சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்
பண் - புறநீர்மை   (திருஓமாம்புலியூர் )
Audio: https://www.youtube.com/watch?v=7Fgqyypgt5U
6.088   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆர் ஆரும் மூ இலை
பண் - திருத்தாண்டகம்   (திருஓமாம்புலியூர் துயர்தீர்த்தசெல்வர் பூங்கொடியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9neemv_tOGA

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.122   பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்  
பண் - புறநீர்மை   (திருத்தலம் திருஓமாம்புலியூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி
அடிகள்
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர், விருப்பொடும்
உறைவு இடம் வினவில்
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதிச் செறிதரு வண்டு இசை பாடும்
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி அதுவே.

[1]
சம்பரற்கு அருளி, சலந்தரன் வீயத் தழல் உமிழ் சக்கரம் படைத்த
எம்பெருமானார், இமையவர் ஏத்த, இனிதின் அங்கு உறைவு இடம் வினவில்
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும்,
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி அதுவே.

[2]
பாங்கு உடைத் தவத்துப் பகீரதற்கு அருளிப் படர்சடைக்
கரந்த நீர்க்கங்கை
தாங்குதல் தவிர்த்து, தராதலத்து இழித்த தத்துவன் உறைவு இடம் வினவில்
ஆங்கு எரிமூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால்
ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

[3]
புற்று அரவு அணிந்து, நீறு மெய் பூசி, பூதங்கள் சூழ்தர, ஊர் ஊர்
பெற்றம் ஒன்று ஏறிப் பெய் பலி கொள்ளும் பிரான் அவன்
உறைவு இடம் வினவில்
கற்ற நால்வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார்
அருத்தியால்-தெரியும்
உற்ற பல்புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

[4]
நிலத்தவர், வானம் ஆள்பவர்,கீழோர், துயர் கெட, நெடிய
மாற்கு அருளால்,
அலைத்த வல் அசுரர் ஆசு அற, ஆழி அளித்தவன் உறைவு இடம் வினவில்
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார், நன்மையால் மிக்க
உலப்பு இல் பல்புகழார், ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

[5]
மணம் திகழ் திசைகள் எட்டும், ஏழ் இசையும், மலியும் ஆறு
அங்கம், ஐவேள்வி,
இணைந்த நால்வேதம், மூன்றுஎரி, இரண்டுபிறப்பு, என
ஒருமையால் உணரும்
குணங்களும், அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று
அவை உற்றதும், எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

[6]
தலை ஒரு பத்தும் தடக்கை அது இரட்டி தான் உடை
அரக்கன் ஒண்கயிலை
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவு இடம் வினவில்
மலை என ஓங்கும் மாளிகை நிலவும், மா மதில் மாற்றலர் என்றும்
உலவு பல்புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி
அதுவே.

[8]
கள் அவிழ் மலர்மேல் இருந்தவன், கரியோன், என்று இவர்
காண்பு அரிது ஆய
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவு இடம் வினவில்
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி, பனிமலர்ச்சோலை சூழ் ஆலை,
ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

[9]
தெள்ளியர் அல்லாத் தேரரொடு அமணர், தடுக்கொடு சீவரம் உடுக்கும்
கள்ளம் ஆர் மனத்துக் கலதிகட்கு அருளாக் கடவுளார்
உறைவு இடம் வினவில்
நள் இருள் யாமம் நால்மறை தெரிந்து, நலம் திகழ் மூன்று எரி ஓம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

[10]
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள்
மேய்புலத்து இடறி
ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை,
களி தரு நிவப்பின் காண்தகு செல்வக் காழியுள் ஞானசம்பந்தன்,
அளிதரு பாடல்பத்தும் வல்லார்கள், அமரலோகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.088   ஆர் ஆரும் மூ இலை  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருஓமாம்புலியூர் ; (திருத்தலம் அருள்தரு பூங்கொடியம்மை உடனுறை அருள்மிகு துயர்தீர்த்தசெல்வர் திருவடிகள் போற்றி )
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை; அலை கடல் நஞ்சு அயின்றானை; அமரர் ஏத்தும்
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை; எழுபிறப்பும் எனை ஆளா உடையான் தன்னை;
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை; உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீர் ஆரும் வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

[1]
ஆதியான், அரி அயன், என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை; அமலன் தன்னை;
சோதி மதி கலை தொலைய, தக்கன், எச்சன், சுடர் இரவி அயில் எயிறு, தொலைவித்தானை;
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்று ஓம்பும் உயர் புகழ்  ஆர் தரும் ஓமாம்புலியூர் மன்னும்
தீது இல் திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

[2]
வரும் மிக்க மதயானை உரித்தான் தன்னை; வானவர் கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை;
தரு மிக்க குழல் உமையாள் பாகன் தன்னை; சங்கரன் எம்பெருமானை; தரணி தன்மேல்
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி, உத்தமர் வாழ்தரும், ஓமாம்புலியூர் மன்னும்
திரு மிக்க வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

[3]
அன்றினவர் புரம் மூன்றும் பொடி ஆய் வேவ அழல் விழித்த கண்ணானை; அமரர்கோனை;
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன் தன்னை;
ஒன்றிய சீர் இரு பிறப்பர் முத்தீ ஓம்பும், உயர் புகழ் நால்மறை, ஓமாம்புலியூர் நாளும்
தென்றல் மலி வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே   திகைத்து நாள் செலுத்தினேனே!.

[4]
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்பப் பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை;
பாங்கு இலா நரகு அதனில்-தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான் தன்னை;
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர், உயர்   புகழ் அந்தணர் ஏத்த, உலகர்க்கு என்றும்
தீங்கு இல், திரு வடதளி எம் செல்வன் தன்னை;   சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

[5]
அருந்தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான் தன்னை; ஆராத   இன்னமுதை; அடியார் தம்மேல்
வரும் துயரம் தவிர்ப்பானை; உமையாள் நங்கை-மணவாள   நம்பியை; என் மருந்து தன்னை;
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு, துங்கப் பொழில் கெழுவு தரும், ஓமாம்புலியூர் நாளும்
திருந்து திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

[6]
மலையானை; வரும் மலை அன்று உரிசெய்தானை; மறையானை; மறையாலும் அறிய ஒண்ணாக்
கலையானை; கலை ஆரும் கையினானை; கடிவானை, அடியார்கள் துயரம் எல்லாம்;
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை; புரம் மூன்று எய்த
சிலையானை; வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

[7]
சேர்ந்து ஓடும் மணிக் கங்கை சூடினானை, செழு மதியும் பட அரவும் உடன் வைத்தானை,
சார்ந்தோர்கட்கு இனியானை, தன் ஒப்பு இல்லாத் தழல்   உருவை, தலைமகனை, தகை நால்வேதம்
ஓர்ந்து ஓதிப் பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை, கள்ளாத அடியார் நெஞ்சில்
சேர்ந்தானை, வடதளி எம் செல்வன் தன்னை, சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

[8]
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும்
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து, மீண்டே இன் இசை கேட்டு இருந்தானை; இமையோர் கோனை;
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட, பைம்பொழில் சேர்தரும், ஓமாம்புலியூர் மன்னும்
சீர் கெழுவு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

[9]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list