சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
812   திருவாஞ்சியம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 264 - வாரியார் # 822 )  

இபமாந்தர் சக்ர

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதாந்த தத்த தனதன
     தனதாந்த தத்த தனதன
          தனதாந்த தத்த தனதன ...... தனதான

இபமாந்தர் சக்ர பதிசெறி
     படையாண்டு சக்ர வரிசைக
          ளிடவாழ்ந்து திக்கு விசயம ...... ணரசாகி
இறுமாந்து வட்ட வணைமிசை
     விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
          யெழிலார்ந்த பட்டி வகைபரி ...... மளலேபந்
தபனாங்க ரத்ந வணிகல
     னிவைசேர்ந்த விச்சு வடிவது
          தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு ...... வியபோது
தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
     பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
          தனவாஞ்சை மிக்கு னடிதொழ ...... நினையாரே
உபசாந்த சித்த குருகுல
     பவபாண்ட வர்க்கு வரதன்மை
          யுருவோன்ப்ர சித்த நெடியவன் ...... ரிஷிகேசன்
உலகீன்ற பச்சை யுமையணன்
     வடவேங்க டத்தி லுறைபவ
          னுயர்சார்ங்க சக்ர கரதலன் ...... மருகோனே
த்ரிபுராந்த கற்கு வரசுத
     ரதிகாந்தன் மைத்து னமுருக
          திறல்பூண்ட சுப்ர மணியஷண் ......முகவேலா
திரைபாய்ந்த பத்ம தடவய
     லியில்வேந்த முத்தி யருள்தரு
          திருவாஞ்சி யத்தி லமரர்கள் ...... பெருமாளே.
Easy Version:
இபமாந்தர் சக்ர பதி
செறி படையாண்டு
சக்ர வரிசைகளிடவாழ்ந்து
திக்கு விசய மண் அரசாகி
இறுமாந்து வட்ட வணைமிசை
விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
எழிலார்ந்த பட்டி வகைபரிள லேபம்
தபனாங்க ரத்ந வணிகலன்
இவைசேர்ந்த விச்சு வடிவது
தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழுவியபோது
தழல்தாங் கொளுத்தியிட
ஒரு பிடிசாம்பல் பட்டது அறிகிலர்
தனவாஞ்சை மிக்கு உனடிதொழ நினையாரே
உபசாந்த சித்த குருகுலபவ
பாண்டவர்க்கு வரதன்
மையுருவோன் ப்ரசித்த நெடியவன் ரிஷிகேசன்
உலகீன்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவன்
உயர்சார்ங்க சக்ர கரதலன்மருகோனே
த்ரிபுராந்த கற்கு வரசுத
ரதிகாந்தன் மைத்துனமுருக
திறல்பூண்ட சுப்ர மணிய ஷண்முகவேலா
திரைபாய்ந்த பத்ம தடவயலியில்வேந்த
முத்தி யருள்தரு திருவாஞ்சியத்தில்
அமரர்கள் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

இபமாந்தர் சக்ர பதி ... யானைப் படை, காலாட் படை முதலிய
படைகளையுடைய சக்ரவர்த்தியாகி,
செறி படையாண்டு ... நிறைந்துள்ள நால்வகைச் சேனைகளையும்
ஆண்டுகொண்டு,
சக்ர வரிசைகளிடவாழ்ந்து ... ஆக்ஞாசக்கரம் தன் வேலை
முறைகளை நடத்த அவ்வாறே வாழ்ந்து,
திக்கு விசய மண் அரசாகி ... திக்குவிஜயம் செய்து, இந்தப்
புவிக்கு மன்னனாகி
இறுமாந்து வட்ட வணைமிசை ... மிக்க பெருமை அடைந்து, வட்ட
வடிவான திண்டுமெத்தை மேலுள்ள
விரிசார்ந்து வெற்றி மலர்தொடை ... விரிப்பில் சாய்ந்து, வெற்றி
வாகையான மலர் மாலைகளும்,
எழிலார்ந்த பட்டி வகைபரிள லேபம் ... அழகு மிகுந்த
ஆடைகளும், நறுமணக் கலவைப் பூச்சுக்களும்,
தபனாங்க ரத்ந வணிகலன் ... சூரிய ஒளியைத் தன்னிடத்தில்
கொண்ட ரத்தினங்களாலான ஆபரணங்களும்,
இவைசேர்ந்த விச்சு வடிவது ... இவையெல்லாம் சேர்ந்தாலும் ஒரு
மனித வித்துவின் வடிவம்தான் இவ்வுடல்.
தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழுவியபோது ... தம் உறவினர்கள்
சூழ்ந்திருக்க, இந்த உடலினின்றும் பெருமைமிக்க உயிர் பிரிந்து
போகும் தருணம்,
தழல்தாங் கொளுத்தியிட ... அந்த நெருப்பு உடலைக்
கொளுத்திவிட, முடிவில்
ஒரு பிடிசாம்பல் பட்டது அறிகிலர் ... அவ்வுடல் ஒரு பிடி சாம்பல்
என்ற நிலையை அடைவதை யாரும் அறியார்.
தனவாஞ்சை மிக்கு உனடிதொழ நினையாரே ... பொருளாசை
மிகுந்து, உன் திருவடிகளைத் தொழ நினைப்பதில்லை.
உபசாந்த சித்த குருகுலபவ ... மனச்சாந்தி உடையவர்களும், குரு
வம்சத்தைச் சேர்ந்தவர்களுமான
பாண்டவர்க்கு வரதன் ... பஞ்சபாண்டவர்களுக்கு வேண்டிய
வரங்களைத் தந்தவனும்,
மையுருவோன் ப்ரசித்த நெடியவன் ரிஷிகேசன் ... கருமேக
நிறத்தவனும், கீர்த்திமானும், விஸ்வரூபனும், இந்திரியங்களை
வென்றவனும்,
உலகீன்ற பச்சை யுமையணன் ... லோகமாதாவாகிய பச்சைநிற
உமாதேவியின் அண்ணனும்,
வடவேங்க டத்தி லுறைபவன் ... வடவேங்கடம் என்னும்
திருமலையில் வாழ்பவனும்,
உயர்சார்ங்க சக்ர கரதலன்மருகோனே ... உயர்ந்த சாரங்கம்
என்ற வில்லையும், சுதர்சனம் என்ற சக்கரத்தையும் கரத்தில் ஏந்தும்
திருமாலின் மருமகனே,
த்ரிபுராந்த கற்கு வரசுத ... திரிபுரங்களுக்கு யமனாய் இருந்த
சிவனுக்கு சிரேஷ்டமான பிள்ளையே,
ரதிகாந்தன் மைத்துனமுருக ... ரதியின் கணவன் மன்மதனுக்கு
மைத்துனன் முறையான முருகனே,
திறல்பூண்ட சுப்ர மணிய ஷண்முகவேலா ... பராக்ரமம் வாய்ந்த
சுப்பிரமணியனே, ஆறுமுகனே, வேலனே,
திரைபாய்ந்த பத்ம தடவயலியில்வேந்த ... அலைகள் பாயும்
தாமரைக் குளங்கள் உள்ள வயலூரின் அரசனே,
முத்தி யருள்தரு திருவாஞ்சியத்தில் ... முக்தித்தலமாகிய
திருவாஞ்சியத்தில் வீற்றிருக்கும்
அமரர்கள் பெருமாளே. ... தேவர்கள்தம் பெருமாளே.

Similar songs:

812 - இபமாந்தர் சக்ர (திருவாஞ்சியம்)

தனதாந்த தத்த தனதன
     தனதாந்த தத்த தனதன
          தனதாந்த தத்த தனதன ...... தனதான

Songs from this thalam திருவாஞ்சியம்

812 - இபமாந்தர் சக்ர

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song