சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி

Audio
கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி

வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்தி மலரடி ! போற்றி போற்றி
அபிராமி பட்டருக்கு! போற்றி போற்றி

0   - தாரமர் கொன்றையும் - கணபதி காப்பு   Ganapati Prayer
1   - உதிக்கின்ற செங்கதிர், - ஞானமும் நல்வித்தையும் பெற   To gain wisdom and goodness
2   - துணையும் தொழுந்தெய்வமும், - பிரிந்தவர் ஒன்று சேர   Divorce join together
3   - அறிந்தேன் எவரும் - குடும்பக் கவலையிலிருந்து விடுபட   Get rid of family worries
4   - மனிதரும் தேவரும் - உயர் பதவிகளை அடைய   Achieve high positions
5   - பொருந்திய முப்புரை! - மனக்கவலை தீர   Free from Anxiety
6   - சென்னியது உன்பொன் - மந்திர சித்தி பெற   To get magical power
7   - ததியுறு மத்திற் - மலையென வரும் துன்பம் பனியென நீங்க   The suffering that comes like a mountain is like snow
8   - சுந்தரி! எந்தை - பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட   Remove wordly bondings and increase devotion
9   - கருத்தன, எந்தைதன் - அனைத்தும் வசமாக   Everything is under control
10   - நின்றும், இருந்தும், - மோட்ச சாதனம் பெற   To get the liberation
11   - ஆனந்தமாய் என் - இல்வாழ்க்கையில் இன்பம் பெற   To get pleasure in life
12   - கண்ணியது உன்புகழ் - நெஞ்சம் தியானத்தில் நிலைபெற   To persevere in heart meditation
13   - பூத்தவளே புவனம் - வைராக்கிய நிலை எய்த   Zealous
14   - வந்திப்பவர் உன்னை - தலைமை பெற   To gain leadership
15   - தண்ணளிக் கென்று - பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற   To attain great wealth and bliss
16   - கிளியே! கிளைஞர் - முக்காலமும் உணரும் திறன் உண்டாக   The ability to feel past, present and future
17   - அதிசயமான வடிவுடையாள், - நல்ல வரன் அமைய   To get good spouse
18   - வவ்விய பாகத்திறைவரும், - மரண பயம் நீங்க   Get rid of the fear of death
19   - வெளிநின்ற நின் - பேரின்ப நிலையடைய   To remain blissful
20   - உறைகின்ற நின் - வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக   To gain Wealthy
21   - மங்கலை! செங்கல - அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய   The sin of not worshiping hope is gone
22   - கொடியே! இளவஞ்சிக் - இனிப் பிறவா நெறி அடைய   No longer to achieve the norm
23   - கொள்ளேன் மனத்தில் - எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க   Always be happy
24   - மணியே! மணியின் - நோய்கள் விலக   Get rid of diseases
25   - பின்னே திரிந்து - நினைத்த காரியம் நிறைவேற   To accomplish the thought thing
26   - ஏத்தும் அடியவர் - சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக   Grow influence and influence
27   - உடைத்தனை வஞ்சப் - மனநோய் அகல   The width of the psyche
28   - சொல்லும் பொருளும் - இம்மை மறுமை இன்பங்கள் அடைய   To attain the pleasures of the hereafter
29   - சித்தியும், சித்தி - அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெற   To get Ashta Siddhis
30   - அன்றே தடுத்து! - அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க   To get rid of Suffering
31   - உமையும், உமையொரு - மறுமையில் இன்பம் உண்டாக   To be happy in next life
32   - ஆசைக்கடலில் அகப்பட்டு - அகால மரணமும் துர்மரணமும் வராமலிருக்க   To prevent untimely death
33   - இழைக்கும் வினைவழியே - இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க   To be hopeful in the face of dying
34   - வந்தே சரணம் - சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க   To get fertile lands
35   - திங்கட் பகவின் - திருமணம் நிறைவேற   To get married
36   - பொருளே! பொருள் - பழைய வினைகள் வலிமை பெற   Older deeds gain strength
37   - கைக்கே அணிவது - நவமணிகளைப் பெற   To get new gems
38   - பவளக் கொடியில் - வேண்டியதை வேண்டியவாறு அடைய   To achieve what you want
39   - ஆளுகைக்கு உன்தன் - கருவிகளைக் கையாளும் வலிமை பெற   To gain the strength to handle tools
40   - வாணுதல் கண்ணியை, - பூர்வ புண்ணியம் பலன்தர   Purva Punniyam is fruitful
41   - புண்ணியம் செய்தனமே - நல்லடியார் நட்புப் பெற   To be in the good group
42   - இடங்கொண்டு விம்மி, - உலகினை வசப்படுத்த   To subdue the world
43   - பரிபுரச் சீறடிப்! - தீமைகள் ஒழிய   Except for the disadvantages
44   - தவளே! இவள் - பேதபுத்தி நீங்க   To get rid of idiot ideas
45   - தொண்டு செய்யாது - உலகோர் பழியிலிருந்து விடுபட   Get rid of the universal guilt
46   - வெறுக்கும் தகைமைகள் - நல்நடத்தையோடு வாழ   To live with good manners
47   - வாழும்படியொன்று கண்டு - யோகநிலை அடைய   to achieve yoga
48   - சுடரும் கலைமதி - உடல் பற்று நீங்க   To get rid of body needs
49   - குரம்பை அடுத்துக் - மரணத் துன்பம் இல்லாதிருக்க   To avoid the suffering of death
50   - நாயகி; நான்முகி; - அம்பிகையை நேரில் காண   To see Ambika in person
51   - அரணம் பொருள் - மோகம் நீங்க   To be lust free
52   - வையம், துரகம், - இம்மையில் பெருஞ்செல்வம் அடைய   To achieve great wealth in this world
53   - சின்னஞ்சிறிய மருங்கினில் - பொய்யுணர்வு நீங்க   To remove from falsehood is you
54   - இல்லாமை சொல்லி - கடன் தொல்லைகள் தீர   To be free from Debt Harassment
55   - மின்னாயிரம் ஒரு - விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்த   To attain disgusting mood of liking
56   - ஒன்றாய் அரும்பிப் - யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக   To have the energy to impress everyone
57   - ஐயன் அளந்தபடி - வறுமை ஒழிய   To be away from poverty
58   - அருணாம் புயத்தும் - மனஅமைதி பெற   To gain peace of mind
59   - தஞ்சம் பிறிதில்லை - பிள்ளைகள் நல்லவர்களாக வளர   For the children grow up to be good
60   - பாலினும் சொல்இனியாய்! - மெய்யுணர்வு பெற   To gain consciousness
61   - நாயேனையும் இங்கொரு - மாயையை வெல்ல   To defeat the illusion
62   - தங்கச்சிலை கொண்டு - எத்தகைய அச்சமும் அகல   To become free from fear
63   - தேறும்படி சில - அறிவு தெளிவோடு இருக்க   To be in conscious mind
64   - வீணே பலிகவர் - பக்தி பெருக   Increase devotion
65   - ககனமும், வானமும், - மகப்பேறு அடைய   To get children
66   - வல்லபம் ஒன்றறியேன்; - கவிஞராக   To become poet
67   - தோத்திரம் செய்து, - பகைவர்கள் அழிய   Destroy enemies
68   - பாரும், புனலும், - நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக   Wealth abounds like land and house
69   - தனம்தரும்; கல்விதரும்; - சகல சௌபாக்கியங்களும் அடைய   Achieve all conveniences
70   - கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் - கலைகளில் சித்தி பெற   To get Siddhi in micro arts
71   - அழகுக்கு ஒருவரும் - மனக்குறைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெற   Get rid of grievances and get pleasure
72   - என்குறை தீரநின்று - பிறவிப் பிணி தீர   To get liberated from birth
73   - தாமம் கடம்பு; - குழந்தைப் பேறு உண்டாக   To get children
74   - நயனங்கள் மூன்றுடை - தொழிலில் மேன்மை அடைய   Achieve excellence in the industry
75   - தங்குவர் கற்பகத் - விதியை வெல்ல   To defeat fate
76   - குறித்தேன் மனத்தில் - தனக்கு உரிமையானதைப் பெற   To get what he deserves
77   - பயிரவி, பஞ்சமி, - பகை அச்சம் நீங்க   Overcome the fear of enmity
78   - செப்பும், கனக - சகல செல்வங்களையும் அடைய   Achieve all the riches
79   - விழிக்கே அருளுண்டு; - கட்டுகளில் இருந்து விடுபட   Get rid of the wordly bondages
80   - கூட்டியவா! என்னைத் - நிலையான மனமகிழ்ச்சி நிலைத்திட   To perpetuate constant bliss
81   - அணங்கே! அணங்குகள் - நன்னடத்தை உண்டாக   Behave well
82   - அளியார் கமலத்தில் - மன ஒருமைப்பாடு அடைய   Achieve mental integrity
83   - விரவும் புதுமலர் - ஏவலர் பலர் உண்டாக   To have servants
84   - உடையாளை, ஒல்கு - தர்ம சங்கடங்கள் நீங்க   To get away from dharma embarrassments
85   - பார்க்கும் திசைதொறும் - துன்பங்கள் நீங்க   To get away from sufferingyou
86   - மாலயன் தேட, - ஆயுத பயம் நீங்க   Get rid of the fear of weapons
87   - மொழிக்கும், நினைவுக்கும் - செயற்கரிய செய்து புகழ் பெற   Get active and gain fame
88   - பரம் என்று - எப்போதும் அம்பிகை அருள் பெற   Always seek the grace of hope
89   - சிறக்கும் கமலத் - யோக சித்தி பெற   Get Yoga Siddhi
90   - வருந்தா வகைஎன்மனத் - கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க   Harmonious married life
91   - மெல்லிய நுண்ணிடை - அரசாங்கச் செயலில் வெற்றி பெற   To succeed in government action
92   - பதத்தே உருகி, - மனநிலை பக்குவமடைய   Maturity of mind
93   - நகையே இஃதிந்த - உள்ளத்தில் ஒளி உண்டாக   Let the light shine inside
94   - விரும்பித் தொழும் - மனநிலை தூய்மையாக   The mood is pure
95   - நன்றே வருகினும், - தூய மனநிலை பெற   To get pure mood
96   - கோமள வல்லியை - எங்கும் தலைமையும் புகழும் பெற   To gain leadership and fame everywhere
97   - ஆதித்தன், அம்புலி, - புகழும் அறமும் வளர   Grow in glory and virtue
98   - தைவந்து நின் - வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற   To seek protection from deceitful acts
99   - குயிலாய் இருக்கும் - அருள் உணர்வு வளர   Grow a sense of grace
100   - குழையைத் தழுவிய - அம்பிகையை மனத்தில் காண   To see goddess in our mind
101   - ஆத்தாளை, எங்கள் - நூற்பயன்  
0   கணபதி காப்பு  
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.

Back to Top
1   ஞானமும் நல்வித்தையும் பெற  
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

2   பிரிந்தவர் ஒன்று சேர  
துணையும் தொழுந்தெய்வமும், பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும், கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

3   குடும்பக் கவலையிலிருந்து விடுபட  
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறிந்தேன் நின்அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே.

4   உயர் பதவிகளை அடைய  
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

Back to Top
5   மனக்கவலை தீர  
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.

6   மந்திர சித்தி பெற  
சென்னியது உன்பொன் திருவடித் தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே.

7   மலையென வரும் துன்பம் பனியென நீங்க  
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

8   பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட  
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
கந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

Back to Top
9   அனைத்தும் வசமாக  
கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தன மூரலும், நீயும், அம்மே! வந்துஎன் முன்நிற்கவே.

10   மோட்ச சாதனம் பெற  
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பதுஉன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த் தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

11   இல்வாழ்க்கையில் இன்பம் பெற  
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வானந்த மான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

12   நெஞ்சம் தியானத்தில் நிலைபெற  
கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏதுஎன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.

Back to Top
13   வைராக்கிய நிலை எய்த  
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!

14   தலைமை பெற  
வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.

15   பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற  
தண்ணளிக் கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே.

16   முக்காலமும் உணரும் திறன் உண்டாக  
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்தொளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

Back to Top
17   நல்ல வரன் அமைய  
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதிசயமாக வன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

18   மரண பயம் நீங்க  
வவ்விய பாகத்திறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே.

19   பேரின்ப நிலையடைய  
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

20   வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக  
உறைகின்ற நின் திருக்கோயில்நின் கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சகமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

Back to Top
21   அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய  
மங்கலை! செங்கல செம்முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கைச்! சகல கலாமயில்! தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும்பெண் கொடியே.

22   இனிப் பிறவா நெறி அடைய  
கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்குவம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்துஆண்டு கொள்ளே.

23   எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க  
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது; அன்பர் கூட்டந் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.

24   நோய்கள் விலக  
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.

Back to Top
25   நினைத்த காரியம் நிறைவேற  
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.

26   சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக  
ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.

27   மனநோய் அகல  
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.

28   இம்மை மறுமை இன்பங்கள் அடைய  
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும்அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

Back to Top
29   அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெற  
சித்தியும், சித்தி தரும் தெய்வமும் ஆகித் திகழும் பரா
சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.

30   அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க  
அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டது அல்லவென்கை
நன்றே உனக்கு இனிநான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பலஉருவே! அருவே! என் உமையவளே!

31   மறுமையில் இன்பம் உண்டாக  
உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்துஇங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே.

32   அகால மரணமும் துர்மரணமும் வராமலிருக்க  
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லலற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!

Back to Top
33   இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க  
இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே!
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.

34   சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க  
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.

35   திருமணம் நிறைவேற  
திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கட் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.

36   பழைய வினைகள் வலிமை பெற  
பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
மருளே! மருளில் வரும்தெருளே என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!

Back to Top
37   நவமணிகளைப் பெற  
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விடஅரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!

38   வேண்டியதை வேண்டியவாறு அடைய  
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.

39   கருவிகளைக் கையாளும் வலிமை பெற  
ஆளுகைக்கு உன்தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
மீளுகைக்கு உன்தன் விழியின் கடையுண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!

40   பூர்வ புண்ணியம் பலன்தர  
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

Back to Top
41   நல்லடியார் நட்புப் பெற  
புண்ணியம் செய்தனமே மனமே! புதுப்பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கேவந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.

42   உலகினை வசப்படுத்த  
இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே.

43   தீமைகள் ஒழிய  
பரிபுரச் சீறடிப்! பாசாங்குசை! பஞ்சபாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

44   பேதபுத்தி நீங்க  
தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வமுண்டாக மெய்த்தொண்டு செய்தே.

Back to Top
45   உலகோர் பழியிலிருந்து விடுபட  
தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்திச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.

46   நல்நடத்தையோடு வாழ  
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; புதுநஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே!

47   யோகநிலை அடைய  
வாழும்படியொன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
வீழும்படியன்று, விள்ளும்படியன்று, வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

48   உடல் பற்று நீங்க  
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார் பின்னும் எய்துவரோ;
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

Back to Top
49   மரணத் துன்பம் இல்லாதிருக்க  
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பையடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய்;
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.

50   அம்பிகையை நேரில் காண  
நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

51   மோகம் நீங்க  
அரணம் பொருள் என்று அருள் ஒன்றிலாத அசுரர்தங்கள்
முரண்அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகிதன் அடியார்
மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.

52   இம்மையில் பெருஞ்செல்வம் அடைய  
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்புமுன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

Back to Top
53   பொய்யுணர்வு நீங்க  
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கிது போலும் தவமில்லையே.

54   கடன் தொல்லைகள் தீர  
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

55   விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்த  
மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற
அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு
முன்னாய் நடுவெங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே.

56   யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக  
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என்ஐயனுமே.

Back to Top
57   வறுமை ஒழிய  
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்றுபொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே.

58   மனஅமைதி பெற  
அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.

59   பிள்ளைகள் நல்லவர்களாக வளர  
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை; நீள் சிலையும்
அஞ்சம்பும் இக்குஅலராக நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சுஅஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

60   மெய்யுணர்வு பெற  
பாலினும் சொல்இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியேன் முடை நாய்த்தலையே?

Back to Top
61   மாயையை வெல்ல  
நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?
தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.

62   எத்தகைய அச்சமும் அகல  
தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கண் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்
செங்கைக் கரும்பும், மலரும் எப்போதும் என் சிந்தையதே.

63   அறிவு தெளிவோடு இருக்க  
தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில்கொட்டும் தறி குறிக்கும்; சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.

64   பக்தி பெருக  
வீணே பலிகவர் தெய்வங்கள் பால்சென்று மிக்க அன்பு
பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.

Back to Top
65   மகப்பேறு அடைய  
ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கிருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ? வல்லி நீசெய்த வல்லபமே!

66   கவிஞராக  
வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.

67   பகைவர்கள் அழிய  
தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம்
கோத்திரம், கல்வி, குணம்குன்றி நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்குழலா நிற்பர் பாரெங்குமே.

68   நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக  
பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,
ஊரும் முருகு சுவையொளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே.

Back to Top
69   சகல சௌபாக்கியங்களும் அடைய  
தனம்தரும்; கல்விதரும்; ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும்; தெய்வ வடிவுந் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

70   கலைகளில் சித்தி பெற  
கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம் பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

71   மனக்குறைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெற  
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கென் குறையே!

72   பிறவிப் பிணி தீர  
என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார்குறை காண்; இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?
தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.

Back to Top
73   குழந்தைப் பேறு உண்டாக  
தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த
சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே.

74   தொழிலில் மேன்மை அடைய  
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்
பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும் பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

75   விதியை வெல்ல  
தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில்; தாயரின்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்
பொங்குவர் ஆழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

76   தனக்கு உரிமையானதைப் பெற  
குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.

Back to Top
77   பகை அச்சம் நீங்க  
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகியென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.

78   சகல செல்வங்களையும் அடைய  
செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி! அணிதரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.

79   கட்டுகளில் இருந்து விடுபட  
விழிக்கே அருளுண்டு; அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே.

80   நிலையான மனமகிழ்ச்சி நிலைத்திட  
கூட்டியவா! என்னைத் தன் னடியாரில் கொடியவினை
ஓட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!
ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே.

Back to Top
81   நன்னடத்தை உண்டாக  
அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனதுஉனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.

82   மன ஒருமைப்பாடு அடைய  
அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுதொறும்
களியாகி, அந்தக் கரணங்கள் விம்மிக், கரைபுரண்டு,
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே.

83   ஏவலர் பலர் உண்டாக  
விரவும் புதுமலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.

84   தர்ம சங்கடங்கள் நீங்க  
உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத், தயங்கும் நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

Back to Top
85   துன்பங்கள் நீங்க  
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,
வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே.

86   ஆயுத பயம் நீங்க  
மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்;
பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே.

87   செயற்கரிய செய்து புகழ் பெற  
மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படியொரு பாகம் கொண்டாளும் பராபரையே.

88   எப்போதும் அம்பிகை அருள் பெற  
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன்பத்தருக்குள்
தரமன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர்தம்
புரம்அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே!

Back to Top
89   யோக சித்தி பெற  
சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து உடம்போடு உயிர்உற வற்றறிவு
மறக்கும் பொழுதென் முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.

90   கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க  
வருந்தா வகைஎன்மனத் தாமரையினில் வந்துபுதுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

91   அரசாங்கச் செயலில் வெற்றி பெற  
மெல்லிய நுண்ணிடை மின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழுமடி யாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே.

92   மனநிலை பக்குவமடைய  
பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம்பற்றி, உன்றன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்;
முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே.

Back to Top
93   உள்ளத்தில் ஒளி உண்டாக  
நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம்பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை; மானே முதுகண்; முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது; நாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

94   மனநிலை தூய்மையாக  
விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பித், ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து,
சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம்நன்றே.

95   தூய மனநிலை பெற  
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!

96   எங்கும் தலைமையும் புகழும் பெற  
கோமள வல்லியை அல்லியந் தாமரைக்கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே.

Back to Top
97   புகழும் அறமும் வளர  
ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

98   வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற  
தைவந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும், தலைவந்த ஆறும் கரந்ததெங்கே?
மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகலறியா மடப் பூங்குயிலே.

99   அருள் உணர்வு வளர  
குயிலாய் இருக்கும் கடம்படாவியிடை; கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத் திடை; வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீதன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.

100   அம்பிகையை மனத்தில் காண  
குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கரும்புவில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும்; வெண்ணகையும்,
உழையைப் பொருக்கண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.

Back to Top
101   நூற்பயன்  
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்கக்
காத்தாளை அங்குச பாசாங் குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!



Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

abirami anthathi