சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செப்பம் நெஞ்சே, நெறி கொள்!
பண் - தக்கராகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ZZu2txUJeng
4.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய் விராம் மேனி தன்னைப்
பண் - திருநேரிசை:கொல்லி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=Aa6ZjiSja28
4.085   திருநாவுக்கரசர்   தேவாரம்   காலை எழுந்து, கடிமலர் தூயன
பண் - திருவிருத்தம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=Ja2zArm5ffk
5.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
பண் - நாட்டைக்குறிஞ்சி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=56rtMguGQ7s
6.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்
பண் - திருத்தாண்டகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=QksZ4vO04UU
7.094   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
பண் - கௌசிகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=k0dLDNxuICw

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.028   செப்பம் நெஞ்சே, நெறி கொள்!  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )
செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம்
துப்பன் என்னாது, அருளே துணை ஆக,
ஒப்பர் ஒப்பர் பெருமான், ஒளி வெண் நீற்று
அப்பர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[1]
பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி,
தோலும் நூலும் துதைந்த வரைமார்பர்,
மாலும் சோலை புடை சூழ் மடமஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[2]
செய்யர், செய்யசடையர், விடை ஊர்வர்,
கை கொள் வேலர், கழலர், கரிகாடர்,
தையலாள் ஒரு பாகம் ஆய எம்
ஐயர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[3]
பிணி கொள் ஆக்கை ஒழிய, பிறப்பு உளீர்!
துணி கொள் போரார், துளங்கும் மழுவாளர்,
மணி கொள் கண்டர், மேய வார் பொழில்
அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[4]
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து,
மறையும் ஓதி, மயானம் இடம் ஆக
உறையும் செல்வம் உடையார், காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[5]
துடிகளோடு முழவம் விம்மவே,
பொடிகள் பூசி, புறங்காடு அரங்கு ஆக,
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும்
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[6]
சாடிக் காலன் மாள, தலைமாலை
சூடி, மிக்குச் சுவண்டு ஆய் வருவார், தாம்
பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து
ஆடி, சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[7]
பெண் ஓர்பாகம் உடையார், பிறைச் சென்னிக்
கண் ஓர்பாகம் கலந்த நுதலினார்,
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[8]
தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழல் ஆய் ஓங்கி அருள்கள் செய்தவன்,
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம்
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[9]
கோது சாற்றித் திரிவார், அமண் குண்டர்,
ஓதும் ஓத்தை உணராது எழு, நெஞ்சே!
நீதி நின்று நினைவார் வேடம் ஆம்
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[10]
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்
சிந்தை செய்ம்மின், அடியர் ஆயினீர்!
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்த ஆறே புனைதல் வழிபாடே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.041   பொய் விராம் மேனி தன்னைப்  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )
பொய் விராம் மேனி தன்னைப் பொருள் எனக் காலம் போக்கி
மெய் விராம் மனத்தன் அல்லேன்; வேதியா! வேத நாவா!
ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப் போனேன்
செய் வரால் உகளும் செம்மைத் திருச் சோற்றுத் துறையனாரே!

[1]
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா;
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை-
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடிச்
சிட்டராய் அருள்கள் செய்வார், திருச் சோற்றுத் துறையனாரே.

[2]
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும்!
பல் இல் வெண்தலை கை ஏந்திப் பல் இலம் திரியும் செல்வர்
சொல்லும் நன்பொருளும் ஆவார்-திருச் சோற்றுத் துறையனாரே.

[3]
கறையராய்க் கண்டம், நெற்றிக் கண்ணராய், பெண் ஓர் பாகம்
இறையராய், இனியர் ஆகி, தனியராய், பனி வெண் திங்கள்-
பிறையராய், செய்த எல்லாம் பீடராய், கேடு இல் சோற்றுத்-
துறையராய், புகுந்து என் உள்ளச் சோர்வு கண்டு அருளினாரே.

[4]
பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்;
எந்தையே! ஏகமூர்த்தி! என்று நின்று ஏத்தமாட்டேன்;
பந்தம் ஆய், வீடும் ஆகி, பரம்பரம் ஆகி, நின்று
சிந்தையுள்-தேறல் போலும்-திருச் சோற்றுத் துறையனாரே.

[5]
பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்று மின், பேதை பங்கன்
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் திற(ம்)மே!
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத்
தீர்த்தம் ஆய்ப் போத விட்டார், திருச் சோற்றுத் துறையனாரே.

[6]
கொந்து ஆர் பூங் குழலினாரைக் கூறியே காலம் போன,
எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது; அந்தோ!
முந்து அரா அல் குலாளை உடன் வைத்த ஆதிமூர்த்தி,
செந் தாது புடைகள் சூழ்ந்த திருச் சோற்றுத் துறையனாரே.

[7]
அம் கதிரோன் அவ(ன்)னை அண்ணலாக் கருத வேண்டா;
வெங் கதிரோன் வழீயே போவதற்கு அமைந்து கொண் மின்!
அம் கதிரோன் அவ(ன்)னை உடன் வைத்த ஆதிமூர்த்தி-
செங் கதிரோன் வணங்கும் திருச் சோற்றுத் துறையனாரே.

[8]
ஓதியே கழிக்கின்றீர்கள்; -உலகத்தீர்!-ஒருவன் தன்னை
நீதியால் நினைக்க மாட்டீர்; நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான் முக(ன்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதி ஆய்ச் சுடர் அது ஆனார்-திருச் சோற்றுத் துறையனாரே.

[9]
மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றது ஓர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்று மின்கள்!
கற்று வந்து அரக்கன் ஓடிக் கயிலாய மலை எடுக்க,
செற்று உகந்து அருளிச் செய்தார்-திருச் சோற்றுத் துறையனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.085   காலை எழுந்து, கடிமலர் தூயன  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )
காலை எழுந்து, கடிமலர் தூயன தாம் கொணர்ந்து
மேலை அமரர் விரும்பும் இடம்-விரையான் மலிந்த
சோலை மணம் கமழ்-சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
மாலை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

[1]
வண்டு அணை கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும்,
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான், குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடைமேல்
வெண் தலை மாலை அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

[2]
அளக்கும் நெறியினன், அன்பர்கள் தம் மனத்து ஆய்ந்து கொள்வான்,
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர் கோன்,
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
திளைக்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

[3]
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு, மால்விடை ஏறி, எங்கும்
பேர்ந்த கை மான், நடம் ஆடுவர்; பின்னு சடை இடையே
சேர்ந்த கைம் மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார்
ஏந்து கைச் சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே!

[4]
கூற்றைக் கடந்ததும், கோள் அரவு ஆர்த்ததும், கோள் உழுவை
நீற்றில்-துதைந்து திரியும் பரிசு அதும், நாம் அறியோம்;
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும்,
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே.

[5]
வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும், வானவர் வந்து இறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார்
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே!

[6]
ஆயம் உடையது நாம் அறிவோம்; அரணத்தவரைக்
காயக் கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான்,
தூய வெண் நீற்றினன், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
பாயும் வெண் நீர்த்திரைக் கங்கை எம்மானுக்கு அழகியதே!

[7]
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை
உண்டும் அதனை ஒடுக்க வல்லான், மிக்க உம்பர்கள் கோன்,
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இண்டை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

[8]
கடல் மணிவண்ணன், கருதிய நான்முகன் தான், அறியான்;
விடம் அணி கண்டம் உடையவன்; தான் எனை ஆள் உடையான்;
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார்; சடை மேல்
படம் மணி நாகம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

[9]
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரியக்
கலங்க விரலினால் ஊன்றி அவனைக் கருத்து அழித்த
துலங்கல் மழுவினான், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இலங்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?


[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.033   கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,  
பண் - நாட்டைக்குறிஞ்சி   (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார்,
தொல்லைஊழியர், சோற்றுத்துறையர்க்கே
வல்லை ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

[1]
முத்தி ஆக ஒரு தவம் செய்திலை;
அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை;
தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே
பத்திஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

[2]
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற,
தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே
பட்டிஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

[3]
ஆதியான், அண்டவாணர்க்கு அருள் நல்கும்
நீதியான் என்றும், நின்மலனே என்றும்,
சோதியான் என்றும், சோற்றுத்துறையர்க்கே
வாதி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

[4]
ஆட்டினாய், அடியேன் வினை ஆயின
ஓட்டினாய்; ஒரு காதில் இலங்கு வெண்
தோட்டினாய் என்று சோற்றுத்துறையர்க்கே
நீட்டி நீ பணி செய், மட நெஞ்சமே!

[5]
பொங்கி நின்று எழுந்த(க்) கடல் நஞ்சினைப்
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ? சொலாய்!
தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்குத்
தங்கி நீ பணி செய், மட நெஞ்சமே!

[6]
ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்;
ஏணி போல் இழிந்து ஏறியும், ஏங்கியும்,
தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே
பூணி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

[7]
பெற்றம் ஏறில் என்? பேய் படை ஆகில் என்?
புற்றில் ஆடு அரவே அது பூணில் என்?
சுற்றி நீ, என்றும் சோற்றுத்துறையர்க்கே
பற்றி, நீ பணி செய், மட நெஞ்சமே!

[8]
அல்லியான், அரவுஐந்தலை நாக(அ)அணைப்-
பள்ளியான், அறியாத பரிசு எலாம்
சொல்லி, நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே
புல்லி, நீ பணி செய், மட நெஞ்சமே!

[9]
மிண்டரோடு விரவியும் வீறு இலாக்
குண்டர் தம்மைக் கழிந்து உய்யப் போந்து, நீ
தொண்டு செய்து, என்றும் சோற்றுத்துறையர்க்கே
உண்டு, நீ பணி செய், மட நெஞ்சமே!

[10]
வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்தனை
ஆழ்ந்து போய் அலற(வ்) விரல் ஊன்றினான்,
சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே
தாழ்ந்து நீ பணி செய், மட நெஞ்சமே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.044   மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால் எல்லாம் படைக்கின்றானே!
ஏத்து அவனாய் ஏழ் உலகும் ஆயினானே! இன்பனாய்த் துன்பம் களைகின்றானே!
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே! கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

[1]
தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே! தத்துவனாய்ச் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே!
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே! நின்று உணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த
கொலையவனே! கொல் யானைத் தோல் மேல் இட்ட கூற்றுவனே! கொடி மதில்கள் மூன்றும் எய்த
சிலையவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

[2]
முற்றாத பால் மதியம் சூடினானே! முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே!
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே! உலகு ஓம்பும் ஒண்சுடரே! ஓதும் வேதம்,
கற்றானே, எல்லாக் கலைஞான(ம்)மும்! கல்லாதேன் தீவினை நோய் கண்டு போகச்
செற்றானே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

[3]
கண்ணவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே! காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே!
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள் செய்வானே! வேதனாய் வேதம் விரித்திட்டானே!
எண்ணவனே! எண்ணார் புரங்கள் மூன்றும் இமையாமுன் எரி கொளுவ நோக்கி நக்க
திண்ணவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ்   ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

[4]
நம்பனே! நால் மறைகள் ஆயினானே! நடம் ஆட வல்லானே! ஞானக்கூத்தா!
கம்பனே! கச்சி மா நகர் உளானே! கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே! அளவு இலாப் பெருமையானே! அடியார்கட்கு ஆர் அமுதே! ஆன் ஏறு ஏறும்
செம்பொனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

[5]
ஆர்ந்தவனே! உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே! அளவு இலாப் பெருமையானே!
கூர்ந்தவனே! குற்றாலம் மேய கூத்தா! கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்திப்
பேர்ந்தவனே! பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான்! என்று எப்போதும் பேசும் நெஞ்சில்
சேர்ந்தவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

[6]
வானவனாய் வண்மை மனத்தினானே! மா மணி   சேர் வானோர் பெருமான், நீயே;
கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே! கடிய அரணங்கள் மூன்று அட்டானே!
தானவனாய்த் தண் கயிலை மேவினானே! தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும்
தேனவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

[7]
தன்னவனாய், உலகு எல்லாம் தானே ஆகி,
தத்துவனாய், சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே!
என்னவனாய், என் இதயம் மேவினானே! ஈசனே! பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே! மலை மங்கை பாகம் ஆக வைத்தவனே! வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

[8]
எறிந்தானே! எண் திசைக்கும் கண் ஆனானே! ஏழ்   உலகம் எல்லாம் முன் ஆய் நின்றானே!
அறிந்தார் தாம் ஓர் இருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே
பிறிந்தானே! பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான்! என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில்
செறிந்தானே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

[9]
மை அனைய கண்டத்தாய்! மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ணச் சூலக்
கையவனே! கடி இலங்கைக் கோனை, அன்று, கால்   விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற
மெய்யவனே! அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே! விண்ணப்பம் கேட்டு நல்கும்
செய்யவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.094   அழல் நீர் ஒழுகியனைய சடையும்,  
பண் - கௌசிகம்   (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )
அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
உழை ஈர் உரியும், உடையான் இடம் ஆம்-
கழை நீர் முத்தும் ககைக்குவையும்
சுழல் நீர்ப் பொன்னி-சோற்றுத்துறையே.

[1]
பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன், அமலன், இடம் ஆம்-
இண்டை கொண்டு அன்பு இடை அறாத
தொண்டர் பரவும்-சோற்றுத்துறையே.

[2]
கோல அரவும், கொக்கின் இறகும்,
மாலை மதியும், வைத்தான் இடம் ஆம்-
ஆலும் மயிலும், ஆடல் அளியும்,
சோலை தரு நீர்-சோற்றுத்துறையே.

[3]
பளிக்குத்தாரை பவளவெற்பில்
குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம்-
அளிக்கும் ஆர்த்தி, அல்லால் மதுவும்
துளிக்கும் சோலை-சோற்றுத்துறையே.

[4]
உதையும், கூற்றுக்கு; ஒல்கா விதிக்கு
வதையும்; செய்த மைந்தன் இடம் ஆம்-
திதையும் தாதும் தேனும் ஞிமிறும்
துதையும் பொன்னி-சோற்றுத்துறையே.

[5]
ஓதக்கடல் நஞ்சினை உண்டிட்ட
பேதைப்பெருமான் பேணும் பதி ஆம்-
சீதப்புனல் உண்டு எரியைக் காலும்
சூதப்பொழில் சூழ்-சோற்றுத்துறையே.

[6]
இறந்தார் என்பும், எருக்கும், சூடிப்
புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில்-
சிறந்தார், சுற்றம், திரு, என்று இன்ன
துறந்தார் சேரும்-சோற்றுத்துறையே.

[7]
காமன் பொடியாக் கண் ஒன்று இமைத்த
ஓமக் கடலார் உகந்த இடம் ஆம்-
தேமென்குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பு ஆர்-சோற்றுத்துறையே.

[8]
இலையால், அன்பால், ஏத்துமவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம்-
தலையால்-தாழும் தவத்தோர்க்கு என்றும்
தொலையாச் செல்வ-சோற்றுத்துறையே.

[9]
சுற்று ஆர் தரு நீர்ச் சோற்றுத்துறையுள்
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து
அற்றார் அடியார் அடி நாய் ஊரன்
சொல்-தான் இவை கற்றார் துன்பு இலரே.

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list