சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
7.095   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மீளா அடிமை உமக்கே ஆள்
பண் - செந்துருத்தி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=57PlwAi1hCc

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.095   மீளா அடிமை உமக்கே ஆள்  
பண் - செந்துருத்தி   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி )
திருத்துருத்தியிலிருந்து திருவாரூரை யடைந்த நம்பியாரூரர், முதலில் திருப்பரவையுண்மண்டளி யென்னும் திருக்கோயிலை யடைந்து திருப்பதிகம் பாடி, எனது துன்பத்தினைப் போக்கிக் கண் காணும்படிக் காட்டுதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பிறகு அடியார்களுடன் ஆரூர் மூலட்டானேசுவரரை அர்த்தயாம காலத்திலே சென்று வழிபட எண்ணி அயன்மை தோன்ற வருந்திக் கூறும் நிலையில், திருப்பதிகம் பாடிக்கொண்டு உள்ளே சென்று வீழ்ந்து வணங்கினார். இறைவன் திருமேனி யழகைக் காண ஒரு கண் போதாமையை எடுத்துக்கூறி, வலக் கண் வேண்டி மிக உருக்கமாக, மீளா அடிமை என்ற திருப்பதிகத்தைப் பாடினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ கண்களில் உள்ள கோளாறு பார்வை குறைபாடு அனைத்தும் நீங்கும்
மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,
மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,
ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!

[1]
விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே!

[2]
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல,
என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே!

[3]
துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்;
இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா:
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்,
வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே!

[4]
செந் தண் பவளம் திகழும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
எம்தம் அடிகேள்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது
வந்து, எம்பெருமான்! முறையோ? என்றால், வாழ்ந்துபோதீரே!

[5]
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திரு ஆரூர்ப்
புனைத் தார் கொன்றைப் பொன் போல் மாலைப் புரிபுன் சடையீரே!
தனத்தால் இன்றி, தாம்தாம் மெலிந்து, தம் கண் காணாது,
மனத்தால் வாடி, அடியார் இருந்தால், வாழ்ந்துபோதீரே!

[6]
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
ஏ, எம்பெருமான்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
மாயம் காட்டி, பிறவி காட்டி, மறவா மனம் காட்டி,
காயம் காட்டி, கண் நீர் கொண்டால், வாழ்ந்துபோதீரே!

[7]
கழி ஆய், கடல் ஆய், கலன் ஆய், நிலன் ஆய், கலந்த சொல் ஆகி,-
இழியாக் குலத்தில் பிறந்தோம்-உம்மை இகழாது ஏத்துவோம்;
பழிதான் ஆவது அறியீர்: அடிகேள்! பாடும் பத்தரோம்;
வழிதான் காணாது, அலமந்து இருந்தால், வாழ்ந்துபோதீரே!

[8]
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர், பிறர் எல்லாம்;
காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ, கருதிக் கொண்டக்கால்?
நாய்தான் போல நடுவே திரிந்தும், உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!

[9]
செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
பொருந்தித் திரு மூலட்டான(ம்)மே இடமாக் கொண்டீரே;
இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்;
வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்துபோதீரே!

[10]
கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பல ஆகி,
ஆரூர்த் திரு மூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்,
பார் ஊர் அறிய, என் கண் கொண்டீர்; நீரே பழிப்பட்டீர்;
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர்! வாழ்ந்துபோதீரே!

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list