sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
769   சீகாழி திருப்புகழ் ( - வாரியார் # 787 )  
கொங்கு லாவிய   முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்த தானன தனதன தனதன
     தந்த தானன தனதன தனதன
          தந்த தானன தனதன தனதன ...... தனதான

கொங்கு லாவிய குழலினு நிழலினு
     நஞ்ச ளாவிய விழியினு மிரணிய
          குன்று போல்வளர் முலையினு நிலையினு ...... மடமாதர்
கொம்பு சேர்வன இடையினு நடையினு
     மன்பு கூர்வன மொழியினு மெழில்குடி
          கொண்ட சேயித ழமுதினு நகையினு ...... மனதாய
சங்கை யாளியை அணுவிடை பிளவள
     வின்சொல் வாசக மொழிவன இவையில
          சம்ப்ர தாயனை அவலனை ஒளிதிக ...... ழிசைகூருந்
தண்டை நூபுர மணுகிய இருகழல்
     கண்டு நாளவ மிகையற விழியருள்
          தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே
வங்க வாரிதி முறையிட நிசிசரர்
     துங்க மாமுடி பொடிபட வடவனல்
          மங்கி நீறெழ அலகைகள் நடமிட ...... மயிலேறி
வஞ்ச வேல்கொடு முனிபவ அழகிய
     சண்பை மாநக ருறையுமொ ரறுமுக
          வந்த வானவர் மனதினி லிடர்கெட ...... நினைவோனே
பங்க வீரியர் பறிதலை விரகினர்
     மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர்
          பந்த மேவிய பகடிகள் கபடிகள் ...... நிலைகேடர்
பண்பி லாதவர் கொலைசெயு மனதின
     ரிங்கெ ணாயிர ருயரிய கழுமிசை
          பஞ்ச பாதகர் முனைகெட அருளிய ...... பெருமாளே.
Easy Version:
கொங்கு உலாவிய குழலினு(ம்) நிழலினு(ம்) நஞ்சு அளாவிய
விழியினும் இரணிய குன்று போல் வளர் முலையினு(ம்)
நிலையினு(ம்) மடமாதர் கொம்பு சேர்வன இடையினு(ம்)
நடையினு(ம்)
அன்பு கூர்வன மொழியினும் எழில் குடி கொண்ட சேய்
இதழினு(ம்) நகையினு(ம்) மனது ஆய சங்கையாளியை அணு
இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல
சம்ப்ர தாயனை அவலனை
ஒளி திகழ் இசை கூரும் தண்டை நூபுரம் அணுகிய இரு கழல்
கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள் தந்த பேர் அருள்
கனவிலும் நனவிலும் மறவேனே
வங்க வாரிதி முறை இட நிசிசரர் துங்க மா முடி பொடிபட
வட அனல் மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட மயில் ஏறி
வஞ்ச வேல் கொ(ண்)டு முனிபவ
அழகிய சண்பை மா நகர் உறையும் ஒர் அறு முக வந்த
வானவர் மனதினில் இடர் கெட நினைவோனே
பங்க வீரியர் பறி தலை விரகினர் மிஞ்சு பாதகர் அற நெறி
பயன் இலர் பந்தம் மேவிய பகடிகள் கபடிகள் நிலை கேடர்
பண்பு இலாதவர் கொலை செயும் மனதினர்
இங்கு எ(ண்)ணாயிரர் உயரிய கழு மிசை பஞ்ச பாதகர் முனை
கெட அருளிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

கொங்கு உலாவிய குழலினு(ம்) நிழலினு(ம்) நஞ்சு அளாவிய
விழியினும் இரணிய குன்று போல் வளர் முலையினு(ம்)
நிலையினு(ம்) மடமாதர் கொம்பு சேர்வன இடையினு(ம்)
நடையினு(ம்)
... வாசனை வீசும் கூந்தலிலும் அதன் ஒளியிலும், விஷம்
கலந்த கண்களிலும், பொன் மலை போல வளர்ந்துள்ள மார்பினிலும்
அதன் உறுதியான தன்மையிலும், அழகிய விலைமாதர்களின் கொடி
போன்ற மெல்லிய இடுப்பிலும், நடையிலும்,
அன்பு கூர்வன மொழியினும் எழில் குடி கொண்ட சேய்
இதழினு(ம்) நகையினு(ம்) மனது ஆய சங்கையாளியை அணு
இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல
சம்ப்ர தாயனை அவலனை
... அன்பு மிக்கெழும் பேச்சிலும், அழகு
குடி கொண்ட சிவந்த வாயிதழ் அமுதத்திலும் அவர்களுடைய சிரிப்பிலும்
மனது பாய்கின்ற எண்ணம் கொண்டவனாகிய எனக்கு, அணு
அளவேனும் அதன் பிளவளவேனும் இனிய சொற்களைப் பேசுவதே
இல்லாததான வழக்கம் உள்ளவனும், வீணனும் ஆகிய எனக்கு,
ஒளி திகழ் இசை கூரும் தண்டை நூபுரம் அணுகிய இரு கழல்
கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள் தந்த பேர் அருள்
கனவிலும் நனவிலும் மறவேனே
... ஒளி விளங்குவதும் இசை
மிகுந்ததும் ஆகிய தண்டையும் சிலம்பும் அணிந்துள்ள இரண்டு
கழலடிகளைப் பார்த்து எனது வாழ் நாள் வீணாகப் பெருகுதல் இல்லாமல்
(உனது) கண்ணோக்க அருளை (நீ) தந்த பெரும் கிருபையை கனவிலும்
நனவிலும் நான் மறக்க மாட்டேன்.
வங்க வாரிதி முறை இட நிசிசரர் துங்க மா முடி பொடிபட
வட அனல் மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட மயில் ஏறி
வஞ்ச வேல் கொ(ண்)டு முனிபவ
... கப்பல்கள் உலவும் கடல்
முறையிட, அசுரர்களின் உயர்ந்த பெரிய முடிகள் பொடியாக,
வடமுகாக்கினி அடங்கி சாம்பலாக, பேய்கள் நடனமாட மயிலின் மீது
ஏறி துஷ்டர்களை வஞ்சித்து அழிக்கும் வேலைக் கொண்டு கோபித்தவனே,
அழகிய சண்பை மா நகர் உறையும் ஒர் அறு முக வந்த
வானவர் மனதினில் இடர் கெட நினைவோனே
... அழகிய
சண்பை எனப்படும் சீகாழி நகரில் எழுந்தருளி இருக்கும் ஆறு முகப்
பெருமானே, உன்னிடம் அடைக்கலம் புக வந்த தேவர்களின் மன
வருத்தம் நீங்கும்படியாக நினைத்தவனே,
பங்க வீரியர் பறி தலை விரகினர் மிஞ்சு பாதகர் அற நெறி
பயன் இலர் பந்தம் மேவிய பகடிகள் கபடிகள் நிலை கேடர்
பண்பு இலாதவர் கொலை செயும் மனதினர்
... சமணர்கள் வலிமை
இருந்தும் தோல்வி அடைந்தவர், தலைவன் மயிர் பறிக்கும் உற்சாகத்தினர்,
மிகுதியான பாவம் செய்தவர்கள், தரும நெறியின் பயனை அடையாதவர்கள்,
பாசத்தில் கட்டுண்ட வேடதாரிகள், வஞ்சகர்கள், தன்மை கெட்டவர்கள்,
நல்லொழுக்கம் இல்லாதவர்கள், கொலை செய்ய இசையும் மனதை
உடையவர்கள்,
இங்கு எ(ண்)ணாயிரர் உயரிய கழு மிசை பஞ்ச பாதகர் முனை
கெட அருளிய பெருமாளே.
... இங்கு (மதுரையில்) அவர்கள்
எண்ணாயிரம் பேர்களும் உயர்ந்த கழு மரத்தின் மேல் ஏறி, ஐந்து பெரிய
பாவச் செயல்களைப் புரிந்ததால், முதன்மை நிலை கெட்டு ஒழியும்படி
(திருஞானசம்பந்தராக வந்து) அருளிய பெருமாளே.

Similar songs:

75 - பஞ்ச பாதகம் (திருச்செந்தூர்)

தந்த தானன தனதன தனதன
     தந்த தானன தனதன தனதன
          தந்த தானன தனதன தனதன ...... தனதான

769 - கொங்கு லாவிய (சீகாழி)

தந்த தானன தனதன தனதன
     தந்த தானன தனதன தனதன
          தந்த தானன தனதன தனதன ...... தனதான

Songs from this sthalam

764 - அலைகடல் சிலை

765 - இரதமான தேன்

766 - ஊனத்தசை தோல்கள்

767 - ஒய்யா ரச்சிலை

768 - கட்காமக்ரோத

769 - கொங்கு லாவிய

770 - சந்தனம் பரிமள

771 - சருவி இகழ்ந்து

772 - சிந்து உற்று எழு

773 - செக்கர்வானப் பிறை

774 - தினமணி சார்ங்க

775 - பூமாது உரமேயணி

776 - மதனச்சொற் கார

777 - விடம் என மிகுத்த

This page was last modified on Fri, 15 Dec 2023 17:32:56 +0000
 


1
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thiruppugazh_song.php?sequence_no=769&lang=tamil;