சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.050   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி,
பண் - பழந்தக்கராகம்   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qucQe6XZPzE
1.123   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூ இயல் புரிகுழல்; வரிசிலை
பண் - வியாழக்குறிஞ்சி   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=5thCIuYVLWc
6.048   திருநாவுக்கரசர்   தேவாரம்   நல்லான் காண், நால்மறைகள் ஆயினான்
பண் - திருத்தாண்டகம்   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=XjYKEwzWN_4
7.067   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய்,
பண் - தக்கேசி   (திருவலிவலம் மனத்துணைநாதர் மாழையங்கண்ணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=4DdgcarYvmc

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.050   மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி,  
பண் - பழந்தக்கராகம்   (திருத்தலம் திருவலிவலம் ; (திருத்தலம் அருள்தரு வாளையங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு மனத்துணைநாதர் திருவடிகள் போற்றி )
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத் துறந்து,
செய்யர் ஆனார் சிந்தையானே! தேவர் குலக்கொழுந்தே!
நைவன், நாயேன்; உன்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்;
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

[1]
துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன், உன் திறமே;
தஞ்சம் இல்லாத் தேவர் வந்து, உன் தாள் இணைக்கீழ்ப் பணிய,
நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ? நாளும் நினைந்து, அடியேன்,
வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!

[2]
புரிசடையாய்! புண்ணியனே! நண்ணலார் மூஎயிலும்
எரிய எய்தாய்! எம்பெருமான்! என்று இமையோர் பரவும்
கரி உரியாய்! காலகாலா! நீலமணி மிடற்று
வரி அரவா! வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

[3]
தாயும் நீயே! தந்தை நீயே! சங்கரனே! அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது, உள்ளம்;
ஆயம் ஆய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்;
மாயமே என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!

[4]
நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடைய பொன்மலையை
வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத்
தேரொடும் போய் வீழ்ந்து அலற, திருவிரலால் அடர்த்த
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே!

[5]
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய
சோதியானே! நீதி இல்லேன் சொல்லுவன், நின் திறமே;
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம்
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

[6]
பொதியிலானே! பூவணத்தாய்! பொன் திகழும் கயிலைப்
பதியிலானே! பத்தர் சித்தம் பற்று விடாதவனே!
விதி இலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்று இவர்கள்
மதி இலாதார் என் செய்வாரோ? வலிவலம் மேயவனே!

[7]
வன்னி, கொன்றை, மத்தம், சூடும் வலிவலம் மேயவனைப்
பொன்னி நாடன்-புகலி வேந்தன், ஞானசம்பந்தன்-சொன்ன
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே.

[8]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.123   பூ இயல் புரிகுழல்; வரிசிலை  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் திருவலிவலம் ; (திருத்தலம் அருள்தரு வாளையங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு மனத்துணைநாதர் திருவடிகள் போற்றி )
பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;
ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்
மேவிய திரு உரு உடையவன்-விரைமலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.

[1]
இட்டம் அது அமர் பொடி இசைதலின், நசை பெறு
பட்டு அவிர் பவள நல்மணி என அணி பெறு
விட்டு ஒளிர் திரு உரு உடையவன்-விரைமலர்
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே.

[2]
உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்
வெரு உறு வகை எழு விடம், வெளிமலை அணி
கருமணி நிகர் களம் உடையவன்-மிடைதரு
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே.

[3]
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு
புனல் நிகழ்வதும், மதி நனை பொறி அரவமும்
என நினைவொடு வரும் இதும், மெல முடிமிசை
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே.

[4]
பிடி அதன் உரு உமை கொள, மிகு கரி அது
வடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர்
கடி, கணபதி வர அருளினன்-மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.

[5]
தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக,
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து,
நரை திரை கெடு தகை அது அருளினன்-எழில்
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே.

[6]
நலிதரு தரை வர நடை வரும் இடையவர்
பொலிதரு மடவரலியர் மனை அது புகு
பலி கொள வருபவன்-எழில் மிகு தொழில் வளர்
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே.

[7]
இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின்
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து,
இரவணம் அமர் பெயர் அருளினன்-நகநெதி
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.

[8]
தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்
ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடி
தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.

[9]
இலை மலிதர மிகு துவர் உடையவர்களும்,
நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது
தொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்-
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே.

[10]
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை,
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை
தன் இயல் கலை வல தமிழ் விரகனது உரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.048   நல்லான் காண், நால்மறைகள் ஆயினான்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவலிவலம் ; (திருத்தலம் அருள்தரு வாளையங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு மனத்துணைநாதர் திருவடிகள் போற்றி )
நல்லான் காண், நால்மறைகள் ஆயினான் காண், நம்பன் காண், நணுகாதார் புரம் மூன்று எய்த
வில்லான் காண், விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண், மெல்லியலாள் பாகன் காண், வேத வேள்விச்
சொல்லான் காண், சுடர் மூன்றும் ஆயினான் காண், தொண்டு ஆகிப் பணிவார்க்குத் தொல் வான் ஈய
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

[1]
ஊனவன் காண், உடல் தனக்கு ஓர் உயிர் ஆனான் காண்,
உள்ளவன் காண், இல்லவன் காண், உமையாட்கு என்றும்
தேன் அவன் காண், திரு அவன் காண், திசை ஆனான் காண், தீர்த்தன் காண், பார்த்தன் தன் பணியைக் கண்ட
கானவன் காண், கடல் அவன் காண், மலை ஆனான் காண், களியானை ஈர் உரிவை கதறப் போர்த்த
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

[2]
ஏயவன் காண்; எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண்; இன்பன்   காண்; துன்பங்கள் இல்லாதான் காண்;
தாய் அவன் காண், உலகுக்கு ஓர்; தன் ஒப்பு இல்லாத் தத்துவன் காண்; உத்தமன் காண்; தானே எங்கும்
ஆயவன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்; அகம் குழைந்து, மெய் அரும்பி, அழுவார் தங்கள்
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான்   காண்; அவன் என் மனத்து உளானே.

[3]
உய்த்தவன் காண்; உடல் தனக்கு ஓர் உயிர் ஆனான் காண்;   ஓங்காரத்து ஒருவன் காண்; உலகுக்கு எல்லாம்
வித்து அவன் காண்; விண் பொழியும் மழை ஆனான் காண்;
விளைவு அவன் காண்; விரும்பாதார் நெஞ்சத்து என்றும்
பொய்த்தவன் காண்; பொழில் ஏழும் தாங்கினான் காண்; புனலோடு, வளர்மதியும், பாம்பும், சென்னி
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

[4]
கூற்று அவன் காண், குணம் அவன் காண், குறி ஆனான் காண், குற்றங்கள் அனைத்தும் காண், கோலம் ஆய
நீற்றவன் காண், நிழல் அவன் காண், நெருப்பு ஆனான் காண்,   நிமிர் புன்சடை முடிமேல் நீர் ஆர் கங்கை
ஏற்றவன் காண், ஏழ் உலகும் ஆயினான் காண், இமைப்பு   அளவில் காமனை முன் பொடி ஆய் வீழ
மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

[5]
நிலையவன் காண்; தோற்று அவன் காண்; நிறை ஆனான் காண்; நீர் அவன் காண்; பார் அவன் காண், ஊர் மூன்று எய்த
சிலையவன் காண்; செய்ய வாய், கரிய கூந்தல், தேன்மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண்;
கலையவன் காண்; காற்று அவன் காண்; காலன் வீழக் கறுத்தவன் காண்; கயிலாயம் என்னும் தெய்வ-
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

[6]
பெண் அவன் காண், ஆண் அவன் காண், பெரியோர்க்கு என்றும்
பெரியவன் காண், அரி அவன் காண், அயன் ஆனான் காண்,
எண் அவன் காண், எழுத்து அவன் காண், இன்பக் கேள்வி
இசை அவன் காண், இயல் அவன் காண், எல்லாம் காணும்
கண் அவன் காண், கருத்து அவன் காண், கழிந்தோர் செல்லும் கதி அவன் காண், மதி அவன் காண், கடல் ஏழ் சூழ்ந்த
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி   வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

[7]
முன்னவன் காண், பின்னவன் காண், மூவா மேனி முதல்  அவன் காண், முடிவு அவன் காண், மூன்று சோதி
அன்னவன் காண், அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண், சேயவன் காண், அளவு இல் சோதி
மின் அவன் காண், உரும் அவன் காண், திருமால் பாகம் வேண்டினன் காண், ஈண்டு புனல் கங்கைக்கு என்றும்
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி   வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

[8]
நெதி அவன் காண், யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண், வேதியன் காண், நினைவார்க்கு என்றும்
கதி அவன் காண், கார் அவன் காண், கனல் ஆனான் காண், காலங்கள் ஊழியாக் கலந்து நின்ற
பதி அவன் காண், பழம் அவன் காண், இரதம் தான் காண், பாம்போடு திங்கள் பயில வைத்த
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

[9]
பங்கயத்தின் மேலானும், பாலன் ஆகி உலகு அளந்த படியானும், பரவிக் காணாது
அங்கை வைத்த சென்னியராய், அளக்க மாட்டா அனல் அவன் காண்; அலை கடல் சூழ் இலங்கை வேந்தன்
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண்; அழகன் காண்; கோலம் ஆய
மங்கையர்க்கு ஓர் கூறன் காண் வானோர் ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.067   ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய்,  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருவலிவலம் ; (திருத்தலம் அருள்தரு மாழையங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு மனத்துணைநாதர் திருவடிகள் போற்றி )
ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய், உலகு எல்லாம் ஓங்காரத்து உரு ஆகி நின்றானை;
வானம் கைத்தவர்க்கும்(ம்) அளப்ப(அ)ரிய வள்ளலை; அடியார்கள் தம் உள்ளத்
தேன், அங்கத்து அமுது, ஆகி, உள் ஊறும் தேசனை; நினைத்தற்கு இனியானை;
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.

[1]
பல் அடியார் பணிக்குப் பரிவானை, பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை,
செல் அடியே நெருக்கித் திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை,
நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை, நான் உறு குறை அறிந்து அருள் புரிவானை,
வல் அடியார் மனத்து இச்சை உளானை, வலி வலம் தனில் வந்து கண்டேனே.

[2]
ஆழியனாய், அகன்றே, உயர்ந்தானை; ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானை;
கூழையர் ஆகி, பொய்யே குடி ஓம்பி, குழைந்து, மெய் அடியார் குழுப் பெய்யும்
வாழியர்க்கே வழுவா நெறி காட்டி மறுபிறப்பு என்னை மாசு அறுத்தானை;
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.

[3]
நாத்தான் உன் திறமே திறம்பாது, நண்ணி அண்ணித்து, அமுதம் பொதிந்து ஊறும்
ஆத்தானை, அடியேன் தனக்கு; என்றும் அளவு இறந்த பல்-தேவர்கள் போற்றும்
சோத்தானை; சுடர் மூன்றிலும் ஒன்றி, துருவி மால் பிரமன்(ன்) அறியாத
மாத்தானை; மாத்து எனக்கு வைத்தானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே .

[4]
நல் இசை ஞானசம்பந்தனும் நாவுக்கு-அரசரும் பாடிய நல்-தமிழ்மாலை
சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை; தொண்டனேன் அறியாமை அறிந்து,
கல் இயல் மனத்தைக் கசிவித்து, கழல் அடி காட்டி, என் களைகளை அறுக்கும்
வல் இயல் வானவர் வணங்க நின்றானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.

[5]
பாடுமாப் பாடிப் பணியும் ஆறு அறியேன்; பனுவுமா பனுவிப் பரவும் ஆறு அறியேன்;
தேடுமா தேடித் திருத்தும் ஆறு அறியேன்; செல்லுமா செல்லச் செலுத்தும் ஆறு அறியேன்;
கூடும் ஆறு எங்ஙனமோ? என்று கூறக் குறித்துக் காட்டிக் கொணர்ந்து எனை ஆண்டு,
வாடி நீ வாளா வருந்தல்! என்பானை வலி வலம் தனில் வந்து கண்டேனே .

[6]
பந்தித்த வல் வினைப் பற்று அற, பிறவிப்-படுகடல் பரப்புத் தவிர்ப்பானை;
சந்தித்த(த்) திறலால் பணி பூட்டித் தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு,
சிந்தித்தற்கு எளிது ஆய், திருப்பாதம், சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை;
வந்திப்பார் தம் மனத்தின் உள்ளானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே .

[7]
எவ் எவர் தேவர் இருடிகள் மன்னர் எண் இறந்தார்கள் மற்று எங்கும் நின்று ஏத்த,
அவ் அவர் வேண்டியதே அருள் செய்து, அடைந்தவர்க்கே இடம் ஆகி நின்றானை;
இவ் அவர் கருணை எம் கற்பகக் கடலை; எம்பெருமான், அருளாய்! என்ற பின்னை,
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே .

[8]
திரியும் முப்புரம் செற்றதும், குற்றத் திறல் அரக்கனைச் செறுத்ததும், மற்றைப்
பெரிய நஞ்சு அமுது உண்டதும், முற்றும் பின்னை ஆய் முன்னமே முளைத்தானை;
அரிய நால் மறை அந்தணர் ஓவாது அடி பணிந்து அறிதற்கு அரியானை;
வரையின் பாவை மணாளன், எம்மானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.

[9]
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து, நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று,
தோன்று தோள்மிசைக் களேபரம் தன்னைச் சுமந்த மா விரதத்த கங்காளன்;
சான்று காட்டுதற்கு அரியவன்; எளியவன்தன்னை; தன் நிலாம் மனத்தார்க்கு
மான்று சென்று அணையாதவன் தன்னை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.

[10]
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும்-கற்ற நால்மறை முற்று அனல் ஓம்பும்
வலி வலம் தனில் வந்து கண்டு, அடியேன் மன்னும் நாவல் ஆரூரன்-வன்தொண்டன்-
ஒலி கொள் இன் இசைச் செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார், போய்,
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த, விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே .

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list