சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
12   திருப்பரங்குன்றம் திருப்புகழ் ( - வாரியார் # 14 )  

காதடருங்கயல்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தானன தந்தன தந்தனந் தந்தன
     தானன தந்தன தந்தனந் தந்தன
          தானன தந்தன தந்தனந் தந்தன ...... தனதான

காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி
     வாளிம யங்கம னம்பயந் தந்திருள்
          கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு ...... தொருகோடி
காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை
     யாழியு டன்கட கந்துலங் கும்படி
          காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு ...... மயலாலே
வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித
     மாகந டந்தவர் பின்திரிந் துந்தன
          மார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம ...... துழலாதே
வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி
     மாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு
          வாழநி தம்புனை யும்பதந் தந்துன ...... தருள்தாராய்
போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர
     மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ
          போதவ ளஞ்சிவ சங்கரன் கொண்டிட ...... மொழிவோனே
பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி
     ரீவம டந்தைபு ரந்தரன் தந்தருள்
          பூவைக ருங்குற மின்கலந் தங்குப ...... னிருதோளா
தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி
     டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல
          சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு ...... திறலோனே
சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்
     சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி
          தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை ...... பெருமாளே.
Easy Version:
காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி வாளி
மயங்க மனம் பயம் தந்து
இருள் கால் தர இந்து விசும்பு இலங்கும் பொழுது ஒரு கோடி
காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும்
கணையாழியுடன் கடகம் துலங்கும்படி காமன் நெடும் சிலை
கொண்டு அடர்ந்தும் பொரு மயலாலே
வாது புரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர்
பின் திரிந்தும் தன மார்பில் அழுந்த அணைந்திடும் துன்பம்
அது உழலாதே
வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம்
கொளும் அன்பர் வந்து அன்பொடு வாழ நிதம் புனையும்
பதம் தந்து உனது அருள் தாராய்
போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம் மீது தடிந்து
விலங்கிடும் புங்கவ போத வளம் சிவ சங்கரன் கொண்டிட
மொழிவோனே
பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவ மடந்தை
புரந்தரன் தந்து அருள் பூவை கரும் குற மின் கலம் தங்கு
ப(ன்)னிரு தோளா
தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த
தென்பும் பல சேர் நிருதன் குலம் அஞ்ச முன் சென்றடு
திறலோனே
சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள்
வந்து இறைஞ்சும் பதி தேவர் பணிந்து எழு தென் பரங் குன்று
உறை பெருமாளே.
Add (additional) Audio/Video Link

காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி வாளி
மயங்க மனம் பயம் தந்து
... காது அளவும் நெருக்கும் கயல் மீன்
போன்ற கண்களை மனத்தில் கொண்டு, அப் பொது மகளிர்பால் மனம்
ஒருப்பட்டு, ஐம்புலன்களும் மன்மதன் வீசும் அம்புகளால் மயங்க, மனம்
அச்சம் கொண்டு,
இருள் கால் தர இந்து விசும்பு இலங்கும் பொழுது ஒரு கோடி
காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும்
... இருள் நீங்கும்படியான
சந்திரன் விண்ணில் ஒளி தரும்பொழுது கோடிக் கணக்காக காய்கின்ற
நட்சத்திரங்கள் போல் ஒளி வீசும் செவ்விய சிலம்பும்,
கணையாழியுடன் கடகம் துலங்கும்படி காமன் நெடும் சிலை
கொண்டு அடர்ந்தும் பொரு மயலாலே
... மோதிரமும், கடகமும்
விளங்க, மன்மதன் தனது நீண்ட வில்லைக் கொண்டு நெருங்கி சண்டை
செய்வதால் வரும் மயக்கத்தினால்,
வாது புரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர்
பின் திரிந்தும் தன மார்பில் அழுந்த அணைந்திடும் துன்பம்
அது உழலாதே
... பிணங்கியும் இணங்கியும் இனிமையுடன்
நடப்பவரான விலைமாதர்களின் பின் திரிந்து அவர்களது மார்பில் அழுந்த
அணையும் துன்பச் செயலில் நான் உழலாமல்,
வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம்
கொளும் அன்பர் வந்து அன்பொடு வாழ நிதம் புனையும்
பதம் தந்து உனது அருள் தாராய்
... வாசனை மிக்க கடம்ப மலரால்
ஆன மெல்லிய கிண்கிணி மாலைகளை கைகளில் ஏந்திய அடியார்கள்
வந்து அன்புடன் தாம் வாழ வேண்டி நாள் தோறும் (அம்மாலைகளைச்)
சூட்டும் திருவடியைத் தந்து உனது திருவருளைத் தாராய்.
போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம் மீது தடிந்து
விலங்கிடும் புங்கவ போத வளம் சிவ சங்கரன் கொண்டிட
மொழிவோனே
... (தாமரை) மலரில் உறைந்தருளும் பிரமனது செவ்விய
தலை மீது புடைக்கும்படி குட்டி, அவனை விலங்கிட்ட சிறப்பு
உடையவனே, ஞான வளப்பத்தை (பிரணவப் பொருளை) சிவசங்கர
மூர்த்தி பெறும்படி உரைத்தவனே,
பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவ மடந்தை
புரந்தரன் தந்து அருள் பூவை கரும் குற மின் கலம் தங்கு
ப(ன்)னிரு தோளா
... கமுக மரங்கள், விளங்கும் சங்குகள்
இவைகளின் அழகைக் கொண்ட கழுத்தை உடைய பெண்ணும், இந்திரன்
பெற்றருளியவளும் ஆகிய பூவை போன்ற தேவயானை, பெருமை வாய்ந்த
குற மகளாகிய வள்ளிநாயகி ஆகியவர்களின் ஆபரணங்கள்
தங்கும்படியான பன்னிரு தோள்களை உடையவனே,
தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த
தென்பும் பல சேர் நிருதன் குலம் அஞ்ச முன் சென்றடு
திறலோனே
... தீய உள்ளம் பொருந்தினவர்களும், வஞ்சகம்
குறையாதவரும், சிவ பெருமான் (முன்பு வரமாகத்) தந்த செருக்குகள்
பல கொண்டவர்களுமாகிய அசுரர் கூட்டம் பயப்படும்படி முன் சென்று
அவர்களை அழித்த திறம் வாய்ந்தவனே,
சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள்
வந்து இறைஞ்சும் பதி தேவர் பணிந்து எழு தென் பரங் குன்று
உறை பெருமாளே.
... குளிர்ச்சி முற்பட்டு, மணம் விளங்கும்
சோலைகள் சூழ்ந்ததும், கல்வியில் மிக்கோர் வந்து வணங்குவதுமான
ஊர், தேவர்கள் வணங்கி எழுகின்ற அழகிய திருப்பரங் குன்றத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே.

Similar songs:

12 - காதடருங்கயல் (திருப்பரங்குன்றம்)

தானன தந்தன தந்தனந் தந்தன
     தானன தந்தன தந்தனந் தந்தன
          தானன தந்தன தந்தனந் தந்தன ...... தனதான

Songs from this thalam திருப்பரங்குன்றம்

7 - அருக்கு மங்கையர்

8 - உனைத் தினம்

9 - கருவடைந்து

10 - கறுக்கும் அஞ்சன

11 - கனகந்திரள்கின்ற

12 - காதடருங்கயல்

13 - சந்ததம் பந்த

14 - சருவும்படி

15 - தடக்கைப் பங்கயம்

16 - பதித்த செஞ்சந்த

17 - பொருப்புறுங்

18 - மன்றலங் கொந்துமிசை

19 - வடத்தை மிஞ்சிய

20 - வரைத்தடங் கொங்கை

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song