில் வென்றதால் வரும் பொருளைக் கொண்டு இறைவரின் அடியார்க்கு மாறா மல் சிறந்த உணவளிக்கும் வாய்மை யுடையவராய் விளங்கினார். *** விளங்கும் - புகழ் விளங்கும். 'இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ்' (குறள், 232) என்பர் திருவள்ளுவனாரும்; நள்ளார் - பகைவர்.
போரில் பகைவர்க்குத் தோற்றவர் வந்து பெருஞ் செல்வம் தந்து தமது துணையைக் கொள்ளவேண்டில், அப்பகைமைக் குரிய காரணத்தை நடுநிலையில் நின்று அறநெறிவழாது ஆராய்ந்து, ஏற்று இயமனும் அஞ்சி ஒதுங்கும் போர் முயற்சியால் கூலியை ஏற்றுப் போரை வென்று, யாவரும் விரும்பும் வெற்றியைப் பெற்று, இசைந்த கூலியான பொன்னைக் கொண்டு வாழ்வாரானார். *** இதனால் இவ்வடியவர், தோற்றவர் பக்கம் நின்று அவர் கொடுக்கும் பொருளுக்காக மட்டும் துணைப் போகவில்லை. அறநெறி தவறாது இருக்குமவர்க்கே துணை செய்து பொருள் பெறுவர் என்பது கருத்தாகின்றது.
இவ்வகையால் பெறும் செல்வம் எல்லாவற்றையும், சிவனடியார்கள் தாம் கேட்டவாறு கொடுத்துத், தூய சர்ச்சரை, நறுமணம் பொருந்திய நெய், கறி, தயிர், பால், கனி என்ற இவை எல்லாவற்றையும் கலந்து திருவமுது அளித்து, நிலைபெறும் அன்பு நெறியில் பிறழாத வழித்தொண்டைச் செய்து வந்தார். *** உண்டி நாலு விதத்தில், ஆறு சுவைத் திறத்தினில் அடிய வர்க்கு உணவு வழங்க வேண்டும் என ஆசிரியர் முன்னர்க் குறித்ததை, ஈண்டு ஒரு வகையால் விளக்கினாராயிற்று. சொன்ன சொன்னபடி - அடியவர்கள் வேண்டுவதை வேண்டியவாறே கொடுத்து, என்றார், அவர் தம்மினும் உயர்ந்தவராதல் பற்றி.
இவ்வாறாய நிலையில் அவர் இத்திருத்தொண்டைப் பல காலம் செய்து, வழிவழி வந்த அன்பால் ஆன நல்ல நெறியில், உமை யொரு கூறராய சிவபெருமானின் திருவருளால், தாம் பெற்ற சிவ லோகத்தில் அமர்ந்து, அதனின்றும் மீளாத உரிமையை அடைந்தார். வெற்றி பொருந்தப் போரைச் செய்த காரணத்தால் முனையாடுவார் என்ற திருப்பெயரைச் சிறப்பாக உடையவர் ஆனார். *** முன் - சிறப்பாக. நாயன்மார்களின் திருப்பெயர்களை முதற்கண் கூறிப்பின் அவர்தம் திருத்தொண்டுகளை விவரித்தலே யன்றி, அவர் தொண்டுகளை விரிவாகக் கூறிப்பின் அவர் பெயரைக் கூறலும் இவர்தம் மரபாக உள்ளது. இக்காலத்துப் பயிற்று முறையாளர் இதனைச் சிறப்பான உத்திமுறையாகக் கொள்வர்.
எதிர்ப்பவர் யாவராயினும் அவரைப் போரில் வெற்றி கொண்டு, அதனால் பெற்ற அச்செல்வங்களை, இறைவன் அடியார்க்கு அளித்த முனையடுவார் நாயனாரின் மணம் பொருந்திய தாமரை போன்ற திருவடிகளை வணங்கி, இனித் தேவர் தலைவரான சிவபெருமானின் சைவநெறி விளங்கச் செங்கோன்மை செய்யும் காவல் பூண்ட 'கழற்சிங்க நாயனார்' தொண்டின் நிலையைச் சொல்வாம்.
குறிப்புரை:

இறைவரின் நிறைந்த அருட்பெருக்கினால் மணமுடைய சோலைகள் சூழ்ந்த திருமுருகன் பூண்டியின் வழியில் தாம் கொண்டு வந்த பொருட்கள் வேடுவரால் கவரப்பட நம்பியாரூர், எம் பழவினையின் வேரை அடியுடன் பறித்து விடுவர் என்ற ஆதரவினால் அவர்பால் செறிதல் உளதாகும் என்று அவரிடத்தும் செயத்தகும் திருத்தொண்டின் பயனால் பெறத்தக்கதொரு குறிக்கோள் உண்டு. அதுவன்றி ஒன்றாலும் குறைவும் இல்லோம். வகை நூல் ஆசிரியர் அவிநாசியில் முதலையுண்ட சிறுவன் உயிர் பிழைக்கச் செய்ததும் திருமுருகன் பூண்டியில் வேடுவர் கொண்ட பொன்னை மீண்டும் பெற்றதுமாய நிகழ்ச்சிகளை நினைந்து வணக்கங் கூறினர். முனையடுவார் நாயனார் புராணம் முற்றிற்று. கறைக்கண்டன் சருக்கம் முற்றிற்று. ***

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history