சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
அதிபத்த நாயனார் புராணம்  

12 -ஆம் திருமுறை   12.430  
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
 
உரிமை நிலைபெற்று வாழ்ந்து வருகின்ற கதிரவன் வழியில் வந்த மரபான, பழமையும் முதன்மையும் பெற்ற சோழர்க ளின் குலத்திற்கு உரிமையுடைய காவிரிநாடு என்னும் கற்பகப் பூங் கொடியில் மலர்ந்த மலரைப் போன்று நாகைப்பட்டினம் என்ற நகரம் நலம் சிறந்து விளங்கும் மேன்மை உடையதாம்.
குறிப்புரை:

முத்து மாலைகளின் கோவைகள் சரியத் தேன் பொருந்திய மலர்களைச் சூடிய தாழ்ந்த கூந்தலையுடைய பெண்கள் பந்தாடும் மேடைகளைக் கொண்ட விரும்பத்தக்க பொன் ஒளி மின்னும் மாளிகைகளை, இவை மலை என்று மயங்கி, அவற்றின் அருகே, கரிய கடல் நீரை முகந்து நிற்கும் கரிய மேகக் கூட்டங்கள் நெருங்குவன. *** தெற்றி - பந்தாடுதற்குரிய மேடை.
பெருமை மிக்க பேரோசை நிறைதலாலும், அழகு நிறைந்த திருமகள் வாழும் உறைவிடமாதலாலும், வேண்டும் பொருள்களை எல்லாம் அளித்தலாலும், கடலை விடப் பெரியது என்று சொல்லுமாறு விளங்கி, அலை என யானைத் தொகைகள், குதிரைத் தொகைகள், மணிகள், ஆடைகள் ஆகிய இவை முதலான பொருள்களை எல்லாம் மரக்கலங்களில் கொணர்ந்து தர, அந்நகரம் சிறந்து விளங்கும். *** பேரொலி, திருமகள் உறைவது, யாவையும் தருவது ஆகிய செயல்களினால் அந்நகரம் கடலினும் பெரிதாய் விளங்கிற்று.
பெரும் புகழுடைய பதினெண் நிலங்களிலும் நிறைந்த பெருமையுடைய பல பொருள்களைக் கொண்ட மக்களும் சேர்ந்து பெருகி வாழ்வதாலும், கோடியளவினும் பெருகிய செல்வக் குடி மக்களுடன் விளங்குவதாலும், அவ்வழகுடைய பழைய நகரம், இவ்வுலகம் முழுவதும் தனக்குள் நிழலாக அடங்கக் காணப்படுகின்ற கண்ணாடி மண்டலம் போன்றதாகும். *** பதினெண் நிலங்களாவன:- சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கோசலம், தமிழகம் என்பன. இந்நாடுகளில் வழங்கும் மொழிகள் அவ்வத் தேயப் பெயரைப் பெற்றே நிற்கும். 'பண்டிதர் தங்கள் பதினெண் பாடையும்' என்னும் திருமந்திரம்.
அத்தகைய பெருநகரத்தின் அருகில் அலைகளை உடைய கடல் விளிம்பில், நீண்டு அலைகளின் நுரை வந்து தவழ்வ தற்கு இடமான பகுதிகளை அடுத்து, நிலையானதும் பழைமையான துமான பரதவர் மரபில், வலைவீசி மீன் பிடிக்கும் தொழிலால் பெறும் வளமையுடைய மீன் உணவு பெருகிய இயல்பினால் வாழ்வு பெற்ற பரதவர் குடிகள் நெருங்கியுள்ளன. *** கடல் விளிம்பு - கடற்கரை. நுளைப்பாடி - பரதவர் வாழும் இடம்.
அளவற்ற மேகங்கள் கிடந்தாற்போல் வலைகள் பெருகிய குடிகளின் அருகே, மீன் விலைக்குக் கொள்வோர் கொண்டு வந்த பசும்பொற்குவியல்கள் அளவிடப்படுவன. பரந்த கடலில் செலுத்தும் மீன்பிடிப் படகுகளின் வழி, பரதவர் கொணர்ந்த கயல் மீன்களை அவரிடம் பெற்றுக் கொள்ளும் பரத்தியரின் கரிய கண்கள் அவை இவ்வளவு விலை பெறும் என்பதைக் கண்ட அளவில் அளந்து விடுவன. *** மீனைக் கொடுத்துப் பொன்னைப் பெற்ற பரதவர்கள், அப்பொற்குவியலை அளந்தே அறுதியிடுகின்றனராம், அங்குள்ள பரத்தியர்களோ, தம் பரதவர்கள்பால் பெற்ற மீன் குவியலைக் கண்ட அளவிலேயே, இத்துணைப் பொற்காசுகளைப் பெற்றுவிடலாம் என அறுதியிட்டுவிடுவராம், பெண்களின் அறிவையும் பெருமையையும் நமக்குச் சேக்கிழார் காட்டி மகிழ்விக்கும் திறன் அரிது அரிதுகாண் எனக் கூறி மகிழலாம். திமில் - படகு.
உலர்ந்த மீன்களைக் கவர்தற்கு ஆசையுடைய பறவைகளுடன் வந்த கூட்டமான அன்னப் பறவைகள், வருந்துகின்ற நுண்ணிய இடையையுடைய நுளைச்சியரின் அழகிய நடைக்குத் தோற்று , உயர்ந்த கிளைகளையுடைய புன்னைக் காட்டில், மணம் மிக்க அப்புன்னைக் கொம்புகளினின்றும் இறங்காமல் மருட்சி கொண்டி ருக்கும். *** புன்னையங் கானல் - புன்னைக் காடு. 'மட்டிட்ட புன்னையங் கானல்' என வரும் திருவாக்கும் காண்க. 'அன்னம்நன் னுதல் மென்னடைக் கழிந்து, நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறி யவும்' என்னும் சிலம்பும்.
வலைகளில் பிணிக்கப்பட்டிருக்கும் நீண்ட தொடர் களையுடைய வடங்களை இழுத்துச் செம்மை செய்பவர்களின் ஒலியும், விலையை எடுத்துக் கூறி மீன் குவியலைக் கொடுப்பவர் வாங்குவோரை அழைக்கின்ற ஒலியும், மிகச் சிறந்த வெண்மையான சங்குகளை எடுத்துக் குவிப்பவர்களின் ஒலியும், பெரிய கடல் ஒலிக்கு எதிர் ஒலி போன்று விளங்குவன.
குறிப்புரை:

அத்தகைய நுளைப்பாடியில் வாழ்ந்து, அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிவரும் நுளையரின் குலத்தில் தோன்றியவர். இளம்பிறைச் சந்திரனைச் சூடிய முடியையுடைய இறைவரின் அடித்தொண்டு செய்யும் செயலில் சிறந்து விளங்கிய 'அதிபத்தர்' எனும் பெயர்பெற்ற மேன்மையை உடையவராவர்.
குறிப்புரை:

அவ்வதிபத்தர் என்னும் அன்பர், நுளையரின் தலைவராகி, ஒலிக்கின்ற தெளிந்த அலைகளையுடைய கடலில் பலவாறு தொழில் செய்து, பக்கங்களில் சூழும் வலைகளை வளைத்து வீசி, மீன்களைப் பிடித்துக் கொண்டு வந்து குவிக்கும் உயர்ந்த பலவகை மீன் குவைகள் பலவாக, அவற்றை உடையவராய் அதனால் உயர்ந்தவராய் விளங்கினார்.
குறிப்புரை:

குறைவில்லாத மீன்களைப் பிடித்து, அக்கொலைத் தொழிலின் வளத்தையுடைய பரதவர், வலைகளால் வாரி எடுக்க, அதனுள் அகப்பட்ட மீன்களில், ஒரு தலைமையான மீன் கிட்டும் தோறும், 'இஃது ஐந்தொழில் செய்து அருட்கூத்தாடுகின்ற ஐயருக்காகுக!' என்று, இடையறாத அன்பினால் விருப்புடன், குளிர்ந்த கடலிடத்தில் நாடோறும் விட்டு வந்தார்.
குறிப்புரை:

ஒழுங்காக மீன்களைப் பிடித்து வரும் வலையில், ஒரு நாளில் ஒரு மீனே வரினும் 'முழுமுதல்வரான இறைவரின் திருவடிக்கே' ஆகும் என விடுத்துவரும் நாள்களில், பல நாள்கள் தொடர்ந்து ஒரு மீனே, மேகம் படியும் கடலில் கிடைக்க, அதனை, அவர், இறைவருக்காக என்றே கடலின்கண் விட்டு வந்தார்.
குறிப்புரை:

மீனை விற்பதனால் பெருகும் உணவுப் பண்டங்க ளால் மிக்க பெருஞ்செல்வம் இவ்வகையில் சுருங்கியமையால், தம் அரிய உறவினர்கள் உணவில்லாமல் பசியால் வருந்துவது பற்றியும், அவர் வருந்தவில்லை. வலையில் அகப்படுவது ஒரு மீனே யாயினும் அதனையும் தொடர்ந்து, மான் கன்றைக் கையில் ஏந்திய இறைவரின் திருவடிக்கு என விட்டு மகிழ்ந்து வந்தார்.
குறிப்புரை:

பல நாள்கள் இவ்வாறே நிகழத் தாம் உணவு மறந்து வாடித் தம் அழகிய திருமேனியும் தளர்ச்சியடையத் தம் தொண்டினின் றும் குறைவுபடாத அவ்வொழுக்கத்தில் சலியாமல் ஒழுகியவரின் இயல்பை அறிந்து, நஞ்சுண்ட இறைவர் இத் தொண்டரின் அன்பு எனும் அமுதத்தை உண்பாராய்,
குறிப்புரை:

முற்கூறியவாறே நிகழ்ந்த நாள் ஒன்றில், அவ்வொரு மீனும் அங்கு வலையில் அகப்படாது போகச் செய்து, தூய நிறமுடைய பசும் பொன்னாலும் ஒளியுடைய மணிகளாலும் மீன் உறுப்புக்கள் பொருந்தும்படி அமைத்து, உலகனைத்துமே அதற்குரிய விலை என மதிக்கத்தக்க அற்புதத் தன்மை கொண்ட ஒரு மீன், வீசிய வலையில் அகப்படுமாறு இறைவர் செய்தனர். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
குறிப்புரை:

என்று பரதவர் உரைக்கவும், அதுகேட்ட மிகுகின்ற சிறப்பையுடைய தொண்டரான அதிபத்தர் 'பொன்னும் தொகுதியான ஒளியுடைய நவமணிகளும் விளங்கும், மீன் உறுப்புகளினால் பொருந்தும் உலகியலில் காணக் கூடாத இம்மீன், என்னை ஆட்கொள் கின்ற இறைவருக்கே ஆகும்: அவரது பொற்கழலை இது சேர்வதா கும்!' என்று கடலில் விடுத்தார்.
குறிப்புரை:

எவ்வுலகும் பொருளையே முதன்மையாக வுடையது என்று கூறும் அப்பெரிய வலிய பொன்னாசை என்னும் பெரும் பற்றை முழுமையாக நீக்கிய ஒப்பில்லாத மெய்த்தொண்டர் முன்னே, இறைவர் விடையூர்தியின் மேல், மேகம் தவழும் வானத்தில் எழுந்தருளினார். அதுபொழுது தேவர்கள் கற்பகப் பூமழை சொரிந்தனர். *** 'பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு' (குறள், 247) என்ற திருவள்ளுவனாரும். 'பொருள்ளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது' (குறள். , 248) என்பர். அவ்வருட்செல்வமே அதிபத்தரின் செல்வமாயிற்று.
'பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு' (குறள், 247) என்ற திருவள்ளுவனாரும். 'பொருள்ளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது' (குறள். , 248) என்பர். அவ்வருட்செல்வமே அதிபத்தரின் செல்வமாயிற்று.
குறிப்புரை:

மீன்பிடிக்கும் தம் மரபிற்கு ஏற்றவாறே, தகுதியான பெருந் திருத்தொண்டை உண்மையில் தவறாது செய்து அருள் பெற்ற அதிபத்த நாயனாரின் விளக்கம் செய்யும் திருவடிகளை வணங்கி, இனி உலகங்கள் மூன்றும் முறையாகப் போற்றுகின்ற செம்மையும் நீதியும் உடைய கலிக்கம்ப நாயனாரின்' திருத்தொண்டைக் கூறுவாம். அதிபத்த நாயனார் புராணம் முற்றிற்று. ***

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history