சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.017   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மரு அமர் குழல் உமை
பண் - காந்தாரபஞ்சமம்   (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)
5.071   திருநாவுக்கரசர்   தேவாரம்   குசையும் அங்கையில் கோசமும் கொண்ட
பண் - திருக்குறுந்தொகை   (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=SotjI4uHrC4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.017   மரு அமர் குழல் உமை  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருவிசயமங்கை ; (திருத்தலம் அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு விசயநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
மரு அமர் குழல் உமை பங்கர், வார்சடை
அரவு அமர் கொள்கை எம் அடிகள், கோயில் ஆம்
குரவு, அமர் சுரபுனை, கோங்கு, வேங்கைகள்
விரவிய பொழில் அணி விசயமங்கையே.

[1]
கீதம் முன் இசைதரக் கிளரும் வீணையர்
பூதம் முன் இயல்பு உடைப் புனிதர், பொன் நகர்
கோதனம் வழிபட, குலவு நால்மறை
வேதியர் தொழுது எழு விசயமங்கையே.

[2]
அக்கு அரவு அரையினர், அரிவை பாகமாத்
தொக்க நல் விடை உடைச் சோதி, தொல்-நகர்
தக்க நல் வானவர், தலைவர், நாள்தொறும்
மிக்கவர், தொழுது எழு விசயமங்கையே.

[3]
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு
புடை மலி சடை முடி அடிகள் பொன் நகர்
படை மலி மழுவினர், பைங்கண் மூரி வெள்
விடை மலி கொடி அணல், விசயமங்கையே.

[4]
தோடு அமர் காதினன், துதைந்த நீற்றினன்,
ஏடு அமர் கோதையோடு இனிது அமர்வு இடம்
காடு அமர் மா கரி கதறப் போர்த்தது ஓர்
வேடம் அது உடை அணல் விசயமங்கையே.

[5]
மைப் புரை கண் உமை பங்கன், வண் தழல்
ஒப்பு உரை மேனி எம் உடையவன், நகர்
அப்பொடு மலர்கொடு அங்கு இறைஞ்சி, வானவர்
மெய்ப்பட அருள்புரி விசயமங்கையே.

[6]
இரும் பொனின் மலைவிலின், எரிசரத்தினால்,
வரும் புரங்களைப் பொடிசெய்த மைந்தன் ஊர்
சுரும்பு அமர் கொன்றையும், தூய மத்தமும்,
விரும்பிய சடை அணல் விசயமங்கையே.

[7]
உளங்கையில், இருபதோடு ஒருபதும் கொடு, ஆங்கு
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை,
தளர்ந்து உடல் நெரிதர, அடர்த்த தன்மையன்
விளங்கிழையொடும் புகும், விசயமங்கையே.

[8]
மண்ணினை உண்டவன் மலரின்மேல் உறை
அண்ணல்கள் தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர்
தண் நறுஞ்சாந்தமும் பூவும் நீர்கொடு
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே.

[9]
கஞ்சியும் கவளம் உண் கவணர் கட்டுரை
நஞ்சினும் கொடியன; நமர்கள் தேர்கிலார்
செஞ்சடைமுடி உடைத் தேவன் நன்நகர்
விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே.

[10]
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை,
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்,
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர்; சிவகதி புகுதல் திண்ணமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.071   குசையும் அங்கையில் கோசமும் கொண்ட  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவிசயமங்கை ; (திருத்தலம் அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு விசயநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ்
வசை இல் மங்கல வாசகர் வாழ்த்தவே,
இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான்
விசைய மங்கையுள் வேதியன்; காண்மினே!

[1]
ஆதிநாதன்; அடல் விடைமேல் அமர்
பூதநாதன்; புலி அதள் ஆடையன்;
வேதநாதன் விசயமங்கை உளான்;
பாதம் ஓத வல்லார்க்கு இல்லை, பாவமே.

[2]
கொள்ளிடக் கரைக் கோவந்த புத்தூரில்
வெள்விடைக்கு அருள்செய் விசயமங்கை-
யுள் இடத்து உறைகின்ற உருத்திரன்
கிள்ளிட, தலை அற்றது, அயனுக்கே.

[3]
திசையும் எங்கும் குலுங்க, திரிபுரம்
அசைய, அங்கு எய்திட்டு, ஆர் அழல் ஊட்டினான்
விசைய மங்கை விருத்தன்; புறத்து அடி
விசையின் மங்கி விழுந்தனன், காலனே.

[4]
பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள்
கள்ளம் ஆக்கிக் கலக்கிய கார் இருள்
விள்ளல் ஆக்கி, விசயமங்கைப் பிரான்,
உள்ளல் நோக்கி, என் உள்ளுள் உறையுமே.

[5]
கொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை-
வில்லை ஏற்று உடையான், விசயமங்கைச்
செல்வ, போற்றி! என்பாருக்குத் தென்திசை-
எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே.

[6]
கண் பல் உக்க கபாலம் அங்கைக் கொண்டு
உண் பலிக்கு உழல் உத்தமன், உள் ஒளி
வெண்பிறைக்கண்ணியான், விசயமங்கை
நண்பனை, தொழப்பெற்றது நன்மையே.

[7]
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து,
வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை
ஆண்டவன்(ன்) அடியே நினைந்து, ஆசையால்
காண்டலே கருத்து ஆகி இருப்பனே.

[8]
வந்து கேண்மின்: மயல் தீர் மனிதர்காள்!
வெந்தநீற்றன், விசயமங்கைப் பிரான்,
சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப்
பந்து ஆக்கி, உயக்கொளும்; காண்மினே!

[9]
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை
வலம் செய்வார்களும், வாழ்த்து இசைப்பார்களும்,
நலம் செய்வார் அவர், நன்நெறி நாடியே.

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list