| sivasiva.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
| Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
| Thirumurai |
|
1.086
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொட்டும் பறை சீரால் குழும, குறிஞ்சி (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Ctmd0yeKnNY |
|
2.057
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெண் அமரும் திருமேனி உடையீர்! காந்தாரம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=TrwOWvAU8jY |
|
3.083
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்டு இரிய விண்ட மலர் சாதாரி (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=iwK0iw8HAuM |
|
3.125
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல் ஊர்ப் பெரு மணம் அந்தாளிக்குறிஞ்சி (திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) சிவலோகத்தியாகேசர் நங்கையுமைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=28Azl8Dg42c |
|
4.097
திருநாவுக்கரசர்
தேவாரம்
அட்டுமின், இல் பலி! என்று திருவிருத்தம் (திருநல்லூர் சிவக்கொழுந்தீசுவரர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=6_bUKILqIFE |
|
6.014
திருநாவுக்கரசர்
தேவாரம்
நினைந்து உருகும் அடியாரை நைய திருத்தாண்டகம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=S9-5_R-n1R0 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.086  
கொட்டும் பறை சீரால் குழும,
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு பெரியாண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
|
கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி, நட்டம் பயின்று ஆடும் நல்லூர்ப் பெருமானை முட்டு இன்று இருபோதும், முனியாது எழுந்து, அன்பு- பட்ட மனத்தார்கள் அறியார், பாவமே. | [1] |
|
ஏறில் எருது ஏறும், எழில் ஆயிழையோடும் வேறும் உடனுமாம், விகிர்தர் அவர் என்ன, நாறும் மலர்ப் பொய்கை நல்லூர்ப் பெருமானைக் கூறும் அடியார்கட்கு அடையா, குற்றமே. | [2] |
|
சூடும் இளந்திங்கள் சுடர் பொன்சடை தாழ, ஓடு உண்கலன் ஆக, ஊர் ஊர் இடு பிச்சை நாடும் நெறியானை, நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியார்கட்கு அடையா, பாவமே. | [3] |
|
நீத்த நெறியானை, நீங்காத் தவத்தானை, நாத்த நெறியானை, நல்லூர்ப் பெருமானை, காத்த நெறியானை, கைகூப்பித் தொழுது ஏத்தும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே. | [4] |
|
ஆகத்து உமைகேள்வன், அரவச் சடை தாழ நாகம் அசைத்தானை, நல்லூர்ப் பெருமானை, தாகம் புகுந்து அண்மி, தாள்கள் தொழும் தொண்டர் போகம் மனத்தராய், புகழத் திரிவாரே. | [5] |
|
கொல்லும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச, நல்ல நெறியானை, நல்லூர்ப் பெருமானை, செல்லும் நெறியானை, சேர்ந்தார் இடர் தீர, சொல்லும் அடியார்கள் அறியார், துக்கமே. | [6] |
|
எங்கள் பெருமானை, இமையோர் தொழுது ஏத்தும் நங்கள் பெருமானை, நல்லூர் பிரிவு இல்லா, தம் கை தலைக்கு ஏற்றி, ஆள் என்று அடிநீழல் தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே. | [7] |
|
காமன் எழில் வாட்டி, கடல் சூழ் இலங்கைக் கோன் நாமம் இறுத்தானை, நல்லூர்ப் பெருமானை, ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர் தீபமனத்தார்கள்; அறியார், தீயவே. | [8] |
|
வண்ண மலரானும் வையம் அளந்தானும் நண்ணல் அரியானை, நல்லூர்ப் பெருமானை, தண்ணமலர் தூவித் தாள்கள் தொழுது ஏத்த எண்ணும் அடியார்கட்கு இல்லை, இடுக்கணே. | [9] |
|
பிச்சக்குடை நீழல் சமணர், சாக்கியர், நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை, நச்சுமிடற்றானை, நல்லூர்ப் பெருமானை, எச்சும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே. | [10] |
|
தண்ணம்புனல் காழி ஞானசம்பந்தன், நண்ணும் புனல் வேலி நல்லூர்ப் பெருமானை, வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார் விண்ணும் நிலனும் ஆய் விளங்கும் புகழாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.057  
பெண் அமரும் திருமேனி உடையீர்!
பண் - காந்தாரம் (திருத்தலம் திருநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு பெரியாண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
|
பெண் அமரும் திருமேனி உடையீர்! பிறங்கு சடை தாழப் பண் அமரும் நால்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்! திண் அமரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர், மண் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. | [1] |
|
அலை மல்கு தண்புனலும் பிறையும் சூடி, அங்கையில் கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும் கொள்கையீர்! சிலை மல்கு வெங்கணையால் புரம் மூன்றும் எரித்தீர்! திரு நல்லூர், மலை மல்கு கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. 2 | [2] |
|
குறை நிரம்பா வெண்மதியம் சூடிக் குளிர்புன்சடை தாழ, பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணிப் பயில்கின்றீர்! சிறை நவின்ற தண்புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர், மறை நவின்ற கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. | [3] |
|
கூன் அமரும் வெண்பிறையும் புனலும் சூடும் கொள்கையீர்! மான் அமரும் மென்விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர்! தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர், வான் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. | [4] |
|
நிணம் கவரும் மூவிலையும் அனலும் ஏந்தி, நெறிகுழலாள அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர்! திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி, திரு நல்லூர், மணம் கமழும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. | [5] |
|
கார் மருவு பூங்கொன்றை சூடிக் கமழ் புன்சடை தாழ, வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர்! தேர் மருவு நெடுவீத்க் கொடிகள் ஆடும் திரு நல்லூர், ஏர் மருவு கோயிலே கோயில் ஆக இருந்தீரே. 6 | [6] |
|
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி, உமை காண, மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர்! தேன் தோயும் பைம்பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர், வான் தோயும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. | [7] |
|
காது அமரும் வெண்குழையீர்! கறுத்த அரக்கன் மலை எடுப்ப, மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு உகந்தீர்! தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர், மாது அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. | [8] |
|
போதின் மேல் அயன், திருமால், போற்றி உம்மைக் காணாது நாதனே இவன் என்று நயந்து ஏத்த, மகிழ்ந்து அளித்தீர்! தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர், மாதராள் அவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே. | [9] |
|
பொல்லாத சமணரொடு புறம் கூறும் சாக்கியர் ஒன்று அல்லாதார் அற உரை விட்டு, அடியார்கள் போற்று ஓவா நல்லார்கள், அந்தணர்கள், நாளும் ஏத்தும் திரு நல்லூர், மல் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. | [10] |
|
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு &குலவேந்தன் செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர், பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்தன்னைப் பயில் பாடல் சிந்தனையால் உரை செய்வார், சிவலோகம் சேர்ந்து இருப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.083  
வண்டு இரிய விண்ட மலர்
பண் - சாதாரி (திருத்தலம் திருநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு பெரியாண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
|
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ, விடை ஏறி, பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே நண்டு இரிய, நாரை இரை தேர, வரைமேல் அருவி முத்தம் தெண்திரைகள் மோத, விரி போது கமழும் திரு நலூரே. | [1] |
|
பல் வளரும் நாகம் அரை யாத்து, வரைமங்கை ஒருபாகம் மல் வளர் புயத்தில் அணைவித்து, மகிழும் பரமன் இடம் ஆம் சொல் வளர் இசைக்கிளவி பாடி மடவார் நடம் அது ஆட, செல்வ மறையோர்கள் முறை ஏத்த, வளரும் திரு நலூரே. | [2] |
|
நீடு வரை மேரு வில் அது ஆக, நிகழ் நாகம், அழல் அம்பால் கூடலர்கள் மூ எயில் எரித்த குழகன்; குலவு சடைமேல் ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன்; இடம் ஆம் சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே. | [3] |
|
கருகு புரி மிடறர், கரிகாடர், எரி கை அதனில் ஏந்தி, அருகு வரு கரியின் உரி-அதளர், பட அரவர், இடம் வினவில் முருகு விரி பொழிலின் மணம் நாற, மயில் ஆல, மரம் ஏறித் திருகு சின மந்தி கனி சிந்த, மது வார் திரு நலூரே. | [4] |
|
பொடி கொள் திரு மார்பர்; புரி நூலர்; புனல் பொங்கு அரவு தங்கும் முடி கொள் சடை தாழ, விடை ஏறு முதலாளர் அவர்; இடம் ஆம் இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய்தொழிலாளர் விழ மல்க, செடி கொள் வினை அகல, மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே. | [5] |
|
புற்று அரவர்; நெற்றி ஒர் கண்; ஒற்றை விடை ஊர்வர்; அடையாளம் சுற்றம் இருள் பற்றிய பல்பூதம் இசை பாட, நசையாலே கற்ற மறை உற்று உணர்வர்; பற்றலர்கள் முற்றும் எயில் மாளச் செற்றவர்; இருப்பு இடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே. | [6] |
|
பொங்கு அரவர், அங்கம் உடல்மேல் அணிவர்; ஞாலம் இடு பிச்சை, தம் கரவம் ஆக உழிதந்து, மெய் துலங்கிய வெண் நீற்றர்; கங்கை, அரவம், விரவு திங்கள், சடை அடிகள்; இடம் வினவில் செங்கயல் வதிக் குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே. | [7] |
|
ஏறு புகழ் பெற்ற தென் இலங்கையவர் கோனை அரு வரையில் சீறி, அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும் கூறும் அடியார்கள் இசை பாடி, வலம் வந்து, அயரும் அருவிச் சேறு கமர் ஆன அழியத் திகழ்தரும் திரு நலூரே. | [8] |
|
மாலும் மலர்மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய கோலம் உடையான், உணர்வு கோது இல் புகழான், இடம் அது ஆகும் நாலுமறை, அங்கம் முதல் ஆறும், எரி மூன்றுதழல் ஓம்பும் சீலம் உடையார்கள் நெடுமாடம் வளரும் திரு நலூரே. | [9] |
|
கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர் பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள், வேடம் அவை பாரேல்! ஏறு மடவாளொடு இனிது ஏறி, முன் இருந்த இடம் என்பர் தேறும் மன வாரம் உடையார் குடி செயும் திரு நலூரே. | [10] |
|
திரைகள் இருகரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர்மேல் பரசு தரு பாணியை, நலம் திகழ் செய் தோணிபுர நாதன்- உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன்-இசை மாலை மொழிவார், போய், விரை செய் மலர் தூவ, விதி பேணு கதிபேறு பெறுவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.125  
கல் ஊர்ப் பெரு மணம்
பண் - அந்தாளிக்குறிஞ்சி (திருத்தலம் திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) ; (திருத்தலம் அருள்தரு நங்கையுமைநாயகியம்மை உடனுறை அருள்மிகு சிவலோகத்தியாகேசர் திருவடிகள் போற்றி )
சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் என்பாரின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். நல்லூர் மணவிழா வினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய நாளில் தோணிபுரத் தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து போற்றினார். உறவினர் கள் வேண்டக் கோயிலின் பக்கத்தே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தித் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நன்னீரை உட்கொண்டு அனைவர் மேலும் தெளித்து, ஞான சம்பந்தரை நோக்கி யான் பெற்ற அருநிதிப் பாவையை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன் என உரைத்தார். மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்பால் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். ஞானசம்பந்தர் காதலியாரைக் கைப்பற்றித் தீவலம் வரும்போது விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்னும் நினைவினராய் இருவினைக்கு வித்தாகிய இந்த இல்லறம் நம்மைச் சூழ்ந்து கொண்டதே இனி இவளோடும் அந்தமில் சிவன்தாளை அடைவோம் என உறுதி கொண்டு திருப்பெருமணக் கோயிலை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று கல்லூர்ப் பெருமணம் வேண்டா எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
|
கல் ஊர்ப் பெரு மணம் வேண்டா கழுமலம் பல் ஊர்ப் பெரு மணம் பாட்டு மெய் ஆய்த்தில? சொல் ஊர்ப் பெரு மணம் சூடலரே! தொண்டர் நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே! | [1] |
|
தரு மணல் ஓதம் சேர் தண்கடல் நித்திலம் பரு மணலாக் கொண்டு, பாவை நல்லார்கள், வரும் மணம் கூட்டி, மணம் செயும் நல்லூர்ப்- பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே! | [2] |
|
அன்பு உறு சிந்தையராகி, அடியவர் நன்பு உறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று, இன்பு உறும் எந்தை இணை அடி ஏத்துவார் துன்பு உறுவார் அல்லர்; தொண்டு செய்தாரே. | [3] |
|
வல்லியந்தோல் உடை ஆர்ப்பது; போர்ப்பது கொல் இயல் வேழத்து உரி; விரி கோவணம் நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம் புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே. | [4] |
|
ஏறு உகந்தீர்; இடுகாட்டு எரி ஆடி, வெண்- நீறு உகந்தீர்; நிரை ஆர் விரி தேன் கொன்றை நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம் வேறு உகந்தீர்! உமை கூறு உகந்தீரே! | [5] |
|
சிட்டப்பட்டார்க்கு எளியான், செங்கண் வேட்டுவப்- பட்டம் கட்டும் சென்னியான், பதி ஆவது நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானீரே! | [6] |
|
மேகத்த கண்டன், எண்தோளன், வெண் நீற்று உமை பாகத்தன், பாய் புலித்தோலொடு பந்தித்த நாகத்தன்-நல்லூர்ப்பெருமணத்தான்; நல்ல போகத்தன், யோகத்தையே புரிந்தானே. | [7] |
|
தக்கு இருந்தீர்! அன்று தாளால் அரக்கனை உக்கு இருந்து ஒல்க உயர்வரைக்கீழ் இட்டு நக்கு இருந்தீர்; இன்று நல்லூர்ப்பெருமணம் புக்கு இருந்தீர்! எமைப் போக்கு அருளீரே! | [8] |
|
ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை மாலும் தம் மாண்பு அறிகின்றிலர்; மாமறை- நாலும் தம் பாட்டு என்பர்; நல்லூர்ப்பெருமணம்- போலும், தம் கோயில் புரிசடையார்க்கே. | [9] |
|
ஆதர் அமணொடு, சாக்கியர், தாம் சொல்லும் பேதைமை கேட்டுப் பிணக்கு உறுவீர்! வம்மின்! நாதனை, நல்லூர்ப்பெருமணம் மேவிய வேதன, தாள் தொழ, வீடு எளிது ஆமே. | [10] |
|
நறும்பொழில் காழியுள் ஞானசம்பந்தன், பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை, உறும் பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு அறும், பழி பாவம்; அவலம் இலரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.097  
அட்டுமின், இல் பலி! என்று
பண் - திருவிருத்தம் (திருத்தலம் திருநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சிவக்கொழுந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
|
அட்டுமின், இல் பலி! என்று என்று அகம் கடைதோறும் வந்து, மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்கொலோ?- கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும் நட்டம் நின்று ஆடிய நாதர், நல்லூர் இடம் கொண்டவரே. | [1] |
|
பெண் இட்டம் பண்டையது அன்று; இவை பெய் பலிக்கு என்று உழல்வார் நண்ணிட்டு, வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே பண் இட்ட பாடலர் ஆடலராய்ப் பற்றி, நோக்கி நின்று, கண்ணிட்டு, போயிற்றுக் காரணம் உண்டு-கறைக்கண்டரே. | [2] |
|
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர்! பகலே ஒருவர் இடுவார் இடைப் பலி கொள்பவர் போல வந்து, இல் புகுந்து, நடவார்; அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்கொலோ? வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ் பதியே. | [3] |
|
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்து அனைய, நஞ்சு அணி கண்டன், நல்லூர் உறை நம்பனை, நான் ஒரு கால் துஞ்சு இடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன் தான் நெஞ்சு இடை நின்று அகலான், பலகாலமும் நின்றனனே. | [4] |
|
வெண்மதி சூடி விளங்க நின்றானை, விண்ணோர்கள் தொழ; நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே திண் நிலயம் கொடு நின்றான்; திரி புரம் மூன்று எரித்தான்; கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள, கழல்சேவடியே. | [5] |
|
தேற்றப்படத் திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால் தோற்றப்படச் சென்று கண்டுகொள்ளார், தொண்டர், துன்மதியால்; ஆற்றில் கெடுத்துக் குளத்தினில்-தேடிய ஆதரைப் போல் காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர், காண்பதற்கே. | [6] |
|
நாள் கொண்ட தாமரைப்பூத் தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே கீள் கொண்ட கோவணம் கா! என்று சொல்லிக் கிறிபடத் தான் வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ, இவ் அகலிடமே? | [7] |
|
அறை மல்கு பைங்கழல் ஆர்க்க நின்றான்; அணி ஆர் சடைமேல் நறை மல்கு கொன்றை அம்தார் உடையானும்; நல்லூர் அகத்தே மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகிப் பரிசு அழித்தான்- பிறை மல்கு செஞ்சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே. | [8] |
|
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த, மருவி என்றும் துன்னிய தொண்டர்கள் இன் இசை பாடித் தொழுது, நல்லூர்க் கன்னியர் தாமும் கனவு இடை உன்னிய காதலரை, அன்னியர் அற்றவர், அங்கணனே, அருள் நல்கு! என்பரே. | [9] |
|
திரு அமர் தாமரை, சீர் வளர் செங்கழுநீர், கொள் நெய்தல், குரு அமர் கோங்கம், குரா, மகிழ், சண்பகம், கொன்றை, வன்னி, மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர் உரு அமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே. | [10] |
|
செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும் வல்லேன், புகவும்; மதில் சூழ் இலங்கையர் காவலனைக் கல் ஆர் முடியொடு தோள் இறச் செற்ற கழல் அடியான், நல்லூர் இருந்த பிரான் அல்லனோ, நம்மை ஆள்பவனே? | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.014  
நினைந்து உருகும் அடியாரை நைய
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு பெரியாண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
திருவடி தீகை்ஷக்கு நல்லூருக்கு வருக என்று அருளிச் செய்தார். அவ்வருள் வாக்குக் கேட்ட அப்பர் அடிகள் மகிழ்ந்து நன்மை பெருகும் அருள் வழியே, நல்லூரை அடைந்து பெருமானை வணங்கி எழுந்தார். நினைப்பதனை முடிக் கின்றோம் என்று அருளி அப்பரடிகள் திருமுடிமேல் பெருமான் திருவடி சூட்டியருளினான். நினைந்துருகும் அடியாரை என்று தொடங்கி இறை அருளை வியந்து நனைந்தனைய திருவடி என்றலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமான் என்றுபாடிப் பரவி மகிழ்ந்து பலநாள் அங்குத் தங்கிச் சிவதல தரிசனங்கள் பலவும் செய்து இன்புற்றார்.
இறைவனது திருவடி கான, தீக்க்ஷை பெற
|
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்; நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்; சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்; செழு மதியின்தளிர் வைத்தார்; சிறந்து வானோர்- இனம் துருவி, மணி மகுடத்து ஏற, துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய்ப் பில்கி நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. | [1] |
|
பொன் நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்; புலி உரியின் அதள் வைத்தார்; புனலும் வைத்தார்; மன் நலத்த திரள் தோள்மேல் மழுவாள் வைத்தார்; வார் காதில் குழை வைத்தார்; மதியும் வைத்தார்; மின் நலத்த நுண் இடையாள் பாகம் வைத்தார்; வேழத்தின் உரி வைத்தார்; வெண்நூல் வைத்தார்; நல்-நலத்த திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. | [2] |
|
தோடு ஏறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்; துன் எருக்கின்வடம் வைத்தார்; துவலை சிந்த, பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார்; பனிமத்தமலர் வைத்தார்; பாம்பும் வைத்தார்; சேடு ஏறு திருநுதல் மேல் நாட்டம் வைத்தார்; சிலை வைத்தார்; மலை பெற்ற மகளை வைத்தார்; நாடு ஏறு திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. | [3] |
|
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி, விரிசடைமேல் அருவி வைத்தார்; கல் அருளி வரிசிலையா வைத்தார்; ஊராக் கயிலாயமலை வைத்தார்; கடவூர் வைத்தார்; சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார்; சுடுசுடலைப் பொடி வைத்தார்; துறவி வைத்தார்; நல் அருளால்-திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. | [4] |
|
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார்; வினை, தொழுவார்க்கு, அற வைத்தார்; துறவி வைத்தார்; கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார்; கடிக்கமலம் மலர் வைத்தார்; கயிலை வைத்தார்; திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார்; திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி நண்ண(அ)அரிய திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. | [5] |
|
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்; உயிர் வைத்தார்; உயிர் செல்லும் கதிகள் வைத்தார்; மற்று அமரர்கணம் வைத்தார்; அமரர் காணாமறை வைத்தார்; குறைமதியம் வளர வைத்தார்; செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார்; துறவி வைத்தார்; நல்-தவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. | [6] |
|
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார்; மணி முடிமேல் அர வைத்தார்; அணி கொள் மேனி நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார்; நெற்றிமேல் கண் வைத்தார்; நிலையம் வைத்தார்; ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார்; ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார்; நாறு மலர்த்திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. | [7] |
|
குலங்கள் மிகு மலை, கடல்கள், ஞாலம், வைத்தார்; குரு மணி சேர் அர வைத்தார்; கோலம் வைத்தார்; உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்; உண்டு அருளி விடம் வைத்தார்; எண்தோள் வைத்தார்; நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார்; நிமிர் விசும்பின் மிசை வைத்தார்; நினைந்தார் இந் நாள் நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. | [8] |
|
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார்; திசைபத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார்; நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார்; நிறை தவமும் மறை பொருளும் நிலவ வைத்தார்; கொன்று அருளி, கொடுங் கூற்றம் நடுங்கி ஓட, குரைகழல்சேவடி வைத்தார்; விடையும் வைத்தார்; நன்று அருளும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. | [9] |
|
பாம்பு உரிஞ்சி, மதி கிடந்து, திரைகள் ஏங்க, பனிக் கொன்றை சடை வைத்தார்; பணி செய் வானோர் ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார்; அடு சுடலைப் பொடி வைத்தார்; அழகும் வைத்தார்; ஓம்ப(அ)அரிய வல்வினை நோய் தீர வைத்தார்; உமையை ஒருபால் வைத்தார்; உகந்து வானோர், நாம், பரவும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. | [10] |
|
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார்; குரு மணி சேர் மலை வைத்தார்; மலையைக் கையால் உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒருவிரலால் உற வைத்தார்; இறைவா! என்று புலம்புதலும், அருளொடு போர் வாளும் வைத்தார்; புகழ் வைத்தார்; புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்; நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. | [11] |