சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.046   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருநாலூர்மயானம் - சீகாமரம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பலாசவனேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=LNQ8Zrbi-nE  
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேல் ஊரும் செஞ்சடையான், வெண்நூல் சேர் மார்பினான்,
நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து,
மால் ஊரும் சிந்தையர்பால் வந்து ஊரா, மறுபிறப்பே.


[ 1]


சூடும், பிறை சென்னி; சூழ்காடு இடம் ஆக
ஆடும் பறைசங்கு ஒலியோடு அழகு ஆக;
நாடும் சிறப்பு ஓவா நாலூர் மயானத்தைப்
பாடும் சிறப்போர்பால் பற்றா ஆம், பாவமே.


[ 2]


கல்லால் நிழல் மேவி, காமுறு சீர் நால்வர்க்கு, அன்று,
எல்லா அறன் உரையும் இன் அருளால் சொல்லினான்
நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தைச்
சொல்லாதவர் எல்லாம் சொல்லாதார். தொல் நெறிக்கே


[ 3]


கோலத்து ஆர் கொன்றையான், கொல் புலித் தோல்
ஆடையான்,
நீலத்து ஆர் கண்டத்தான், நெற்றி ஓர் கண்ணினான்
ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார்பால், சூழா ஆம், தொல்வினையே.


[ 4]


கறை ஆர் மணிமிடற்றான், காபாலி, கட்டங்கன்,
பிறை ஆர் வளர்சடையான், பெண்பாகன் நண்பு ஆய
நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம்
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம், இன்பமே.


[ 5]


Go to top
கண் ஆர் நுதலான், கனல் ஆடு இடம் ஆகப்
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி,
நண்ணார் புரம் எய்தான், நாலூர் மயானத்தை
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நன்நெறியே.


[ 6]


கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான்,
பெண் பாவு பாகத்தான், நாகத்தோல் ஆகத்தான்
நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை
எண் பாவு சிந்தையார்க்கு ஏலா, இடர்தானே.


[ 7]


பத்துத் தலையோனைப் பாதத்து ஒருவிரலால்
வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான்
நத்தின் ஒலி ஓவ நாலூர்மயானத்து என்
அத்தன்; அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே.


[ 8]


மாலோடு நான்முகனும் நேட, வளர் எரி ஆய்,
மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம்
பாலோடு நெய் ஆடி; பாதம் பணிவோமே.


[ 9]


துன்பு ஆய மாசார், துவர் ஆய போர்வையார்,
புன் பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்!
நண்பால் சிவாய! எனா நாலூர்மயானத்தே
இன்பு ஆய் இருந்தானை, ஏத்துவார்க்கு இன்பமே.


[ 10]


Go to top
ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான்
நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தைச்
சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு
ஏலும், புகழ்; வானத்து இன்பு ஆய் இருப்பாரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநாலூர்மயானம்
2.046   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும்
Tune - சீகாமரம்   (திருநாலூர்மயானம் பலாசவனேசுவரர் பெரியநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song